“கட்டகழ கானதோர் கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா”


விவேக்பாரதி

கவியரசு கண்ணதாசன் அவர்களது “கட்டகழ கானதோர் கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா” என்கிற வண்ண மெட்டிற்கு திரு. கிரேஸி மோகன் எழுதச் சொல்லி நான் எழுதிய கவிதை.

 

கன்னங் கரிதெனத் தோன்றும் இரவினில்
…..கண்கள் விழித்திருப்பேன் – கவிப்
…..பண்கள் படித்திருப்பேன் ! அடி
கன்னி அழகினைக் காண அனுதினம்
…..காற்றில் அலைந்திருப்பேன் – அடர்க்
…..காட்டில் விழுந்திருப்பேன் !!

எந்தத் திசையிலும் எங்கெங்கு காணிலும்
…..உன்றன் திருமுகமே – எழில்
…..கொஞ்சும் கலைமுகமே ! நிதம்
சிந்தனை செய்கையில் கத்திக் கதறிடும்
…..ஆசையில் நெஞ்சமடி – சுகம்
…..ஆற்றிடப் பஞ்சமடி !

கண்ணுக்கு முன்னொரு மாயை தெரியுது
…..கைகளை நீட்டுகிறேன் ! – கனவின்
…..பொய்களைக் காட்டுகிறாய் ! அடி
பெண்மை இனத்தவர் காதல் மிகுத்திடும்
…..பெட்டை மயிலினமே – இசை
…..பெற்ற குயிலினமே

எத்தனை நாளின்னும் ஏற்க பிரிவினை ?
…..சொல்லடி கண்மணியே – எதிர்
…..நில்லடி பெண்ணழகே ! இதழ்
முத்தம் கொடுத்துயிர் மோட்சம் அடைந்திட
…..முல்லை மலர்ச்சரமே – ஒரு
…..சொல்லை உதிர்த்துவிடே !!!

2 thoughts on ““கட்டகழ கானதோர் கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா”

 1. அன்புவிவேக் பாரதி,
  உங்களின் இந்தக் கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது. மனத்துள் பாடிப் பார்த்தேன். இனிகிறது.

  “துள்ளும் அழகினைத் தூவும் கவிதையால்
  துன்பம் மறக்கடித்தாய் – மனத்
  தோட்டப் பழம்பறித்தாய் – ஒரு
  முள்ளும் மலர்ந்திட முத்தம் கொடுக்கிற
  முக்தன் நிலைகொடுத்தாய் -அதில்
  மூழ்கும் கலையளித்தாய் !”

  மீ.விசுவநாதன்
  15.07.2016

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க