மகளிர் சமத்துவ நாள்
–தேமொழி.
அமெரிக்காவில் ஆகஸ்ட் 26 ஆம் நாள், “மகளிர் சமத்துவ நாள்” (Women’s Equality Day) எனக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அமெரிக்காவின் 95 ஆவது மகளிர் சமத்துவ நாள் கொண்டாடப்பட்டது. இந்நாள் அமெரிக்கப் பெண்மணிகள் 1920 ஆம் ஆண்டு தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றதைக் கொண்டாடும் நாளாகும்.
மிகுந்த போராட்டத்திற்கிடையே, 70 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடைகள் பலவற்றை எதிர்கொண்டு அமெரிக்கப் பெண்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றார்கள். சூசன் பி. ஆண்டனி, எலிசபெத் காடி ஸ்டாண்டன், மற்றும் லுக்ரெஷிய மாட் (Susan B. Anthony, Elizabeth Cady Stanton, and Lucretia Mott) ஆகிய பெண்மணிகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்களில் மிக முக்கியமானவர்கள்.
பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையைத் தந்த அமெரிக்க அரசியலமைப்பின் 19 வது சட்டவரையறை திருத்தம் (19th Amendment to the U.S. Constitution: Women’s Right to Vote), 1919 ஆம் ஆண்டு அமெரிக்க காங்கிரசில் அறிமுகப்படுத்தப் பட்டது. ஆனால் இது நிறைவேறுவது பற்றிய நம்பிக்கையின்மையும், சந்தேகங்கள் பலவும் தோன்றிய காலமது. மூன்றில் இரண்டு பங்குக்கும் மேலாக ஒப்புதல் அளிக்கப்பட்டு சட்டமாக மாற 36 மாநிலங்கள் இச்சட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும். பழமைவாதத்தில் ஊறிய அமெரிக்க தென்மாநிலங்கள் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. மனிதஉரிமைகளைப் பொறுத்தவரையில் பிற்போக்கான கொள்கைகளின் இருப்பிடமான அமெரிக்க தென்மாநிலங்கள், கருப்பின மக்களின் அடிமைத்தளையை நீக்குவதையும் எதிர்த்து போர்க்கொடி உயர்த்தி உள்நாட்டுப் போரைத் துவக்கியதையும், அந்நிகழ்வு அமெரிக்க வரலாற்றில் களங்கத்தை ஏற்படுத்தியதையும் இங்கு நாம் நினைவுகூரலாம்.
இச்சட்டத்திற்கு, 1920 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நாட்டின் 35 மாநிலங்களின் சபைகளே இசைவு தெரிவித்திருந்தன. பெண்களுக்கு வாக்களிக்கும் சட்டம் வெற்றிபெறுவதை நிர்ணயிக்கும் நிலை இறுதியில் ‘டென்னசி’ மாநிலத்தின் கைகளில் வந்து விழுந்தது. அந்த மாநிலத்தின் அரசியல்வாதிகள் எடுக்கவிருக்கும் முடிவில் பெண்கள் வாக்களிக்கும் சட்டத்தின் வெற்றிவாய்ப்பு ஊசலாடியது. அவர்களிலும் 48-48 என்ற நிலையில் சரிபாதி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும், சரிபாதியினர் எதிர்த்தும் வாக்களித்திருந்த நிலையில், இச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து வெற்றிபெறச் செய்தவர் ‘ஹாரி பர்ன்’ (Harry Burn) என்ற அவை உறுப்பினர். அப்பொழுது 24 வயதே ஆன ஹாரி பர்ன் தனது ஆதரவைத் தெரிவித்ததன் காரணம், அவரது அன்னை அவருக்குக் கடிதம் எழுதி பெண்கள் உரிமைக்கு ஆதரவாகச் செயல்படும் ‘நல்ல பையனாக’ (“be a good boy”) அவரை நடந்து கொள்ளச் சொன்னதால்தான் என்பது வியப்புக்குரிய செய்தி. ஹாரி பர்ன் என்ற ‘தாய் சொல்லைத் தட்டாத தனயனால்தான்’ பெண்கள் வாக்குரிமை சட்டம் வெற்றி பெற்றது என்பது அமெரிக்க வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு திருப்புமுனை.
வாக்குரிமை பெற்றாலும், அதனைத் தொடர்ந்து 95 ஆண்டுகள் கடந்த பின்னரும், அரசியலைப் பொறுத்தவரை அமெரிக்கப் பெண்களின் முன்னேற்றம் கேள்விக்குறியாகவே இன்றும் இருந்து வருகிறது. உலகில் பல நாடுகளிலும் பெண்கள் தலைமை ஆட்சிப் பொறுப்பை ஏற்றுவிட்டாலும், முன்னேறிய நாடு என்று மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்கா இதுவரை ஒரு பெண்மணியை அமெரிக்கத் தலைவராக அடைந்ததில்லை. மாநில, நகர அளவிலும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை, ஆண் ஆட்சியாளர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என்பதும் பெருங்குறையே. இருப்பினும், கடந்த 35 ஆண்டுகளாக ஆண்களைவிட அதிக அளவில் பெண்களே வாக்குச்சாவடியை நோக்கிப் படையெடுக்கிறார்கள் என்கிறது புள்ளிவிவரம். அமெரிக்க ஆட்சியாளர்களில் ஐந்தில் ஒருவரோ அல்லது நான்கில் ஒருவரோதான் (20-25%) மகளிர் என்பது இந்த நூற்றாண்டிலும் கவலை தரும் நிலையே.