சு.கோதண்டராமன்

குடந்தைக் காரோணம்

 vallavan-kanavu11

பூவார்பொய்கை அலர்தாமரைசெங் கழுநீர்புறவெல்லாந்

தேவார்சிந்தை அந்தணாளர் சீராலடிபோற்றக்
கூவார்குயில்கள் ஆலும்மயில்கள் இன்சொற்கிளிப்பிள்ளை
காவார்பொழில்சூழ்ந் தழகார்குடந்தைக் காரோணத்தாரே

                                                -சம்பந்தர்

ஆங்கிரஸ பிரமராயர் தூக்கம் வராமல் கோவிலின் முன் முகப்பில் இங்கும் அங்கும் உலவிக் கொண்டிருந்தார். இன்று பிற்பகல் வந்த செய்தி அவரது உள்ளத்தை மிகவும் கலக்கியிருந்தது. ஒரு வருடமாகவே அவர் கவலைப்படும் வகையிலான தகவல்கள் காதில் விழுந்து கொண்டிருந்தன. ஆனால் இன்று வந்தது எல்லாவற்றிற்கும் உச்சகட்டமானதாக இருந்தது.

மூவாயிரம் பேரின் உயிருக்கும் நல்வாழ்வுக்கும் கௌரவத்துக்கும் பொறுப்பேற்றுக் கொண்ட தான் கடமையில் தவறிவிட்டோமோ என்று அஞ்சினார். அரசருக்கும் இந்தச் செய்தி போயிருக்கிறது. அவர் கூப்பிட்டுக் கேட்டால் என்ன சொல்வது என்று சிந்தித்தார். இரவு முழுவதும் பலவிதமான எண்ணங்கள் அவரது உள்ளத்தைக் கடைந்தன. விடியற்காலையில் சற்றுக் கண்ணயர்ந்தார்.

கண்விழித்ததும் அவருக்குத் தெளிவு ஏற்பட்டது. இதில் நாம் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. அரசரைப் போய்ப் பார்ப்போம். அவர் சொன்னபடியே கேட்போம் என்று தீர்மானித்தார். குதிரையைச் சித்தம் செய்ய உத்திரவிட்டார்.

அப்பொழுது அவரை நோக்கி ஒரு அரச சேவகன் வந்தான். குதிரையிலிருந்து இறங்கி வந்தவன், ‘அரசரிடமிருந்து அவசர ஓலை’ என்று சொல்லி நீட்டினான். இவ்வளவு அதிகாலையில் இங்கு வருவதென்றால் இவன் நள்ளிரவில் புறப்பட்டிருக்கவேண்டும். விஷயம் மிக முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று நினைத்து ஓலையை வாங்கிப் படித்தார். “வடம பிராமணர்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசிப்பதற்காக, வரும் மாசி மகத்தன்று குடந்தைக் காரோணத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடந்தைக் கோட்டத்தில் உள்ள எல்லா வடமர்களுக்கும் செய்தி அனுப்பிவிட்டோம். எல்லோரையும் கலந்து தகுந்த ஏற்பாடுகள் செய்யவும்.” இதைத் தொடர்ந்து மேலும் சில செய்திகளும் அதில் இருந்தன.

‘என் மனதை உறுத்திக்கொண்டிருந்த விஷயம் என்னைக் காட்டிலும் அரசரை மிகவும் பாதித்திருக்கிறது என்று தெரிகிறது. அவர்தான் எவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்திருக்கிறார்’ என்று வியந்தார் ஆங்கிரஸர். ‘நான் நேற்றே போய் அவரைப் பார்த்திருக்க வேண்டும், யோசனை செய்து காலத்தை வீணாக்கிவிட்டேனே’ என்று குற்ற உணர்வு கொண்டார்.

மாசி மகம் வந்தது. அந்த வட்டார வடமர்கள் எல்லோரும் முதல் நாள் மாலையே புறப்பட்டு வந்துவிட்டார்கள். ஒவ்வொருவரிடமும் ஆங்கிரஸர் தனித்தனியே கலந்து ஆலோசித்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன் அவர்கள் ஒன்று கூடி இருந்தபோது அவர்கள் மனதில் இருந்த உற்சாகம், நம்பிக்கை இப்பொழுது இல்லை என்பதை அவர்களது முகம் காட்டியது. ஒரு சோகமான அமைதி அங்கே நிலவியது.

ஆங்கிரஸர் பேசத் தொடங்கினார்.

“சிவஸ்வரூபமான பிராமணோத்தமர்களுக்கு வணக்கம். நம் நாட்டுப் பிரஜை ஒருவர் அகால மரணம் அடைவிக்கப்பட்டது நமக்கு வருத்தம் தருகிறது. வளர்ந்து வரும் இளைஞனைப் பறிகொடுத்த உறவினர்களின் துக்கத்தை உணர்கிறேன். இது அவர்களுக்கு மட்டும் இழப்பு அல்ல. நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதற்காக நம் அரசர் போட்ட திட்டத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவாகக் கருதுகிறேன். வடம சமூகம் முழுவதும் பாதுகாப்பு இழந்ததாக உணர்ந்து கலங்கி இருக்கிறீர்கள் என்பதை அறிவேன். கலக்கம் அடையவேண்டாம். பிறந்த மண்ணுக்குத் திரும்பிப் போகலாமா என்ற யோசனையும் வேண்டாம்.

“இது ஒரு அரிதான நிகழ்ச்சி. சோழநாட்டில் கடந்த 200 ஆண்டுகளில் ஒரு கொலை கூட நடந்ததில்லை. சமணர்களின் அகிம்சைப் பிரசாரம் எல்லை மீறிப் போய், போர் புரிய முன்வரக் கூடிய வீரர் கூட இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது. இதனால்தான் தமிழ் அரசர்கள் பலமிழந்து, நாம் அனைவரும் களப்பிரருக்கு அடிமையாக வாழ்கிறோம்.

“இது போன்ற கொலைகள் தொடருமோ என்ற அச்சம் வேண்டாம். இனி அந்த நிலை மாறும். பாம்பு தனக்கு மிக சமீபத்தில் வந்துவிட்டது, இனி தப்பிக்க முடியாது என்று உணரும் போது தவளை மிக ஆக்ரோஷமாகச் சண்டை இடும். அது போலத்தான் இதுவும். சமணம் அழியும் காலம் வந்து விட்டது. அதைக் காப்பாற்றக் கடைசி முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். சைவம் ஓங்கும். அதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துவிட்டன. அவற்றில் இதுவும் ஒன்று.

“அகிம்சையைப் போதிப்பவர்களே அதைக் கடைப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இனி அவர்கள் பேச்சில் மக்களுக்குக் கொஞ்சம் நஞ்சம் மிச்சமிருந்த மரியாதையும் போய்விடும். எனவே இதை ஒரு நல்ல சகுனமாகவும் கருதுகிறேன். பாரதப் போரில் அரவான் பலியிடப்பட்டது போல சோழநாட்டின் நன்மைக்காக இன்று இந்த இளைஞன் பலி ஆகி இருக்கிறான். பாண்டவர்கள் வெற்றி பெற்றது போல இறுதியில் நாம் வெற்றி பெறுவோம்.

“கொலை செய்தவர் முறைப்படி விசாரிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு விட்டார் என்று நேற்று செய்தி வந்தது. அது மட்டுமே உங்களுக்குப் பாதுகாப்பு தராது என்பதை அறிவேன். குற்றம் செய்யத் துணிபவர்கள் எல்லோருமே தண்டனைக்கு அஞ்சிக் குற்றம் செய்யாது இருப்பார்கள் என்று கூற முடியாது. சோழ நாட்டின் பெரும்பாலான மக்கள் நீதிக்கும் அறநெறிகளுக்கும் கட்டுப்பட்டவர்கள்தான். இருப்பினும் வழி தவறிய சிலர் தவறாக நடக்கக் கூடும்.

“ஒற்றர் படை வலுப்படுத்தப்பட்டுள்ளது. வடமர்களுக்கு எதிராக யார் யார் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்து அவர்களைத் தனிக் கவனத்தின் கீழ்க்கொண்டுவர அரசர் ஏற்பாடு செய்திருக்கிறார்.

“மக்கள் இணக்கமாக வாழும் நிலை ஏற்படச் சில ஆண்டுகள் ஆகும். அது வரை உங்களுக்கு ஆபத்து நேராமல் பாதுகாப்பது என் கடமை. எனவே ஒரு அறிவுரை கூற விரும்புகிறேன். வடமர்கள் எவரும் பிற சாதியினர் கொடுக்கும் உணவுப் பொருட்களை உண்ண வேண்டாம். சோழியப் பிராமணர்கள் வீட்டில் கூட நீங்கள் சாப்பிட வேண்டாம். வடமர்களைத் தவிர பிறருடன் திருமண உறவு கொள்ளாதீர்கள். உறவு ஏற்பட்டால் சாப்பிட நேரிடும். பின்னர் இது போன்ற விரும்பத் தகாத விளைவுகள் ஏற்பட வழியாகும். சமணர்களால் ஏற்படும் அச்சம் முழுமையாக நீங்கும் வரை இதைக் கடைப்பிடிப்போம்.

“உங்களால் சைவம் தழைக்கட்டும். சைவத்தால் சோழநாடு செழிக்கட்டும். சோழர்களால் தமிழ் கூறும் நல்லுலகம் பெருமை பெறட்டும்.”

பேசி நிறுத்தினார்.

வடமர்களில் ஒருவர் எழுந்தார். “ஒவ்வொரு கோயிலிலும் பல வகைச் சாதியாரும் பூசை செய்கிறார்களே, அவர்கள் இறைவனுக்கு நிவேதனம் செய்த பிரசாதத்தைக் கொடுத்தால் அதைச் சாப்பிடலாமா, கூடாதா?”

“முக்கியமான பிரச்சினைதான். சிவாலயங்களில் பூசை செய்பவர் யாராக இருந்தாலும் உணவு  சமைப்பவர் வடமராகவே இருக்கட்டும். ஒவ்வொரு கோயிலிலும் சமைப்பதற்கென்று ஒரு பிராமணப்பிள்ளையை நியமிக்க அரசரிடம் பரிந்துரைக்கிறேன்.”

மற்றொருவர் கேட்டார், “நாங்கள் ஒரு கிராமத்துக்கு ஒன்று அல்லது இரண்டு குடும்பங்கள்தான் இருக்கிறோம். நம் சமூகத்துக்குள்தான் திருமணம் செய்வது என்று வைத்துக் கொண்டால் எங்கள் பெண் பிள்ளைகளுக்கெல்லாம் எப்படிக் கல்யாணம் ஆகும்?”

“உங்கள் பிள்ளை வேத அத்தியயனம் பூர்த்தி செய்து சமாவர்த்தனம் ஆனபிறகு அவனை யாத்திரையாகப் புறப்பட்டுப் போகச் சொல்லுங்கள். வழியில் வடமர் வீடுகளில் தங்கி உணவு உண்டு அவன் பல கிராமங்களையும் சுற்றி வரட்டும். பெண்ணைப் பெற்றவர்கள் அவனைத் தங்கள் பெண்ணுக்குப்  பொருத்தமானவன் எனக் கருதினால் திருமணம் நிச்சயம் செய்யட்டும். இந்த முறையில் உங்கள் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் நடத்தலாம்” என்றார் ஆங்கிரஸர்.

அவரவரும் கனத்த மனத்துடன் அவரவர் கிராமம் நோக்கித் திரும்பினர்.

* கும்பகோணம் மகாமகக் குளத்தின் வடகரையில் இன்று காசிவிசுவநாதர் கோயில் என்று அழைக்கப்படுவது முன்பு குடந்தைக் காரோணம் எனப்பட்டது.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *