-மேகலா இராமமூர்த்தி

திரு. சுரேஷ் ராமின் புகைப்படத்தைப் போட்டிக்கான படமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் எம் நன்றி!

fisherman

வலைவீசும் கலையில் வல்லவராய் இருந்தும் எதிர்பாராமல் ஏற்படும் முடிச்சுக்கள், இம்மீனவ நண்பரின் நேரத்தை விழுங்கினாலும் அதற்கெல்லாம் சோர்ந்துபோகமாட்டார் இம்மறவர் என்றே தோன்றுகின்றது. ஐயா! மீனெறி தூண்டிலை நம்பிக்கையோடு கடலில் வீசுங்கள்! வெற்றி உம் வசப்படும்!

இவ்வாரக் கவிதைப்போட்டிக்கு வந்திருக்கும் கவிமுத்துக்களை அள்ளி இரசிக்கும் நேரமிது!

நீரிலே மீன் சுழலலாம்; வீசுகின்ற வலை சுழலலாம்; ஆனால் வலைவீசும் மனிதர் மட்டும் சுழன்றுவிடக்கூடாது; அப்போதுதான் அவர் வாழ்க்கைச் சக்கரம் சுழலும்! என்கிறார் திருமிகு. ரேவதி நரசிம்மன்.

மீன் சுழல
வலை சுழல
நிற்கும் பரிசலும் சுழல
மீனுக்குக் காத்திருக்கும் 

முதியவருக்கு மட்டும் 
தலை சுற்றவில்லை
மீனைப் பிடித்தே வீடு திரும்புவார்.

அப்பொழுதுதான் வாழ்வு சுழலும்.

***

ஓட்டை விழுந்தால் முழுகிப்போகும் பரிசில் வாழ்க்கை எமது; அவ்வோட்டையை அடைத்துக்கொண்டு நல்வாழ்வை எதிர்நோக்கி நிற்கும் மீனவர் நாங்கள்!” என மீனவர் ஒருவர் தம் அவலவாழ்க்கையைப் பேசுவதாய்க் கவி புனைந்துள்ளார் திரு. இளவல் ஹரிஹரன்.

வலை வீசி வாழும் வாழ்க்கையில்
வாழ்க்கையே வலை வீசுகிறது,
சிக்காத மீன்களாய் நாங்கள்….
ஓட்டை விழுந்தால் நீரில்

மூழ்கும் பரிசல் வாழக்கை,
ஓட்டையை அடைத்துக்கொண்டு நாங்கள்….
மீன்பிடி வலையில்

சிக்கல் விழுந்த வாழ்க்கை,
வலையில் சிக்கா மீன்களாய் நாங்கள்……
[…]
வாழ்க்கை ஒருமுறை தான்,

வாழ்ந்து பார்க்க தினமும்
கற்றுக்கொடுக்கும்
பரிசலும் ஆற்றுநீரும்
சிக்கல் விழும் வலைகளும்
சிக்கியும் நழுவும் மீன்களுமே…..

***

தமிழகம் பெற்றெடுத்த நன்முத்தாம் அமரர். கலாமை இழந்து கலங்கும் மக்களில் ஒருவரான இம்மீனவர், அம்முத்தைக் கடலில் தேடுவதாய்ச் சுவையானதொரு கற்பனையை வார்த்திருக்கின்றார் திருமிகு. லட்சுமி.

நேர்மை வீணையை மீட்டி
மறைந்த கடலோரக் கவிதையே!
ஆழம்காணா ஆயிரம் ஆழி  மனங்களின்
உண்மைமுகம் காணத் துடிக்கின்றேன்!
வாழ்க்கைப் படகுப் போராட்டத்தில்
நீ வென்ற பாதையிலே
விரைவாக நடைபோடக் காத்திருக்கும்
இளைய சமுதாயம் எங்கே?
[…]
தமிழகம் பெற்றெடுத்த நல்முத்தே!
உன்னைப்போன்ற நல்முத்தை
உலகெங்கும் வலைவீசித்தான் பார்க்கின்றேன்!
[…]
ஆயிரங்கோடி அறிவை அகிலத்திற்களித்த
அற்புத ஒளிவிளக்கே!
நீ பிறந்த தீவினிலே நானும்தானே
ஓட்டுகின்றேன்!
ஒரு சாண் வயிறு வளர்க்க
ஓடாய்த் தேய்ந்தாலும் 
தமிழ்வழிக்கல்வி செழிக்க வாய்ப்பில்லை!
 தொழில்நுட்பத்தமிழ் கல்விகாண
 உழைத்தவரே! 
கோடி மூலையிலே நீ பிறந்திருந்தாலும்
சாதி,மதமே இல்லா ஒற்றுமை உலகு காண
இன்னொருமுறை பிறப்பாயா!

***

’தூர தேசத்துக்குள் புகாத சிறகுகளில் வானமில்லை; தொடர்ச்சிகளில் வெட்டுண்டு கிடக்கிறது சிந்தனை’ எனப் புதிய கருத்துக்களை அந்தாதிச் சந்தமாய் அள்ளி வீசியிருக்கிறார் திரு. கவிஜி.

தொடர்ச்சிகளில் 
வெட்டுண்டு கிடக்கிறது 
சிந்தனை…

சிந்திக்கும் 
கணத்துக்குள் படர்கிறது 
தொடர்புகள்…

இரண்டுக்குமான இடை
வெளிக்குள் தைக்கப் படுகிறது 
தூரங்கள்…

தூர தேசத்துள் 
புகாத சிறகுகளில்
வானமேல்லை… 

வானமே எல்லை என்பதில் 
அக் கரை 
இருப்பதில்லை…

வேடிக்கை மனிதனை காணாது 
செய்வதில் தேர்ச்சி பெறுகிறது 
தொடர்ச்சி….

***

’உழைத்துண்டு வாழ்வாரே வாழ்வார்; மற்றெல்லாரும் அவர் நிழலில் பிழைத்துண்டு பின்செல்பவர்’ எனும் அருமையான கருத்தை வள்ளுவர் வழியில் படைத்தளித்திருக்கின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

நெற்றி வேர்வையை 
நிலத்தில் சொட்ட வைத்தால்
நெல் விளையும்.
கடலில் பொழிந்தால் 
சிப்பிக்குள்
முத்துக்கள் கிடைக்கலாம்.
உடலில் உயிருள்ள 
மட்டும்
உழைத்து உண்பதும்
உவப்புடன்
பகிர்ந்து கொள்வதும்
பிறவிப் பணி.
தாரணியில்
உழைத்துண்டு வாழ்வாரே
வாழ்வார்;
மற்றெல்லாரும் அவர் நிழலில்
பிழைத்துண்டு 
பின் செல்பவர் தான் ! 

***

’கடல்நீரில் கரிக்கும் உப்பு அந்த மீனவத் தோழரின் கண்ணீர் வெள்ளந்தான்’ என வேதனையோடு விளம்புகிறார் திருமிகு. புனிதா கணேசன்.

கடல் நீரில் கரிக்கும் உப்பு அவன்
கண்களின் வழிந்த கண்ணீரின் செறிவு!
ஆடும் அலைகளின் நிரந்தரம் சொல்லும்
அவன் வாழ்வு விளிம்பின் தராதரம்!
இரு கைகள் பற்றிய வலைகளோ அவன்
இரும்பு மனத்தின் இறுக்கம் போல்!
தளராத உழைப்பைப் பகிர்ந்திட – ஓடம்
அளவிலா நிறைவுடன் நகர்ந்திடும்
வாழ்க்கைத் தத்துவம் உணர்த்தியே!
மானம் உள்ள மனிதனின் உழைப்பை
உன்னதாமாக்கியே மிதக்கிறது ஓடம்!

***

’புவிநடுங்கும் குளிரோ; அனல் பறக்கும் வெயிலோ எதுவானால் என்ன…எம் வாழ்வு இக்கடலில்தான்! வலையில் மீன்நிறைந்தால்தான் எம்வயிறு நிறையும்’ என்று பேசும் மீனவத் தோழரைக் காணமுடிகின்றது திருமிகு. தமிழ்முகிலின் கவிதையில்.

தகிக்கும் வெயிலானால் என்ன
நடுநடுங்கும் குளிரானால் என்ன
உழைத்தால் தானிங்கு
எண்சான் வயிறு நிரம்பும் !
[…]
படகும் வலையும்
எமக்கு அன்னமிடும் !
வயிறும் தான் வாடாது
நாளும் காத்திடும் !
உழைப்பு மட்டுமே
 உறுதுணை ஆகும் !
உறுதியுடன் – அயர்விலா
முயற்சியுடன் – சுழலும்
எம் வாழ்வு நாளும்
இப் புவியின் மடி மீதே !

***

’நிலையிலா வாழ்வினிலே தாமரையிலைத் தண்ணீர்போல் பற்றற்று இருந்தால் வாழ்க்கை எளிதாகும்’ எனும் உயரிய தத்துவத்தை உரத்துச் சொல்லியுள்ளார் திரு. செண்பக ஜெகதீசன்.

வலையை வீசி மீன்பிடித்தல்
     வாழ்க்கை யதனின் தத்துவமே,
நிலையே யில்லா வாழ்வதுவும்
     நினைப்பது போல அமைந்திடாது,
வலையில் என்றும் கிடைப்பதில்லை
     வருகையில் நிறைய சேர்ந்துவரும்,
இலையாம் தாமரை நீர்போல
     இருந்திடு செயல்படு வென்றிடவே…!

***

’வாழ்வா சாவா போராட்டமே இந்த வலையெறிதல்’ என்கிறார் திருமிகு. வேதா இலங்காதிலகம்.

கூடை நிரம்பும் வரை வலையெறிதல்
கூடியுண்ண வைக்கும் குடும்பத்தை, இங்கு
கொட்டும் மழையானால் என்ன! தகிக்கும் 
கொடுமை வெயிலானால் என்ன! சாவுக்கும்
வாழ்விற்கும் நடக்கும் போராட்டமே வலையெறிதல்!
வீழ்ந்து அல்லலுறுவது பலர் வாழ்வு
இலங்கையர் இந்தியரென்று, எல்லை மீறுதலென்று
கலங்காது வாழ்வை சுகித்தல் என்றோ!

***

’வீட்டில் உலைகொதிக்கக் கடலில் வலையெறிந்துதானே ஆகவேண்டும்’ என்பது திருமிகு. சியாமளா இராஜசேகரின் கருத்து.

அலைதவழும் ஆழியிலே 
குலைநடுக்கும் குளிரினிலும் 
உலைகொதிக்க வேண்டுமெனில் 
தொலைதூரம் படகில்போய் 
வலைவீசி மீன்பிடித்து
கலையாத கனவோடு 
விலைபோகு மென்றுநம்பும் 
நிலைதானே நித்தமுமே …!!

***

பொதுவுடைமை பேச்சளவில் மட்டுமே உள்ள நாட்டில் ’முயற்சி மெய்வருத்தக் கூலிதரும்’ எனும் பொய்யாமொழியும் பொய்த்துப் போனதே எனக் குமுறுகின்றார் திரு(மிகு?). பாரதி.

…அந்த வள்ளல் தந்த 
வாழ்வை வாழ
பலரையும் வாழ வைக்கும் 
தாய்மடியாம் உன்னிடம் 
கை ஏந்துகிறேன் வலை வீசி
[…] 

நான் வலை வீசி 
நீ இரக்கப்பட்டு வலிய
தந்த மீன்களுக்கும் 
கரையிலிருந்தபடி ஒருவன்
அடிமாட்டு விலைக்கு பிடிங்கிக் கொள்கிறான்

பொதுவுடைமை பேசும் பலரும் 
பேசி மட்டுமே கொண்டிருப்பார்கள் 
எம் நாட்டில் 
மெய் வருத்த கூலி தரும் 
பழமொழி யெல்லாம்  பழைய மொழியானது
எனது வறுமையில்… 

***

மீனவர் படும்பாட்டை ’அலைமேல் மிதக்கவிட்டான்; எங்களை அய்யகோ என அழவும்விட்டான்!’ என உணர்ச்சிததும்பும் பாட்டாக்கியிருக்கிறார் திரு. சத்தியமணி.

அலை மேல் மிதக்கவிட்டான் – எங்களை
அய்யகோ  அழவும்விட்டான்
வலையை விரிக்கவைத்து – எங்களை
மீன் போல் துடிக்கவிட்டான் 
மண்   மேல் துடிக்கவிட்டான் 
[…]
வறுமையோடும் பசிப்பிணியோடும் 
பிறந்துவிட்டோம் பெரும் துயரம்
கடமையென்றென கடன்பட்டோம் – இக்
கடலிடம் எங்களின் மரணம்

காற்றும் வீசிடும் திசையில் சென்றிடின்
எல்லைத் தாண்டிட சிறைதான்
வீசிடும் வலையினில் சிக்காமல்மீன்
கூட்டமும் வஞ்சனைக் கிரைதான்
பார்க்கும் வரையினில் தண்ணீர்தானே
தாகம் தணித்திட வருமோ
ஊரும் நாடும் ஆளும் அரசும்
உதவிட கைகள் தருமோ  ()

***

உணர்ச்சிப் பெருக்கான கவிதைகள் பல இவ்வாரம் படிக்கக் கிடைத்தன. ஓர் ஏழையின் வாழ்க்கைப் போராட்டத்தை மிகையின்றி இயல்பாய்ப் பதிவுசெய்திருக்கின்றீர்கள் கவிஞர்களே! உங்களுக்கு என் பாராட்டுக்கள்!

அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் யார் எனப் பார்ப்போம்!

’வலைவீசி மீன்பிடித்தால் வாழ்க்கைச் சிக்கலின் சில முடிச்சுக்கள் அவிழும்; வீட்டில் எனக்காகக் காத்திருக்கும் பெயர்த்தியின் சின்னச் சின்ன ஆசைகள் நிறைவேறும்; பொருளற்ற வெறுமை, வறுமையை விரட்டாதபோதினும் என் பெயர்த்தியின் புன்னகை, நம்பிக்கைக் கீற்றை என்னுள் நட்டுவைக்கும்!’ என்று யதார்த்தம் பேசும் மீனவ நண்பர் ஒருவரைச் சந்தித்தேன்; உளம் நெகிழ்ந்தேன்!

வலையைப் போல் வாழ்வும் 
வாழ்வைப் போல் வலையும்
சிக்கலாய் இருக்கிறது ..

வலை வீசி மீன் கிடைத்தால் 
தற்கால சிக்கலின் முடிச்சுகள்
சில அவிழும்..

வீசி வீசி கைவலித்து
மீனொன்றும் சிக்காமல் 
வெறும் கையாய் போகயில் தான் 
சிக்கலின் பெரு முடிச்சு  
அவிழாமல் அடம் பிடிக்கும்.. 

மீனோடு வரும் நாளில் 
ஏராளம் பொருளிருக்கும் 
பேத்திக்கு கொண்டுதர …

வெறும் வலையாய் போய்நிற்க   
தளிர் முகத்தில் வாடல் தொற்றி 
நிலை புரிந்து தளர்ந்தாலும் 
புன்னகைக்கும் அவள் முகத்தில் 
புதுத் தெம்பின் மருந்திருக்கும்…

‘நாளைக்கு கிடைக்கும் தாத்தா’,
என்றவள் சொல்லும் போது
நம்பிக்கை பெருக்கெடுத்து 
மனதினுள் பூ பூத்து 
இரு முடிச்சும் அவிழ்ந்து விடும்.. 

***

இக் கவிதையின் ஆசிரியர் பத்மநாபபுரம் திரு. அரவிந்தனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

***

மானுடம் பரிணாமத்தின் உச்சம்தொட்டும் இன்னும் மீதமிருக்கின்ற அவனுடைய இரக்கமற்ற அரக்கமனத்தின் எச்சம் காட்டும் இன்னொரு கவிதையும் நன்றாயுள்ளது.

வருவது
வலை என அறியாது
வாழ்விழக்கும் மீன்

வாழ்விழந்த மீனால்
வாழ்வுறும் வலைஞர்

எங்கிருந்தோ
இவரைக் குறி பார்க்கும்
இலங்கை அரக்கன்

உயிர்மைக்கான போராட்டம்
உடன்வரும் இடரை
உணர்வதில்லை

கொல்வதற்கும்
கொல்லப்படுவதற்கும்
நியாயங்கள் உண்டு

முன் இரண்டும்
இயற்கை அங்கீகரித்த
எல்லா உயிர்க்குமான
அடிப்படை விதி

மூன்றாவது மட்டும்
பரிணாம வளர்ச்சியில்
மனிதன் பெற்ற 
அரக்க எச்சம்!

திரு. கொ. வை. அரங்கநாதனின் இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய்த் தேர்ந்தெடுக்கின்றேன்.

போட்டியாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்; பாராட்டுக்கள்!

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “படக்கவிதைப் போட்டி 23-இன் முடிவுகள்

  1. என் கவிதையை சிறந்த கவிதையாக தேர்ந்தெடுத்தமைக்கு மிக்க நன்றி. 

    அன்புடன் 
    பத்மநாபபுரம் அரவிந்தன் 

  2. பாராட்டிற்குரிய கவிதையாக எனது கவிதையை தேர்வு செய்தமைக்கு நன்றி. சிறந்த கவிதையினை அளித்த அரவிந்தன் அவர்களுக்கும் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *