கிராமசபையிலும், பயனாளிகளைத் தேர்வு செய்வதிலும் மாற்றம் தேவை

1

ஆ. ஜெயராஜன்.

இந்த வருடத்தின் மூன்றாம் கிராம சபை நாளான ஆகஸ்ட் 15 முடிந்திருக்கிறது. நாடு முழுவதிலும் உள்ள கிராமங்களில், மக்கள் ஒன்று கூடும் இடமாக இருக்கும் பள்ளிக்கூடத்திலோ அல்லது பொதுவிடத்திலோ கிராமசபை (பெயரளவிலோ அல்லது நடக்காமலோ) கூடியிருக்கும். இதில் கிராமத்திற்கு உட்பட்ட பொது மக்களும், பஞ்சாயத்து உறுப்பினர்களும் ஒன்று கூடி நடந்து முடிந்த நிகழ்வுகளையும், இனி மேற்கொள்ள வேண்டியதையும் பற்றிப் பேசியிருப்பர்.

மத்தியிலும், மாநிலத்திலும், உள்ளாட்சியிலும் நாம் நமது வேட்பாளரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்ந்தெடுக்கின்றோம். அரசியல் சாசனத்தின் அடிப்படையில் மத்தியிலும் மாநிலத்திலும் 1951 ஆம் ஆண்டுக்குப் பிறகும், பஞ்சாயத்துகளில் 1992 ஆம் ஆண்டுக்குப் பிறகும் மக்களால் தேர்ந்தெடுக்கும் முறையைப் பின்பற்றி வருகின்றோம்.

பொதுவாகவே, நம் நாட்டில் ஆட்சி அமைக்க பெரும்பான்மையைப் பெற வேண்டும் என்பது அரசியல் அமைப்பின் கோட்பாடு. ஆகவே அரசியல் கட்சிகள் பெரும்பான்மையை மையமிட்ட ஒன்றாகவே திகழ்கிறது. இன்றைய சூழலில் பொது மக்களின் பங்கேற்பின்மை; அதிகரித்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள், இவற்றால் பெரும்பான்மை என்பது உடைக்கப்பட்டு அது ஒரு அர்த்தமற்றதாகிவிட்டது. இந்நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய செயல்பாடுகளையும் பொறுப்புகளையும் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கிராமத்தைச் சிறந்த முறையில் ஆட்சிசெய்வதற்கான அதிகாரத்தைக் கொண்டுள்ளவர் ஊராட்சித் தலைவரே ஆவார். ஊரக வளர்ச்சி என்பது ஒரு கிராமத்தின் பொருளாதார வளர்ச்சியையும், சமூக வளர்ச்சியையும் கொண்டதாக அமைதல் வேண்டும். இவ்விரண்டையும் பெறுவதற்கு சமூகப் பங்களிப்பு என்பது மிக மிக அவசியமானதாகின்றது.

Panchayati rajஇப்பங்களிப்பினை ஆற்றுவதற்கான கருவியாக விளங்குவது கிராமசபை என்றால் அது மிகையாகாது. இக்கிராம சபையானது மத்திய மாநில அரசுகள், ஊரக வளர்ச்சிக்கென செயல்படுத்தும் திட்டங்களையும், அதன் பயனாளிகள் குறித்த விவரங்களையும், பொதுமக்கள் நேரடியாக அறிந்து கொள்ளவும் தங்களது பங்களிப்பினை ஆற்ற வாய்ப்பளிக்கும் வகையிலும் அமைகின்றது. கிராமசபையினை நடத்துவதும் அதனைச் செயல்படுத்துவதும் ஊராட்சித் தலைவரின் பணிகளில் முதன்மையானதாகும். அப்படிப்பட்ட கிராமசபையின் குறிக்கோள் மற்றும் அது தோல்வியுறுவதற்கான காரணிகளையும் அவற்றைக் களைவதற்கான வழிமுறைகளையும் விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.

பொதுமக்களுக்கான இக்கிராமசபை கூட்டத்தில் மக்களின் பங்களிப்பு துளியளவும் இடம்பெறுவதில்லை என்கின்ற செய்தி வேதனைக்குறியதாகும். இதன் பின்னணியினைப் பார்க்கும் பொது பலதரப்பட்ட சிக்கல்கள் இதில் காணப்படுவதை அறியலாம். ஒரு ஆண்டில் 4 முறை கிராமசபை கூடவேண்டும் என்பது அரசின் அடிப்படைக் கொள்கை. ஆனால் இந்நான்கு தினங்களும் அரசு விடுமுறை நாட்களாகவே இருப்பினும் மக்கள் கூடுவதில்லை. காரணம், ஊரக மக்கள் பெரும்பாலும் தினக்கூலிகளாகவும், விவசாய உழைப்பாளர்களாகவும் இருப்பதால் பகல்பொழுதில் நடைபெறும் இதுபோன்ற கூட்டங்களில் அவர்களால் பங்கேற்ப முடிவதில்லை, முறையான அறிவிப்பு பொதுமக்களைச் சென்றடைவதில்லை, பொதுமக்களுக்கும் போதுமான விழிப்புணர்வு இருப்பதில்லை, அரசியல் தலையீடுகள் மற்றும் ஆதிக்கச்சக்திகள் குறித்த அச்சம் இது போல நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்.

அரசின் ஒவ்வொரு திட்டமும் ஒரு குறிப்பிட்ட பொதுமக்கள் குழுவின் நலனைக் கருத்தில் கொண்டே உருவாக்கப்படுகின்றது. உதாரணமாக, பெண்களுக்காகவும், வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும், பழங்குடி மக்களுக்காகவும் என அரசால் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. ஆனால் கிராமசபையில் இத்திட்டங்கள் தொடர்புடைய பொது மக்களின் பங்கேற்பின்மையால், திட்டங்களின் குறிக்கோள், பயன் குறித்த தகவல்கள் ஆகியன அவர்களைச் சென்றடைவதில்லை. கிராமசபை தலைவர் பெரும்பாலும் இதைப் பொருட்படுத்துவதும் இல்லை.

இந்த அலட்சியப் போக்கின் தொடர்ச்சியாக மற்றொன்றையும் சுட்டிக் காட்டலாம். பெரும்பான்மை சமூகத்தையோ, வகுப்பையோ, சாதியையோ, கட்சியையோ, மதத்தையோ, இனத்தையோ சார்ந்த ஒருவர் கிராமசபைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட நேர்ந்தால், ஊரக வளர்ச்சிக்கு எனக் கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் அவர் தம் சார்புடைய சமூகத்தையோ, வகுப்பையோ, சாதியையோ, கட்சியையோ, மதத்தையோ, இனத்தையோ சென்றடையுமாறு நடந்து கொள்ள வாய்ப்புகள் மிக மிக அதிகம். இதன் தொடர்ச்சியாக ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படும் கிராமசபைத் தலைவர் அவரது தனிப்பட்ட செல்வாக்கினாலோ, இயற்கையாகவோ இன்னும் பிற காரணங்களாலோ அடுத்தடுத்து தேர்ந்தெடுக்கப்படும் சூழலும் உருவாகும் பொழுது மேற்கண்ட நிகழ்வுகள் தொடரும் நிலை ஏற்பட்டு அக்கிராமத்திலுள்ள சிறுபான்மை சமூகத்தினருடைய அடிப்படை பயன்பாடுகள் முழுமையாகச் சென்றடைவதில் தொய்வு ஏற்படுகின்றது அல்லது முழுமையாகச் சென்று அடைவதில்லை என்றே கூறலாம்.

அடிப்படை வாழ்வாதாரச் சிக்கலை போக்குவதற்காக ஒதுக்கப்படும் நிதியானது அந்தந்த பஞ்சாயத்தினைச் சென்றடைகின்ற போதும், அரசு எதிர்பார்க்கும் இலக்குகளின் குறியீட்டினை அது அடைந்ததாகத் தெரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படும் நிதியின் அளவு கூடுகின்றதே தவிர அந்நிதிக்குரிய இலக்குகளைச் சற்றேனும் அரசு அடைந்ததாகத் தெரியவில்லை. இதைக் கூர்ந்து நோக்கும் பொழுது நமக்குப் புலப்படுவது யாதெனில், ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீட்டின் அளவு குறைந்திட வேண்டுமே தவிர கூட்டுவதினால் இலக்குகளை நாம் அடைந்து விடுவோம் என்று கருதி விட முடியாது. இது தவிர, நிதி கூடக் கூட, அது ஏற்கனவே பயன் அடைந்த பயனாளர்களையும், ஊழல் பெருச்சாளிகளையும், அரசியல் தலைவர்களின் கைத்தடிகள் மற்றும் சொந்தங்களையுமே சென்று சேருமே தவிர உண்மையான பயனாளிகள் இதனால் பயன் பெறுவது கேள்விக்குறியே. அரசு முன்னதாகவே கூடுதல் கவனம் செலுத்தி இதை எந்தெந்த வழிகளில் சிறப்பாக மேற்கொள்ளலாம் என்பதனை முன்கூட்டியே திட்டமிட்டிருந்தால் இந்த இலக்குகளை என்றோ அரசு எட்டி இருக்கலாம் என்பதும் கண்கூடு.

இவ்வாறாக மேற்கண்ட கூற்றுகளின் அடிப்படையில் நோக்கும் போது பஞ்சாயத்துத் தலைவர்கள் மற்றும் கிராம சபையின் குறித்த நிலவரங்கள் தெரிய வருகின்றன. ஆகவே இதைச் செம்மை படுத்தச் சில வழிமுறைகள் கீழ்கண்டவாறு இனங்காணப் படுகின்றது.
முதலாவதாக, இத்திட்டங்களில் உள்ள குறைபாடுகளை களையவும் சீரிய முறையில் அதனைச் செயல்படுத்தவும் அரசு சார்பில் நியமிக்கப்படும் ஒரு குழுவோ அதிகாரியோ சம்பந்தப் பட்ட திட்டத்தோடு தொடர்புடைய பயனாளிகளை அவ்வப்போது நேரடியாகச் சந்தித்து, திட்டங்கள் குறித்து கலந்தாய்வு ஆலோசனை செய்யும் பொழுது அத்திட்டம் உயிரூட்டம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

இரண்டாவதாக, கிராம பஞ்சாயத்து தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறையை நாம் மாற்றலாம். ஏன் கிராம பஞ்சாயத்து தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறையை மட்டும் மாற்றலாம் என்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டங்கள் மற்றும் திட்டங்ளை இயற்றும்பொழுதும், அதை அமல்படுத்தும் பொழுதிலும் எதிர்க்கட்சிகள் அவர்களது தரப்பு வாதத்தையும் முன் வைப்பர். ஆதலால் கூட்டு முடிவு எடுக்கப்படும். ஆனால், கிராம பஞ்சாயத்தில் அவ்வாறாக நடைபெறுவது இல்லை. ஆகவே, ’குடவோலை’ முறையைப் பின்பற்றலாம். இங்கு, திட்டத்தை அமல் படுத்துவதும், அதை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதும்தான் தலையாயக் கடமை. அதற்குப் பெரும்பான்மையைவிட, மக்களின் ஈடுபாடுதான் முக்கியம். குடவோலை முறையில் ஆதிக்கச்சக்திகள் குறித்து அச்சப் படத் தேவை இல்லை.

மூன்றாவதாக, கிராமசபை கூடும் நேரத்தில் மாறுதல் தேவை. பொதுவாக, இந்தியப் பாரம்பரியத்தில் ஊர்ப்புறங்களில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்வானாலும் அது பொது மக்கள் கூடுவதற்கு வசதியாக மாலை நேரங்களில் நடைபெறுவது வழக்கம். உதாரணமாக, குடும்பங்களில் நடைபெறும் சடங்கு முறைகள், ஊர்ப்பொதுவில் நடைபெறும் விழாக்கள் போன்றவை பொதுவாக இரவு நேரங்களில் நடத்துவதற்குக் காரணம், அனைத்துத் தரப்பு மக்களின் ஒருங்கிணைப்பும் அவர்களின் பங்களிப்பும் இடம் பெற வேண்டும் என்பதற்காகத்தான். இதே நடைமுறையைக் கருத்தில் கொண்டு கிராம சபையின் கூட்டத்தினை மக்களுக்கு ஏதுவான நேரமாகக் கருதப்படும் மாலை நேரங்களில் நடத்தும்பொழுது அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்கும் ஒரு சூழலை உருவாக்கித் தரலாம்.

நான்காவதாக, கிராமசபை கூடும் நாளை முறையாக விளம்பரப்படுத்த வேண்டும். இவ்விஷயத்தை அரசு தீவிரமாக கருத்தில் கொண்டு செயல்படுத்தினால் மக்களிடம் ஆக்கபூர்வமான விளைவுகளைக் காணமுடியும். சான்றாக, கிராமசபை குறித்த அறிவிப்பை (கிராம சபை கூடும் நாளை) மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வெகுஜென ஊடகங்களைப் பயன்படுத்த வெண்டும். தேசிய நாட்காட்டிகளில் (காலண்டர்) கிராமசபை குறித்த வாசகங்களை வெளியிட்டு அன்று விடுமுறை என்று சுட்டிக் காட்டலாம். பள்ளிகளிலும், கிராம சபை விடுமுறை நாட்களுக்கு முந்தைய நாளில் கிராம சபை குறித்த அறிவிப்போடு விடுமுறை என்பதை எடுத்துக் கூற வேண்டும். இதனால் மக்கள் சீறிய விழிப்புணர்வு பெறுவர்.

அடிப்படை செயலாக்க சக்தியாகச் செயல்படும் கிராம பஞ்சாயத்துத் தலைவர், அவர் பொறுப்புகளை உணர்ந்து சரிவர செயல்பட்டு இருந்தார் ஆயின் அரசின் அனைத்துத் திட்டங்களும் வெற்றி பெற்று இருக்கும். ஆனால், இது நம் நாட்டிலுள்ள பெரும்பாலான கிராம பஞ்சாயத்துகளில் நடந்ததாகத் தெரியவில்லை. இதனால் மாற்றம் ஒன்றே மானுட தத்துவம் என்ற அடைமொழிக்கேற்ப தகுந்ததொரு மாற்றம் ஏற்படுமாயின் அது நன்மை பயக்கும். ஊர்கூடித் தேரிழுப்பது போல அனைவரும் சேர்த்து கூட்டு முயற்சியோடும் தன்னார்வத்தோடும் பங்கேற்று, மிகுந்த அர்ப்பணிப்போடு செயல்படும் பொழுது கிராம சபை எனும் தேரினை எளிதாக நகர்த்திச் சென்று திட்டங்களின் பயன்களை அதன் பயனாளிகளிடம் சேர்க்கலாம்.

Bibliography
1) Arun kavshik, “How Representative has the Lok Sabha bear” EPW, may 12, 2012, vol XL no 19
2) Http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/354/14/14_chapter7.pdf
3) http://www.isidelhi.org.in/saissues/sa112/nirmala.pdf
4) rural.nic.in/sites/…/budget/Outcome_Budget_RD_2011_12_book.pdf

Jayarajan- Photo1ஆ. ஜெயராஜன்,
முனைவர் பட்ட ஆய்வாளர்
காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகம்
காந்திகிராமம்-624302
திண்டுக்கல், தமிழ்நாடு
தொலை பேசி: 9047771414
மின்னஞ்சல்: najayarajan@gmail.com

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கிராமசபையிலும், பயனாளிகளைத் தேர்வு செய்வதிலும் மாற்றம் தேவை

  1. மாற்றம் என்பது கிராமப் புறங்களில் உள்ள மக்களுக்கு, அரசின் திட்டங்களையும் கொள்கைகளையும் உணர்த்துவதன் மூலமே உருவாக்க முடியும். கிராமம் உயர நாடு உயரும் என்பதை மையமாகக் கொண்டே இக்கட்டுரை உருப்பெற்றுள்ளது… வாழ்த்துக்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *