இவ்வார வல்லமையாளராக அ.முத்துலிங்கம் அவர்களை தேர்ந்தெடுக்கிறோம்

1937 சனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாண நகருக்கு அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அப்பாத்துரை, ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும், இங்கிலாந்தின் முகாமைத்துவக் கணக்காளராகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பயணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் அவையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் பணியாற்றி தற்சமயம் புலம் பெயர்ந்து தன் மனைவி கமலரஞ்சினியுடன் கனடாவில் வசித்து வருகிறார்.பிள்ளைகள் இருவர் : சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள் தான் அடிக்கடி இவர் கதைகளில் வரும் அப்சரா.

அ. முத்துலிங்கம், பேராசிரியர் க.கைலாசபதியால் எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். இலங்கை தினகரன் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ‘அக்கா’ சிறுகதையை தலைப்பாகக் கொண்ட இவரின் முதல் தொகுப்பு திரு க.கைலாசபதியின் அணிந்துரையுடன் 1964ல் வெளியானது. நீண்டகால இடைவெளிக்கு பிறகு 1995ல் மறுபடியும் எழுதத் தொடங்கி சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், புத்தக மதிப்புரைகள், நாடக, சினிமா விமர்சனங்கள் என்று எழுதி வருகிறார். இருபதுக்கு மேற்பட்ட வெளிநாட்டு ஆங்கில எழுத்தாளர்களுடன் இவர் நடாத்திய நேர்காணல் கட்டுரைகள் தொகுப்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது, கனடாவில் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் (Tamil Literary Garden) என்னும் அறக்கட்டளை குழுமத்தில் முக்கிய உறுப்பினராக செயலாற்றுகிறார்

. கடந்த இரண்டரை வருடங்களாக, 2015ல் இருந்து ஹார்வார்ட் தமிழ் இருக்கை அமைப்பின் உறுப்பினராகச் செயலாற்றுகிறார். 2018 மார்ச் 5ம் தேதி ஹார்வார்ட் விதித்த இலக்கான 6 மில்லியன் டொலர்கள் உலகம் முழுவதிலுமிருந்து நன்கொடையாக திரட்டப்பட்டு விட்டதால் தமிழ் இருக்கை உறுதியானது

நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். அவர் கதைகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அப்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கின்றன. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்கின்றன; பிரமிக்கவைக்கின்றன. அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் சொல்லும் அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.

(நன்றி: விக்கிபிடியா)

பரிந்துரை செய்த பேராசியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி

(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 )

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *