Author: தஞ்சை வெ. கோபாலன்

  • பெங்களூர் நாகரத்தினம்மா வாழ்வில் …..

    –தஞ்சை வெ.கோபாலன்.

    திருவையாற்றில் அடுத்த மாதம் தியாகராஜ சுவாமிகளின் ஆராதனையும், ஐந்து நாட்கள் இசைவிழாவும் மிகச் சிறப்பாக நடக்கவிருக்கிறது. இந்த நேரத்தில் அந்த மகானின் வாழ்க்கை வரலாற்றை வெளியுலகுக்குக் கொண்டுவந்து இந்த அளவுக்குச் சிறப்பாக விழா நடைபெற வழிவகுத்த ஒரு பெண்மணியைப் பற்றி தெரிந்து கொள்வோமே!

    திருவையாறு சற்குரு ஸ்ரீதியாகபிரம்மத்தின் புகழ் வெளியுலகத்துக்குப் பரவிட பெரும்பணியாற்றிய பெண்மணி பெங்களூர் நாகரத்தினம்மாள். இவர் வாழ்க்கையில் செல்வம், புகழ் இவற்றின் உச்சியையும் தொட்டவர்; சில நேரங்களில் கடுமையான வீழ்ச்சிகளையும் கண்டவர். இவர் ஒரு தேவதாசி குடும்பத்தில் பிறந்தவர். தந்தையால் கைவிடப்பட்டு இவரும், இவரது தாயார் புட்டம்மாவும் மிகவும் சிரமங்களுக்கு ஆளாகி வளர்ந்தவர்கள். இசையிலும், நாட்டியத்திலும் இவர் தேர்ந்து மிகவும் மதிக்கப்பட்ட கலைஞராகத் தென்னாடு முழுவதிலும் திகழ்ந்தவர். இவர் மைசூரில் பிறந்ததனால் கன்னடமும், தெலுங்கும், சென்னையில் வாழ்ந்ததால் தமிழும், சம்ஸ்கிருதமும் நன்கு பயின்று அவற்றில் புலமை பெற்றிருந்தார்.

    பெங்களூர் நாகரத்தினம்மாநாகரத்தினம்மாள் அவருடைய சமகாலப் பெண்களோடு ஒப்பிடும்போது அதிகம் படித்த பெண்மணியாகத் திகழ்ந்தார். இவருடைய புலமைக்காக இவர் பல ஊர்களிலும் அழைத்துப் பாராட்டப் பட்டிருக்கிறார். புகழின் உச்சியைத் தொட்டவர் என்பதை பலகாலும் வாழ்க்கையில் நிரூபித்துக் காட்டியவர். அப்படிப்பட்ட இவர்தான் பின்னர் வாழ்க்கையில் பட்ட அடியின் காரணமாக, செல்வச் செழிப்பிருந்தும், வசதி வாய்ப்புகள் இருந்தும், கலைகளில் நல்ல பாண்டித்யம் இருந்தும், நிம்மதியில்லாமல் போயிற்று. காரணம் இவருக்கு வாரிசு இல்லை. நம்பிக்கை துரோகத்துக்கும் ஆளாகி மனம் வருந்தி, நெருங்கிய நண்பர்கள், கலைஞர்கள் ஆலோசனைக் கிணங்க திருவையாற்றுக்கு வந்து சற்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகளின் சமாதி காவிரிக் கரையில் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, அதை செப்பனிட்டு அங்கு அவருக்கு ஒரு சமாதி கோயில் எழுப்பி, இன்று அது உலகத்தையே சுண்டி இழுக்கும் இசையின் தலைமை பீடமாக உருவெடுத்து ஆண்டுதோறும் அவர் சமாதியில் ஆராதனை இசைவிழா நடைபெற மூல காரணமாகத் திகழ்ந்தவர். அதுமட்டுமல்ல பல புரட்சிகளைச் செய்த இவரே, திருவையாற்றில் தியாகராஜர் சமாதி ஆராதனையில் பெண்கள் பாடுவதற்கு அனுமதி இல்லாமலிருந்த நிலையை மாற்றி, பெண்களுக்கும் சம அந்தஸ்து பெற்று அங்கு மேடையேறி பாட வழிவகுத்தவரும் இவரே. இந்த உண்மை இன்றைய பெண் பாடகிகள் எத்தனை பேருக்குத் தெரியும்? அவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி இது.

    இவருடைய வாழ்க்கையில் இன்னுமொரு வேடிக்கையும் நடந்தது. அது வேடிக்கையான நிகழ்ச்சி மட்டுமல்ல, வேதனை தரும் நிகழ்ச்சியுமாகும். தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்கள் வரிசையில் பிரதாபசிம்ம ராஜா மிகவும் பிரபலமானவர். 18ஆம் நூற்றாண்டில் பிரதாபசிம்ம ராஜா தென்னாட்டு வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வுகளில் சம்பந்தப் பட்டிருந்தார். 1739 முதல் 1763 வரை இவர் தஞ்சையை ஆண்டு வந்தார். ஆற்காடு நவாப் முகமது அலிக்கு ஆதரவாக இருந்து அவருடைய எதிரியான சந்தா சாஹேபை சிறைபிடித்துப் பின்னர் முகமது அலியின் வேண்டுகோளுக் கிணங்க அவரை பலியிட்டதும் இவரே. இவர் காலத்தில்தான் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து வாணிபம் புரிய நாடுதேடி வந்து கொண்டிருந்தனர், அப்படிப்பட்ட நிலையில் அவர்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் பிரதாப சிம்மருக்கு இருந்தது. இவருடைய மகன் தான் துளஜேந்திர ராஜா. அவருக்குப் பின் சுவீகாரம் எடுக்கப்பட்ட மகன்தான் இரண்டாம் சரபோஜி.

