Author: மேகலா இராமமூர்த்தி

  • படக்கவிதைப் போட்டி 29-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு. காயத்ரி அகல்யாவின் புகைப்படத்தை இவ்வாரப் போட்டிப்படமாகத் தெரிவுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவரும் வல்லமையின் நன்றியறிதலுக்கு உரியவர்கள்.

    small boy with a slate

    ’உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
    பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே’ என்கிறது புறம். எத்துணைத் துன்பம் வரினும் அதனைத் தக்கவகையில் வென்று கல்வி கற்பதே குழந்தைகளின் வருங்கால வாழ்விற்கு நன்று. தமிழ் எழுத்துக்களைக் கற்பலகையில் கருத்தோடு எழுதிப் பழகும் சிறுவனின் வாழ்வு பொற்புடன் விளங்க நாமும் வாழ்த்துவோம்!

    சிறப்பான அறிவுரைகள் பலவற்றைச் சிறுவனுக்கு நம் கவிஞர்கள் வழங்கியிருக்கக் காண்கிறேன். அந்நன்மொழிகளை நாமும் அறிந்து பயன்பெறுவோம்!

    ஈகையெனும் ஆயுதம் ஏந்தி வறுமையை விரட்டிச் சிறுமையைச் சாடவும், ஒருமையைப் பாடவும் சிறுவனை அழைக்கிறார் திருமிகு. ராதா மரியரத்தினம்.

    …அகரத்தைத் தாண்டி
    சிகரத்தில்
    ஏறு
    உயரத்தில்
    நின்று
    பள்ளத்தை
    நோக்கு
    உள்ளத்தைத்
    திறந்து
    ஈகை
    எனும் பேராயுதம் ஏந்தி
    வறுமையைப்
    போக்கு
    சிறுமைகள்
    சாடு
    ஒருமையைப்
    பாடு
    பாரதி
    கண்ட உலகத்தைக் காணு
    ஐயா
    அப்துல் கலாம் கண்ட
    கனவை
    நீ காணு!

    ***

    மெய் (உடல்) தேடிக்கொண்டிருக்கும் மானுட உயிர்(எழுத்துக்)களைத் தன் ’பா’வின் பாடுபொருளாக்கியிருக்கிறார் திரு. கவிஜி.

    இம்முறை
    என்ன வாங்கி வந்தாய்
    என்று கேட்ட
    மகனிடம்
    தங்கச்சி பாப்பாவோ
    தம்பி பாப்பாவோ
    வாங்கி வந்ததை
    கூற முடியாமல் வயிற்றோடு
    இழுத்து அணைத்துக் கொண்டாள்
    இரண்டாவது திருமணம்
    செய்து கொண்ட
    தாய்
    ஏதோ மெய் தேடிக் கொண்டிருந்தது
    உயிர் எழுத்துக்கள்

    ***

    கற்பலகை ஏந்திய இந்த ஞானச்சிறுவன் ’சிற்றின்பம் விலக்கிப் பேரின்பம் தேடு!’ என அறவுரை அளிப்பதை நமக்கு அறியத்தருகின்றார் திரு. விஎஸ்கே.

    அகரத்தில் தொடங்கி
    அதையொட்டியப் பயணம்
    அளவற்றுப் பெருகி
    அவஸ்தைப் படுத்துகிறதே
    […]
    இனியென்ன
    எழுதட்டும்
    ஈதென்ன செய்வதென்னும்
    உண்மையிங்குப் புரியாமல்
    ஊன்நிமிர்ந்து உதடுகுவித்து
    எனையிவனும் நேரிட்டான்
    ஏதொன்றும் கூறாமல்
    ஐயத்தைப் போக்குதற்கு
    ஒருவழியும் தெரியாமல்
    ஓவியமாய் யானமர்ந்தேன்
    ஔசித்யம் அறிந்தவனோ
    வெஃகல் விலக்கேலென்றான்!

    ***

    ’எழுத்துக்களுக்கு அகரமே ஆதாரம்; அதுபோல் மானுட வாழ்வுக்கு மகவே ஆதாரம்’ எனும் வாழ்வியல் உண்மையைக் ’குறள் வடிவில்’ விளம்பியுள்ளார் திரு. ஜெயபாரதன்.

    அகர முதல எழுத்தெல்லாம்!  வாழ்வு
    மகனின் முதற்றே அறி.

    ***
    உறக்கம் வந்ததால் நெடிலைக் குறிலாய் மாற்றியெழுதிவிட்டான் சிறுவன் என்பது திரு(மிகு). மணிச்சிரலின் அனுமானம்.

    தூக்கம் வந்து நெடிலை குறிலாக்கினாலும்
    துயரம் எதுமில்லை! கொம்பும் முளைப்பதில்லை!
    தவறாய் தெரிந்து கண்களை உருட்டினாலும்
    பயமும் வருவதில்லை! கண்ணன் மாறவில்லை
    நிறத்தை திரித்து கண்போல் காட்டினாலும்
    தாக்கம் குறையவில்லை! பார்வை அகலவில்லை!

    ***

    ’பழுதிலாத் தமிழ்க்கல்வி அழிவிலாப்புகழைச் சேர்த்திடும்’ என்று நம்பிக்கையோடு சிறுவனைச் சொல்ல வைத்திருக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    எழுத்தறி வித்தவன் முதன்முதலில்
    எழுதிக் காட்டிய தாய்த்தமிழின்
    எழுத்தெலாம் எழுதித் தேர்ந்திடுவேன்,
    ஏணியாய் எனையவை ஏற்றிடுமே,
    உழுதவன் வளம்பெற வளர்பயிர்போல்
    உறுதுணை எனக்குத் தந்திடுமே,
    பழுதிலா தாய்த்தமிழ் படிப்பதால்நான்
    புகழொடு பெருநிலை பெறுவேனே…!

    ***

    ’அகரம் எழுதிப் பழகு அழகாய்; சிகரத்தில் ஏற்றும் உலகம் உன்னை! என்று இளந்தளிரிடம் இன்மொழிகள் கூறுகின்றார் திரு. மெய்யன் நடராஜ்.

    அகரம் எழுதிப் பழகுமுன்னை நாளை 
    சிகரத்தில் ஏற்றும் உலகுநகராமல் 
    மெய்யெழுத்துத்  தீட்டுமுன் கையெழுத்தை சீர்செய் 
    தலையெழுத்தை மாற்றும் உணர் 

    ***
    ’ஆங்கிலக் களிற்றினால் இடறப்பட்ட தமிழ்மகளின் மெய்யில் உயிரும்தான் உளதோ?’ என்றோர் அருமையான வினாவை எழுப்பி நம்மைச் சிந்திக்க வைத்திருக்கின்றார் திருமிகு. லட்சுமி.

      …தரையில் மடிந்து கிடக்கும்
    உன் தோள் பையில்
    தீந்தமிழுக்கும் இனி
    இடம் உண்டா?
    […]
    ஓடி விளையாடு பாப்பா
    என்றுதான் பாடினேனே!
    ஓயாமல் எழுத நானும்
    சொல்லவில்லையே!
    […]
    காக்கைக்கும்
    தாகமுண்டு
    என்றே நீயும் கொடைக் கர்ணனாய்
    வாழ்ந்திடுவாயா!
    […]

    பளிங்கு சிலைகளாய்
    வடிக்கப்பட்டு மௌனம் காக்கவா
    பா வடித்தோம்!
    காக்க மறந்த கிருஷ்ணர்
    தேடி இனி எங்கு செல்வது?
    ஆங்கிலக் களிறினால் 
    இடறிய தமிழ்மகள்
    மெய்யுடம்பில் உயிரும்தான்
    இனி உளதோ!
    களிற்றரசு ஏறி
    அறிவியல் தமிழ்மகளும் 
    அகிலமெங்கும் உலாப்போகும் 
    நாள் எந்நாளோ
    அந்நாளே நான் காணும்
    தொலைநோக்கு பாரதம்!

    ***

    ’சுந்தரத் தமிழ்விடுத்துச் சொர்க்கலோகம் செல்வதும் எனக்குத் தேவையில்லை’ எனச் சூளுரைக்கும் தமிழ்ச்சிங்கத்தைத் தன் ’பா’வழியே படைத்துக் காட்டியிருக்கின்றார் திரு. பெ. முத்துக்குமரன்.

    மொழிகளுள் முதலில் தோன்றியதால், தமிழ்
    பிறமொழிகளின் கலப்பில்லாதவள் !
    தனித்தமிழாய் விளங்குவதால்
    பிறமொழி போல் களங்கமில்லாதவள் !
    […]
    மூப்பில்லா
    கன்னித்தமிழ் முன்னே
    அண்டத்தில் ஏதும் அழகில்லை !
    தமிழ் அமிழ்தாய் விளங்குவதால்
    அவளுக்கென்றும் அழிவில்லை !
    […]
    தமிழின்
    மதிப்பை குறைத்து
    எடை போடவேண்டாம் !
    தமிழைவிடுத்து கிடைப்பது
    சொர்க்கமாயினும் எனக்கு வேண்டாம் !

    ***

    ’எண்ணும் எழுத்தும் என்றும் கண்ணாகும்; நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வே பொன்னாகும்!’ எனச் சிறுவனுக்கு நல்வழி காட்டுகிறார் திருமிகு. வானதி வேதா. இலங்காதிலகம்.

    எண்ணும் எழுத்தும் கண்ணாகும்
    கண்ணெனும் மொழியை நாம்
    மண்ணில் முதலில் எழுதினோம்.
    இங்கு சிலேட்டுப் பலகையில்.
    இப்படித் தயக்கம் வேண்டாம்.
    இ ” னா சுற்றிக் கட்டுமொரு
    இடறல் எழுத்துத் தான்!
    இசைவாக எழுதி முடிப்பானா!

    முகத்தின் தயக்கம் எடு!
    அகத்தில் நம்பிக்கையுடன் முன்னெடு!
    சுகமாக எழுதுவாய் சரியாகும்!
    தகவு தானாகச் சேரும்!
    நம்பிக்கை கொடுக்காது ஆசிரியரும்
    நழுவி அச்சுறுத்தல் கேடாகும்!
    நகுதலும் நளினம் செய்தலும்
    நல்ல வளர்ச்சிக்குக் குந்தகமாகும்!

    ***

    உளத்திற்கு உரமூட்டும் வளவான சிந்தனைகளை வழங்கியிருக்கும் கவிஞர்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்!

    அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகியிருப்பவர் யார் என அறிந்துகொள்ள வேண்டாமா?

    ’எம்மொழி உயர்தனிச் செம்மொழி! என்று வீணாய்ப் பழம்பெருமை பேசிக் கொண்டிருப்பதைவிட்டு, அருந்தமிழை அரியணையேற்று! வையத் தலைமை கொண்டாலும், வாழ்வில் தமிழைக்கொள்!’ எனும் சிறந்த மொழிகளைப் பகரும் ஓர் கவிதை என் இதயத்தை இனிக்கச் செய்து கண்கள் பனிக்கச் செய்தது!

    அக்கவிதை…

    கரும்பலகையில்
    கற்றுக்கொள்ளும் அகரம்
    விரும்பியுன்னைத்  தொடவைக்கும்
    வெற்றியின் சிகரம்…!

    உயிரும் மெய்யும்
    உயிர்மெய்யாயும்
    ஆயுதம் ஏந்திடு
    அருந்தமிழ் காக்க…!

    வல்லினமாகி
    மெல்லினம் காத்து
    இடையினம் ஆகா
    இழிநிலை போக்கு…!

    உயர்தனிச் செம்மொழியென்னும்
    பழங்கதைப் பேசிப் பழகாமல்
    அருந்தமிழ் மொழியை
    அரியணை ஏற்று…!

    மெல்லத் தமிழினிச்
    சாகும் என்னும்
    பொல்லா மொழியினைப்
    பொடிப்பொடியாக்கு…!

    வையத் தலைமைகொள்
    வாழ்வில் தமிழைக் கொள்
    மையப் புள்ளி நீயென
    மாநிலத்துக்கெடுத்துக் காட்டு…!

    உய்யும் வழியென்றே
    உலகை உன்புறம் திருப்பு
    ஐயம் அகற்றி
    அகிலத்திற்குச் சொல்

    அருந்தமிழொன்றே
    அவனியில் நிலைக்கும்
    ஆயிரமாயிரம்
    ஆண்டுகள் கடந்தும்
    !

    தமிழுயர்வுக்காய்த் தன் கவிதையில் குரல் கொடுத்திருக்கும் திரு. இளவல் ஹரிஹரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் மகிழ்வோடு அறிவிக்கின்றேன்.

    அடுத்ததாக மற்றுமொரு பொருள்பொதிந்த கவிதை…

    பத்துப் பாட்டு
    எட்டுத் தொகை
    பதினெண் கீழ்கணக்கென
    ஒரு கோடி
    இலக்கியங்கள் இருந்தும்
    ’மம்மி டாடி’யிலேயே
    மகிழ்கிறது நம் இனம்

    குழலினிது
    யாழினிதென்பர்
    தம் மக்கள்
    ஆங்கிலம் பேச கேளாதார்
    இதுவே
    இன்றையக் குறளாய்
    எங்கும் ஒலிக்கிறது
    […]
    அன்னை
    மொழியில் பேச
    அவமானப்படும்
    ஒரே இனமென
    உலகெங்கும் நாம்
    அறியப்படுகிறோம்

    இந்த இழிநிலைகளை மாற்ற
    உயிரெழுத்துப் பழகும்
    இளந் தளிரே
    உன்னால் மட்டுமே முடியும்

    மொழி என்பது
    இனத்தின் இதயம்
    இதயம் துறந்த இனம்
    பிணமொக்கும் என்பதை
    நம்மவருக்கு
    உரக்க சொல்
    நாளைய விடியலாவது
    நன்மை பயக்கட்டும்!

    ’ஓர் இனத்தின் இதயம் அதன் மொழியே ஆகும்; இதயமற்ற இனம் உயிரற்ற பிணம்!’ எனச் சாடியிருக்கும் திரு. கொ.வை. அரங்கநாதனின் கவிதையைப் பாராட்டுக்குரியதாய்த் தெரிவிக்கின்றேன்.

    கவிஞர்களே! தீப்பொறி பறக்கும் சிந்தனைகளை நும் பாக்களில் காண்கின்றேன். பாராட்டுக்கள்!

    தொடர்ந்து உங்கள் பங்களிப்பைத் தந்து எம்மைக் களிப்பில் ஆழ்த்துங்கள்!

     

    Share
  • அறிந்துகொள்வோம் – 16 (ஹைப்பாட்டியா (Hypatia))

    -மேகலா இராமமூர்த்தி

    மதவெறியால் மாய்ந்த மாதரசி!

    புவியையே புரட்டிப்போட்ட புரட்சியாளர், தத்துவத்துறையில் முத்திரை பதித்த வித்தகர், பல்கேள்வித் துறைபோகிய நல்லறிஞர் என்றெல்லாம் போற்றப்படுவோர் யார் என்று ஆராய்ந்தால் அவர்களில் அநேகர் ஆண்களாகவே இருந்துவிடக் காண்கிறோம். இவற்றைக் காண்கையில், ஏன்…பெண்களில் சீரிய சிந்தனை வாய்க்கப்பெற்றோர், அறிவுத்தளத்தில் ஆற்றலோடு இயங்கக்கூடியோர் யாருமே இல்லையா? என்றொரு ஏக்கம் நம் மனத்தின் ஓரம் மெலிதாய் எட்டிப்பார்க்கின்றது.

    அந்த ஏக்கத்தைப் போக்கிப் பெண்ணினத்தைப் பூரிக்கச்செய்யும் பெயர்தான் ’ஹைப்பாட்டியா’ (Hypatia). ஆம்! பேரறிவோடும், பெரும் புலமையோடும்,  தன் கருத்துக்களைத் துணிச்சலாகவும், சுதந்திரமாகவும் வெளியிட்ட பெண்ணறிஞர்தான் ஹைப்பாட்டியா!

    எகிப்தின் பெருநகரங்களில் ஒன்றான அலெக்சாண்டிரியாவில் (it was founded by Alexander the Great, in 331 B.C.) கி.பி. 300-களின் இறுதியில் பிறந்தவர் ஹைப்பாட்டியா. அலெக்சாண்டிரியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராய்ப் பணியாற்றிவந்த புகழ்பெற்ற கணிதவியலாளரும், வானியலறிஞருமான தியோன் அலெக்சாண்டிரிகஸ் (Theon Alexandricus) என்பவரின் அருமை மகள்தான் இவர்.

    தொடக்கத்தில், ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த பிரபல வரலாற்றாசிரியரும், கட்டுரையாளருமான புளுடார்ச்சிடம் (Plutarch the younger) கல்வி பயின்றார் ஹைப்பாட்டியா. பின்பு தன் தந்தையிடம் கணிதம், வானியல் துறைகளைக் கற்றுத்தேர்ந்தார். இவையேயன்றித் தத்துவத்துறையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு அதிலும் ஆழ்ந்தபுலமை பெற்றவரானார்.

    hypatiaகி.பி. 400-களின் வாக்கில் அலெக்சாண்டிரியாவின் நவபிளேட்டோனியப் பள்ளி (Neo-Platonic School) ஒன்றை நிறுவி அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஹைப்பாட்டியா, அங்கு பிளேட்டோ (Plato), அரிஸ்டாட்டில் (Aristotle) போன்றோரின் செறிவான சிந்தனைகளையும், பிளேட்டோவின் சிந்தனைகளில் புதிய வளர்ச்சிநிலையை ஏற்படுத்தியவரும், நவபிளேட்டோனியத்தைத் (Neo-Platonism) தொடங்கிவைத்தவருமான பிளோட்டினஸின் (Plotinus) சித்தாந்தங்களையும், தம்மிடம் கல்விபயின்ற கிறித்தவ, பேகனிய (people who follow the religions other than Christianity or Judaism) மற்றும் இதர பிரிவைச் சார்ந்த மாணாக்கர்களுக்குக் கற்பித்தார்.

    அவரிடம் பயின்ற மாணாக்கர்களில் குறிப்பிடத்தக்கவர் ’சைரின்’ என்ற நகரைச் சேர்ந்த ’ஸைனிசியஸ்’ (Synesius of Cyrene) ஆவார். பிற்காலத்தில், கிரேக்கத்திலுள்ள தோலிமெய்ஸ் என்ற பகுதியின் தலைமைக் குருவாய்ப் (Bishop of Ptolemais) பதவியேற்ற ஸைனிசியஸ், தன் ஆசிரியையான ஹைப்பாட்டியாவிடம் தான் கற்றறிந்த நவபிளேட்டோனியச் சிந்தனைகளைத் தோலிமெய்ஸில் பரப்பினார் என்று கூறப்படுகின்றது. பல கடிதங்களைத் தன் ஆசிரியருக்கு எழுதியிருக்கின்றார் ஸைனிசியஸ். அக்கடிதங்கள், தன் ஆசிரியர்பால் அவர் கொண்டிருந்த மட்டற்ற மதிப்பையும் மரியாதையையும் புலப்படுத்துவனவாகவும், ஆசிரியரின் அறிவியல் புலமையைப் பெரிதும் போற்றுவனவாகவும் அமைந்திருப்பதாய் அறிகின்றோம்.

    ஸைனிசியஸ் தன் கடிதங்களில் குறிப்பிட்டபடி, அறிவியல் துறையில் ஆழங்காற்பட்ட புலமையுடனேயே ஹைப்பாட்டியா திகழ்ந்திருக்கின்றார் என்பதை அவரின் அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மெய்ப்பிக்கின்றன. திரவங்களின் அடர்த்தியை நீரோடு ஒப்பிட்டு அறிய உதவும் திரவமானி (Hydrometer), நீருக்கு அடியிலிருக்கும் பொருள்களை ஒளிவழியாய்க் காண உதவும் சோதனைக்கருவி (hydroscope), வானியலாளர்கள் சூரியன், சந்திரன், மற்றும் பிற கோள்களின் இடத்தைக் கண்டறிய உதவும் கருவி (astrolabe) முதலியவை ஹைப்பாட்டியாவின் கண்டுபிடிப்புக்களே என்று சொல்லப்படுகின்றது.

    சிறந்த கணிதவியலாளராகவும் திகழ்ந்த ஹைப்பாட்டியா, ’அல்ஜீப்ராவின் தந்தை’ என்று புகழப்படும் தியோஃபாந்தஸ் (Diophantus) எனும் கிரேக்கக் கணிதவியலாளரின் நூலான அரித்மெட்டிகாவுக்கு (Diophantus’s Arithmatica) விளக்கக் குறிப்புகள் வரைந்துள்ளார். அக்காலத்தில், அலெக்சாண்டிரியாவில் வாழ்ந்த புகழ்வாய்ந்த வானியலறிஞர் ’தாலமி’யின் (Claudius Ptolemy) வானியல் நூலுக்கும் அவர் உரை எழுதியுள்ளார். இவையேயன்றி, தன் தந்தை தியோனின் நூலெழுதும் பணிகளுக்கும் ஹைப்பாட்டியா பேருதவி புரிந்திருக்கின்றார்.

    புகழ்பெற்ற ஆசிரியராகவும், பிற அறிஞர்களின் நூல்களுக்கு உரையாசிரியராகவும் திகழ்ந்ததோடல்லாமல் சிறந்த பேச்சாளராகவும் அலெக்சாண்டிரியா மக்களைக் கவர்ந்தவர் ஹைப்பாட்டியா. ஓர் ஆசிரியருக்கு ஏற்ற வகையில் மிகவும் கண்ணியமான உடையுடனேயே எப்போதும் காட்சியளித்த அவர், தனக்கென்று வைத்திருந்த தேரைத் (Chariot) தானே செலுத்திக்கொண்டு வீதிகளில் கம்பீரமாக வலம்வருவாராம். தெளிந்த அறிவும், தேர்ந்த சிந்தனையும் பெற்றிருந்த ஹைப்பாட்டியாவைப் ’பெண்ணியச் சிந்தனையாளர்களின் முன்னோடி’ என்று பெருமையோடு சுட்டுகின்றனர் இன்றைய பெண்ணியவாதிகள்.

    அளவற்ற திறனும் மாணாக்கர்களின் மட்டற்ற அன்பும் வாய்க்கப்பெற்றிருந்தும், ஹைப்பாட்டியாவின் மரணம் என்னவோ இயற்கையானதாய் அமையவில்லை. மாறாக, நம்மால் கனவிலும் கற்பனை செய்யவியலாத வகையில் மிக்கொடூரமான ஒன்றாக அதனை அமைத்துவிட்டது விதி! இல்லை..வஞ்சகர்களின் சதி!

    ஆம்! அவருடைய சிந்தனைகள் கிறித்தவத்திற்கு எதிரானவை, பேகனியத்திற்கு (Paganism) ஆதரவானவை என்று கருதிய அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த (கிறித்தவ மதவெறி மிகுந்த) சிரில் (Cyril) என்ற மதகுரு, கலகக்காரர்களை ஹைப்பாட்டியாவுக்கு எதிராக ஏவிவிட, அக்கூட்டமோ வீதியில் தேரில் சென்றுகொண்டிருந்த அப்பெண்ணரசியை வழிமறித்தது. தேரினின்றும் அவரைப் பலவந்தமாகக் கீழிறக்கி, அவர் ஆடைகளைக் கிழித்துக் கொடூரமாகத் தாக்கிக் கொலைசெய்திருக்கின்றது இரக்கமற்ற அந்த அரக்கக் கூட்டம்!

    அத்தோடு விட்டதா? அலெக்சாண்டிரியாவில் அவரால் நிர்மாணிக்கப்பட்டிருந்த நூலகத்தையும், அவருடைய ஆக்கங்களையும் தீக்கிரையாக்கி ஆனந்தக் கூத்தாடியது. அறிவுக்கண்ணை முழுக் குருடாக்கிவிட்ட மதவெறியானது, நற்பண்பாளரும், சிறந்த அறிஞருமான பெண்மணி ஒருவரின் வாழ்க்கையைச் சின்னாபின்னமாக்கிக் கோரமாய்ச் சிதைத்திருப்பதை இப்பயங்கர நிகழ்வு நமக்குப் படம்பிடித்துக் காட்டுகின்றது.

    ஹைப்பாட்டியாவின் சமகாலத்தவரும் வரலாற்றறிஞருமான (historiographer) சாக்ரடிஸ் ஸ்கோலாஸ்டிகஸ் (Socrates Scholasticus) என்பவர், ஹைப்பாட்டியாவைப் பற்றிப் பின்வருமாறு பதிவுசெய்திருக்கிறார்:

    “அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த பெண்மணியும், தியோன் எனும் அறிஞரின் மகளுமான ஹைப்பாட்டியா, இலக்கியம், அறிவியல், தத்துவம் போன்ற பல்துறைகளிலும் தன்காலத்தைச் சேர்ந்த அனைத்து அறிஞர்களினும் விஞ்சிய திறன்வாய்ந்தவராய்த் திகழ்ந்தார். பிளேட்டோ, மற்றும் புளோட்டினஸின் சிந்தனைகளைக் கற்பிக்கும் பள்ளியொன்றை நிறுவி, அச்சிந்தனைகளை மக்கள் மன்றத்தில் துணிச்சலோடும் ஆற்றலோடும் கொண்டுசேர்த்தார். ஆண்களின் சபைகண்டு அவர் அஞ்சியதில்லை; அவருடைய கண்ணியமும், உயர்ந்த ஒழுக்கமும் அனைவராலும் மெச்சப்பட்டது.”

    நண்பர்களே! சாக்ரடீஸை விஷமருத்திக் கொன்றது கிரேக்கம்; அதுபோல் ஹைப்பாட்டியாவைக் கொடூரமாய்த் தாக்கிக்கொன்றது அலெக்சாண்டிரியா. இவ்விரு அறிஞர்களின் மரணத்திற்கும் அடிப்படைக் காரணம், அப்பகுதி மக்களின் இறைநம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களை இவர்கள் பரப்பிவந்தனர் என்ற மதவாத எண்ணமே!

    இதில் விந்தை என்னவென்றால்…அனைத்து மதங்களும் ’தம் ஆண்டவர் அன்பே வடிவானவர்’ என்றுதான் சொல்லிக்கொள்கின்றன. ’அன்புவழியே அறவழி’ என்று முழக்கமிடுகின்றன. ஆனால், அம்மதங்களைப் பின்பற்றும் மக்களோ அன்புவழியைப் பிரசாரம் செய்கின்ற அளவிற்கு வாழ்வில் பின்பற்றுவதில்லை என்பதையே இச்சிந்தனையாளர்களின் மரணங்கள் உறுதிப்படுத்துகின்றன.

    ஆயினும், செயற்கரிய செய்யும் சான்றோர் என்றுமே அழிவதில்லை; தம் சாதனைகளாலும், போதனைகளாலும், அரிய கண்டுபிடிப்புக்களாலும் மன்னாவுலகத்தில் மன்னுபுகழ் பெற்றுவிடுகின்றனர்.

    அவ்வகையில், 20-ஆம் நூற்றாண்டின் முண்டாசுக் கவிஞன் படைத்துக்காட்டிய புதுமைப்பெண்ணாய் 4-ஆம் நூற்றாண்டிலேயே வாழ்ந்து காட்டிய அறிவுலகமேதை ஹைப்பாட்டியா அம்மையார், வையத்து மா(ந்)தரனைவரும் என்றும் நினைந்து போற்றவேண்டிய மாதரசியே அல்லவா!

    ***

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

     https://en.wikipedia.org/wiki/Hypatia
    http://www.britannica.com/biography/Hypatia
    http://oregonstate.edu/instruct/phl201/modules/Philosophers/Hypatia/hypatia.html

    100 Philosophers – Peter J King
    http://www.smithsonianmag.com/womens-history/hypatia-ancient-alexandrias-great-female-scholar-10942888/?no-ist


    Share
  • நெஞ்சிற்கு அணியர்

    -மேகலா இராமமூர்த்தி

    தலைவன் ஒருவனும் அவன் ஆருயிர்க் காதலியான தலைவி ஒருத்தியும் இல்லற வாழ்வில் இணைந்து இன்பவானில் பறவைகளாய்ப் பறந்துகொண்டிருந்தனர். ஒருபுறம், காதல் கைகூடிய இன்பம் தலைவனுக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தாலும், மறுபுறம் அவன் மனத்தில் கலக்கமொன்றும் கூடவே பயணித்தபடி இருந்தது. அது என்ன கலக்கம்?

    ”தலைவியோடு நடாத்திக்கொண்டிருக்கும் இல்லறம் நெடுநாளைக்கு நல்லறமாய்த் திகழப் பொருள் வேண்டுமே! இல்லையெனில் மனித வாழ்க்கைக்குப் பொருளேது? ’பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்றனரே சான்றோர். இருக்கும் கையிருப்பும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரையத் தொடங்கிவிட்டதே!” என்னும் கலக்கம்தான் அது!

    ”பெரிய இடத்துப் பெண்ணான தலைவியின் பெற்றோரிடம் சென்று பொருளுதவி பெறலாம்தான்; ஆனால் அது தன் ஆண்மைக்கு அழகாமோ? தன்முயற்சியால் பொருளாதாரம் கொண்டு ’தாரத்தை’க் காப்பாற்றுவதே பேராண்மை…இல்லையெனில் அது பேருக்குத்தான் ஆண்மை!” என்று எண்ணியவனாய்ப் பெருமூச்செறிந்தான். இன்மையின் இளிவை எண்ணி மருகிய அவன் உள்ளத்தின் சோர்வு முகத்தில் நன்றாய்ப் பிரதிபலித்தது.

    சின்னாட்களாகவே தலைவனின் முகத்தில் கவலையின் சாயை தென்படுவதையும், அவன் கலகலப்புக் குறைந்தவனாய்க் காட்சியளிப்பதையும் கண்ட தலைவி, “ஐய! ஏன் இந்த முகவாட்டம்? அஃது என் அகத்தையும் வாட்டமுறச் செய்கின்றதே! எதுவாயினும் என்னிடம் தயங்காமல் சொல்லுங்கள்!” என்றாள்.

    அவளை நோக்கிய தலைவன் , “கண்ணே! வளமனையில் வாழ்ந்த உன்னை வறுமனையில் கொண்டுவந்து வைத்துவிட்டேனே!” என்று வேதனையோடு கூறத்தொடங்க, இடைமறித்த தலைவி, ”அப்படியெல்லாம் ஒன்றுமில்லை; இங்கு நான் மிகுந்த மகிழ்ச்சியோடுதான் இருக்கிறேன், வீணாக வருத்தம் கொள்ளாதீர்கள்” என்றுகூறி முத்தைப் பழிக்கும் தன்பற்களைக் காட்டி முறுவலித்தாள்.

    அப்போது மெதுவாய்த் தன் உள்ளக்கிடக்கையை அவளிடம் மொழியலுற்றான் தலைவன். “நீயும் நானும் உடம்பொடு உயிரிடையன்ன நட்பு கொண்டு இனிய இல்லறம் பேணுகின்றோம்; அதில் ஐயமில்லை. எனினும் பொருளீட்டாது, இருப்பதை வைத்துக்கொண்டு நெடுநாள் வளமாய் வாழவியலாது. எனவே வேற்று நாட்டிற்குச்சென்று நான் பொருளீட்டிவர விழைகின்றேன். உன் கருத்தென்ன கண்மணி?” என்று கேட்டான் ஆவலோடு!

    தலைவி சிந்தித்தாள். ”நீங்கள் சொல்வது உண்மைதான்! பொருள்வளம் இல்லையெனில் அறவோர்க்களித்தல், அந்தணரோம்பல், விருந்தெதிர் கோடல் உள்ளிட்ட எந்த இல்லறக் கடமையையும் ஆற்றவியலாது. எனவே பொருளீட்ட வேண்டியது அவசியமே. ஆயினும், நீங்கள் வேற்று நாட்டுக்குப் பொருளீட்டச் சென்றால் நான் இங்கே எப்படித் தமியளாய் இருப்பது? நானும் உங்களோடு வருகின்றேனே…இருவரும் சேர்ந்தே செல்வோமே செல்வம் திரட்ட” என்றாள்.

    அவள் குழந்தை உள்ளத்தையும், தன்மீது கொண்ட அளவற்ற காதலன்பையும் கண்ட தலைவனின் கண்கள் பனித்தன. “இல்லையம்மா! நான் நம் சிற்றூரையும், அதை அடுத்துள்ள கடலையும் தாண்டி, அப்பாலுள்ள நாட்டுக்குச்சென்று பொருளீட்ட எண்ணியுள்ளேன். பெண்டிரொடு கடல்தாண்டும் வழக்கந்தான் நம்மிடையே இல்லையே! எனவே, சில மாதங்கள் மட்டுமே நீடிக்கவிருக்கும் இப்பிரிவைப் பொறுத்துக்கொள்! நான் அங்கிருந்து அளவற்ற செல்வத்தை ஈட்டிவருவேன்; வளமையைக் கூட்டிவருவேன். அப்புறம் நம் இன்பவாழ்விற்கு எல்லையேது?” என்றான் உவகைபொங்க!

    மதிநுட்பம் மிக்க தலைவி தலைவனின் கருத்தை ஏற்றுக்கொண்டாள். அவனை அன்போடு வழியனுப்பி வைத்தாள். வெறுங்கையோடு சென்றவன் வெறுக்கையோடு (செல்வம்) மீள்வான் எனும் உறுதியான நம்பிக்கையோடு நாட்களை நகர்த்திக்கொண்டிருந்தாள்.

    அவ்வேளையில், தலைவியின் இல்லற வாழ்க்கை எவ்வாறு சென்றுகொண்டிருக்கின்றது என்று அறிந்துகொள்ளும் ஆவலில் தலைவியின் ஆருயிர்த்தோழி அவளைக் காண வந்தாள். ஈருடலும் ஓருயிருமாய் முன்பு வாழ்ந்தவர்கள் அல்லரோ அவர்களிருவரும்! தோழியின் வரவுகண்ட தலைவி அவளை முகனமர்ந்து வரவேற்றாள். தலைவியின் நலத்தைப் பற்றி உசாவிய தோழி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுத் தலைவியை நோக்கி, “தலைவரைக் காணோமே…எங்கு சென்றிருக்கிறார்?” என்று மெல்ல வினவினாள்.

    மென்மையான புன்னகையொன்றை முகத்தில் படரவிட்ட தலைவி, ”அவர் எங்கள் இன்பவாழ்விற்கு அடிப்படையான பொருளைத்தேடி அயல்நாடு சென்றிருக்கின்றார். விரைவில் மீண்டுவிடுவார்” என்றாள் பூரிப்போடு.

    ”அப்படியா?” என்று வியந்த தோழி, ”உங்கள் களவுக் காலத்தில் (தலைவனும் தலைவியும் காதலர்களாயிருந்தபோது) தலைவனின் சிலமணி நேரப் பிரிவைக்கூட நீ தாங்க மாட்டாய்! இப்போதோ தலைவனைப் பிரிந்து சிலமாதங்கள் ஆகியும் வருத்தமின்றி ஆற்றியிருக்கின்றாயே! இஃதெப்படிச் சாத்தியமாயிற்று? அந்த ரகசியத்தை என்னிடந்தான் சொல்லேன்!” எனக் கேட்டுவிட்டுக் குறும்பாய்ச் சிரித்தாள்.

    “அது ஒன்றும் பரம ரகசியமில்லை! தலைவர் எனைப்பிரிந்து அந்நிய நாட்டிற்குச் சென்றால் என்ன? என் நெஞ்சிற்கு எப்போதும் அவர் அணித்தாகத்தான் (அருகில்) இருக்கிறார்; அதுமட்டுமா? அவர் சென்றிருக்கும் நாட்டின் குளிர்ந்தகடலின் அலைகள்தாம் நாள்தவறாது இங்குவந்து (நாரையின் சிறகைப்போல் தாழை மலர்கள் மடல்விரிந்திருக்கும் கடற்கரைச் சோலையின்கண் அமைந்திருக்கும்) நம் சிற்றூரை முத்தமிட்டுச் செல்கின்றனவே! அவ்வலைகளைப் பார்ப்பது எனக்கு அவரைப் பார்ப்பது போலவே இருக்கின்றது!” என்று கூறி மகிழ்ந்தாள்!

    ”அடடா! கேட்கவே உவப்பாக இருக்கின்றதே உன் மொழிகள்! இவ்விளம் வயதிலேயே நீ பெற்றுவிட்ட அறிவுமுதிர்ச்சி என்னை மலைக்கவைக்கிறது! என்று கூறிவிட்டுத் தலைவியை ஆரத்தழுவிக் கொண்டாள் தோழி.

    இத்தகைய வித்தியாசமான தலைவியைப் படைத்துக்காட்டிய குறுந்தொகைப் புலவரின் பெயரும் வித்தியாசமானதே. ஆம், ’செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்’ எனும் பெயரமைந்த அப்புலவரின் இனிய கற்பனையுடன் கூடிய குறுந்தொகைப் பாடல் வருமாறு:

    வீழ்தாழ் தாழை ஊழுறு கொழுமுகை
    குருகுளர் சிறகின் விரிபுதோ டவிழும்
    கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்
    திரைவந்து பெயரும் என்பநத் துறந்து
    நெடுஞ்சேண் நாட்டா ராயினும்
    நெஞ்சிற்கு அணியரோ தண்கடல் நாட்டே.
    (குறுந்: 228)

    ***

    இக்கட்டுரையை வெளியிட்ட தினமணி – தமிழ்மணிக்கு (செப்டம்பர் 6, 2015 இதழ்) என் நன்றி.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 28-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. ராகுல் ரவீந்திரனின் கைவண்ணத்தில் உருவான இந்த அழகிய புகைப்படத்தைப் போட்டிக்குத் தேர்வுசெய்தவர் நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமையின் சார்பில் நன்றி நவில்கின்றேன்.

    lady with leaves

    சிறக்கணித்த பார்வையால் காளையரைச் சிறையிடுகின்ற காரிகையே! இலைகளினூடிருந்து ஊடுருவும் உன் பார்வையின் பொருள்தான் என்ன? கொஞ்சம் என் காதோரம் கிசுகிசுத்துவிட்டுத்தான் போயேன்!

    பெண்ணைக் கண்ட உற்சாகத்தில் விண்ணைமுட்டும் அளவுக்குக் கவிதைகள் வந்து குவிந்துவிட்டன இந்த வாரம்! பெண்ணும் நிலவும் என்றுமே ஆண்களுக்குச் சலிக்காத பாடுபொருள் அல்லவா?!

    இனிக் கவிமழையில் நனைந்து வருவோம் நம் உள்ளம் சிலிர்த்திட!

    காரிகையின் கடைக்கண் பார்வையின் மகிமையைக் கடவூர் அபிராமியோடு ஒப்பிட்டுப் பக்தியோடு விளம்பியிருக்கின்றார் தஞ்சை திரு. வெ. கோபாலன்.

    திருக்கடவூர் அபிராமி
    கடைக்கண் பார்த்தாள்!
    தனத்தோடு கல்வியும்
    தளர்வறியா மனமும்
    தெய்வத்தின் வடிவும்
    வஞ்சமில்லா இனமும்
    நல்லன யாவையும்
    நலத்தோடு தந்தாள்!
    வனத்திடை நிற்கும்
    காரிகைதன் கடைக்கண்கள்
    என்னவெல்லாம் தருமோ?
    அருள்புரிவோர் அனைவருமே
    அன்போடு நோக்குவது
    கடைக்கண்ணால்தான்!

    *****

    விரிவாகக் கவிதையெழுதும் திரு. விஎஸ்கே இம்முறை சுருக்கமான ’ஹைக்கூ’வில், மயக்கும் கருநிற வண்டுகளோடு கூடிய மோகனப் புன்னகையை நமக்குப் புலப்படுத்தியிருக்கிறார்.

    மயக்கும் கருநிற வண்டுகள்
    மோஹனப் புன்னகை
    மங்கிய வசந்தம்!

    *****

    ’அடடா…இதுவல்லவோ மோனலிசா முறுவல்! பெண்ணின் கண்கள் சுட்டால் வீரக்காளையரும் கோழையராய் மாறுவரே!’ என்று ஆண்களில் உளவியலை அழகாய் விளக்கியுள்ளார் திரு. ஜெயபாரதன்.

    அகத்தின் மின்னல்
    ஒளிப்படம்
    பளிச்செனத் தெரியுது
    பாவை
    முகத் திரையில் !
    அது என்ன
    காதல் பார்வையா ?
    கடைக் கண் அளிக்கும்
    விடையா ?
    விழி பேசும் மொழி
    என்ன ?
    மோதல் முன்னகையா ?
    மோனா லிசாவின்
    மோகனப்
    புன்னகையா ?
    கன்னியின் மின்னல்
    புன்னகை
    காயப் படுத்தும்
    காளையின் கல் நெஞ்சை !
    இதயத்தில்
    குற்றாலச் சிற்றருரி
    குதித்தோடும் !
    பெண் சிரித்தால்
    புண் உண்டாக்குவாள் !
    கண்கள் சுட்டால்
    காளையர்
    கோழை யாவார் !…

     *****

    ’மேகத்தில் மறையும் நிலவையொத்து இலைகளில் மறைகிறாயே இளவஞ்சியே!’ என்று கவிதை பாடியுள்ளார் திரு. ரா. பார்த்தசாரதி.

    நளின நடை, அன்னம் போலே
    தெளியும்
    இடை, மின்னல் போலே
    ஆடை
    கொடி, பின்னல் போலே
    மேகத்தினில்
    மறையும், நிலவு போலே
    உனது
    அழகு இலையினில், மறைவது போலே,
    உனது
    ஓரப் பார்வை, காந்தம் போலே
    நீயோ
    ! மாறாத எழிலரசி

    *****

    ’பாவையின் விழிபார்த்து நீ போகவேண்டிய வழிமறந்துவிடாதே மானுடனே!’ என எச்சரிக்கிறார் திரு. நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன் தன் குறுங்கவிதையில்.

    விழியை பார்த்து
    வழியை
    மறந்து விடாதே!

    *****

    மென்கனவில் வந்த மனங்கவர் மெல்லிடையாளை அந்தாதி வார்த்தைகளில் சுந்தரக் கவியாய்த் தீட்டியிருக்கின்றார் திரு. சுந்தர் புருஷோத்தமன்.

    மென்மனப்பூவது
    சொன்னதைக் கேட்டிருக்
    கைவிரல் மண்ணிலே
    நட்டதே நன்விதை!!

    நன்விதை தானமர்
    மென்மணல் மீதினில்
    என்மன மாடவே
    இன்பொடு நீண்டது !
    […]
    எண்ணினேன்
    ! ஏங்கினேன்..!!
    ஏங்கினேன்
    ! தூங்கினேன்!!
    தூங்குமோ என்னவா?!
    தூங்கிடும் கண்ணிலும்
    மெல்லிலை மென்கனா!!

    மென்கனா மெல்லமாய்
    என்துயில் நீக்கிட,
    மின்னலாய் என்செடி
    பூத்ததா? தேடினேன்!

    என்செடி பூத்ததா
    கண்கவர் பூவிது?!
    பெண்மலர் பூவிதைக்
    கண்டதே யில்லையே..?!…

    *****

    ’இலைமறை காய் உங்களுக்குத் தெரியும்…இதோ இலைமறை கன்னியை, சிலையெழிற் சிற்பத்தைக் காணுங்கள்!’ என்று நமக்கு உற்சாகமூட்டுகிறார் திருமிகு. சியாமளா ராஜசேகர்.

    இலைமறை(க்) கன்னியோ இன்பத்தேன் ஊற்றோ
    சிலையெழிற் சிற்பமோ செப்புதலைவி !
    கதைபேசும் கண்களில் காந்தமோ கள்ளோ
    வதைக்கிறாய் நெஞ்சுள் மலர்ந்து .

    *****

    பச்சை மேகங்களுக்கிடையே வந்த பருவநிலவோ? இச்சையூட்டும் வானவில்லின் வடிவமாற்றமோ…இல்லை தோற்றப்பிழையோ? என்று நங்கையைக் கண்டு பொங்கும் மகிழ்வோடு வினாஎழுப்புகிறார் திரு. கொ.வை. அரங்கநாதன்.

    பச்சை மேகங்களுக்கிடையே
    பௌர்ணமி நிலவு
    பவனி வருமா?
    […]
    பூக்குவியல் மீது
    பொன் வண்டிரண்டு
    கண்ணென அமர்ந்ததால்
    கன்னியாய்த் தெரியும்
    காட்சிப் பிழையா?
    இது
    வானவில்லின்
    வடிவ மாற்றமோ
    தோற்றப் பிழையோ…

    *****

    கன்னியினெழில் கண்டு கானகத்தில் ஓலமிடும் உள்ளத்தை நம்மிடம் கூட்டிவந்திருக்கின்றார் திரு(மிகு?). மணிச்சிரல்.

    …உருவத்தைப் பார்க்க முகமொன்றுத் தடுக்கும்
    புருவத்தைப் பார்க்க பார்வையைத் தொடுக்கும்  
    கருவிழியும் பார்க்கும்! கண்ணிமையும் தாக்கும்!
    காயத்தினால் வுள்ளம் கானகத்தில் வொலமிடும்
    சாயத்தினால் வுன்னுதடு மிடம்பார்த்துப் புள்ளியிடும்
    சாய்ந்தவுன் சிரமும் கருமையால் கோலமிடும் 
    இடைவெளிக் குறையும்! நிலவொளி நிறையும்!. 

    *****

    ’நயனங்களால் வியனுலகை வதைக்கின்ற நங்கையின் பார்வை மாவீரரையும் சாய்க்கும் கூர்மையான போர்வாள்!’ என்கிறார் திரு. மெய்யன் நடராஜ்.

    மரங்கொடிக்குள்  மறைந்தலைந்துத்  திரிந்து
    ==
    மடியிரைக்குப் பசித்திருந்துக் கௌவும்
    அரவமென மனத்தவளைப் விழுங்கும்
    ==
    அழகுக்கொடி யாலுயிரும் புழுங்கி
    நரகமெனும் கொடுந்துயராய் வாட்ட
    ==
    நயனங்களால் வதைக்கின்றப் பார்வை
    மரணம்வரை இழுத்தெடுக்கும் கூர்மை
    ==
    மாவீரர் தமைசாய்க்கும் போர்வாள் !

    *****

    ’பெண்ணவளின் மாய சக்தியை, தூய சக்தியைக் காண்பவர் பெறுவர் சக்தி!’ என்று பெண்மையைப் போற்றுகின்றார் திரு. சுரேஜமீ.

    …கண்ணெதிர் தவமாய் நிற்கும்
    காண்பன  உயிராய் நிற்கும்
    கேளிக்கை அல்ல வாழ்க்கை
    கேள்விக்கு பதில்தான் வாழ்வென
    கோரிக்கை வைக்கும் நகர்வு
    கோள்களின்  உச்சம் எட்டும்
    காலமும் தோற்றுப் போகும்
    காதலின் சக்தி முன்னே!

    பெண்ணவள் மாய சக்தி
    கண்ணவள் தூய சக்தி
    காண்பவர்  பெறுவர் சக்தி
    காமத்தை அழிக்கும் சக்தி
    வாழ்க்கையின் பேறு  சக்தி
    வாழ்ந்திட வேண்டும் சக்தி
    […]
    எத்தனை
    இன்பம் வைத்தாள்
    இந்தநல் வாழ்வு செழிக்க
    அத்தனை துன்பமும் விலக
    அவளன்றொ ஆக்கும் சக்தி!
    அன்னவள் போற்றிடும் ஆடவர்
    அகிலத்தில் வெற்றி காண்பர்!!

     *****

    ’கலையெனத் திகழும் நிலாமுகம்; இலைகளினூடே தெரியும் பரவசம்!’ என்று பாவையைக் கண்டு பரவசமாகிறார் திரு. இளவல் ஹரிஹரன்.

    இலைகளினூடே தெரியும்
    பரவசமொன்று
    எனக்கென வைத்தது
    பார்வை விருந்தினை இன்று

    கலையெனத் திகழும்
    நிலாமுகம் இங்கு
    கனவினில் மெள்ள
    உலாவரும் நன்று
    […]
    பெண்மையெனக்
    கண்டோம்
    பெரிதும் பேசுகின்றோம்….
    உண்மையிலே பெண்மையினை
    உயர்வுசெய்ய உறுதி கொள்வோம்!

    *****

    ’உன் கடைக்கண் பார்வை தென்றலாய் என்னைத் தழுவுது; நீபோட்ட கண் விலங்கில் மாட்டித் தவிக்குது மனசு!’ என்று கவினோடு காதல் கவிதை தீட்டியுள்ளார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.                    

    அலையும் மேகங்களுக்குள்ளே
    நகரும் நிலவு போல
    இலை மறை காயாக மறையும்
    இளமையின் ரகசியம் காதல்
    காதல் பூத்த வேளையில்
    நாணம் தோன்றுவது அழகுதான்
    […]
    உன் கடைக்கண் பார்வை
    தென்றலாகஎன்னை தழுவுது
    மல்லிகை கொடியாய்
    என் தோளை சுற்றுது
    உன் கண்ணின் ஈரம் பட்டதும்
    என் மனசெல்லாம துளி விட்டது
    நீ போட்ட கண் விலங்கில்
    மாட்டி தவிக்குது மனசு…

    *****

    ’கண்கள் மட்டுமா? உன் மூக்குக்கூடப் புன்னகைப்பதாய் எனக்குத் தோன்றுகிறதே பெண்ணே!’ என்கிறார் திருமிகு. தமிழ்முகில்.

    நங்கையே !
    உந்தன்
    இதழ் உதிர்க்கும்
    கீற்றுப்
    புன்னகை மட்டும்
    மட்டும்
    உந்தன் அழகிற்கு
    மெருகூட்டவில்லை
    !
    உந்தன்
    இதழுடன்
    உன்னிரு

    கருவண்டு
    விழிகளும்
    ஏன்
    உன் மூக்கு கூட
    புன்னகைக்கிறதே
    !
    பொன்னகைக்கு
    அவசியமிலாது
    புன்னகையே
    உன்
    முகத்திற்கு
    பொலிவூட்ட
    ஆயிரம்
    மின்னலின் ஒளியும்
    உந்தன்
    முகத்தில் பிரகாசிக்கிறதே !

    *****

    ’என் ஆண்மைகூட அழகுதான் என்பதை உன் காதல்மொழிகளால் இயம்பிடு கண்ணே!’ என்றிறைஞ்சும் ஆடவனை நமக்கு அறிமுகப்படுத்துகின்றார் திருமிகு. வேதா இலங்காதிலகம்.

    முகில் மறைக்கும் முழுநிலவாய்
    துகில் மறைக்கும் முகமாய்
    நாணத்தில் சிவக்கும் வதனம்!
    காணாதது, கேட்காததாய் நீ !
    […]
    வா
    அருகே! வந்து
    தா உன் பதிலை!
    பார்வை பேசும் மொழியன்றோ
    சீர் மேவும் காதல்!
    ஒளித்து வைத்தது போதும்!
    அழியா உண்மையை உணர்த்து!
    மௌனம் உடை! பவுருசம்
    சௌந்தரம் என்று காட்டேன்!

    *****

    ’கலியுக இராமாயணத்தைக் கானிடையே கவினுற அரங்கேற்றும் எழிலரசி சீதையே! பெண்மையின் உன்னதத்தை மென்மையாய் உரைத்துவிடு!’ என்று அறிவுறுத்துகிறார் திருமிகு. லட்சுமி.

    அண்ணலும் நோக்கிய 
    அவளும் நோக்கிய
    கலியுக இராமாயணம்
    இங்கு அரங்கேற்றமோ!
    […]
    நவீனக் கலியுகத்துச் சீதையே!
    இரண்டுமுறை ஏகபத்தினிவிரதன்
    சந்தேகப்பட்டதிற்காகவா இப்பிறப்பு!
    […]!
    பெண் ஒன்றும் அழகுப் பதுமையல்ல
    என்றே முழங்கி விடு!
    […]
    பிறருக்காக
    பயந்து வாழும்
    பத்தினியின் மனம் அறியா
    பத்தினி விரதனுக்காக
    இனியொருமுறை தீக்குளிக்க
    அவனையும் சேர்த்து நிறுத்த 
    மனம் உண்டோ!…

    *****

    திறமையான கவிஞர்களின் கற்பனையில் உதித்த கவிதைகள் அத்தனையும் முத்துக்கள்! பாராட்டுக்கள் கவிஞர்களே!

    அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை அடையாளம் கண்டுவருவோம்!

    ’பெண்ணே! பேசிடும் உன் இதழ்களோ பேசவில்லை; மாறாக, பேசாத கண்களோ காதல்மொழி பேசுகின்றன. உன்னை நெருங்கத் துடிக்கிறது என் நெஞ்சம்; உன்னெழில் கண்டு தோற்று விலகிச்செல்கிறது தென்றல்!’ என்று அழகான முரண்தொடர்களோடும் எளிய சொற்களோடும் இலங்குகின்ற கவிதையொன்று கண்டேன்; காதல் கொண்டேன்!

    தென்றலை வென்றவள்…!

    பேசிடும் இதழ்கள் பேசவில்லை
    பூத்தது புன்னகை மவுனங்களே,
    பேசிடாக் கண்கள் பேசிடுமே
    புரிந்தவர் தெரிந்திடும் காதல்மொழி,
    நேசம் கொண்டவர் வரவுகண்டே
    நெருங்கிடத் துடிக்கும் இதயமது,
    வீசும் தென்றலும் இவளழகில்
    விலகிச் சென்றிடும் தனைமறந்தே…!

    இக்கவிதையை இயற்றிய திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

    *****

    கண்ணே! நீ கவிதையோடு நிற்கும் இலைகளில், இல்லாமல்போன இலையுதிர்காலத்து மரம்நான்! என் தனிமைத்துயரம் என்னோடு போகட்டும்! மரங்களினூடே மென்தென்றலாய் மிதந்துசெல்லும் உன்னை வெற்றிகள் சேரட்டும்! எனும் மெல்லிய சோகம் இழையோடும் ஒரு கவிதையும் மனங்கவர்கின்றது.

    நீ கவிதையோடு
    நிற்கும் இலைகளில்
    இல்லாமலே போன
    இலையுதிர் காலத்து
    மரம் நான்….

    பெயர் தெரியாத
    பனி நாளாகி
    முகம் புரியாத
    மூடு மந்திரம் வளர்த்த
    சருகுகளின் நுனி
    இணுங்கலாய் எனது
    தனிமை…..

    […]
    பட்டையாய்
    உரிக்கப்பட்ட பாழும்
    மனதுக்குள்
    கொஞ்சம் கறையான்கள்
    உன் குறுகுறு பார்வை போல….
    […]
    வாசிக்கப்
    படும்
    கவிதையின் வெற்றிட
    கால்தடம்
    என்பது சருகுகளாகிப்
    போன எனக்கு புரியாமலே
    போகட்டும்….

    வாசித்து, கை தட்டு வாங்கி போ….
    மரங்களினூடாக
    ஒரு தென்றலென

    திரு. கவிஜியின் படைப்பில் உருவான, இனிய இக்கவிதையை இவ்வாரத்தின் பாராட்டுக்குரியதாய்க் குறிப்பிடுகின்றேன்.

    கவிஞர்களே! முயற்சிகள் தொடரட்டும்… கவிமுத்துக்கள் சிதறட்டும்!
    வாழ்த்துக்கள் அனைவருக்கும்!

     

     

    Share
  • அறிந்துகொள்வோம் – 15 (சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்)

    -மேகலா இராமமூர்த்தி

    வல்லமை வாசகர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!

     

    நானிலம் போற்றும் நல்லாசிரியர்!

    மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் அன்னை தந்தைக்கு அடுத்த உயரிய இடம் வழங்கப்படுவது குரு என்று போற்றப்படும் ஆசிரியர்களுக்கே.

    ‘ஆசு’ எனப்படும் அறியாமைக் குற்றந்தன்னை மாணாக்கர் மனத்தினின்று இரியச் (விலக) செய்பவரே ’ஆசிரியர்’ ஆவார்.

    கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
    புண்ணுடையர் கல்லா தவர்
    என்பார் தெய்வப் புலவர்.

    எனவே கல்வியெனும் கண்ணைத் திறந்து மாணாக்கரை மாண்புடையோராய் மிளிரச்செய்யும் ஆசிரியப்பணி ஓர் அருட்பணியே. ஆயினும், மாணாக்கரின் மனங்கொள்ளத்தக்க வகையில் கல்வி கற்பிக்கவில்லையாயின் அந்த அருட்பணியானது மருட்சி தருகின்ற மருட்பணியாய் மாறிவிடக்கூடிய அபாயமும் உண்டு.

    அவ்வாறு மருட்சியை மாணாக்கரிடத்து ஏற்படுத்தி அவர்களை வெருண்டோடச் செய்திடாமல், மாணவமணிகள் விருப்பத்தோடு தம்மைச் சூழ்ந்திருக்கும்வகையில் கல்வி கற்பித்த, கற்பிக்கின்ற ஆசிரியப் பெருமக்கள் அன்றும் இன்றும் இருக்கவே செய்கின்றனர். அத்தகைய நல்லாசிரியர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர்தான் சர்வ பள்ளிகளும் இன்று போற்றிக் கொண்டாடும் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள்.

    Radhakrishnanதமிழகத்தில் திருத்தணிக்கு அருகிலுள்ள சர்வபள்ளி எனும் கிராமத்தில் தெலுங்கு பிராமண வகுப்பைச் சேர்ந்த வீராசாமி மற்றும் சீதம்மா இணையருக்கு மகனாய் 1888-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் பிறந்தார் இராதாகிருஷ்ணன். பூமகளின் (திருமகள்) பார்வைபடாத ஏழ்மையான நிலையில் அவர் குடும்பம் இருந்தபோதும், நாமகள் அங்கே கொலுவீற்றிருக்கத் தயங்கவில்லை. ஆம்! கலைவாணியின் கருணையை முற்றாய்ப் பெற்றிருந்த இராதாகிருஷ்ணன், தன்னுடைய அபார அறிவுக்கூர்மையாலும் அயரா உழைப்பாலும் கல்விக்கூடங்களில் அரசாங்க உதவித்தொகையைப் பெற்றுச் சிறப்பாய்க் கல்விபயின்று வந்தார்.

    1906-ஆம் ஆண்டு, சென்னை கிறித்தவக் கல்லூரியில் தன்னுடைய இளங்கலைப் படிப்பைத் தொடங்கிய இராதாகிருஷ்ணன், எதிர்பாராத விதமாகவே தத்துவத்தை விருப்பப்பாடமாக எடுத்திருந்தார். (He studied Philosophy by chance rather than choice). மேற்கத்தியத் தத்துவவியலாளர்களான பிளேட்டோ, அரிஸ்டாட்டில், ஹெகல், ஸ்பென்ஸர், காந்த் போன்றோரின் சிந்தனைகளையெல்லாம் அறிந்துகொள்ளக்கூடிய நல்வாய்ப்பை அவருடைய கல்லூரிக்கல்வி அவருக்களித்தது. இவையெல்லாம் தத்துவத்துறையின்மீது அளவிறந்த காதலை அவருள் வளர்த்ததால் முதுகலைப் படிப்பையும் தத்துவத்துறையிலேயே தொடர்ந்தார் அப்பெருமகனார்.

    தன்னுடைய முதுகலை ஆய்வேட்டை(Thesis) “The Ethics of the Vedanta and its Metaphysical Presuppositions” (வேதாந்தக் கோட்பாடுகளும் அவை சார்ந்த முன்முடிவுத் தீர்மானங்களும்) என்ற தலைப்பில் அவர் செய்திருந்தார். வேதாந்தத்தில், வரையறுக்கப்பட்ட கோட்பாடுகள் ஏதுமில்லை என்ற (மேற்கத்திய கிறித்தவ மதத்தினரின்) குற்றச்சாட்டுகளுக்குப் பதில் கூறுமுகமாகவே இந்தஆய்வினை அவர் செய்திருந்தார். எனினும் தன் ஆய்வேடு குறித்துத் தன்னுடைய தத்துவத்துறைப் பேராசிரியர் ஆல்பிரட் ஜார்ஜ் ஹாக் (Dr. Alfred George Hogg) என்ன சொல்வாரோ என்ற அச்சமும் அவரை உள்ளூர அலைக்கழித்தது.

    ஆனால் சற்றும் எதிர்பாராவிதமாய் இராதாகிருஷ்ணனின் ஆய்வேட்டையும் அதில் சொல்லப்பட்டிருந்த கருத்துக்களையும் ”வெகு அருமை” என்று பாராட்டியிருக்கின்றார் பேராசிரியர் ஹாக். பேராசிரியரின் நன்மதிப்பைப் பெற்ற அந்த ஆய்வேடு விரைவில் நூலாகவும் வெளியீடு கண்டது.

    கல்லூரிப் படிப்பை வெற்றிகரமாய் முடித்த இராதாகிருஷ்ணன், 1909-ஆம் ஆண்டு சென்னை பிரசிடென்சி கல்லூரியில் (Madras Presidency College) தத்துவத்துறை விரிவுரையாளராய்ப் பணியில் சேர்ந்தார். சில ஆண்டுகளுக்குப்பின் மைசூர் மகாராஜா கல்லூரியில் (Maharaja’s College, Mysore) தத்துவத்துறைப் பேராசிரியராய்ப் பதவியேற்றார். தன்னுடைய கம்பீரத் தோற்றத்தாலும், கற்பித்தல் திறனாலும், கனிவான அணுகுமுறையாலும் மாணாக்கர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார் இராதாகிருஷ்ணன். நண்பனாய், நல்லாசிரியனாய், வழிகாட்டியாய் (friend, philosopher and guide) மாணாக்கர்களுக்குத் திகழ்ந்த அவருடைய புகழ் திக்கெட்டும் பரவியது.

    இந்தியாவிலுள்ள எல்லாப் பல்கலைக்கழகங்களும் அவரைப் பணியமர்த்த விரும்பிப் போட்டிபோட்டுக்கொண்டு அழைத்தன. ஆனால் அவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பணியாற்ற விரும்பினார். கல்கத்தாவிற்குத் தம்முடைய பேராசிரியர் புறப்படுகிறார் என்பதையறிந்து, மைசூர் மகாராஜா கல்லூரியே அவரை வழியனுப்பத் திரண்டுநின்றது. அச்சமயத்தில் அவருடைய மாணாக்கர்கள் செய்தசெயல் அனைவரையும் வியப்பின் உச்சிக்கே கொண்டுசென்றது.

    அது என்ன தெரியுமா? கல்கத்தா செல்வதற்காகத் தொடர்வண்டி நிலையம் செல்லவிருந்த பேராசிரியர் இராதாகிருஷ்ணனுக்குக் குதிரை வண்டியொன்று ஏற்பாடாகியிருந்தது. தம் பேராசிரியர்மீது அளவுகடந்த அன்பும் மதிப்பும் கொண்டிருந்த மாணாக்கர்கள் குதிரை வண்டியிலிருந்த குதிரைகளை அவிழ்த்துவிட்டுத் தாமே குதிரைகளாகி(!) அவ்வண்டியைத் தொடர்வண்டி நிலையத்திற்கு இழுத்துச் சென்றனராம். இக்காட்சியைக் கண்ட பொதுமக்கள் அதிசயித்து நின்றிருக்க, இராதாகிருஷ்ணனோ மாணாக்கர்களின் அன்பைக்கண்டு நெகிழ்ந்தநெஞ்சினராய்க் கைகூப்பி விடைபெற்றாராம்.

    கல்கத்தா பல்கலைக்கழகத்திலும் தன் நாவன்மையால் புகழ்க்கொடி நாட்டினார் இராதாகிருஷ்ணன். பேராசிரியராய்ப் பணியாற்றிய காலத்திலேயே எழுத்துத் துறையிலும் முத்திரை பதித்திருந்தார் அந்தப் பேரறிவாளர். 1914 தொடங்கி 1920க்கு இடைப்பட்ட காலத்தில் The Quest, Journal of Philosophy, International Journal of Ethics, The monist, Mind போன்ற உலகத்தரம் வாய்ந்த பல பத்திரிகைகளில், இந்தியச் சமயங்கள், அத்வைத வேதாந்தம், இந்தியச் சமயங்களும் மேற்குலகச் சமயங்களும் ஓர் ஒப்பீடு எனப் பலதரப்பட்ட தலைப்புகளில் தத்துவக் கட்டுரைகள் எழுதி உலக வாசகர்களின் கவனத்தையும், பாராட்டையும் பெற்றார் இராதாகிருஷ்ணன்.

    வங்கத்துக் கவிச்சிங்கம் தாகூரின் சிந்தனைகளில் பெரிதும் ஈர்ப்புடையவர் இராதாகிருஷ்ணன். கிழக்கு மேற்கு எனும் பேதமற்றனவாய் உலகனைத்திற்கும் பொதுவானவை தாகூரின் செழுமையான சிந்தனைகள் (நம் திருக்குறள் போல்!) எனும் எண்ணம் கொண்டிருந்த அவர், ‘வங்கக்கவியின் கருத்துக்களில்தான் இந்தியாவின் ஆன்மா கண்ணியமாய் வெளிப்படுகின்றது’ (Tagore’s philosophy was the genuine manifestation of the Indian spirit) என்று பகன்றார். அவ்வடிப்படையில், தாகூரின் தத்துவங்களை ஆய்ந்து வெளிப்படுத்துவதாகவே தன் முதனூலை அமைத்துக்கொண்டார் இராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

    The Philosophy of Rabindranath Tagore’ எனும் அந்த அரியநூலைப் படித்துவியந்த தாகூர், “என்னுடன் ​நேரடியாகப் பழகாத​போதினும் என்னு​டைய நூல்க​ளைப் படித்​தே என் எண்ணங்களை நன்கு உணர்ந்துள்ளீர்கள்! ​ உங்கள் ​பேரறிவு ​போற்றுதலுக்குரியது; உங்க​ளைப்​போல் ​ இவ்வளவு தெளிவாக என்னை உணர்ந்தவர் எவருமில்லை!” என்று இராதாகிருஷ்ணனைப் போற்றிப் புகழ்ந்திருக்கின்றார்.

    புணர்ச்சி பழகுதல் வேண்டாம் உணர்ச்சிதான்
    நட்பாம் கிழமை தரும்
    எனும் வான்புகழ் வள்ளுவம் ஈண்டு நம் நினைவிற்கு வருகின்றது.

    மடைதிறந்த வெள்ளம்போல் ஆங்கிலத்தில் உரையாற்றுவதில் வல்லவர் இராதாகிருஷ்ணன். அவருடைய சொல்லாற்றலின் சிறப்பு அன்னைபூமியைக் கடந்து அயல்நாடுகளுக்கும் பரவிற்று. ஆதலால், ‘பிரிட்டிஷ் அகாதெமி’ இந்துமதத் தத்துவங்கள் குறித்துப்பேச அவருக்கு அழைப்புவிடுத்தது. இந்த அகாதெமியில் பேசுவதற்கு ஆசியாக் கண்டத்திலிருந்து முதன்முதலில் அழைக்கப்பட்டவர் இராதாகிருஷ்ணனே ஆவார்.

    தொடர்ந்து, இங்கிலாந்து அமெரிக்கா போன்ற பல நாடுகளிலும் சொற்பொழிவாற்றிய தத்துவமேதை இராதாகிருஷ்ணன், தனது பொழி​வை இந்திய விடுத​லைக்கான ஓர் ஆயுதமாகவே பயன்படுத்தினார் எனலாம். மேற்கத்தியச் சிந்தனையாளர்களின் அனைத்துக் கருத்துக்களும் நம் இந்தியத் தத்துவங்களின் எதிரொலியாகவே உள்ளன என்ற அவர், இந்தியத் தத்துவங்களை மொழிபெயர்த்தால் அவை மேற்கத்தியச் சிந்தனைகளை விஞ்சிவிடும் ஆளுமையும் கருத்துச்செறிவும் உடையவை என்றுரைத்தார். இந்தியத் தத்துவங்களில் சாரமில்லை என்று நகையாடிய மேல்நாட்டினரின் எண்ணத்தை மாற்றி, உலக அரங்கில் இந்தியத் தத்துவங்களுக்கும் சமயங்களுக்கும் அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுத்தந்தவர் சர்வபள்ளியாரே!

    இராதாகிருஷ்ணனின் அயல்நாட்டுப் பயணங்கள், பலநாட்டுத் தலைவர்களையும் சந்தித்து நட்புபாராட்டக்கூடிய நல்வாய்ப்பை அவருக்கு நல்கின. ஒருமுறை இங்கிலாந்தின் மேனாள் பிரதமமந்திரியும், சிறந்த இராஜதந்திரியுமான வின்ஸ்டன் சர்ச்சில் இராதாகிருஷ்ண​னை ஓர் விருந்துக்கு அ​ழைத்திருந்தார். அவரது அ​ழைப்​பை ஏற்று விருந்துக்குச் ​சென்ற இராதாகிருஷ்ணன் அங்கே தம் ​கைகளால் சாப்பிடத் ​தொடங்கியதைக் கண்ட சர்ச்சில், “இந்தாருங்கள் ​டேபிள் ஸ்பூன்! ​கைகளால் சாப்பிடுவ​தைவிட ஸ்பூன் ​வைத்துச் சாப்பிடுவதுதான் சுத்தமானது; இந்தியர்களுக்கு இந்தச் சுத்தம் ​தெரியாமல்தான் ​கைகளால் சாப்பிடுகிறார்கள்; நாங்கள் சுத்தம்பற்றி நன்கு ​அறிந்தவர்கள்! அதனால்தான் ஸ்பூன் ​வைத்துச் சாப்பிடுகி​றோம்” என்றிருக்கிறார்.

    இதைக் ​கேட்ட இராதாகிருஷ்ணன் முறுவலித்தபடி, “இல்​லை சர்ச்சில்! ஸ்பூன் ​வைத்துச் சாப்பிடுவ​தைவிடவும் சுத்தமானது ​கைகளால் சாப்பிடுவதே; ஏ​னெனில் நமது ​கைக​ளை ​வைத்து ​வேறுயாரும் சாப்பிடமுடியாது; ஆனால் நமது ஸ்பூ​னை ​வைத்து மற்றவர்கள் சாப்பிட முடியு​மே? அதனால்தான் இந்தியர்கள் ​கைகளால் சாப்பிடுகிறார்கள்” என்றாராம். அசடுவழிந்த சர்ச்சில், பதிலேதும் ​பேசாமல் தனது ​பேச்சிற்கு இராதாகிருஷ்ணனிடம் வருத்தம் ​தெரிவித்தாராம்.

    மதிநுட்பம் மிகுந்தவரான டாக்டர் இராதாகிருஷ்ணன், கல்வித்துறையில் பல உயர்பதவிகளை வகித்தவர். 1931-ஆம் ஆண்டு ஆந்திரப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939-ஆம் ஆண்டு மதன்மோகன் மாளவியாவின் (இவர்தான் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர்) விருப்பத்திற்கிணங்க பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராய்ப் பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் பல அரியபதவிகள் அவரை அணிசெய்தன. அனைத்திற்கும் மகுடம் வைத்ததுபோல் 1952-ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவராய் இராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    1954-ஆம் ஆண்டு, இந்திய அரசு அவருக்கு ‘பாரத ரத்னா’ என்ற உயரிய விருதினை வழங்கிச் சிறப்பித்தது. இரண்டுமுறை குடியரசுத் ​துணைத்தலைவராய்ப் பணியாற்றியபின், 1962-ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவராய் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    டாக்டர் இராதாகிருஷ்ணன் குடியரசுத் த​லைவராயிருந்த​போது, அவருடைய பிறந்தநாளை விமரிசையாய்க் ​​கொண்டாட ஏற்பாடுகள் நடந்தன. அதையறிந்த அவர், தான் முதன்முதலில் செய்த அறப்பணியான ஆசிரியப் பணியைப் பெருமைப்படுத்தும் வகையில் தன் பிறந்தநாளை ’ஆசிரியர் தினமாக’க் கொண்டாட விரும்பினார். அவர் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் அவ்வாண்டுமுதல் (1962) அன்னாரின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

    மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து தன் அசாதாரண அறிவுத்திறத்தாலும் ஓய்வில்லா உழைப்பாலும் பல சிகரங்களைத்தொட்ட உன்னத மனிதர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன். பெரும்பதவிகளில் இருந்தபோதும், ‘போதும்’ என்ற நிறைவோடு எளிமையாய் வாழ்ந்த ஏந்தல் அவர். அன்பால் மாணவர்களையும், பண்பால் மக்களையும், நாநலத்தால் உலகத் தலைவர்களையும் தன்பால் ஈர்த்தவர்.

    இவ்வாறு பல்கேள்வித் துறைபோகிய நல்லாசிரியராய்த் திகழ்ந்து, இந்தியத் தத்துவங்களின் மேன்மையை மேற்குலகுக்கு உணர்த்திய சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறப்பால் நம் தாய்த்திருநாடு சிறப்படைந்தது. சான்றோர்கள் போற்றிய அச்சான்றோரை நாமும் போற்றுவோம். அவர்வழி நடப்போம்!

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்த தளங்கள்:

    https://en.wikipedia.org/wiki/Sarvepalli_Radhakrishnan

    http://www.iep.utm.edu/radhakri/

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 27-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    இவ்வாரக் கவிதைப்போட்டிக்கான ஒளிஓவியத்துக்குச் சொந்தக்காரர் திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணன். இதனைப் போட்டிக்கு உகந்ததெனத் தேர்ந்தெடுத்துத் தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் வல்லமையின் நன்றி!

    open gate

    திறந்திருக்கும் கதவு; சிதறியிருக்கும் காலணிகள்; அவற்றினருகே விழுந்திருக்கும் செய்தித்தாள்; இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்தபடி வீற்றிருக்கும் நாற்காலி என…இப்புகைப்படம் வகைப்படுத்திக் காட்டும் பொருள்கள், ”இது எந்த இடம்? இங்கிருப்பவர்கள் யார்?” எனப் பற்பல வினாக்களை நம்முள் விதைக்கின்றன.

    விடைபகரும் பொறுப்பை நம் கவிஞர் பெருமக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டபடியால் அவர்களின் எண்ணவோட்டங்களை நோட்டமிடும் வேலை மட்டுமே நமது!

    இதோ…கவிஞர்கள் எழுதிக் குவித்திருக்கும் கவிதைகளினூடே பயணிப்போம் வாருங்கள்!

    மரணத்திற்குப்பின் செய்வதறியாமல் கிடக்கும் ’இருத்தலின் நீட்சியே’ நீங்கள் படத்தில் காண்பவை என்று பொருத்தமாய் விளக்கமளிக்கின்றார் திரு. கவிஜி தன் கவிதையில்.

    எனக்குப் பின்னாலும்
    நானே இருக்கிறேன்
    இருக்கும் இருத்தலுக்குப்
    பின்னும்
    நானே என்பதாக,
    எனக்கு முன்னாலும்
    ஒரு பின்னால் இருப்பதாக…..-
    ஆக
    மொத்தத்தில்
    இருக்கிறேன்..

    மரண நிகழ்வுக்கு
    பிந்தைய முதல் சில துளிகளில்
    செய்வதறியாமல்
    கிடக்கும் எல்லாமும்
    இப்படித்தான்…..
    இருக்கிறது….
    இருந்தலின் நீட்சியாக

    *****

    நாற்காலியின் வெறுமையும், தரையில் படிந்த கறையும் அவ்விடத்தில் நிகழ்ந்த ஏதோவோர் அவலத்தை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன எனும் திரு. தமிழ்த்தேனீ, இதற்கெல்லாம் காரணம் அந்த ’ஒற்றைச்சொல்லே’ என்கிறார். அந்த ஒற்றைச்சொல் யாதாயிருக்கும் எனும் குறுகுறுப்பு நம்முள்ளும் எழுகிறது!

    ஜன்னலில் துணி
    திறந்த கதவு
    வரவேற்பு  மிதியடி
    தயாராய் செய்தித்தாள்
    உதிர்ந்த காலணி
    வயோதிகம் தாங்காத நாற்காலி

    கறை படிந்த  தரை
    திறந்த கதவு
    யாரும் வர
    விரும்பாத அறை
    கனத்த நெஞ்சம்
    காரணம்  அந்த
    ஒற்றைச் சொல்

    *****

    ஒரு வீட்டின் நிகழ்வுகளை அங்கிருக்கும் ’நாற்காலி’யின் பார்வையில் வித்தியாசமாய் விவரித்திருக்கின்றார் திரு. விஎஸ்கே.

    யார்முதலில் வருவாரென எனக்கின்னும் தெரியாது
    கார்கால மாலையிலே கவினிருட்டுப் படரும்வேளை
    மகள்முதலில் அலட்சியமாய்க் காலணியைக் கழற்றியப்பின்
    கதவிங்கே திறந்தவளும் வீட்டினுள்ளே சென்றடைந்தாள்
    […]
    யாருடனோ
    கலகலப்பாய்ப் பேசுகின்ற குரல்மட்டும்
    எனக்கிங்கேத் தெளிவாகத் திகட்டாமற் கேட்டிருந்தேன்
    கல்லூரித் தோழனவன் கண்ணனெனப் புரிந்துகொண்டேன்
    நாடோறும் தவறாது நிகழ்கின்ற சேதியிது!

    யாரங்கே வருகின்றார் எனச்சற்று நோக்கினேன்
    பணிமுடித்து களைப்பாகத் தாயவளும் வந்துநின்றுப்
    பொறுப்பாகக் காலணியைப் பொருத்தமாகக் கழற்றியவள்
    உள்ளெழுந்தச் சிரிப்பொலியைக் கேட்டவுடன் விரைந்திட்டாள்.

    கையிருந்தப் பத்திரிகையை வாசலிலே விட்டெறிந்து
    உள்விரைந்த தாயந்தப் பெண்ணுடனே கோபமாகப்
    பேசுகின்ற சத்தத்தை நான்மட்டும் கேட்டிருந்தேன்
    இப்படித்தான் நிகழுமென நானிங்கு எதிர்பார்த்தேன்!

    அலைபேசி கையெடுத்து அவசரமாய்க் கணவரையும்
    வரச்சொன்ன சேதிகேட்டு மௌனமாகப் புன்னகைத்தேன்
    அப்பாவி அவர்வந்து ஆவதென்ன? செய்வதென்ன? ‌
    எப்போதும் பேசாத அவரென்ன செய்யவியலும்!
    […]
    யாரேனும் இதிலொருவர் போதுமிது எனநினைத்து
    போரிதனை முடித்தபின்பு களைத்துப்போய் வெளிவருவார்
    கண்ணெதிரே தெரிகின்ற என்மீது அவரமரும்
    நேரமிது என்றுணர்ந்து சலனமின்றி இருக்கின்றேன்!

    *****

    ’புறக்கணிக்கப்படும் முதுமைக்கான அமர்விடமோ இந்த நாற்காலி? இளமையே எண்ணிப்பார்! முதுமை உனக்கும் ’நல்வரவு’ கூறும்நாள் வெகுதொலைவில் இல்லை’ என்கிறார் திரு. கொ.வை. அரங்கநாதன்.

    ஒற்றை நாற்காலியில்
    உருக்குலைந்த மனிதன்
    நல்வரவு கூறி
    உள்ளே சென்று
    கால் நீட்டி
    கண் மூடியபோது
    காலணிகளைக் கழற்றிவிட்டு
    போலிக் கண்ணீருடன்
    உள்ளேப் புகுந்தவர்கள்
    கடன்காரர்கள் மட்டும்தானா?

    அவன்
    உழைப்பில் விளந்தவற்றை
    உரிமையுடன் பங்கிட்டு
    வயதால் அவன் வாடியபோது
    வாசல் ஓரத்தில்
    ஒற்றை நாற்காலியில்
    உட்காரவைத்த
    உற்றமும் சுற்றமும் கூட!

    புறக்கணிக்கப்படும் முதுமை
    நாளை நமக்கும் நேரலாம்
    நினைத்துப் பார்க்க வேண்டாமா?

    *****

    ‘ஆங்கில வரவேற்போடு உள்ளே நிகழ்வதோ தமிழ்மொழி மாநாடு!’ என்று எள்ளல் சுவையுடன் துள்ளல் கவிதை வடித்திருக்கிறார் திரு. மெய்யன் நடராஜ்.

    உள்ளே நடக்கிறது தமிழ்மொழி மாநாடு
    பங்குபற்றிக் கொண்டிருக்கிறார்கள் 
    எழுத்துக்கூட்டி WELCOME  
    வாசிக்கத் தெரிந்தவர்கள்!

    *****

    சிம்மாசன மோகம் கொண்டலையும் மானிடனே… இது சரியா? மாண்டபின்பு கூடவருமோ இந்த அரியாசனம்? எனக் கேட்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    பாதுகை தேடி ஓடுவதும்,
    பதவி என்பதாம் சிம்மாசனம்
    மீதினிலே ஆசை அதிகமாகி
    மிதவை போலே அலைவதுடன்,
    ஏதோ ஒன்றில் ஆசைவைத்தே
    எங்கும் அலையும் மானிடனே,
    மீதி யிருக்கும் உயிரதுபோய்
    மாண்டால் எல்லாம் காலிதானே…!

    *****

    புகைப்படத்தில் நம் பார்வைக்குத் தெரிபவையெல்லாம் புலர்காலைப் பொழுதின் அடையாளச் சின்னங்களே! என்று பரவசமாகிறார் திருமிகு. தமிழ்முகில்.

    இருளாடை மெல்ல விலக்கி
    ஒளிதனை சூட்டிக் கொண்டு
    புது நாளொன்றும் பிறக்கிறது !
    விடியலை வரவேற்க
    வாசலும் இங்கே திறந்திருக்க
    வரவேற்பு மிதியடியும்
    அழகாய் கண்சிமிட்ட
    அன்றைய முக்கிய நிகழ்வுகளை
    சுமந்து காத்திருக்கும் செய்தித் தாளும்
    ஆசனமும் தயாராய் தான் காத்திருக்க
    மானுடரை சுமந்து செல்லும்
    பாதுகைகளும் எப்போதுமே
    தயாரான நிலையில் இருக்க
    இனிமையும் இன்பமும் நிறைந்த
    நாளொன்றின் அடையாளமாய்
    புலரும் பொழுது !

    *****

    அழகுக் கவிதைகளை அமுதத் தமிழினில் அள்ளி வழங்கியிருக்கும் கவித் தோழர்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்!

    இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைத் தேர்ந்தெடுக்க வாருங்கள் என்னோடு!

    ’நேற்றைய செய்தித்தாளாய் மடித்து வீசப்பட்ட வாழ்க்கை; அமர்வதற்கு மனிதர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வெற்றிருக்கை என…(மானுடனின்) மரணத்திற்கு நல்வரவுகூறிக் காத்திருக்கும் மரணவீடு இது!’ என்று மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கும் மரணத்தைப் புதிய கோணத்தில் நமக்கு அறிமுகப்படுத்தும் ஒரு கவிதை என்னுள் சில அதிர்வுகளை ஏற்படுத்தியது.

    அக்கவிதை…

    இங்கே முடிகிறது
    பாதையும் பாதமும்விட்டு என்
    பாதுகை பிரியும்  பயணம்
     
    பயணமோ தொடங்குகிறது
    இங்கிருந்து புதிதாக 

    காலம்வந்து இடம்பெயர்த்துவிட்டது
    என் இருப்பை
    காத்திருப்பின் இருக்கையிலிருந்து.
    யாருக்காகவோ காத்திருக்கவும் தொடங்கிவிட்டது
    இந்த நுண்கணத்து வெற்றிருக்கை 

    பாதச்சுமையாகவோ
    பாதைத்துணையாகவோ இருந்த
    அடையாளங்கள் அனைத்தும்
    அறுந்து வீழ்கின்றன
    ஆண் பெண்ணென்ற பேதமும்
    அர்த்தமற்று களையும் இந்த புள்ளியில் 

    மனதின் நுனியாலும்
    மடமையின் வேராலும்
    வாழ்ந்துமுடித்த காலமனைத்தும்
    மடித்து வீசப்படுகிறது
    நேற்றைய செய்தித்தாளென 

    அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கிறது
    எனக்கான அழைப்பு வாசகம்
    திறந்தபடியே காத்திருக்கிறதுநான்
    எப்படியும் திரும்பிவிடுவேன் என்பதற்காக
    மரணத்தின் வீடு.

    நேர்த்தியான சொற்கட்டோடு இக்கவிதையை யாத்துள்ள திரு. சோழகக்கொண்டலை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன். பாராட்டுக்கள் கவிஞரே!

    *****

    அந்தகனான தனக்குச் சோதரியாய் மட்டுமல்லாது புறக்கண்ணாகவும் விளங்கிய பெண்ணொருத்தியின் மரணத்தைத் தாளாது புலம்பும் ஓர் மனிதனின் சோகத்தைப் பதிவுசெய்துள்ள மற்றொரு கவிதையும் நம் மனத்தைக் கனக்க வைக்கின்றது.

    புறக்கண் இல்லா
    எந்தன் இதயம் நோக்க
    கிண்கிணிநாதப்பேச்சு
    மெல்லிசை தமிழே
    எங்கே சென்றாய்?
    வாசித்துக் காட்டிய
    மாதுளை முத்து இதழ்கள்
    சிந்திய தமிழ் கேட்க
    அகக்கண் மட்டுமே
    அருளிய ஆண்டவனுக்கு
    ஏனிந்த ஓரவஞ்சனை!
    வானவில்லாய் வளைந்து
    வான்முகிலில் வர்ணஜாலங்கள்
    உரைத்திட்ட செந்தமிழழகி
    அந்தகனை விட்டு ஏன் மறைந்தாய்?
    […]
    இன்னொரு
    யுகப் புரட்சியிலே
    உனக்குமட்டும் சகோதரனாய்
    இருந்திடவே கடவுளிடம்
    யாசிக்கின்றேன்!
    […]
    வாசிக்க யாருமற்ற செய்தித்தாள்
    உனது புரட்டலுக்காக காத்திருந்து 
    கண் சோர்ந்துவிட்டது!
    நீ அமர்ந்த நாற்காலி
    உனது வருகைக்காக காத்திருக்கிறது!

    திருமிகு. லட்சுமி எழுதிய இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய்க் குறிப்பிட விரும்புகின்றேன்.

    ஆர்வத்தோடு போட்டியில் பங்கேற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் என் நன்றியும் பாராட்டும் உரித்தாகுக!

     

    Share
  • அறிந்துகொள்வோம் -14 (கார்ல் மார்க்ஸ்)

    -மேகலா இராமமூர்த்தி

    பாட்டாளி வர்க்கத்தின் பிதாமகன்!

    பரந்துவிரிந்த இப்பூவுலகில் வாழும் மாந்தர்கள் பலகோடி; அவர்களில், அல்லற்பட்டு ஆற்றாது அழுதுநிற்கும் மக்களின் எண்ணிக்கைக்கும் குறைவில்லை. ஆனால் அவர்களின் துயர்துடைக்க, அவர்தம் வாழ்வில் ஒளிதுலங்கக் கரம் நீட்டுவோர், வழிகாட்டுவோர் எத்தனை பேருளர் என்று ஆராய்ந்துபார்த்தால் ’வெகு சிலரே’ கிட்டுவர். அத்தகைய வெகுசிலரில் ஒருவராய், தொழிலாளர்களின் தோழராய், பாட்டாளிகளின் கூட்டாளியாய்த் திகழ்ந்தவர்தான் வரலாற்று நாயகர் காரல் மார்க்ஸ்!

    marxஜெர்மனியின் ரைன்லாந்தில் (Rhine Province or Rhineland) பிறந்த கார்ல் மார்க்ஸ், அடிப்படையில் யூதமதத்தைச் சேர்ந்தவர். அவருடைய பாட்டனார்கள் இருவருமே யூதமதக் கொள்கைகளைக் கற்றுத் துறைபோனவர்களாகவும் அக்கொள்கைகளைப் பரப்புரை செய்யும் மதபோதகர்களாகவும் விளங்கியவர்கள் (both of his grandfathers were rabbis). ஆனால் மார்க்ஸின் தந்தையும், வழக்கறிஞருமான ஹெய்ன்ரிக் மார்க்ஸ் (Heinrich Marx), கார்ல் மார்க்ஸ் குழந்தையாக இருந்தபோதே யூத மதத்திலிருந்து விலகிக் கிறித்தவ மதத்தைத் தழுவியிருக்கின்றார்.

    தத்துவம், இலக்கியம் முதலியவற்றில் பெருவிருப்பு கொண்டிருந்த இளைஞர் மார்க்ஸ், ஜெர்மனியின் பான் பல்கலைக்கழகத்தில் (University of Bonn) தத்துவத்துறை மாணாக்கராகச் சேர விழைந்தபோதும் தந்தையின் கட்டாயம் காரணமாய்ச் சட்டம் படிக்கவேண்டியதாயிற்று. பான் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடங்கினாலும் அங்கு அதனைத் தொடர முடியாதநிலை ஏற்பட்டதால் பெர்லின் பல்கலைக்கழகத்தில் தன் சட்டப்படிப்பைத் தொடர்ந்தார் மார்க்ஸ். கூடவே தத்துவமும் படித்து முனைவர் பட்டம் பெற்றார். பல்கலைக்கழகக் கல்விக்குப் பின்னர் சில காலம் பல்கலைக்கழக ஆசானாகவும் பத்திரிகையாளராகவும் அவர் பணிபுரிந்திருக்கின்றார் என்று தெரியவருகின்றது.

    வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் பேசும் குணம்பெற்ற மார்க்ஸ், மெத்தப் படித்த மேதையாக மட்டுமின்றிச் சிறந்த புரட்சியாளராகவும் திகழ்ந்தார். மக்கள், உலகத்தைப் பார்க்கும் அடிப்படைப் பார்வையிலேயே மாற்றத்தைக் கொணரவேண்டும் என்று விரும்பினார் அவர். சமூகம் என்ற அமைப்பில் மக்களின் மதம்சார்ந்த நம்பிக்கைகள் வலுவாகவும், வாழ்வோடு பிரிக்கமுடியாத கூறுகளாயும் கலந்திருப்பதனால், மதம் குறித்த தம் எண்ணவோட்டத்தையும் தம் நூல்களில் அவர் மறவாது குறித்திருக்கின்றார்.

    பொருள்முதல் வாதத்தில் (materialism) நம்பிக்கை கொண்ட கார்ல் மார்க்ஸ், இவ்வுலகம் இயற்கையிலுள்ள பருப்பொருள்களால் (matter) ஆனதேயொழியத் தெய்வசக்தி எதனாலும் படைக்கப்படவில்லை என்று கூறி, கருத்துமுதல் வாதத்திற்கு (Spiritualism) எதிரான தம் கருத்தைப் பதிவுசெய்திருக்கின்றார். மதம் என்பது மனிதர்களின் வேதனைகளுக்குத் தற்காலிகத் தீர்வைத் தருகின்ற ஓர் மாயத்தோற்றமே; இவ்வுலகில் தான்படும் துன்பங்கள் யாவும் மேலுலகம் சென்றதும் நீங்கிவிடும் என்றொரு (உண்மையற்ற) நம்பிக்கையை, பரவசத்தை மனிதனுக்குள் விதைக்கும் மத நூல்கள் போதை மருந்தோடு ஒப்பிடத் தகுந்தவை என்று கூறியுள்ளார். இவற்றையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது மார்க்ஸ் ஓர் கடவுள் மறுப்புக் கொள்கையாளராகவே காட்சி தருகின்றார்.

    மார்க்ஸின் சமுதாய, அரசியல் சிந்தனைகள் பலவும், ’கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை’ (Communist Manifesto), மற்றும் மூலதனம் (Das Kapital) ஆகிய அவருடைய புகழ்பெற்ற நூல்களில் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன.

    ’மானுடர்கள் அனைவரும் இப்புவியின் வளங்கள்மேல் சமமான உரிமை கொண்டவர்களே!’ என்று முழக்கமிட்ட மார்க்ஸ், ’ஒடுக்கப்பட்ட மக்கள் மறுக்கப்பட்ட தம் உரிமைகளுக்காக ஒருங்கிணைந்து போராடவேண்டும்!’ என்று அறைகூவல் விடுத்தார். ஆண்டான் அடிமையற்ற – வர்க்கபேதமற்ற சமூகம் ஒருநாள் அமையும் – அமைய வேண்டும் என்பதே அவரின் கனவு. அக்கனவை மெய்ப்பிக்கும் வகையிலும், அதற்குத் தொழிலாளர்களைத் தயார்ப்படுத்தும் விதத்திலுமே அவருடைய சிந்தனைகள், செயற்பாடுகள், எழுத்துக்கள் அனைத்தும் அமைந்திருந்தன.

    உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொழிலாளர்கள் எனப்படுவோர் ஒரே வர்க்கத்தைச் சார்ந்தவரே; அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டால் மட்டுமே அவர்கள் வாழ்வில் (பொருளாதார) விடுதலை கிடைக்கும்; தொழிலாளர்கள் திரண்டெழுந்தால் முதலாளித்துவத்துக்குச் சாவுமணி அடிப்பது சாத்தியமே என்பதே மார்க்ஸின் மணிமொழி.

    புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் இதே கருத்தை,

    ”ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்
    உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள்
    ஓடப்பர் உயரப்பர் எல்லாம்மாறி
    ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பாநீ” என்று வழிமொழிந்திருக்கக் காண்கின்றோம்.

    மார்க்ஸும், (தொழிலதிபர் ஒருவரின் மகனான) பிரெடரிக் ஏங்கல்ஸும் Marx_and_Engels(Friedrich Engels) 1842-ஆம் ஆண்டு ஜெர்மனியின் கொலோன் நகரில் முதன் முதலாகச் சந்தித்தனர். 1844-இல் மீண்டும் மார்க்ஸைச் சந்தித்த ஏங்கல்ஸ் பத்துநாட்கள் அவருடன் தங்கிப் பல்வேறு சமுதாயக் கருத்துக்கள் குறித்து விவாதித்தார். தம் சிந்தனைகளில் இருந்த கருத்தொற்றுமையை அவ்விருவரும் தெளிவாய் உணர்ந்துகொள்ள அச்சந்திப்பு பேருதவி புரிந்தது. பின்பு, உலகமே வியக்கும் அதிசய நண்பர்களாக, ஈருடல் ஓருயிராக அவர்கள் மாறிப்போயினர்.

    ’ஆகாவென்று எழுந்ததுபார் யுகப்புரட்சி!’ என்று மகாகவி பாரதி ரஷ்யப்புரட்சி குறித்து மகிழ்ச்சிப் பெருக்கோடு கூவினானே…அதுபோன்றதொரு யுகப்புரட்சியை ஐரோப்பிய மண்ணில் விளைத்தது மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் இணை எனில் மிகையில்லை. “உலகத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து முதலாளித்துவத்துக்கு எதிரான சக்தியாக ஒரு சங்கம் அவ்விருவராலும் தோற்றுவிக்கப்பட்டது”. அதுதான் புகழ்பெற்ற ‘பொதுவுடைமைச் சங்கம்.’ அதில் இணைந்த தொழிலாளர்கள் தம்மைக் ’கம்யூனிஸ்ட்கள்’ என்று அழைத்துக் கொண்டனர்.

    இதன் அடுத்தகட்டமாக, லண்டன் மாநகரில் உலகத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்த பிரம்மாண்டமான ’முதல் கம்யூனிஸ்ட் சங்கம்’ உதயமானது. ஐரோப்பா முழுவதிலுமுள்ள தொழிலாளர்களிடையே உற்சாக ஊற்றைக் கிளப்பிய இக்கம்யூனிஸ்ட் சங்கம் அடுத்த வருடமே தனது இரண்டாவது மாநாட்டை லண்டனில் கூட்டியது. தொழிலாளர்களின் முன்னேற்றத்தையே தம் உயிர்மூச்சாக எண்ணிய மார்க்ஸும் ஏங்கல்ஸும் தொழிலாளர்கள் துதிக்கும் பிதாமகர்கள் ஆனார்கள்.

    தம் வாழ்நாளெல்லாம் பாட்டாளி மக்களின் உயர்வுக்காகவே உழைத்த மார்க்ஸின் தனிப்பட்ட வாழ்க்கை என்னவோ துயரம் நிறைந்ததே. உலகப் பொருளாதாரம் குறித்துப் பேசியவரின் இல்லப் பொருளாதாரநிலை மிகமோசமாகவே இருந்தது. பசிக்கு உணவில்லை; நோய்க்கு மருந்தில்லை; வாழ வழியில்லை எனும் அவலநிலையில் தம் குழந்தைகளில் சிலரை எமனுக்கு ஈந்து துன்பக்கடலில் ஆழ்ந்தார் மார்க்ஸ்.

    காதல் ஒருவனைக் (மார்க்ஸை) கைப்பிடித்து அவன் காரியம் யாவினும் கைகொடுத்த அருமை மனைவி ஜென்னியும் 1881-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி புற்றுநோயால் இறந்துபோனார். மனைவியையும் குழந்தைகளையும் மிகவும் நேசித்த மார்க்ஸ், அதன்பின்னர் நீண்டகாலம் உயிர் தரித்திருக்கவில்லை. 1883 மார்ச் 14 அன்று உலகச் சிந்தனையாளரான மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார். ஆம்! அவர் உயிர்நீத்த தினம் அது! பொதுவாழ்வுக்காகவே தம்மை அர்ப்பணித்து அதில் வெற்றிகாண்பவர்கள் தம் தனிவாழ்வில் துயருற்றுத் தோற்றுப்போகவேண்டும் என்பதே இறைவனின் திருவுள்ளம் போலும்!

    19-ஆம் நூற்றாண்டில் மார்க்ஸின் அயராத உழைப்பால் கட்டமைக்கப்பட்ட மார்க்ஸியம், பின்னாளில் மெல்ல மெல்லத் தன் செல்வாக்கை உலகநாடுகள் மத்தியில் இழந்துவருவதைக் காண்கின்றோம். இதற்கு என்ன காரணம்? ஒவ்வொருவரும் (அரசியல் கட்சிகள் உட்பட) அவரவர் தேவைக்கும், சுயநலத்துக்குமேற்ப மார்க்ஸின் கொள்கைகளை வளைக்கமுயல்வதே காரணமாயிருக்கமுடியும் என்று கருதுகிறேன்.

    இவ்வளவுக்குப் பிறகும்கூட உலகமக்கள் மத்தியில் இன்றும் மார்க்ஸின் ஆக்கங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. வரலாற்றாசிரியர்கள், சமூக அறிஞர்கள், மெய்யியலாளர்கள், அரசியல் நிபுணர்கள் என்று பலரும் மார்க்ஸியத்தின் துணைகொண்டே உலக நிகழ்வுகளை ஆய்வுசெய்து வருகின்றனர். மற்றொரு பிரிவினர், நடைமுறையில் மார்க்ஸியத்தை மீண்டும் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

    சிறந்த தமிழறிஞரும், அறிவியல் தமிழின் முன்னோடியும், மார்க்ஸியத்தை ஆழ்ந்து கற்றவருமான திரு. வெ. சாமிநாத சர்மா, மார்க்ஸியம் பற்றிக் (கீழே) குறிப்பிடும் கருத்துக்கள் ஈண்டு எண்ணத்தக்கவை:

    “மார்க்ஸியம் என்பது வெறும் தத்துவமல்ல; மனித வாழ்க்கையைப் பண்படுத்திக் காட்டுகின்ற ஓர் ஒழுங்குமுறை அது! மானிட ஜாதியின் சரித்திரத்தைப் புதிய உருவத்தில் காட்டும் கண்ணாடி. பொருளாதாரத்தை முக்கிய அடிப்படையாகக் கொண்ட சமுதாயத்தின் தோற்றம். முதலாளித்துவத்தின் முடிவு இன்னபடிதான் ஆகும் என்று அறுதியிட்டுச் சொல்லுகின்ற இறுதி வாசகம். மார்க்ஸ் கண்டறிந்த முடிபுகளைச் சிலர் ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் அவர் அந்த முடிபுகளுக்கு வந்த வழியை யாரும் பாராட்டாமல் இருக்கமுடியாது.”

    மனித சமுதாயத்தின் சிந்தனைகளைச் செம்மைப்படுத்தி, அவர்தம் நல்வாழ்விற்கு வழிகாட்டிய ஏசுகிறிஸ்து போலவும், முகமதுநபி போலவும் தம் பொருளாதாரத் தேற்றங்களால், பொதுவுடைமைச் சிந்தனைகளால் ஐரோப்பிய மக்கள் மத்தியில் மிகப்பெரிய விழிப்புணர்வையும் சமுதாய மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தியவர் கார்ல் மார்க்ஸ்.

    ”உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்! இழப்பதற்கு இனி நம்மிடம் என்ன இருக்கிறது…நம்மைப் பிணித்திருக்கும் தளைகளைத் தவிர!” (“Proletarians of all countries, Unite. You have nothing to lose but your chains!”) என்று தொழிலாளத் தோழர்களைத் தட்டியெழுப்பிய மாமனிதர் மார்க்ஸ்!

    1991-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லண்டன் செய்தி நிறுவனமான பி.பி.சி, கடந்த ஆயிரம் ஆண்டுகளின் தலைசிறந்த சிந்தனையாளர் யார்? என்றொரு கருத்துக்கணிப்பை உலகம் முழுவதும் நடாத்தியது. அதில் அறுதிப் பெரும்பான்மையோர் அளித்த பதிலின் அடிப்படையில் ’கார்ல் மார்க்ஸே’ அந்தத் தலைசிறந்த சிந்தனையாளர் என்ற தனது முடிவை வெளியிட்டது இங்கே நினைவுகூரத்தக்கது.

    எங்கெல்லாம் அடக்குமுறை ஆட்சிசெய்கின்றதோ, எங்கெல்லாம் ஏழையின் உழைப்பு எசமானனால் சுரண்டப்படுகின்றதோ, எங்கெல்லாம் பணம்படைத்தவன், பாட்டாளி என்ற வர்க்கபேதம் எக்காளமிடுகின்றதோ அங்கெல்லாம் மார்க்ஸியத்தின் தேவை எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கின்றது.

    1883-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17-ஆம் தேதி மார்க்ஸின் உடல் லண்டனிலுள்ள ஹைகேட்டில், அவருடைய காதல் மனைவி ஜென்னியின் கல்லறைக்கருகில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது இரங்கல் உரையாற்றிய ஏங்கல்ஸ், “யுக யுகாந்திரங்களுக்கு மார்க்ஸின் பெயர் நிலைத்து நிற்கும்; அவரது மாபெரும் பணியும் நிலைத்து நிற்கும்” என்றார் கண்ணீர்மல்க. அவ்வாறே காலத்தை வென்ற மானுடனாகிவிட்டார் மார்க்ஸ்; அவர் மட்டுமின்றி அவருடைய தத்துவமான மார்க்ஸியமும் அமரத்துவம் பெற்றுவிட்டது.

    ***

    கட்டுரைக்குத் துணைசெய்த தளங்கள்:

    https://en.wikipedia.org/wiki/Karl_Marx

    http://www.tamilpaper.net/?tag=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 26-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    little girl

    திரு. துளசிதாசன் எடுத்த இந்தப் படத்தைக் கவிதைப் போட்டிக்குத் தெரிவுசெய்தவர் நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன். இவ்விருவரும் வல்லமையின் நன்றிக்கு உரியவர்கள்.

    ஒளிபடைத்த கண்களோடும் உறுதிகொண்ட நெஞ்சோடும் வீட்டின் வெளியில் நிற்கும் சிறுமியே! கதவுகள் பூட்டப்பட்டிருந்தால் என்ன? உன் மனக்கதவுகள் திறக்கட்டும்! உலகம் உய்யவும் தீமைகள் கொய்யவும் உடனே புறப்படு! என்று இவளுக்கு நாமும் தைரியம் சொல்லுவோம்!

    இவ்வாரப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளைப் படித்துச் சுவைக்கும் தருணமிது!

    வீட்டுக்குள் விலங்குப் பண்ணையையே சொந்தமாக்கி வைத்திருக்கும் இச்சிறுமியின் வீட்டுக்கதவும் ஓர் அடர்ந்தவனமே என்கிறார் திரு. கவிஜி.

    புலி கரடி சிங்கம்
    குரங்கு, மான்
    காட்டு நாய், மயில்
    என பல விலங்குகளிடையே
    ஒய்யாரமாய் பாதுகாக்கும்
    எங்கள் வசந்த சேனா
    என்னை அவள்
    காட்டுக்குள் அனுமதிக்க
    மறுத்தாள்….
    எவ்வளவு கெஞ்சியும்
    அனுமதிக்காத அவள்,
    கடைசியாக உதிர்ந்த
    யோசனையில் ஒரு முயல்
    பொம்மையை
    வாங்கிக் கொண்டு வந்த
    என்னை
    சிரித்துக் கொண்டே
    உள்ளே செல்ல அனுமதித்தாள்
    முயல் பொம்மையை
    தன்
    கூட்டத்தில்
    சேர்த்துக் கொண்ட பாங்கில்
    எங்கள் வீட்டு
    வாசல் கதவு
    ஓர் அடர்ந்த காடாகத்தான்
    தெரிந்தது….

    ***

    ’என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்று தந்தையும் தாயும் வேலைக்குப் போய்விட, பிஞ்சுக்குழந்தையோ பூட்டிய கதவின் முன்னே தவமிருக்கின்றது பாசத்திற்காக! என்று தன் கவிதை வரிகளால் நம் நெஞ்சை நெகிழ்த்தியிருக்கிறார் திருமிகு. ஜெயஸ்ரீ ஷங்கர்.

    இரட்டைச் சம்பளமும்
    குறைவு தானாம்…!
    குடும்பமாய் வாழ மட்டும்
    ஒற்றைக் குழந்தை
    கூட அதிகமாம் ..!

    பாட்டியும் தாத்தாவும்
    ஆளுக்கொரு
    முதியோர் இல்லத்தில்
    தனித் தனியாக…!
    உறவுகள்  எதுவும்
    ஒட்டாத தனிவீடிது..!
    பள்ளி திரும்பியதும்
    பூட்டு தான்
    சிரித்து வரவேற்கும்
    விரல்பிடித்து..விளையாடும்
    நித்தம் என்னோடு…!

    ஆறுமணி வந்துவிட்டால்
    அலுத்துவிடும் பூட்டெனக்கு..
    காற்றைக் கட்டிக் கொண்டு
    கண்களில் தேடலோடு
    அம்மா வரும்வரையில்
    நானும் நிற்கிறேன்
    அனாதையாய்..!

    ***

    ’புதுயுகப் பெண்ணே! ஆணாதிக்கக் கதவை உடைக்கப் புறப்படட்டும் உன் இரும்புக் கரங்கள்! கல்வியில் தேர்ச்சி கொள்! பெண்ணடிமையை மண்ணோடு புதை!’ என்று இச்சிறுமிக்கு எழுச்சியூட்டுகின்றார் திருமிகு. லட்சுமி.

    எழுந்திடு பெண்ணே!
    பூட்டிக் கிடக்கும்   ஆணாதிக்கக் கதவை
    உடைத்துவிடு பெண்ணே!
    […]
    கல்லாமை
    இருட்டை விரட்டிவிடு!
    பூட்டிய ஊழல் கதவுகள் திறக்க வயதில்லையடி!
    பூட்டிய கதவுகள் திறக்க கல்விச்சாலை செல்ல
    என்னடி தயக்கம்!
    […]
    பெண்ணடிமை
    கொள்ளவே சுனாமியாய்
    பெருங்கூட்ட சமுதாயம்  மதத்தின் பெயரால் 
    சடங்கு எமன் காலைச் சுற்றுது!
    கழற்றி நீயும் எறிந்திடுவாய்!
    பெண் சிங்கமென சீறி புறப்படுவாய்!
    பெண்கல்வி வேண்டி இங்கு பிழைப்பதனால்
    உணர்நதிங்கு நீயும் கற்றிடுவாய்!
    […]
    உடையில் எளிமை உள்ளத்து உறுதி
    அவையஞ்சா தூய பேச்சு  ஊர் போற்றும் கற்புத்திறன்
    தெளிவான சிந்தனை நாவினில் அடக்கம்
    இல்லறப்பெருமை  முதியோர் நலம் காக்க
    அதிகப்படிப்பு அகந்தையின்றி
    வெல்ல புறப்படுவாய்!
    அகிலம் ஆள வென்றிடுவாய்!
    கட்டிய கைகளுக்குள் உலகம்
    உனதாகட்டும் என்றே முழங்கி
    விவேகானந்தர் சிந்தைனையுடன்
    வாழ்ந்திடுவாய்!

    ***

    ’தெய்வத்தின் வரவுக்கே கருப்புக்கொடி காட்டும் இஃது வீடன்று; சுடுகாடுதான்!’ என்று தன் உள்ளக்கொதிப்பை வார்த்தைகளில் உதிர்த்திருக்கின்றார் திரு. மெய்யன் நடராஜ்.

    கதவில் தொங்குவது பூட்டல்ல
    இரக்கம் அறியா
    அரக்கத்தின் மனசு 

    தெய்வத்தின் வரவுக்கே
    கருப்புக்கொடிக் காட்டுவதால்
    கோவில் அல்ல  இந்த வீடு
    பிசாசுகள் வாழும் சுடுகாடு 

    உலகில் மனிதம்
    தொலைந்துவிட்டது
    என்பதை அத்தாட்சிப் படுத்தக்
    குத்தப்பட்ட முத்திரை

    ***

    தெய்வத்தின் மீதே நம்பிக்கையில்லாமல் பூட்டிவைக்கும் மானிடக்கூட்டம், இங்கே கும்பிடத்தகுந்த குழந்தையை வெளியில் வைத்துப் பூட்டியிருப்பது அவலமன்றோ? என்று குமுறுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    கும்பிடும் தெய்வம் உள்ளிருக்கக் 
    கோவிலைப் பூட்டி வைப்பதென
    நம்பிடா மனிதரின் நாணயமாய்
    நாட்டில் நடக்கும் அவலம்போல்,
    தம்பதி சேர்ந்து பூட்டிவீட்டை
    தங்கள் பணிக்குச் சென்றபின்னே
    கும்பிடத் தகுந்த குழந்தைவெளியே
    காத்திடும் கொடுமையும் மாறாதோ

    ***

    ’நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்டு அகிலத்தில் வாழ்ந்திடு மிடுக்காக!’ என இக்குழந்தைக்கு இன்னுரை பகர்கின்றார் திருமிகு. தமிழ்முகில்.

    …அன்னையும் தந்தையும்
    வேலைக்கு
    சென்றிருக்க
    விளையாடி
    ஓய்ந்ததும்
    வீட்டிற்கு
    ஓடி வந்தாயோ ?
    பூட்டிக்
    கிடக்கும்
    வீட்டு
    வாசலிலிருந்தபடியே
    உன்
    வயது பிள்ளைகளின்
    விளையாட்டை
    கண்டு
    இரசிக்கிறாயோ
    ?
    […]
    நிமிர்ந்த
    நடையும்
    நேர்கொண்ட
    பார்வையும்
    எவர்க்கும்
    அஞ்சாத தன்மையும்
    குறையா
    ஞானமும்
    உன்னை
    பாரினில் உயர்த்திடும் !
    கள்ளம்
    கபடமறியா
    கிள்ளை
    உள்ளம் தனையே
    காலமெலாம்
    பெரும் செல்வமென
    காத்துக்
    கொண்டால்
    நல்வாழ்வும்
    தானிங்கு வசப்படும் !

    ***

    ’தனித்து விடப்படும் பிள்ளைகள் பாதை மாறும் அபாயம் இருப்பதால் அவர்களைக் கண்ணெனக் காத்தல் பெற்றோர் கடன்’ என்று அன்பாக எச்சரிக்கின்றார் திருமிகு. வேதா இலங்காதிலகம்.

    …நற்றவம் கொண்டு பெற்ற பிள்ளைகள்
    பெற்றவர் வீடேகும் வரை, கல்வி
    கற்ற பின் வேறு கலைகளும்
    பெற்றிடும் ஒழுங்கு அமைத்தல் வேண்டும்.

    வாசலில் காத்திருத்தல், வீதியில் திரிதல்,
    வாசம் இழக்கும், பாழாக்கும் வாழ்வை.
    வெறுமை மனதில் சாத்தான் குடியேறும்
    சிறுமை அழித்தால் சிறப்புற உயரலாம்!

    பெறுமதி நேரம் பயனாகும் முறையை
    வெகுமதியாய்ப் பெற்றோர் பிள்ளைக்குக் கையளித்தால்
    தகுதி வரும் தரமாய் வாழ!
    நகுதலற்ற வாழ்வை நானிலம் போற்றும்!

    ***

    கண்ணே! நீ துள்ளினால் புள்ளிமான்கள் தோற்கும்; உன் கொஞ்சுமொழிகளின் அழகில் தத்தைகளும் பொறாமை கொள்ளும்; பூட்டிய கதவின் முன்னே வாட்டமுடன் நிற்பதேனோ? என்று கேள்வி எழுப்புகிறார் திருமிகு. கார்த்திகா.

    துள்ளியோடும் மான் குட்டிகள்
    தோற்கும் நீ நடந்தாலே
    […]
    உன்
    கனிமொழி சொல்லில்
    கற்கண்டுகள் ஊர்வலமாய்
    நீ கொஞ்சிப் பேசும்
    அழகில் பொறாமை கொண்டு
    மென் மேலும் சிவக்குமடி
    கிளிகளின் மூக்கு
    நீ பறிக்க வேண்டுமென
    தினம் மலரும் பூக்களின்
    புவி வருகையை மறந்துவிட்டு
    பூட்டிய கதவின் முன்னே
    கை கட்டி நிற்பதேனடா!!

    ***

    ’தாத்தா வைத்த மரமில்லை; தந்தை (அதைவெட்டிப்) போட்ட கதவுதான் இருக்கு; வீட்டில் காவலுக்குக் கிழவியும் நாயும் இல்லை; பூட்டே காவலாயிருக்கு!’ என்று அன்றைய இன்றைய காலமாற்றத்தைக் கவினுறக் காட்சிப்படுத்தியுள்ளார் திரு(மிகு?). மணிச்சிரல்.

    தாத்தாவின் மரம் இல்லை
    தந்தையின் கதவு இருக்கு
    பாவாடை சட்டை இல்லை
    மிடியும் ஜீன்ஸும் இருக்கு
    கிழவியும் நாயும் இல்லை
    கதவுக்கு பூட்டு இருக்கு
    உறவும் உதவியும் இல்லை
    காலுக்கும்  கற்கள் இருக்கு
    சிரித்துபேச விசயங்கள் இருக்கு
    வீட்டுக்கு வொரேவொரு பிள்ளை

    ***

    இறுகக் கட்டிய உன் இரும்புக் கைகளின் உறுதி, உனைத் தாக்கவரும் சிறுமைகளைப் பொடிப்பொடியாக்கட்டும்! என்று இச்சிறுமிக்கு வீரமூட்டுகின்றார் திருமிகு. புனிதா கணேசன்.

    இறுகக் கட்டிய கைகளுள் இரும்பென இருந்திடும்
    உறுதியை உன் இரு விழிகளின் மொழிகள் கூறிவிடும்
    வறுமையின் வாட்டங்கள் செற்றிடும் வன்மொழி
    ஒறுத்திட்டே அவை வாழ்வினில் வளம் சேர்க்கும் !
    மாறுதல் நாடியே மன மாளிகைக் கதவுகள் தன்னிலே
    தேறுதல் கூறி நிற்கும் இரு கைகளின் சேர்க்கையில்
    வீறுடன் வீரமாய்த் தன்மானமும் தவழ்ந்திருக்கும் !
    பேறுகள் அடைந்திட பெருமைகள் பொங்கிட
    ஆறுதல் கொண்டிடுவாய், எந்தப் பூட்டையும்
    மறுத்திடு, மறவராய் உடைத்தெறி விலங்கு எதற்கு?
    சிறுமைகள் சொல்லி நிந்தனை செய்திடும் மாந்தர்கள்
    நிறுத்துவர் தம் நீசமாம் செய்கைகள் நின் பெயர் கேட்டதுமே!

    ***

    வந்தனைக்குரிய சிந்தனைகளை வார்த்திருக்கும் கவிஞர்குழாமுக்கு என் மனமுவந்த பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைச் சந்திக்கப் புறப்படுவோம் இனி!

    ’வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் எனும் விந்தை மனிதர் தலைகுனியப் புறப்பட்டுவிட்ட வீரச்சிறுமி ஒருத்தியை நமக்கு அடையாளம் காட்டி, இவள் புராண காலத்துப் பதுமையன்று; பாரதி கண்டெடுத்த புதுமை!’ என்று எக்காளமிடும் கவிதையொன்று எனக்குள் அதிர்வை ஏற்படுத்தியது.

    பூட்டுகளுக்குள் புதைந்துவிட
    நான்
    புராண காலத்து பெண் அல்ல
    பூமியைப் புரட்டிப்போடும்
    புதுயுகத்தின் அடையாளம்!

    நிலம் பார்த்து நடந்து
    நித்திரையைத் துறந்து
    சுயத்தை இழக்கும்
    சோகச் சுவடல்ல நான்!

    வானில் வலை வீசி
    வரலாற்றை உருவாக்கும்
    அடுத்தத் தலைமுறையின்
    ஆரம்பம்!

    வீட்டிற்குள் மாந்தரைப்
    பூட்டிவைத்த விந்தை மனிதரை
    புறக்கணித்த பாரதிப்  படையின்
    புது வாள்!

    அன்று
    உள்ளே வைத்துப் பூட்டியது
    எங்களை உறைய வைக்க
    இன்று
    வெளியே பூட்டுவது
    எங்கள் இறகுகளை விரிக்க!

    இறகு விரித்து
    இன்னல் துடைப்போம்
    பூட்டுகள் திறந்து
    புது வழி அமைப்போம்!

    வீரவுணர்ச்சியைப் பெண்ணுக்குள் விதைக்கும் இக்கவிதையின் படைப்பாளி திரு. கொ.வை. அரங்கநாதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராக அறிவிக்கின்றேன்.

    அடுத்து என் கவனத்தைக் கவர்ந்தது, குடும்பத்தைக் காப்பாற்றாமல் மதுக்கடை முதலாளிகளைக் காப்பாற்றிவரும் குடியன் ஒருவனின் பிஞ்சுமகள், குடியை விட்டுவிடுமாறு தன் அன்புத் தந்தையைக் கெஞ்சுவதாய் எழுதப்பட்ட இரும்பு நெஞ்சையும் இளகச் செய்யும் ஒரு கவிதை!

    என்னதான் முறைச்சாலும்
    எப்பிடித்தான் ஏய்ச்சாலும்
    பூட்டைநான் திறக்கமாட்டேன்
    வீட்டுக்குள்ள வுடமாட்டேன்!
    ஒருகாலை முன்மறிச்சு
    கையிரண்டும் கட்டிக்கிட்டு
    தீர்மானமாப் பார்த்தபடி
    […]
    புதுத்துணியைக்
    கேக்கவில்லை
    புத்தகமும் கேக்கவில்லை
    இதுவெதுவும் எனக்குவேணாம்
    மதுவைநீ வுடமாட்டியா?
    அவுந்தகைலி ஒருகையுல
    துண்டுபீடி ஒதட்டுமேல
    தள்ளாடி நிக்குறியே
    வெக்கமில்லை ஒனக்கு?
    நான்வளந்து ஆளாகி
    நாலுகாசு சம்பாரிச்சு
    ஒன்னியநான் காப்பாத்துவேன்
    அதுவரைக்கும் நிறுத்துநைனா!
    […]
    சேத்தபணம் அத்தினியும்
    நாத்தக்கள்ளு வாங்கிப்போவ
    ஆத்தா மனம்பதைச்சு
    அளுவறதப் பாருநைனா!
    […]
    பாழாப்போன
    குடியைவுட்டு
    வாழுறதுக்கு வழியைப்பாரு
    கூழுகஞ்சி குடிச்சாவுது
    குடும்பத்தக் காப்பாத்து!
    சொல்லுறதச் சொல்லிப்புட்டேன்
    மீதியெல்லாம் ஒம்பாடு
    நல்லவனா நீதிருந்தி
    எங்கூட இருக்கணும்ப்பா!
    பதிலொண்ணு தெரியாம
    பூட்டைநான் தொறக்கமாட்டேன்
    எம்மேல அன்புவைச்சு
    எனக்காகத் திருந்துநைனா!

    குடியர்களுக்கு அறிவுகொளுத்தும் நோக்கில் திரு. வி.எஸ்.கே.யால் எழுதப்பட்ட இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய்க் குறிப்பிட விரும்புகின்றேன்.

    ***

    போட்டியில் ஆர்வத்துடன் தொடர்ந்து பங்களிப்பு செய்துவரும் அனைத்து நண்பர்களுக்கும் என் நனிநன்றி!

     

    Share
  • அறிந்துகொள்வோம்!

    -மேகலா இராமமூர்த்தி

    உட்டோபியாவில் ஓர் உலா!

    உலகமக்கள் அனைவருக்கும் தற்போது பரவலாகப் பரிச்சயமாகிவிட்ட ’தத்துவம்’ எனும் துறையை மேற்குலகுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியது கிரேக்கமே (Greece) ஆகும். இத்துறையைக் குறிப்பிட ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் Philosophy என்ற சொல்லானது Philo + Sophy என்ற இருசொற்களின் இணைப்பாகும். ’Philo’ என்பது காதலையும், ’Sophy’ என்பது அறிவையும் குறிக்கும் கிரேக்கச் சொற்கள். ஆதலால், ’அறிவின் மீது கொள்ளும் அளவற்ற காதலே’ (Love of Wisdom) தத்துவமாகும் என்பது தெற்றெனப் புலப்படுகின்றது.

    இவ்வாறு அறிவுத்தேட்டத்தோடு வாழ்க்கையை அணுகியவர் கிரேக்கத் தத்துவத்துறையின் பிதாமகராய் அறியப்படும் மாமேதை சாக்ரடீஸ். ஒரு சிற்பியின் மகனாய்ப் பிறந்து சிற்பியாகவே தன் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், அறிவுத்துறையின் தந்தையானது விந்தையே! வீதிகளில் திரிந்தவண்ணம் ஏதென்ஸ் நகர இளைஞர்களுக்கு அறிவுகொளுத்திய சான்றோர் அவர். ”உன்னையே நீ அறிவாய்” என்பது அவருடைய புகழ்பெற்ற வாசகமாய் இன்றளவும் பேசப்படுகின்றது. ”தன்னை அறிய தனக்கொரு கேடில்லை’ என்ற திருமந்திரமும் இதே கருத்தைத்தான் எடுத்தியம்புகின்றது. ”ஏன்? எதற்கு? என்று கேள்வி கேள்! எதையும் அப்படியே நம்பிவிடாதே!” என்றுகூறி மெய்ப்பொருள் காணும் அறிவுக்கு வித்திட்டவர் சாக்ரடீஸ். அவருடைய அறிவார்ந்த சிந்தனைகளால் அன்று ஈர்க்கப்பட்டனர் ஏதென்ஸ் நகரத்து இளைஞர்கள் பலர்.

    அத்தகையோரில் குறிப்பிடத்தக்க ஒருவர் ஏதென்ஸ் நகரின் Platoசெல்வச்செழிப்பான குடும்பமொன்றில் கி.மு. 427/428-இல் பிறந்து பொருட்செல்வத்தில் பற்றற்றவராய், சாக்ரடீஸின் அறிவுச்செல்வத்தின் மீது பற்றுவைத்து அவரைத் தன் குருவாக ஏற்றுக்கொண்ட பிளேட்டோ. தன் இருபதாவது வயதில் சாக்ரடீஸின் சீடராய் இணைந்தார் பிளேட்டோ என்று கூறப்படுகின்றது. ஆயினும் நீண்டகாலம் குருவும் சீடரும் இணைந்திருக்கவியலாதபடி விதி குறுக்கிட்டுவிட்டது.

    ஆம்! சாக்ரடீஸின் பகுத்தறிவுச் சிந்தனைகளையும் தத்துவ அறிவையும் புரிந்துகொள்ளாத கிரேக்கம், அவர் கடவுளுக்கு எதிரான சிந்தனைகளை விதைக்கிறார்; ஏதென்ஸ் நகர இளைஞர்களை ஒழுக்கக்கேடான பாதைக்கு இட்டுச்செல்கின்றார் என்றெல்லாம் அவர்மீது அபாண்டமாகப் பழிசுமத்திச் சிறையிலடைத்தது. அத்தோடு விட்டதா? ஹெம்லாக் (hemlock) எனும் கொடிய விஷத்தையும் அவரைப் பருகவைத்து அவர் உயிரைக் குடித்தது. அப்போது பிளேட்டோவின் வயது இருபத்தெட்டுதான்!

    குருவின் கொடூரமரணம் சீடரின் உள்ளத்தை வெகுவாய்ப் பாதித்தது. ”சாக்ரடீஸுக்கு மரணதண்டனை அளித்த ஆட்சி ஓர் இழிவான ஆட்சியே!” என்று துணிந்து குற்றஞ்சாட்டிய பிளேட்டோவுக்கும் அதிகாரவர்க்கத்தால் ஆபத்து நேர இருந்ததால் அவர் உடனடியாக ஏதென்ஸைவிட்டு வெளியேறினார். இத்தாலி, எகிப்து, சிசிலி போன்ற பல நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அம்மக்களின் வாழ்க்கைமுறைகளை ஊன்றிக் கவனித்தார்.

    பத்தாண்டுகளுக்கு மேலாகத் தன் வாழ்நாளை வெளிநாடுகளில் கழித்துவிட்டு ஏதன்ஸ் திரும்பிய பிளேட்டோ, அங்கே கி.மு. 380களின் தொடக்கத்தில் ’கலைக்கழகம்’ (Academy) ஒன்றை நிறுவிக் கல்விகற்பிக்கத் தொடங்கினார். கணிதம் முதல் உயிரியல் ஈறாக, தத்துவம் முதல் வானியல் ஈறாகப் பல்வேறு துறைகளும் அக்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்பட்டன. அவர் தொடங்கிய கலைக்கழகமே பின்னாளைய பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் முன்னோடியாகும் (Plato’s Academy was the ultimate ancestor of the modern university; the English term ‘Academic’ had been derived from that ’Academy’). இந்தக் கலைக்கழகத்தில் பயின்றவர்தான் பிளேட்டோவின் புகழ்பெற்ற மாணாக்கரும், கிரேக்கத்தின் சிறந்த தத்துவஞானியும், மாவீரன் அலெக்சாண்டரின் குருவுமான அரிஸ்டாட்டில். அவர் இக்கழகத்தில் கல்விபயிலச்சேர்ந்தபோது அவருடைய வயது பதினேழு; அப்போது பிளேட்டோவின் வயது அறுபதாகும்.

    தாம் தோற்றுவித்த கலைக்கழகத்தில் மாணாக்கர்களுக்குக் கல்வி பயிற்றுவித்த அதேகாலத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட அரசியல், அறவியல், தத்துவம் சார்ந்த புத்தகங்களையும் எழுதியிருக்கின்றார் பிளேட்டோ என்பது குறிப்பிடத்தக்கது. பிளேட்டோவின் நூல்களில் இன்றளவும் பேசப்படும் அவருடைய சாதனைநூல் (masterpiece) ’குடியரசு’ (The Republic) எனும் அரசியல் நூலேயாகும்.

    ’எண்ணமே செயலுக்கு அடிப்படை’ எனும் கொள்கையுடைய பிளேட்டோ, பலகாலம் ஓயாது சிந்தித்து ஓர் இலட்சியக் குடியரசு எவ்வாறிருக்கவேண்டும் எனும் தன் எண்ணத்தைத் தம்முடைய ’குடியரசு’ நூலில் பதிவு செய்திருக்கின்றார். ஏதென்ஸ் நகரத்து மக்களோடும், வெளிநாட்டினரோடும் தம் குருநாதர் சாக்ரடீஸ் நீதியின் பொருள்குறித்து உரையாடுகின்ற வகையில் இந்நூல் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இதில் பிளேட்டோ படைத்துக்காட்டிய கற்பனையான சொர்க்கபுரி (Utopia) நடைமுறைக்குச் சாத்தியப்படாத ஒன்று என அவருக்குப் பின்வந்தோர் (ஏன் அரிஸ்டாட்டிலே அக்கருத்துடையவர்தான்) முத்திரை குத்திச் சென்றாலும் பிளேட்டோ விவரிக்கும் அந்த அதிசயச் சமூகத்தில், அற்புதக் குடியரசில் நாமும் வாழமாட்டோமா என்று நம்மை ஏங்கவைக்கின்றது இந்நூலில் அவர் படைத்துக்காட்டியிருக்கும் சிறந்த குடியாட்சிமுறை!

    ’அறிவுடையோரே ஆளுதல் வேண்டும்’ எனும் சாக்ரடீஸின் கோட்பாட்டைத் தன் உள்ளத்தில் ஆழப்பதித்திருந்த பிளேட்டோ, அதனை மையமாக வைத்து, மூன்றுவகை மனிதர்களை உள்ளடக்கிய தம் கற்பனைக் குடியாட்சியை ஒரு பிரமிட் வடிவில் உருவாக்கியிருந்தார்.

    1. அதன் தலைமை நிலையில் இருப்பவர்கள் அறிவிற்சிறந்த  அரச ஞானிகள் (Philosopher-rulers).

    2. இரண்டாம் நிலையில் இருப்பவர்கள் போர்வீரர்கள்/காப்பாளர்கள் (Warriors/ Guardians).

    3. மூன்றாம் நிலையில் இருப்பவர்கள் தொழிலாளர்கள் (Workers).

    ஓர் நல்ல மனிதனின் பண்புகள் யாவை? ஓர் இலட்சியச் சமுதாயம் என்பது என்ன? ஆட்சியாளரின் பண்புகள் எவை எவை? உயர்ந்த சமுதாயத்தை உருவாக்குவதில் கல்வியின் பங்கு யாது? என்பன போன்ற பல வினாக்களுக்கு இந்நூலில் விடைகாண முயன்றிருக்கின்றார் ’மேற்குலகின் முதல் அரசியல் சிந்தனையாளர்’ என்று போற்றப்படும் பிளேட்டோ.

    செருப்பு அறுந்துபோனாலோ, வீட்டுக்கதவு பழுதானாலோ, அல்லது நோய் வந்தாலோ அதனைச் சரிசெய்வதற்கு ஏற்ற மனிதரைத் தேடிச்செல்லும் நாம், ஆட்சிப் பொறுப்பை மட்டும் எந்தத் தகுதியும் இல்லாதவரிடத்து ஒப்படைப்பது சரியானதா? என்று வினாயெழுப்பி, ஆட்சியாளர்களுக்கென்று சில தகுதிகளை வரையறை செய்திருக்கின்றார் அவர்.

    பத்து வயதுவரைச் சுதந்திரமாகவும், அதற்குப்பின் கட்டாயப்படுத்தலின்றி பத்து வருடகாலம் விருப்பத்தோடு கல்விபயின்றும், அதன்பின்பு தத்துவ அறிவுபெறச் சுற்றுப்பயணம் செய்து மக்களின் வாழ்வை நேரடியாக அறிந்துமென… இவ்வகையில் தன் வாழ்நாளின் ஐம்பதாண்டு காலத்தைச் செலவழித்து, படிப்பறிவும் பட்டறிவும், மெய்யியல் அறிவும் ஒருங்கே பெற்றவனாகவும், மக்களுக்காக உழைக்கும் தன்னலமற்ற குணம் உடையவனாகவும் எவன் இருக்கிறானோ அவனே நாட்டைத் தலைமையேற்று நடத்த வல்லவன் என்பது பிளேட்டோவின் தீர்மானம்.

    அரசாள்வோரோ அல்லது சமுதாயக் காப்பாளரோ யாருமே பிறப்பதில்லை; மாறாக அவர்கள் முறையான கல்வியாலேயே அவ்வாறு உருவாக்கப் படுகின்றார்கள்  என வலுவாக நம்பிய பிளேட்டோ, தன்னுடைய இலட்சிய அரசினை உருவாக்குவதற்கு ஏற்ற கல்வித்திட்டம் ஒன்றையும் வகுக்கத் தவறவில்லை. ’எல்லாரும் சமன்’ என்ற கருத்து, கல்வியையும் அறிவாற்றலையும் பொறுத்தவரையில் தவறானது என்ற நிலைப்பாடுடைய அவர், அவரவர் ஆற்றலுக்கேற்பக் கல்வி பெறப்படுவதனாலும், பணிகள் பங்கிடப்படுவதனாலுமே சமுதாய அமைப்புச் சீரடையும்; கல்வியானது அறிவுசார் கருத்துக்களை மனிதனுக்குள் திணிப்பதற்கு பதிலாக அக்கருத்துக்களின் உள்ளீடான நற்பண்புகளை அவனிடத்து விதைப்பதாய், வெளிப்படுத்துவதாய் இருக்கவேண்டும் என்றார்.

    மக்களுக்கு வழங்கப்படும் கல்வி அடிப்படைக்கல்வி, உயர் கல்வி என இரண்டாகப் பிரிக்கப்படும். இருபது வயதுவரை  அடிப்படைக்கல்வியும், இருபதிலிருந்து முப்பத்தைந்து வயதுவரை உயர்கல்வியும் அவர்களுக்கு அளிக்கப்படும். இத்தகைய கல்வித்திட்டமானது அறிஞர்களை ஆள்வோராக உருவாக்குவதையும், உடல்வலிமையில் வல்லோரைக் காப்பாளராக நியமிப்பதையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இத்தகைய கல்விநிலைகளை எட்டாத எவரும் ஆட்சியாளராக முடியாது எனக் கட்டுப்பாடு விதிக்கின்றது பிளேட்டோவின் குடியரசு.

    அடுத்து, பிளேட்டோ முன்வைக்கும் முக்கியக் கருத்து ஆண், பெண் இருபாலர்க்கும் சமமான கல்வி தரப்படவேண்டும் என்பது. தான் காண விழைந்த இலட்சியக் குடியரசில் ஆண்களுக்குச் சமமாகப் பெண்களும் பொதுப்பணியில் ஈடுபட வேண்டும் என்று பிளேட்டோ விரும்பினார். ஆணுக்கும் பெண்ணுக்கும் அறிவில், ஆற்றலில் வேறுபாடு உண்டு என்பதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை (he rejected the notion of the sexes having different capacities). ஆடவர்க்கு இணையான கல்வி பெண்களுக்கு அளிக்கப்படாவிட்டால் அவர்களால் சமுதாயத் தொண்டுகளைத் திறம்பட ஆற்றமுடியாது என்றெண்ணிய அவர், மக்கள் தொகையில் (ஏறத்தாழ) பாதியளவுள்ள பெண்களைப் பொதுப்பணிகளிலிருந்து விலக்கிவைப்பது அறியாமையும், சமுதாயத்திற்குப் பேரிழப்பை ஏற்படுத்தும் செயலுமாகும் என்று உறுதிபடக் கூறினார்.

    அனைத்திற்கும் மேலாக, நாட்டைக் காக்கும் பொறுப்பிலிருப்பவர்கள் தம் கடமையை வழுவின்றிச் செய்யவேண்டுமானால் அவர்களுக்கென்று குடும்பமோ, தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களோ இருக்கக்கூடாது; பொருள்தேடவேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கக்கூடாது என்று வலியுறுத்திய பிளேட்டோ, சுயநலமெனும் கடுகு உள்ளமற்றுப் பொதுநலமெனும் தாயுள்ளம் – தொண்டுள்ளம் கொண்ட ஓர் பொதுவுடைமைவாதியே நாட்டின் தலைவனாயிருக்கவேண்டும் என்று விரும்பினார்.

    ஆள்வோரைத் ’தலை’க்கும், போர்வீரர்களை ’நெஞ்சு’க்கும், தொழிலாளர்களை ’வயிற்று’க்கும் ஒப்பிட்டார் பிளேட்டோ. ஆள்வோர் மூளைபலம் மிக்கோராயும் , போர்வீரர்கள் நெஞ்சுரம் மிகுந்தோராயும், தொழிலாளர்கள் உலகாயதங்களில் நாட்டம் கொண்டோராயும் இருப்பர். வெவ்வேறு சிந்தனையும், செயல்திறனுமுடைய இம்மூவகைப் பிரிவினரும் ஒருங்கிணைந்து செயற்படுவது ஓர் இலட்சிய அரசை – ஆதர்ச சமூகத்தை உருவாக்கும் என்பது அரசியல் அறிஞர் பிளேட்டோவின் அசைக்கமுடியாத நம்பிக்கையாயிருந்தது.

    ஆனால், சராசரி மனிதர்களையே அதிகம் கொண்ட சமுதாயத்திற்குப் பிளேட்டோவின் உயர் இலட்சியங்களைக் கொண்ட குடியரசை உருவாக்குவது சாத்தியப்படாமல் போய்விட்டபோதினும், ஆட்சியாளர்களுக்கு இன்றியமையாதது என்று அவர் போதித்த பொதுவுடைமைத் தத்துவமே பின்னாளில் கார்ல் மார்க்ஸ் (Karl Marx) போன்றோரின் அரசியல் சித்தாந்தங்களுக்கு அடிப்படையாய், ஆதாரமாய்த் திகழ்ந்தது என்பது அரசியல் அறிஞர்களின் துணிபு.

    ’பிளேட்டோ’ என்ற சொல்லுக்குக் கிரேக்க மொழியில் ’பரந்த’ (the broad one) என்று பொருள். (அவருடைய தோள்கள் பரந்து விரிந்திருந்தமையால் இப்பெயர் அவருக்கு ஏற்பட்டது என்று கூறப்படுகிறது). பெயருக்கேற்பவே பரந்த சிந்தனைகளுக்குச் சொந்தக்காரராய், பொன்னுலகைத் தன் எழுத்துக்களில் உருவாக்கிக் காட்டிய தன்னலமற்ற தகைமையாளராய்த் திகழ்ந்த பிளேட்டோ, மேற்குலகின் தத்துவத்துறை வளர்ச்சிக்கும், அரசியல் மறுமலர்ச்சிக்கும் பெரும் வழிகாட்டியாய்த் திகழ்ந்திருக்கின்றார் என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை.

    ***

    கட்டுரைக்குத் துணைநின்ற தளங்கள்:

    https://en.wikipedia.org/wiki/Plato

    http://www.koodal.com/youth/history/biography.asp?id=37&content=tamil&name=plato

    100 philosophers – Peter J. King

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 25-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    புகைப்படத்தை எடுத்திருக்கும் திரு. வினித், அதனைப் போட்டிக்குத் தேர்வு செய்தளித்துள்ள வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் இருவருக்கும் வல்லமையின் நன்றி.

    flying birds

    உயரப் பறக்கும் இந்தப் பறவைகள் போல் நம் உள்ளமும் உயர்வையே உள்ளினால் வாழ்வு வளம்பெறும். வானம் வசப்படும்!

    இனி, நம் கவிஞர்கள் கோத்துத் தந்திருக்கும் கவிச்சரங்களைக் களிப்போடு வாசித்து மகிழ்வோம்!

    ***

    வித்தியாசமான சிந்தனையோடு, இப்பறவைகளின் மறுபக்கத்தில் தன்னையே சுவராக எண்ணிப் பார்க்கின்றார்  திரு. கவிஜி.

    ஓவியம் அசைவதாக
    கற்பனை கொண்ட
    பறவைகளின் மறு பக்கத்தில்
    நான் வெறும்
    சுவர்

    ***

    ’ஒற்றுமையைத் தம் சிறகில் ஏற்றிப் பறக்கும் இப்பறவைகள் காதல் தேசத்தின் தூதுவர்களோ!’ என்று வியக்கிறார் திருமிகு. கார்த்திகா.

    …வட்டமிட்டு  இரை கொத்தும் 
    சிறு பறவைகள் 
    ஒற்றுமையையே 
    வலிமையாய்
    சிறகில் ஏற்றி 
    உயரப் பறந்திடும் 
    பெரும் தேவதைகள் 
    […]
    கொஞ்சும் அலகுகளால் 
    நெஞ்சம் அசத்தி 
    உலகாளும் நீங்கள் 
    இந்த தேசத்தின் 
    காதல் தூதுவர்களோ!!

    ***

    ’வேற்றுமையில் ஒற்றுமை காணும் பாடத்தைப் பறவைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள்!’ என்று வேண்டுகோள் விடுக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    பறவைகள் பார்த்திட மட்டுமல்ல
    பாடம் பலவும் கற்றிடத்தான்,
    உறவு பகையெனப் பிரித்திடுவான்
    வேற்றுமைச் சிறகை விரித்திடுவான்,
    நிறமென இனமென விலகிடுவான்
    நினைத்திடா பேதமாய் உலவிடுவான்,
    மறந்திடும் மனிதனைத் திருத்திடத்தான்
    மேலவை ஒன்றாய்ப் பறப்பதுவே…!

    ***

    சுதந்திரம் வாங்கியதாய்ச் சொல்லிக்கொண்டு நாளும் ஒரு சிறைச்சாலை திறந்துகொண்டிருக்கும் மனிதரின் அவலநிலை கண்டு பறவைகளும் பரிகசிக்கின்றன என்கிறார் திரு. மெய்யன் நடராஜ்.

    சுதந்திரம் வாங்கியதாய்
    சொல்லிக்கொண்டு
    புதிய புதிய
    சிறைச்சாலைகள்
    திறந்துகொண்டிருக்கும்
    மனிதர்களே வாருங்கள்  

    நேற்றுகள் தந்த பாரங்கள்
    நெஞ்சோடு இல்லாமலும்
    நாளையை பற்றிய
    கவலைகள் கொள்ளாமலும்
    இன்றைய பொழுதை
    இனிமையாய் கழிக்கும்
    எங்களிடம் இல்லாத  சுதந்திரம்
    உங்களிடம் இருந்தால் சொல்லுங்கள்…

    ***

    உளமெனும் படர்மணலில் உயர்ந்தெழும் எண்ணப் பறவைகளை நம் சிந்தை கவரும் வகையில் சந்த நயத்தோடு தீட்டியிருக்கின்றார் திரு. சுந்தர் புருஷோத்தமன்.

    படர்மணல் நிலமென 
    துளமிதை  அழகே,
    நீ கேளாய்….!
    […]

    சிறகதை விரித்தியல்
    பொடுசுழல் விசையதை
    மனத்தினில் கொடுத்திடு
    நினைப்பெனும் பறவை…!
    […] 
    நடப்பதன் நடுவினுள்
    திகழ்கரு வெதுவென
    நினைக்கையில்,
    நடந்ததைத் திரும்பவும்
    நடந்துளம் நினைந்திட
    படபடபடவென வெழுமே…!

    நெளிவுறு புழுக்களை
    சிதற்படும் வெறுப்பினை
    லபக்கென விழுங்கிட 
    விரும்பிடும் பறவை…!
    […]
    செழுந்தழல் தருமதன் 
    தகிப்பில்,
    எழுந்துயர்ப் பறந்தனவே……!!…

    ***

    தான் விண்ணில் பறக்கச் சிறகுகளையும், மண்ணில் மாந்தரனைவரும் நல்லவண்ணம் வாழும் நன்னாளையும் இறைவனிடம் இறைஞ்சுகிறார் திருமிகு. லட்சுமி.

    பறவைகள்போல சிறகுகள் வேண்டி
    இறைவனிடம் யாசிக்கிறேன்!
    […]
    விண்ணுயரப்
    பறக்க நான்
    நினைத்தாலும் மண்துகளாய்
    மிதிபட்டுக் கிடக்கின்றேன்!
    […]
    விதை விதைத்தவன் மட்டுமே
    அறுவடைக்கு சொந்தமாவான்!
    அறுப்புக்கு புது நாற்று சொந்தக்காரன்
    வந்த அதிசயத்தை தடுக்க உதவுவாயோ!
    […]
    விதை
    விதைத்தவனுக்கே
    விதைகள் சொந்தமென
    பரவச் செய்ய சிறகுகள்
    வேண்டி யாசிக்கிறேன்!
    ஏறுபோல உண்மைநடைபோட
    இலஞ்சம் இல்லா பெருவாழ்க்கை
    கொண்டுவர இல்லானுக்கும்
    உணவளிக்கும் மனம் மிகுந்துவர
    முதியோர் காப்பிட சிறகுக் கைகளை எனக்கருள
    இறைவனிடம் யாசிக்கிறேன்!

    ***

    ’எதிர்பார்ப்பு ஏதுமில்லை; ஏய்த்துப் பிழைப்பதில்லை. பறவைகளைப் பார்த்தேனும் நாம் பண்படுவோம்; பயனுறுவோம்!’ என்கிறார் திரு. சுரேஜமீ.

    இளமாலை வேளையிலே
      இளந்தென்றல் வீசிவர
    இரைதேடி வந்திட்ட
     இசைபாடும் புள்ளினங்கள்

    இரக்கத்தை நெஞ்சோடும்
     இருப்பவற்றைக் கையோடும்
    இயன்றவரை தினம்சேர்க்கும்
     இவரன்றோ தெய்வமென்பேன்!
    […]
    எதிர்பார்ப்பு இங்கில்லை
     ஏங்கும் நிலையில்லை
    ஏய்த்துப் பிழைப்பதில்லை 
     எவர்மீதும் வன்மமில்லை

    பரவிநிற்கும் மணற்பரப்பு
     பறந்துவிரிய பறவைக்கூட்டம்
    பார்த்துத் தெளிந்து
     பண்படுவோம்; பயனுறுவோம்!…

    ***

    ’கூடு திரும்பும் வேளையிலே குஞ்சுகளுக்கு இரை சேகரிக்கின்றீரோ?’ என்று பறவைகளைப் பார்த்து பக்குவமாய் வினாத்தொடுக்கிறார் திருமிகு. தமிழ்முகில்.

    …சிதறிக் கிடக்கும்
    தானியம் தனை
    சிந்தை சிதறாது
    அலகு தனில்
    அள்ளி எடுக்கிறீரோ ?
    […]

    கடலும் வானும்
    நீலப் பட்டு கொண்டு
    புது அரங்கம்
    அமைக்கின்றனவே !

    கூடு திரும்பும்
    நேரமதில் பிள்ளைகட்கு
    உணவெடுத்துச் செல்ல
    கருமமே கண்ணாய்
    செயலாற்றுகிறீரோ
    பறவைகளே ?

    ***

    சிந்திய உணவுண்டுச் சூதுவாது ஏதுமின்றிச் சுந்தரமாய் இறகுவிரிக்கும் பறவைகளின் சுதந்திரம் மானிடர்க்கு வாய்ப்பதெப்போ(து)? என்ற தன் ஏக்கத்தைக் கவிதையில் பதிவுசெய்திருக்கின்றார் திருமிகு. வேதா இலங்காதிலகம்.

    பதந்தரும் இறகு விரித்து
    மிதந்திடும் பறவைச் செயலை
    இதந்தரும் சுதந்திரமென ஒப்பிட்ட
    சுதந்திர அடையாளமாக்கினான் மனிதன்
    […]
    வெட்ட
    வெளியில் ஒன்றாய்
    கெட்ட பாகுபாடு சூதுவாதின்றி
    ஒட்டு மொத்த சிந்தனை
    எட்டும் உணவிற்கு மட்டும்!
    பட்டு சுதந்திரம் இதுவன்றோ!
    வெட்டு சூது வன்முறையென்று
    கிட்டிய சுதந்திரம் எங்கே!
    நட்டுவிடுங்கள் தர்மச் செயலை.

    ***

    ஒளிர்ந்திடும் ஞாயிற்றை, பறந்திடும் புள்ளினத்தை, அவற்றிற்கு உணவளித்து உயர்ந்திடும் மானுடத்தைக் காட்சிப்படுத்தியுள்ளார் திரு(மிகு?). மணிச்சிரல்.

    ஒளிர்ந்து இருக்கும் ஞாயிற்றால்
    வளர்ந்து இருக்கும் பூமியின்மேல்
    பரந்து இருக்கும் வானத்தின்கீழ்
    விரிந்து இருக்கும் மேகங்கள்
    பசித்து இருக்கும் உயிர்கள்
    ரசித்து இருக்கும் கண்கள்
    பறந்து இருக்கும் புள்கள்
    சிறந்து நிற்கும் மனிதர்!.

    ***

    ’வேடுவக் கைகளில் சிக்காமல் பாடிப் பறந்திடுங்கள் வான்வெளியில் சுதந்திரமாய்’ என்று பறவைகளிடம் பாசமொழி பகர்கின்றார் திருமிகு. புனிதா கணேசன்.

    …வேர் விட்ட வேடுவக் குணங்களால் ஊன் நாடியே எம்மை
    மூர்க்கத்தனமாகச் சிறை பிடித்து வதைக்கு முன்னர் –நாம்
    மார்க்கம் ஒன்றை வகுத்து சிறகை விரித்து உயரப் பறந்து
    சேர்வோம் ஓர் சுதந்திர பூமியை சிறகின் வலிமையால்
    […]
    தர்மம் தொலைந்த தாரணியில் தங்கி உணவு தேடுவிரேல்
    தேர்ந்தே எடுத்தீர் உணவதனை – சுதந்திர வேட்கை கொள்ளாது
    தீர்க்கும் பசிக்கு சொண்டுகளே போதும் இங்கு இனி –உமக்கு
    நேர்த்தியான சிறகெதற்கு சுதந்திரத்தை நாடாது ?

    ***

    வளமான கருத்துக்களை வாரியிறைத்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைத் தேர்ந்தெடுக்கும் தருணமிது!

    இனம், மதம், நிறம் என்று வெறிகொண்டலையும் மானுட மூர்க்கத்தை வெறுத்த சின்னப் பறவைகள் ஒற்றுமை எனும் பெருங்குணம் கொண்டு விண்ணுயரப் பறந்திடும் காட்சி இது என்று விளம்பிடும் கவிதையொன்றைக் கண்ணுற்றேன்.

    அக்கவிதை…

    “வாருங்கள் தோழர்களே
    விண்ணுயரப் பறந்திடுவோம்! ”

    கருப்பென்றும் சிவப்பென்றும் பேதலிப்பான்
    விருப்புடனே எந்நாளும் வாழமாட்டான்
    செருக்குடனே வாழ்ந்திங்கு கெட்டலைவான்
    வருத்தமே கொண்டழியும் மனிதன்வாரான்
    […]
    மதமென்னும் போர்வையிலே மாட்டிக்கொள்வான்
    நிதமிங்குப் போர்செய்து மனிதம்கொல்வான்
    இதமாகப் பேசுதலே இழிவென்பான்
    உதவாத குணமுடைய மனிதன்வாரான்
    […]
    ஆறறிவு தனக்கென்று ஆண‌வம்கொள்வான்
    ஆறுதலாய்ப் பேசுதலை அறியமாட்டான்
    மாறுதலை மனமொப்பி வாழமாட்டான்
    சீறுதலே குணங்கொண்ட மனிதன்வாரான்
    […]
    கூடிவாழும் நமையிங்கு விரட்டவாரான்
    சோடியாக வாழும்நம்மைத் துரத்தவாரான்
    பாடியாடி இரைசேர்ப்பதைத் தடுக்கவாரான்
    பேடியிவன் சகவாசம் நமக்குவேணாம்

    வாருங்கள் தோழர்களே
    விண்ணுயரப் பறந்திடுவோம்!

    சிந்தனைக்குத் தீனியிடும் இக்கவிதையை யாத்த திரு(மிகு?). வி.எஸ்.கே.வை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

    பறவைகளை வேட்டையாடிக் கொல்வதும், மூடநம்பிக்கையில் மூழ்கிப்போய் அவற்றைக் கூண்டிலடைத்துச் சோதிடம் சொல்வதும், பறவை பெயரில் லேகியம் விற்றுக் காசுபார்ப்பதையும் கண்டிக்கும் மற்றொரு கவிதையும் நம்மைச் சிந்திக்க வைக்கின்றது.

    கூட்டமாய் வரும் பறவைகளே….
    கொஞ்சம் நிதானம் தேவை.
    இரை போடும் மனிதரை
    இனியும் நம்பாதீர்.
    […]
    தானியங்கள் உருவில்
    விஷத்தினைத் தூவிடுவான்….
    மானியங்களாய் பறவைகளை
    மொத்தமாய் அள்ளிடுவான்….

    சுயநலக்காரனிவன்
    சுதந்திரத்தை அடகுவைப்பான்…
    பசுங்கிளியைக் கூண்டிலிட்டு
    சோதிடத்தைச் சொல்லவைப்பான்…

    பந்தயப் புறாக்களாய்ப்
    பறக்கவிட்டு பணம்பார்ப்பான்
    சிங்காரச் சிட்டுகளைச்
    சிறைபிடித்தழகு பார்ப்பான்…

    குருவிக்கூடு கலைத்து
    லேகியம் செய்துகொள்வான்….
    காக்கைகள் கரையுமென்று
    விருந்தினைப் புறந்தள்ளுவான்…
    […]
    இயற்கையைக் கொல்பவன்…

    இவனுக்குச் சிறிதும்
    இரக்கம் காட்டிடாதீர்
    இயற்கையே இவனைக் கொல்லும்,

    இனியும் இவனிங்கு
    திருந்திட வில்லையெனில்!

    திரு. இளவல் ஹரிஹரன் எழுதியிருக்கும் இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய்த் தேர்ந்தெடுக்கின்றேன்.

    கவிஞர்கள் அனைவர்க்கும் மீண்டும் என் வாழ்த்தும் பாராட்டும்!

     

    Share
  • அறிந்துகொள்வோம்!

    -மேகலா இராமமூர்த்தி

    தமிழன்னையின் தவப்புதல்வர்!

    நம் தாய்த்திருநாடாம் இந்தியா சுதந்திரக்காற்றைச் சுவாசிக்கத் தொடங்கி நாளையோடு (2015 ஆகஸ்ட் 15-ஆம் நாளோடு) 68 ஆண்டுகள் நிறைவுற்றுவிட்டன. இவ்வேளையில், சுதந்திரப் பயிரைத் தண்ணீர்விட்டு வளர்க்காமல் தம் கண்ணீரால் காத்த விடுதலைவீரர்கள் அனைவரையும் நன்றியோடு நினைவுகூர்ந்து போற்றுதல் நம் கடன்!

    இந்தியா எங்கிலுமே அன்று கொழுந்துவிட்டு எரிந்த விடுதலை வேள்வியில் நம் தமிழகத்து தீரர்களும் திரளாகப் பங்குகொண்டு தம் இன்னுயிரைத் துச்சமென மதித்து அவ் வேள்வித்தீக்கு நெய்வார்த்தனர். தம் எழுத்துக்களாலும் பேச்சுக்களாலும் மக்கள் மனத்தில் விடுதலை வேட்கையை ஊட்டிய பெருமக்கள்தாம் எத்தனை பேர்! அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் ’ஜீவா’ என்று தமிழக மக்களால் அன்பொழுக அழைக்கப்பட்ட அமரர். ப. ஜீவானந்தம் ஆவார்.

    அறிஞர்கள் பலரை ஈன்றெடுத்த நாஞ்சில் (கன்னியாகுமரி) மண்ணைச் சார்ந்த பூதப்பாண்டி எனும் கிராமத்தில் 1907-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி, பட்டம் பிள்ளை- உமையம்மாள் இணையருக்கு இணையில்லா மகனாய்ப் பிறந்தார் ஜீவா. பெற்றோர் அவருக்கு இட்டபெயர் சொரிமுத்து என்பதாகும்; அஃது அவர்களின் கிராமதெய்வமான ஐயனாரின் பெயராகும். பின்னாளில் அவர்பெயர் ’ஜீவானந்தம்’ என்றானதாகவும், தம் தனித்தமிழ்ப்பற்றின் காரணமாக அவர் தன்பெயரை ‘உயிரின்பன்’ என்று மாற்றிக்கொண்டதாகவும் அறிகின்றோம்.

    தொடக்க காலத்தில் காந்தியக்கொள்கைகளில் பெரும் ஈடுபாடுjeeva கொண்டிருந்தவர் ஜீவா. சிராவயல் என்ற ஊரில் அவர் நடத்திவந்த காந்தி ஆசிரமத்துக்கு அவருடைய அழைப்பின்பேரில் மகாத்மா காந்தி 1927-இல் வருகை புரிந்திருக்கின்றார். அப்போது ஜீவா தன் கையாலேயே நூற்றுவைத்திருந்த பத்தாயிரம் கெஜம் நூலை காந்தியாரிடம் வழங்கினாராம்.

    இருபத்தோரு வயதே நிரம்பிய இளஞ்சிங்கமான ஜீவாவின் கம்பீரத் தோற்றத்தையும், கேட்டார்ப் பிணிக்கும் நாவன்மையையும் கண்டுவியந்த காந்தியார், ஜீவாவின் ஆசிரமப் பணிகளை வெகுவாகப் பாராட்டிவிட்டு, “உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கின்றது?” என்று கேட்டிருக்கின்றார். புன்முறுவல்பூத்த ஜீவா, “இந்தத் தேசம்தான் என் சொத்து!” என்று சற்றும் தயங்காது பதிலளிக்க, திகைத்துப்போன காந்தியார் “இல்லையில்லை நீங்கள்தான் இந்தத் தேசத்தின் சொத்து!” என்று புகழாரம் சூட்டினாராம். காந்தியின் வார்த்தைகள் உண்மை… வெறும் புகழ்ச்சியில்லை என்பதைப் பின்னால் காலம் நிரூபித்தது.

    காங்கிரஸ் கட்சியின் தொண்டராக ஜீவா இருந்தபோதிலும் பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளில் நம்பிக்கையும் ஆர்வமும் கொண்டு, பல சுயமரியாதைக் கூட்டங்களில் கனல் கக்கும் சீர்திருத்தக் கருத்துக்களை முழங்கியிருக்கின்றார். அரசியலில் அவருக்கிருந்த அதே வேகமும் வீரியமும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுவதிலும் அவருக்கு இருந்தது.

    சட்டமறுப்பு இயக்கக் கூட்டங்களில் இடம்பெற்ற ஜீவாவின் கருத்தாழமிக்க பேச்சுக்கள் மக்களைக் காந்தம்போல் கவர்ந்திழுத்தன. மக்கள் மத்தியில் அவர் பேச்சுக்களுக்கு இருந்த செல்வாக்கைக் கண்டு அஞ்சிய வெள்ளை ஏகாதிபத்திய அரசு, ஜனவரி 7, 1932 அன்று ஜீவா காரைக்குடியில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தபோது, ’அதற்கு அடுத்தநாள்முதல் அவர் பொதுக்கூட்டங்கள் எதிலும் பேசக்கூடாது’ என்று வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டது. அச்சட்டத்தைத் துச்சமென மதித்த ஜீவா, மறுநாள் கோட்டையூரில் தடையை மீறிப் பேசியபோது கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இதுவே ஜீவாவின் முதல் சிறைவாசமாகும். பல்வேறு சிந்தனை மாற்றங்களை அச்சிறைவாசம் தமக்கு அளிக்கக் காத்திருந்ததை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.

    ஆம்! அச்சிறைவாசம் ஜீவாவின் வாழ்வில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே கூறவேண்டும். அப்போதுதான், பஞ்சாப் சிங்கமான பகத்சிங்கின் தோழர்கள் சிலரையும், வங்கப் புரட்சியாளர்களான ஜீவன்லால் கோஷ், சட்டர்ஜி ஆகியோரையும் சிறையில் சந்தித்தார் ஜீவா. அவர்களோடு, சோஷலிஸம், கம்யூனிஸம் முதலிய சித்தாந்தங்கள் பற்றியும், சோவியத் யூனியன் பற்றியும் நிறையவே விவாதிக்கக்கூடிய சூழல் அவருக்கு வாய்த்தது. அத்தோடு, பொதுவுடைமைசார் புத்தகங்கள் பலவற்றைப் படிக்கக்கூடிய அரிய வாய்ப்பும் அவருக்குக் கிட்டியது. இவையனைத்தும், அவர் உள்ளத்தின் ஆழத்தில் ஊறிக்கொண்டிருந்த பொதுவுடைக் கருத்துக்களுக்கு உரமூட்டின. அதன் பயனாய், 1932 ஜனவரியில் ஒரு காங்கிரஸ்காரராகச் சிறைசென்ற ஜீவா அவ்வாண்டு இறுதியில் ஒரு கம்யூனிஸ்ட்டாக சிறையிலிருந்து வெளியே வந்தார்.

    ஆயினும், சிறைச்சாலை நோக்கிய அவருடைய பயணங்கள் அதன்பிறகும் தொடர்கதை ஆயின. 1942-இல் தடுப்புக் காவல் சட்டத்தின்படி மீண்டும் சிறை, நாடுகடத்தல் என்று அலைக்கழிக்கப்பட்ட அவர் அனுபவித்த இன்னல்கள் ஏராளம் ஏராளம்! “ஜீவா ஏறினா ரயிலு; இறங்கினா ஜெயிலு” என்று அவருடைய தொண்டர்களே வேதனையோடு குறிப்பிடுமளவிற்குத் தம் வாழ்க்கையின் கணிசமான பகுதியை (பத்தாண்டுகள்) இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறையில் கழித்த செம்மல் அவர்!

    அரசியல் குறித்த ஜீவாவின் பார்வை வித்தியாசமானதும் போற்றுதலுக்குரியதுமாகும். ”அன்பும் அரசியலும் வேறு வேறல்ல; அன்பையும் சகோதரத்துவத்தையும் இவ்வுலகெங்கும் நிலவச்செய்வதே உண்மையான அரசியல் தத்துவமாகும். அன்பினை அழிக்கக்கூடிய எதுவும் அரசியலாக இருக்க முடியாது; இருக்கவும் கூடாது!” என்றார் ஜீவா.

    மகாகவி பாரதியின் மீதும் அவர் கவிதைகள் மீதும் பேரன்பு கொண்டிருந்த ஜீவா, பாரதி குறித்து எழுதியுள்ள நூல்களும், கட்டுரைகளும் பலவாகும். 1942-இல் தமிழகமெங்கும் பாரதிக்கு விழா எடுத்த சாதனையாளர் அவர். பாரதியின் மீது கடுமையான விமரிசனங்கள் இருந்து வந்த காலகட்டம் அது; அவ் விமரிசனங்களுக்கெல்லாம் துணிச்சலுடன் பதிலளித்த ஜீவா, பாரதியையும் அவரின் புரட்சிக்கொள்கைகளையும் தூக்கிப் பிடித்தார். பாரதி இருட்டடிப்பு செய்யப்படாமல் இன்றும் புகழொளியில் இருப்பதற்கு ஜீவாவும் ஒரு முக்கியக்காரணம் எனில் அது மிகையன்று!

    வங்க மாகவி இரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளிலும் பெரும் ஈர்ப்பும் ஈடுபாடும் இருந்தது ஜீவாவுக்கு. அதனால் தாகூரின் கீதாஞ்சலியைத் தமிழில் அழகாய் மொழிபெயர்த்தார்.

    இளமைக்காலம் தொட்டே தமிழ்ப்பற்று மிகுந்தவராய்த் திகழ்ந்த ஜீவா, பின்பு சிராவயல் ஆசிரமத்தில் பணிபுரிந்தபோது தமிழிலக்கியங்களிலும் நல்ல புலமையும் தேர்ச்சியும் பெற்றார். தொல்காப்பியம் தொடங்கி பாரதியார் கவிதைகள் வரை அனைத்தையும் ஆய்வுக்கண்ணோட்டத்தோடும் சமுதாய நோக்கோடும் அணுகிய அவர், பண்டை இலக்கியங்களில் காணப்பட்ட பெண்ணுரிமைக்கெதிரான கருத்துக்களைச் சுட்டிக்காட்டவும் தயங்கவில்லை.

    சான்றாக, தான் எழுதிய ’புதுமைப்பெண்’ எனும் நூலில் (இந்நூல் ஓர் சிறந்த கடித இலக்கியம்) அவர் குறிப்பிட்டுள்ள சில அரிய கருத்துக்களைக் காண்போம்:

    ”அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
    நிச்சமும் பெண்பாற் குரிய என்ப” (தொல் – களவியல்)

    எனும் தொல்காப்பிய நூற்பாவைச் சுட்டிக்காட்டிய ஜீவா, அச்சமும் நாணமும் மடமையும் பெண்டிரின் இயல்புகள் என்ற தொல்காப்பியரின் கருத்து அவருடைய காலத்திற்கு வேண்டுமானால் ஏற்புடைத்தாகலாம்; ஆனால் இருபதாம் நூற்றாண்டின் புதுமைப்பெண்களுக்கு இஃது ஒவ்வாத கருத்தாகும்” என்று கூறிவிட்டுப் பாட்டுக்கொரு புலவன் பாரதி பகன்ற,

    ”நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
    ஞான நல்லறம் வீர சுதந்திரம்
    பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்” என்பதே இன்றைய புதுமைப் பெண்களுக்குப் பொருந்தும் குணங்கள் என்கிறார்.

    இதுபோலவே, காலத்தை விஞ்சிநிற்கும் முற்போக்குக் கருத்துக்கள் பலவற்றைத் தாங்கிநிற்கும் வான்மறையாம் வள்ளுவத்திலும் பெண் குறித்தும் பெண்ணுரிமை குறித்தும் பேசப்படும் கருத்துக்களில் சில தமக்கு உடன்பாடானவை அல்ல என்கிறார் இந்தப் புரட்சிச் சிந்தனையாளர்.

    அதற்குச் சான்றுகளாக, வாழ்க்கைத் துணைநலம், பெண்வழிச் சேறல் முதலிய அதிகாரங்களிலுள்ள குறட்பாக்களை எடுத்துக்காட்டுகின்றார் அவர்.

    ”தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
    பெய்யெனப் பெய்யும் மழை”
    என்ற குறளில் ஆணுக்கு ஏவல் செய்வதே பெண்ணுக்குத் தெய்வ வழிபாடு என்று கூறும் வள்ளுவப் பேராசன், இதுபோன்றதொரு நடைமுறையை ஆணுக்கு விதிக்கவில்லை. மாறாக,

    ”அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
    பெண்ஏவல் செய்வார்கண் இல்”
    என்றுகூறிப் பெண்ணேவல் செய்யும் ஆண்களைக் கண்டிக்கிறார் என்றுகூறி வருந்துகிறார் ஜீவா.

    இவ்வாறு, காலத்திற்கொவ்வாத கருத்துக்கள் அருமையான நூல்களில் இருந்தாலும்கூட அவை கொள்ளத்தக்கவையல்ல; புறந்தள்ளத்தக்கவையே என்ற ஜீவாவின் நிலைப்பாட்டை இன்றைய புதுமைப் பெண்கள் நிச்சயம் வரவேற்பர்.

    மதமும் மனித வாழ்வும், சோஷலிஸ்ட் தத்துவங்கள், இலக்கியச்சுவை,
    சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள் ஆகியவை ஜீவாவின் கைவண்ணத்தில் உருவான வேறுசில நூல்கள் ஆகும்.

    சிறந்த சொற்பொழிவாளராகவும் திகழ்ந்த ஜீவா, கம்பராமாயணம் குறித்து உரையாற்றத் தொடங்கினால் உலகையே மறந்து மக்களனைவரும் அந்த அற்புதவுரையை வாய்பிளந்தபடி கேட்டுக்கொண்டிருப்பராம்!

    சரி…மீண்டும் அவருடைய அரசியல் பணிகளுக்கு வருவோம்.

    1952-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை சட்டசபைக்கான பொதுத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக, வடசென்னை வண்ணாரப்பேட்டை தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஜீவா, சட்டமன்றத்தில் தமிழிலேயே பேசி அனைவரையும் வியக்கவைத்தார்; முதன்முதலில் சட்டமன்றத்தில் தமிழில் பேசிய சான்றோர் அவரே என்பது குறிப்பிடத்தக்கது.

    பதவியில் இருந்தபோதும் சரி…அஃது இல்லாதிருந்தபோதும் சரி… பிறரிடம் உதவிவேண்டா எளிய வாழ்விற்குச் சொந்தக்காரர் ஜீவா!

    அவரின் எளிமைக்குப் பின்வரும் நிகழ்வுகள் சான்றுகளாகும்.

    காமராஜர் முதலமைச்சராக இருந்த காலமது! தோழர் ஜீவா தம் மனைவி பத்மாவதியோடு தாம்பரத்திலுள்ள ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்துவந்தார். ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அந்தப்பக்கம் வந்த காமராஜர், தன் காரோட்டியிடம், “இங்குதான் ஜீவாவின் வீடு இருக்கிறதாம்; வண்டியை அவர் வீட்டுக்கு விடு!” என்றிருக்கிறார். வண்டி அங்கிருந்த ஒரு குடிசையின் வாயிலில் வந்து நின்றது; இறங்கி உள்ளே போனார் காமராஜர். அங்கு அவர் கண்ட காட்சி அவரைக் கலங்க வைத்தது. ஆம்! அங்கே ஓர் கிழிந்த பாயில் படுத்திருந்தார் நாடறிந்த தலைவர் ஜீவா!

    கலங்கிய கண்களுடன் ஜீவாவைப் பார்த்த காமராஜர், “என்னோடு புறப்படுங்கள்! நான் போகும் நிகழ்ச்சிக்கு நீங்களும் வாருங்கள்!” என்றாராம். ”சிறிது நேரம் ஆகுமே… பரவாயில்லையா?” என்று கேட்டிருக்கின்றார் ஜீவா. ’சரி’யென்ற காமராஜரும் அவ்வாறே காத்திருந்தார். நேரம் ஓடிக்கொண்டிருந்தது; ஆனால் ஜீவா வரக்காணோம்! காரணம் என்னவென்று காமராஜர் பார்த்தபோது… தமக்கென்று இருந்த ஒரே வேட்டியைத் துவைத்து காயவைத்துக் கொண்டிருந்தாராம் எளிமையே வியக்கும் எளிமைவாதியான ஜீவா! பின்னர் இருவரும் நிகழ்ச்சிக்குப் புறப்பட்டுச் சென்றார்களாம்!

    ஜீவா வசித்துவந்த குடிசைவீட்டின் மோசமான நிலைகண்ட காமராஜர் ’முதல்வர் கோட்டா’வில் அவருக்கு அரசாங்க வீடுதர முன்வந்தபோதும் அதனை மறுத்து, ”என்று இந்த நாட்டில் வீடு இல்லாத ஏழைகள் அனைவருக்கும் குடியிருக்க வீடு கிடைக்கிறதோ அன்று எனக்குக் கொடுத்தால் போதும்” என்றிருக்கிறார் ஏழைபங்காளன் ஜீவா.

    அத்தகைய தவப்புதல்வர் 1963-இல் மறைந்தபோது தமிழகமே கதறியது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஜீவாவின் மறைவின்போது தாங்கொணாத் துயரத்தோடு எழுதிய பின்வரும் கவிதை ஜீவா என்ற மானுடனின் பண்புகளைச் சிறப்பாய் விளக்குகின்றது.

    தாங்கொண்ட கொள்கை தழைக்கப் பெரிதுழைப்பார்
    தீங்கு வரக்கண்டு சிரித்திடுவார் – யாங்காணோம்
    துன்பச் சுமைதாங்கி சீவானந்தம் போன்ற
    அன்புச் சுமை தாங்கும் ஆள்.

    ஈடு இணையற்ற மனிதராகவும், கொள்கைப்பிடிப்புள்ள குரிசிலாகவும், இலக்கியச் செல்வராகவும், எளிமைக்கு ஏற்றம்தந்த ஏந்தலாகவும் விளங்கியவர் அமரர் ஜீவா. பாரத மக்களின் மனத்தில் சோஷலிசக் கருத்துக்களை ஊன்றியவர் பண்டித நேரு என்றால், தமிழக மக்களின் மனத்தில் அக்கருத்துக்களை ஆழவிதைத்தவர் தோழர் ஜீவா!

    தாம் ஏற்றுக்கொண்ட லட்சியத்துக்காகக் காலமெல்லாம் உழைத்த உத்தமர் ஜீவாவையும் அவருடைய கொள்கைகளையும் நம் நெஞ்சில் நிறுத்துவோம்! அம்மாமனிதரை மறவாது போற்றுவோம்!

    ***
    கட்டுரைக்குத் துணைநின்ற தளங்கள்:

    https://en.wikipedia.org/wiki/P._Jeevanandham
    http://jeevainfo.blogspot.com/2008/10/blog-post.html
    https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA._%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 24-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. ராகுல் ரவீந்திரன் எடுத்த இந்தப் படத்தை இவ்வாரப் போட்டிக்குத் தேர்வு செய்து தந்தவர் நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படம் தந்தவருக்கும் அதனைத் தேர்ந்தெடுத்துத் தந்தவருக்கும் வல்லமையின் நன்றி!

    lady with veena

    காந்தள் மெல்விரல் சிவப்பப்
       -பாந்தமாய் யாழ்மீட்டும் பெண்ணே!
    காந்தமாய் உன்னெழில் ஈர்க்கப்
       -பாய்கிறது கவிதையெனும் வெள்ளம்! என்று பாடுமளவிற்குக் கவிமழை பொழிந்திருக்கின்றார்கள் நம் கவிஞர்கள் இவ்வாரம்!

    இனி, கவிவெள்ளத்தில் நீந்துவோம் வாரீர்!

    ’நங்கையிவள் நளின விரல்கள், நம்மில் இல்லாமல் போன இசைவரிகளைப் பதிந்துகொண்டிருக்கின்றன இப்பொன்மாலை வேளையில்…’ என்கிறார் திரு. கவிஜி.

    …தீப் பிடித்துக் கொண்ட
    தலை விரித்தலில்
    இருண்மைத் தத்துவ
    புறாக்களின் அணைந்த
    வாசத்தோடு
    ஒரு மாலையை
    பதிந்து கொண்டிருந்தது
    நம்மில் இல்லாமல்
    போன
    இசை வரிகள்

    ***

    ஆத்மாவுக்கு உயிரூட்டும் இசையில்லையேல் புவியும் பாலையாகும்; இசைவெள்ளம் பாய்கையில் பாறையும் பாதைவிடும்; கல்லும் கரையும் என்று உணர்ச்சிப்பெருக்கோடு அற்புதக் கவி வடித்திருக்கின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

    இசைதான் ஆத்மாவுக்கு
    உயிரூட்டும் !
    […]
    கான
    வெள்ளம்
    ஓடும் போது
    கல்லும் கரையும் !
    புல்லும் பசுமை யாகும் !
    பாதை விடும்
    பாறையும் !
    பிறவிப் பயனே
    நாத வீணையில் எழும்
    கீதம் கேட்பது !
    நலந்தானா,’ எனும் கண்ண தாசன்
    நாதஸ்வர இசைப் பாடல்
    காதில் விழும் போது
    இனிக்குது ! இனிக்குது !
    தேனாய் இனிக்குது !
    […]
    இசைக்கலை
    இல்லையேல்
    இப்புவியும்
    பாலையாய்ப்  போகும் !

    ***

    மடிதவழும் வீணையை மங்கையவள் மீட்டுகையில் அசையும் விரல்களின் அழகை வியக்கிறார் திருமிகு. சியாமளா ராஜசேகர்.

    மடிதவழும் வீணையை மங்கையவள் மீட்ட 
    கடிதுவரும் கூட்டமுடன் காக்கை –பிடித்த 
    இசையில் லயிக்க இனிமை ததும்ப
    அசையும் விரல்கள் அழகு. 

    ***

    மணமேடைக் கோலத்தைத் தன் மனமேடையில் அழகாய் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இந்த ஆரணங்கு, கையில் வீணையுடன் கல்யாண ராகங்களையும் இசைத்துப்பார்க்கிறாள் என்கிறார் திருமிகு. ஜெயஸ்ரீ ஷங்கர்.

    மணமேடைப் பயணமது  
    தொலை தூரமில்லையென 
    நாணமுகத் தாமரையும்  
    சற்றே குனிந்து  சிவந்திட 
    காற்றலைந்த கார்கூந்தல்  
    ஏதோ ரகசியம் சொல்லிட 
    மடியேந்திய மரகதத்தை  
    மோகனத் தளிர்விரல்கள் 
    மௌனத்தந்திகளைத் தழுவிடவே   
    […]
    கன்னியவள்
    மனமேடை 
    கண்ணிறைந்த சிருங்காரம் 
    காலமெனும் மணல்மேடையில் 
    உயிர்த்தந்திகள் மீட்டெடுக்கும் 
    கல்யாணராகங்கள் இசைத்திடும் 
    ஆனந்த வேளையிது….!

    ***

    ’உன் கார்மேகக் கூந்தலும், குளிர்மதி முகமும், படபடக்கும் இமைச்சிறகுகளும் என்னை வேரோடு சாய்க்கின்றனவே’ என்றுக் காதல் சொட்டும் கவிதையொன்றைத் தந்திருக்கிறார் திருமிகு. கார்த்திகா.

    …செஞ்சாந்துக் குழம்புகள் 
    தொடாமலே விரல்நுனிகள் 
    சிவக்குமடி ….கீதங்கள் தோற்கும்!

    பூவொன்று வந்தமர்ந்ததாலே 
    நிலமிங்கு மலர்ச் சொரியுதே..
    புள்ளினங்கள் ஆனந்த பள்ளு
    பாடித் திரியுதடி!
    […]
    மேகங்கள் உடுத்தி 
    வானவிற் கவிதையாய் 
    குளிர் முழுமதிக்  
    கண்களில் படபடக்கும் 
    இமைச் சிறகுகளால் 
    எனை சாய்ப்பது ஏனடி!!

    ***

    ’கருநிறப் புறாவே! நீ வெண்புறாவாய் மாறிச் சாந்தியும் சமாதானமும் நிலவும் உலகைப் படைக்கமாட்டாயா?” என்று பூவையொருத்தி தன் ஏக்கத்தை வீணையில் விளம்புவதைக் காண்கிறோம் திருமிகு. லட்சுமியின் கவிதையில்.

    …வான்வெளியில் சிறகடிக்க
    தனக்குரிய  இடத்தை 
    எந்நாளும் தாரைவார்க்க
    அமைதிப்பூங்கா அதிபதி
    தமிழ்ப்பேடை அனுமதியாள்!
    […]
    இன்னொருமுறை
    வெடிகுண்டுப் பாடம்
    படிக்க தமிழ்ப்பேடை தயாரில்லை!
    அமைதிப்பூங்காவில் தமிழ்மகள் ரோஜாக்கள்
    அமைதியாக உறங்குகின்றன!
    அனாதைகள் யாரும் அவர்களாய்
    பிறப்பதில்லை!
    […]
    பறந்துவிடு
    ! உரிமையான
    பங்கிருந்தால் உணர்ந்து
    வெள்ளைப்புறாவாய் மாறி
    அதனை வென்றுவிடு!
    அர்த்தமற்ற அனர்த்தங்கள்
    இனியாவது இல்லாமலிருக்க
    மனதை மாற்றிப் பறந்திடுவாய்!
    […]
    தமிழ்ச்சுவையால் மட்டுமே
    ஒருங்கிணைந்தோமன்றி
    வேறெதாலும் அல்ல
    என்றே உணர்ந்திடுவாய்!…

    ***

    ’மாசில் வீணையை மீட்டிக் கானல்வரியிசைக்கும் காரிகை மாதவியை ஒத்த மாதிவள்!’ என்று இப்பெண்ணைப் போற்றுகிறது திரு. ரா. பார்த்தசாரதியின் கவிதை.

    மாசில் வீணையும் மாலை மதியமும்,
    வீசு தென்றல் விளங்கிடவே
    நாவுக்கரசின்  சொல்லிசை செப்பிடவே
    வீணையில் எழும் நாத  இன்பம்
    கலைமகள் எழுப்பிடும் கைவண்ணம்
    வாணியை நினைந்து காரிகை வீணை மீட்டுகிறாள்
    தன் விரலால் இன்னிசையை கூட்டுகிறாள்
    மாதவி போல் கடற்கரையில் கானல்விரி பண் இசைக்கின்றாள் !

    ***

    ’கைகள்முளைத்து வீணையிசைக்கும் இச்செந்தாமரை கண்டு கரகோசம் செய்கின்றன பறவைகள்!’ என்ற திரு. சாக்கிரின் சுவையான கற்பனை நன்று!

    தரையினில் செந் தாமரை இதழிற்குக்
    கைமுளைத்து
    வீணையையேந்தி விரலசைத்துஅதன்
    நரம்புகள் துடிக்கவைத்து
    காற்றின் அணுக்கள் அதிர வைத்து
    அதன் அமைதியை லங்கரிக்க
    சிறகடித்து படபடத்து கரகோசம் செய்தாடுதே பட்சிகள் அவளருகே

    ***

    பெண்ணையும் வீணையையும் அழகாகச் சிலேடையாக்கியிருக்கின்றார் திரு. பழனிச்சாமி.

    தேன்போல் மொழிவதால் தெய்வீகம் உள்ளதால்
    வான்போல் பொழிந்திடும் வன்மையால் – மேன்மையாய்
    வல்லவர்கை சேர்ந்து சிறப்புறும் தன்மையால்
    நல்லதோர் வீணையாம் பெண்.

    ***

    ’பொன்னகையை நிறமிழக்கச் செய்யும் புன்னகைச் செல்வியின் மென்கைகள் எனைத் தழுவ என் நரம்புகள் மெல்லிசையை வார்க்கும்’ என்கிறது வீணை திரு(மிகு?). மணிச்சிரலின் கவிதையில்.

    மென்விழியால் பொன்னகையும் தன்னிறமிழக்கும்
    மாடந்துறந்து ஆண்புறாவும் உன்பின்னலையும்
    மதிமயக்க உன்கரங்கள் என்மேல்தவழும்
    மங்கையின் மென்மடிபடர்ந்த என்னையிசைக்கும்
    மென்னொளியில் மெல்லிசையில் என்நரம்பதிரும்

    ***

    இசைக்குள் நீயும் உனக்குள் இசையுமாக ஓர் அத்வைதம் இங்கே அரங்கேறுகிறதே’ என்று வியந்துபோகிறார் திரு. கொ.வை. அரங்கநாதன்.

    …வீணையின் மீதான
    உன் விரல் ஸ்பரிசம்
    ஞானத்தை ஆக்கும்
    நல் இசையாகி
    வெளியில் விரிந்து
    வேதனைத் தவிர்க்கும்

    இசைக்குள்  நீ
    உனக்குள் இசை
    அத்வைதம் ஒன்று
    அழகாய் இங்கே அரங்கேறுகிறது!

    ***

    பெண்ணிவளின் விரலெனும் குழந்தை வீணையை மீட்டக் கிடைக்கிறதே இசையெனும் சிணுங்கல் என்கிறார் திரு. மெய்யன் நடராஜ்; மெய்தானோ?

    இவளின் விரல்குழந்தை வீணை நரம்பில் 
    தவழ்கின்ற வேளை இசையாய் சிணுங்கும் 
    இவளின் மனமென்னும் வீணையை மீட்ட 
    எவருண்டு என்பதைக் கேட்டு.

    ***

    வீணை நரம்புகள் கொஞ்ச, கல்யாணி ராகம் கெஞ்ச, அணங்கிவளின் ராக வேள்வியில் நாகம்கூட மயங்கிப் படமெடுக்கும் என்பது திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனின் நம்பிக்கை.

    கலை மகள் கைப் பொருளாம் வீணை
    கையிலெடுத்து மீட்டிடுவாய் இசைத் தேனை
    கேட்போருக்கு உன் இசை தேவகானம்
    கவி விரித்து இசைக்கின்றாய் அமுதகானம்
    இசை பாடும் வீணை நரம்புகள் கொஞ்ச கொஞ்ச
    […]
    ஆடிவரும் தென்றலோ துஞ்ச துஞ்ச
    ஒப்பில்லா உன் மீட்டலுக்கு நாகம் கூடபடமெடுக்கும்

    ***

    விரகதாபத்தில் வீணைமீட்டும் வனிதையின் இசைவழியே தூது செல்லும் புறா, நல்ல சேதி கொண்டு வருமா? என்று வினவுகிறார் திரு. இளவல் ஹரிஹரன். பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

    …தொட்டுத்தடவி மீட்டும் விரல்கள்
    இட்டுக்காட்டும் இசையின் இசைவில்
    தொலைதூரப் பணியில் இருக்கும்
    கணவன் காதுகளை எட்டும் விழைவில்

    நெஞ்சக் கூட்டில் படபடக்கும் சிறகுகளால்
    கொஞ்சும் புறாவாய்த் துடிதுடிக்கும் மனதால்….

    விரகதாபத்தில் வீணைமீட்டும்
    இசைவழியே தூது செல்லும் புறா
    நல்ல சேதி கொண்டு வருமா……
    […]
    சோகத்தின் சுக ராகங்களில்
    தீரா விரகப் பெரு மூச்சுடன்…..
    இசைக்க மறந்த இராகம்
    எதுவென்று புரிந்ததா பெண்ணே…..!

    ***

    ’அச்சம் மடத்தையெல்லாம் துச்சமெனத் தூக்கியெறியச் செய்துவிட்ட என் விரகத்தின் உச்சம் இவ்வீணையின் வழியே இசையாய்க் கசிவது உன் காதில் விழவில்லையா?’ என ஏக்கப்பெருமூச்சுவிடும் ஏந்திழையைக் காட்டுகிறார் திருமிகு. புனிதா கணேசன்.

    …கம்பீரமான உன் நடையின் ஞாபகங்கள்
    கம்பீர நாட்டையாகி என் வீணைத் தந்திக்
    கம்பிகளின் நாதமாய் கலந்தே நடமிட்டு ……….
    […]
    அச்சம் மடம் நாணம் பயிர்ப்பிழந்து என் காதல்
    கச்சிதமாய் உன் சிருங்கார நினைவுடனே……….
    […]
    காலைப் பனியின் உருக்கம் கதிரவன் வரவில்
    சோலைக் குயிலின் கீதம் முகாரியாக நின்
    மேலான வரவின்றி என் வீணைத் தந்திகளில்…………
    ஆதலினால் பூங்காற்றுச் சுமந்து வரும் என்
    காதலின் கதன குதூகலங்கள் இன்னும் உன்
    காதில் கனிந்தே விழவில்லையோ?

    ***

    ’குடும்ப வாழ்க்கை எனும் வீணையையும் பெண்ணிவள் இசைவாய் மீட்டிட, நல்லிசை பிறக்கும்; துயரங்கள் பறக்கும்’ என்பது திரு. செண்பக ஜெகதீசனின் எண்ணம்.

    வீணை மீட்டிப் பண்பாடும்
    வாணி யொத்த பெண்மகளே,
    பேணும் குடும்ப வாழ்க்கையையும்
    பண்புடன் வீணையாய் மீட்டிடுவாய்,
    காணுவாய் கணக்கிலா ராகங்களை
    களிப்பெலாம் கொண்டு வந்திடுமே,
    துணென ஆவாய் குடும்பத்திலே
    துயரதைப்  போக்கிடும் உன்னிசையே…!

    ***

    பொன்னிகர்த்த பெண்ணின் கரத்தில் இலாவணியமாய்த் தவழும் தஞ்சாவூர் வீணையின் சிறப்பை நம் செவியினிக்கப் பேசுகிறார் திருமிகு. வேதா இலங்காதிலகம்.

    தஞ்சையை
    ஆண்ட ரகுநாத மன்னன் காலத்திலுருவாகி
    ஈண்டது தஞ்சாவூர் வீணை என்றும்
    ஆண்டது ரகுநாத வீணை என்றும்.
    சக்தி அம்சம் சிவ அம்சமும்
    பொத்திய மெல்லிசை, நரம்புக் கருவி
    இலயித்திங்கு இரசித்து இலயம் தவறாது
    இலாவணியமாய் வாசிக்கிறாள் இளம் கோதை.
    […]
    பலாமரத்தி
    லுருவகமான அழகிசைக் கருவி.
    விலாவாரியான நுட்பங்கள் தத்துவங்கள் நிறையிசை.
    உலகளவு புவிசார் குறியீடு இதற்கு!
    ஆம்! தஞ்சாவூர் வீணையென அழைப்பு.

    ***

    ’கடலலைகளோடு போட்டியிடும் நாத அலைகளில் திளைக்கவே புறாவும் பறந்தோடி வந்ததோ?’ என்று ஐயமுறுகிறார் திருமிகு. தமிழ்முகில்.

    விரலின் ஸ்பரிசம் பட்டதும்
    இசையாய்
    தந்திகள் புன்னகைக்க
    கடல்
    அலைகளுக்கு போட்டியாய்
    நாத
    அலைகளும்காற்றினில்
    கலந்து
    தவழ்ந்து வர
    எங்கும்
    நீக்கமற நிறைந்திருக்கும்
    இசையின்
    வாசம் தனை
    சுவாசிக்க
    புறாவும் கூட
    பறந்தோடி
    வந்ததுவோ ? …

    ***

    ’ஆயிழை இவளின் இசையொலி கேட்டு ஆதவனும் மயங்குகிறான்’ என்பது திரு. செ. பாரதியின் கணிப்பு.

    குழந்தை யென வீணை
    மடி மீது தவழ
    சித்திரமாய் யுவதி யொருத்தி
    இசைத்துக் கொண்டிருகிறாள்
    சமுத்திர மணற்  துகள்களில்
    பகலை ஆண்டிட்ட
    ஆதவனும்
    புலம்பி அலையும்
    மேகக் கற்றைகளில்
    மயங்கிக் கொண்டிருக்கிறான்… 

    ***

    விரல் புண்ணுற வீணை மீட்டியபடிப் பெண்ணொருத்தி எழுப்பும் வினாக்களின் பட்டியலைக் காண்கிறோம் திரு. சத்தியமணியின் கவிதையில்.

    மடியினில் தவழ்ந்திடும் பொன்வீணையே  – பெண்
    மனதினில் எழுந்திடும் பலகேள்வியே
    விரல்கள்    புண்ணுறவே உனைமீட்டினேன் – மென்
    தந்திகள் அதிர்வினில் விடைகேட்கிறேன்  ()

    பேருடன் பிறந்தகத்தில் அலைமகளா பின்
    சீருடன் புகுந்தகத்தில் விலைமகளா
    கல்லான மனங்கண்டேன் மலைமகளா – மதி 
    இல்லாமல்  உனைமீட்டும் கலைமகளா
    இல்லற வாழ்க்கைதர கல்யாணமா ? – இல்லை
    இதுவும் ஒருவியாபார வைபோகமா ?   ()
    […]
    பெண்பாதி  ஆண்பாதி  சிவனாகினான்
    பெருமாட்டி  தன்நாவில் அயனேந்தினான்
    தாயாரை   தன்மார்பில் மால்தாங்கினான்
    ஓயாமல் சக்தியென புகழ்பாடினார்
    கற்பழிப்பு கருசிதைவு  இவை ஏற்பதா ?-  இனும்
    அவமதிப்பு ஆபாசம்! பெண் தோற்பதா? ()

    ***

    நல்ல சிந்தனைகளைக் கவிதைகளில் பெய்திருக்கும் கவிஞர் பெருமக்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய் நான் தெரிவு செய்திருப்பதை இப்போது உங்களுக்கு அறியத் தருகிறேன்.

    ’நல்லதோர் வீணைகொண்டு நல்லிசையை நாளும் பயின்றால் மனமது தூய்மையுறும்; செயலது செம்மையுறும்; அகவிருள் அகன்றோடி அறிவொளி துலக்கமுறும்’ என்று வீணையின் வழியே வாழ்வியல் தத்துவத்தைப் பாங்காய்ப் பாய்ச்சியிருக்கின்றது பின்வரும் கவிதை…

    நாதம் தருமின்பம் நாளும் சுகமென்பேன்
    போதும் எனும்சொல்லே போகும் மொழியின்றி
    நானும் விரல்கொண்டு மீட்ட வரும்நாதம்
    வீணை விளக்கும் ஒருவாழ்க்கைத் தத்துவமே!
    வாழும் உலகினிலே வாழ்வும் பொருளாக
    எந்தன் ஓலிபோல இன்பம் பரப்பிடுக!

    மண்ணும் மயங்கிடுமே புள்ளும் உணர்ந்திடுமே
    மானுடம் போற்றும் இசையின் வடிவமெலாம்
    மங்கை உளத்தினிலே தெய்வம் குடிகொண்டு
    மாறும் உலகிற்கே வேராய் இருந்திடுமே
    பண்பு நெறிகளெலாம் தானாய் வளர்ந்திட்டு
    எண்ணம் மலர்வண்ணம் எங்கும் விரிந்திடவே!

    சொல்லில் வருமோசை கூட்டும் சுவைதனையே
    சுற்றம் வளர்ந்தோங்கி நல்லுறவும் பெற்றிடவே
    சுத்தம் மனதேகி உச்சம் செயலாக்கி
    சூழும் இருளகற்றும் நாதம் நமக்கென்றும்
    நல்லவை நாடுமென்றும் அல்லவை விலக்கிடும்
    நல்லிசை பயின்றிடுவோம்  நீடு உயிர்வாழ!

    தானும் தலைக்கேறா வீணை மனதிருந்தால்
    தானாய்த் தகைசேரும் நாதம் இணையாக!

    இக்கவிதையை இயற்றியிருக்கும் கவிஞர் திரு. சுரேஜமீயை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுசெய்துள்ளேன். பாராட்டுக்கள் கவிஞரே!

    ***

    வீணை ராகங்கள் வழியே தன் காதலை ஓதிடும் மங்கையொருத்திக்கு ஏழிசைச் சுரங்கள்கூடத் தன் காதலனின் நகைப்பெனக் காதில் விழுகின்றதாம்! விந்தைதான் அல்லவா!

    அக்கவிதை…

    …சத்தமில்லா மலென்
    உள்வளர்ச் சங்கது,
    என்மனக் காதலை
    ஓத வரும்…!

    நல்மனக் காதலன் 
    கள்தரும் காதலை
    புள்ளது பாடவே
    தேடி வரும்…!

    வாதமும் காதலின்
    தேனதைக் கோதவென்
    கார்குழல் தோளிலே
    ஆடி விழும்…!

    கைமுதற் கால்வரை
    ஊறுமென் காதலை
    வீணையின் தந்திகள்
    பாடிடு மோ?

    தீண்டினேன் தீண்டவும்
    வீணையும் தந்ததே
    நாயகன்  நகைக்கின்ற
    ஏழு சுரம்……!

    திரு. சுந்தர் புருஷோத்தமனின் இப்புதுக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய்க் குறிப்பிட விரும்புகிறேன்.

    ***

    உற்சாகத்தோடு தொடர்ந்து கவியெழுதுங்கள் தோழர்களே! மீண்டும் சந்திப்போம்!

     

    Share
  • அறிந்துகொள்வோம்!

    -மேகலா இராமமூர்த்தி

    சின்னப் பையனும் கொழுத்த மனிதனும்!

    பெயர்களைப் பார்த்ததும் சின்னப் பையன் ஒருவனைப் பற்றியும், கொழுத்த மனிதன் ஒருவனைப் பற்றியும் ஏதோ சொல்லப் போகிறேன் என்றுதானே நினைக்கிறீர்கள்?

    நீங்கள் நினைப்பது சரிதான்…நான் சொல்லப்போவது அவர்கள் இருவரையும் பற்றித்தான்! ஆனால் அவர்களிருவரும் உயிருள்ள மனிதர்கள் அல்லர்! பின்பு யார் என்கிறீர்களா? அவர்கள் இருவரும் ஒரு நாட்டையே பேரழிவுக்கு உள்ளாக்கிய அணுகுண்டு வடிவிலான அரக்கர்கள் ஆவர்!

    இனியும் புதிர் எதற்கு? சின்னப் பையனும் (Little Boy), கொழுத்த மனிதனும் (Fat Man) இரண்டாம் உலகப் போரின்போது (World War II) அமெரிக்கா, ஜப்பான் நாட்டின்மீது வீசிய இரு அதிபயங்கர அணுகுண்டுகள்!

    இவ்வணுகுண்டுகளை ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின்மீது அமெரிக்கா வீசியதன் எழுபதாவது ஆண்டாகும் (1945 – 2015) இது.

    hiroshimaஉலகையே உலுக்கிய இரண்டாம் உலகப்போர் 1939-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-இல் தொடங்கி 1945-ஆம் ஆண்டு முடிய நடைபெற்றது என்பதை நாமறிவோம். அணுகுண்டு வீச்சு, இன அழிப்பு என மிகப்பெரிய அளவில் உயிர்ச்சேதத்தையும், பொருட்சேதத்தையும் விளைவித்த அப்போரையும் அதனால் ஏற்பட்ட கோர விளைவுகளையும் யாரே மறப்பர்?

    இவ்வேளையில், இரண்டாம் உலகப்போர் பற்றி சற்றே நாம் நினைவுகூர்வது, எந்தத் தருணத்தில் அமெரிக்கா அணுகுண்டுகளை வீசி ஜப்பானைத் தாக்கியது என்பதை அறிந்துகொள்ள உகந்ததாய் இருக்கும்.

    அச்சுநாடுகள் (Axis Alliance) என்றும், நேச நாடுகள் (Allies Alliance) என்றும் உலக நாடுகள் இரு அணிகளாகப் பிரிந்து இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டன. அச்சுநாடுகள் அணியில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்டவையும், நேச நாடுகள் அணியில் பிரான்ஸ், பிரிட்டன், போலந்து போன்றவையும் இணைந்து இருபிரிவுகளாய் நின்றன. போலந்தின் மீது (தேவையில்லாமல்) படையெடுத்து இவ்வுலகப்போருக்குப் பிள்ளையார்சுழி போட்ட ஜெர்மனியின் சர்வாதிகாரியும், நாஜிக் கட்சியின் தலைவருமான (Leader of Nazi Party) அடால்ஃப் ஹிட்லர், போரின் தொடக்க காலங்களில் வெற்றிமேல் வெற்றியைக் குவித்தபோதிலும், ஐரோப்பா கண்டத்தையே தன்வசப்படுத்திவிட வேண்டும் எனும் அவருடைய பேராசை, சோவியத் யூனியனின் (Union of Soviet Socialist Republics) சர்வாதிகாரியும், அஞ்சாநெஞ்சருமான ஜோசப் ஸ்டாலினால் தவிடுபொடியானது.

    1942-ஆம் ஆண்டு தன் படைகளுடன் ஜெர்மனியின் பெர்லின் நகருக்குள் நுழைந்த சோவியத் யூனியன், அதனைக் கடுமையாகத் தாக்கத் தொடங்கியது. ஒரு சில மாதங்களே நீடித்த இச் சண்டையில் படுதோல்வியைச் சந்தித்த ஜெர்மனி, நிபந்தனை ஏதுமின்றி சோவியத் யூனியனிடம் சரணடைந்தது. (ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் சரணடையாமல் தற்கொலை செய்துகொண்டார் என்றும் தப்பியோடித் தலைமறைவாகிவிட்டார் என்றும் இருவேறு விதமான வதந்திகள் இன்றளவும் காற்றில் உலாவருகின்றன.)

    இதற்கிடையில் 1941-ஆம் ஆண்டு டிசம்பர் 7-ஆம் தேதி (அச்சு நாடுகளில் ஒன்றான) ஜப்பான் அமெரிக்காவுக்குச் சொந்தமான ஹவாய்த் தீவிலுள்ள முத்துத் துறைமுகத்தை (Pearl Harbor) தாக்கியது; அங்கு நிறுத்திவைக்கப்படிருந்த அமெரிக்காவின் போர்க்கப்பல்கள், விமானங்கள் ஆகியவை இத்தாக்குதலால் பெருமளவில் சேதமடைந்தன. முத்துத் துறைமுகத்தைத் தாக்கியதன் மூலம் அமெரிக்காவுக்குச் சரியான புத்தி புகட்டிவிட்டதாக நினைத்த ஜப்பான் அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து அமெரிக்காவின் விமானத்தளமொன்றையும் தாக்க, அதுவரை இரண்டாம் உலகப்போரில் கலந்துகொள்ளாமல் நல்ல பிள்ளையாக(!) ஒதுங்கியிருந்த அமெரிக்காவும் களத்தில் குதித்தது. அப்போது பிடித்தது ஜப்பானுக்கு ஏழரைச்சனி!

    ஆம்! ஜப்பானை பழிக்குப்பழி வாங்க நேரம் பார்த்துக்கொண்டும், அதற்காக அணுகுண்டுச் சோதனைகள் நடத்திக்கொண்டுமிருந்த அமெரிக்கா 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி, ஜப்பானின் தரைப்படைகளுக்கான முக்கிய ராணுவத் தளவாட மையமாகவும் (one of the chief supply depots for the Japanese army), அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகவும் திகழ்ந்த ஹிரோஷிமாவின் மீது ’சின்னப் பையன்’ (Little Boy) (இப்பெயர் அமெரிக்க முன்னாள் அதிபர் ரூஸவெல்ட்டைக் (Franklin Roosevelt) குறிக்கும் என்று கருதப்படுகிறது!) எனும் பெயர்கொண்ட அணுகுண்டை வீசியது. அதற்கடுத்த ஓரிரு நாட்களிலேயே அதாவது ஆகஸ்ட் 9-ஆம் தேதி ஜப்பானின் மற்றொரு தொழில்நகரமான நாகசாகியின்மீது ’கொழுத்த மனிதன்’ (Fat Man) எனும் பெயர்கொண்ட மற்றொரு அணுகுண்டையும் வீசி ஜப்பானில் மிகப்பெரிய அழிவை உண்டாக்கியது.

    கொழுத்த மனிதனைவிடச் சின்னப் பையன் வீரியத்தில் குறைவாகnagasaki இருந்தபோதிலும் அவனே பெருத்த சேதத்தை உண்டாக்கினான் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தோராயமாக, 2 இலட்சத்து 15 ஆயிரம் பேர் இவ்விருக்குண்டு வெடிப்புகளினால் ஜப்பானில் இறந்துபோனார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. எதிர்பாராத இக் குண்டுவெடிப்புகளால் தான் கனவிலும் கருதியிராத பேரழிவைச் சந்தித்த ஜப்பான், ஆகஸ்ட் 14-ஆம் தேதி நிபந்தனை ஏதுமின்றி நேச நாடுகள் கூட்டணியிடம் சரணடைந்தது.

    இரண்டாம் உலகப்போர் முடிந்து இப்போது பல பத்தாண்டுகள் கடந்துவிட்டபோதினும், அப்போரும் அதனால் ஏற்பட்ட கோர அழிவுகளும் மாறாத வடுக்களாய் இன்றும் ஜப்பான் மக்கள் மனத்தில் தங்கிவிட்டன என்றே கூறவேண்டும்.

    ’வாளெடுத்தவன் வாளால் மடிவான்’ என்ற பழமொழிக்கேற்பப் போரில் ஈடுபடும் நாடுகள் என்றுமே ஆதாயத்தைவிட அழிவையே அதிகம் சந்தித்திருக்கின்றன என்பது வரலாறு நமக்குக் காட்டும் உண்மையாகும்.

    ’ஒருவனை யொருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்று; இவ்வுலகத் தியற்கை’ என்று மனிதனின் போர்க்குணத்துக்குப் புறநானூறு நியாயம் கற்பிக்க முனைந்தாலும், அன்பும் அருளும், எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும் எனும் நல்லுள்ளமும் பெற்றிருக்கும் மாந்தர், மனிதத்தை மரி(ற)க்கச் செய்யும் இப்போர்களைக்கண்டு இரத்தக் கண்ணீர் வடிக்கவே செய்கின்றனர்.

    ஆகையால், அழிவுக்கு வித்திடும் போரையும் பகைமையையும் ஒழித்து, உலக நாடுகள் இனியேனும் ஒன்றுபட்டால் மக்கள் அனைவர்க்கும் உண்டு நல்வாழ்வு!

    ***

    கட்டுரைக்குத் துணைசெய்த தளங்கள்:

    https://en.wikipedia.org/wiki/World_War_IIa

    http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/august/6/newsid_3602000/3602189.stm

    Share
  • படக்கவிதைப் போட்டி 23-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. சுரேஷ் ராமின் புகைப்படத்தைப் போட்டிக்கான படமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் எம் நன்றி!

    fisherman

    வலைவீசும் கலையில் வல்லவராய் இருந்தும் எதிர்பாராமல் ஏற்படும் முடிச்சுக்கள், இம்மீனவ நண்பரின் நேரத்தை விழுங்கினாலும் அதற்கெல்லாம் சோர்ந்துபோகமாட்டார் இம்மறவர் என்றே தோன்றுகின்றது. ஐயா! மீனெறி தூண்டிலை நம்பிக்கையோடு கடலில் வீசுங்கள்! வெற்றி உம் வசப்படும்!

    இவ்வாரக் கவிதைப்போட்டிக்கு வந்திருக்கும் கவிமுத்துக்களை அள்ளி இரசிக்கும் நேரமிது!

    நீரிலே மீன் சுழலலாம்; வீசுகின்ற வலை சுழலலாம்; ஆனால் வலைவீசும் மனிதர் மட்டும் சுழன்றுவிடக்கூடாது; அப்போதுதான் அவர் வாழ்க்கைச் சக்கரம் சுழலும்! என்கிறார் திருமிகு. ரேவதி நரசிம்மன்.

    மீன் சுழல
    வலை சுழல
    நிற்கும் பரிசலும் சுழல
    மீனுக்குக் காத்திருக்கும் 

    முதியவருக்கு மட்டும் 
    தலை சுற்றவில்லை
    மீனைப் பிடித்தே வீடு திரும்புவார்.

    அப்பொழுதுதான் வாழ்வு சுழலும்.

    ***

    ஓட்டை விழுந்தால் முழுகிப்போகும் பரிசில் வாழ்க்கை எமது; அவ்வோட்டையை அடைத்துக்கொண்டு நல்வாழ்வை எதிர்நோக்கி நிற்கும் மீனவர் நாங்கள்!” என மீனவர் ஒருவர் தம் அவலவாழ்க்கையைப் பேசுவதாய்க் கவி புனைந்துள்ளார் திரு. இளவல் ஹரிஹரன்.

    வலை வீசி வாழும் வாழ்க்கையில்
    வாழ்க்கையே வலை வீசுகிறது,
    சிக்காத மீன்களாய் நாங்கள்….
    ஓட்டை விழுந்தால் நீரில்

    மூழ்கும் பரிசல் வாழக்கை,
    ஓட்டையை அடைத்துக்கொண்டு நாங்கள்….
    மீன்பிடி வலையில்

    சிக்கல் விழுந்த வாழ்க்கை,
    வலையில் சிக்கா மீன்களாய் நாங்கள்……
    […]
    வாழ்க்கை ஒருமுறை தான்,

    வாழ்ந்து பார்க்க தினமும்
    கற்றுக்கொடுக்கும்
    பரிசலும் ஆற்றுநீரும்
    சிக்கல் விழும் வலைகளும்
    சிக்கியும் நழுவும் மீன்களுமே…..

    ***

    தமிழகம் பெற்றெடுத்த நன்முத்தாம் அமரர். கலாமை இழந்து கலங்கும் மக்களில் ஒருவரான இம்மீனவர், அம்முத்தைக் கடலில் தேடுவதாய்ச் சுவையானதொரு கற்பனையை வார்த்திருக்கின்றார் திருமிகு. லட்சுமி.

    நேர்மை வீணையை மீட்டி
    மறைந்த கடலோரக் கவிதையே!
    ஆழம்காணா ஆயிரம் ஆழி  மனங்களின்
    உண்மைமுகம் காணத் துடிக்கின்றேன்!
    வாழ்க்கைப் படகுப் போராட்டத்தில்
    நீ வென்ற பாதையிலே
    விரைவாக நடைபோடக் காத்திருக்கும்
    இளைய சமுதாயம் எங்கே?
    […]
    தமிழகம் பெற்றெடுத்த நல்முத்தே!
    உன்னைப்போன்ற நல்முத்தை
    உலகெங்கும் வலைவீசித்தான் பார்க்கின்றேன்!
    […]
    ஆயிரங்கோடி அறிவை அகிலத்திற்களித்த
    அற்புத ஒளிவிளக்கே!
    நீ பிறந்த தீவினிலே நானும்தானே
    ஓட்டுகின்றேன்!
    ஒரு சாண் வயிறு வளர்க்க
    ஓடாய்த் தேய்ந்தாலும் 
    தமிழ்வழிக்கல்வி செழிக்க வாய்ப்பில்லை!
     தொழில்நுட்பத்தமிழ் கல்விகாண
     உழைத்தவரே! 
    கோடி மூலையிலே நீ பிறந்திருந்தாலும்
    சாதி,மதமே இல்லா ஒற்றுமை உலகு காண
    இன்னொருமுறை பிறப்பாயா!

    ***

    ’தூர தேசத்துக்குள் புகாத சிறகுகளில் வானமில்லை; தொடர்ச்சிகளில் வெட்டுண்டு கிடக்கிறது சிந்தனை’ எனப் புதிய கருத்துக்களை அந்தாதிச் சந்தமாய் அள்ளி வீசியிருக்கிறார் திரு. கவிஜி.

    தொடர்ச்சிகளில் 
    வெட்டுண்டு கிடக்கிறது 
    சிந்தனை…

    சிந்திக்கும் 
    கணத்துக்குள் படர்கிறது 
    தொடர்புகள்…

    இரண்டுக்குமான இடை
    வெளிக்குள் தைக்கப் படுகிறது 
    தூரங்கள்…

    தூர தேசத்துள் 
    புகாத சிறகுகளில்
    வானமேல்லை… 

    வானமே எல்லை என்பதில் 
    அக் கரை 
    இருப்பதில்லை…

    வேடிக்கை மனிதனை காணாது 
    செய்வதில் தேர்ச்சி பெறுகிறது 
    தொடர்ச்சி….

    ***

    ’உழைத்துண்டு வாழ்வாரே வாழ்வார்; மற்றெல்லாரும் அவர் நிழலில் பிழைத்துண்டு பின்செல்பவர்’ எனும் அருமையான கருத்தை வள்ளுவர் வழியில் படைத்தளித்திருக்கின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

    நெற்றி வேர்வையை 
    நிலத்தில் சொட்ட வைத்தால்
    நெல் விளையும்.
    கடலில் பொழிந்தால் 
    சிப்பிக்குள்
    முத்துக்கள் கிடைக்கலாம்.
    உடலில் உயிருள்ள 
    மட்டும்
    உழைத்து உண்பதும்
    உவப்புடன்
    பகிர்ந்து கொள்வதும்
    பிறவிப் பணி.
    தாரணியில்
    உழைத்துண்டு வாழ்வாரே
    வாழ்வார்;
    மற்றெல்லாரும் அவர் நிழலில்
    பிழைத்துண்டு 
    பின் செல்பவர் தான் ! 

    ***

    ’கடல்நீரில் கரிக்கும் உப்பு அந்த மீனவத் தோழரின் கண்ணீர் வெள்ளந்தான்’ என வேதனையோடு விளம்புகிறார் திருமிகு. புனிதா கணேசன்.

    கடல் நீரில் கரிக்கும் உப்பு அவன்
    கண்களின் வழிந்த கண்ணீரின் செறிவு!
    ஆடும் அலைகளின் நிரந்தரம் சொல்லும்
    அவன் வாழ்வு விளிம்பின் தராதரம்!
    இரு கைகள் பற்றிய வலைகளோ அவன்
    இரும்பு மனத்தின் இறுக்கம் போல்!
    தளராத உழைப்பைப் பகிர்ந்திட – ஓடம்
    அளவிலா நிறைவுடன் நகர்ந்திடும்
    வாழ்க்கைத் தத்துவம் உணர்த்தியே!
    மானம் உள்ள மனிதனின் உழைப்பை
    உன்னதாமாக்கியே மிதக்கிறது ஓடம்!

    ***

    ’புவிநடுங்கும் குளிரோ; அனல் பறக்கும் வெயிலோ எதுவானால் என்ன…எம் வாழ்வு இக்கடலில்தான்! வலையில் மீன்நிறைந்தால்தான் எம்வயிறு நிறையும்’ என்று பேசும் மீனவத் தோழரைக் காணமுடிகின்றது திருமிகு. தமிழ்முகிலின் கவிதையில்.

    தகிக்கும் வெயிலானால் என்ன
    நடுநடுங்கும் குளிரானால் என்ன
    உழைத்தால் தானிங்கு
    எண்சான் வயிறு நிரம்பும் !
    […]
    படகும் வலையும்
    எமக்கு அன்னமிடும் !
    வயிறும் தான் வாடாது
    நாளும் காத்திடும் !
    உழைப்பு மட்டுமே
     உறுதுணை ஆகும் !
    உறுதியுடன் – அயர்விலா
    முயற்சியுடன் – சுழலும்
    எம் வாழ்வு நாளும்
    இப் புவியின் மடி மீதே !

    ***

    ’நிலையிலா வாழ்வினிலே தாமரையிலைத் தண்ணீர்போல் பற்றற்று இருந்தால் வாழ்க்கை எளிதாகும்’ எனும் உயரிய தத்துவத்தை உரத்துச் சொல்லியுள்ளார் திரு. செண்பக ஜெகதீசன்.

    வலையை வீசி மீன்பிடித்தல்
         வாழ்க்கை யதனின் தத்துவமே,
    நிலையே யில்லா வாழ்வதுவும்
         நினைப்பது போல அமைந்திடாது,
    வலையில் என்றும் கிடைப்பதில்லை
         வருகையில் நிறைய சேர்ந்துவரும்,
    இலையாம் தாமரை நீர்போல
         இருந்திடு செயல்படு வென்றிடவே…!

    ***

    ’வாழ்வா சாவா போராட்டமே இந்த வலையெறிதல்’ என்கிறார் திருமிகு. வேதா இலங்காதிலகம்.

    கூடை நிரம்பும் வரை வலையெறிதல்
    கூடியுண்ண வைக்கும் குடும்பத்தை, இங்கு
    கொட்டும் மழையானால் என்ன! தகிக்கும் 
    கொடுமை வெயிலானால் என்ன! சாவுக்கும்
    வாழ்விற்கும் நடக்கும் போராட்டமே வலையெறிதல்!
    வீழ்ந்து அல்லலுறுவது பலர் வாழ்வு
    இலங்கையர் இந்தியரென்று, எல்லை மீறுதலென்று
    கலங்காது வாழ்வை சுகித்தல் என்றோ!

    ***

    ’வீட்டில் உலைகொதிக்கக் கடலில் வலையெறிந்துதானே ஆகவேண்டும்’ என்பது திருமிகு. சியாமளா இராஜசேகரின் கருத்து.

    அலைதவழும் ஆழியிலே 
    குலைநடுக்கும் குளிரினிலும் 
    உலைகொதிக்க வேண்டுமெனில் 
    தொலைதூரம் படகில்போய் 
    வலைவீசி மீன்பிடித்து
    கலையாத கனவோடு 
    விலைபோகு மென்றுநம்பும் 
    நிலைதானே நித்தமுமே …!!

    ***

    பொதுவுடைமை பேச்சளவில் மட்டுமே உள்ள நாட்டில் ’முயற்சி மெய்வருத்தக் கூலிதரும்’ எனும் பொய்யாமொழியும் பொய்த்துப் போனதே எனக் குமுறுகின்றார் திரு(மிகு?). பாரதி.

    …அந்த வள்ளல் தந்த 
    வாழ்வை வாழ
    பலரையும் வாழ வைக்கும் 
    தாய்மடியாம் உன்னிடம் 
    கை ஏந்துகிறேன் வலை வீசி
    […] 

    நான் வலை வீசி 
    நீ இரக்கப்பட்டு வலிய
    தந்த மீன்களுக்கும் 
    கரையிலிருந்தபடி ஒருவன்
    அடிமாட்டு விலைக்கு பிடிங்கிக் கொள்கிறான்

    பொதுவுடைமை பேசும் பலரும் 
    பேசி மட்டுமே கொண்டிருப்பார்கள் 
    எம் நாட்டில் 
    மெய் வருத்த கூலி தரும் 
    பழமொழி யெல்லாம்  பழைய மொழியானது
    எனது வறுமையில்… 

    ***

    மீனவர் படும்பாட்டை ’அலைமேல் மிதக்கவிட்டான்; எங்களை அய்யகோ என அழவும்விட்டான்!’ என உணர்ச்சிததும்பும் பாட்டாக்கியிருக்கிறார் திரு. சத்தியமணி.

    அலை மேல் மிதக்கவிட்டான் – எங்களை
    அய்யகோ  அழவும்விட்டான்
    வலையை விரிக்கவைத்து – எங்களை
    மீன் போல் துடிக்கவிட்டான் 
    மண்   மேல் துடிக்கவிட்டான் 
    […]
    வறுமையோடும் பசிப்பிணியோடும் 
    பிறந்துவிட்டோம் பெரும் துயரம்
    கடமையென்றென கடன்பட்டோம் – இக்
    கடலிடம் எங்களின் மரணம்

    காற்றும் வீசிடும் திசையில் சென்றிடின்
    எல்லைத் தாண்டிட சிறைதான்
    வீசிடும் வலையினில் சிக்காமல்மீன்
    கூட்டமும் வஞ்சனைக் கிரைதான்
    பார்க்கும் வரையினில் தண்ணீர்தானே
    தாகம் தணித்திட வருமோ
    ஊரும் நாடும் ஆளும் அரசும்
    உதவிட கைகள் தருமோ  ()

    ***

    உணர்ச்சிப் பெருக்கான கவிதைகள் பல இவ்வாரம் படிக்கக் கிடைத்தன. ஓர் ஏழையின் வாழ்க்கைப் போராட்டத்தை மிகையின்றி இயல்பாய்ப் பதிவுசெய்திருக்கின்றீர்கள் கவிஞர்களே! உங்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் யார் எனப் பார்ப்போம்!

    ’வலைவீசி மீன்பிடித்தால் வாழ்க்கைச் சிக்கலின் சில முடிச்சுக்கள் அவிழும்; வீட்டில் எனக்காகக் காத்திருக்கும் பெயர்த்தியின் சின்னச் சின்ன ஆசைகள் நிறைவேறும்; பொருளற்ற வெறுமை, வறுமையை விரட்டாதபோதினும் என் பெயர்த்தியின் புன்னகை, நம்பிக்கைக் கீற்றை என்னுள் நட்டுவைக்கும்!’ என்று யதார்த்தம் பேசும் மீனவ நண்பர் ஒருவரைச் சந்தித்தேன்; உளம் நெகிழ்ந்தேன்!

    வலையைப் போல் வாழ்வும் 
    வாழ்வைப் போல் வலையும்
    சிக்கலாய் இருக்கிறது ..

    வலை வீசி மீன் கிடைத்தால் 
    தற்கால சிக்கலின் முடிச்சுகள்
    சில அவிழும்..

    வீசி வீசி கைவலித்து
    மீனொன்றும் சிக்காமல் 
    வெறும் கையாய் போகயில் தான் 
    சிக்கலின் பெரு முடிச்சு  
    அவிழாமல் அடம் பிடிக்கும்.. 

    மீனோடு வரும் நாளில் 
    ஏராளம் பொருளிருக்கும் 
    பேத்திக்கு கொண்டுதர …

    வெறும் வலையாய் போய்நிற்க   
    தளிர் முகத்தில் வாடல் தொற்றி 
    நிலை புரிந்து தளர்ந்தாலும் 
    புன்னகைக்கும் அவள் முகத்தில் 
    புதுத் தெம்பின் மருந்திருக்கும்…

    ‘நாளைக்கு கிடைக்கும் தாத்தா’,
    என்றவள் சொல்லும் போது
    நம்பிக்கை பெருக்கெடுத்து 
    மனதினுள் பூ பூத்து 
    இரு முடிச்சும் அவிழ்ந்து விடும்.. 

    ***

    இக் கவிதையின் ஆசிரியர் பத்மநாபபுரம் திரு. அரவிந்தனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

    ***

    மானுடம் பரிணாமத்தின் உச்சம்தொட்டும் இன்னும் மீதமிருக்கின்ற அவனுடைய இரக்கமற்ற அரக்கமனத்தின் எச்சம் காட்டும் இன்னொரு கவிதையும் நன்றாயுள்ளது.

    வருவது
    வலை என அறியாது
    வாழ்விழக்கும் மீன்

    வாழ்விழந்த மீனால்
    வாழ்வுறும் வலைஞர்

    எங்கிருந்தோ
    இவரைக் குறி பார்க்கும்
    இலங்கை அரக்கன்

    உயிர்மைக்கான போராட்டம்
    உடன்வரும் இடரை
    உணர்வதில்லை

    கொல்வதற்கும்
    கொல்லப்படுவதற்கும்
    நியாயங்கள் உண்டு

    முன் இரண்டும்
    இயற்கை அங்கீகரித்த
    எல்லா உயிர்க்குமான
    அடிப்படை விதி

    மூன்றாவது மட்டும்
    பரிணாம வளர்ச்சியில்
    மனிதன் பெற்ற 
    அரக்க எச்சம்!

    திரு. கொ. வை. அரங்கநாதனின் இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய்த் தேர்ந்தெடுக்கின்றேன்.

    போட்டியாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்; பாராட்டுக்கள்!

     

    Share
  • அறிந்துகொள்வோம்!

    -மேகலா இராமமூர்த்தி

    விருதுகளை விரும்பாத விந்தை மனிதர்!

    ஜார்ஜ் பெர்னார்ட் ஷா (George Bernard Shaw)

     

    NPG x81840; George Bernard Shaw by Elliott & Fryஅயர்லாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற நாடக ஆசிரியரான ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, அதன் தலைநகரான டப்ளின் (Duplin) எனும் பெருநகரில் 1856-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26-ஆம் தேதி பிறந்தவர்.

    அயர்லாந்தின் மெதாடிஸ்ட் தேவாலயத்தினரால்  (Methodist Church in Ireland) நடத்தப்பட்ட வெஸ்லி கல்லூரியில் (Wesley College, Dublin) சிலகாலம் கல்வி பயின்றார் பெர்னார்ட் ஷா. பின்பு வெவ்வேறு பள்ளிகளுக்கு அவருடைய படிப்பு இடம்மாறிக்கொண்டே இருந்திருக்கின்றது. பள்ளிக்கல்வியில் கசப்பான அனுபவங்கள் ஏதேனும் அவருக்கு ஏற்பட்டனவோ என்னவோ… கல்விக்கூடங்கள் மீதும் ஆசிரியர்கள் மீதும் அவர்கொண்டிருந்த வெறுப்பு கடைசிவரை அவரைவிட்டு அகலவில்லை.

    “கல்விக்கூடங்கள் சிறைச்சாலைகளாகவும் (prison), ஆசிரியர்கள் அதன் காவலாளிகளாகவும் (turnkeys) திகழ்ந்து (பிள்ளைகளால் பெற்றோருக்கு ஏற்படும் தொல்லைகளைத் தடுத்து) அப்பிள்ளைகளைக் கண்காணித்து வருகின்றனர்” என்று பள்ளிக்கல்வியை அவர் விமரிசித்திருக்கின்றார். அப்போதைய கல்வித் திட்டங்களின்மீதும் கடுமையான அதிருப்தி கொண்டிருந்த அவர், அவை மாணவர்களின் சிந்திக்கும் திறனை, சுய அறிவை மழுங்க வைப்பதைத் தவிர வேறொன்றையும் செய்யவில்லை” என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். 19-ஆம் நூற்றாண்டின் அயர்லாந்துக் கல்விமுறையைப் பற்றி பெர்னாட்ர்ட் ஷா கூறிய கருத்துக்கள் இன்றைய நம் கல்விமுறைக்கும் பொருந்துவதாகவே உள்ளன அல்லவா?

    இளமை முதலே புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ஷா, தன்னுடைய பத்து வயதிலேயே விவிலியம் (Bible) தொடங்கி ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் வரை அனைத்தையும் படித்து முடித்திருந்தார் என்று கூறப்படுகின்றது.

    அயர்லாந்தில் வசித்துவந்த பெர்னார்ட் ஷா தம் 20-ஆவது வயதில் துடிப்புள்ள இளைஞராய் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்திருக்கின்றார். எழுதுவதில் அவருக்கிருந்த ஈடுபாட்டின் காரணமாக கதை, கட்டுரை என நிறைய எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்பத் தொடங்கினார். ஆரம்பத்தில் அவருடைய எழுத்துக்களைப் பிரசுரிக்காது பத்திரிகைகள் திருப்பி அனுப்பிய போதிலும், அதற்காகச் சோர்ந்துவிடாது தம் எழுத்துக்களின்மேல் அசையாத நம்பிக்கை கொண்டவராய் அவர் தொடர்ந்து எழுதி அனுப்பிக்கொண்டே இருந்தார்.

    அவரது விடாமுயற்சி வீண்போகவில்லை. ஒருகட்டத்தில் பத்திரிகைகள் அவர் எழுத்தை உச்சிமீது வைத்துக் கொண்டாடத் தொடங்கின; அவர் எதையெழுதி அனுப்பினாலும் பிரசுரித்தன. அக்காலகட்டத்தில், நிறைய நாடகங்களை எழுதினார் பெர்னார்ட் ஷா. அவருடைய நாடகங்கள் 1890-ஆம் ஆண்டு முதல் அரங்கேற்றம் காணத்தொடங்கின. பத்தாண்டுகளுக்குள் புகழ்பெற்ற நாடக ஆசிரியராக அவர் வளர்ச்சியடைந்திருந்தார். 60-க்கும் மேற்பட்ட நாடகங்களை அவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதிகார வர்க்கத்தை எதிர்த்து உழைக்கும் வர்க்கத்துக்கு ஆதரவாகவே அவருடைய ஆக்கங்கள் அமைந்திருந்தன. சொல்லவந்த கருத்துக்களை ஆழமாகவும் அழகாகவும் சொல்வதில் வல்லவரான ஷா, தம் எழுத்துக்களில் எள்ளல் சுவையையும் துள்ளி விளையாடச் செய்வதில் கைதேர்ந்தவர்; அதுவே அவருடைய தனித்தன்மையாய் இன்றுவரை போற்றப்படுகின்றது.

    நாடகம், கதை, கட்டுரை, கடிதம், விமரிசனம் என எழுத்துத்துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் கோலோச்சிய பெர்னார்ட் ஷா, குறும்பு கொப்பளிக்கப் பேசும் நாவன்மையும் பெற்றிருந்தார். சான்றாக ஒரு நிகழ்வு…

    ஒருமுறை அவர் அமெரிக்கா சென்றிருந்தபோது அங்கே மக்களவைக் கூட்டத்தில் பேசுவதற்கு அழைக்கப்பட்டிருந்தார். அவையில் பேசத்தொடங்கியவர், எடுத்த எடுப்பிலேயே “இங்குள்ளவர்களில் பாதிபேர் முட்டாள்கள்” என்று ஒருபோடு போட்டிருக்கின்றார். அதனைக்கேட்டுக் கடுங்கோபம் கொண்ட மக்களவை உறுப்பினர்கள், ”பெர்னார்ட் ஷா தம் கருத்தைத் திரும்பப் பெறவேண்டும்” என்று கூச்சலிட்டனர். அந்தக் களேபரத்தைக் கண்டு சற்றும் கலங்காத ஷா புன்னகைத்தபடி, “சரி…இங்கிருப்பவர்களில் பாதிபேர் புத்திசாலிகள்” என்று சற்றும் தாமதியாமல் மாற்றிச்சொல்ல (இதுதான் மாற்றி யோசிப்பது என்பதோ!) உறுப்பினர்கள் வாயடைத்துப்போய் ஒன்றும்பேசாமல் அமர்ந்தனராம்.

    தம் வாழ்நாளில் மொத்தம் 2,50,000 கடிதங்களை அவர் எழுதியிருக்கின்றார் என்ற செய்தி நம்மை வியப்பிலாழ்த்துவதாய் உள்ளது.

    உலகமக்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் பண்பொன்றும் பெர்னார்ட் ஷாவிடம் இருந்திருக்கின்றது. அதுதான் விருதுகள், பட்டங்கள் எதற்கும் ஆசைப்படாத அவருடைய விந்தை குணம். ஆம்! நோபல் பரிசே தன்னைத் தேடிவந்தபோதும் அதனை வேண்டாம் என மறுத்தவர் பெர்னார்ட் ஷா என்றால் நம்ப முடிகின்றதா? ஆனால் அதுதான் உண்மை!

    அந்த அதிசய நிகழ்வு நடைபெற்ற ஆண்டு 1925. நோபல்பரிசுக் குழுவினர் பெர்னார்ட் ஷாவை அணுகி அவ்வாண்டிற்கான இலக்கிய நோபல் பரிசை (Nobel Prize in Literature) அவருக்கு வழங்க விரும்புவதாகத் தெரிவிக்க, அதுகேட்ட ஷா மகிழ்ச்சியில் துள்ளாட்டம் போடவில்லை. மாறாக, “இவ்வாண்டிற்கான நோபல்பரிசு எனக்கா…எதற்கு? இந்த ஆண்டுதான் நான் ஒன்றுமே எழுதவில்லையே” என்று பதில் கூறியிருக்கின்றார். பரிசுக் குழுவினரோ “நீங்கள் இந்த ஆண்டு எழுதாவிட்டால் என்ன? ஏற்கனவே நீங்கள் எழுதியதவைகளுக்காகத்தான் இந்த நோபல்பரிசு!” என்று கூறியிருக்கின்றனர். அதுகேட்டுக் கடகடவென நகைத்த பெர்னார்ட் ஷா, ”ஒருவன் நடுக்கடலில் தத்தளித்துச் சிரமப்பட்டுக் கரையேறியபின்பு அவனைக் காப்பாற்ற காற்றடித்த இரப்பர் குழாயைக் கொடுப்பது போலிருக்கின்றது இந்தப் பரிசு” என்று தமக்கே உரித்தான கிண்டலோடு சொல்லிவிட்டு, அப்பரிசை மறுத்திருக்கின்றார். அப்படியும் விடாது அந்த நோபல்பரிசு அவர் வீடுதேடிவந்துவிட, அதனை அப்படியே மற்றொரு எழுத்தாளரின் இலக்கியப் பணிகளுக்காகக் கொடுத்தவிட்டாராம் அந்த அதிசய மனிதர்!

    Pygmalion என்ற அவருடைய நாடகம் 1938-ஆம் ஆண்டு திரைப்படமாக்கப்பட்டபோது, அப்படத்தில் பணிபுரிந்ததற்காக அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. நோபல், ஆஸ்கர் ஆகிய இரண்டு மிகப்பெரிய விருதுகளைப் பெற்ற ஒரே மனிதர் பெர்னார்ட் ஷாவே! விருதுகளை வெறுத்த அவரை விருதுகள் வெறுக்கவில்லை; ’விலகிச் சென்றால் விரும்பிவரும்’ என்பது ஷாவின் விஷயத்தில் உண்மையானது!

    புரட்சிகரமான கருத்துக்களைத் துணிச்சலுடன் வெளியிட்டுவந்த பெர்னார்ட் ஷா, இல்லறம் குறித்த தன் கருத்துக்களையும் ஒளிவுமறைவின்றி உலகிற்கு விளம்பியவர். “மனையறம் மாட்சியோடு திகழ, மனைவிக்குக் கணவன்மார்கள் மதிப்பும் மரியாதையும்  தரவேண்டும்; மனையாளே கணவனை நன்னெறிக்கண் செலுத்துபவள்; அவளால்தான் அவன் வாழ்வு ஏற்றம் பெறுகின்றது” என்று கூறியிருக்கின்றார். இக்கருத்துக்களால் கவரப்பட்ட நம் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பெண்களைப் போற்றிய ஷாவைப் போற்றிக் கவியொன்று வடித்துவிட்டார்.

    புவிப்பெரியான் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவுரைத்த
    –பொன்மொழியைக் கேளுங்கள் நாட்டில் உள்ளீர்!
    உவந்தொருவன் வாழ்க்கைசரி யாய்நடத்த
    –உதவுபவள் பெரும்பாலும் மனைவி ஆவாள்!
    அவளாலே மணவாளன் ஒழுங்கு பெற்றான்!
    –அவளாலே மணவாளன் சுத்தி பெற்றான்!
    குவியுமெழிற் பெண்களுக்கே ஊறுசெய்யும்
    –குள்ளர்களே, கேட்டீரோ ஷாவின் பேச்சை!
    அவனியிலே ஒருவனுக்கு மனைவியின்றேல்
    –அவனடையும் தீமையை யார் அறியக்கூடும்?
    கவலையுற ஆடவர்கள் நாளும் செய்யும்
    –கணக்கற்ற ஊழல்களை யெல்லாம் அந்த
    நவையற்ற பெண்களன்றோ விலக்குகின்றார்?
    –நானிலத்தில் மார்தட்டும் ஆடவர்கள்
    சுவைவாழ்விற் கடைத்தேறத் தக்கதான
    –சூட்சுமமும் பெண்களிடம் அமைந்ததன்றோ!
    கல்வியில்லை உரிமையில்லை பெண்களுக்குக்
    –கடைத்தேற வழியின்றி விழிக்கின்றார்கள்!
    புல்லென்றே நினைக்கின்றீர் மனைவிமாரைப்
    –புருஷர்களின் உபயோகம் பெரிதென்கின்றீர்!
    வல்லவன்பே ரறிஞன்ஷா வார்த்தைகேட்டீர்
    –மனோபாவம் இனியேனும் திருந்தவேண்டும்.
    இல்லையெனில் எதுசெயலாம்! பெண்ஆண்என்ற
    –இரண்டுருளை யால்நடக்கும் இன்பவாழ்க்கை!

    என்பதே அந்தக் கவிதை!

    ஷேக்ஸ்பியருக்கு அடுத்தபடியாக ஆங்கில இலக்கிய உலகம் கண்டெடுத்த மிகச் சிறந்த நாடக ஆசிரியர் பெர்னார்ட் ஷா. The Devil’s Disciple, The apple cart, and the doctor’s dilemma போன்றவை அவருடைய புகழ்பெற்ற நாடகங்களில் சில.

    இனி, பெர்னார்ட் ஷாவின் சிந்தனைச் செறிவுமிக்க பொன்மொழிகள் சிலவற்றை ஈண்டுக் காண்போம்.

    1. இவ்வுலகத்திலிருந்து தாம் பெற்றதைவிட அதிகமாக யார் இந்த உலகிற்குத் திருப்பிக் கொடுக்கின்றார்களோ அவர்களே பண்புள்ள மனிதர்களாவர்.

    2. எதுவுமே செய்யாமல் வீணாகும் வாழ்க்கையைவிட, எதையாவது செய்யும்போது ஏற்படும் தவறுகள் பயனுள்ளதும், கண்ணியமானதும் ஆகும்.

    3. மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத
    பெரிய சுமையாகிவிடும்.

    4. ஒரு மனிதன் புலியைக் கொன்றால் அது வீரம்; அதுவே ஒரு புலி மனிதனைக் கொன்றால் அது கொடூரம்.

    5. புரட்சிகள் என்றுமே கொடுங்கோன்மை எனும் சுமையை (சமுதாயத்திலிருந்து) அகற்றிவிடவில்லை; மாறாக அவை அச்சுமையை ஒரு தோளிலிருந்து இன்னொரு தோளுக்கு இடமாற்றும் வேலையையே செய்திருக்கின்றன.

    6. மனிதன் துன்பமாக இருப்பதற்குக் காரணம் தான் மகிழ்ச்சியாக இருக்கிறோமா இல்லையா என்று ஆராய்வதற்கு அவனுக்குக் கிடைக்கும் ஓய்வே!

    இவ்வாறு, சீர்திருத்தச் சிந்தனைகளையும் சீரிய கருத்துக்களையும் அஞ்சாமல் தம் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் எதிரொலிக்கச் செய்தவர் பெர்னார்ட் ஷா.

    ஆசைகளற்ற மனம், நகைச்சுவை உணர்வு, மது, புகை முதலிய தீயபழக்கங்கள் தவிர்த்த எளிய வாழ்க்கைமுறை ஆகியவற்றைக் கைக்கொண்டிருந்ததன் பயனாய், நீண்டகாலம் நல்ல உடல்நலத்தோடும் மனவளத்தோடும் வாழ்ந்த பெர்னார்ட் ஷா, 1950-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் நாள் தன்னுடைய 94-ஆம் அகவையில் முதுமை காரணமாக இயற்கை எய்தினார்.

    நண்பர்களே! அறிவுலக மேதையாய்த் திகழ்ந்த ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவின் ஆக்கங்களை நாமும் ஆர்வத்தோடு படிப்போம்; அறிவை விரிவு செய்வோம்!

     

    Share