செ. இரா.செல்வக்குமார்

இப்பதிவு சூலை 4 ஆம் கிழமைக்கான வல்லமையாளர் தேர்வுக்குரியது [1]. அக்கிழமையின் வல்லமையாளர் விருதுக்காக பெட்னா (FeTNA) என்றழைக்கப்படும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை தொடர்ந்து 29 ஆண்டுகளாக வட அமெரிக்காவில் அருமையான தமிழ்ப்பணி ஆற்றிவரும் ஓர் இலாபநோக்கமற்ற தன்னார்வலர்களால் ஆன குழுமம். ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான தமிழ்க்குடும்பங்கள் தங்களின் வேலைநேரம் போக மீதிநேரத்தைத் தமிழுக்காக இரவும் பகலுமாக உழைத்து வியப்பூட்டும் ஒரு கலைவிழாவும் ஒன்றுகூடலும் வெற்றிகரமாக நடத்திவருகின்றார்கள். வட அமெரிக்காவில் இருக்கும் ஏறத்தாழ 40 தமிழ்ச்சங்கங்களின் ஒருங்கிணைந்த பேரவை இந்த பெட்னா என்பது.


ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் விடுதலை நாளாகிய சூலை 4-ஐ ஒட்டி நான்கு நாள்கள் ஏதேனும் ஓர் அமெரிக்க நகரத்தில் பல்கலைவிழா எடுக்கின்றார்கள். இந்தியாவிலிருந்தோ தமிழர்கள் வாழுமிடங்களிலிருந்தோ தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழறிஞர்களையும் தமிழ்க்கலைஞர்களை வட அமெரிக்காவுக்கு வரவழைத்து பெருமைப் படுத்துகின்றார்கள். வட அமெரிக்காவில் வாழும் குழந்தைகளும் சிறார்களும் இளைஞர்களும் தமிழ்மொழி, தமிழ்க்கலை தமிழிலக்கியம் முதலியவற்றில் ஆழமாக ஆர்வம்பற்றிக்கொள்ளுமாறு மிகச்சிறப்பாக நிகழ்ச்சிகள் அமைத்து பெருவெற்றி கண்டுவருகின்றார்கள். ஒவ்வொரு ஆண்டும் 2000-3000 தமிழர்கள் ஒரு நகரத்தில் கூடி இவ்விழா எடுப்பது என்பது வட அமெரிக்காவில் எளிதன்று. இவ்விழா எடுப்பதை இந்தியத்துணைக்கண்டத்தின் பிறமொழியினத்தாரும் பெருமையுடன் பார்க்குமளவும் சிறப்பு வாய்ந்ததாகவுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கத்தமிழர் முன்னோடிகள் (Tamil American Pioneer) விருது என்னும் ஒன்றை நிறுவி, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற பல துறைகளில் பெரும்புகழ் நாட்டிய தமிழர்களைப் பெருமைப்படுத்தி வருகின்றார்கள். ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து பின்னர் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் இராசுச் செட்டி அவர்கள், ஐ.இ.இ.இ. (IEEE) -யின் மார்க்கோனி விருதுபெற்ற பேராசிரியர் பால்ராசு அவர்கள், மாந்த உரிமைகள் துறையில் நன்கறியப்பட்ட கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆந்தசங்கரி அவர்கள் போன்ற பலரையும் பெருமைப்படுத்துவதைப் பார்க்கும் தமிழிளைஞர்கள் தமிழ்க்குமுகத்தின் மீதும் தமிழர்களின் வெற்றிகளின் மீதும் ஆர்வம் ஏற்பட்டு ஈர்க்கப்படுகின்றார்கள். இளைஞர்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றார்கள்

ஒவ்வொரு ஆண்டும் தமிழுக்குத் தொண்டாற்றிய சிலரையோ அல்லது முக்கிய நிகழ்ச்சியையோ முதன்மைப்படுத்தி விழா எடுக்கின்றார்கள். சென்ற ஆண்டு வீ.ப.கா. சுந்தரம் அவர்களின் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாடப்பட்டது. 2014 ஆம் சுந்தரேசனார் நூற்றாண்டு. 2013 ஆம் ஆண்டு தனிநாயகம் அடிகளார், 2012 ஆம் ஆண்டு மு. வரதராசனார் என்றும் அதற்கு முன்னதான ஆண்டுகளில் அறிஞர் அண்ணா, பெரியசாமி தூரன் என பலரின் நினைவை முன்னிறுத்திக் கொண்டாடித் தமிழ்பரப்புகின்றார்கள். 2016 ஆண்டாகிய இவ்வாண்டு நியூ செர்சியில் திரென்றன் (Trenton) நகரில் நடந்த பெட்னா விழாவைத் தனித்தமிழ் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாடினார்கள்.


தனித்தமிழ் இயக்க நூற்றாண்டுவிழா . படம் [4]


மேடையில் இளைஞர்களின் தமிழ்கலை முழக்கம் . படம் [5]

வருமாண்டு (2017) அமெரிக்காவின் மினெசோட்டா (Minnesota) மாநிலத்தில் 30 ஆம் ஆண்டுவிழாவாகக் கொண்டாடவிருக்கின்றார்கள். 2016 ஆம் ஆண்டு பெட்னாவின் தலைவர் திரு. நாஞ்சில் பீற்றர் அவர்களுக்கும், அவருடைய அருமையான அணியினருக்கும் பாராட்டுகள் [3]. ஆர்வமும் உழைப்பும் மிக்க நற்றமிழர்கள் நல்லணியாக உழைத்து ஒவ்வொரு ஆண்டும் பெருஞ்சிறப்பு மிக்க விழா எடுத்து தமிழ்வளர்ப்பது மட்டுமல்லாமல் தமிழ்ச்சங்களின்வழி தமிழ்க்கல்வி, கலை, தமிழ்க்கலைப் போட்டிகள், கவிதை, இலக்கிய நிகழ்ச்சிகள் என ஆண்டுமுழுவதும் தணியாத ஆர்வ்த்துடன் தமிழ்வளர்க்கின்றார்கள். பெட்னாவின் தமிழ்ப்பணியை விரித்து எழுதினால் நூலாகிவிடும். பெட்னா தமிழ்ப்பணி வரலாற்றுப்புகழ் பெற்றதாகிவிட்டது. பெட்னாவின் நிகழ்ச்சிகளின் படங்கள் பலவற்றையும் இங்கேயும், இங்கேயும் காணலாம்.

பெட்னாவின் தமிழ்ப்பணியைப் பாராட்டி சூலை 4 ஆம் கிழமையின் வல்லமையாளர் விருது பெறும் நிறுவனமாக அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்ளுகின்றோம். பெட்னாவையின் அதை நடத்தும் அனைவரையும் பாராட்டுகின்றோம்.

அடிக்குறிப்புகள்

[1] இப்பதிவு சூலை 4 அன்று வரவேண்டியது. சில காரணங்களால் அதனை இன்றுதான் வெளியிட நேர்கின்றது.
[2] http://www.fetna.org/
[3] இக்கட்டுரை எழுத நிறைய செய்திகளையும் குறிப்புகளையும் என் வேண்டுதலுக்கு இணங்க நல்கிய, ந்லகுவித்த திரு நாஞ்சில் பீற்றர் அவர்களுக்கும், திருவாளர் தில்லை குமரன், சொக்கலிங்கம், மகேந்திரராசு, பொற்செழியன் இராமசாமி, முத்துசாமி செந்தில்நாதன், திருவாட்டி கீதாஞ்சலி பொன்முடி ஆகியோருக்கும் பிறருக்கும் என் நன்றி.
[4] படம் தில்லை குமரன் அவர்களின் முகநூல் பக்கம்
[5] பெட்னா தளம்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இந்த வார வல்லமையாளர்

  1. துடிப்புடன் இயங்கும் பெட்னாவுக்குப் பாராட்டுகள். அதை நடத்தும் வல்லமையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *