Blog

  • காத்திடும் தெய்வமாய் விளங்குவார் வாழ்வில்!

    காத்திடும் தெய்வமாய் விளங்குவார் வாழ்வில்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    தாத்தா என்பது தனித்துவம் மிக்கது
    தலைமை தாங்கும் வலிமை கொண்டது
    அன்பொடு அறிவு அனுபவம் நிறைந்த
    பொக்கிஷம் தாத்தா என்பதே சத்தியம்

    பாட்டி என்றால் பரிவு பக்குவம்
    பாட்டி என்றால் பகிர்ந்திடும் தத்துவம்
    பண்பின் வடிவம் பாசத்தின் சிகரம்
    பாட்டி என்னும் பசுந்தமிழ்ப் பதமே

    தாத்தா கடுமை தண்டிப்ப தல்ல
    தடுமாறி விழாமல் தடுத்திடும் காப்பே
    ஒவ்வொரு சொல்லும் உள்ளம் திருந்த
    உரைத்திடும் தாத்தா உயர் பாடமாகும்

    காவல் தெய்வமாய் தாத்தா இருப்பார்
    கண்ணியம் இழக்கா காத்திடும் காவலர்
    மண்ணிலே தாத்தா வரமாய் இருக்கிறார்
    கண்ணெனத் தாத்தாவை எண்ணிடல் வேண்டும்

    வீட்டில் பாட்டி இருப்பது சிறப்பே
    காட்டிக் கொடுக்கா காத்துமே நிற்பார்
    வாட்டும் நோய்க்கு மருத்து கொடுக்கும்
    மருத்துவர் ஆகவும் மாறுவார் பாட்டி

    பற்பல கதைகளைப் பாங்காய் சொல்வார்
    தத்துவம் சத்தியம் நிறைந்துமே இருக்கும்
    விளங்கா அனைத்தும் விளங்கும் வகையில்
    பாட்டியின் கதைகள் பாடம் நடத்தும்

    தாத்தா பாட்டி வீட்டில் இருந்தால்
    காத்திடும் தெய்வமாய் விளங்குவார் வாழ்வில்
    காத்திடும் தெய்வம் வீட்டிலே இருந்தால்
    கவலைகள் அகலும் களிப்பே பெருகும் !

    Share
  • தெய்வச்செயல் (சிறுகதை)

    ஜெ. ஜெயகுமார்
    சென்னை

    கத்தார் நாட்டு தலைநகரான தோஹாவில் ஐம்பது வயது அக்கவுண்டன்ட் அப்துல்லா வழக்கம்போல் அன்று அலுவலகம் நுழைந்தார்.

    லட்சக்கணக்கில் சம்பாதிக்க ஆசைப்பட்டு, கேரளாவிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் மனித வெள்ளத்தின் ஒரு துளியாக, வருடக்கணக்கில் குடும்பம் மறந்து தியாக வாழ்க்கை வாழ்ந்து வரும் அப்துல்லா ஒரே ஒரு நிமிடத்தில் அன்று லட்சக்கணக்கில் கடனாளியாவோம் என்பதை கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

    குடும்பத்தைப் பார்ப்பதற்கு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தரப்படும் ஒரு மாத விடுமுறைக்காக, முதலாளியின் அனுமதி கடைசி நாளில் கிடைத்து, அவசர கதியில் ஏர்போர்ட் வந்து, “டியூட்டி ஃப்ரீ”யில் சாக்லேட், பெர்ஃப்யூம், நெருங்கிய சினேகிதர்களுக்கு ஒரு “ரெட் லேபிள் ஜானி வாக்கர்” வாங்கிக்கொண்டு ஒரு சராசரி மலையாளியாக பட்டணம்திட்டா வந்து குடும்பத்துடன் ஒரு மாத தேனிலவு லௌகீக வாழ்க்கையை வாழ்ந்து, மீண்டும் விட்ட இடத்திலிருந்து அயலக வாழ்க்கையை ஆரம்பிக்கும் அப்பாவி மனிதர் அப்துல்லா.

    இன்றிரவு கேரளா செல்ல வேண்டும் என்பதால் காலையிலிருந்தே அரக்கப் பரக்க அலைந்து கொண்டிருந்தார் அப்துல்லா. விடுமுறையில் அவருடைய பணியை செய்யப் போகும் பிஜூவையும் பாங்க்கிற்கு அழைத்து சென்றார்.

    அன்று அனைத்து நிறுவனப் பிரிவுகளின் ஊழியர்க்கு சம்பள நாள்.

    ரியால் வெள்ளம்.

    பாங்க் அருகே பார்க்கிங் கிடைக்காததால் பின்புறத்தெருவில் காரை நிறுத்திவிட்டு பாங்க்கில் மூன்று லட்சம் ரியால்களை (இந்திய மதிப்பில் அறுபது லட்சம் ரூபாய்) கட்டுக் கட்டாகப் பெற்றுக்கொண்டு சூட்கேஸ்சில் நேர்த்தியாக அடுக்கிக் கொண்டு சர்வ ஜாக்கிரதையாக இருவரும் காரின் பின்பக்கக் கதவைத் திறந்து சூட்கேஸ்சை வைத்து கதவை சாத்திவிட்டு திருப்தியுடன் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தனர்.

    பாங்க்கிலிருந்து வந்த பத்தான் உடையணிந்த ஒருவர் அப்துல்லாவைப் பார்த்து, “ஜீ! பாங்க் மானேஜர் உங்களை அவசரமாகக் கூப்பிடுகிறார்; ஏதோ “செக்”ல பிரச்சனையாம் ” என்று ஹிந்தியில் சொல்லிக்கொண்டே தன் கார் கதவைத் திறந்து உள்ளே அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்தார்.

    “நல்லபடியாக ஊர் செல்லவேண்டும்” என்று நினைத்துக்கொண்டே அப்துல்லா காரைப் பூட்டி விட்டு பிஜுவை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு வங்கிக்கு விரைந்தார்.

    சில நிமிடம் கழித்து வங்கியிலிருந்து வந்த மற்றொரு பத்தான் ஆசாமி, பிஜுவைப் பார்த்து ”யாரோ ஒரு மல்பாரி “டை-வாலா” (டை அணிந்த மனிதன்) பாங்க்கில் மயங்கி விழுந்து விட்டார்; போய்ப் பாருங்கள்; ஹார்ட் அட்டாக் போலிருக்கிறது என்று அனுதாபத்துடன் ஹிந்தியில் சொல்லிக்கொண்டே சென்றார்.

    அப்துல்லா “டை” அணிபவர் என்பதாலும், அவருக்கு “ஹார்ட்” பிரச்சனை உள்ளது என்பதாலும் பூட்டப்பட்ட காரின் சாவி அப்துல்லாவிடம் உள்ளது என்பதாலும் வேலைக்கு புதிது என்பதாலும் “ஒருக்கால் அவர் மயங்கி விழுந்திருந்தால் அவருக்கு உதவி செய்யலாமே” என்ற பதைபதைப்பாலும் படபடப்புடன் பாங்க் விரைந்தார் பிஜு.

    அப்துல்லா பாங்க் மேனேஜருடன் உரையாடிவிட்டு வெளியே வருவதைப் பார்த்துவிட்டு அப்துல்லாவிற்கு ஒன்றுமில்லை என்று அறிந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார் பிஜு.

    “நீ ஏன் இங்கு வந்தாய்?’ என்று அப்துல்லா திடுக்கிட்டு வினவ, வந்த காரணத்தை பிஜு சொல்லிக்கொண்டே இருவரும் வெளியே வந்தனர். “அப்படி யாரும் பாங்க்கில் மயங்கி விழவில்லையே” என்று துணுக்குற்று பதிலுரைத்த அப்துல்லா மனதில் எங்கோ அபாயமணி அடித்தது.

    “என்னை பாங்க் மேனேஜர் கூப்பிடவேயில்லை” என்று பிஜூவிடம் சொல்லிக்கொண்டே வந்தவர் அதிர்ந்து உறைந்து நின்றார்.

    காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு மூன்று லட்சம் ரியால் சூட்கேஸ் களவாடப் பட்டிருந்தது.

    இந்த ஜன்மத்தில் இனிமேல் குடும்பத்தைப் பார்க்கப் போவதில்லை என்ற மின்னல் அப்துல்லாவை வெட்ட கார் பக்கவாட்டில் சரிந்தார்.

    அக்கம்பக்க அனுதாபங்கள், வயிற்றைக் கலக்கும் சைரனுடன் “லாண்ட் க்ரூய்ஸ்சர்” காரில் போலீஸ் வருகை, அவர்களின் அதிகார தோரணை, அரபி மொழி விசாரணை என்று உச்சக்கட்ட யுத்தக்கள களேபரம் அரங்கேறியது அங்கே.

    “இருபத்தி ஐந்து வருட அர்ப்பணிப்பு, உழைப்பு, எல்லாம் இரண்டே நிமிடங்களில் மண்ணோடு மண்ணாயிற்றே” என்று அப்துல்லா கூக்குரலிட்டு குமுறியது முதலாளி “ஷேக்”கையே ஒருகணம் நெகிழச் செய்தது.

    “கம்பெனி சார்பில் இரண்டு பேர் சென்றும் பணம் பறிபோயிற்றே” என்று மன உளைச்சல் அடைந்த ஷேக் சில கணங்களில் தன்னை மீட்டுக் கொண்டார்.

    அப்துல்லாவின் நேர்மையான உழைப்பின் முன்னால் அது பெரிய இழப்பு இல்லை என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். மேலும் அவருக்கு தன் நாட்டு காவல் துறையின் மீது அபார நம்பிக்கை, எப்படியும் பணத்தை மீட்டு விடுவார்களென்று.

    அப்துல்லாவை நோக்கி “ நீ ஊர் சென்று வா! அதற்குள் நம் பணம் கிடைத்து விடும்” என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்.

    இந்தப் பிறவியில் நாம் இந்தியா திரும்பப் போவதில்லை என்று நினைத்திருந்த அப்துல்லா, ஷேக்கின் பெருந்ததன்மையை நினைத்து கண்ணீர் மல்க நன்றி கூறி ஏர்போர்ட் வந்தடைந்தார்.

    தன் அலுவலக மொபைல் ஃபோனை பிஜூவிடம் ஒப்படைத்துவிட்டு “செக் இன்” செய்ய “புறப்பாடு” உள்ளே நுழைந்தார்.

    அவ்வளவு மன உளைச்சலிலும் தான் வழக்கம்போல் செய்யும் ஒரு காரியத்தை செய்து விட்டு விமானம் ஏறினார்.

    வீடு சேர்ந்த கணவனிடத்தில் இயல்பான உற்சாகம் மிஸ்ஸிங், மாறாக எதையோ பறி கொடுத்தது போல் இருக்கிறாரே என்பதை அறிந்த மனைவி கேள்விகளால் துளைக்க, மனைவியிடம் மெள்ள விஷயத்தை சொல்ல அது இடியாக இறங்கியது அவள் தலையில்.

    கணவனின் தலைக்குள் இருக்கும் சுமையை படுக்கை அறையில் நொடியில் கண்டுபிடித்து விடுவார்கள் பெண்கள். அதுவும் ஒரு வருடமாக தனித்திருந்த, பசித்திருந்த அப்துல்லாவின் ஆக்ரோஷம் கலந்த அபரிமிதமான தாம்பத்திய தாகத்தை வருடா வருடம் அந்த ஒரு மாத தேனிலவு வாழ்க்கையின்போது தணித்துக் கொண்டவள்தானே அவள்.

    “இனி தோஹா போக வேண்டாம்; போனால் அவ்வளவுதான், திரும்ப மாட்டீர்கள்; வேலை போனால் போகிறது, மளிகைக் கடை வைத்து பிழைத்துக் கொள்ளலாம்” என்ற மனைவியின் புலம்பலால் அப்துல்லாவின் மனம் அலைக்கழிந்தது.

    சில நாட்கள் கழித்து, அப்துல்லாவின் கத்தார் மொபைல் ஃபோனிலிருந்து பிஜூவின் குரல் உற்சாக வெள்ளத்தில் ஒலித்தது.

    “சாரே! “டியூட்டி ஃப்ரீ”யில் நீங்கள் வாங்கின லாட்டரி சீட்டிற்கு பத்து லட்சம் ரியால் “ஃபர்ஸ்ட் ப்ரைஸ்” என்றார் பிஜு கும்மாளத்துடன்.

    அப்துல்லாவால் நம்பவே முடியவில்லை.

    “ஒருக்கால் பொய்யோ,” “தன்னை திரும்பவும் கத்தார் கொண்டு வருவதற்கு ஒரு சதியோ” என்று சந்தேகித்த அப்துல்லாவை, தோஹா நண்பர்கள் தொலைப்பேச்சு, “கல்ஃப் டைம்ஸ்” நாளிதழ் செய்தி. ”டியூட்டி ஃப்ரீ அதாரிட்டி”யின் கடிதம், அனைத்தும் பரிசுச் செய்தியை உறுதி செய்தன.

    நாட்கள் பரபரப்புடன் பறந்தன. இந்த இக்கட்டிலிருந்து மீண்டு வரவேண்டும், மீண்டும் கணவர் வீடு திரும்ப வேண்டும் என்று கண் கலங்கிய மனைவியைத் தேற்றிவிட்டு விமானம் ஏறி தோஹா வந்து “டியூட்டி ஃப்ரீ” அலுவலகத்தில் தன் பரிசு சீட்டைக் காண்பித்து அவர்கள் கேட்ட அனைத்து தரவுகளையும் சமர்ப்பித்து பத்து லட்சம் ரியால் பரிசுத் தொகை செக்”கை நடுங்கும் கரங்களில் பெற்றுக் கொண்டார்.

    முதல் வேலையாக ஷேக் ஆபீஸ் சென்று சந்தோஷ செய்தியை பகிர்ந்து கொண்டு அவரிடம் “ஷேக்! அல்லாவின் கருணைக்கு அளவில்லை! மீதி இருக்கும் ஏழு லட்சம் ரியால் (ஒரு கோடியே நாற்பது லட்சம் ரூபாய்) எனக்கு போதும்” என்று சொல்லி மூன்று லட்சம் ரியாலுக்கு ஒரு செக்கை எழுதி அவரிடம் கொடுத்தார்.

    அப்துல்லாவை ஷேக் பாராட்டிவிட்டு “என் பணம் போனது போனதுதான்! அதை அல்லா எனக்கு எப்படியும் திருப்பிக் கொடுத்துவிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.”

    அப்துல்லாவை நோக்கி “இது உன் பணம்! உனக்கு அல்லா அளித்தது; பணத்தை இழந்தபோது எந்த அளவிற்கு நரக வேதனை அனுபவித்திருப்பாய் என்பதெல்லாம், இறைவனுக்குத்தான் தெரியும்;” என்று கூறி மூன்று லட்சம் ரியால் செக்கை அப்துல்லாவிடமே திருப்பிக் கொடுத்தார்.

    இப்படிப்பட்ட மனிதரிடம் நாம் வேலை செய்ய எவ்வளவு கொடுத்து வைத்திருக்கவேண்டும் என்று எண்ணிய அப்துல்லாவின் “பணியில் தொடர்கிறேன்” என்ற முடிவு அனைவர்க்கும் ஆச்சரியம் அளித்தது.

    நாட்கள் நகர்ந்தன.

    திருட்டு வழக்கில் தீவிரம் காட்டிய போலீஸ் முதற்கண், அனைத்து “மனி எக்ஸ்சேஞ்ச்” எனப்படும் அந்நியச் செலாவணி நிறுவனங்களுக்கு தகவல் அனுப்பி கண்காணிக்க ஆணையிட்டனர்.

    ஒருவரின் மொபைல் எண், “பதாக்கா” எண் போன்ற அத்தியாவசிய தரவுகள் சிறு பணப்பரிவர்த்தனைக்கும்கூட அவசியம் என்பதாலும், ஒரு மனிதனின் அனைத்து பணப்பரிவர்த்தனையும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு விட்டதாலும் ஒற்றர்களின் ஒத்துழைப்பாலும் போலீசின் மதிநுட்பத்தாலும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு பெருமளவு பணம் மீட்கப்பட்டு ஷேக்கிடம் ஒப்படைக்கபட்டது.

