–தஞ்சை வெ.கோபாலன்.

பெருந்தலைவர் காமராஜ் பற்றி எத்தனை எழுதினாலும் மனம் முழுத் திருப்தி அடையவில்லை. மேலும் மேலும் அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கவே மனம் விரும்புகிறது. அவரைப் பற்றி நாம் என்ன சொல்கிறோம் என்பதுகூட அத்தனை முக்கியமில்லை. அவருடைய தாய் சிவகாமி அம்மையார் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்ப்போமா? “நான் ஒரு மாணிக்கத்தைப் பெற்றேன், இப்போ உலகத்தில் உள்ள எல்லா மாணிக்கங்களும் என்னைப் பார்க்க வர்றாங்க”. இப்படி அவர் சொன்ன செய்தியை சென்னையிலிருந்து வெளிவரும் வாராந்தரி ராணி எனும் பத்திரிகை வெளியிட்டது.

இவரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் கூட தமிழ் மக்களுக்குத் தேவையில்லை. கைக்குழந்தை முதல் புலன்கள் அடங்கிய முதுபெருங் கிழவர் வரை இவர் பெருமையை அறிந்தவர்தாம். எனினும் சொல்லவேண்டிய செய்தியைச் சொன்னால்தானே நாம் அவரைப் பற்றி என்ன தெரிந்து வைத்திருக்கிறோம் என்பது தெரியும்.

இவர் தனக்கென வாழாதவர்; பிறருக்காக மக்களோடு மக்களாய், ஏழைகளின் பிரதிநிதியாய் உயர்ந்த பீடத்தில் இருந்துகொண்டு அரியபல உதவிகளைச் செய்து கொடுத்தவர். தாய் நாட்டில் வறுமையை ஒழித்திட தன்னால் இயன்றதனைத்தையும் செய்துவிடத் துடித்தவர். சொத்து சுகம் எதுவுமின்றி, நேர்மையே முதலாய் வைத்து, சுயநலம் எனும் தீங்கை நீக்கி, துறவிபோல் வாழ்ந்தவர். தாய் தங்கை முதலானவர் இருந்தும், அவர்களோடு வாழ்ந்தால், அவர்களுக்கு ஏதோ உதவியை இவர் செய்துவிட்டார் என்று பிறர் பேச வாய்ப்பின்றி தனித்து வாழ்ந்த பெருந்தகை. எளிமையின் இருப்பிடம். பதவிக்குத் தேவையான பாதுகாப்புக் கருதி காவல்துறை வாகனம் முன்னால் சங்கொலி எழுப்பிக்கொண்டு சென்றதைப் பார்த்து, “இது என்ன செத்த பின்னல்ல சங்கூதுவாங்க, இப்போ எதுக்கு எனக்குச் சங்கு ஊதறீங்க” என்று பாமரத்தனமாய்ச் சொல்லி தனக்கு ஆடம்பரம் தேவையில்லை என்பதைப் புரியவைத்தவர்.

படித்தவர்களால்தான் அரசியல் நுட்பமும், ஆட்சி முறையில் வல்லமையும் கொண்டு நிர்வாகம் நடத்த முடியுமா என்ன? இவரால் அரசு நிர்வாகத்தை நடத்த முடியுமா என்ற சந்தேக நிழல் சிலர் மனதில் ஊடாடுவதைக் கண்டு, தன்னால் எதுவும் முடியும் என்று துணிந்து நிர்வாகப் பொறுப்பை 1954இல் ஏற்றுக்கொண்டு சிறப்புற செயல்படுத்திக் காட்டிய செயல் வீரர். பொருளாதார அறிவும், பொது அறிவும், சட்டங்கள் மனிதனின் தேவைகளுக்காகத்தானே தவிர, சட்டங்களுக்கு உட்பட்டு மனிதனுடைய தேவைகளை மாற்றிக்கொள்வது பேதைமை என்பதை நிரூபித்துக் காட்டிய மேதை அவர்.

தான் படிக்கவில்லை, தாய் நாட்டின் அடிமைத் தளையை உடைத்தெறிய வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டோம், இனி சுதந்திரம் பெற்ற தாய்த் திருநாட்டில் கல்வி அறிவு இல்லாத தலைமுறை இருக்கக்கூடாது என்பதில் தனித்த அக்கறை காட்டி இலவசக் கல்வி, மதிய உணவு, அதிக பள்ளிகள் என்று கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்த படிக்காத மேதை அவர். கல்வி கற்க வறுமை ஒரு தடைக்கல்லாக இருக்கக்கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டியவர். அதனால் தான் அவரைக் கர்மவீரர் என்று அடைமொழியிட்டு அழைக்க முடிகிறது.

ஆண்டுகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பிறந்து கொண்டிருந்தாலும், நூற்றுப்பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த 1903 எனும் ஆண்டுக்கு மட்டும் தனிச் சிறப்பு உண்டு. அந்த ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் நாள்தான் அந்தத் தங்கத் தலைவர் பிறந்தார். பிறந்தவர் அனைவருமே தங்களை அப்படித்தான் அழைத்துக் கொள்வர் என்றாலும், அதற்காகச் சுவரொட்டிகள் அடித்து சுவரைக் கெடுக்காதவர். தன் பிறந்த நாள் என்பதற்காக ஆங்கில பாணியில் ‘கேக்’ வெட்டி தனது மாபெரும் குடும்பத்து உறுப்பினர்களுக்கெல்லாம் ஊட்டி உல்லாசம் அனுபவித்தவர் அல்ல அவர். பிறர் சொல்லித்தான் அவர் பிறந்த நாளை ஒவ்வோராண்டும் அவரே அறிந்து கொண்டார்.

அவருடைய 16ஆம் அகவை, 1919ஆம் ஆண்டு ஆங்கிலப் பேரரசு ரவுலட் சட்டம் என்பதாக ஒரு அடக்குமுறைச் சட்டத்தை அறிமுகம் செய்து வைத்தது. இதனை எதிர்த்து காந்தியடிகள் போராட முடிவு செய்தபோதே, தமிழகத்துக் கருப்பு காந்தி என அறியப்பட்ட கர்மவீரரும் போராட்டக் களத்தில் குதித்து விட்டார். ஆம்! தனது 16ஆம் வயதில். அதே ஆண்டில் பஞ்சாபில் ஜாலியன்வாலாபாக் என்னுமிடத்தில் ஜெனரல் டயர் என்பான் செய்த படுகொலை மக்கள் உள்ளங்களை எரிமலையாக ஆக்கியது. இவ்விரு போராட்டங்களிலும் முன்னிலை வகித்தவர் பெருந்தலைவர்.

இவருடைய அரசியல் பிரவேசம் இவரைத் தடம் மாறச் செய்துவிடுமோ என்று அஞ்சி இவரைத் திருவனந்தபுரத்தில் உறவினர் வியாபாரத் தலத்தில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். அக்னியை வெளியே தெரியாமல் காகிதத்தில் ஒளித்து வைத்தால் தெரியாமல் இருக்குமா? புயலைக் கூண்டுக்குள் அடைத்தால் அடைந்து கிடக்குமா? சுதந்திர தேவியின் பரிபூரண கடாட்சம் கிடைத்த பின் நம் தலைவரைக் கட்டித்தான் போட முடியுமா? தமிழக அரசியலில் இந்தியச் சுதந்திரப் போரை நடத்துவதற்காகப் பராசக்தி படைத்த இந்தப் புனிதர் அரசியல் வானில் பிரகாசிக்கத் தொடங்கினார்.

விடிந்தால் புதுப்புதுப் போராட்டங்கள். ஒவ்வொரு நாளும் போராட்டம். ஆண்டுக்கு ஆண்டு போராட்டம். 1923இல் நாகபுரி நகரில் கொடிப் போராட்டம். நம் இந்தியக் கொடியை ஏந்தி நடமாடக்கூடாது எனும் அநியாயச் சட்டத்தை எதிர்த்துப் போர். கள் குடித்து மதிமயங்கிக் கிடக்கும் ஏழை உழைப்பாளர்களின் வாழ்வை உயர்த்திடக் கள்ளுக்கடை முன்பு மறியல் செய்து போராட்டம். ஜெனரல் நீல் என்பான் சிப்பாய் கலகத்தின் போது இந்தியச் சிப்பாய்களைப் பறவைகளைச் சுடுவது போல சுட்டுக் கொன்ற கொடியவனுக்குச் சென்னை நகரின் மத்தியில் ஒரு சிலை. பொறுக்க முடியுமா இந்த அநியாயத்தை. அந்தச் சிலையை அகற்ற ஒரு போராட்டம். இந்தியர்களுக்கு அள்ளிக் கொடுக்கவென்று அளவெடுக்க வந்த சைமன் கமிஷன் முன்பாக “சைமனே திரும்பிப் போ” என்றொரு போராட்டம். இங்கிலாந்திலிருந்து கொண்டு வந்த உப்பை அதிக விலைக்கு விற்பதற்காக, இந்தியக் கடற்கரையில் எடுக்கப்படும் நாட்டு உப்புக்கும் வரிவிதித்த ஆங்கிலேயர்களின் சதியை முறியடிக்க காந்தியடிகளார் 1930இல் மேற்கொண்ட தண்டி யாத்திரையின் எதிரொலியாகத் தமிழகத்தில் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டம். 1932இல் சட்ட மறுப்புப் போராட்டம். இப்படி வாழ்க்கையே போராட்டக் களமாக மாறிவிட்டதே.

எல்லோருக்கும் குழந்தைப் பருவம், மாணவப் பருவம், இளமைப் பருவம், நடுவயதில் நிதிதேடி உழைக்கும் பருவம், வயது மூத்ததும் பிறருக்கு வழிகாட்டி அறிவூட்டும் பருவம், எல்லாம் முடிந்தபின் சந்தடியின்றி வம்பு தும்பு இல்லாமல் தானுண்டு தன் வாழ்வுண்டு என்றிருக்கும் வானப்பிரஸ்த ஆசிரமம், தேவைப்பட்டால் துறவு என்று நம் பெரியோர் வகுத்த பாதையில், இளமை தாண்டியதுமே ஊருக்கு உழைத்திடல் யோகம் என்று வாழ்ந்தவர் தலைவர். அதிலும் கடைசி ஆசிரம வாழ்க்கையை மேற்கொண்டவர் இப்புவியில் வேறு யாரேனும் உண்டா? ஐயகோ! இவரைப் பார்த்துத்தான் ஏதோவொரு திரைப்பட நடிகையோடு இணைத்துப் பேசினர், நாக்கில் நரம்பில்லாதோர். தனக்கென பத்து ரூபாய்கூட வைத்துக் கொள்ளாத இவரை, தாய்க்கு நூறு ரூபாய் மட்டுமே அனுப்பி வந்த இவரைப் பார்த்து ஐதராபாத் வங்கியில் கோடி கோடியாய் பணத்தைக் கொட்டி வைத்திருப்பவர் என்று நாக்கூசாமல் சொன்னார்களே, தாங்குமா இந்த நாடு? இரும்பினால் ஆன கோட்டை மீது காற்றில் வரும் குப்பைக் கூளங்கள் மோதுவதைப் போன்ற இந்த வசைகள் என்ன செய்துவிடும்? காலம் பதில் சொல்லி விட்டதே, இவர் உலகம் போற்றும் உத்தமர் என்று, பிறகு யாருடைய சான்றிதழ் வேண்டும் இவரைப் போற்றி வணங்கிட.

ஆலமரம் போல ஓங்கி வளர்ந்த ஒரு தேசியக் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர். இன்று நேற்று மட்டுமா? இல்லை. 1942 தொடங்கி அவரே ஒப்பற்ற தலைவர். பதவி கேட்டு பரிதவித்தாரா? ஆதரவுக்கு ஆள் தேடிச் சென்றாரா? இல்லையே. குருநாதர் தீரர் சத்தியமூர்த்தி சொன்னார், உன்னையே கட்சித் தலைமைக்கு நிறுத்துவேன், வென்று காட்டுவேன் என்று, அதன்படி அவரல்லவா சாதித்துக் காட்டினார். பதவி ஆசை என்பதில் மனம் ஒட்டாமல், விளாம்பழத்து ஓடு போலத் தனித்து தியாக வாழ்வல்லவா வாழ்ந்து காட்டினார். 1942 ஆகஸ்ட்டில் பம்பாய் காங்கிரஸ் “வெள்ளையனை வெளியேறச்” சொன்னது. தலைவர் தன் பங்கை சாங்கோ பாங்கமாகச் செய்து முடித்துத் தானே வலிய காவல்துறை அதிகாரிகளை அழைத்துக் கைதான செய்தியை என் முதல் கட்டுரையில் கொடுத்து விட்டேன்.

சில செய்திகளை ஊரறியச் சொல்லக்கூடாது என்பர். ஏன் சொல்லக்கூடாது, அது உண்மை என்றால். தமிழ் நாட்டில் ராஜாஜிக்கும் காமராஜருக்கும் பனிப்போர் இருந்தது என்று காலம் காலமாய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இவ்விருவரின் கருத்து வேற்றுமைகளை இன்றைய எடைக்கல்லைக் கொண்டு அளந்து பார்க்கிறார்கள். இவ்விருவருக்கிடையே இறுகிக்கிடந்த பாசப்பிணைப்பு எத்தகையது என்பதை என் முதல் கட்டுரை சொல்லும். இன்னொன்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதைச் சொன்னவர்கள் தேசிய இயக்கத்துக்கு எதிர் வரிசையில் இருந்தவர்கள். ராஜாஜி பிராமண ஆதரவாளர் என்றும் காமராஜர் பிராமண எதிரி என்றும். இது உண்மைக்கு நேர் மாறான பச்சைப் பொய் என்பதைப் பல நேரங்களில் பலரும் சொல்லி வந்திருக்கின்றனர். ராஜாஜி எந்தக் காலத்திலும் தன்னை ஒரு பிராமணனாகவும், பிராமணர்களுக்கு உதவுபவராகவும் காட்டிக் கொண்டதில்லை. காமராஜர் பிராமண எதிரியாகவும் இருந்ததில்லை. எனினும் ஆதாயம் நாடி இப்படியொரு அபாண்டம் அவர் மீது திணிக்கப்பட்டது. அது உண்மையாயின் அவர் பிராமணரான தீரர் சத்தியமூர்த்தியைத் தன் குருவாக எப்படி ஏற்றுக் கொண்டிருக்க முடியும்? ஆர். வெங்கட்டராமனைத் தன் நம்பிக்கைக்குரிய உதவியாளராக எப்படி வைத்துக் கொண்டிருக்க முடியும்? இன்னும் எண்ணற்ற பல சான்றுகளை அள்ளிக் கொட்ட முடியும், தேவையில்லை, தீ சுடும் என்பதற்கு ஆதாரம் தேவையா என்ன? மற்றவர்களுடைய அரிப்புக்காக அவரை, பச்சைத் தமிழன், கருப்புத் தமிழன், சிவப்புத் தமிழன் என்றெல்லாம் கொண்டாடியிருக்கலாமே தவிர, அவர் எந்தக் காலத்திலும் பச்சையாவோ, கருப்பாகவே, சிவப்பாகவே தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளவில்லை. மாறாக நாடு, மக்கள், நல்வாழ்வு என்றுதான் நாளெல்லாம் சிந்தித்து வந்திருக்கிறார் என்பதை உணர்ந்தாலே போதும், அவரைப் புரிந்து கொண்டதாகும்.

அவர் சாதனைகளுக்கு முடிவு கிடையாது. எனினும் நிறைவாக ஒன்றைச் சொல்லி முடித்தால்தான் அவரைப் பற்றி சொன்ன மனச் சாந்தி உண்டாகும். அதுதான் “காமராஜ் திட்டம்”. எல்லோரும் சுதந்திர இந்தியாவில் பதவி பதவி என்று அலைந்து கொண்டிருந்த நேரத்தில், அதிலும் காங்கிரஸ் கட்சி நாடு முழுவதற்கும் ஆளும் கட்சியாக இருந்த போழ்து ஆற்றோடு போகிற தண்ணீரை, ஐயா குடி, அம்மா குடி என்று பங்கு போட்டுக்கொண்டு அனுபவித்த காலத்தில் இவர் தன்னிடம் இருந்த பதவியையும் விட்டுவிட்டுக் கட்சிப் பணிக்குப் போகிறேன், மற்றவர்களும் அப்படிப் போகட்டும் என்று சொல்லி பதவி வேட்டைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தார். பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு திகைத்துப் போனார். இப்படியொரு எண்ணம் உருவாகி, அதனை அமல்படுத்தத் தன்னையே முதல் ஆளாகவும் கொண்டு வந்து நிறுத்திய பெருந்தலைவரை நாவாரப் புகழ்ந்தார். விளைவு, தலைவர் உட்பட வெகு சிலரே பதவி விலகினர், ஆண்டாண்டு காலமாக மனித மனத்தில் வேரூன்றிக்கிடக்கும் பதவி மோகம் அத்தனை சீக்கிரம் விட்டு விலகிவிடுமா என்ன? எனினும் காமராஜ் திட்டம் என்பது வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட அரியதொரு தியாகத் திட்டம் என்பதில் ஐயமில்லை.

முடிவில் இன்னொரு முக்கிய செய்தியையும் சொல்லித்தான் தீரவேண்டும். பள்ளிக்கல்வி அதிகம் இல்லாதவர் பெருந்தலைவர் என்று சொல்வதுண்டு. ஆனால் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு உண்மை என்ன தெரியுமா? தலைவரின் ஆங்கில அறிவு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தக் கூடியது. ஒரேயொரு மாதிரி மட்டும் இங்கு சொல்கிறேன். லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்த போது இலங்கைக்குச் சென்று அவர்களோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டு திரும்பியிருந்தார். சென்னையில் ராஜ்பவனில் நிருபர்கள் அவரைச் சந்தித்துக் கேள்விகள் கேட்டனர். ஒருவர் கேட்டார், “இப்போது நீங்கள் செய்துகொண்டிருக்கிற ஒப்பந்தத்தை தொடர்ந்து பதவிக்கு வரும் ஆட்சியாளர்கள் மதித்து நடப்பார்களா?” என்றார். அப்போது அருகில் இருந்த பெருந்தலைவர் ஆங்கிலத்தில் சொன்னார்:

“Don’t go and print any such suggestions in the paper. This is an agreement signed by two Democratic Governments. Just as any Democratic Government in India would honour this agreement, the successive Governments in Ceylon will also honour this agreement. That is the principle involved in it.”

பெருந்தலைவர், ஏழைப்பங்காளன் என்றெல்லாம் அழைக்கப்பட்ட அந்தத் தலைவரைப் பற்றி பத்திரிகையாளர் “சோ” எழுதிய வரிகளைச் சொல்லி இந்தக் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

“விளம்பரத்தைத் துரத்திக்கொண்டு ஓடும் அரசியல் வாதிகளிடையே, விளம்பரம் தன்னைத் தேடி வந்தபோதும், அதைத் துரத்தி அடிக்கும் அரசியல்வாதியாகக் காமராஜர் வாழ்ந்தார்”.

வாழ்க பெருந்தலைவர் காமராஜ் புகழ்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *