கர்ம வீரர் காமராசர்
—ஞா.கலையரசி
“முழந்துண்டு சட்டைக்கும் முதலில்லாத் தொழிலாளி
பழநிமலை ஆண்டிக்குப் பக்கத்திலே குடியிருப்போன்
பொன்னில்லான் பொருளில்லான் புகழன்றி வசையில்லான்
இல்லாளும் இல்லான் இல்லையெனும் ஏக்கமிலான்
அரசியலைக் காதலுக்கே அர்ப்பணித்தார் மத்தியிலே
காதலையே அரசியலிற்குக் கரைத்துவிட்ட கங்கையவன்!”
ஆயிரம் சொற்களில் பெருந்தலைவர் காமராசரைப் பற்றி நாம் சொல்ல நினைப்பதை, ஆறே வரிகளில் அற்புதச் சொல்லோவியமாகத் தீட்டியிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.
காமராசரின் பற்பல சாதனைகளில், முதலில் என்னைக் கவர்ந்தது, பொதுவாழ்வில் அவர் கடைபிடித்த நேர்மையும், கண்ணியமும், எளிமையும் தான். ஒரு தடவை பதவியிலிருந்தாலே பத்துத் தலைமுறைகளுக்குச் சொத்து சேர்க்கும், இன்றைய அரசியல்வாதிகளோடு ஒப்பிடும் போது, இவர் இமயமாக ஜொலிக்கிறார்!
இன்றைய காலக்கட்டத்தில், மக்களின் நன்மதிப்பைப் பெற்று எளிதாக ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் அரசியல் கட்சிகள் அனைத்துமே, காமராசர் பொற்கால ஆட்சியைக் மீண்டும் கொண்டு வருவோம் என்று கூசாமல் புளுகுமூட்டைகளை அவிழ்த்தவண்ணமிருக்கின்றன. இவரின் பெயரை உச்சரிக்கக் கூட இன்றைய அரசியல்வாதிகளுக்கு அருகதையில்லை என்பது தான் வேதனையான உண்மை!
விருதுநகரில் வசதியில்லாக் குடும்பத்தில் பிறந்த காமராசர், தம் விதியை நொந்தவாறு குருட்டு அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்துக் காலத்தை ஓட்டியிருந்தாரென்றால், இன்று நாடு புகழும் தலைவர் நமக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.
அதிகம் படிக்கவில்லையாயினும், மாபெரும் கட்சியில் அடிமட்டத் தொண்டனாக சேர்ந்து தம் அயராத உழைப்பினாலும், அசாத்திய திறமையாலும், தூய்மையான தொண்டினாலும் கட்சியின் தலைமைப் பொறுப்பை அடைந்ததோடு, இந்தியாவின் பிரதம மந்திரிகளை நியமிக்கும் ‘கிங் மேக்கர்,’ அளவுக்கு உயர்ந்தார் என்றால் அது எவ்வளவு பெரிய இமாலய சாதனை? இவருடைய சாதனைகள் அனைத்துமே வரலாற்று முக்கியத்துவம் பெற்றவை.
ஒரு நல்ல தலைவருக்கு இருக்க வேண்டிய அத்தனை குணாதிசயங்களும் இவரிடம் இருந்தன. ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தமையால், கீழ்த்தட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை, அனுபவ பூர்வமாக உணர்ந்திருந்தார்.
தொலைநோக்கு பார்வை இவரிடத்தில் இருந்ததால், குறுகிய கால அரசியல் நோக்கில் வெறும் வாக்கு வங்கிக்காகச் செயல்படாமல், சமுதாயத்தில் அடிமட்டத்தில் உழலும் மாந்தரின் வாழ்வுத் தரத்தை முன்னேற்ற, நீண்ட காலத் திட்டங்கள் தீட்டினார்.
மக்களின் அடிப்படை பிரச்சினையான வறுமையைப் போக்கிட, நோய் நாடி நோய் முதல் நாடினார். தற்குறிகளாகத் திரியும் குழந்தைகளின் கல்விக் கண்ணைத் திறந்து விட்டால், ஒளிமயமான எதிர்காலம் அவர்களுக்குக் கிடைக்கும் எனச் சிந்தித்தார். மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக அறிவு சார்ந்த, திறன் வாய்ந்த சமுதாயம் உருவாகக் கல்வி அவசியம் தேவை என்பது இவருக்குத் தெரிந்திருந்தது.
சமுதாயம் மேம்பாடு அடையவும், தரமான குடிமக்கள் உருவாகவும் கல்வி மிக முக்கியம் என்பதால் தானே வள்ளுவர் கல்வி, கல்லாமை என இரு அதிகாரங்கள் ஒதுக்கிக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார்?
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து
என்று ஒரு தலைமுறையில் பெறும் கல்வியானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும் என்று சொல்லிக் கற்பதை வலியுறுத்தும் வள்ளுவர், கல்லாமை என்ற அதிகாரத்தில்
உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.
எனக் கல்லாதவரைக் களர் நிலத்துக்கு அல்லவா ஒப்பிடுகிறார்?
மீன் தருவதற்குப் பதில் மீன் பிடிக்க கற்றுக்கொடு என்கிறது சீனப் பழமொழி!
பள்ளிப்படிப்பை அரைகுறையாக நிறுத்திவிட்ட போதிலும், கல்வியின் இன்றியமையாமையை நன்கு உணர்ந்திருந்தார் காமராசர். அரசியல் இலாபங்களுக்காக இலவசங்களை வாரியிறைத்து, நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரங்கள் மூலம் சுயதம்பட்டம் அடித்து, அடுத்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை உறுதிசெய்து கொள்ளும், இன்றைய தலைவர்கள் போல, இவர் எண்ணினாரில்லை!
மாறாக இளந்தலைமுறை கல்வி கற்று நம் சமுதாயம் மேம்பட வேண்டும் என்ற உயரிய நோக்கில், கல்வியை ஏழை, பணக்காரர் என்ற பேதமின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டி, முனைப்புடன் செயலாற்றினார்.
பசியால் அவதிப்படும் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்துவது கடினம்; பள்ளியிலேயே சத்துணவு கொடுத்தால், பட்டினிக் கொடுமையால் அவதிப்படும் மக்கள், மதிய வேளை சாப்பாட்டுக்காகவாவது தங்கள் குழந்தைகளைத் தவறாமல் பள்ளிக் கூடத்துக்கு அனுப்புவார்கள் என்ற இவர் நம்பிக்கை பொய்க்கவில்லை!.
இவர் ஆணைப்படி கிராமங்கள் தோறும் ஆயிரக்கணக்கான கல்விக்கூடங்கள் திறக்கப்பட்டன; பள்ளிகளில் மதிய வேளையில் குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்கப்பட்டது; எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வி கிடைத்தாக வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பள்ளியிறுதி வரை கட்டணமில்லாக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. பள்ளிகளில் ஏழை, பணக்காரர் வேறுபாட்டைப் போக்கும் விதத்தில் சீருடை வழக்கம் அமுலுக்கு வந்தது.
திறக்கப்பட்ட ஆயிரக் கணக்கான பள்ளிகளுக்குக் கல்வி போதிக்கப் பயிற்சி பெற்ற ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டது. படித்து விட்டு வேலை யில்லாமல் இருப்பவர்களை, ஓராசிரியர் பள்ளிகளுக்கு ஆசிரியராக நியமித்து விடலாம் என்று இதற்கும் தீர்வு சொன்ன காமராசர், ‘அ, ஆ’ ‘அம்மா,’ ‘அப்பா’ என்று சொல்லிக் கொடுக்க பயிற்சி ஆசிரியராத் தேவை என்றும் கேட்டாராம்! இம்முடிவினால் வேலையில்லாப் பட்டதாரிகள் பலருக்கு வேலை கிடைத்தது!
உள்ளூர் மக்களின் உதவியையும், நன்கொடைகளையும் பெற்று அந்தந்த ஊர்ப் பள்ளிக்கூடங்களின் நிலைமையைச் சீராக்கும் பள்ளிச் சீரமைப்பு இயக்கம், தமிழ்நாட்டில் தோன்றி, அதன் புகழ் இந்தியா முழுமைக்கும் பரவிற்று.
தலைவர் காமராசரால் வேலூரில் ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளிச் சீரமைப்பு மாநாட்டிற்கு வருகை தந்த ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அவர்கள், நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் மக்களை ஈடுபடுத்தும் முயற்சியில் தமிழகக் கல்வித்துறை சிறப்பான வெற்றி பெற்றிருப்பதாக மனந்திறந்து பாராட்டினார்.
அன்று காமராசர் மட்டும் தமிழகமெங்கும் பள்ளிக் கூடங்கள் திறந்து ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்த கல்வியை இலவசமாக்கிக் கல்விக் கண்ணைத் திறந்திருக்காவிட்டால், இன்று நாம், மாடு தான் மேய்த்துக் கொண்டிருப்போம்! அதில் சந்தேகமேயில்லை. எனவே இவ்வுலகம் உள்ளளவும், தமிழ்ச் சமூகம் இவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கின்றது!
அக்காலத்தில் உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் சில ஆயிரம் பேருக்கு மட்டுமே, ஓய்வூதியம் கிடைத்தது. மற்றவர்களுக்கு பிராவிடண்ட் நிதி மட்டுமே கிடைத்தது. காமராசர் இதனை மாற்றி எல்லா ஆசிரியர்களுக்கும், ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்தார்.
இவர் தமிழக முதல்வராகயிருந்த ஒன்பது ஆண்டுகளில் (1954 -1963) தமிழகம் தொழிற் துறையிலும் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்தது. திருச்சி பாய்லர் தொழிற்சாலை, பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை, நெய்வேலி நிலக்கரி தொழிற்சாலை உள்ளிட்ட பல பெரிய தொழிற்சாலைகள், இவர் முயற்சியால் தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டு ஏராளமானோர்க்கு வேலை வாய்ப்பு கிட்டியது.
வேளாண் துறையிலும் இவர் செய்த சாதனைகள் அளப்பரியது. மணி முத்தாறு, வைகை, ஆழியாறு போன்ற அணைத் திட்டங்கள் இவர் காலத்தில் தான் நிறைவேற்றப்பட்டன. இவரின் திறமையான ஆட்சியில் தமிழகம் எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் பெற்று விளங்கியதால், இந்தியாவிலேயே மிகச் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலம் தமிழ்நாடு என்று பாராட்டினாராம் நேரு.
மூத்த தலைவர்கள் பதவியிலிருந்து விலகி கட்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும்; காங்கிரஸ் இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை உருவாக்கினார் காமராசர். இதை கே.பிளான் (காமராசர் திட்டம்) என்றழைத்தார்கள். எல்லோருக்கும் முன் மாதிரியாக தமிழக முதல்வராக இருந்த காமராசர் தாமே பதவியிலிருந்து விலகி திரு.கே.பக்தவச்சலத்தை முதல்வர் பதவியில் அமர்த்தினார்.
பதவி ஆசை இவரிடம் துளியும் இல்லை என்பதை நினைக்கும் போது இப்படியும் ஒரு தலைவர் தமிழ்நாட்டில் இருந்தாரா என வியக்கிறேன்! பார்வை முழுதும் மங்கி, நடக்க முடியாமல் தள்ளாடும் வயதிலும், நாற்காலியை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் இன்றைய அரசியல்வாதிகள் எங்கே? அவர் எங்கே?
1963 ஆம் ஆண்டு புவனேஸ்வரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் காமராசர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் நேருஜி மரணமடைந்த போது, அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் பெருங் குழப்பம் நிலவியது அப்போது லால் பகதூர் சாஸ்திரி பெயரைப் பிரதமர் பதவிக்கு முன் மொழிந்தவர் காமராசரே.
குறுகிய காலத்தில் சாஸ்திரி அகால மரணமடைந்த வேளையில் “நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக!” என இந்திரா காந்தியைப் பிரதமர் ஆக்கியதும் இவரே.
காமராசர் நினைத்திருந்தால் நாட்டின் பிரதமராக ஆகியிருக்க முடியும். ஆனால் அவர் பதவியைத் துச்சமாக மதித்தார். மூத்த தலைவர்கள் இளைஞர்களுக்கு வழி விட்டு அவர்களுக்கு வழிகாட்டியாயிருப்பதுடன் கட்சியை வலுப்படுத்தி நாட்டு நலப்பணி செய்யவும் வேண்டும் என்பது அவர் கொள்கையாக இருந்தது. ஜனநாயகத்தின் மேல் அவருக்கிருந்த பற்றும் இளைஞர்களின் மேல் அவருக்கிருந்த நம்பிக்கையும் அளவிடற்கரியது. ஆனால் இன்றைய ஜனநாயகமோ, கிழடு தட்டி கம்பூன்றிய அரசியல்வாதிகளின் கையில் சிக்கி அப்பா, பையன் பேரன் எனப் பரம்பரை சொத்தாகிவிட்டது.
ஒருமுறை தெரு முனையிலிருக்கும் குடிநீர்க் குழாயை தம் வீட்டருகே அமைத்துத் தரும்படி சகோதரி கேட்டபோது “அது அரசு அமைத்த குழாய் அனைவருக்கும் பொதுவானது; அதை நம் வீட்டருகே அமைக்க எந்தச் சட்டமுமில்லை; எனவே அங்குப் போய்த் தண்ணீர் பிடித்துக்கொள்,” என்று சொல்லிவிட்டாராம் தலைவர்.
அரசு இயந்திரத்தைத் தமக்காகவோ, தம் நெருங்கிய உறவுகளுக்காகவோ துஷ்பிரயோகம் செய்யாமல், இறுதி மூச்சு உள்ளவரை சொத்தென்று சில கதர் வேட்டி சட்டைகள், நூறு ரூபாய்க்கும் குறைவான பணம், வாடகை வீடு என்று வாழ்ந்து மறைந்த பெருந்தலைவர் காமராசரின் தன்னலமற்ற தொண்டைப் போற்றிப் பாராட்ட வார்த்தைகளில்லை!
எங்கும் எதிலும் லஞ்ச ஊழல் லாவண்யங்கள் புரையோடிப் போய்க் கிடக்கும் இச்சமூகத்தில், பொன்னுக்கோ பொருளுக்கோ ஆசைப்படாமல் கடைசிவரை நேர்மையைக் கடைபிடித்து, தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்து அரும்பெரும் சாதனைகள் நிகழ்த்தி வரலாறு படைத்தார் என்பதால் தான், இவர் மறைந்து ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் ஆகியும் தமிழகம் கர்ம வீரர் காமராசர் என்ற பெயரை அடிக்கடி உச்சரிக்கின்றது.
“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” என்ற கவிஞர் வாலி அவர்களின் பாடல் வரிகளுக்கு இலக்கணமாய்த் திகழ்கிறார் கர்ம வீரர் காமராசர்.