ஆழ்வார்களை ஆட்கொண்ட கண்ணன் – 4

— எஸ். வி. நாராயணன்.

Krishnan with butterகிருஷ்ணணாகிய ஆயர் குழந்தையின் அழகையும், அவனுடைய நீர்மையையும் அந்த அரங்கனிடம், அந்த நம்பெருமாளிடம், கண்ட தொண்டரடிப் பொடியாழ்வார், அரங்கனைத் தவிர வேறு எந்த அர்ச்சா ரூபத்தையும் பாடாத தொண்டரடிப் பொடி ஆழ்வார்,

‘பச்சைமா மலையோல் மேனி பவளவாய்
கமலச்செங்கண், அச்சுதா, அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர
யான்போய் இந்திரலோகம் ஆளும், அச்சுவை
பெறினும் வேண்டேன்”
என்று அடித்துக் கூறுகிறார்.

ஆழ்வார்கள் எல்லோரும் கண்ணனின் பல்வேறு லீலைகளை நினைந்து, நினைந்து உள்ளம் உருகிப் போந்தனர். காளியன்மீது அவன் களிநடம் புரிந்ததை அவர்கள் அப்படி வர்ணிக்கிறார்கள். ஆச்சர்யமாக வருணிக்கிறார்கள்.

யமுனை நதியில் மடு ஒன்று இருந்தது. அதில் காளிங்கன் என்ற சர்ப்பராஜன் தன் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தான். அவன் மிகுந்த விஷமுள்ளவன். அவன் மூச்சுக்காற்று பட்டு கரையில் உள்ள மரம் செடி, கொடிகள் எல்லாம் தீய்ந்து போயினவாம். ஆகவே, அந்தப்பக்கம் எவரும் செல்லமுடியாத நிலை. இதை அறிந்து கொண்ட கிருஷ்ணன், அந்த மடுவில் குதித்து காளிங்கனை அடக்கி அவனுடைய தலைமேல் ஏறி நின்றான். காளிங்கனுக்கு மூச்சு முட்டியது. உயிர் பிச்சை கொடுக்கும்படி காளிங்கன் மன்றாடினான். அவன் குடும்பத்தாரும் மிக்க இறைஞ்சினர். அந்த மடுவை விட்டு வேறு இடத்திற்கு, சமுத்திரத்திற்கு செல்லுமாறு காளிங்கனை கிருஷ்ணன் பணித்தான். காளியனும் அவ்விதமே சென்று ஒழிந்தான். இதைப் பெரியாழ்வார் எப்படி அனுபவிக்கிறார் பாருங்கள்:

‘காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு
அவன் நீள்முடி ஐந்திலும் நின்று நடஞ்செய்து
மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்
தோள்வலி வீரமே பாடிப்பற! தரமணி
வண்ணனைப் பாடிப்பற !
அருள் செய்த வித்தகன்’ என்று கொண்டாடுகிறார் ஆழ்வார்.

கண்ணபிரான் காளியன் என்னும் பாம்பை அடக்கினான். ‘உரவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும்’ இன்னும் பற்பல ஆச்சரியமான செய்கைகள் செய்ததையும் இரவும் பகலும் நினைத்து அனுபவிக்கிறேன். இனி எனக்கு என்ன குறை என்கிறார் நம்மாழ்வார்.

கண்ணன், குன்றமேந்தி குளிர்மழை காத்த அந்த வைபவத்தை ஆழ்வார்கள் பல்கிப் பல்கிப் பேசுகிறார்கள். “குன்று குடையாய் எடுத்தாய். குணம் போற்றி என்கிறாள் ஆண்டாள்.

பிருந்தாவனத்தில் ஆண்டுதோறும் இந்திரனுக்கு விழா எடுப்பது வழக்கம். விழாவுக்காக குறித்த நாளும் வந்தது. மூன்று உலகங்களுக்கும் தானே அதிபதி என்று இந்திரன் கர்வம் கொண்டிருந்தான். அந்த கர்வத்தை அடக்க வேண்டுமென்று கண்ணன் எண்ணங் கொண்டான்.

கண்ணனின் யோசனைப்படி, இந்திர விழாவை நாராயண விழாவாக, நாராயணனுக்கே பூஜை நடத்தும் விழாவாக, நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் கிருஷ்ணன் கூறியபடி, ஆவினங்கள் விரும்பும் புல் முதலியவற்றைத் தந்து, மழை பொழியச் செய்யும் கோவர்த்தன கிரியை வழிபடுவது என ஆயர்கள் முடிவு செய்தார்கள். பூசைக்கு வேண்டிய அனைத்தையும் செய்து முடித்து, மலையை வணங்கி வழிபாடு செய்தனர்.

இதைக் கண்ட இந்திரன் கடும் கோபம் கொண்டு கோகுலத்து மக்களை தண்டிக்க முற்பட்டான். மழையான மழை கொட்டியது. கல்மாரியோ என மழை பெய்தது. கோகுலத்து மக்கள் நடுநடுங்கிப் போயினர். கிருஷ்ணனிடம் அனைவரும் போய் முறையிட்டனர். ‘பயப்பட வேண்டாம்’ என்று அவர்களைத் தேற்றிய கண்ணன், கோவர்த்தனம் என்ற அந்தப் பெருமலையை பெயர்த்து எடுத்தான். அதை குடை போல உயர்த்தி தன் சுண்டு விரலில் தாங்கிக் கொண்டான். ஏழு நாட்கள் விடாது மழை பெய்தது. பகவான் பர்வதத்தை குடையாக பிடித்துக் கொண்டிருப்பதையும், அதன் அடியில் கோகுல மக்கள் கவலையின்றி தங்களுடைய வேலைகளை கவனித்துக் கொண்டிருப்பதையும் இந்திரன் பார்த்தான்.

பகவானின் பெருமை தெரியாமல் பிழை செய்தோமே என வருந்தி கண்ணனிடம் மன்னிப்பு கேட்டான். மழையும் ஒய்ந்தது. சகஜ நிலை திரும்பியது. இந்த சம்பவத்தை, ‘அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமும், தயிர் வாவியும் தெய் அளரும் அடங்கப் பொட்டத் துற்றி, மாரிப்பகை புணர்த்த பொருமா கடல் வண்ணன் பொறுத்தமலை,’ என்கிறார் பெரியாழ்வார்.

இடையர்கள் தேவேந்திரனுக்கு படைத்த உணவை உண்டாய். அழகியமலையை குடையாகத் தூக்கி மழை தடுத்தாய். உன்மாயச் செயல்களை எண்ணும்போது என் நெஞ்சு நெருப்பில் இட்ட மெழுகு போல் உருகுகிறது என்கிறார் நம்மாழ்வார். இந்த ரீதியிலே, பூமியில் பிறந்து உலகத்தைக் காத்தளிக்கும் பேரருட் கண்ணனின் குணத்தால் உருகும் ஆழ்வார்களின் பாசுரங்கள் பக்தி ஒளியை பாய்ச்சி நமது உள்ளங்களின் இருட்டை அகலச் செய்யுமன்றோ!

கண்ணன் என்றாலே அந்த குழல் ஊதும் கண்ணனின் நினைப்புதானே வருகிறது. கையில் குழல் ஏந்தி காட்சியளிப்பவன் அன்றோ அவன். அவன் குழல் ஊதிய அழகை ஆழ்வார்கள் எண்ணி எண்ணி மயங்குகிறார்கள். இடது மேல் வாய்ப்புறத்தை இடது தோளோடு சாய்த்து, இருகையும் குழலோடு சேர, புருவம் நெறிந்து மேலேற, கண்ணன் குழல் ஊதினான் என்கிறார் பெரியாழ்வார்.

‘சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச்
செங்கண் கோடச் செய்யவாய்
கொப்பளிப்ப, குறுவெயர்ப்புருவம்
கூடவிப்ப கோவிந்தன்
குழல்கொண்டு ஊதினான்”
என்கிறார் ஆழ்வார்.

சிறுவிரல்களால் குழலின் துவாரங்களை மூடித் திறக்கிறான். கண்ணால் நோக்கிக் கொண்டே வாயால் ஊதுகிறான். முத்து அரும்பினாற் போல் முகத்தில் வியர்வைத்துளிகள் அரும்பி நிற்கின்றன. பறவைகள், பசுக்கள், விலங்குகள் என எல்லாம் அவன் குழல் இசையில் கட்டுண்டு கிடக்கின்றன. மரங்கள் ஆனந்தக் கண்ணீர் வடிப்பதுபோல் தேனைத்தாரையாகச்சொரிகின்றன. செடிகொடிகள் அன்பின் பெருக்கால் பூக்களைச் சொரிகின்றன.

தாவரங்களையும் உணர்ச்சி மயமாக்கி விட்டது கண்ணன் குழல். மாயவனுடைய வேய்ங்குழல் ஓசையைக் கேட்ட ஆயர்கள் நெஞ்சுருகி, ஆவி தளர்ந்து ஒன்றும் அறியாராகித் தத்தம் பணிகளை அப்படியே விட்டுவிட்டு கண்ணன் குழல் ஊதுமிடம் நோக்கி ஓடி வந்தனர். குழலின் ஒலிகேட்டு தும்புருவும், நாரதரும், தேவர்களும், கின்னரர்களும் தங்களுடைய வாத்தியங்களை விட்டுவிட்டு அந்த தெய்வீக இசையில் தம்மை மறந்து இருந்தனர். அந்த வேணுகானம் எல்லார் மனதையும் அலைபாய வைத்தது. கண்ணா, கண்ணா என்று கூவியழைக்க வைத்தது. இந்த ஒலி கம்சனுக்குக்கேட்டதுபோலும்.

கண்ணனை கோகுலத்திலிருந்து மதுராபுரிக்கு எப்படியாவது வரவழைத்து அங்கே அவனுடைய கதையை முடிக்கவேண்டுமென தீர்மானித்தான். அதனால் அவனுடைய கதையே முடியப்போகிறது என்பதை அவன் அறிந்தா னில்லை.

குவலயாபீடம் என்ற பட்டத்து யானைக்கு மதம் உண்டாகும்படி செய்து வைத்தான். சானுரன், முஷ்டிகன் என்னும் இரு மல்லர்களை தயாராக இருக்கும்படி பணித்தான். அக்ரூரரை அனுப்பி, அவர் மூலம் கிருஷ்ணனையும், பலராமனையும் மதுராபுரிக்கு வரவழைத்தான். மதுராபுரியில் கிருஷ்ணனை பக்தர்கள் ஓடி வந்து தரிசித்தனர். அவர் செல்லும் வழியில் மலர்களைத் துவினர். கிருஷ்ணன் குவலயாபீடத்தின் தந்தங்களை ஒடித்து, அந்த யானையை வதம் செய்தான். கிருஷ்ணனும் பலராமனும் மல்லர்களை முறியடித்தனர். பின்னர் கிருஷ்ணன், கம்சனை சிம்மாசனத்திலிருந்து கீழே தள்ளி, பயங்கரயுத்தம் செய்து, அவனை வீழ்த்தினான்.

கம்சவதத்தோடு பாலகிருஷ்ணனின் லீலைகள் முடிந்தன. ஆனால் கண்ணனின் பணி, எதற்காக அவதாரம் எடுத்தாரோ, அந்தப் பணி தொடர்கிறது. மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரையில் பிறந்த அவன், பாரதப்போரில் பஞ்ச பாண்டவர்க்கு அருள்செய்து, அர்ச்சுனனுக்கு சாரதியாகி, அதியற்புதமான ரீதியிலே போர்க் களத்திலே கீதோபதேசத்தை நடத்தி, தர்மம் தழைத்தோங்கச் செய்தான்.

நம்மாழ்வார் நமக்கு எல்லாம் மிக அழகாக, தெளிவாகச் சொல்கிறார். ‘கண்ணன் அல்லால் இல்லை கண்மர் சரண்’ அந்த ஸ்ரீகிருஷ்ணனுடைய சரணார விந்தங் களிலே நம்முடைய மனத்தை நிறுத்தி நமக்கு அவன் வழிகாட்ட வேண்டுமென்று பிரார்த்திப்போம்.

குலசேகர ஆழ்வார் முகுந்தமாலையிலே மிக அழகாகச் சொல்லுவார்:
ஹே முகுந்தா! உம்மைத் தலையால் வணங்கி இந்த ஒரே ஒரு பொருளை மட்டும் உம்மிடம் யாசிக்கிறேன். அதாவது ஒவ்வொரு பிறவியிலும் உம்முடைய அருளால் உம் திருவடிகளை நான் மறவாமல் இருக்க வேண்டும்.

‘முகுந்த மூர்த்தா ப்ரணிபத்ய யாசே
பவந்தம் ஏகாந்தம் இயந்தம் அர்த்தம்
அவிஸ்மிருதிஸ் த்வத் சரணாரவிந்தே
பவே பவே மே அஸ்து பவத் ப்ரசாதாத்’

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.