    அனைத்தும் முடிந்த பின்னரே செய்தி குற்றவாளிகளின் கண்கள் மறைக்கப்பட்ட படங்களுடன் ஊடகங்களில் வெளியாயின.

    செய்தி அறிந்த அப்துல்லா, “ஷேக்! மிக்க மகிழ்ச்சி; இப்போதுதான் என் இதயபாரம் இறங்கியது; “நான் வேலையை ராஜினாமா செய்கிறேன்” என்றார்.

    அதை எதிர்பார்த்த ஷேக் “உனக்கும் வயதாகிறது! இனிமேலாவது வாழ்க்கையை குடும்பத்துடன் அனுபவி” என்று நன்றிப் பெருக்குடன் விடை கொடுத்தார்.

    ஏர்போர்ட்டில் “டியூட்டி ஃப்ரீ”யில் தேவையானதை வாங்கிக்கொண்டு விமானம் ஏறினார்.

    இறுதியாக. ஆனால் இந்த முறை அவர் லாட்டரி டிக்கெட் வாங்கவில்லை.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 (பகுதி 2I)

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 (பகுதி 2I)

    ஆண்டி பர்ன்ஹாம் – நாடாளுமன்ற உறுப்பினரிலிருந்து பிரதமர் வரை

    ஒரு ஜனநாயக நாட்டில் தலைவர்கள் உருவாக்கப்படுவதில்லை.

    அவர்கள் மக்களின் நம்பிக்கையால் உருவாகிறார்கள்.

    அந்த நம்பிக்கையை நிலைநிறுத்தும் ஆற்றல் இருந்தால் மட்டுமே அவர்கள் வரலாற்றில் இடம்பிடிக்கிறார்கள்.

    இன்றைய பிரிட்டிஷ் அரசியலைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் அவர்களின் அரசியல் பயணத்தை ஆராயாமல் முடியாது.

    அரசியல் என்பது ஒரு நீண்ட தூர ஓட்டம்.

    அதில் சிலர் வேகமாக ஓடி ஆரம்பத்திலேயே மறைந்து விடுகிறார்கள்.

    சிலர் மெதுவாக நடந்தாலும், மக்கள் மனதில் நம்பிக்கையை விதைத்து உச்சத்தை அடைகிறார்கள்.

    ஆண்டி பர்ன்ஹாம் அவர்களின் பயணம் இரண்டாவது வகையைச் சேர்ந்தது.

    இங்கிலாந்து அரசியலில் அவர் முதன்முதலில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, திறமையான இளம் தொழிலாளர் கட்சி அரசியல்வாதி என்ற அடையாளமே அவருக்கு இருந்தது.

    பின்னர் பல அமைச்சுப் பொறுப்புகளை வகித்தார். குறிப்பாக தேசிய சுகாதார சேவை (NHS) தொடர்பான அவரது ஈடுபாடு, சாதாரண மக்களின் வாழ்க்கையை நெருக்கமாகப் புரிந்துகொள்ளும் அரசியல்வாதி என்ற பெயரை அவருக்குப் பெற்றுத் தந்தது.

    ஆனால் அரசியலில் ஒவ்வொரு வெற்றிக்கும் முன் தோல்விகள் இருக்கும்.

    கட்சித் தலைமைப் போட்டிகளில் அவர் பின்னடைவைச் சந்தித்தார்.

    பல அரசியல்வாதிகள் அத்தகைய தோல்விக்குப் பிறகு அரசியலிலிருந்து விலகியிருப்பார்கள். ஆனால் பர்ன்ஹாம் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தார்.

    அவர் லண்டன் அரசியலின் மையத்தை விட்டு, கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராகப் பொறுப்பேற்றார்.

    அங்குதான் அவரது அரசியல் முதிர்ச்சி முழுமையாக வெளிப்பட்டது.

    கொரோனா பெருந்தொற்று காலத்தில் மத்திய அரசுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டபோதும், தனது பகுதி மக்களின் நலனுக்காக உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார்.

    அந்தச் செயல்பாடு அவரை ஒரு பிராந்திய அரசியல்வாதியாக அல்ல, தேசிய அளவிலான தலைவராக மக்களிடம் அறிமுகப்படுத்தியது.

    எனது ஐம்பத்தொரு ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் நான் உணர்ந்த ஒரு உண்மை என்னவென்றால், பிரிட்டிஷ் மக்கள் வெறும் பேச்சாளர்களை நீண்ட காலம் ஏற்றுக்கொள்வதில்லை.

    அவர்கள் செயலில் நம்பிக்கை வைப்பவர்களையே இறுதியில் மதிக்கிறார்கள்.

    ஆண்டி பர்ன்ஹாம் மீது உருவான நம்பிக்கையின் அடிப்படையும் அதுவே.

    இன்றைய பிரிட்டனில் மக்களின் முக்கியமான கவலைகள் வாழ்க்கைச் செலவு, சுகாதாரம், வீட்டு வசதி, குடியேற்றம், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக ஒற்றுமை.

    இந்த அனைத்திலும் சமநிலையான அணுகுமுறையை முன்வைக்க முயன்றதாலேயே அவர் தேசிய அரசியலின் மையத்திற்கு மீண்டும் அழைக்கப்பட்டார்.

    பிரிட்டனின் அரசியலமைப்பில் பிரதமரை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுப்பதில்லை.

    மக்கள் தங்கள் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

    பொதுத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறும் கட்சியின் தலைவரை, நாட்டின் மன்னர் அல்லது மன்னி அரசு அமைக்க அழைக்கிறார்.

    அந்த அழைப்பை ஏற்று அமைச்சரவையை அமைக்கும் நபரே பிரதமராகப் பதவியேற்கிறார்.

    இந்த நடைமுறை உலகின் பல நாடுகளிலிருந்து மாறுபட்டது.

    இங்கு பிரதமரின் அதிகாரம் சட்டத்தில் மட்டுமல்ல.

    நாடாளுமன்றத்தின் நம்பிக்கையிலும் இருக்கிறது. அந்த நம்பிக்கை குறைந்தால், பதவியும் நீடிக்காது. இதுவே பிரிட்டிஷ் ஜனநாயகத்தின் தனித்துவமான வலிமை.

    ஆண்டி பர்ன்ஹாம் பிரதமரானது ஒரே நாளில் நிகழ்ந்த சம்பவமல்ல.

    பல ஆண்டுகளாக உருவான அரசியல் அனுபவம், மக்களிடம் பெற்ற நம்பிக்கை, கட்சிக்குள் பெற்ற ஆதரவு, நாட்டின் அரசியல் சூழல் ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்தபோதுதான் அவர் அந்த உயரத்தை அடைந்தார்.

    ஆனால் ஒரு அரசியல் ஆய்வாளராக நான் ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகிறேன்.

    பிரதமராக உயர்வது ஒரு தலைவரின் வெற்றி.

    ஆனால் அந்த வெற்றியை வரலாற்று வெற்றியாக மாற்றுவது அவரது ஆட்சிதான்.

    இன்று பிரிட்டன் எதிர்கொள்ளும் பொருளாதார அழுத்தங்கள், அதிகரித்து வரும் குடியேற்ற விவாதங்கள், தேசிய சுகாதார சேவையின் சவால்கள், உலகளாவிய பாதுகாப்பு நிலைமைகள் ஆகியவற்றை சமாளிக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு ஆண்டி பர்ன்ஹாம் அரசின் தோள்களில் உள்ளது.

    அவரது ஆட்சியின் வெற்றியை தீர்மானிப்பது தேர்தல் வெற்றி அல்ல.

    அடுத்த ஐந்து ஆண்டுகளில் சாதாரண பிரிட்டிஷ் குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் மாற்றம்தான்.

    அதனால்தான் அரசியலில் வெற்றி என்பது பதவியை அடைவது அல்ல.

    அந்தப் பதவியின் மீது மக்கள் வைத்த நம்பிக்கையைப் பாதுகாப்பதே உண்மையான வெற்றியாகும்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்பன்
    சக்தி சக்திதாசன்
    லண்டன்
    10.08.2026

    (தொடரும் – பகுதி 3 : நைஜல் ஃபராஜ் மற்றும் ரீபோர்ம் UK – பிரிட்டிஷ் அரசியலின் புதிய அதிர்வு.)

    Share
  • மாசகற்றும் மாசக்தி யானவனே இறைவன்!

    மாசகற்றும் மாசக்தி யானவனே இறைவன்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    உள்ளம் பெருங்கோவில்  என்றாரே  திருமூலர்
    ஊனுடம்பு ஆலயம் என்றவரும் சொன்னாரே
    கள்ளமிலா உள்ளமெலாம் கடவுள் வந்தமர்வார்
    கருத்திலே இருத்தினால் சிறப்பாக இருக்கும்

    நம்பிக்கை வைத்தால் நல்லதே நடக்கும்
    நம்பினார் கெடுவதில்லை நான்குமறை வாக்கு
    நால்வேதப் பொருளாக நாதனே இருக்கிறான்
    என்பதை நம்புவார் இவ்வுலகில் இருக்கின்றார்

    நம்புவார் நம்பாதார் யாவர்க்கும் இறைவன்
    நாளுமே படியளந்து கொண்டுமே இருக்கிறான்
    நம்புவார் இறையை  நயந்தேற்றிப் போற்கிறார்
    நம்பாதார் தம்முயற்சி என்றுமே வியக்கிறார்

    வேண்டுவார் வேண்டுவதைக் கொடுப்பவன் இறைவன்
    வேறுபாடு காட்டாத மெய்ப்பொருளே இறைவன்
    மாறுபடு மனத்தாரை மாற்றிடுவான் இறைவன்
    மாசகற்றும் மாசக்தி யானவனே இறைவன் !

    Share
  • போனேன் Phu Quok

    போனேன் Phu Quok

    நிர்மலா ராகவன்

    ‘செழிப்பான நாடு’  என்ற அர்த்தம்கொண்டது Phu Quok. இயற்கை, கடல் என்ற ஆர்வம்கொண்ட உல்லாசப்பயணிகளின் சொர்க்கம் இது.

    கம்போடியா, வியட்நாம் ஆகிய இரு நாடுகளும் ப்ரெஞ்சு நாட்டின் அதிகாரத்தில் இருந்தனவாம். முதலில் கம்போடியா நாட்டுக்குச் சொந்தமாக இருந்த இத்தீவு ஒரு போரின் விளைவாக வியட்நாமின் கைக்கு வந்தது.

    கோலாலம்பூரிலிருந்து ஒன்றரை மணி நேர விமானப்பயணம் என்பதால், பலருக்கும் தெரிந்திராத இத்தீவிற்கு போய்த்தான் பார்ப்போமே என்று நானும் என் மகள் சித்ராவும் திட்டம் போட்டோம்.

    நாங்கள் தங்கிய Ocean Bay Resort என்ற இடத்தை இயற்கையைக் காக்கவேண்டும் என்ற முனைப்புடன் அமைத்திருக்கிறார்கள். தெருவுக்கு இருபுறங்கிலும் காட்டையொத்த அடர்ந்த மரங்கள். மரங்களாலான இருப்பிடங்கள். குளியலறையில் நீர்யானை குளிக்க ஏற்ற, நீளமும் அகலமுமான குளியல் தொட்டி (bath tub). முழுவதும் கருங்கல்லால் ஆனது. எல்லாச் சுவர்களும் மூங்கிலால் அமைக்கப்பட்டிருந்தன.

    இங்கு வந்திருந்தவர்கள் சீனா, ரஷ்ஷியா மற்றும் 1,000 கிலோமீட்டர் தொலைவிலிருந்த வியட்நாமிலிருந்து வந்தவர்கள். ஆங்கிலத்தைத்தவிர, அம்மொழிகளில்தாம் எல்லா இடங்களிலும் அறிவிப்புகள் காணப்பட்டன.

    நாங்கள் கால்வைத்த நேரம் மழை கொட்டொ கொட்டென்று கொட்டியது. `நல்லவர் ஒருவர் உளரேல்,’ என்று நான் பெருமைப்பட முடியவில்லை. இது மழைக்காலம். இடியோ, மின்னலோ இல்லாது, காற்று பலக்க மழை. பேய்க்காற்றில் மரங்களின் கிளைகள் அசைய, அருகிலிருந்த கடல் அலைகள் ஆர்ப்பரிக்க, மிக இனிய அனுபவம். வராந்தாவைத்  தாண்டி, படுக்கையறைக்குள்ளும் சாரல் அடித்து, எங்களைச் சிரிக்கவைத்தது.

    `மழை சற்று விட்டு விட்டதே!’ என்று நாங்கள் தங்கிய இடத்திலிருந்து ஹோட்டலுக்கு நடக்க ஆரம்பித்தவுடன் மழை பலத்துவிடும். முதல்நாள் என் புடவை முழுக்க தொப்பலாக நனைய, மறுநாளிலிருந்து உடையை ஷார்ட்ஸ், முருநீளக் கால்சட்டை என்று மாற்றினேன். எங்கள் அறையிலிருந்து வெளியே பார்த்தால், கூப்பிடு தூரத்தில் கடல். அலையோசையை ரசித்தபடி முதல் நாளைக் கழித்தேன். அவ்வளவு நனைந்தும், உடலுக்கு எந்த பாதிப்பும் நேரவில்லை என்பது விசேஷம். அரிதான, மிகத் தூய்மையான காற்றின் மகிமை.

    மறுநாளிலிருந்து, டுக் டுக் (tuk tuk) என்ற வாகனத்தை வரவழைத்தோம். ஆறுபேர் உட்காரலாம். அதில் ஏறமுடியாது திணற, அதை ஓட்டிய இளம் வாலிபன் என்னைத் துக்கி ஏற்றிவிட்டான்.

    இங்கு என்ன சிறப்பு என்றால், வாடகைக்காரில் எங்காவது போகும்போதும், என் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் செல்கிறார்கள். `என்னால் நடக்க முடியும்,’ என்று கையை உதறினாலும் விடமாட்டார்கள்.

    சாப்பாட்டுக்கூடத்தில் வேலை பார்த்த இளைஞன், “உங்களுக்கென்று, முட்டை போடாமல் pan cake பண்ணிக்கொண்டு வந்திருக்கிறேன்!’ என்று, தன் வேலையை விட்டுவிட்டு, என் மேசையில் கொண்டுவைத்தான். தோசைக்கல்லில் மாவு ஊற்றி, அதன்மேல் வெண்ணை, பலவித ஜாம், தேன் என்ற இனிப்பு வகை அது.

    தென்கிழக்கு ஆசியாவின் பிரத்தியேகமான குணம் — முதியவர்களுக்கு உதவி செய்வது பெரும்பாக்கியம் என்பதுபோல் புன்னகையுடன் செய்வது.

    பார்க்கவேண்டிய இடங்கள் இரண்டு: Pearl Farm (முத்துப்பண்ணை) மற்றும் பட்டுப்பண்ணை.

    முத்துப்பண்ணை

    ஒரு மீனவர் முத்துக்குளிக்க இப்பகுதிக்கு வந்தபோது, பல நூற்றாண்டுகளுக்குமுன் கடலில் மூழ்கிவிட்ட கப்பலைக் கண்டார். அதில் காணப்பட்ட சாமான்களை எடுத்துவந்தார். பன்முறை இப்படியே செய்து, அவர் சேர்த்துவைத்தவை இங்கு காட்சிப்பொருட்களாக வைக்கப்பட்டிருந்தன. பதினைந்தாம் நூற்றாண்டில் கிடைத்த பீங்கான் சாமான்களோடு, பெரிய பெரிய முத்துச்சிப்பிகளும் இருந்தன. நூற்றுக்கணக்கான கோப்பைகள் உடையாது இருந்தது ஆச்சரியம். கொலுவைப்போல் அடுக்கி வைத்திருக்கிறார்கள்.

    கடலிலிருந்து எடுக்கப்படும் முத்து விலை உயர்ந்தது. ஆற்றிலிருந்து மனிதனால் உற்பத்தி செய்யப்படுவது சற்றே மலிவு. பளபளப்பு குறைவு. இரு முத்துக்களை ஒன்றோடொன்று உரசினால் வெள்ளை மாவுபோல் கையில் ஒட்டுகிறது. பிறப்பிடம் ஆறோ, கடலோ, அவைதாம் நல்ல முத்துக்கள்.  எத்தனை காலம் ஆற்றில் விட்டுவைக்கிறார்கள் என்பதைப் பொறுத்து நிறம், அளவு ஆகியவை மாறும் என்றெல்லாம் ஒருவர் விளக்கினார் – முத்துச்சிப்பிகளின் உள்ளே கீறி.

    பட்டுப்பண்ணை

    பட்டுப்பூச்சி மற்றும் மூங்கிலால் செய்யப்படும் பட்டு வகைகளை இங்கு பார்க்கலாம். மிக அழகான, மெலிதான பட்டின் விலை அதிகம் என்று, வழவழப்பாக இருக்கும் மூங்கில் பட்டாலான ஆடைகள், காலுறை, மேசையிலும், தரையிலும் படிந்த கறைகளை நன்றாகத் துடைக்க துண்டுகள் ஆகியவற்றை மகிழ்வுடன் வாங்கினோம்.

    `பார்க்க வேறென்ன இருக்கிறது?’ என்று கேட்பவர்களுக்கு: இது ஒரு சிற்றூர். பேரங்காடிகள் கிடையாது. பலரும் ஸ்கூட்டரில்தான் போகிறார்கள். ஆனால், ஏழ்மையான தோற்றமில்லாது, ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.

    `நாகரிகம்’ என்ற பெயரில் கரடுமுரடாக நாம் செய்துவிட்ட வாழ்க்கையில் இம்மாதிரியான இயற்கைச்சூழலும், மனிதத்தன்மையுடன் வலம் வரும் மனிதர்களும் அருமருந்து.

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 41

     

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 35 கழறிற்று அறிவார் (சேரமான் பெருமாள்) நாயனார்

    சுந்தரமூர்த்தி நாயனார் தம் திருத்தொண்டத் தொகையில் ‘கார் கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன்’ என்று போற்றும் பெருமை பெற்றவர் இளவரசர் பெருமாக்கோதையார். சேர நாட்டின் தலைநகரமான மகோதை என்னும் கொடுங்கோளூரில், சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருவஞ்சைக்களத்தில் சேரர் குலத்தின் பெரும் புண்ணியங்களின் பயனாய் தோன்றிய இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் பெருமாக்கோதையார். இளம் வயதிலேயே அவர் மனம் நாளும் சிவ சிந்தையிலேயே ஈடுபட்டு வந்தது.  திருஅஞ்சைக்களத்து ஈசன் பால் பேரன்புடையவராய் விளங்கிய இவர், பொழுது புலரும் முன்பே எழுந்து புனித நீராடி ஆலயத்தைத் தூய்மை செய்து திருஅலகிட்டும், திருமெழுக்கிட்டும் பூமாலை புனைந்தும் அயராது பணி செய்து இறைவனை வழிபட்டு வந்தார். இளவரசனாக இருந்தும் அரச போகங்களில் அதிகாரச் செழிப்பில் அவர் மனம் ஈடுபடாமல், திருத்தொண்டு செய்வதே நிலையான பேரின்பம் என்று வாழ்ந்து வந்தார். சுந்தரரது திருத்தொண்டத் தொகை பெரிய புராணத்துக்கு மூலமாக இருந்தது. சுந்தரரின் சமகாலத்தவர் சேரமான் பெருமாள் நாயனார் ஆவார்.

    செங்கொற்பொறையன் என்னும் மன்னன் அப்போது சேர நாட்டை ஆண்டு வந்தான். நிலையற்ற வாழ்வில் இறைவன் திருவடியை அடைவதே உத்தமம் என்று எண்ணிய அவன் தன் அரச வாழ்வைத் துறந்து தவம் மேற்கொள்ள கானகத்தை நோக்கிச் சென்றான். அமைச்சர் முதலானோர் ஆய்வு செய்து சேரர் குடியில் தோன்றி திருஅஞ்சைக்களத்தில் சிவத் தொண்டு புரிந்து வந்த இப்பெருமாக்கோதையாரே அரசு உரிமை புரக்கும் உரிமை உடையார் என்று அறிந்து அவரை அணுகி அரசுரிமை ஏற்று அம்மலை நாட்டு மக்களை காத்தருள வேண்டும் என்று அழைத்தனர்.

    சேர நாட்டு ஆட்சி உரிமையை அவர் ஏற்க வேண்டும் என்பதை அவருக்குத் திருவருள் உணர்த்திற்று. பெருமாக்கோதையார் இறைவனிடத்தில் அனைத்து உயிர்களின் துன்பத்தை நீக்குகின்ற ஆற்றலும் அவற்றை அறிகின்ற திறனும் அருளல் வேண்டுமென வேண்டி நின்றார். அவ்வண்ணமே இறையருளால் மக்களுயிர் மட்டுமன்றி அனைத்துயிர்க்கும் நலம் செய்து ஆட்சி நடத்துமாறு எல்லா உயிரினங்களும் பேசும் மொழிகளை அறியும் அறிவாற்றலைப் பெற்றார். பிற உயிர்கள் பேசும் மொழிகளைஅறியும் அறிவை இவர் பெற்ற காரணத்தால் கழறிற்றறிவார் என்ற சிறப்புப் பெயரும் பெற்றார். சேர நாட்டு மன்னரானதால் சேரமான் பெருமான் என்ற பெயரும் இவருக்கு உரித்தாயிற்று.

    சேரமான் பெருமானுக்கு முடிசூட்டு விழா முடிந்தது. திருவஞ்சைக்களத்து  இறைவனை வழிபட்டு பட்டத்து யானை மீது  அரச மாளிகைக்குச் சென்று கொண்டிருந்தார் அரசர். அப்போது உவர் மண் மூட்டையோடு  ஒரு சலவைத் தொழிலாளி எதிர்ப்பட்டான். அவன் சுமந்து வந்த அந்த உவர் மண் அவன் உடல் முழுவதும் சிதறிப் படர்ந்து முழு நீறு பூசிய முனிவர் போன்று தோற்றமளிக்கச் செய்தது. அவனைக் கண்ட சேரமான் பெருமான் சிவனடியார் என்றே கருதியவர் சற்றும் தயங்காமல் யானையினின்றும் கீழே இறங்கி அந்த ஏழைத் தொழிலாளியின் காலில் விழுந்து வணங்கினார். பதறிப்போன அந்த சலவைத் தொழிலாளி அச்சம் கொண்டு, தான் மன்னருக்கு அடித்தொழில் புரியும் ஒரு சலவைத் தொழிலாளி என்று கூறக்கேட்டு அடியேன் அடிச்சேரன் சிவவேடத்தை நினைப்பித்தீர் வருந்தாது செல்லும்  என்று கூறி வழியனுப்பி வைத்து அரண்மனையை அடைந்தார்.

    மத்த யானை ஏறி மன்னர்

      சூழவரு வீர்காள்

    செத்த போதில் ஆரும் இல்லை

      சிந்தையுள் வைம்மின்கள்

    வைத்த உள்ளம் மாற்ற வேண்டா

      வம்மின் மனத்தீரே

    அத்தர் கோயில் எதிர்கொள் பாடி

      என்ப தடைவோமே. 

    என்று ஆரூரர் தம் பாடலில் அழகாக விளக்குகிறார்.

    கழறிற்றறிவார் மனதில் முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் பிடி சாம்பலாவது நிச்சயம் என்ற உணர்வு, தமது அரச வாழ்வு நிச்சயமல்ல என்பதையும் உணர்த்தியதால் அவ்வேடத்திற்கு உரிய வகையில் வணங்கினார் சேரமான் பெருமான். எல்லா உயிர்களின் துன்பத்தையும் போக்கி மக்கள் வாழ்வில் இன்பம் பெருக அரசு நடத்தினார். மன்னர் நாள்தோறும் தன் ஆன்மார்த்த மூர்த்தியான, ‘திருஅஞ்சைக்களம் சபாபதி’ என்ற கூத்தப் பெருமான் திருமேனியை உள்ளம் நெக்குருக வழிபாடு செய்வார். பெருமானும் இவர்தம் வழிபாட்டினை ஏற்கும் வகையில் பாதச் சிலம்போசை அளிப்பார். ஓசை கேட்ட பின்பு வழிபாட்டினை நிறைவு செய்து அரசுப் பணிகளில் ஈடுபடுவார்.

    ஒரு நாள் சிவபெருமான் கழறிற்றறிவார் நாயனாரைச் சுந்தரமூர்த்தி நாயனாருடன் நட்புக் கொள்ளச் செய்யும் திருவுளக்குறிப்பை மேற்கொண்டார். அன்று நாள்தோறும் அவருடைய பூசை முடிவில் கேட்கும் சிலம்பொலியைக் கேட்கப் பெறாததால் நாயனார் மிக வருந்தி இவ்வாறு நிகழ்தற்குத் தான் செய்த பூசையில் ஏதேனும் தவறு நிகழ்ந்திருக்குமோ என்று எண்ணி உயிர்விடத் துணிந்தார்.

    அப்போது எம்பெருமான், தில்லையம்பதியில் சுந்தரர் தம்மைப் பாடிக் கொண்டிருக்கும் அப்பாடலில் ஒன்றிப்போனதால் சேரமானின் பூசையை ஏற்க சிறிது தாமதம் நேர்ந்தது என்று கூறுகிறார். இறைவனின் அருளை வியந்துப் போற்றியவர்,  தில்லைக் கூத்தப்பெருமானை வணங்கி வென்தொண்டரையும் காண்பேன் என்று சோழ நாடு செல்லத் தயாரானார். தில்லைத் திருக்கோயிலை அடைந்து கூத்தப்பெருமான் திருநடம் பயிலும் பேரம்பலத்தை அடைந்து புலனும் உளமும் ஒன்றாகி வழிபாடு செய்தார். பொன்வண்ணத்தந்தாதி என்ற நூலைப் பாடினார். கூத்தப் பெருமானும் பாடல் கேட்டு மகிழ்ந்து பாதச் சிலம்போசை கேட்பித்தார்.

    வானக் கங்கை நதிபொதிந்த மல்கு சடையார் வழிபாட்டுத்
    தூநற் சிறப்பி னர்ச்சனையாந் தொண்டு புரிவார் தமக்கொருநாள்
    தேனக் கலர்ந்த கொன்றையினா ராடற் சிலம்பி னொலிமுன்போன்
    மானப் பூசை முடிவின்கட் கேளா தொழிய மதிமயங்கி

    சுந்தரரைத் தரிசித்து மகிழ வேண்டித் தில்லையை அடைந்தவர், அவர் திருவாரூர் சென்றதை அறிந்து தாமும் திருவாரூருக்குச் சென்று சுந்தரரைத் தரிசித்து மகிழ்ந்தார். பின் தியாகராசரையும் வணங்கி, “திருமும்மணிக்கோவை” என்னும் பிரபந்தத்தால் சிவபெருமானைப் போற்றினார்.

    ‘என்பும் உருக உயிர் ஒன்றி உடம்பு ஒன்னும்’ என்று சேக்கிழார் பெருமான் என் நெகிழ்ந்துரைக்கும் அளவிற்கு, ஆரூரரைக் கண்ட சேரமான் பெருவிருப்புடன் தாழ்ந்தார், விழுந்தார், வணங்கினார். அவரை வாரியெடுத்துத் தழுவினார் நம்பியாரூரர்.

    மதுரையில் வறுமையால் வாடிக்கொண்டிருந்த பாணபத்திரர் எனும் புலவரைக் கண்ட சொக்கநாதர் பாணபத்திரரின் வறுமையைப் போக்க எண்ணம் கொண்டார். ஆதலால் ‘மதிமலி புரிசை’ என்ற பாடலை ஓர் திரைச்சீலையில் எழுதி, ‘இத்திருமுகத்தை சேரமான் பெருமாளிடம் சேர்ப்பித்தால் பரிசில் வழங்குவான்’ என்று குறிப்பித்தார்.

    பின்னர் எம்பெருமானார் சேரமான் பெருமான் நாயனாரின் கனவில் தோன்றித் தம் அடியவனான பாணபத்திரன் அவரைக் கண்டு பொருள் பெறும் நோக்கில் வந்துள்ளதால் அவருக்கு வேண்டும் அளவு பொருள் கொடுத்தனுப்புமாறு திருவாய் மலர்ந்தருளினார்.

    திருமுகத்தைப் படித்துப் பரவசமடைந்த சேரமான் பெருமான் அதனைத் தலையில் வைத்துக் கொண்டு ‘எம்பெருமானின் திருமுகம் பெறும்பேறு எனக்குக் கிடைத்ததே’ என்று ஆனந்தக் கூத்தாடினார். பாணரைப் பணிந்து, தமது அனைத்து சொத்துகள் மட்டுமின்றி அரசாட்சியும் அவருக்கே உரியது என்றார் கழறிற்றறிவார் நாயனார். இவற்றை எல்லாம் கண்டு வியந்த பாணபத்திரரோ நாயனாரின் உயர் குணத்திற்குத் தலை வணங்கியதோடு எல்லையில்லா மகிழ்ச்சியுடன் தமக்கு வேண்டிய பொருள்களை மட்டும் எடுத்துக் கொண்ட பாணரை பரிசுப் பொருட்களுடன் யானைமீது அமர்த்தி  அன்புடன் வழியனுப்பி வைத்தார் கழறிற்றறிவார் நாயனார்.

    சேரமான் பெருமான் நம்பியாரூரரைப் பார்த்து மதுரை சென்று அங்கையற்கண்ணி உடனமர் சொக்கலிங்கப் பெருமானை வணங்க விருப்பம் தெரிவிக்க  இருவரும் பாண்டி நாடு சென்று மதுரை சொக்கலிங்கப் பெருமானை வணங்கி மகிழ்ந்தனர். பாண்டிய மன்னனும் அவர்  மகளை மணந்த சோழ மன்னனும் இரு பெரு மக்களையும் வரவேற்று உபசரித்தனர். சேர, சோழ, பாண்டிய மன்னர்களான மூவேந்தர் புடைசூழச் சுந்தரர் பாண்டித் தலங்கள் பலவற்றைத் தரிசித்தார். பின்னர் சேரமானும் சுந்தரரும் திருவாரூர் மீண்டனர். சேரமான்  சுந்தரரோடு  திருவாரூரில் தங்கியிருந்து அவரைத் தம் நாட்டுக்கு எழுந்தருள வேண்டுமெனப் பலமுறையும் விண்ணப்பித்துச் சுந்தரரை அழைத்துக்கொண்டு வழியிடையே பல தலங்களையும் தரிசித்துக்கொண்டு கொடுங்கோளூர் சென்றடைந்தார். சுந்தரரைச் சேரமான் தம் அரியணையில் அமர்த்தி உபசரித்தார். நாள்தோறும் ஆடல் பாடல் முதலிய நிகழ்ச்சிகளால் அவரை மகிழ்வித்தார்.

    அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமென்று

    அமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி

    முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே

    மொழிந்தாறு மோர்நான்கு மோர் ஒன்றினையும்
    படியா இவைகற் றுவல்ல அடியார்

    பரங்குன்ற மேய பரமன் அடிக்கே
    குடியாகி வானோர்க்கு மோர்கோவு மாகிக்

    குலவேந்த ராய்விண் முழுதாள் பவரே.
    என்று ஆரூரர் தம் பாடலில் குறிப்பிடுகிறார்.

    திருவாரூர் வந்தடைந்த சுந்தரர் நீண்ட நாட்களுக்குப் பின் சேரமான் நினைவு வர அடியவர் குழாங்களோடு கொடுங்கோளூர் புறப்பட்டுச் சென்று இருவரும் அரண்மனையில் அளவளாவி மகிழ்ந்திருந்தனர். ஆரூரரும் சேரமானும் ஒன்று சேர்ந்து சென்று ஐயாறப்பரை வழிபட்டப் பின்னர் இருவரும் மலைநாடு நோக்கிச் சென்றனர். இவர்கள் வருகை அறிந்து நாட்டு மக்கள் அனைவரும் திரண்டு வந்து தோரணம் அமைத்துப் பல்வேறு நலன் செய்தனர். நாடே விழாக்கோலம் பூண்டது. சுந்தரர் திருவஞ்சைக்களம் இறைவனை ‘தலைக்குத் தலைமாலை` என்ற திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார்.
    சிலநாட்களுக்குப் பிறகு சுந்தரர் ஆரூரானை மறத்தற்கியலா நிலையைச் சேரமானிடம் தெரிவித்து பிரியா விடைப் பெற்றார். சேரமான் பொன்னும், மணியும், பூந்துகிலும் இன்ன பிற பொருட்களையும் வாரி வழங்கி  சுந்தரரை வழியனுப்பினார்.

    எம்பெருமான் ஆரூரரின் பாசத்தளையை நீக்கி அருள் புரிய எண்ணம் கொண்டவர், இந்திரன் முதலிய தேவகணங்களையும் வெள்ளை யானையையும் அனுப்பி அவரைத் திருக்கயிலைக்கு அழைத்து வருமாறு பணித்தார். அக்கணம் வெள்ளை யானையுடன் திருவஞ்சைக்களம் திருக்கோயிலை அடைந்த தேவர்கள் எம்பெருமானின் அருளிப்பாட்டைத் தெரிவித்தனர். சுந்தரரும் இறையாணையை ஏற்றவர், சேரமானையும் மனத்தில் சிந்தித்துக் கொண்டே வெள்ளை யானையின் மேல் ஏறி

    தானெனை முன்படைத் தானத

      றிந்துதன் பொன்னடிக்கே

    நானென பாடலந் தோநாயி

      னேனைப் பொருட்படுத்து

    வானெனை வந்தெதிர் கொள்ளமத்த

      யானை அருள்புரிந்து

    ஊனுயிர் வேறுசெய் தான்நொடித்

      தான்மலை உத்தமனே

    என்ற திருப்பதிகத்தை ஓதிக்கொண்டே திருக்கயிலாயம் சென்றார்.
    ஆனால் சேரமான் பெருமான் சுந்தரர் திருக்கயிலாயம் செல்வதைத் தம் யோகக் காட்சியால் அறிந்தவர், தன் அருகில் நின்றிருந்த குதிரை மீது ஏறித் திருவஞ்சைக்களம் சென்று ஆரூரர் தேவகணங்களுடன் திருக்கயிலை செல்வதைக் கண்டு களித்துத் தாமும் அவருடன் கயிலை செல்லும் எண்ணம் கொண்டார். வெள்ளை யானையின் மீதமர்ந்து விண்ணிற் செல்லும் தம் தோழரைக் கண்டபோது, தானும் கயிலாயம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் தமது குதிரையின் காதில் ஐந்தெழுத்து மந்திரமான ‘நமசிவாய’ எனும் திருமந்திரத்தைக் கூறியவர், வான வெளியில் சுந்தரர் செல்லும் வெள்ளை யானையை வலம் வந்தவர், அதன் முன்னே சென்றார். இருவரும் தெற்கு வாயில் வழியாகத் திருக்கயிலையை அடைந்தனர்.

    ஆரூரர் திருக்கயிலையினுள் சென்று இறைவனையும் இறைவியையும் வணங்கிப் போற்றியவர், சேரமான் வருகையையும் எம்பெருமானிடம் விண்ணப்பித்தபோது பெருமானும் சேரமான் பெருமானை உள்ளே அழைத்துத் தாம் அழையாமல் எதற்கு வந்தார் எனக் கேட்கிறார். சேரமானும் திருவருள் வெள்ளம் ஆரூரருடன் தன்னையும் ஈர்த்துக் கொணர்ந்து வந்து அங்கே நிறுத்திவிட்டதாகக் கூறுகிறார். சிவபெருமானைப் பாட்டுடைத் தலைவராக வைத்து திருஉலா ஒன்று பாடியுள்ளதாகவும், அதனைச் செவிமடுத்து ஏற்றருள வேண்டுமெனவும் வேண்டினார். சிவபெருமான் அதனைச் சொல்லக் கேட்டுத் திருக்கயிலாய ஞான உலாவைத் திருக்கயிலையில் எம்பெருமான் முன்னர் அரங்கேற்றி ஆனந்தமடைந்தார். எம்பெருமான் ஆரூரரோடு சேரமானையும் சிவகணத் தலைவராய் தம்பால் நிலை பெற்றிருக்கப் பணிக்கச் சேரமான் பெருமான் நாயனாரும் திருக்கயிலையில் திருத்தொண்டு புரிந்து மகிழ்ந்து மீப்பெருவாழ்வு அடைந்தார்.

    கழறிற்றறிவார் நாயனார் குருபூசை தினம் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவஞ்சைக்களம் என்ற ஸ்ரீவாஞ்சி குளம் கோயிலில் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஒரு நாள் மட்டும் இங்கு தமிழ்நாட்டு முறைப்படி ஆகம பூசை செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

    சேரமான் நாயனார் புராணம் சொல்லும் கருத்து:

    பெருமாக்கோதையார் இறைவனிடத்தில் அனைத்து உயிர்களின் துன்பத்தை நீக்குகின்ற ஆற்றலும் அவற்றை அறிகின்ற திறனும் அருளல் வேண்டுமென வேண்டி நின்றார். அவ்வண்ணமே இறையருளால் மக்களுயிர் மட்டுமன்றி அனைத்துயிர்க்கும் நலம் செய்து ஆட்சி நடத்துமாறு எல்லா உயிரினங்களும் பேசும் மொழிகளை அறியும் அறிவாற்றலைப் பெற்றார். இறைவனும் அவர்தம் பேரருளால் “யாவும் யாரும் கழறினவும் அறியும் உணர்வும் இரக்க உள்ளமும் தண்டாத கொடையும் காவல் மன்னர்க்குரியனவும் எல்லாம் கைவந்துறப் பெற்றார்”.

    பிற உயிர்கள் பேசும் மொழிகளை அறியும் அறிவை இவர் பெற்ற காரணத்தால் கழறிற்றறிவார் என்ற சிறப்புப் பெயரும் பெற்றார். கழறுதல் என்றால் சொல்லுதல் என்று பொருள். எல்லா உயிர்களும் சொல்லுவதனைப் பெருமான் அருளால் அறியப் பெற்றமையால் கழற்றிற்றறிவார் என்ற பெயர் பெற்றார். சேர நாட்டு மன்னரானார். எனவே சேரமான் பெருமான் என்ற பெயரும் இவருக்கு உரித்தாயிற்று.

    சேரமான் பெருமாள் நாயனாரின் படைப்புகள்

    சேரமான் பெருமாள் நாயனார், திருக்கைலாய ஞான உலா, திருவாரூர் மும்மணிக்கோவை, பொன் வண்ணத்து அந்தாதி ஆகிய மூன்று நூல்களை இக்காலக் கட்டத்தில் இயற்றினார்.

    திருக்கைலாய ஞானவுலா, ஆதிஉலா என்றும் வழங்கப்படுகிறது. உலாவில் சிவபெருமான் போற்றப்படுகிறார். திருக்கயிலையில் தேவர்கள் கூடிச் சிவபெருமான் உலா வந்து காட்சி அளிக்க வேண்டும் என்று வேண்டியதால், எம்பெருமானும் அதற்கிசைவளிக்க, உமையவள் சிவனாருக்கு அனைத்து அணிகலன்களையும் அணிவித்து அழகு பார்க்கிறாள். மன்மதன் மாலை தருகிறான். சந்தனம் பூசிக் கிளம்பும் சிவனைத் தெருக்களில் உள்ள மகளிர் கண்டு காதல் கொள்கின்றனர். முனிவர்கள் பணிந்து வாழ்த்துகின்றனர். தேவர்கள் தொண்டு செய்கின்றனர் என்று அமைந்துள்ள நூல் இது. காண்பவர் நெஞ்சங்களைக் கவரும் ஒப்பற்ற தலைவனாம் சிவனது திருவுலாக் காட்சியை அற்புதமாக விவரிக்கும் நூல் இது.

    ‘உலா’ எனும் இலக்கிய அமைப்பைத் தோற்றுவித்துள்ளது இந்நூல். அந்த வகையில் இதை இலக்கணமாகக் கொண்டு, இதே அமைப்பில் பின்னாளில் உலா நூல்கள் இயற்றப்பட்டன.

    திருவாரூர் மும்மணிக்கோவை என்ற நூல் சிவனடியார்கள் செந்தமிழ் வல்லவர்களாகவும் இருந்தமை அறிய முடிகின்றது. மூன்று வெவ்வேறு மணிகளை மாற்றி மாற்றித் தொடுத்த மாலை போல், வெவ்வேறு மூவகைச் செய்யுள்கள் மாறி மாறி வர முப்பது பாடல்களைக் கொண்ட இந்நூலும் புதிய அமைப்பைக் கொண்டுள்ளது. இதுபோலவே, சிவபெருமானைப் போற்றுவதற்குக் கண்டுபிடித்த புதுப்புது இலக்கிய வடிவங்கள் பின்னாளில் சிற்றிலக்கியங்களாக மலர்ந்தன.

    பொன் வண்ணத்து அந்தாதி எனும் நூல் பதினொராம் திருமுறையில் உள்ளது. சிவபெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட இந்நூல் 101 பாடல்களை உடையது. ஒரு செய்யுளின் இறுதிப் பகுதியே அடுத்த செய்யுளின் தொடக்கமாக அமைவது அந்தாதி ஆகும்.

    சேத்திர திருவெண்பா, திருமும்மணிக்கோவை, மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை ஆகிய நூல்களும் தோன்றின.

    திருச்சிற்றம்பலம்

     

     

     

     

     

     

    Share
  • “லிட்டில் பாய்” – சுடோமு யமகுச்சி

    TOKYO, Japan – Photo shows the late Tsutomu Yamaguchi speaking in Nagasaki in June 2009 about his experience of surviving the 1945 atomic bombings of Hiroshima and Nagasaki. The Japanese Embassy in London has sent a written protest against the BBC for introducing him as ”The Unluckiest Man in the World” in its TV program that aired on Dec. 17, 2010, with the show’s personalities and the audience laughing. A producer of the show has apologized via e-mail. (Photo by Kyodo News Stills via Getty Images)

    1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி, இதே நாளில் அமெரிக்கா, ஹிரோஷிமா மீது வீசிய லிட்டில் பாய் என்பதுதான் உலகின் முதல் குண்டு வீச்சு. அதன் கதிர்வீச்சின் தாக்கத்தால் பல்வேறு வகையான புற்றுநோய்களால் பின்னாளிலும் ஏராளமானோர் இறந்தனர். இந்த இரட்டை குண்டுவெடிப்புகளிலும் தப்பிய ஒரே மனிதர் என்று ஜப்பான் அரசு அங்கீகரித்திருந்த, இரண்டையும் நேரடியாகக் கண்ட ஒரே சாட்சி சுடோமு யமகுச்சி. இரண்டு குண்டு வீச்சுகளிலிருந்தும் யமகுச்சி உயிர் தப்பியவர் 2010-ல் தனது 93 வயதுவரை உயிர் வாழ்ந்த மன உறுதியை என்ன சொல்வது.

    தனிமனித வளர்ச்சியே ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி. சமுதாயத்தின் வளர்ச்சியே ஒரு நாட்டின் வளர்ச்சி. ஹிரோஷிமா நாகசாகி என்ற பெயரைக் கேட்டாலே சிறுவர்கள் கூட ஒரு முறை உடல் சிலிர்த்து அதிர்ந்துவிடுவார்கள். 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி, அமெரிக்கா ஹிரோஷிமா மீது வீசிய லிட்டில் பாய் என்பதுதான் உலகின் முதல் குண்டு வீச்சு. 12-15 ஆயிரம் டன் டிஎன்டி வெடிபொருள் சக்தியைக் கொண்ட அந்த அணுகுண்டு 13 சதுர கிலோ மீட்டர் பரப்பை சுடுகாடாக்கியது. குண்டு விழுந்த ஐநூறு அடி சுற்றளவில் இருந்த அனைவரும் நொடியில் எரிந்து சாம்பலானார்கள். 70% கட்டிடங்கள் அழிந்து மண்ணோடு மண்ணாயின. அங்கு வசித்த 3,50,000 மக்களில் 1,50,000 பேர் கொல்லப்பட்டனர்.

    குண்டுவெடித்து இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு கறுப்பாக அமில மழை பெய்தது. விண்ணை முட்டும் மரண ஓலமும், கை, கால், தலையில்லாத குழந்தைகளின் பெற்றோரின் கதறல் என அல்லோகல்லோலப்பட்டது ஹிரோஷிமா.

    அடுத்த மூன்று நாட்களில், நாகசாகி நகரத்தின் மீது, குண்டு மனிதர் (ஃபேட் மேன்) என்ற குண்டு மீண்டும் வீசப்பட்டது. 6.4 கிலோ புளுட்டோனியம் உள்ளிட்ட இதன் எடை 4,670 கிலோ. ‘குட்டிப் பைய’னைவிட திறன்மிகுந்த இதனால் 74,000 பேர் கொல்லப்பட்டனர். 1945 ஆக்ஸட் 8-ம் தேதியன்று ஜப்பான் மீது சோவியத் ரஷ்யா போர்ப் பிரகடனம் செய்ததும் ஜப்பான் வேறு வழியில்லாமல் அதே மாதம் 14-ம் தேதி நேச நாடுகளிடம் சரணடைந்ததும் என தொடர்ந்த பேரிடர்களைச் சந்தித்து வந்தது. நான்கு நாட்களுக்குள் இரண்டு அணுகுண்டு வீச்சினால் நடுங்கிப்போனது ஜப்பான். இச்சம்பவங்கள் நிகழ்ந்து பல்லாண்டுகளான பின்பும் சதைப் பிண்டங்களாக, கை,கால், கண், மூக்கு போன்ற உடல் பாகங்களின்றி குழந்தைகள் பிறக்கின்றன. அணுகுண்டின் தாக்கத்தால் மாதக்கணக்காக, வருடக்கணக்காக குற்றுயிரும் குலையுயிருமாகப் பரிதவித்து கதிர்வீச்சின் தாக்கத்தால் மடிந்தவர் பலர். வேதனையில் துடிப்பவர்களுக்கு
    சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளும் மருத்துவர்களும், செவிலியர்களும்கூட மிஞ்சவில்லை. அடுத்தடுத்து மேலும் சுமார் ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர். கதிர்வீச்சின் தாக்கத்தால் பல்வேறு வகையான புற்றுநோய்களால் பின்னாளிலும் ஏராளமானோர் இறந்தனர். இந்த இரட்டை குண்டுவெடிப்புகளிலும் தப்பிய ஒரே மனிதர் என்று ஜப்பான் அரசு அங்கீகரித்திருந்த, இரண்டையும் நேரடியாகக் கண்ட ஒரே சாட்சி சுடோமு யமகுச்சி, ஜப்பானியக் கப்பல் பொறியாளர். இரண்டு குண்டு வீச்சுகளிலிருந்தும் யமகுச்சி உயிர் தப்பியவர் 2010-ல் தனது 93 வயதுவரை உயிர் வாழ்ந்த மன உறுதியை என்ன சொல்வது. தீயில் கருகி சாம்பலான பீனிக்ஸ் பறவை மீண்டும் மீண்டும் எழுந்து வருவதுபோல் உறுதியான சிந்தை கொண்டவர்களே வாழ்க்கையின் எத்தகைய பேரிடரையும் கடந்து வென்று வருபவர்கள். தன் மூலதன பங்குகளில் சுமார் 40% அழிந்துபட்ட நிலையிலும் 1960களின் பிற்பகுதியில், வியக்கத்தக்க வகையில் ஜப்பானிய பொருளாதாரம் வெகு விரைவில் மீண்டதோடு, தொடர்ந்து இலாபங்களைக் குவித்ததுதான் ஆச்சரியமான செய்தி. மேற்கத்திய நாடுகளின் சவால்களை எதிர்கொண்ட ஜப்பானியர்கள் செல்வந்தர்களாக மாறியவர்கள், அவர்களுடைய சமூக, பொருளாதார, கல்வி முறைகளுக்கு ஈடாக, போராடி தங்களை தயார்படுத்திக்கொண்டனர். ஜப்பானை உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக மாற்றிய மக்களின் கடின உழைப்பும் தியாகமும் அதிசயிக்கத்தக்கது. இரண்டாம் உலகப் போரின் பேரழிவிற்குப் பின்னர் 20-ம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ள ஜப்பான் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. சர்வதேச சமூகத்தில் அதன் பங்கு கணிசமானது. மக்களின் கடுமையான உழைப்பினால் தொழில்துறை உற்பத்தி 1951-ல் மீண்டுவர ஆரம்பித்து 1960-ல் 350 சதவிகிதத்தை எட்டி உலகையே அண்ணாந்து பார்க்க வைத்தது. அரசாங்கத்தின் வெற்றிகரமான பொருளாதார சீர்திருத்தம் ஒரு காரணம் என்றாலும் மக்கள் எஃகு, நிலக்கரி, பருத்தி உள்ளிட்ட மூலப்பொருட்களின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி, ஜவுளி உற்பத்தியிலும் முன்னிலை வகித்து வெற்றிக்கு வித்திட்டனர்.

    #ஹிரோஷிமா #நாகசாகி #லிட்டில்பாய் #ஜப்பான் #உழைப்பு #அனுகுண்டு #அழிவு #hiroshima #nagasaki #japan #Japanhardwork #TsutomuYamaguchi #சுடோமுயமகுச்சி

    Share
  • கவியரசர் கண்ணதாசனின் பாடல்களில் ஆன்மீகம் – 19

    கவியரசர் கண்ணதாசனின் பாடல்களில் ஆன்மீகம் – 19

    சக்தி சக்திதாசன்

    “கலைமகள் கைப்பொருளே”

    கவியரசர் கண்ணதாசனின் பாடல்களில் ஆன்மீகம் என்ற தொடரில் இன்று நாம் ஆராயப் போகும் பாடல், “கலைமகள் கைப்பொருளே”.

    வசந்த மாளிகை எனும் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் , வாணிஸ்ரீ சம்பந்தப்பட்ட காட்சி.

    திரைப்படத்தில் இது ஒரு எளிய காட்சியாகத் தோன்றுகிறது.

    அன்பிற்காக ஏங்கும் ஒரு இளைஞன். செல்வம் இருந்தும் மனநிம்மதி இல்லாத வாழ்க்கை.

    தவறான பழக்கங்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் அவன்.

    அவனை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் வரும் ஒரு இளம் பெண்.

    கவனிப்பாரற்று மூலையில் கிடந்த வீணையை எடுத்துத் தூசி தட்டி இசைக்கிறாள்.

    கதைக்கு இது போதும்.

    ஆனால் கவியரசருக்கு அது போதாது.

    அவரது சொற்கள் கதையைத் தாண்டி மனித வாழ்க்கைக்குள் நுழைகின்றன.

    அதையும் தாண்டி ஆன்மாவின் வாசலைத் தட்டுகின்றன.

    வீணை என்பது வெறும் இசைக்கருவி அல்ல.

    அது மனித மனம்.

    அதன் நரம்புகள் மனிதனின் எண்ணங்கள்.

    அதை மீட்டும் விரல்கள் இறையருள் அல்லது ஞானகுருவின் வழிகாட்டுதல்.

    இவ்வாறு பார்க்கத் தொடங்கும்போது இந்தப் பாடல் முழுவதும் ஒரு ஆன்மீக உபநிடதமாக நமக்குள் விரிகிறது.

    **”கலைமகள் கைப்பொருளே
    உன்னை
    கவனிக்க ஆளில்லையோ”**

    இங்கு வீணையைப் பார்த்து கேட்கப்படும் கேள்வி, உண்மையில் மனிதனைப் பார்த்து கேட்கப்படும் கேள்வி.

    ஒவ்வொரு மனிதனும் கலைமகளின் படைப்பே.

    ஒவ்வொரு உயிரும் இறைவனின் அற்புதமான வடிவமைப்பு.

    அளவற்ற திறமைகள், கருணை, அன்பு, அறிவு, ஞானம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொக்கிஷம்.

    ஆனால் அந்தப் பொக்கிஷத்தை கவனிக்க யார் இருக்கிறார்கள்?

    பெரும்பாலான மனிதர்கள் வெளி உலகத்தை வெல்வதற்காக வாழ்கிறார்கள்.

    ஆனால் தங்களுடைய உள்ளத்தை அறிந்து கொள்ள நேரம் ஒதுக்குவதில்லை.

    வீணை தூசி படிவது போல மனித மனமும் ஆசை, அகந்தை, பொறாமை, பயம், கோபம் ஆகிய தூசிகளால் மூடப்படுகிறது.

    அந்தத் தூசியை துடைக்காமல் இசை வராது.

    மனதைத் தூய்மைப்படுத்தாமல் ஆன்மீகம் மலராது.

    **”விலையில்லா மாளிகையில்
    உன்னை
    மீட்டவும் விரலில்லையோ”**
    இந்த “விலையில்லா மாளிகை” என்பது மனித உடல்.

    உலகிலுள்ள எந்த அரண்மனையையும் விட விலைமதிப்பற்றது.

    ஏனெனில் இதில் உயிர் இருக்கிறது.

    உணர்வு இருக்கிறது.

    சிந்தனை இருக்கிறது.

    ஆன்மா இருக்கிறது.

    இவ்வளவு அற்புதமான உடலுக்குள் இருக்கும் மனம் இசைக்கப்படாமல் கிடக்கிறது.

    வீணை தனியாக இசைக்க முடியாது.

    அதை மீட்டும் விரல்கள் வேண்டும்.
    அதேபோல மனித வாழ்க்கைக்கும் விழிப்புணர்வு வேண்டும்.

    அது தியானமாக இருக்கலாம்.
    ஞானமாக இருக்கலாம்.

    குருவின் உபதேசமாக இருக்கலாம்.

    இறையருளாக இருக்கலாம்.

    **”உன்னிடம் ஆயிரம் ராகங்களே
    என்றும் உனக்குள் ஆயிரம் கீதங்களே”**

    இந்த வரிகளில் கவியரசர் மனிதனின் எல்லையற்ற ஆற்றலைச் சொல்கிறார்.

    ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எண்ணற்ற திறமைகள் உறங்கிக் கிடக்கின்றன.

    அதேபோல ஆன்மீகப் பயணத்திற்குத் தேவையான எல்லா விதைகளும் அவனுக்குள்ளேயே உள்ளன.

    அன்பு…
    கருணை…
    மன்னிப்பு…
    அமைதி…
    தியாகம்…
    பேரானந்தம்…

    இவை வெளியிலிருந்து வருவதில்லை.

    அவை அனைத்தும் உள்ளேயே இருக்கின்றன.

    ஆனால் அவை விழித்தெழ வேண்டும்.

    ஒரு விதைக்குள் முழு மரம் இருப்பது போல, ஒரு மனிதனுக்குள் முழுமையான ஞானியின் சாத்தியமும் மறைந்தே இருக்கிறது.

    அதனால்தான் கவியரசர் “ஆயிரம் ராகங்கள்” என்று கூறுகிறார்.
    அதாவது எண்ணற்ற பரிமாணங்கள்.

    எண்ணற்ற உயர்வுகள்.

    எண்ணற்ற சாத்தியங்கள்.

    **”இசையறிந்தோர்கள் மீட்டுங்களே
    இல்லை எனக்கேனும் வழி காட்டுங்களே”**

    இது பாடலின் மிக ஆழமான ஆன்மீக வரிகளில் ஒன்று.

    இசையறிந்தோர் என்றால் வீணை வாசிப்பவர்கள் மட்டுமல்ல.

    வாழ்க்கையின் இசையை அறிந்தவர்கள்.

    உள்ளத்தின் மொழியை அறிந்தவர்கள்.

    ஞானிகள்.
    சித்தர்கள்.
    மகான்கள்.
    உண்மையான குருக்கள்.

    நமக்குள் இருக்கும் இறையொளியை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

    அவர்களால் நம்மை விழித்தெழச் செய்ய முடியும்.

    அப்படி யாரும் இல்லையெனில்,
    “எனக்காவது வழி காட்டுங்கள்” என்று பணிவுடன் வேண்டுகிறது இந்த வரி.

    ஆன்மீகத்தின் முதல் படி பணிவே.

    “எனக்கெல்லாம் தெரியும்” என்று நினைப்பவன் கற்றுக்கொள்ள மாட்டான்.

    “எனக்குத் தெரியாது” என்று ஒப்புக்கொள்பவனே ஞானத்தை அடைகிறான்.

    “நான் யார் உன்னை மீட்ட வரும்”
    இது சாதாரண வசனம் அல்ல.

    இது மனிதனின் நித்தியக் கேள்வி.
    “நான் யார்?”

    இந்தக் கேள்வியே அனைத்து ஆன்மீகப் பயணங்களின் தொடக்கம்.

    உடலா நான்?
    மனமா நான்?
    எண்ணமா நான்?
    பெயரா நான்?
    புகழா நான்?
    இல்லை.

    இவை அனைத்தையும் கடந்து நிற்கும் சாட்சியே நான்.

    இந்த உணர்வை நோக்கிச் செல்லும் அழைப்பாகவே இந்த வரி ஒலிக்கிறது.

    **”ஏனோ துடிக்கின்றேன்
    அதன் இனம் தெரியாமல் தவிக்கின்றேன்”**

    மனிதனின் அமைதியின்மைக்கு இதைவிட அழகான விளக்கம் இருக்க முடியுமா?

    ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.

    பணம்.
    புகழ்.
    பதவி.
    உறவுகள்.
    வெற்றிகள்.

    இவற்றையெல்லாம் அடைந்த பிறகும் ஏன் ஒரு வெறுமை?

    ஏனெனில் ஆன்மா இறைவனைத் தேடுகிறது.

    ஆனால் மனம் பொருள்களைத் தேடுகிறது.

    இந்த இரண்டிற்கும் இடையிலான போராட்டம்தான் மனிதனின் தவிப்பு.

    அந்தத் தவிப்பின் காரணம்.

    தெரியாததால் அவன் வாழ்க்கை முழுவதும் அலைந்து திரிகிறான்.

    “சொர்க்கமும் நரகமும் நம் வசமே”
    இது ஆன்மீகத்தின் மிகப் பெரிய உண்மை.

    சொர்க்கம் ஒரு இடமல்ல.

    நரகம் ஒரு இடமல்ல.

    அவை மனநிலைகள்.

    அன்பு நிறைந்த மனம் சொர்க்கம்.

    வெறுப்பு நிறைந்த மனம் நரகம்.

    மன்னிக்கும் மனம் சொர்க்கம்.

    பகை கொள்ளும் மனம் நரகம்.

    தியானம் செய்யும் மனம் சொர்க்கம்.

    அமைதியற்ற மனம் நரகம்.

    வெளியில் சொர்க்கத்தைத் தேடுபவன் ஏமாறுகிறான்.

    உள்ளே சொர்க்கத்தை உருவாக்குபவன் ஞானியாகிறான்.

    “நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே”

    மனம் எப்போதும் வெளியில் ஓடுகிறது.

    ஆனால் ஆன்மாவின் குரல் எப்போதும் உள்ளிருந்து அழைக்கிறது.

    அந்தக் குரலைக் கேட்பதே தியானம்.

    அந்தக் குரலைப் பின்பற்றுவதே ஆன்மீகம்.

    அந்தக் குரலோடு ஒன்றுபடுவதே முக்தி.

    “சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே”

    மனித சமுதாயம் சட்டங்களால் நிலைப்பதில்லை.

    சத்தியத்தாலும் தர்மத்தாலுமே நிலைக்கிறது.

    சத்தியம் இல்லாத அறிவு அழிவைத் தரும்.

    தர்மம் இல்லாத அதிகாரம் கொடுமையை உருவாக்கும்.

    ஆகவே மனிதன் முதலில் தன்னுள் சத்தியத்தை நிலைநிறுத்த வேண்டும்.

    பிறகு தர்மத்தை வாழ வேண்டும்.

    அப்போதுதான் உலகமும் அமைதியடையும்.

    “இது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே”

    ஆன்மீகத்தில் இறைவன் பல வடிவங்களில் பேசுகிறார்.

    சில நேரங்களில் குருவாக.

    சில நேரங்களில் நண்பனாக.

    சில நேரங்களில் வாழ்க்கை அனுபவமாக.

    ஆனால் மிக உயர்ந்த வடிவம் தாய்மை.

    தாய் கண்டிப்பாள்.

    ஆனால் அன்பால்.
    தாய் திருத்துவாள்.

    ஆனால் கருணையால்.
    அதேபோல் இறையருளும் மனிதனை வழிநடத்துகிறது.

    இந்தப் பாடல் முழுவதும் அந்தத் தாய்மையின் அழைப்பாகவே ஒலிக்கிறது.

    கவியரசர் கண்ணதாசனின் பெருமை என்னவென்றால், அவர் எழுதிய பாடல்களை ஒரு காதல் பாடலாகவும் ரசிக்கலாம்.

    ஒரு வாழ்க்கைத் தத்துவமாகவும் சிந்திக்கலாம்.

    ஒரு ஆன்மீக உபதேசமாகவும் அனுபவிக்கலாம்.

    இந்தப் பாடலில் வரும் வீணை, ஒவ்வொரு மனிதனின் இதயம்.
    அதன் நரம்புகள் நமது எண்ணங்கள்.

    அதன் இசை நமது வாழ்க்கை.
    அதை மீட்டும் விரல்கள் ஞானமும் இறையருளும்.

    அந்த இசை ஒலிக்க வேண்டுமெனில் முதலில் நம்மீது படிந்துள்ள அறியாமை என்னும் தூசியை அகற்ற வேண்டும்.

    அப்போதுதான் நமக்குள்ளே உறங்கிக் கிடக்கும் ஆயிரம் ராகங்கள் விழித்தெழும்.

    ஆயிரம் கீதங்கள் ஒலிக்கும்.

    அப்போது மனித வாழ்க்கை வெறும் வாழ்வாக இருக்காது.

    அது இறைவன் இசைக்கும் ஒரு தெய்வீக வீணையாக மாறிவிடும்.

    “உன்னிடம் ஆயிரம் ராகங்களே; என்றும் உனக்குள் ஆயிரம் கீதங்களே” என்ற கவியரசரின் வரிகள்,

    ஒவ்வொரு மனிதனின் உள்ளேயும் உறங்கிக் கிடக்கும் அளவற்ற ஆன்மீகச் செல்வத்தை நினைவூட்டும் நித்திய மந்திரமாக என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 (பகுதி-1)

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – 315 (பகுதி-1)

    அன்பினியோரே!

    அன்பு வணக்கம்.

    நீங்கள் நலமா ?

    நான் நலமேயுள்ளேன்.

    எனது இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் எனும் இந்த தொடரின் இனிவரும் ஐந்து மடல்களும் இன்றைய இங்கிலாந்து அரசியல் நிலைகளை ஐந்து பகுதிகளாக பிரித்து அலசும் மடல்களாக வரும்.

    வாரமொரு பகுதியாக வரைய இருக்கிறேன்.

    அன்பானவர்களே ! நான் கவிஞனுமில்லை, கலைஞனுமில்லை, ரசிகனுமில்லை, பெரிய எழுத்தாளனுமில்லை.

    இங்கிலாந்தில் கடந்த 51 ஆண்டுகளாக வசிக்கும் ஒரு 69 வயதான சாதாரண புலம்பெயர் தமிழன் என்பதே எனது தகுதி.

    ஈழம் எனது அடையாளம், தமிழ் எனது முகவரி.

    இன்றைய. அவசர உலகிலே அரசியல் மாற்றங்கள் இமைக்கும் பொழுதினில் நடந்தேறுகின்றன.

    நான் இப்பகுதிகளை எழுதிக்கொண்டிருக்கும் போதே அதை மறுதலிக்கும் நிகழ்வுகள்.

    அப்படி நான் பதிவிடுவதற்கு மாக எதுவும் நடப்பின் அதற்கு நான் பொறுப்பல்ல .

    அதற்காக முன் மன்னிப்பை வேண்டிக்கொள்கிறேன்

    மாற்றத்தின் வாசலில் நிற்கும் பிரிட்டன்

    51 ஆண்டுகளாக இங்கிலாந்தில் வாழும் ஒரு புலம்பெயர் தமிழனின் அரசியல் சாட்சியம்

    பகுதி – 1

    ஐம்பத்தொரு ஆண்டுகள் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் வெறும் கால அளவல்ல.

    அது ஒரு நாட்டின் அரசியல் பரிணாமத்தை கண்முன்னே பார்த்து பதிவு செய்யும் நீண்ட பயணம்.

    நான் இங்கிலாந்தில் காலடி எடுத்து வைத்த காலத்தில், இந்நாடு இன்னும் தனது பேரரசின் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருந்தது.

    தொழிற்சாலைகளின் புகை வானத்தை மூடியிருந்தது.

    தொழிலாளர் சங்கங்கள் அரசியலில் வலுவான தாக்கம் செலுத்தின. குடியேற்றம் குறித்து கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இன்று காணும் அளவுக்கு சமூக ஊடகங்கள் அரசியலை வடிவமைக்கவில்லை.

    இந்த ஐம்பத்தொரு ஆண்டுகளில் நான் பல பிரதமர்களைக் கண்டிருக்கிறேன்.

    பல தேர்தல்களை நேரில் அனுபவித்திருக்கிறேன்.

    மக்களின் மனநிலைகள் எவ்வாறு மாறுகின்றன என்பதையும் கவனித்திருக்கிறேன்.

    அரசியல் என்பது வெறும் கட்சிகள் மோதும் களம் அல்ல.

    அது மக்களின் நம்பிக்கைகளும், ஏமாற்றங்களும், எதிர்பார்ப்புகளும் சந்திக்கும் இடம் என்பதை இந்த நாடு எனக்குக் கற்றுக் கொடுத்தது.

    ஒரு ஜனநாயகத்தின் வலிமை அதன் அரசாங்கத்தில் மட்டும் இல்லை.

    ஆட்சியை மாற்றும் உரிமையை மக்கள் அமைதியாகப் பயன்படுத்தும் பண்பாட்டில்தான் இருக்கிறது.

    அந்த வகையில் உலகிற்கு முன்னுதாரணமாக விளங்கும் நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று.

    கடந்த பத்து ஆண்டுகளை எடுத்துப் பார்த்தாலே பிரிட்டிஷ் அரசியலில் நிகழ்ந்த மாற்றங்கள் மிகவும் ஆழமானவை.

    ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிரெக்சிட், அதன் பொருளாதார விளைவுகள், வாழ்க்கைச் செலவின் உயர்வு, தேசிய சுகாதார சேவையின் சவால்கள், குடியேற்றக் கொள்கைகள், உலக அரசியல் மாற்றங்கள் இவை அனைத்தும் மக்களின் அரசியல் சிந்தனையையே மாற்றியுள்ளன.

    ஒரு காலத்தில் இரண்டு பெரிய கட்சிகளான லேபரும் கன்சர்வேடிவும் மாறி மாறி ஆட்சி செய்த அரசியல் அமைப்பு, இன்று பல திசைகளில் இழுக்கப்படுகிறது.

    வலதுசாரி தேசிய உணர்வை முன்வைக்கும் சக்திகள் வலுவடைகின்றன.

    மைய அரசியலை வலியுறுத்துபவர்கள் புதிய கூட்டணிகளைத் தேடுகின்றனர்.

    இளைஞர்களின் வாக்கு முறையும், வயதான வாக்காளர்களின் முன்னுரிமைகளும் மாறுபடுகின்றன.

    இந்த மாற்றங்களின் மையத்தில் இன்று ஒரு புதிய அரசியல் சமநிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

    இன்றைய பிரதமராக உள்ள ஆண்டி பர்ன்ஹாம், தொழிலாளர் இயக்கத்தின் மரபை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதி.

    அவருடைய தலைமையால் லேபர் கட்சி புதிய கட்டத்தை எட்டியுள்ளது.

    அதே நேரத்தில், நைஜல் ஃபராஜ் தலைமையிலான ரீபோர்ம் கட்சி, பாரம்பரிய வலதுசாரி அரசியலை முற்றிலும் மாற்றும் சக்தியாக உருவெடுத்துள்ளது.

    இதனால் கன்சர்வேடிவ் கட்சி தனது அரசியல் அடையாளத்தை மறுபரிசீலனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

    லிபரல் டெமகிரட்ஸ் கட்சி இன்னும் மத்திய அரசியலின் குரலாக இருக்க முயற்சித்தாலும், இரு துருவங்களுக்கிடையில் தனது இடத்தை உறுதிப்படுத்த போராடுகிறது.

    இவை வெறும் கட்சிகளின் கதைகள் அல்ல.

    இவை பிரிட்டிஷ் சமூகத்தின் உள்ளார்ந்த மாற்றங்களின் பிரதிபலிப்புகள்.

    நான் இந்த நாட்டிற்கு வந்தபோது, தேர்தல் பிரச்சாரங்கள் தெரு மேடைகளிலும், செய்தித்தாள்களிலும் நடந்தன.

    இன்று அவை கைப்பேசியின் திரையில் நடக்கின்றன.

    ஒருகாலத்தில் குடும்ப மரபே வாக்கை நிர்ணயித்தது.

    இன்று ஒரு வைரல் காணொளி கூட வாக்காளரின் மனதை மாற்றுகிறது.

    இந்த மாற்றத்தை நேரில் பார்த்தவன் என்ற முறையில், அரசியல் என்பது நிலையாக இருக்கும் கட்டிடம் அல்ல காலத்தோடு வடிவம் மாறும் உயிருள்ள அமைப்பு என்பதையே நான் உணர்ந்திருக்கிறேன்.

    இந்தக் கட்டுரையில் நான் எந்தக் கட்சியையும் புகழவோ, குறைக்கவோ முயலவில்லை.

    ஒரு பாமர மனிதனின்அரசியல் ஆய்வாகவும், ஐம்பத்தொரு ஆண்டுகளாக இந்த நாட்டின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும், வெற்றியையும் சவால்களையும் பார்த்து வாழ்ந்த புலம்பெயர் தமிழனாகவும், நான் கண்ட உண்மைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    ஒரு நாட்டின் அரசியல் அதன் நாடாளுமன்றத்தில் மட்டும் எழுதப்படுவதில்லை.

    அது பேருந்து நிறுத்தங்களில் பேசப்படுகிறது.

    தொழிற்சாலைகளில் விவாதிக்கப்படுகிறது.

    பல்கலைக்கழகங்களில் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

    குடியேற்றக் குடும்பங்களின் உணவுமேசைகளில் அனுபவமாகப் பகிரப்படுகிறது.

    அந்த உயிருள்ள அரசியலின் சாட்சியாக இந்த ஆய்வை நான் பதிவு செய்கிறேன்.

    அன்பன்
    சக்தி சக்திதாசன்
    லண்டன்
    03.08.2026

    அடுத்த வாரம் ………

    (தொடரும் – பகுதி 2: “ஆண்டி பர்ன்ஹாம் – நாடாளுமன்ற உறுப்பினரிலிருந்து பிரதமர் வரை: அரசியலமைப்பும் அரசியல் பயணமும்”)

    Share
  • சக்தியும் சிவனும் நித்தியம் ஆவார்!

    சக்தியும் சிவனும் நித்தியம் ஆவார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஆர நவமணி மாலைகள் ஆட
    அம்மை யோடப்பன் ஆடினார் நடனம்
    ஆடும் அரவம் அசையா நின்றது
    அமரர் அனைவரும் அரகரா என்றனர்

    நாரதர் தம்புரா நயமாய் மீட்டினார்
    நந்தியின் மத்தளம் சேர்ந்துமே ஒலித்தது
    வாணியின் வீணை வழங்கிய நாதம்
    மாதொரு பாகனின் ஆட்டத்தில் கலந்தது

    மண்ணும் மகிழ்ந்தது விண்ணும் மகிழ்ந்தது
    மாதொரு பாகனின் அடியார் மகிழ்ந்தார்
    திருமுறைச் செல்வர்கள் திருவடி தொழுதனர்
    ஆனந்தக் கடலில் அனைவரும் மூழ்கினர்

    வேதம் அனைத்தும் கையைக் குவித்தது
    தத்துவம் எல்லாம் தம்மை மறந்தது
    தீமைகள் அனைத்தும் தெறித்து ஓடின
    நன்மைகள் மலர்ந்து நறுமணம் எழுந்தது

    மாதொரு பாகன் ஆடா நின்றால்
    பூமியில் எதுவும் அசையா நின்றிடும்
    இறைவனின் நடனமே இயக்கும் சக்தி
    சக்தியும் சிவனும் நித்தியம் ஆவார்!

    Share
  • அகந்தை விட்டோடினால் தெரிந்திடுவான் சிவனாய்!

    அகந்தை விட்டோடினால் தெரிந்திடுவான் சிவனாய்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    காலனைக் காலால் உதைத்ததும் சிவமே
    கண்ணப்பன் கண்ணை ஏற்றதும் சிவமே
    ஆலமாம் விஷத்தை உண்டதும் சிவமே
    அனைத்துமாய் எங்கும் இருப்பதும் சிவமே

    பிட்டுக்காய் மண்சுமந்து நின்றதும் சிவமே
    பிரம்படி ஏற்றிட வந்ததும் சிவமே
    கெட்டவர் ஆயினும் கேட்டிடும் வரத்தைக்
    கொட்டியே கொடுப்பதும் சிவமே ஆகும்

    விண்ணும் சிவமே மண்ணும் சிவமே
    உண்ணும் உணவெலாம் கொடுப்பதும் சிவமே
    எண்ணம் சிவமே எழுத்தும் சிவமே
    இயக்கம் சிவமே இயக்குநர் சிவமே

    ஆதியும் அந்தமும் இல்லா சிவமே
    அனைத்துக்கும் ஆதியாய் அமைந்தது வியப்பே
    சோதியின் தொடக்கம் யாருக்குந் தெரியா
    சோதியாய் ஆனதும் யாரெனத் தெரியோம்

    விடை தெரியாத வினாக்கள் பற்பல
    விடை தெரியாது தவிக்கிறோம் யாவரும்
    மாலும் தேடினார் அயனும் தேடினார்
    விளங்கா நிலையில் சிவத்தை நாடினார்

    உப்புக் கடலருகே உவப்பான நீருக்கு
    உயர்வான மலைகளிலே உன்னத மருந்திருக்கு
    சிப்பிக்குள் முத்திருக்கும் சிலந்திக்குள் திறனிருக்கு
    எப்படித்தான் வந்ததுவோ எவருக்கும் தெரியாது

    இருப்பார்க்கு இருப்பான் இல்லார்க்கு இல்லான்
    இல்லானே என்பார் இயற்கையே என்பார்
    ஏகனும் அவனே அநேகனும் அவனே
    இயற்கையும் அவனே இயக்கமும் அவனே

    அவனின்றி ஓர் அணுவும் அசையாது
    அணுவாயும் இருப்பான் அதைத்தாண்டி இருப்பான்
    ஆணவத் தோடவனைத் தேடினால் தெரியான்
    அகந்தை விட்டோடினால் தெரிந்திடுவான் சிவனாய் !

    Share
  • புரிதல் (சிறுகதை)

    முனைவர் த. ஆதித்தன்
    இணைப் பேராசிரியர்
    அரிய கையெழுத்துச் சுவடித்துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம்
    தஞ்சாவூர்-613 010.

    சந்திரன் தனது ஆசிரியரின் வீட்டின்முன் சாலையோரத்தில் தனது மிதிவண்டியை நிறுத்தினான்.  நுழைவாயில் கதவின் வழியே எட்டிப்பார்த்தான்.  வீட்டுத் திண்ணையில் முன் அறையைப் பார்த்தபடி தமது வகுப்பு மாணவர்கள் முருகனும், இராமனும் நின்றிருந்தனர்.  சந்திரன் சுற்றுச்சுவர் வாயிலைத் தாண்டி உள்ளே நுழைந்தான்.

    “டேய் முருகா, இராமா ரெண்டுபேரும் ஏன் வெளியயே நிக்கிறீங்க…….. உள்ளே போவோம்”? என்றபடி வீட்டினுள் சந்திரன் நுழைந்தான்.  முன் அறையில் இருந்த மேஜையில் பரிசுப் பொருள்களும், சால்வைகளும் நிறைந்திருந்தன.  ஆசிரியர் பணியாற்றிய பள்ளியின் ஆறாம்வகுப்பு மாணவர்கள் அறையில் நிறைந்திருந்தனர்.  அன்று பணி ஓய்வு பெற்றிருந்த அவர்களின் வகுப்பாசிரியர் புண்ணியகோடி நாற்காலியில் அமர்ந்தபடி மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.  அப்பொழுது உள்ளே நுழைந்த சந்திரன் சுவரில் ஒரு கையை வைத்தபடி நின்றான்.  ஆசிரியர், “சந்திரா விலகி அந்தபக்கமா நில்லுடா     கையைக் கொண்டுபோய் சுவிட்ச் போர்டு மேல வச்சிருக்க…. கரண்ட் புடிச்சுக்கப் போகுது….” என்று அதட்டினார்.  வேகமாகக் கையை எடுத்தபடி சற்று தள்ளி நின்றான்.  ஆசிரியர் சுற்றிலும் பார்த்துவிட்டு, உன் கூட்டாளிங்க எங்க என்றார்.

    சந்திரன் மெதுவாக வாசலைப் பார்த்து,  “உள்ள வரலியா? எல்லோரும் இங்கதான் இருக்கிறோம்” என்றான்.  இராமன் உள்ளே வந்தான்.  அனைவருக்கும் தேநீர் வழங்க தொடங்கினார்  ஆசிரியரின் மனைவி.  அனைவரும் தேநீர் அருந்தி கொண்டிருக்கும்போது சுவர்க்கடிகாரம் ஐந்துமுறை அடித்து ஓய்ந்தது.

    “சார்  மணி ஐந்து ஆகிடிச்சு.. நாங்க கிளம்புறோம்.  உங்க ஓய்வுக்காலம் நல்லா இருக்கனும் சார்..”  என்று சந்திரன் சொன்னதை அனைத்து மாணவர்களும் ஆமோதித்ததோடு, அன்று ஓய்வு பெற்றிருந்த ஆசிரியரோடு பள்ளியில் இருந்து வீடுவரை வந்த மாணவர்கள் வீடுதிரும்பத்தொடங்கினார்கள்.  ஒருமாணவன் மனதுக்குள் இருந்து வந்த பிரிவுத்துன்பத்தில் கண்கலங்கி விம்மத் தொடங்கினான்.  பிற மாணவர்கள் கண்களும் கலங்கின.

    “ஸ்கூலுக்கு எதுத்தாப்புல தான வீடு இருக்கு.  நினைக்கிற போது நீங்க வந்திடலாமே.  நானும் வருவேன், எல்லோரும் நல்லா படிக்கணும்.   நல்லா வரணும்”    என்றார் ஆசிரியர்.  தொடர்ந்து பேசினால் குரல் உடைந்து நா தழுதழுக்கும் போலிருந்தது.  அடக்கியபடி புன்னகையுடன் நின்றார்.

    “வாரோம் சார்” என்றபடி செல்லத்தொடங்கிய மாணவர்களை நோக்கி கைகளை அசைத்து விடைகொடுத்துக் கொண்டிருந்தார் ஆசிரியர்.   மாணவர்கள் அனைவரும் சென்றிவிட்டநிலையில் திண்ணையில் தூணில் சாய்ந்து ஒதுங்கி நின்றுகொண்டிருந்த இராமன் கண்ணில் பட்டான்.

    “இராமா என்னடா இங்க நிக்குற….” என்றார் புண்ணியகோடி.

    “இல்ல சார் முருகனும் இங்கதான் நின்னுகிட்டு இருந்தான்.  இப்பதான் போனான்”.

    “அவன் உள்ள வந்தானா …. கண்ணுல படலயே….”

    “இண்ணைக்குக் காலையில முருகன் பாக்கெட்ல இருந்து பான்மசாலா பாக்கெட் விழுந்தத பார்த்திட்டு நீங்க திட்டி தீர்த்ததோட அடிச்சிங்கல சார் … அதுதான் தயங்கி நின்னுட்டான். நீங்க அடிச்சது அவன்மேல உள்ள அக்கறையிலதான்கிறத சொல்லி  அவனைத் தேத்திக்கிட்டு இருந்தேன்.  நீங்க வெளியே வர்த பார்த்ததும் உங்ககிட்ட முகத்தக்காட்டக்கூட தயங்கி ஓடிப்போயிட்டாள்…. இத தெரியப்படுத்ததான் நிக்கிறேன் சார்…” என்றான் இராமன்.

    இதனைக் கேட்டதும் ஆசிரியரின் மனம் வலித்தது.  “எனக்குத் தெரியாதா என்ன…. முருகனுக்கு அந்தப் பழக்கம் கிடையாதுன்னு     ஆனா  அந்த பாக்கெட்ட வெளியில தூய்மைப் பணியாளர்கள் குப்பைப்கு வைத்திருந்த நெருப்புல போட சொல்லியும் போடாம நின்னுகிட்டிருந்தானே  அதாண்டா கோபம்”  என்றார் குற்ற உணர்வோடு.

    “அந்த பாக்கெட்ட அவன் நிக்கர்பாக்கெட்ல பின்பண்ணி விட்டதோட இன்றைக்கு முழுவதும் அப்படியே இருக்கணும்னு சொன்னதுல ரொம்பவே நொந்துட்டான் சார்….”

    “அப்படியே தான் வைத்திருந்தானா”?

    “ஆமா சார்.  இப்பதான் ஓடிப்போகும்போது பின்ன கழட்டிட்டு பாக்கெட்டுக்குள்ள வைத்தான்”.

    “என்னடா சொல்ற….. ”

    “முருகன் ரெம்ப நல்லபையன் சார்.  பத்தாம் வகுப்பு படிக்கிற கோகுல்தான் காலையில் பிரேயர் முடிஞ்சு வரும்போது அவன்கிட்ட இருந்தா மாட்டிகிடுவோம்னு இவன் பாக்கெட்ல போட்டுட்டான்.  பத்தாம் கிளாஸ் டீச்சர் அவங்க பசங்கள செக் பண்றதா சொல்லியிருந்தாகளாம் சார்…. அதனாலதான்…..”

    “இந்த பையன் உண்மைய சொல்லியருக்கலாம்ல…”

    “பயம் சார். கோகுல் அண்ணா சாயங்காலம் கேட்கும் போது கொடுக்கணும்னு மிரட்டிட்டுவேற போனான் சார்….”

    “அட பாவமே….. நாளைக்குக் காலையிலயே முருகன அவன் வீட்ல போயி பார்க்கிறேன்.  அப்பதான் என் மனது ஆறும்.  நீ பத்திரமா போயிட்டு வாடா….” என்று சிரித்தபடி வழியனுப்பினார்.  ஆனால் அவர் மனம் கனத்திருந்தது.  தனது மொத்த பணிக்காலத்தில் எந்த ஒரு மாணவனையும் இப்படி தண்டிக்காதவர், தமது கடைசி பணிநாளில் தவறிழைத்துவிட்டோமே என கண் கலங்கினார்.

    ••••

    மறுநாள் கலையில் மழைபெய்து கொண்டிருந்தது.  மழை நிற்பது போல் தெரியவில்லை. வீட்டுத்திண்ணையில் நின்றபடி எப்பொழுது மாணவன் முருகனைப் பார்க்கலாம் என துடித்துக் கொண்டிருந்த புண்ணியகோடி மனைவியிடம்   “ரெயின் கோட்ட எடுத்திட்டு வா…  பக்கத்து ஊருவர போயிட்டு வந்திடுறேன்”, என்றார்.

    வீட்டினுள் இருந்து வெளியே வந்த அவர்  மனைவி,   “இன்னயில இருந்து ஓய்வா இருப்பீங்கணு பார்த்தா….. மழையில எங்கபோறீங்க….  உங்க மழைக்கால பொக்கிசம் ரெயின் கோட்ட பிடிங்க…” என்றபடி கொடுத்தார்.

    அதனை மாட்டிக்கொண்டு,  “வந்து விசயத்தைச் சொல்கிறேன்…” என்றபடி இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டார்.

    ••••

    வீட்டு மாடியில் இருந்து கொட்டிய மழை நீருக்கு அடியில் முருகன் மகிழ்ச்சியாகக் குளித்துக்கொண்டு இருந்தான்.  வாசலில் நின்று மகனைப் பார்த்துக் கொண்டிருந்த அவனது தந்தை கதிர்,  “இயற்கை கொடுத்த  ஃபீரீ ஷவர்ல  ஃபிரீயா குளியல்….. செருப்பு இல்ல, துணி இல்ல இயற்கையோட இயற்கையா நீ  ஃபிரீயா ஆட்டம் போடுறத பார்க்கும்போதுதான்  தெரியுது சந்தோசத்திற்கு எதுவுமே தேவையில்லைன்னு…”     என்றார்.

    எந்த கவலையுமின்றி ஆட்டம் போட்டவனுக்குத் தந்தையின் கிண்டல் பேச்சைக் கேட்டதும் வெட்கம் மேலிட்டது.  உதடுகளின் ஓரத்தில்  அரும்பிய சிரிப்பை அடக்க முடியன்றான்.  கன்னத்தில் விழுந்த சிறுகுழி அவனின் வெட்கத்தை வெளிப்படுத்தியது.  உடம்பைக் கூச்சத்தால் குலுக்கிக் கொண்டு   “அப்பா ஒரு ஐஞ்சு நிமிசம்பா”  என்றான்.

    கதிர் மகனின் மகிழிச்சியான முகத்தைப் பார்த்தார். அதை கெடுக்க மனமில்லாமல்  “சரி சரி சீக்கிரமா”? என்றபடி நிமிர்ந்தார்.  வெளியே தெருமுனையில் முருகனின் ஆசிரியர் வண்டியில் வருவதைக் கண்டதும், வாசலில் உட்புறமாக இருந்த குடையினை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினார்.  மதில்சுவர் தாண்டி தெருவிற்கு வந்தார்.  ஆசிரியரை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

    ஆசிரியர்  புண்ணியகோடி முருகனின் வீட்டருகில் வந்துவிட்டார்.  கதிரைக் கண்டதும் தெருவோரத்தில் வண்டியை வைத்துவிட்டு,   “வணக்கம் சார்”   என்றார்.

    “வணக்கம் சார்    நேற்று பணி ஓய்வு பெற்றுவிட்டதா கேள்விப்பட்டேன்.  ஓய்வுக்காலம் சந்தோசமா அமையட்டும் சார் .  கொட்டுற மழையில இந்த பக்கமா….. ஏதாவது விசயமா சார்”?

    “இல்ல முருகன பார்க்கணும்னுதான் வந்திட்டு இருந்தேன்.   நேற்று என்னோட கடைசி வேலைநாள்ல பார்த்து….. செய்யாத தப்புக்கு முருகனை தண்டிச்சிட்டேன்.  அதான்…”

    வெளியே அப்பா யாருடனோ பேசுவதைக் கேட்டான் முருகன்.  அது புண்ணியகோடி சாருடைய குரல்.  வேகமாக நகர்ந்து சுவர் அருகே வந்தான்.  அப்பாவிடம் ஆசிரியர் பான்மசாலா கதையை விளக்கும் சம்பவம் தொடர்ந்தது.

    “என்னாச்சு சார்… பெரிய அசம்பாவிதம் நடந்தமாதிரி முகத்த வச்சிருக்கீங்க…”

    “நம்ம ஸ்கூல்ல பத்தாம் வகுப்பு படிக்குற ஒருத்தனுக்கு பான்மசாலா பயன்படுத்துற கெட்ட பழக்கம் இருக்கு சார்.  நேற்று கிளாஸ்ல திடீர் செக்கிங் நடக்கபோகுதுனு தெரிந்சதும, தான் மாட்டிக்கிடக்கூடாதுன்னு அவங்கிட்ட இருந்த பான்மசாலா பாக்கெட்ட முருகனோட நிக்கர் பாக்கெட்டுக்குள்ள நைசா சொருகிவெச்சிருக்கான்.  அது தெரியாம முருகன நாலு சாத்து சாத்திட்டேன்…” என்றார் ஆசிரியர் கவலையுடன்.

    கதிர் உண்மையான ஆனந்தத்தோடு, “நிஜமாவா சார். எனக்கு நின்றுபோன இதயத்துடிப்பே வந்தது போலிருக்கு”.

    “என்ன சொல்றீங்க…”

    “நேற்று ஆபீஸ்ல இருந்து லேட்டத்தான் வந்தேன்.  வந்ததும் முருகன பார்க்கலாம்னு போனேன்.  அவன் கும்பகர்ணன் மாதிரி தூங்கிட்டு இருந்தான்.  யூனிஃபாம்  சட்டய கூட கழட்டல.  ஆனா நிக்கர கழற்றி கையில் பிடித்தபடி தூங்கினான்.  ஒழுங்கா படுக்க வைக்கறதுக்காக நிக்கர பிடித்து இழுத்தேன்.  டொப்னு உள்ள இருந்து பான்மசாலா பாக்கெட் விழுந்தது.  எனக்கு என்னென்னமோ தோணுச்சி.  இந்தப்பழக்கம் எப்படி வந்திருக்கும்.  எப்படி திருத்தப்போறோம்னு யோசிச்சி யோசிச்சி இரத்த அழுத்தமே  ஏறிடுச்சி சார்.  அன்பாலதான் திருத்தணும்.  இத பெரிசாக்கிடக்கூடாதுங்குற பயத்துல அவங்க அம்மாகிட்டகூட சொல்லல சார்…. முருகனுக்கும் தெரியாது, இப்பதான் நிம்மதியா இருக்கு சார்.  ரொம்ப நன்றிங்க சார்…”

    மழையின் வேகம் அதிகரித்தது.  முருகனின் அப்பா முகமெல்லாம் புன்னகையோடு ஆசிரியரை உள்ளே அழைத்தார்.

    “வாங்க சார்… வீட்டுக்குள்ள வாங்க … சூடா ஒரு காஃபி சாப்பிடலாம்.  மழை நின்னுதுக்கப்புறம் போய்க்கலாம்”.

    “பரவாயில்ல சார்.  நான் வந்த வேலையைச் சரியா முடிச்சிட்டு கிளம்புறேன்.  முதல்ல உங்க பையன் முருகன பார்க்கணும்”.

    “வாங்க சார்…. கொட்டுற மழையில முருகன் குளிச்சிட்டு இருக்கான்…” இதனைக் கேட்டதும் மீண்டும் முருகன் மாடியில் இருந்து விழும் மழைநீரில் பெரும்வெட்கத்தோடு குளியலைத் தொடர்ந்தான்.

    கதிரும், ஆசிரியரும் பேசிக்கொண்டே வீட்டின் முற்றத்திற்கு வந்தனர்.  முருகன் ஆசிரியரைப் பார்த்ததும் நாணினான்.  அவரிடம்,

    “நீங்க அப்பாகிட்ட பேசுனதைக் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன் சார்…. என்னய புரிஞ்சுகிட்டதே போதும்சார்…” என்றபோது ஆசிரியர் புரிந்து கொண்டாரே என்ற நிம்மதியும், நன்றியும், சிறுவனுக்கே உரிய வெட்கமும் ததும்பி வழிந்தன.

    கதிர் முருகனிடம், “இப்பதான் முழுமையா தெரிஞ்சுகிட்டார் சார்…” என்றபடி சிரித்தார்.

    “உங்க அப்பா சொன்னது உன் நல்ல மனச மட்டும் இல்ல…. இந்த மழை குளியல்ல உன்னோட மொத்த லட்சணத்தையும் பார்த்ததுதான்”, என்ற ஆசிரியரின் கேலிப் பேச்சைக் கேட்டதும் அவன் இதழ்களில் அரும்பிய சிறுபிள்ளைத்தமான புன்னகை, சூழலை அழகாக மாற்றியது.

    மேலிருந்து கொட்டும் மழைநீரின் குளிரும், ஆசிரியரின் கேலிப்பேச்சும் சேர்ந்து முருகனுக்கு உடலெங்கும் ஒரு சிலிர்ப்பு பரவியது. அவனது சிலிர்ப்பு குளிரால் வந்ததா, தம்மை முழுமையாகத் தெரிந்துகொண்டார்கள் என்ற மகிழ்வால் வந்ததா, அல்லது சட்டென ஏற்பட்ட வெட்கத்தால் வந்ததா என சொல்லமுடியாதபடி குறுநகையோடு நின்றான் முருகன்.

    Share
  • எங்கும் இருப்பான் முருகனே!

    எங்கும் இருப்பான் முருகனே!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    கால் வண்ணம் கண்டேன்
    கழல் தொழுது நின்றேன்
    வேல் வண்ணம் கண்டேன்
    விழுந்து நான் விட்டேன்

    மால் மருகன் முருகன்
    மா அடியைப் பற்றினேன்
    பால் வண்ணங் கண்டேன்
    பரவசத்தில் மூழ்கி விட்டேன் !

    சேல் கொண்ட கண்ணழகி
    தேவ யானை கண்டேன்
    மனத்தால் அரு கணைந்த
    வனக்குறவர் மகள் கண்டேன்

    ஒளவை பால் அன்பால்
    அமுதத் தமிழ் கொட்டியது
    அருணகிரி மேல் அன்பால்
    அருந்து கிறோம் தத்துவப்பால்

    திருமுகன் வைத்த அன்பால்
    குமரகுரு தமிழ்ப் பாலை
    பக்தி மயம் ஆக்கியே
    பருகிடவே வைத்து விட்டார்

    வஞ்சத்தால் மனம் மாறா
    வஞ்சகராம் சூரர் தமை
    வெஞ்சினத்தால் வேர் அறுத்த
    வேல்முருகன் கால் பணிந்தேன்

    பால் எல்லாம் முருகனே
    பல் சுவையும் முருகனே
    வேல் என்றால் முருகனே
    நால் வேதம் முருகனே

    எல்லாப் பாலிலும் முருகனே
    எல்லாச் சுவையிலும் முருகனே
    இல்லா இடமே இல்லையே
    எங்கும் இருப்பான் முருகனே!

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 41

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 34 சிறுத்தொண்ட நாயனார் (பகுதி – 2)

    ஒரு குடும்பத்திற்கு ஒரே புதல்வனாக இருக்க வேண்டும். அந்த மைந்தனைத் தாய் பிடிக்க, தந்தை அரிய வேண்டும். தாயும் தந்தையும் தம்முள் மனம் உவந்த துன்பமின்றி அமைந்த கறியைத்தான் தாம் உண்பது என்கிறார் பைரவ அடியார்.

    பள்ளிக்குச் சென்ற சீராளத் தேவரை அழைத்து வந்து நீராட்டி, அணிகலன்களைப் பூட்டி அழகு செய்து, வழமைபோல் அள்ளியணைத்து முத்தமிட நினைத்த திருவெண்காட்டு நங்கையார் வெருவுற்று நீங்கினார். அடியவருக்கு அமுதாகப் போகின்ற சீராளத் தேவரை முத்தமிட்டு எச்சில் செய்வதா என்று அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டார்.

    தாங்கள் பெற்றெடுத்த தெய்வச் செல்வனை, மழலை மாறா இனிய புதல்வனைச் சலங்கை கொஞ்சும் அழகிய கால்கள் இரண்டையும் மடியில் வைத்துப் புடை இடுக்கி மகனுடைய இரண்டு கைகளையும் தாய் பிடிக்கத் தந்தையார் கருவி கொண்டு தலையரிவார். பைரவர் தாயும் தந்தையும் தம்முள் மகிழ்ந்து துன்பமின்றி அரிந்து கறிசமைக்க வேண்டும் என்றதனால், தாயும் தந்தையும், சீராளத் தேவர் என்னும் மகன் இருந்ததால் தங்கள் திருத்தொண்டு முற்றுப் பெறாமல் தொடர்ந்து நிகழ வாய்ப்பளித்தான் என்று மகிழ்ந்திருந்தார் சிறுத்தொண்டர். திருவெண்காட்டு நங்கையோ இன்று அடியவர் அமுது செய்யவில்லையானால் தன் கணவர் உயிர் வாழார், சீராளத் தேவர் அடியவருக்கு அமுதாக இருந்து தன் கணவர் உயிரைக் காத்து தன் தாலியை தமக்களித்தான் என்று இருவர் மனமும் மகிழ உணவு சமைத்தார்.

    சந்தனத்தாதியார் கறியைப் பல்வேறு வகையாக, விரைந்து சமைத்து சிறுத்தொண்டருக்கு விவரம் அளித்தவுடன், அவரும் பைரவ அடியாரைச் சென்று அழைத்து வந்து, அவரின் பாதங்களைத் தூய்மை செய்து, ஆசனத்தில் அமரச் செய்து மாலைகள் சூட்டிப் புனித நீரால் பாதங்களைக் கழுவினார். அப்புனித நீரை வீடு முழுக்கத் தெளித்துத் தூப தீபம் காட்டிப் பூசனை செய்து வேண்டினார். மனைவியுடன் வணங்கி திருவமுது செய்ய வேண்டும் என்று பணிந்து வேண்டி நின்றார். பைரவ அடியாரும், சிறுத்தொண்டரைப் பார்த்து, தாம் சொன்ன முறையால் உறுப்பெல்லாம் கொண்டு சுவையாக கறியமைத்தீரா என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த திருவெண்காட்டு நங்கை தலைக்கறி அமுதுக்காகாது என்று கழித்துவிட்டதாகக் கூறியபோது, அதுவும்கூட தாம் உண்போம் என்றார். இணையர் இருவரும் சிந்தை கலங்கித் திகைத்து நின்றனர். உடனே சந்தனத்தாதியார் அதையும் சமைத்து வைத்திருப்பதாகக் கூறி எடுத்துக் கொடுத்தார்.

    பைரவ அடியாருக்கு எவ்விதக் குறையுமின்றி அமுது படைப்பதில் மகிழ்ந்த திருவெண்காட்டு நங்கையார் தலைக்கறியைப் பரிமாறினார். ஆனால் அதன் பின்னும் பைரவ அடியார், தாம் தனித்து உண்ண மாட்டோம் என்றும் சிவனடியார் யாராவது இருந்தால் அழைத்து வரவேண்டும் என்றும் கூறினார். வெளியில் தேடிய சிறுத்தொண்ட நாயனார், எவரையும் காணவில்லை என்று கூறுகிறார். பைரவ அடியாரும், திருவெண்ணீறு அணிந்திருக்கும் அவரும் அடியார்தான் என்பதால் சிறுத்தொண்டரும் தன்னுடன் அமுது உட்கொள்ள வேண்டும் என்றார். அடியார் திருவமுது செய்யும் பொருட்டு தாமும் உடனமர்ந்து உணவருந்துவதாகக் கூறி உண்ண ஆரம்பித்தார். அது கண்ட பைரவ அடியார். “உமக்கு ஓர் பிள்ளை இருக்கிறான் அல்லவா? அவனையும் அழைத்து வா. அவனும் நம்முடன் திருவமுது செய்யட்டும்” என்றார். அது கேட்டு சிறுத்தொண்ட நாயனார் கண் கலங்கி தங்கள் மைந்தன் அதற்கு உதவான் என்றார். ஆனால் பைரவ அடியார் அவர்களது மைந்தனும் வந்தால் தான் தாம் அமுது உண்பேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார். சிறுத்தொண்ட நாயனார் செய்வதறியாது திகைத்து நின்றவர், செய்வதறியாது கணவன், மனைவி இருவரும் வாயிற்புறத்தில் நின்று மகனே வருவாய் என்று அழைக்க ஆரம்பித்தபோதும் மகன் வரவில்லை.

    சிறுத்தொண்டர் மீண்டும் இப்போது அடியார் அமுதுண்ண நீ வேண்டும் மகனே, என் துன்பத்தை நீக்கும் மைந்தா வருக என்று வேண்டியபோதும் வரவில்லை. திருவெண்காட்டு நங்கையோ, பிள்ளையைத் தந்தை அரிய கால்களைப் புடை இடுக்கி அழுத்திப் பிடித்தபோது சீராள தேவர் கால்களை உதறிய நேரத்தில் அந்தப் பிஞ்சுக் கால்களில் அணிந்திருந்த சிலம்பின் மணி ஒலிகள் தம் காதுகளில் ஒலித்த அந்த நொடியே அது கடைசிக் காட்சியாக ஆகிவிட்டாலும் அதனையே வைத்து மீண்டும் அழைத்தார்.

    வையம் நிகழும் சிறுத் தொண்டர்

      மைந்தா வருவாய் என அழைத்தார்

    தையலாரும் தலைவர் பணி தலை

      நிற்பாராய்த் தாம் அழைப்பார்

    செய்ய மணியே சீராளா வாராய்

      சிவனார் அடியார் யாம்

    உய்யும் வகையால் உடன் உண்ண

      அழைக்கின்றார் என்று ஓலம் இட. 

    எம்பெருமான் திருவருளால் அந்த அதிசயமும் நடந்தது. குழந்தை சீராளன் பாடசாலையிலிருந்து ஓடி வரும் குழந்தை போல துள்ளிக் குதித்து ஓடி வந்த அன்பு புதல்வனை அள்ளியெடுத்த அன்னை வாரிக் கையிலெடுத்து கணவரிடம் கொடுக்க, சிவனடியார் அமுதுண்ணப் பெற்றோம் என இருவரும் அகமகிழ்ந்தனர். மகனை அழைத்துக்கொண்டு வேகமாக ஓடிவந்த சிறுத்தொண்டர் பைரவரைக் காணாது சிந்தை கலங்கித் திகைத்துக் கீழே விழுந்தார். கலத்தில் இருந்த கறியமுதும் காணாமல் அஞ்சினார். பைரவரைத் தேடி வீட்டின் பகுதியில் பார்த்தார். மறைந்த பைரவர் விடை மீது எம்பெருமாட்டியோடும் முருகப் பெருமானோடும் காட்சிக் கொடுத்த அதிசயமும் நடந்தது. திருத்தொண்டில் மூவரும் ஈடுபட்டதால் மூவருக்கும் அருள் செய்ய எம்பெருமான் மூவராகவே வந்தனர் போலும்!

    தனி வெள் விடை மேல் நெடும்

      விசும்பில் தலைவர் பூத கண நாதர்

    முனிவர் அமரர் விஞ்சையர்கள் முதலாய்

      உள்ளோர் போற்றி இசைப்ப

    இனிய கறியும் திரு அமுதும்

      அமைத்தார் காண எழுந்து அருளிப்

    பனி வெண் திங்கள் முடி துளங்கப்

      பரந்த கருணை நோக்கு அளித்தார்

     

    சிறுத்தொண்ட நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    திருத்தொண்டில் வல்வினையும் நல்வினையும்!

    சிவனடியார்களின் திருத்தொண்டுகள் பற்றிய நூலாகிய திருக்களிற்றுப்படியார், அடியார்களின் செயல்களின் தன்மை சார்ந்து அவற்றை மெல்வினை, வல்வினை என வகைப்படுத்துகிறது. அவற்றுள், ஏறுமாறாக இல்லாமல், மிக இயல்பாக, எவரும் செய்யக்கூடிய எளிமையான சரியை கிரியைத் தொண்டுகள் மெல்லினையெனவும், நினைக்கவே அச்சமூட்டுகின்றனவும், பதற்றமும் ஏற்படுத்துகிற, அடுத்தவர்களால் எளிதாகச் செய்ய முடியாதனவாக உள்ளத் தொண்டுகள் வல்வினை எனவும் குறிப்பிடப்படுகின்றன. அவற்றுள் மெல்வினையை இலக்கண வகையாலுரைத்த திருக்களிற்றுப்படியார் வல்வினையை உதாரணங்கள் மூலமே காட்டியிருத்தல் குறிப்பிடத்தகும்.

    “வரங்கள் தருஞ்செய்ய வியிரவர்க்குத் தங்கள்
    கரங்களினாலன்று கறியாக்க – இரங்காதே
    கொல்வினையே செய்யுங் கொடுவினையே யானவற்றை
    வல்வினையே யென்றதுகாண் மற்று.”

    திருஞானசம்பந்தர் தேவாரத்தில், “சிறப்புலவன் சிறுத்தொண்டன்” என்றும் “சீராளன் சிறுத்தொண்டன்”

    சிறுத்தொண்ட நாயனார் குறிக்கப்பட்டுள்ளார்

    சேக்கிழார் தம் வாக்கில்,

    “சீதமதி அரவினுமின் செஞ்சடைமேற்

    செறிவித்த நாதனடியார் தம்மை நயப்பாட்டு

    வழிபாட்டால் மேதகையாரவர் முன்பு மிகச்

    சிறியராயடைந்தார் ஆதலினாற் சிறுத்தொண்டராய்

    நிகழ்ந்தா ரவனியின் மேல்”

    என்பார்.

    சிவனடியார்களுக்குச் செய்யும் தொண்டும், அளவற்ற அன்பின் காரணமாகச் செய்யப்படும் செயல்கள் உலக இயல்புக்கு மாறானவை என்றாலும் அவை முக்தி தரும் என்கிறார். பைரவர் (சிவன்) வடிவில் வந்த அடியாருக்குத் தனது கைகளாலேயே தன் மகனைக் கறியாக்கிச் சமைத்து அன்போடு படைத்த சிறுத்தொண்ட நாயனாரின் வல்வினை பற்றி குறிப்பிடுகின்றது.

    உயிர் உள்ள ஆடு, கோழி போன்றவற்றை அறுத்தார்கள் எனும்போது, உயிர் அற்ற காய்கறிகளை அரிந்தார்கள் என்பது வழக்கு. சீராளத் தேவர் சிவயோக நிலையில் உயிர் பொருளாக இருந்த காரணத்தால் தெய்வச் சேக்கிழார் பெருமான் அரிந்தார் என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளதோடு, அரியவினை செய்தார் என்று இரு பொருள்படக் கூறுகிறார். அதாவது ஒன்று அருமையான செயல் என்று குறிப்பிடுவது. மற்றொன்று சீராளத் தேவர் அரிகின்ற செயல் என்பதாம்.

    இத்தகைய அரிய செயல் செய்தவரை ஆண்டவன் அருள் செய்தது சற்று கடினமான முறைதான் என்றாலும் பெற்ற பிள்ளையை அரிந்து சமைக்கச் செய்தது கருணையின்பால் படுமா என்று தோன்றலாம். யாரை எப்படி ஆட்கொள்வது என்பதை அந்த இறைவனே முடிவு செய்கிறான். வடபுலத்தில் படையெடுத்துச் சென்ற பரஞ்சோதியார் வாதாபித் தென் நகரைத் தீக்கிரையாக்கியுள்ளார். அதில் பல உயிர்களும், குழந்தைகளும் உயிர் நீத்துள்ளனர். பரஞ்சோதியாரைப் பொருத்தவரையில் அது தனது தேசபக்தியின் வெளிப்பாடு என்பார். பற்றின்றி விருப்பு வெறுப்பின்றித் தேச பக்தியால் வாதாபியை வீழ்த்தியவர் தெய்வ பக்திக்காகப் பற்றற்று தம் பிள்ளையை அரிவாரோ என்று சோதிப்பார் போலும்! இவ்வினாவிற்கான விடையாக சிறுத்தொண்டர் வரலாற்றால் அடியவர்களின் பற்றற்ற நிலையை உலகிற்கு விளக்கியருளுகிறார்.

    சிறுத்தொண்டர் நாயனார் பல்லவ மன்னனின் படைத் தளபதியாக ‘வாதாபி’ சென்று சாளுக்கியர்களோடு போர் செய்து வாகை சூடி வந்தபோது தம்முடன் கொண்டு வந்த (வாதாபி) விநாயகரை இக்கோயிலில் நிர்மாணம் செய்துள்ளார். இவரது குருபூசை தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    திருச்சிற்றம்பலம்

     

    Share
  • அப்துல் கலாமின் புத்தாக்கக் கருவிகள்

    அப்துல் கலாமின் புத்தாக்கக் கருவிகள்

    அண்ணாகண்ணன்

    ஏவுகணை, விண்வெளி, பாதுகாப்புத் துறையில் பல்வேறு திட்டங்களுக்குத் தலைமை தாங்கி முன்னெடுத்தவர், அப்துல் கலாம். இவை மட்டுமின்றி, புத்தாக்கக் கருவிகள் இரண்டை அவர் உருவாக்கினார்.

    இலகுரகச் செயற்கைக் கால்கள் (lightweight floor / leg calipers and artificial prosthetics)

    டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், தம் அறிவியல் குழுவினருடன் இணைந்து, ஏவுகணைகள் மற்றும் விண்வெளி ராக்கெட்டுகளுக்காக முதலில் பயன்படுத்தப்பட்ட மேம்பட்ட கார்பன்-கலவைப் பொருட்களைக் கொண்டு,புரட்சிகரமான இலகுரக தரை/கால் அளவிகளையும் செயற்கை உறுப்புகளையும் உருவாக்கினர்.

    முக்கிய அம்சங்கள் மற்றும் புதுமை எடை குறைப்பு: இந்த விண்வெளிக் காலத்து கலவைப் பொருளானது, பாரம்பரிய கால் அளவிகளின் எடையை 4 கிலோவிலிருந்து சுமார் 300 முதல் 400 கிராமாகக் குறைத்துள்ளது (இதனால் அவை 10 முதல் 15 மடங்கு வரை எடை குறைந்தவையாக மாறியுள்ளன).

    மூலப்பொருட்களின் தோற்றம்:அக்னி ஏவுகணையின் மூக்குக் கூம்பிற்குப் பயன்படுத்தப்பட்ட அதே வெப்ப-எதிர்ப்பு கலவைப் பொருட்களைக் கொண்டு இது உருவாக்கப்பட்டது.

    கட்டுப்படியாகும் விலை: இது, சுமார் ₹500 முதல் ₹850 வரை செலவாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ₹3,500 முதல் ₹4,000 வரை விலை கொண்ட பழைய, கனமான உலோகம் மற்றும் தோல் மாடல்களை விட கணிசமாக மலிவானது.

    கலாம்-ராஜு ஸ்டென்ட் (Kalam-Raju Stent)

    கலாம்-ராஜு ஸ்டென்ட் (Kalam-Raju Stent) என்பது இந்தியாவின் முதல், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, மிகக் குறைந்த விலையுள்ள இதய கரோனரி ஸ்டென்ட் ஆகும். 1994ஆம் ஆண்டில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் பிரபல இருதய நோய் நிபுணர் டாக்டர் சோம ராஜு ஆகியோர் இணைந்து இதனை உருவாக்கினர்.

    முக்கிய அம்சங்கள் மற்றும் சிறப்புகள்:

    ஏவுகணைத் தொழில்நுட்பம்: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் (DRDL), ஏவுகணைகளுக்காகப் பயன்படுத்திய உயர்தர மருத்துவக் தரத்திலான எஃகு (High-grade Steel) பொருளைக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டது.

    விலைக் குறைப்பு: அந்தக் காலக்கட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்டென்ட்டுகள் ₹75,000 முதல் ₹1 லட்சம் வரை விற்கப்பட்ட நிலையில், இந்த சுதேசி ஸ்டென்ட் வெறும் ₹10,000 விலையில் ஏழை மக்களுக்குக் கிடைத்தது. இது சந்தை விலையை 50%க்கு மேல் குறைக்க உதவியது.

    உயிர் காத்த திருப்தி: “மக்களைக் கொல்லும் ஏவுகணைகளை உருவாக்கிய நான், வாழ்க்கையின் இறுதியில் மனித உயிர்களைக் காக்கும் ஒரு கருவியைக் கண்டுபிடித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கலாம் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

    கலாமின் விஞ்ஞானப் பார்வையும் புத்தாக்க முனைப்பும் தலைமுறை தோறும் விரிவடைய வேண்டும். அதுவே அவரது நினைவைப் போற்றச் சிறந்த வழி.

    Share