-செண்பக ஜெகதீசன்

உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போ டுடனுறைந் தற்று.     (திருக்குறள்-890: உட்பகை)

 புதுக் கவிதையில்…

மனப்பொருத்தம் ஏதுமின்றி
மறைத்திருக்கும் பகையோடு
உள்ளோருடன்
உடனுறைதல்,
குடிசையொன்றில் பாம்புடன்
குடியிருப்பது போன்றதாகும்!

குறும்பாவில்…

உடன்பாடு இல்லாதவருடன் வாழ்தல்,
குடிசையில் பாம்புடன்
வாழ்வது ஒப்பதே…!

மரபுக் கவிதையில்…

மனமது ஒன்றாய்ச் சேராமலே
–மாறாப் பகைமை கொண்டோருடன்
இனமாய்ச் சேர்ந்து வாழ்வதிலே
–இன்னல் தவிர ஏதுமில்லை,
தினமும் அச்சம் நிலைத்திருக்க
–தீய நச்சுப் பாம்புடனே
மனையாம் குடிலில் குடியிருக்கும்
–மடமை யொத்த செயலதுவே!

லிமரைக்கூ…

சேர்ந்துவாழ, வேண்டியது மனதில் பொருத்தம்,
இல்லையெனில், குடிசை ஒன்றில்
பாம்புடன் வாழ்வதுபோல் வந்திடும் வருத்தம்!

கிராமிய பாணியில்…

வாழுவாழு சேந்துவாழு
வஞ்சமிலாம சேந்துவாழு,
சேந்துவாழ வேணுமிண்ணா
சேரவேணும் மனப்பொருத்தம்…

மனப்பொருத்தம் இல்லயிண்ணா
அது
நட்டநடுக் காட்டுக்குள்ள
நட்டுவச்சக் குடுசக்குள்ள,
நல்லபாம்பு கூடத்தானே
குடியிருக்கும் கதயாவும்…

ஆதால,
வாழுவாழு சேந்துவாழு
வஞ்சமிலாம சேந்துவாழு!

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க