புலவர் இரா. இராமமூர்த்தி.

இவ்வுலகின் உறவுகளில் மிகச்சிறந்த உறவு நட்பேயாகும்! தாய் – மகள், தந்தை – மகன், கணவன் – மனைவி, அண்ணன்- தம்பி, அக்கா- தங்கை, ஆண்டவன்- அடியார், தோழன்- தோழி போன்ற உறவுகள் நம் சமுதாயத்தில் நாம் பெறும் இடத்தினை வரையறுக்கின்றன! இவற்றுள் சிறந்த உறவாகிய நட்பின் பெருமையைத் திருவள்ளுவர், நட்பு, நட்பாராய்தல், தீநட்பு, கூடாநட்பு, சிற்றினஞ்சேராமை, பெரியாரைத் துணைக்கோடல் ஆகிய அதிகாரங்களில் பல்வேறு அணுகுமுறைகளில் நிலைநாட்டியுள்ளார்!

மேலும், ஆணும் பெண்ணும் கொள்ளும் அன்பில் மலர்ந்த நட்பே, காதலாகும் என்கிறார் திருவள்ளுவர்! அவர்
”உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொ டெம்மிடை நட்பு” (1122)

என்ற குறட்பாவில் இருவருக்கும் இடையில் பிறவிதோறும் தொடர்ந்த நட்புகளைக் கூறுகிறார்! ஆகவே நட்பு என்பது பிறவிதோறும் தொடரும் தன்மை உடையதாகும். இத்தகைய இணைபிரியாத நட்புறவை நாம் பலவகையிலும் ஆராய்ந்து மேற்கொள்ள வேண்டும். கூடாநட்பு, தீநட்பு, சிற்றினத்தார் தொடர்பு ஆகியவற்றை அறிந்து நாம் நீக்க வேண்டும்! ஆராய்ந்து நட்புக்கொள்ளாவிடில், அது பெரிய துன்பத்தை அது உண்டாகி விடும்! இதனை ,

”ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்!” (792)

என்ற குறட்பா மூலம் அறுதியிட்டுவிடுகிறார்! ஒரு நடைமுறைப் பழக்கமாகிய நட்பினை வழக்கமாக்கிக் கொள்ளத்தக்க ஒழுக்கமாகத் திருக்குறளில் ஆறு அதிகாரங்களுக்கு மேல் இந்த நட்பு கூறப் பெறுகிறது! மக்களிடையே அறிமுகமாகி, நீங்காத நெருக்கத்தை உண்டாக்குவது நட்பென்னும் பேருறவாகும்! பெற்ற தாயாரிடமும் கூறவியலாத செய்திகளை ஒருவன் நண்பனிடம்தான் கூறுவான்!

மக்களின் ஒழுக்கத்தை அவர்களின் செயல்கள் வெளிப்படுத்தும்! இவை, அவனுக்குப் பிறவியிலேயே தாய் தந்தையரிடமிருந்து மரபு வழியில் வந்து விடும்! அத்தகைய பண்புநலன்களை ஆராய்ந்து அதன்பின் நல்ல நட்பை உருவாக்கிக் கொள்ளலாம். அவன் வாழும் சூழ்நிலை அவனுடைய பண்புகளை உருவாக்கும்! அவனுடன் பேசிப் பழகும் நண்பர்களின் வழியே அவனுடைய குணங்கள் அமைந்து விடும்! இவற்றை ஆங்கில நூலார் மரபுப்பண்பு, சூழ்நிலைப் பண்பு என்பர். ஆங்கிலத்தில் அவை ஹெரிடிட்டி, என்விரான்மெண்ட் என்று கூறப் பெறும்! ”தமிழர் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு” என்ற பாடல் ஒருவனுக்கு இனமரபு வழியே வந்த பண்பைக் குறிக்கும்! சமூகப் பழக்க வழக்கங்களை நன்கு அறிந்து கொண்டு கடைப்பிடிப்பவனே பிறருடன் நெருங்கிப் பழகுவான்!

நட்பினை உருவாக்கிக் கொள்ள வேண்டியவன் முதலில் தன் நண்பனின் பண்புநலன்களை ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல் வேண்டும்; அவை அவனுக்கு அவன் பிறந்த குடிமரபின் வழியே உருவாகி அமைந்திருக்கும்! அடுத்து, அவனிடம் ஏதேனும் குற்றமும் அமைந்திருக்கலாம்! குறையில்லாதவர் எவரும் இலர்! இக்குற்றம் அவன் யாருடன் பழகுகின்றானோ, அவரால் உருவாகியிருக்கும்! அதனால் ஒருவனின் குணநலன்களுக்குக் காரணமாக இருப்பது பெரும்பாலும் அவன் பிறந்த மரபாகும்! அதே போல் குற்றம் உருவாகப் பெரிதும் காரணமாக அமைவது அவனுடைய சூழ்நிலையேயாகும்! அதனால்தான் சிற்றினம் சேராமை மிகவும் நல்லது என்று தனி அதிகாரத்தில் வள்ளுவர் கூறுகிறார்! இதையே ”குன்றா ” இனனும் அறிந்து நட்புக் கொள்க! என்கிறார்! அந்தக் குறள்தான்,

“குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.” (793)

என்ற குறட்பாவாகும்! இப்பாடலில் …
1. குணமும் என்பதற்குக் குற்றமில்லாத நற்பண்புகள் என்றும்,
2. குற்றமும் என்பதற்குக் குற்றம் குறைந்த அளவில், அதாவது பொறுத்துக் கொள்ளத்தக்க அளவில் பெற்றுள்ள என்றும்,
3. குடிமையும் என்பதற்கு உயர்குடியில் பிறந்த என்றும்,
4. இனனும் என்பதற்கு உறவினருடன் ஒற்றுமை உடைய என்றும்

பரிமேலழகர் பொருளுரைத்தார். இதனை ஒருவனின் நற்குணத்தையும், அதற்குப் பெரிதும் காரணமாக இருக்கும் நல்லமரபையும், குற்றத்தையும் அதற்குப் பெரிதும் காரணமாக இருக்கும் உற்றார், உறவினர் மற்றும் இனத்தாரையும் என்று சற்று மாற்றிப் பொருள் கொண்டால், ஒருவனது நற்குணத்தின் அடிப்படை அவன் பிறந்த குடியே என்பதையும், ஒருவனுடைய தீய குணத்துக்குப் பெரிதும் அடிப்படை, அவனைச் சூழ்ந்தோரே என்பதையும் இக்கால சமுதாயச் சிந்தனை வழியில் புரிந்து கொள்ளலாம்!

ஆகவே ஒரு மனிதனின் மரபும், சூழ்நிலையுமே அவனது நற்பண்பையும், குற்றத்தையும் வடிவமைக்கின்றன! என்ற மானுடவியல் கருத்தினை, இந்தத் திருக்குறள் புதியதாய் வெளிப்படுத்துவதை உணரலாம்! வள்ளுவப் பேராசானின் மானுடவியல் தீர்க்க தரிசனத்தைப் புதுமையாக விளக்குவது இத்திருக் குறளே என்பதை நாம் அறிந்து கொண்டு பின் உணர்கிறோம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *