படக்கவிதைப் போட்டி 27-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
இவ்வாரக் கவிதைப்போட்டிக்கான ஒளிஓவியத்துக்குச் சொந்தக்காரர் திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணன். இதனைப் போட்டிக்கு உகந்ததெனத் தேர்ந்தெடுத்துத் தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் வல்லமையின் நன்றி!
திறந்திருக்கும் கதவு; சிதறியிருக்கும் காலணிகள்; அவற்றினருகே விழுந்திருக்கும் செய்தித்தாள்; இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்தபடி வீற்றிருக்கும் நாற்காலி என…இப்புகைப்படம் வகைப்படுத்திக் காட்டும் பொருள்கள், ”இது எந்த இடம்? இங்கிருப்பவர்கள் யார்?” எனப் பற்பல வினாக்களை நம்முள் விதைக்கின்றன.
விடைபகரும் பொறுப்பை நம் கவிஞர் பெருமக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டபடியால் அவர்களின் எண்ணவோட்டங்களை நோட்டமிடும் வேலை மட்டுமே நமது!
இதோ…கவிஞர்கள் எழுதிக் குவித்திருக்கும் கவிதைகளினூடே பயணிப்போம் வாருங்கள்!
மரணத்திற்குப்பின் செய்வதறியாமல் கிடக்கும் ’இருத்தலின் நீட்சியே’ நீங்கள் படத்தில் காண்பவை என்று பொருத்தமாய் விளக்கமளிக்கின்றார் திரு. கவிஜி தன் கவிதையில்.
எனக்குப் பின்னாலும்
நானே இருக்கிறேன்
இருக்கும் இருத்தலுக்குப்
பின்னும்
நானே என்பதாக,
எனக்கு முன்னாலும்
ஒரு பின்னால் இருப்பதாக…..-
ஆக
மொத்தத்தில்
இருக்கிறேன்..
மரண நிகழ்வுக்கு
பிந்தைய முதல் சில துளிகளில்
செய்வதறியாமல்
கிடக்கும் எல்லாமும்
இப்படித்தான்…..
இருக்கிறது….
இருந்தலின் நீட்சியாக…
*****
நாற்காலியின் வெறுமையும், தரையில் படிந்த கறையும் அவ்விடத்தில் நிகழ்ந்த ஏதோவோர் அவலத்தை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன எனும் திரு. தமிழ்த்தேனீ, இதற்கெல்லாம் காரணம் அந்த ’ஒற்றைச்சொல்லே’ என்கிறார். அந்த ஒற்றைச்சொல் யாதாயிருக்கும் எனும் குறுகுறுப்பு நம்முள்ளும் எழுகிறது!
ஜன்னலில் துணி
திறந்த கதவு
வரவேற்பு மிதியடி
தயாராய் செய்தித்தாள்
உதிர்ந்த காலணி
வயோதிகம் தாங்காத நாற்காலி
கறை படிந்த தரை
திறந்த கதவு
யாரும் வர
விரும்பாத அறை
கனத்த நெஞ்சம்
காரணம் அந்த
ஒற்றைச் சொல்
*****
ஒரு வீட்டின் நிகழ்வுகளை அங்கிருக்கும் ’நாற்காலி’யின் பார்வையில் வித்தியாசமாய் விவரித்திருக்கின்றார் திரு. விஎஸ்கே.
யார்முதலில் வருவாரென எனக்கின்னும் தெரியாது
கார்கால மாலையிலே கவினிருட்டுப் படரும்வேளை
மகள்முதலில் அலட்சியமாய்க் காலணியைக் கழற்றியப்பின்
கதவிங்கே திறந்தவளும் வீட்டினுள்ளே சென்றடைந்தாள்
[…]
யாருடனோ கலகலப்பாய்ப் பேசுகின்ற குரல்மட்டும்
எனக்கிங்கேத் தெளிவாகத் திகட்டாமற் கேட்டிருந்தேன்
கல்லூரித் தோழனவன் கண்ணனெனப் புரிந்துகொண்டேன்
நாடோறும் தவறாது நிகழ்கின்ற சேதியிது!
யாரங்கே வருகின்றார் எனச்சற்று நோக்கினேன்
பணிமுடித்து களைப்பாகத் தாயவளும் வந்துநின்றுப்
பொறுப்பாகக் காலணியைப் பொருத்தமாகக் கழற்றியவள்
உள்ளெழுந்தச் சிரிப்பொலியைக் கேட்டவுடன் விரைந்திட்டாள்.
கையிருந்தப் பத்திரிகையை வாசலிலே விட்டெறிந்து
உள்விரைந்த தாயந்தப் பெண்ணுடனே கோபமாகப்
பேசுகின்ற சத்தத்தை நான்மட்டும் கேட்டிருந்தேன்
இப்படித்தான் நிகழுமென நானிங்கு எதிர்பார்த்தேன்!
அலைபேசி கையெடுத்து அவசரமாய்க் கணவரையும்
வரச்சொன்ன சேதிகேட்டு மௌனமாகப் புன்னகைத்தேன்
அப்பாவி அவர்வந்து ஆவதென்ன? செய்வதென்ன?
எப்போதும் பேசாத அவரென்ன செய்யவியலும்!
[…]
யாரேனும் இதிலொருவர் போதுமிது எனநினைத்து
போரிதனை முடித்தபின்பு களைத்துப்போய் வெளிவருவார்
கண்ணெதிரே தெரிகின்ற என்மீது அவரமரும்
நேரமிது என்றுணர்ந்து சலனமின்றி இருக்கின்றேன்!
*****
’புறக்கணிக்கப்படும் முதுமைக்கான அமர்விடமோ இந்த நாற்காலி? இளமையே எண்ணிப்பார்! முதுமை உனக்கும் ’நல்வரவு’ கூறும்நாள் வெகுதொலைவில் இல்லை’ என்கிறார் திரு. கொ.வை. அரங்கநாதன்.
ஒற்றை நாற்காலியில்
உருக்குலைந்த மனிதன்
நல்வரவு கூறி
உள்ளே சென்று
கால் நீட்டி
கண் மூடியபோது
காலணிகளைக் கழற்றிவிட்டு
போலிக் கண்ணீருடன்
உள்ளேப் புகுந்தவர்கள்
கடன்காரர்கள் மட்டும்தானா?
அவன்
உழைப்பில் விளந்தவற்றை
உரிமையுடன் பங்கிட்டு
வயதால் அவன் வாடியபோது
வாசல் ஓரத்தில்
ஒற்றை நாற்காலியில்
உட்காரவைத்த
உற்றமும் சுற்றமும் கூட!
புறக்கணிக்கப்படும் முதுமை
நாளை நமக்கும் நேரலாம்
நினைத்துப் பார்க்க வேண்டாமா?
*****
‘ஆங்கில வரவேற்போடு உள்ளே நிகழ்வதோ தமிழ்மொழி மாநாடு!’ என்று எள்ளல் சுவையுடன் துள்ளல் கவிதை வடித்திருக்கிறார் திரு. மெய்யன் நடராஜ்.
உள்ளே நடக்கிறது தமிழ்மொழி மாநாடு.
பங்குபற்றிக் கொண்டிருக்கிறார்கள்
எழுத்துக்கூட்டி WELCOME ஐ
வாசிக்கத் தெரிந்தவர்கள்!
*****
சிம்மாசன மோகம் கொண்டலையும் மானிடனே… இது சரியா? மாண்டபின்பு கூடவருமோ இந்த அரியாசனம்? எனக் கேட்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
பாதுகை தேடி ஓடுவதும்,
பதவி என்பதாம் சிம்மாசனம்
மீதினிலே ஆசை அதிகமாகி
மிதவை போலே அலைவதுடன்,
ஏதோ ஒன்றில் ஆசைவைத்தே
எங்கும் அலையும் மானிடனே,
மீதி யிருக்கும் உயிரதுபோய்
மாண்டால் எல்லாம் காலிதானே…!
*****
புகைப்படத்தில் நம் பார்வைக்குத் தெரிபவையெல்லாம் புலர்காலைப் பொழுதின் அடையாளச் சின்னங்களே! என்று பரவசமாகிறார் திருமிகு. தமிழ்முகில்.
இருளாடை மெல்ல விலக்கி
ஒளிதனை சூட்டிக் கொண்டு
புது நாளொன்றும் பிறக்கிறது !
விடியலை வரவேற்க
வாசலும் இங்கே திறந்திருக்க
வரவேற்பு மிதியடியும்
அழகாய் கண்சிமிட்ட
அன்றைய முக்கிய நிகழ்வுகளை
சுமந்து காத்திருக்கும் செய்தித் தாளும்
ஆசனமும் தயாராய் தான் காத்திருக்க
மானுடரை சுமந்து செல்லும்
பாதுகைகளும் எப்போதுமே
தயாரான நிலையில் இருக்க
இனிமையும் இன்பமும் நிறைந்த
நாளொன்றின் அடையாளமாய்
புலரும் பொழுது !
*****
அழகுக் கவிதைகளை அமுதத் தமிழினில் அள்ளி வழங்கியிருக்கும் கவித் தோழர்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்கள்!
இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைத் தேர்ந்தெடுக்க வாருங்கள் என்னோடு!
’நேற்றைய செய்தித்தாளாய் மடித்து வீசப்பட்ட வாழ்க்கை; அமர்வதற்கு மனிதர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வெற்றிருக்கை என…(மானுடனின்) மரணத்திற்கு நல்வரவுகூறிக் காத்திருக்கும் மரணவீடு இது!’ என்று மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கும் மரணத்தைப் புதிய கோணத்தில் நமக்கு அறிமுகப்படுத்தும் ஒரு கவிதை என்னுள் சில அதிர்வுகளை ஏற்படுத்தியது.
அக்கவிதை…
இங்கே முடிகிறது
பாதையும் பாதமும்விட்டு என்
பாதுகை பிரியும் பயணம்
பயணமோ தொடங்குகிறது
இங்கிருந்து புதிதாக
காலம்வந்து இடம்பெயர்த்துவிட்டது
என் இருப்பை
காத்திருப்பின் இருக்கையிலிருந்து.
யாருக்காகவோ காத்திருக்கவும் தொடங்கிவிட்டது
இந்த நுண்கணத்து வெற்றிருக்கை
பாதச்சுமையாகவோ
பாதைத்துணையாகவோ இருந்த
அடையாளங்கள் அனைத்தும்
அறுந்து வீழ்கின்றன
ஆண் பெண்ணென்ற பேதமும்
அர்த்தமற்று களையும் இந்த புள்ளியில்
மனதின் நுனியாலும்
மடமையின் வேராலும்
வாழ்ந்துமுடித்த காலமனைத்தும்
மடித்து வீசப்படுகிறது
நேற்றைய செய்தித்தாளென
அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கிறது
எனக்கான அழைப்பு வாசகம்
திறந்தபடியே காத்திருக்கிறது – நான்
எப்படியும் திரும்பிவிடுவேன் என்பதற்காக
மரணத்தின் வீடு.
நேர்த்தியான சொற்கட்டோடு இக்கவிதையை யாத்துள்ள திரு. சோழகக்கொண்டலை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன். பாராட்டுக்கள் கவிஞரே!
*****
அந்தகனான தனக்குச் சோதரியாய் மட்டுமல்லாது புறக்கண்ணாகவும் விளங்கிய பெண்ணொருத்தியின் மரணத்தைத் தாளாது புலம்பும் ஓர் மனிதனின் சோகத்தைப் பதிவுசெய்துள்ள மற்றொரு கவிதையும் நம் மனத்தைக் கனக்க வைக்கின்றது.
…புறக்கண் இல்லா
எந்தன் இதயம் நோக்க
கிண்கிணிநாதப்பேச்சு
மெல்லிசை தமிழே
எங்கே சென்றாய்?
வாசித்துக் காட்டிய
மாதுளை முத்து இதழ்கள்
சிந்திய தமிழ் கேட்க
அகக்கண் மட்டுமே
அருளிய ஆண்டவனுக்கு
ஏனிந்த ஓரவஞ்சனை!
வானவில்லாய் வளைந்து
வான்முகிலில் வர்ணஜாலங்கள்
உரைத்திட்ட செந்தமிழழகி
அந்தகனை விட்டு ஏன் மறைந்தாய்?
[…]
இன்னொரு யுகப் புரட்சியிலே
உனக்குமட்டும் சகோதரனாய்
இருந்திடவே கடவுளிடம்
யாசிக்கின்றேன்!
[…]
வாசிக்க யாருமற்ற செய்தித்தாள்
உனது புரட்டலுக்காக காத்திருந்து
கண் சோர்ந்துவிட்டது!
நீ அமர்ந்த நாற்காலி
உனது வருகைக்காக காத்திருக்கிறது!
திருமிகு. லட்சுமி எழுதிய இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய்க் குறிப்பிட விரும்புகின்றேன்.
ஆர்வத்தோடு போட்டியில் பங்கேற்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் என் நன்றியும் பாராட்டும் உரித்தாகுக!
ஒவ்வொரு வாரமும் ஒரு படமும் வெளியிட்டு , அதற்கேற்ப கவிஞர்களின் சிந்தனையை தூண்டிடும் பாங்கும் ,நல்ல எண்ணமும் வரவேற்கத்தக்கது . நானும் ஒரு முறை கலந்து கொண்டு தேர்வும் ஆனது மகிச்சிக்குரிய ஒன்றாகும் அந்தவகையில் இந்த படத்தை வைத்து சிந்தனையாளர்களின் பார்வையை இங்கே பதிவிடுவது போற்றற்குரியது . வாழ்க திருமதி சாந்தி மாரியப்பன் அவர்களும் திருமதி மேகலா ராமமூர்த்தி அவர்களும் . தொடர்க உங்கள் பயணத்தை. வாழ்த்துக்கள். இதில் என்னால் தொடர்ந்து பங்குபெற இயலவில்லை என்று வருத்தம் ஒருபுறம் இருக்க , மற்றவரகள் தொடர்ந்து பங்கு பெறுவதை கண்டு மனம் உவகை அடைகிறது . எல்லையிலா ஆனந்தம் .
வாழ்க வல்லம்மை ….வாழ்த்துக்கள் அனைத்து கவிஞர்களுக்கும் .
பழனி குமார்
‘வித்தியாசமாக’ விவரித்ததைக் குறிப்பிட்டுப் பாராட்டிய தங்களுக்கு என் நன்றி வணக்கம்.
மிக்க நன்றி !