இசைக்கவி ரமணன்

kural-2

திருக்குறள் இருக்கக் குறையொன்றுமில்லை! – பகுதி 3

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் (2)

தூய அறிவினை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவர்க்குக் கற்ற கல்வியினால் உண்டான பயன் என்ன?

ஆய = ஆகிய, ஆன, இறந்த காலம், பெயரெச்சம்

வாலறிவன் = எங்குமுளான் யாவும்வலான் யாவுமறிவான் என்று தங்குபல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே என்பான் பாரதி. இங்கே வாலியோன் அறிவன் (Omnisicient)

ஆசிரியர் சொல்வார். `கொள்கை வேறு, கோட்பாடு வேறு. நாம் கொள்வது கொள்கை. நம்மைக் கொள்வது கோட்பாடு.` பாரத நாட்டில், இறை அல்லது இறைநம்பிக்கை என்பது கொள்கை அல்ல, கோட்பாடு. அவனே தலைவன் என்பது அடிப்படை அறிவு, நம்பிக்கை, மற்றும் பிரகடனம்.

இப்படி இருக்க, கற்று முடித்தேன் என்று நினைத்துக்கொள்ளலாமா, எல்லாவற்றுக்கும் காரணமான, வேரான, முதலான, மூலமான அவன்தாள் பணியாமல்? `பிலக்கணம் பாடும் நேரத்தில் இலக்கணம் துணைவருமா?` என்று கேட்கிறாரே சங்கரர்?

தாள் தொழுதல் என்பதைச் சிலர் வள்ளுவர் உருவ வழிபாட்டைச் சுட்டுவதாகவும், சிலர் அது ஒரு குறியீடு என்றும் கொள்வர். `தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே` என்ற அப்பர் வாக்கும் இங்கு நினைந்தோரத் தக்கது.

கற்றதனால் என்ன பயன் என்று கேட்கிறவர்தான் இன்னோரிடத்தில் கற்க என்கிறார். எனில், கல்வி என்பது எதற்காக? நம் கசடுகள் நீங்குவதற்காக. இதைத்தான் சித்த சுத்தி என்பார்கள் பெரியோர். சித்த சுத்தி எதற்காக? இறைவனை அடைவது, உண்மையை உணர்வது, தன்னை அறிவது என்பதெல்லாம் சித்த சுத்தி இல்லாமல் சாத்தியமே இல்லை. எல்லாவற்றுக்கும் மூலம் `ஆதிபகவன்` என்ற உணர்வுதான் மனிதனுக்கு மிகப்பெரும் தன்மையாகிய பணிவு என்பதைத் தரும். பணிவற்ற மனிதன், இரக்கம் நீங்கி, அரக்கனாக மாறும் அபாயம் இருக்கிறது. பணிவு என்பது என்ன? `யாரையும் சமமாகக் கருதுதல்; ஐயம் வந்தால், எவரையும் நம்மைவிட உயர்வாகக் கருதுதல்,` என்பார் என் குருநாதர்! இதனால்தான், ஞானத்திற்குப் பிறகு யோகம் பயில்வதே பாதுகாப்பானது என்பார்கள். ஞானம்தான் குருநாதர் சொன்ன பணிவு என்னும் மனப்பான்மையை நல்கும். பணிவின்மை, உயர்த்துவதுபோல் உயர்த்தி, மனிதனை வீழ்த்திவிடும். பணிவற்ற வித்தை படிகாட்டி, மாலை அணிவித்துக் கீழுருட்டுமாம்.’ பணிவுள்ள மனிதன், மனிதருள் தெய்வமாக மதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. அடக்கம் என்பது, மனிதப் பண்புகளின் ஆதாரம். பணிவு என்பது, மனிதப் பண்புகளின் சிகரம். ஏன்? அதுதான் வாழ்வின் இலக்கான இறைவனிடம் நம்மைச் சேர்ப்பிக்கும். யார் உயிர்களின் தலைவனான ஆதி பகவனோ, அவனைப் பணியாமல் கல்வி ஒருவனைப் பண்புள்ளவனாக ஆக்காது.

எங்கள் ஆசிரியர் ஒரு கதை சொல்வார். ஒரு பெரிய செல்வந்தர் இருக்கிறார். கொடைவள்ளலாகவும் இருக்கிறார். அவரிடம் ஏராளமான பசுமாடுகள் இருக்கின்றன. ஒருவர் அவரிடம் சென்று, `ஐயா! எனக்கு தினமும் பால் தேவைப்படுகிறது. ஒரு பசுவைத் தருகிறீர்களா?` என்று இறைஞ்சுகிறார். வள்ளல், `ஒன்றென்ன, இரண்டு பசுக்களை எடுத்துக்கொள்ளுங்களேன்,` என்கிறார். கேட்டவருக்கு மகிழ்ச்சி. ஆனால் அந்த மகிழ்ச்சி அத்தோடு முடிகிறது அது என்பதை அப்போது அவர் உணரவில்லை. என்ன? பசுவைக் கட்டிக் காப்பாற்றுவதென்பது எளிதான காரியமா என்ன? இருபத்து நான்கு மணிநேர வேலையாகிவிடுகிறது. நிம்மதியாய் உறங்கவும் முடியாது போகிறது.

இன்னொருவர், அதே வள்ளலிடம் சென்று, `ஐயா! எனக்கு தினமும் பால் தேவைப்படுகிறது,` என்கிறார். வள்ளல், `இரண்டு பசுக்களை எடுத்துக்கொள்ளுங்களேன்,` என்கிறார். கேட்டவர், `வேண்டாம் ஐயா, தினமும் எனக்கு இரண்டு லிட்டர் பாலை நீங்கள் வீட்டுக்கு அனுப்பிவைத்தால் மகிழ்வேன்,` என்றார். வள்ளலும் புன்னகையுடன் சம்மக்கிறார்!

திருஞானசம்பந்தர் தந்தையைக் காணாமல் குளக்கரையில் அழுதார். தந்தையும் தாயுமான அம்மையப்பனைக் கண்டார். அம்மையிடமிருந்து பாலருந்தினார். ஞானமாகிய பாலை அருந்தி ஞானமயமான பாடல்களைப் பாடினார். என்ன குறிப்பு? இறைவனைப் பணிந்து பெறக்கூடிய கல்வி, கலைகள், திறமைகள் எல்லாமும் ஞானமயமாக இருக்கும். மற்றவர்க்கு நலம்சேர்க்கும் விதமாக அமையும். `தந்தது உன்றனை; கொண்டது என்றனை,` என்னும் மாணிக்க வாசகரின் பாடல் இங்கே நினைவுகூரத்தக்கது. நாம் பணியாமல், நம்மைக் கொடுக்காமல் அவனைப் பெறமுடியாது. நம்மைத் தந்தால் தன்னைத் தருவதே அவனியல்பு.

பணிவு என்ற சொல்லின் முழுவடிவம் அனுமன். ராமபிரானை அனுமன் சந்திக்கும்போது அனுமன் என்னவாக இருந்தான்? யோகி, ஞானி, மாவீரன், நவ வியாக்கிரண வேத்தா அட இழுப்பானேன், ருத்திரனல்லவா அனுமன்? எனில், ராமனை அனுமன் சந்திக்கிறபோது, ராமனிடமிருந்து எதையும் பெறவேண்டிய தேவை அனுமனுக்கு இல்லை. இருப்பினும் அவனே தன் தலைவன், தான் என்றும் அவனுடைய தொண்டன் என்றல்லவா கருதுகிறான்! இதைத்தான் என் குருநாதர், ‘Goalless faith,’ என்பார். இலக்கற்ற, எதிர்பார்ப்பில்லாத நம்பிக்கை.

பணிவாலன்றிப் பரமனை அடைய முடியாது. இறைவனைப் பணியாமல் பணிவும் வராது! இறைவனைப் பணிந்தவன் எல்லா உயிரிடத்தும் இறைவனைக் காணும் நிலையை எய்துகிறான். எல்லார்க்கும் இனியனாகிறான்.

மனித வடிவம் மட்டுமே ஒருவனை மனிதனாக்கிவிடாது. மனிதனுக்கென்று சில பண்புகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பேணி வளர்ப்பதன் மூலமே ஒருவன் மனிதனாகிறான். அந்தப் பண்புகளை அடைய ஒருவனுக்குக் கல்வி, செல்வம், அழகு, திறமை போன்றவை இருக்கவேண்டும் என்பதில்லை. இவையேதும் இல்லாமலே ஒருவன் பண்பாளனாகத் திகழ முடியும். சொல்லப்போனால், இவற்றையெல்லாம் மீறித்தான் ஒருவன் பண்பாளனாக இருக்க வேண்டியுள்ளது! அந்தப் பண்புகளில் தலையாயது பணிவு.

எவன் இறைவனைப் பணிகிறானோ அவனுக்குப் பணிவு இயல்பாக வருகிறது. அந்தப் பணிவே அவனை முழு மனிதனாக்குகிறது. அவனுடைய கல்வி, செல்வம், திறமை, அழகு, பதவி அனைத்திற்கும் கெளரவம் தருகிறது. `எல்லோரையும் நம்மைப்போலே கருதுதல், அல்லது நமக்கு உயர்வாய் நினைத்தல்,` என்னும் பணிவு, இறைவனைத் தொழுதல் மூலமே வருகிறது.

நலமே விளைவிக்கும் தாள் என்பதால் நற்றாள். தலையும் அடியும் சேர்வது சமயக் கோட்பாடு. தலை என்பது தலைமை. அடியிலிருந்துதான் அடிமை. ஆனால், இங்கே சுவாரசியம் என்னவென்றால், இறைவனுடைய நற்றாளாகிய அடிதான் தலைமை! அதை நம் தலை அடிமையாகிப் பணிவதில்தான் நமக்கு விடுதலை!

இறைவனைத் தொழுதுதான் இறைவனை அடைய முடியும். பகவனைத் தொழுதே ஆதியில் கலக்க முடியும். அதுவே வாழ்வின் இலக்கு. அதற்காக வாய்த்ததுவே மனிதப் பிறவி.

பரம்பொருளே பேரறிவு. அதற்கே உயிர்களையும் உலகையும் அறியவல்ல வாலறிவு உண்டு என்கிறது உபநிடதம்.

ஆக, கற்றது கழலடி தொழவே! அதற்கே அப்பர் சொல்லும் இந்த `மனித்தப் பிறவி.`

இறைவன்தான் தலைவன் என்று சொன்ன வள்ளுவர், அவன் எங்குமுளான், யாவும் வல்லான் என்று விளக்கவில்லை. ஆனால், அவன் யாவுமறிந்தவன், அதாவது வாலிய அறிவுடையவன் என்பதில் மட்டுமே நிற்கிறார். இறைவன் தூய அறிவுடையோன். இதைத்தான் சத்-சித்-ஆனந்தம் என்போம். சத் என்பது மாற்றம் வளர்ச்சி இவற்றுக்கு உட்படாத சத்தியம் அல்லது இருப்பு. சித் என்பது அந்த இருப்பின் விகசிப்பு, அல்லது, அறிவின் விரிவு. சித் என்பது aura அதாவது ஒளிவட்டம் அல்ல! அது கல்லுக்கும் மரத்திற்கும்கூட உண்டு. மரத்தின் ஒளிவட்டம் aura. முனிவனின் ஒளிவட்டம் சித் என்று புரிந்துகொள்ளலாம். ஆனந்தம் என்பது ecstasy மட்டுமல்ல. அது அமைதியின் வெளிப்பாடு. அமைதி, நிறைவால் வருவது.

ஆன்மாவுக்கு, குணம் கிடையாது. ஆனால், அதற்கு ஒரு தன்மை உண்டென்று கருதினால் அது அமைதிதான். சீரான, தொடர்ந்த அமைதி. மனத்துக்கு அமைதி கிடையாது, தெரியாது. சஞ்சலம், அதாவது அசைவு என்பது மனதின் இயல்பு. ஆன்மாவின் அமைதி, சித்தம் என்னும் திரையில் பிரதிபலிக்கும்போது, மனம், அதனை ஆனந்தம் என்றே புரிந்துகொள்கிறது. இப்போது சித் நமக்கு நன்றாக விளங்குகிறதல்லவா. இதுதான் வாலிய அறிவு, அல்லது pure intelligence.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *