-மேகலா இராமமூர்த்தி

பாட்டாளி வர்க்கத்தின் பிதாமகன்!

பரந்துவிரிந்த இப்பூவுலகில் வாழும் மாந்தர்கள் பலகோடி; அவர்களில், அல்லற்பட்டு ஆற்றாது அழுதுநிற்கும் மக்களின் எண்ணிக்கைக்கும் குறைவில்லை. ஆனால் அவர்களின் துயர்துடைக்க, அவர்தம் வாழ்வில் ஒளிதுலங்கக் கரம் நீட்டுவோர், வழிகாட்டுவோர் எத்தனை பேருளர் என்று ஆராய்ந்துபார்த்தால் ’வெகு சிலரே’ கிட்டுவர். அத்தகைய வெகுசிலரில் ஒருவராய், தொழிலாளர்களின் தோழராய், பாட்டாளிகளின் கூட்டாளியாய்த் திகழ்ந்தவர்தான் வரலாற்று நாயகர் காரல் மார்க்ஸ்!

marxஜெர்மனியின் ரைன்லாந்தில் (Rhine Province or Rhineland) பிறந்த கார்ல் மார்க்ஸ், அடிப்படையில் யூதமதத்தைச் சேர்ந்தவர். அவருடைய பாட்டனார்கள் இருவருமே யூதமதக் கொள்கைகளைக் கற்றுத் துறைபோனவர்களாகவும் அக்கொள்கைகளைப் பரப்புரை செய்யும் மதபோதகர்களாகவும் விளங்கியவர்கள் (both of his grandfathers were rabbis). ஆனால் மார்க்ஸின் தந்தையும், வழக்கறிஞருமான ஹெய்ன்ரிக் மார்க்ஸ் (Heinrich Marx), கார்ல் மார்க்ஸ் குழந்தையாக இருந்தபோதே யூத மதத்திலிருந்து விலகிக் கிறித்தவ மதத்தைத் தழுவியிருக்கின்றார்.

தத்துவம், இலக்கியம் முதலியவற்றில் பெருவிருப்பு கொண்டிருந்த இளைஞர் மார்க்ஸ், ஜெர்மனியின் பான் பல்கலைக்கழகத்தில் (University of Bonn) தத்துவத்துறை மாணாக்கராகச் சேர விழைந்தபோதும் தந்தையின் கட்டாயம் காரணமாய்ச் சட்டம் படிக்கவேண்டியதாயிற்று. பான் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடங்கினாலும் அங்கு அதனைத் தொடர முடியாதநிலை ஏற்பட்டதால் பெர்லின் பல்கலைக்கழகத்தில் தன் சட்டப்படிப்பைத் தொடர்ந்தார் மார்க்ஸ். கூடவே தத்துவமும் படித்து முனைவர் பட்டம் பெற்றார். பல்கலைக்கழகக் கல்விக்குப் பின்னர் சில காலம் பல்கலைக்கழக ஆசானாகவும் பத்திரிகையாளராகவும் அவர் பணிபுரிந்திருக்கின்றார் என்று தெரியவருகின்றது.

வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் பேசும் குணம்பெற்ற மார்க்ஸ், மெத்தப் படித்த மேதையாக மட்டுமின்றிச் சிறந்த புரட்சியாளராகவும் திகழ்ந்தார். மக்கள், உலகத்தைப் பார்க்கும் அடிப்படைப் பார்வையிலேயே மாற்றத்தைக் கொணரவேண்டும் என்று விரும்பினார் அவர். சமூகம் என்ற அமைப்பில் மக்களின் மதம்சார்ந்த நம்பிக்கைகள் வலுவாகவும், வாழ்வோடு பிரிக்கமுடியாத கூறுகளாயும் கலந்திருப்பதனால், மதம் குறித்த தம் எண்ணவோட்டத்தையும் தம் நூல்களில் அவர் மறவாது குறித்திருக்கின்றார்.

பொருள்முதல் வாதத்தில் (materialism) நம்பிக்கை கொண்ட கார்ல் மார்க்ஸ், இவ்வுலகம் இயற்கையிலுள்ள பருப்பொருள்களால் (matter) ஆனதேயொழியத் தெய்வசக்தி எதனாலும் படைக்கப்படவில்லை என்று கூறி, கருத்துமுதல் வாதத்திற்கு (Spiritualism) எதிரான தம் கருத்தைப் பதிவுசெய்திருக்கின்றார். மதம் என்பது மனிதர்களின் வேதனைகளுக்குத் தற்காலிகத் தீர்வைத் தருகின்ற ஓர் மாயத்தோற்றமே; இவ்வுலகில் தான்படும் துன்பங்கள் யாவும் மேலுலகம் சென்றதும் நீங்கிவிடும் என்றொரு (உண்மையற்ற) நம்பிக்கையை, பரவசத்தை மனிதனுக்குள் விதைக்கும் மத நூல்கள் போதை மருந்தோடு ஒப்பிடத் தகுந்தவை என்று கூறியுள்ளார். இவற்றையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது மார்க்ஸ் ஓர் கடவுள் மறுப்புக் கொள்கையாளராகவே காட்சி தருகின்றார்.

மார்க்ஸின் சமுதாய, அரசியல் சிந்தனைகள் பலவும், ’கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை’ (Communist Manifesto), மற்றும் மூலதனம் (Das Kapital) ஆகிய அவருடைய புகழ்பெற்ற நூல்களில் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன.

’மானுடர்கள் அனைவரும் இப்புவியின் வளங்கள்மேல் சமமான உரிமை கொண்டவர்களே!’ என்று முழக்கமிட்ட மார்க்ஸ், ’ஒடுக்கப்பட்ட மக்கள் மறுக்கப்பட்ட தம் உரிமைகளுக்காக ஒருங்கிணைந்து போராடவேண்டும்!’ என்று அறைகூவல் விடுத்தார். ஆண்டான் அடிமையற்ற – வர்க்கபேதமற்ற சமூகம் ஒருநாள் அமையும் – அமைய வேண்டும் என்பதே அவரின் கனவு. அக்கனவை மெய்ப்பிக்கும் வகையிலும், அதற்குத் தொழிலாளர்களைத் தயார்ப்படுத்தும் விதத்திலுமே அவருடைய சிந்தனைகள், செயற்பாடுகள், எழுத்துக்கள் அனைத்தும் அமைந்திருந்தன.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொழிலாளர்கள் எனப்படுவோர் ஒரே வர்க்கத்தைச் சார்ந்தவரே; அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டால் மட்டுமே அவர்கள் வாழ்வில் (பொருளாதார) விடுதலை கிடைக்கும்; தொழிலாளர்கள் திரண்டெழுந்தால் முதலாளித்துவத்துக்குச் சாவுமணி அடிப்பது சாத்தியமே என்பதே மார்க்ஸின் மணிமொழி.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் இதே கருத்தை,

”ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம்மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பாநீ” என்று வழிமொழிந்திருக்கக் காண்கின்றோம்.

மார்க்ஸும், (தொழிலதிபர் ஒருவரின் மகனான) பிரெடரிக் ஏங்கல்ஸும் Marx_and_Engels(Friedrich Engels) 1842-ஆம் ஆண்டு ஜெர்மனியின் கொலோன் நகரில் முதன் முதலாகச் சந்தித்தனர். 1844-இல் மீண்டும் மார்க்ஸைச் சந்தித்த ஏங்கல்ஸ் பத்துநாட்கள் அவருடன் தங்கிப் பல்வேறு சமுதாயக் கருத்துக்கள் குறித்து விவாதித்தார். தம் சிந்தனைகளில் இருந்த கருத்தொற்றுமையை அவ்விருவரும் தெளிவாய் உணர்ந்துகொள்ள அச்சந்திப்பு பேருதவி புரிந்தது. பின்பு, உலகமே வியக்கும் அதிசய நண்பர்களாக, ஈருடல் ஓருயிராக அவர்கள் மாறிப்போயினர்.

’ஆகாவென்று எழுந்ததுபார் யுகப்புரட்சி!’ என்று மகாகவி பாரதி ரஷ்யப்புரட்சி குறித்து மகிழ்ச்சிப் பெருக்கோடு கூவினானே…அதுபோன்றதொரு யுகப்புரட்சியை ஐரோப்பிய மண்ணில் விளைத்தது மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் இணை எனில் மிகையில்லை. “உலகத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து முதலாளித்துவத்துக்கு எதிரான சக்தியாக ஒரு சங்கம் அவ்விருவராலும் தோற்றுவிக்கப்பட்டது”. அதுதான் புகழ்பெற்ற ‘பொதுவுடைமைச் சங்கம்.’ அதில் இணைந்த தொழிலாளர்கள் தம்மைக் ’கம்யூனிஸ்ட்கள்’ என்று அழைத்துக் கொண்டனர்.

இதன் அடுத்தகட்டமாக, லண்டன் மாநகரில் உலகத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்த பிரம்மாண்டமான ’முதல் கம்யூனிஸ்ட் சங்கம்’ உதயமானது. ஐரோப்பா முழுவதிலுமுள்ள தொழிலாளர்களிடையே உற்சாக ஊற்றைக் கிளப்பிய இக்கம்யூனிஸ்ட் சங்கம் அடுத்த வருடமே தனது இரண்டாவது மாநாட்டை லண்டனில் கூட்டியது. தொழிலாளர்களின் முன்னேற்றத்தையே தம் உயிர்மூச்சாக எண்ணிய மார்க்ஸும் ஏங்கல்ஸும் தொழிலாளர்கள் துதிக்கும் பிதாமகர்கள் ஆனார்கள்.

தம் வாழ்நாளெல்லாம் பாட்டாளி மக்களின் உயர்வுக்காகவே உழைத்த மார்க்ஸின் தனிப்பட்ட வாழ்க்கை என்னவோ துயரம் நிறைந்ததே. உலகப் பொருளாதாரம் குறித்துப் பேசியவரின் இல்லப் பொருளாதாரநிலை மிகமோசமாகவே இருந்தது. பசிக்கு உணவில்லை; நோய்க்கு மருந்தில்லை; வாழ வழியில்லை எனும் அவலநிலையில் தம் குழந்தைகளில் சிலரை எமனுக்கு ஈந்து துன்பக்கடலில் ஆழ்ந்தார் மார்க்ஸ்.

காதல் ஒருவனைக் (மார்க்ஸை) கைப்பிடித்து அவன் காரியம் யாவினும் கைகொடுத்த அருமை மனைவி ஜென்னியும் 1881-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி புற்றுநோயால் இறந்துபோனார். மனைவியையும் குழந்தைகளையும் மிகவும் நேசித்த மார்க்ஸ், அதன்பின்னர் நீண்டகாலம் உயிர் தரித்திருக்கவில்லை. 1883 மார்ச் 14 அன்று உலகச் சிந்தனையாளரான மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார். ஆம்! அவர் உயிர்நீத்த தினம் அது! பொதுவாழ்வுக்காகவே தம்மை அர்ப்பணித்து அதில் வெற்றிகாண்பவர்கள் தம் தனிவாழ்வில் துயருற்றுத் தோற்றுப்போகவேண்டும் என்பதே இறைவனின் திருவுள்ளம் போலும்!

19-ஆம் நூற்றாண்டில் மார்க்ஸின் அயராத உழைப்பால் கட்டமைக்கப்பட்ட மார்க்ஸியம், பின்னாளில் மெல்ல மெல்லத் தன் செல்வாக்கை உலகநாடுகள் மத்தியில் இழந்துவருவதைக் காண்கின்றோம். இதற்கு என்ன காரணம்? ஒவ்வொருவரும் (அரசியல் கட்சிகள் உட்பட) அவரவர் தேவைக்கும், சுயநலத்துக்குமேற்ப மார்க்ஸின் கொள்கைகளை வளைக்கமுயல்வதே காரணமாயிருக்கமுடியும் என்று கருதுகிறேன்.

இவ்வளவுக்குப் பிறகும்கூட உலகமக்கள் மத்தியில் இன்றும் மார்க்ஸின் ஆக்கங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. வரலாற்றாசிரியர்கள், சமூக அறிஞர்கள், மெய்யியலாளர்கள், அரசியல் நிபுணர்கள் என்று பலரும் மார்க்ஸியத்தின் துணைகொண்டே உலக நிகழ்வுகளை ஆய்வுசெய்து வருகின்றனர். மற்றொரு பிரிவினர், நடைமுறையில் மார்க்ஸியத்தை மீண்டும் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

சிறந்த தமிழறிஞரும், அறிவியல் தமிழின் முன்னோடியும், மார்க்ஸியத்தை ஆழ்ந்து கற்றவருமான திரு. வெ. சாமிநாத சர்மா, மார்க்ஸியம் பற்றிக் (கீழே) குறிப்பிடும் கருத்துக்கள் ஈண்டு எண்ணத்தக்கவை:

“மார்க்ஸியம் என்பது வெறும் தத்துவமல்ல; மனித வாழ்க்கையைப் பண்படுத்திக் காட்டுகின்ற ஓர் ஒழுங்குமுறை அது! மானிட ஜாதியின் சரித்திரத்தைப் புதிய உருவத்தில் காட்டும் கண்ணாடி. பொருளாதாரத்தை முக்கிய அடிப்படையாகக் கொண்ட சமுதாயத்தின் தோற்றம். முதலாளித்துவத்தின் முடிவு இன்னபடிதான் ஆகும் என்று அறுதியிட்டுச் சொல்லுகின்ற இறுதி வாசகம். மார்க்ஸ் கண்டறிந்த முடிபுகளைச் சிலர் ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் அவர் அந்த முடிபுகளுக்கு வந்த வழியை யாரும் பாராட்டாமல் இருக்கமுடியாது.”

மனித சமுதாயத்தின் சிந்தனைகளைச் செம்மைப்படுத்தி, அவர்தம் நல்வாழ்விற்கு வழிகாட்டிய ஏசுகிறிஸ்து போலவும், முகமதுநபி போலவும் தம் பொருளாதாரத் தேற்றங்களால், பொதுவுடைமைச் சிந்தனைகளால் ஐரோப்பிய மக்கள் மத்தியில் மிகப்பெரிய விழிப்புணர்வையும் சமுதாய மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தியவர் கார்ல் மார்க்ஸ்.

”உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்! இழப்பதற்கு இனி நம்மிடம் என்ன இருக்கிறது…நம்மைப் பிணித்திருக்கும் தளைகளைத் தவிர!” (“Proletarians of all countries, Unite. You have nothing to lose but your chains!”) என்று தொழிலாளத் தோழர்களைத் தட்டியெழுப்பிய மாமனிதர் மார்க்ஸ்!

1991-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லண்டன் செய்தி நிறுவனமான பி.பி.சி, கடந்த ஆயிரம் ஆண்டுகளின் தலைசிறந்த சிந்தனையாளர் யார்? என்றொரு கருத்துக்கணிப்பை உலகம் முழுவதும் நடாத்தியது. அதில் அறுதிப் பெரும்பான்மையோர் அளித்த பதிலின் அடிப்படையில் ’கார்ல் மார்க்ஸே’ அந்தத் தலைசிறந்த சிந்தனையாளர் என்ற தனது முடிவை வெளியிட்டது இங்கே நினைவுகூரத்தக்கது.

எங்கெல்லாம் அடக்குமுறை ஆட்சிசெய்கின்றதோ, எங்கெல்லாம் ஏழையின் உழைப்பு எசமானனால் சுரண்டப்படுகின்றதோ, எங்கெல்லாம் பணம்படைத்தவன், பாட்டாளி என்ற வர்க்கபேதம் எக்காளமிடுகின்றதோ அங்கெல்லாம் மார்க்ஸியத்தின் தேவை எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கின்றது.

1883-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17-ஆம் தேதி மார்க்ஸின் உடல் லண்டனிலுள்ள ஹைகேட்டில், அவருடைய காதல் மனைவி ஜென்னியின் கல்லறைக்கருகில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது இரங்கல் உரையாற்றிய ஏங்கல்ஸ், “யுக யுகாந்திரங்களுக்கு மார்க்ஸின் பெயர் நிலைத்து நிற்கும்; அவரது மாபெரும் பணியும் நிலைத்து நிற்கும்” என்றார் கண்ணீர்மல்க. அவ்வாறே காலத்தை வென்ற மானுடனாகிவிட்டார் மார்க்ஸ்; அவர் மட்டுமின்றி அவருடைய தத்துவமான மார்க்ஸியமும் அமரத்துவம் பெற்றுவிட்டது.

***

கட்டுரைக்குத் துணைசெய்த தளங்கள்:

https://en.wikipedia.org/wiki/Karl_Marx

http://www.tamilpaper.net/?tag=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “அறிந்துகொள்வோம் -14 (கார்ல் மார்க்ஸ்)

  1. சிந்தனையாளர் ஒருவரைப் பற்றிய சீரிய கட்டுரை ஒன்று சிறப்பாக வழங்கப்பட்டுள்ளது. பாராட்டுகள்.

  2. தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி தேமொழி. 🙂

    அன்புடன்,
    மேகலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *