படக்கவிதைப் போட்டி 25-இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி

புகைப்படத்தை எடுத்திருக்கும் திரு. வினித், அதனைப் போட்டிக்குத் தேர்வு செய்தளித்துள்ள வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் இருவருக்கும் வல்லமையின் நன்றி.

flying birds

உயரப் பறக்கும் இந்தப் பறவைகள் போல் நம் உள்ளமும் உயர்வையே உள்ளினால் வாழ்வு வளம்பெறும். வானம் வசப்படும்!

இனி, நம் கவிஞர்கள் கோத்துத் தந்திருக்கும் கவிச்சரங்களைக் களிப்போடு வாசித்து மகிழ்வோம்!

***

வித்தியாசமான சிந்தனையோடு, இப்பறவைகளின் மறுபக்கத்தில் தன்னையே சுவராக எண்ணிப் பார்க்கின்றார்  திரு. கவிஜி.

ஓவியம் அசைவதாக
கற்பனை கொண்ட
பறவைகளின் மறு பக்கத்தில்
நான் வெறும்
சுவர்

***

’ஒற்றுமையைத் தம் சிறகில் ஏற்றிப் பறக்கும் இப்பறவைகள் காதல் தேசத்தின் தூதுவர்களோ!’ என்று வியக்கிறார் திருமிகு. கார்த்திகா.

…வட்டமிட்டு  இரை கொத்தும் 
சிறு பறவைகள் 
ஒற்றுமையையே 
வலிமையாய்
சிறகில் ஏற்றி 
உயரப் பறந்திடும் 
பெரும் தேவதைகள் 
[…]
கொஞ்சும் அலகுகளால் 
நெஞ்சம் அசத்தி 
உலகாளும் நீங்கள் 
இந்த தேசத்தின் 
காதல் தூதுவர்களோ!!

***

’வேற்றுமையில் ஒற்றுமை காணும் பாடத்தைப் பறவைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள்!’ என்று வேண்டுகோள் விடுக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

பறவைகள் பார்த்திட மட்டுமல்ல
பாடம் பலவும் கற்றிடத்தான்,
உறவு பகையெனப் பிரித்திடுவான்
வேற்றுமைச் சிறகை விரித்திடுவான்,
நிறமென இனமென விலகிடுவான்
நினைத்திடா பேதமாய் உலவிடுவான்,
மறந்திடும் மனிதனைத் திருத்திடத்தான்
மேலவை ஒன்றாய்ப் பறப்பதுவே…!

***

சுதந்திரம் வாங்கியதாய்ச் சொல்லிக்கொண்டு நாளும் ஒரு சிறைச்சாலை திறந்துகொண்டிருக்கும் மனிதரின் அவலநிலை கண்டு பறவைகளும் பரிகசிக்கின்றன என்கிறார் திரு. மெய்யன் நடராஜ்.

சுதந்திரம் வாங்கியதாய்
சொல்லிக்கொண்டு
புதிய புதிய
சிறைச்சாலைகள்
திறந்துகொண்டிருக்கும்
மனிதர்களே வாருங்கள்  

நேற்றுகள் தந்த பாரங்கள்
நெஞ்சோடு இல்லாமலும்
நாளையை பற்றிய
கவலைகள் கொள்ளாமலும்
இன்றைய பொழுதை
இனிமையாய் கழிக்கும்
எங்களிடம் இல்லாத  சுதந்திரம்
உங்களிடம் இருந்தால் சொல்லுங்கள்…

***

உளமெனும் படர்மணலில் உயர்ந்தெழும் எண்ணப் பறவைகளை நம் சிந்தை கவரும் வகையில் சந்த நயத்தோடு தீட்டியிருக்கின்றார் திரு. சுந்தர் புருஷோத்தமன்.

படர்மணல் நிலமென 
துளமிதை  அழகே,
நீ கேளாய்….!
[…]

சிறகதை விரித்தியல்
பொடுசுழல் விசையதை
மனத்தினில் கொடுத்திடு
நினைப்பெனும் பறவை…!
[…] 
நடப்பதன் நடுவினுள்
திகழ்கரு வெதுவென
நினைக்கையில்,
நடந்ததைத் திரும்பவும்
நடந்துளம் நினைந்திட
படபடபடவென வெழுமே…!

நெளிவுறு புழுக்களை
சிதற்படும் வெறுப்பினை
லபக்கென விழுங்கிட 
விரும்பிடும் பறவை…!
[…]
செழுந்தழல் தருமதன் 
தகிப்பில்,
எழுந்துயர்ப் பறந்தனவே……!!…

***

தான் விண்ணில் பறக்கச் சிறகுகளையும், மண்ணில் மாந்தரனைவரும் நல்லவண்ணம் வாழும் நன்னாளையும் இறைவனிடம் இறைஞ்சுகிறார் திருமிகு. லட்சுமி.

பறவைகள்போல சிறகுகள் வேண்டி
இறைவனிடம் யாசிக்கிறேன்!
[…]
விண்ணுயரப்
பறக்க நான்
நினைத்தாலும் மண்துகளாய்
மிதிபட்டுக் கிடக்கின்றேன்!
[…]
விதை விதைத்தவன் மட்டுமே
அறுவடைக்கு சொந்தமாவான்!
அறுப்புக்கு புது நாற்று சொந்தக்காரன்
வந்த அதிசயத்தை தடுக்க உதவுவாயோ!
[…]
விதை
விதைத்தவனுக்கே
விதைகள் சொந்தமென
பரவச் செய்ய சிறகுகள்
வேண்டி யாசிக்கிறேன்!
ஏறுபோல உண்மைநடைபோட
இலஞ்சம் இல்லா பெருவாழ்க்கை
கொண்டுவர இல்லானுக்கும்
உணவளிக்கும் மனம் மிகுந்துவர
முதியோர் காப்பிட சிறகுக் கைகளை எனக்கருள
இறைவனிடம் யாசிக்கிறேன்!

***

’எதிர்பார்ப்பு ஏதுமில்லை; ஏய்த்துப் பிழைப்பதில்லை. பறவைகளைப் பார்த்தேனும் நாம் பண்படுவோம்; பயனுறுவோம்!’ என்கிறார் திரு. சுரேஜமீ.

இளமாலை வேளையிலே
  இளந்தென்றல் வீசிவர
இரைதேடி வந்திட்ட
 இசைபாடும் புள்ளினங்கள்

இரக்கத்தை நெஞ்சோடும்
 இருப்பவற்றைக் கையோடும்
இயன்றவரை தினம்சேர்க்கும்
 இவரன்றோ தெய்வமென்பேன்!
[…]
எதிர்பார்ப்பு இங்கில்லை
 ஏங்கும் நிலையில்லை
ஏய்த்துப் பிழைப்பதில்லை 
 எவர்மீதும் வன்மமில்லை

பரவிநிற்கும் மணற்பரப்பு
 பறந்துவிரிய பறவைக்கூட்டம்
பார்த்துத் தெளிந்து
 பண்படுவோம்; பயனுறுவோம்!…

***

’கூடு திரும்பும் வேளையிலே குஞ்சுகளுக்கு இரை சேகரிக்கின்றீரோ?’ என்று பறவைகளைப் பார்த்து பக்குவமாய் வினாத்தொடுக்கிறார் திருமிகு. தமிழ்முகில்.

…சிதறிக் கிடக்கும்
தானியம் தனை
சிந்தை சிதறாது
அலகு தனில்
அள்ளி எடுக்கிறீரோ ?
[…]

கடலும் வானும்
நீலப் பட்டு கொண்டு
புது அரங்கம்
அமைக்கின்றனவே !

கூடு திரும்பும்
நேரமதில் பிள்ளைகட்கு
உணவெடுத்துச் செல்ல
கருமமே கண்ணாய்
செயலாற்றுகிறீரோ
பறவைகளே ?

***

சிந்திய உணவுண்டுச் சூதுவாது ஏதுமின்றிச் சுந்தரமாய் இறகுவிரிக்கும் பறவைகளின் சுதந்திரம் மானிடர்க்கு வாய்ப்பதெப்போ(து)? என்ற தன் ஏக்கத்தைக் கவிதையில் பதிவுசெய்திருக்கின்றார் திருமிகு. வேதா இலங்காதிலகம்.

பதந்தரும் இறகு விரித்து
மிதந்திடும் பறவைச் செயலை
இதந்தரும் சுதந்திரமென ஒப்பிட்ட
சுதந்திர அடையாளமாக்கினான் மனிதன்
[…]
வெட்ட
வெளியில் ஒன்றாய்
கெட்ட பாகுபாடு சூதுவாதின்றி
ஒட்டு மொத்த சிந்தனை
எட்டும் உணவிற்கு மட்டும்!
பட்டு சுதந்திரம் இதுவன்றோ!
வெட்டு சூது வன்முறையென்று
கிட்டிய சுதந்திரம் எங்கே!
நட்டுவிடுங்கள் தர்மச் செயலை.

***

ஒளிர்ந்திடும் ஞாயிற்றை, பறந்திடும் புள்ளினத்தை, அவற்றிற்கு உணவளித்து உயர்ந்திடும் மானுடத்தைக் காட்சிப்படுத்தியுள்ளார் திரு(மிகு?). மணிச்சிரல்.

ஒளிர்ந்து இருக்கும் ஞாயிற்றால்
வளர்ந்து இருக்கும் பூமியின்மேல்
பரந்து இருக்கும் வானத்தின்கீழ்
விரிந்து இருக்கும் மேகங்கள்
பசித்து இருக்கும் உயிர்கள்
ரசித்து இருக்கும் கண்கள்
பறந்து இருக்கும் புள்கள்
சிறந்து நிற்கும் மனிதர்!.

***

’வேடுவக் கைகளில் சிக்காமல் பாடிப் பறந்திடுங்கள் வான்வெளியில் சுதந்திரமாய்’ என்று பறவைகளிடம் பாசமொழி பகர்கின்றார் திருமிகு. புனிதா கணேசன்.

…வேர் விட்ட வேடுவக் குணங்களால் ஊன் நாடியே எம்மை
மூர்க்கத்தனமாகச் சிறை பிடித்து வதைக்கு முன்னர் –நாம்
மார்க்கம் ஒன்றை வகுத்து சிறகை விரித்து உயரப் பறந்து
சேர்வோம் ஓர் சுதந்திர பூமியை சிறகின் வலிமையால்
[…]
தர்மம் தொலைந்த தாரணியில் தங்கி உணவு தேடுவிரேல்
தேர்ந்தே எடுத்தீர் உணவதனை – சுதந்திர வேட்கை கொள்ளாது
தீர்க்கும் பசிக்கு சொண்டுகளே போதும் இங்கு இனி –உமக்கு
நேர்த்தியான சிறகெதற்கு சுதந்திரத்தை நாடாது ?

***

வளமான கருத்துக்களை வாரியிறைத்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைத் தேர்ந்தெடுக்கும் தருணமிது!

இனம், மதம், நிறம் என்று வெறிகொண்டலையும் மானுட மூர்க்கத்தை வெறுத்த சின்னப் பறவைகள் ஒற்றுமை எனும் பெருங்குணம் கொண்டு விண்ணுயரப் பறந்திடும் காட்சி இது என்று விளம்பிடும் கவிதையொன்றைக் கண்ணுற்றேன்.

அக்கவிதை…

“வாருங்கள் தோழர்களே
விண்ணுயரப் பறந்திடுவோம்! ”

கருப்பென்றும் சிவப்பென்றும் பேதலிப்பான்
விருப்புடனே எந்நாளும் வாழமாட்டான்
செருக்குடனே வாழ்ந்திங்கு கெட்டலைவான்
வருத்தமே கொண்டழியும் மனிதன்வாரான்
[…]
மதமென்னும் போர்வையிலே மாட்டிக்கொள்வான்
நிதமிங்குப் போர்செய்து மனிதம்கொல்வான்
இதமாகப் பேசுதலே இழிவென்பான்
உதவாத குணமுடைய மனிதன்வாரான்
[…]
ஆறறிவு தனக்கென்று ஆண‌வம்கொள்வான்
ஆறுதலாய்ப் பேசுதலை அறியமாட்டான்
மாறுதலை மனமொப்பி வாழமாட்டான்
சீறுதலே குணங்கொண்ட மனிதன்வாரான்
[…]
கூடிவாழும் நமையிங்கு விரட்டவாரான்
சோடியாக வாழும்நம்மைத் துரத்தவாரான்
பாடியாடி இரைசேர்ப்பதைத் தடுக்கவாரான்
பேடியிவன் சகவாசம் நமக்குவேணாம்

வாருங்கள் தோழர்களே
விண்ணுயரப் பறந்திடுவோம்!

சிந்தனைக்குத் தீனியிடும் இக்கவிதையை யாத்த திரு(மிகு?). வி.எஸ்.கே.வை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.

பறவைகளை வேட்டையாடிக் கொல்வதும், மூடநம்பிக்கையில் மூழ்கிப்போய் அவற்றைக் கூண்டிலடைத்துச் சோதிடம் சொல்வதும், பறவை பெயரில் லேகியம் விற்றுக் காசுபார்ப்பதையும் கண்டிக்கும் மற்றொரு கவிதையும் நம்மைச் சிந்திக்க வைக்கின்றது.

கூட்டமாய் வரும் பறவைகளே….
கொஞ்சம் நிதானம் தேவை.
இரை போடும் மனிதரை
இனியும் நம்பாதீர்.
[…]
தானியங்கள் உருவில்
விஷத்தினைத் தூவிடுவான்….
மானியங்களாய் பறவைகளை
மொத்தமாய் அள்ளிடுவான்….

சுயநலக்காரனிவன்
சுதந்திரத்தை அடகுவைப்பான்…
பசுங்கிளியைக் கூண்டிலிட்டு
சோதிடத்தைச் சொல்லவைப்பான்…

பந்தயப் புறாக்களாய்ப்
பறக்கவிட்டு பணம்பார்ப்பான்
சிங்காரச் சிட்டுகளைச்
சிறைபிடித்தழகு பார்ப்பான்…

குருவிக்கூடு கலைத்து
லேகியம் செய்துகொள்வான்….
காக்கைகள் கரையுமென்று
விருந்தினைப் புறந்தள்ளுவான்…
[…]
இயற்கையைக் கொல்பவன்…

இவனுக்குச் சிறிதும்
இரக்கம் காட்டிடாதீர்
இயற்கையே இவனைக் கொல்லும்,

இனியும் இவனிங்கு
திருந்திட வில்லையெனில்!

திரு. இளவல் ஹரிஹரன் எழுதியிருக்கும் இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய்த் தேர்ந்தெடுக்கின்றேன்.

கவிஞர்கள் அனைவர்க்கும் மீண்டும் என் வாழ்த்தும் பாராட்டும்!

 

2 thoughts on “படக்கவிதைப் போட்டி 25-இன் முடிவுகள்

  1. எனது கவிதையை ரசித்துப் பாராட்டி, மதிப்பளித்த திருமதி மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும், வாய்ப்பளித்த வல்லமை இதழுக்கும் என் பணிவன்பான வணக்கமும், நன்றியறிதலும்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க