    இந்த பிரதாபசிம்ம ராஜாவின் அரண்மனையில் பல தேவதாசிகள் உயரிய அந்தஸ்துடன் இருந்து வந்தனர். அப்படிப்பட்ட பல தேவதாசிகளில் ‘முத்துப்பழனி’ எனும் பெயர் கொண்ட தேவதாசி அவருடைய ஆசை நாயகியாக இருந்தார். மன்னரின் அவையில் பல கலைஞர்கள் இருந்தனர், அவர்களில் முத்துப்பழனியும் ஒருவர்; அதுமட்டுமல்லாமல் அவர் மிகச் சிறந்த பண்டிதராகவும் திகழ்ந்தார். தெலுங்கு மொழியில் கவிதை இயற்றும் ஆற்றல் படைத்தவர்; சமஸ்கிருத மொழி அறிவும் இவருக்கு அதிகம். அப்படிப்பட்டவர் ஆண்டாளின் திருப்பாவையை யொட்டி அதே போல தெலுங்கில் ஒரு கவிதை நூலை இயற்றியவர். இவர் கவிதைகளில் பல புதுமைகளை செய்த போதிலும், இவர் இயற்றிய “ராதிகா சாந்தவனமு” (ராதையை சமாதானப் படுத்துதல்) எனும் தெலுங்கு மொழி கவிதை நூல் மிகவும் பிரபலமடைந்தது; பிரபலமடைந்தது மட்டுமல்ல, அரசாங்கத்தின் பார்வை பட்டு அது தடையும் செய்யப்பட்டது.

    இந்த “ராதிகா சாந்தவனமு” கதைப் பாடல் அப்படி என்னதான் சொல்லுகிறது என்பது தெரிய வெண்டாமா? ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, ராதை ஆகியோர் பற்றிய கதைகள், வடமொழி, தெலுங்கு போன்ற இலக்கியங்களில் ராதை, கிருஷ்ணன் பற்றிய பல கவிதை நூல்கள், அஷ்டபதி, கீதகோவிந்தம் போன்ற பல புகழ் பெற்றன. இந்த கிருஷ்ணன் ராதை உறவை பொதுவாக, பரமாத்மா, ஜீவாத்மா ஐக்கியத்தை உருவகப்படுத்துவதாகத்தான் பெரும்பாலும் சொல்வார்கள். வடமொழி அறிஞர் கே.எம்.முன்ஷி தன்னுடைய “கிருஷ்ணாவதார்” “மேஜிக் ஆஃப் தி ஃப்ளூட்” எனும் நூலில் ஒரு அத்தியாயத்தின் தலைப்பாக “ராதா தி காண்ட்ரோவர்ஷியல் கேரக்டர்” என்று எழுதி, ராதை என்பவர் கிருஷ்ணனை விட வயதில் மூத்தவர், யாதவ குல தலைவன் ஒருவனின் மனைவி என்றும் குறிப்பிடுகிறார். அப்படியானால் ராதையையும் கிருஷ்ணனையும் இணைத்து இப்படி பக்தி மார்க்கத்தில் ஒரு பஜனை சம்ப்ரதாயம் உருவாகி விட்டது எப்படி?

    போகட்டும்! இப்போது பிரச்சனை அதுவல்ல. கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணன் ராதை உறவு பரமாத்மா ஜீவாத்மா ஐக்கியத்தை விழையும் நோக்கத்தில் இருந்தாலும், தெலுங்கு கவி முத்துப்பழனி இயற்றிய “ராதிகா சாந்தவனமு” அப்படி அமையவில்லை. காம உணர்வால் தூண்டப்பட்ட ஒரு இளம் பெண் கிருஷ்ணனுடன் இன்பம் துய்க்கும் உறவாக சித்தரித்து அது இயற்றப்பட்டிருந்தது. எந்தக் கதையானாலும் அது ஒரு திருப்பம் (ட்விஸ்ட்) இருக்க வேண்டுமல்லவா? இந்தக் கதையில் வயதில் மூத்த அந்தப் பெண் கிருஷ்ணனுடன் உறவில் ஈடுபட்டிருந்தாலும், தன்னுடைய மருமகளான இலா என்பவள் வயதுக்கு வந்தவுடன் அவளை கிருஷ்ணனுக்கு அளித்து விடுகிறாள். அப்போது அந்த ராதை இலாவுக்கும், கிருஷ்ணனுக்கும் இவர்கள் உறவில் எப்படியெல்லாம் இன்பம் துய்க்க முடியும் என்பதைச் சொல்லிக் கொடுக்கிறாள். அதுதான் கவிதை. *(இணையத்திலிருந்து சில பாடல்களை கட்டுரையின் இறுதியில் காண்க)

    பிற்காலத்தில் இந்த நூலைப் பற்றி குறிப்பிடும் ஒருவர் இந்த நூலை இயற்றியவர் ஒரு பெண் என்பதறியாமல் முத்துப் பழனி எனும் ஒரு ஆண் என்கிறார். இந்த நூல் 1887இலும் பின்னர் 1907லும் சென்னையில் தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த ஒரு வெளியீட்டாளரால் வெளியிடப்பட்டிருக்கிறது. அப்போது சென்னை மாகாணத்தில் தெலுங்கு பேசும் பகுதியில் வாழ்ந்த சீர்திருத்தக்காரரும், தேவதாசி முறை ஒழிப்பு ஆதரவாளரும், விதவா விவாக ஆதரவாளருமான வீரேசலிங்கம் பந்துலு என்பவரின் கவனத்துக்கு இந்த நூல் வந்தது. மகாகவி பாரதி தன்னுடைய “சந்திரிகையின் கதை” எனும் நாவலில் இந்த வீரேசலிங்கம் பந்துலுவையே ஒரு கதாபாத்திரமாக்கியிருக்கிறார் என்பதை நினைவூட்டுகிறேன்.

    இந்த வீரேசலிங்கம் பந்துலு தெலுங்கு மொழி கவிஞர்களின் வாழ்க்கை வரலாறு”களைத் தொகுத்து வெளியிட்டிருந்தார். அந்தத் தொகுப்பு நூலில் இந்த “ராதிகா சாந்தவனமு” கவிதை நூலைப் பற்றியும், அதன் உள்ளடக்கம் பற்றியும் எழுதியிருந்தார். அப்படி குறிப்பிடும்போது அவர் தேவதாசிகளை வெறுப்பவர் என்ற முறையில் இதன் ஆசிரியரான முத்துப்பழனியைக் குறிப்பிட தெலுங்கில் மரியாதைக் குறைவாக விளிக்கும் சொற்களைப் பயன்படுத்தியிருந்தார். கவிஞரின் சம்ஸ்கிருதம், தெலுங்கு மொழி அறிவைப் பாராட்டிவிட்டு, உள்ளடக்கம் அதிர்ச்சியாக இருப்பதாக அவர் எழுதினார். உச்சகட்டமாக கவிஞர் முத்துப்பழனியை நடத்தை கெட்டவள் என்றும், ஒரு விலைமாதினால் எழுதப் பட்டதால் நூல் ஆபாசம் நிறைந்ததாக உள்ளது என்றும் எழுதினார்.

    இந்த விவரங்களையெல்லாம் கேள்விப்பட்ட நாகரத்தினம்மாள் அந்த நூலை வாங்கிப் படித்துப் பார்த்தார். அதில் இருந்த பல பிழைகளை நீக்கி நல்ல முறையில் மீள்பதிவு செய்து வெளியிட்டார். அப்படி வெளியிட்ட பதிப்பின் முன்னுரையை எழுதிய நாகரத்தினம்மாள் சொல்கிறார். “வீரேசலிங்கம் இந்த நூலைப் பற்றி எழுதுகையில் ஆசிரியரும் கவிஞருமான முத்துப்பழனியை மிகக்கேவலமாக, அவர் ஒரு வேசி, இவரது தாயார் முத்தியாலு, முத்துப்பழனி பிரதாபசிம்ம ராஜாவின் ஆசைநாயகி என்றெல்லாம் எழுதியிருந்ததை நாகரத்தினம்மாள் கண்டித்து முத்தியாலு என்பவர் கவிஞரின் தாய் அல்ல, தந்தை என்பதையும் எழுதினார்.

    முத்துப்பழனி ஒரு விலைமாது, ஒழுக்கமற்றவர் என்றெல்லாம் விமர்சனம் செய்திருந்ததை நாக்ரத்தினம்மாள் விரும்பவில்லை. அதற்கு கண்டனங்களைத் தெரிவித்தார். தேவதாசியாகப் பிறந்ததாலேயே ஒருவர் ஒழுக்கமற்றவர் என்று வீரேசலிங்கம் எப்படி முடிவுக்கு வரலாம் என்பது அவர் வாதம். இதற்கிடையே 1911 ஜனவரி மாதம் சென்னையிலிருந்து வெளிவந்த தெலுங்கு பத்திரிகையான “சசிலேகா” வில் இந்த நூலைப் பற்றி “ஒரு விலைமாதினால் எழுதப்பட்டு, இன்னொரு விலைமாது அதை திருத்தி வெளியிட்டிருக்கிறார்” என்று எழுதினார்கள்.

    பல விவாதங்கள், அரசாங்க கடித பரிமாற்றங்கள், சமூக ஆர்வலர்களின் தலையீடு இவற்றின் முடிவில் இந்த நூல் காவல்துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டது. அதில் பதிப்பாசிரியர் பெயரை பெங்களூரு நாகரத்தினம்மாள் (மதராசின் பிரபலமான விலைமாதுக்களில் ஒருவர்) என்று குறிக்கப்பட்டிருந்தது.

    இதைத் தொடர்ந்து 1911 மே மாதம் சென்னை காவல்துறை டெபுடி கமிஷனர் கன்னிங்ஹாம் தலைமையில் ஒரு குழு சென்று ஆய்வு நடத்தி மொத்தம் 18 நூல்களை ஆபாசம் என்று முடிவுக்கு வந்து ஒரு பட்டியல் தயாரித்தது. அதில் இரண்டாமிடத்தில் நாகரத்தினம்மாள் பிரசுரித்த முத்துப்பழனியின் “ராதிகா சாந்தவனமு” இருந்தது. இதில் இன்னொரு வேடிக்கை, இந்த பிரச்சனையைக் கிளப்பி சீர்திருத்தம் பேசிய வீரேசலிங்கம் பந்துலு எழுதிய “ரசிக ஜன மனோரஞ்சனம்” எனும் நூலும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இதைவிட ஆச்சர்யமும், பெரிய கொடுமையும் என்ன வென்றால் பெரிய புராணத்தில் பாடப்பட்ட நந்தனார் வரலாற்றை இசை நாடகமாக மாயூரம் கோபாலகிருஷ்ண பாரதியார் ஆக்கினாரல்லவா “நந்தன் சரித்திர” நாடகம், அதுவும் பட்டியலில் இருந்தது.

    பின்னர் பல சர்ச்சைகள், கூட்டங்கள், ஆலோசனைகள் இவற்றுக்குப் பிறகு மற்ற நூல்கள், அடித்தல் திருத்தல், நீக்கல் ஆகியவைகளுடன் வெளியிட்டாலும் முத்துப்பழனியின் “ராதிகா சாந்தவனமு” சந்தையில் இல்லாமலே போய்விட்டது.

    இந்த சந்தடிகளெல்லாம் அடங்கிய பின் வாழ்க்கையில் விரக்தியுற்று நாகரத்தினம்மாள், தன் செல்வங்களையெல்லாம் ஒரு மகானின் நினைவிடத்தைப் புதுப்பித்து, ஒரு துறவி போல வாழ்ந்து வந்த கதை நமக்கெல்லாம் தெரிந்ததுதானே. இன்று திருவையாற்றில் காவிரிக் கரையில் மெல்லிய பனிப் பொழிவிடையே இசை வெள்ளம் பெருக்கெடுத்தோடுவது, இவருடைய சிறந்த தொண்டினால் என்பதை அறியும்போது சாதனைதான் பெரிதாக இருக்குமே தவிர, சாதனையாளரைப் பற்றிய சொந்த விமர்சனங்கள் நிற்பதில்லை. போராட்டங்களை சந்தித்த அந்தப் பெண்மணியின் மன உறுதியும், அர்ப்பணிப்புணர்வும் அனைவரும் போற்றவேண்டிய குணங்கள். வாழ்க நாகரத்தினம்மாள் புகழ்!!

    _______________________________________________________________________________

    எனையின்றி பொன் பொருளீந்தவள்
    எனையின்றி என்குலத்தில் எவளுண்டு
    நலமிகு காவியத்தை நாவலர்கள் எனையன்றி
    எம் குலத்தார் எவர்க்கேனும் படைத்ததுண்டோ
    கலையெலாம் பயின் றோங்கி நின்றாள்
    எனையன்றி எம் குலத்தில் எவளுளாள்
    முத்துபழனியே உனக்கிணையாய்
    எவரேயுளார் உன் குலத்தில்

    தெலுங்கு மூலத்தில் இருந்து…ஆங்கிலம். பி.வி.எல் நாராயணராவ் | தமிழ்: ப. சிவனடி
    (http://puthagampesuthu.com/2014/04/16/தடை-செய்யப்படும்-புத்தகங/)
    _______________________________________________________________________________

    தேனே,
    நான் காளியை நசுக்கினேன்;
    ஏன் என்று நினைக்கிறாய்?
    அந்தப் பாம்பு
    உன் அழகான ஜடைப்பின்னுலுக்குப்
    போட்டி என்பதால்…
    நான் கம்சனின் வில்லை உடைத்தேன்
    எதற்கு என்று நினைக்கிறாய்?
    அது உன் வடிவான புருவத்திற்குப்
    போட்டி என்பதால்…
    நான் கோவர்தனமலையை
    வேரோடு பிடிங்கினேன்;

    ஏன் என்று நினைக்கிறாய்?
    அந்த மலை
    உன் திடமான முலைகளுக்குப்
    போட்டி என்பதால்…
    நான் குவளயபீடாவை வருத்தினேன்;
    எதற்கு என்று நினைக்கிறாய்?
    அந்த யானை
    உன் அழகான பின்னிடை அசைவிற்குப்
    போட்டி என்பதால்..
    தேனே,
    தயவுசெய்வு நீயே யோசித்துப்பார்..
    அவைகள் உன்னைப் போலவே
    அழகாய் இருந்தால்
    என்னை வருத்துமா இல்லையா…

    தெலுங்கு மூலத்தில் இருந்து…ஆங்கிலம். பி.வி.எல் நாராயணராவ் | தமிழ்: ஆ. ஈஸ்வரன்
    (http://meyveendu.blogspot.com/2014/03/blog-post_685.html)
    _______________________________________________________________________________

    விக்கிபீடியாவிலிருந்து:
    பார்க்க … https://en.wikipedia.org/wiki/R%C4%81dhik%C4%81-s%C4%81ntvanam

    “If I ask her not to kiss me,
    stroking on my cheeks
    she presses my lips hard against hers.
    If I ask her not to touch me,
    stabbing me with her firm breasts
    she hugs me.
    If I ask her not to get too close
    for it is not decorous,
    she swears at me loudly.
    If I tell her of my vow not
    to have a woman in my bed,
    she hops on
    and begins the game of love.
    Appreciative,
    she lets me drink from her lips,
    fondles me, talks on,
    making love again and again.
    How could I stay away
    from her company?”

    B. V. L. Narayanarow (trans.), ‘From RADHIKA SANTWANAM (Appeasing Radhika)
    [If I ask her not to kiss me]’, in Women Writing in India: 600 B. C. to the Present, ed.
    by Susie Tharu and K. Lalita, 2 vols (London: Pandora, 1991), I 120.

    _______________________________________________________________________________

    பார்க்க … https://en.wikipedia.org/wiki/Muddupalani

    “Which other woman of my kind has
    felicitated scholars with such gifts and money?
    To which other women of my kind have
    epics been dedicated?
    Which other woman of my kind has
    won such acclaim in each of the arts?
    You are incomparable,
    Muddupalani, among your kind.
    […]
    A face that glows like the full moon,
    skills of conversation, matching the countenance.
    Eyes filled with compassion,
    matching the speech.
    A great spirit of generosity,
    matching the glance.
    These are the ornaments
    that adorn Palani,
    when she is praised by kings.”

    B. V. L. Narayanarow (trans.), ‘From RADHIKA SANTWANAM (Appeasing Radhika)
    in Women Writing in India: 600 B. C. to the Present, ed.
    by Susie Tharu and K. Lalita, 2 vols (London: Pandora, 1991), I 120.
    _______________________________________________________________________________

    Share
  • மனிதம்

    தஞ்சை வெ.கோபாலன்

    காலை ஐந்து மணி; தூக்கம் கலைகிற நேரம். தலைமாட்டில் என்னுடைய மொபைல் போனை அலாரம் வைத்துவிட்டுத்தான் படுப்பேன். அது இன்னும் சில நிமிடங்களில் ஒலிக்கத் தொடங்கும். அப்போது அலார ஒலிக்கு பதில் மொபைல் போன் ஒலித்தது. என்ன இந்த நேரத்தில் எனக்கு தொலைபேசி அழைப்பு வருவது கிடையாதே. யாராக இருக்கும் என்று எடுத்துப் பார்த்தேன். அறிமுகமான எண்ணும் அல்ல, பெயரும் இல்லை, வெறும் எண்கள் மட்டுமே.

    எடுத்துப் பேசினேன். எதிர் முனையிலிருந்து சென்னையில் வசிக்கும் என் உறவினர் ஒருவர் பேசினார். அன்றிரவு அவருடைய தாயார் காலமாகிவிட்டதாகவும், என்னை உடனே புறப்பட்டு வந்து சேரும்படியும், அன்று மாலையே காரியங்கள் செய்துவிட வேண்டுமென்று அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் இருப்போர் சொல்வதாகவும் அவசரமாக செய்தி சொன்னார்.

    சாதரணமாக நான் போய் கலந்து கொள்ள வேண்டிய அளவுக்கு உறவு இல்லாவிட்டாலும், பழக்கத்தில் அவர் எனக்கு நெருங்கிய உறவைக் காட்டிலும் முக்கியமானவர் என்பதால் உடனே படுக்கையிலிருந்து எழுந்தேன். நான் தனி மனிதனாக வசித்து வந்தமையால் என் வீட்டில் யாரிடமும் சொல்ல வேண்டியது இல்லை. ஆகையால் எழுந்து காலை வேலைகளையெல்லாம் முடித்துக் கொண்டு, ஏதாவது கிடைக்கும் பேருந்தைப் பிடித்து சென்னை போய்விடலாம் என்று புறப்பட்டேன்.

    காலை ஏழரை மணிக்கு ஒரு அரசு விரைவுப் பேருந்து புறப்பட தயாராக இருந்தது. பேருந்து நிலையத்திலிருந்த தேநீர் நிலையத்தில் ஒரு டீயை வாங்கிக் குடித்துவிட்டு வண்டியேறிவிட்டேன். கூட்டமேயில்லை, என்னையும் சேர்த்து ஏழெட்டு பேர் மட்டுமே வண்டியில் இருந்தனர். பயணச் சீட்டை வாங்கிக் கொண்டு, கையில் கொண்டு வந்திருந்த தினசரியைப் புரட்டிப் படிக்கத் தொடங்கினேன்.

    பேருந்து புறப்பட்டு விரைந்து கும்பகோணத்தை அடைந்து, அங்கு சில மணித்துளிகள் நின்றுவிட்டு மீண்டும் புறப்பட்டு விட்டது. மதியம் இரண்டு மணிக்கெல்லாம் சென்னைக்குப் போய்ச்சேர்ந்து விடலாம், எப்படியும் மாலை நான்கு மணி அளவில்தான் உடலை எடுப்பார்கள் என்று நினைத்து, செய்தி சொன்னவருக்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவரும் நான்கு மணிக்கு இங்கு இருப்பது நலம் என்றார். என் பயணம் தொடர்ந்தது.

    மதியம் இரண்டு மணிக்கு பேருந்து தாம்பரத்தில் நின்றது. அங்கு இறங்கி அங்கிருந்து வேறு நகரப் பேருந்தைப் பிடித்து நான் போகவேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்தபோது கிட்டத்தட்ட மணி மூன்றை நெருங்கிவிட்டது. நேரே உறவினர் வசித்த பலமாடி குடியிருப்புப் பகுதிக்குள் சென்றேன். நம் ஊர் வழக்கப்படி அக்கம்பக்கத்து குடியிருப்புகளிலிருந்து பலரும் வந்து அங்கு கூடியிருப்பார்கள் என்று நினைத்திருந்த எனக்கு பெருத்த ஏமாற்றம்.

    குடியிருப்பின் வாசலில் கருப்பு நிறத்தில் ஒரு அமரர் ஊர்தி என்று எழுதப்பட்ட வண்டி நின்று கொண்டிருந்தது. அருகே உடலை எடுத்து உள்ளே வைக்கவென்று இருவர் காக்கி சீருடை அணிந்தவர்கள் நின்றிருந்தனர். அந்த வண்டியின் டிரைவர் வண்டியினுள் உட்கார்ந்தபடி புகை பிடித்துக் கொண்டிருந்தார்.

    உறவினரின் இல்லம் முதல் மாடியில் மாடிப்படியேறுமிடத்துக்கு எதிரிலேயே இருந்தது. வாயில் கதவு திறந்திருந்தது. வாசலில் ஒருவரையும் காணோம். உள்ளே நுழைந்தேன். அது இரண்டு அறைகள் கொண்ட வீடு. முதலில் நுழைந்ததும் ஒரு சிறிய ஹால். அங்குதான் இறந்தவரின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. அருகில் உறவினருடைய மனைவியும், அவர் மகளும், வேறு இரு பெண்களும் மட்டும் இருந்தனர். என்னைக் கண்டவுடன் அவர்கள் சற்று பெருத்த குரலெடுத்து அழ ஆரம்பித்தனர்.

    நான் உறவினரிடம் சென்று வேறு யார் வந்திருக்கிறார்கள், யார் வரவேண்டும், என்ன ஏற்பாடுகள் நடந்திருக்கின்றன என்பதையெல்லாம் விசாரித்தேன். அவர் என்னை வாசல் புறமாக அழைத்துச் சென்று மெல்லிய குரலில் வேறு யாரும் வருவதற்கில்லை. நாம் இருவர் மட்டும் தான். உள்ளே இருக்கும் பெண்கள் வீட்டில் இருப்பார்கள். சடங்குகள் செய்ய வாத்தியார் வருவார் அவ்வளவுதான் என்றார்.

    எனக்கு எங்கள் ஊர் நினைவு வந்தது. அது பெரிய நகரமும் அல்ல, மிகச் சிறிய கிராமமும் அல்ல. நடுத்தரமான அந்த சிறிய நகரத்தில் எல்லா வசதிகளும் இருந்தன. ஒரு வீட்டில் இதுபோன்ற இறப்பு ஏதேனும் நடந்து விட்டதென்றால், அக்கம் பக்கத்தார் அனேகமாக எல்லா வீட்டிலிருந்தும் வந்து விடுவார்கள். அவர்களில் சிலர் வந்து துக்கம் விசாரித்துவிட்டு உடனடியாகப் போய் விடுவார்கள். நெருங்கிய மக்களாக இருந்தால் வீட்டுப் பெண்களுடன் அண்டை அயலார் வீட்டுப் பெண்களும் உட்கார்ந்து விடுவார்கள்.

    தெரு மனிதர்கள் அனேகமாக எல்லோருமே வந்து விசாரித்தாலும், சிலர் மட்டும் உடனே கிளம்பி விடுவார்கள். பழகியவர்கள் அங்கேயே தங்கி உடலை எடுத்துப் போய் எரிக்கும் வரை உடன் இருப்பார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து விடுவார்கள். சம்பந்தப்பட்ட நபருக்கு இந்தத் தொல்லை ஒன்றும் இருக்காது. அவ்வப்போது பொருட்கள் வாங்க பணத்தை மட்டும் யாரிடமாவது கொடுத்து வைத்து விடுவார்கள். அவர் எல்லா செலவுகளையும் பார்த்துக் கொள்வார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்துவிட்டு பட்டணத்து வாழ்க்கையில் இறப்பு கூட அநாதையைப் போல அமைந்து விட்டதை எண்ணி மனம் வருந்தினேன்.

    “நீ ஒன்றும் கவலைப் படாதே, உன் கூட இருந்து காரியங்களை நான் கவனித்துக் கொள்கிறேன். நீ ஈமச் சடங்குக்கான காரியங்களை மட்டும் கவனி. மற்ற அனைத்தையும் நான் கவனிக்கிறேன் என்று சொன்னதும் அவருக்கு பெருத்த நிம்மதி.

    வாத்தியார் வந்து சேர்ந்தார். வாசற்படிக்கருகில் லேண்டிங் என்று சொல்லப்படும் பகுதியில் அமர்ந்து ஒரு வராட்டியில் அக்னியை கொண்டு வரச் செய்து தீ மூட்டினார். அப்போது மாடியிலிருந்து இருவர் வந்து, “இதெல்லாம் இங்கே செய்யக் கூடாது. மற்ற வீட்டுக் காரர்கள் மாடியிலிருந்து இறங்கி வருகின்ற இடம். அவரவர்கள் ஆபீஸ் முடிந்து வருகிற நேரம். பிள்ளைகள் பள்ளிக்கூடம் விட்டு வந்து விடுவார்கள், விளையாட வெளியே போகவுமாக இருப்பார்கள். இந்தக் காரியங்களையெல்லாம் உங்கள் வீட்டின் உட்பகுதியிலேயே வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்கள். சாஸ்திரி பதில் சொல்லும் முன்பாக அவர்களே அங்கிருந்த சாமான்களை எடுத்து உள்ளே வீசிவிடுவார்களோ என்று பயப்படும்படி அவர்கள் நடவடிக்கைகள் இருந்தன.

    “என்னய்யா, உலகத்துல நடக்கக்கூடாத காரியம் நடக்குது. இறந்தவங்க உடல் உள்ளே கிடக்கு. இந்த காரியங்களையெல்லாம் வீட்டு வாயிற்படிக்கு வெளியே வைத்துதான் செய்வது வழக்கம். வெளியே போறவங்க இதை பார்த்துக் கொண்டு போறதால அவங்களுக்கு என்ன சிரமம், வழியை மறிக்காம காரியம் நடந்தா உங்களை எந்த விதத்தில் பாதிக்கிறது?” என்றேன் நான்.

    “அதெல்லாம் நடக்காதுய்யா! நீங்க யாரு? இந்த குடியிருப்பு வாசிகளுடைய சங்கத்துத் தலைவன் நான், இவர் செக்ரட்டரி. எல்லா வீட்டுக் காரங்களுடைய செளகரியங்களைப் பார்த்துதான் நாங்க சொல்றோம். புதுசா வந்து நீங்க இங்கே நியாயம் பேச முடியாது” என்றார் தலைவர்.

    உறவினரோ என்னை பரிதாபமாகப் பார்த்து, “வேண்டாம்பா, விடு, அவங்களோட எதுக்கு வீண் வம்பு. நான் இங்கே குடிவந்து கொஞ்ச நாட்கள்தான் ஆயிற்று, அதனால் என்னால் அவர்களுடன் இந்த நிலைமையில் வாதாடிக் கொண்டிருக்க முடியாது. நாம் நம்ம காரியங்களை உள்ளேயே வைத்துக் கொள்ளலாம்” என்று சொல்லியபடி உள்ளே போய்விட்டார். வாத்தியாரும் நானும் அவர் பின்னால் உள்ளே சென்றோம். பின்னர் அவசர அவசரமாக காரியங்கள் நடந்தேறின. வழக்கமாக மூங்கில் வெட்டிக் கொண்டு வந்து பச்சை மட்டை முடைந்து கட்டி அதில்தான் உடலை வைத்து எடுத்துச் செல்வார்கள்.

    ஆனால் இங்கே உடலை சுமந்து செல்ல ஒரு அமரர் ஊர்தி வந்து நின்று கொண்டிருக்கிறது. மூங்கில், பச்சை மட்டை, கயிறு இவைகள் இல்லை. மண் சட்டிகள் மட்டும் இரண்டு வாத்தியார் கொண்டு வந்து உள்ளே வைத்து அக்னி மூட்டி தயார் செய்திருந்தார். வாகனத்துடன் சீருடை அணிந்து வந்திருந்த இருவர் மட்டும் ஒரு ஸ்ட்ரெச்சரைத் தூக்கிக் கொண்டு உள்ளே வந்து உடலை எடுத்து அதில் வைத்துக் கொண்டு விறுவிறுவென்று போய் வாகனத்தில் ஏற்றி கதவை மூடிவிட்டனர்.

    பின்னால் தீச்சட்டியை ஏந்திக் கொண்டு வந்த உறவினரும் நானும் அதே வாகனத்தில் ஏறிக் கொண்டோம். வாத்தியார் மட்டும் நீங்கள் வந்து சேருங்கள், அதற்குள் நான் போய் மயானத்தில் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை செய்து வைக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.

    பெண்கள் வாசல் வரை வந்து விழுந்து அழுது பிணத்தை வழி அனுப்புவார்கள் என்று எதிர்பார்த்தேன், அதெல்லாம் ஒன்றும் நடைபெறவில்லை. வாகனம் புறப்பட்டு விட்டது. அந்த குடியிருப்பு வாசல் அங்கு எதுவுமே நடைபெறாதது போல அமைதியாக இருந்தது. அன்றைய தினம் எல்லா காரியங்களும் முடிந்த பிறகு மற்ற நாட்கள் நடக்க வேண்டியதை கவனித்து செய்துவிடு, நான் ஊருக்குப் போகிறேன் என்று கிளம்பி வந்து விட்டேன்.

    இதெல்லாம் நடந்து ஒரு மாதம் ஆகியிருக்கும். தொலைக் காட்சிகளில் சென்னையில் பெருமழை, வெள்ளம் பல இடங்கள் நீரில் மூழ்கின என்றெல்லாம் செய்திகளைச் சொல்லிக் கொண்டும், நேரடிக் காட்சிகளைக் காட்டிக் கொண்டுமிருந்தார்கள். இவைகளையெல்லாம் பார்த்து என் உறவினர் கதி என்ன ஆயிற்றோ என்ற கவலை வந்து அவருக்கு போன் செய்தேன். சில முறை செய்தும் தொடர்பு கிடைக்காமல், கடைசியில் அவர் குரல் மறு முனையில் கேட்டது.

    “அங்கு மழை, வெள்ளம் என்கிறார்களே, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? ஒன்றும் உங்களுக்கு பாதிப்பு இல்லையே?” என்று கேட்டேன்.

    அவர், “அதையேன் கேட்கிறாய். இங்கு அடையாற்று வெள்ளம் வீட்டினுள் புகுந்து முதல் தளம் முழுவதும் நீரினுள் மூழ்கிப் போய்விட்டது. நாங்கள் எல்லாம் மேலே மொட்டை மாடியில்தான் இருக்கிறோம். சோறு, தண்ணி எதுவும் கிடைக்கவில்லை, உயிர் பிழைத்தால் போதுமென்கிற நிலைமை” என்றார்.

    “உங்களை மீட்க யாரும் வரவில்லையா?” என்றேன்.

    “இது வரை யாரும் வரவில்லை, எப்படி வெளியேறப் போகிறோம் என்பதும் தெரியவில்லை ஒரே குழப்பமாக இருக்கிறது” என்றார்.

    உங்கள் குடியிருப்பின் தலைவர், செயலாளர் ஆகியோர் இருப்பார்களே, உங்கள் பாதுகாப்புக்காக அவர்கள் எதுவும் செய்யவில்லையா?” என்றேன்.

    “அவர்கள் எல்லாம் அடையாறு ஆற்றில் வெள்ளம் என்றதுமே தங்கள் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு இந்த இடத்தை விட்டு எங்கோ போய்விட்டார்கள். அவர்களுக்குத் தெரியுமாம், வெள்ளம் வந்தால் இந்தப் பகுதி தண்ணீருக்குள் மூழ்கிவிடுமென்று. அதனால் அவர்கள் ஓடியே போய்விட்டார்கள். இங்கு என்னைப் போல சமீபத்தில் குடி வந்தவர்கள் மட்டும் தான் விஷயம் தெரியாமல் மாட்டிக் கொண்டிருக்கிறோம்” என்றார் அவர்.

    ‘திருவையாறு பாரதி இயக்கத்தாரும்’, ‘சொர்க்கபூமி தஞ்சாவூர்’ என்ற அமைப்பு சார்பிலும் இங்கிருந்து நிவாரணப் பொருட்களை எடுத்துக் கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலிருந்து சென்னைக்கு லாரிகள் போகின்றன, அதில் தொண்டர்களாக நாங்கள் போகிறோம், நீங்களும் வருகிறீர்களா என்று பாரதி இயக்க நண்பர் ராஜராஜன் எனக்கு போன் செய்தார். எங்கே எங்கே என்று காத்துக் கொண்டிருந்த நான் அவர்களுடன் சேர்ந்து சென்னைக்கு வெள்ள நிவாரணப் பணிக்காகப் புறப்ப்ட்டு விட்டேன்.

    எங்கள் லாரியை சைதாபேட்டை அரசு அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்த அதிகாரிகள் எங்களுக்கு நாங்கள் நிவாரணப் பணியாற்ற வேண்டிய பகுதிகளைக் குறிப்பிட்டு அங்கு போகச் சொல்லி, கூடவே ஒரு அதிகாரியையும் அனுப்பி வைத்தார்கள். இறைவன் திருவுள்ளமோ என்னவோ, நாங்கள் பணியாற்ற வேண்டிய பகுதியில்தான் நான் முன்பு என் நண்பரின் தாய் காலமானபோது போன அதே பகுதிக்குப் போய்ச்சேர்ந்தேன். எங்கள் லாரி நண்பர் குடியிருந்த அடுக்கு மாடி குடியிருப்பு வாசலில் நின்றதும், அங்கு வாழ்ந்த மக்கள் எல்லாம் அடித்துப் பிடித்துக் கொண்டு வந்து நிவாரணங்களைப் பெற வந்து சேர்ந்தனர்.

    அந்தக் கூட்டத்தில் என் நண்பரும், அவர் மனைவியும்கூட தூரத்தில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவரும் என்னைப் அதிசயமாகப் பார்த்துச் சிரித்தார். கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு வந்து அங்கு இருக்கும் மொத்த குடியிருப்புகள், அதில் வசிக்கும் மொத்த பேர்களுடைய எண்ணிக்கை இவற்றையெல்லாம் அந்த தலைவரும், செயலாளரும் அடுக்கிக் கொண்டிருந்தனர். அனைவரையும் வரிசையில் நிற்கச் சொல்லி வற்புறுத்தினோம். அதற்குள் அந்தப் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த உள்ளூர் இளைஞர்கள் எங்கள் உதவிக்கு வந்து சேர்ந்தனர்.

    அவர்கள் உதவியோடு நிவாரணப் பொருட்கள் அடங்கிய பெட்டி, பாய், ஜமக்காளம், போர்வை, உணவுப் பொருட்கள், குடி தண்ணீர் பாட்டில் அனைத்தையும் ஒவ்வொருவருக்குமாகக் கொடுத்துக் கொண்டிருந்தோம். என் நண்பர் பொருட்களைப் பெற்றுக் கொள்ள நெருங்கியபோது, அவர் சொன்னார், “மற்றவர்களுக்கு உதவி செய்வதை பெரும் பாவமாகக் கருதியவர்கள் முதலில் வந்து வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள் அல்லவா? இனி எவருடைய வருத்தமும் இல்லாமல் என்னைப் போன்றவர்கள் கிடைத்ததை வாங்கிக் கொள்கிறோம்” என்று நாங்கள் கொடுத்த பொருட்களை கண்களில் நீர் வழிய வாங்கிக் கொண்டார் .

    அப்போது நான் நண்பரிடம் சொன்னேன், “எல்லாம் நல்லபடியாக நடக்கும் வரை நான் பெரியவன், இவன் தாழ்ந்தவன், நான் நிரந்தரமானவன், இவன் இப்போது வந்தவன் என்றெல்லாம் ஏற்றத் தாழ்வு பார்த்தவர்களை யெல்லாம் இன்றைக்கு இறைவன், அனைவரும் அவர் சந்நிதியில் ஒன்றுதான் என்று நிரூபித்து விட்டான். சுற்றிலும் இருப்பவர்கள் மனங்கள் அழுக்குப் படிந்திருந்தாலும், நாம் நல்ல உள்ளத்தோடு இறைபணி யாற்றுவோம். நம்பியவர் கெடுவதில்லை. மனிதம் போற்றப்பட வேண்டியது” என்றேன்.

    தஞ்சை வெ.கோபாலன்,

    இயக்குனர்,

    பாரதி இலக்கியப் பயிலகம்,

    தஞ்சாவூர் 613007)

    Share
  • அசுவத்தாமன் எனும் அரக்கன்

    தஞ்சை வெ. கோபாலன்.

    மகாபாரத யுத்தம் முடிவுறும் சமயம். யுத்த களத்தில் துரியோதனன் பீமனால் அடித்துத் துவம்சம் செய்யப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த நேரம். அணுஅணுவாக அவன் உயிர் பிரிந்து கொண்டிருந்தது. தான் வாழ்ந்த கோலாகலத்தை மனத்தில் எண்ணி அசைபோடலாயினான். வாழ்நாள் முழுவதும் கேட்பார் எவருமின்றி தான்தோன்றியாகத் திரிந்து மனத்தில் நினைத்ததைப் பேசி, விரும்பியதைச் செய்து, நல்லது எது, தீயது எது என்பதைப் புரிந்து கொள்ள மனமின்றி ஆணவத்தின் அடிச்சுவட்டில் நடந்து வந்த பாதையைச் சற்றுத் திரும்பிப் பார்க்கலானான். தட்டிக் கேட்க வேண்டிய தந்தை, சக்கரவர்த்தி, அனைவருக்கும் பொதுவானவன், நீதியை நிலைநாட்ட வேண்டியன் என்கிற கடமையுணர்வுகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டுத் தன் புத்திர பாசத்தால் மகன் சொற்படி ஆடியதன் விளைவாக கொடியவனானவன் துரியோதனன். ஆகவே மகன் செய்த கொடுமைகளுக்கெல்லாம் முழுமுதற் காரணம் கடமை தவறிய சக்கரவர்த்தி திருதராஷ்டிரனே.

    வாழ்ந்த காலம் முழுவதும் எதிர்ப்பட்ட அனைவரும் அவனுக்கு அடங்கி, வாய்பொத்தி ஏவியதைச் செய்து இவனை மமதையின் உச்சத்தில் உயர்த்திவிட்டனர். ராஜாதி ராஜர்களும் வீராதி வீரர்களும் அவனுடைய ஏவலுக்குக் கைகட்டிக் காத்திருந்தனர். திரும்பிய பக்கமெல்லாம் ஏவலாளர்கள் அவன் கண்ஜாடைக்குக் காத்திருந்து பணிவிடைகளைப் புரிந்து வந்தனர். அப்படி அவன் வாழ்ந்த வாழ்க்கை எங்கே? இன்று குருதியும் ரணமுமாக சாவை எதிர்நோக்கி மண்தரையில் வீழ்ந்து கிடக்கும் கோலம்தான் என்ன?

    தூங்கிக் கண் விழித்துப் பார்த்ததும் கோப்பையில் சோமபானமும் சுறாபானமும் கையில் கொண்டு அழகு மங்கையர் அவனை உபசரித்த நாட்கள்தான் எங்கே? அவனது கால்கள் தரையில் பட்டால் புண்ணாகுமே என்று அவனைப் பட்டு பீதாம்பரங்கள் கொண்டு அலங்கரித்து கால் தரையில் படாவண்ணம் பல்லக்கில் சுமந்த ஏவலர்கள் எங்கே? தனது ஆணவத்துக்கும், அகம்பாவத்துக்கும் எதிரானவர்கள் என்று சந்தேகித்த அனைவருமே, குறிப்பாக பாண்டவர்கள் அழிந்து போகவேண்டுமென்று எண்ணி துரோகச் செயல்கள் என்னவெல்லாம் முடியுமோ அவற்றையெல்லாம் செய்துவந்த அவன் மனம், இப்போது தன்னுடைய நிலைமையை எண்ணி பேதலித்தது. தாயாதியர்களை முறை தவறி கொல்ல எண்ணியவனின் உடல் இன்று மரணத்தின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. உடலின் வேதனை பெரிதா, பட்ட துன்பங்கள் பெரிதா என்று சொல்லவொண்ணா பரிதாப நிலைமை அவனுக்கு.

    மரண தேவனின் அரவணைப்பை எந்த நொடியிலும் வரலாம் என்ற எதிர்பார்ப்பில் துடித்துக் கொண்டிருந்த வேதனை நிறைந்த அவன் கண்கள் முன்பாக மூவர் வந்து நின்றனர். அவர்கள் குரு துரோணரின் புத்திரன் அசுவத்தாமன், குரு கிருபாச்சாரியார், துரியோதனனின் படையைச் சேர்ந்த வீரன் கிருதவர்மன் ஆகியோர். போர்க்களத்தில் பீமனின் கதையால் அடித்துத் தொடை எலும்புகள் நொறுங்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான் இளவரசன் துரியோதனன் என்ற செய்திகேட்டு ஓடோடி வந்திருந்தனர் அம்மூவரும், போர்க்களத்தின் வெவ்வேறு மூலைகளிலிருந்து. பாராளும் வேந்தன் இன்று பராரியாய், ஆதரவற்றவனாய், குருதிப் புனலில் நீந்திக் கொண்டு அனாதையாய்க் கிடக்கும் கோரக் காட்சியைப் பார்த்தனர்.

    நண்பன் அசுவத்தாமனைக் கண்டதும் துரியோதனன் சுயபச்சாதாபத்தோடு பேசினான். விதி சதிசெய்து தனக்கு இப்படிப்பட்ட நிலைமையை உருவாக்கிவிட்டதாக வருந்தினான். அப்பொதும் அவன் செய்த பாவங்கள், துரோகங்கள், ஈடு இரக்கமற்ற கொடுஞ்செயல்கள் அவனை பழிவாங்கிவிட்டதாக அவன் எண்ணவில்லை. இரக்கமற்ற அரக்க குணம் படைத்த எவருமே தாங்கள் தவறு செய்ததன் தண்டனை இது என்று எண்ணுவது கிடையாது. பிறர் தங்களுக்கு தீங்கிழைத்து விட்டார்கள் என்ற மூடத்தனமான எண்ணங்கள்தான் எப்போதும் அவர்கள் மனதில் இருக்கும்.

    நண்பன் கிடந்த கோலம், அவன் படுகின்ற அவஸ்தை இவற்றையெல்லாம் பார்த்ததும் அசுவத்தாமனுக்கு கோபாவேசம் மூண்டது. எரிமலையென பொங்கி எழுந்தான். நண்பனின் நிலைமையை விட தன் தந்தையைப் பொய் சொல்லி ஏமாற்றி கொன்றுவிட்டதால் அவன் உள்ளமும் உடலும் துடித்தன. ஆம்! ‘அஸ்வத்தாம ஹத: குஞ்சரக:” என்று அஸ்வத்தாமன் என்கிற குதிரை இறந்தது என்று கண்ணபிரான் சொல்லச் சொன்னபடி, ‘குஞ்சர:’ எனும் சொல்லை மெல்ல காதில் விழாதபடி சொன்னதும் துரோணர் தன் மகன் தான் கொல்லப்பட்டான் என்று எண்ணி, ஆயுதங்களைக் கீழே போட்டார், அப்போது அம்பு எய்தி கொல்லப்பட்டார். போர்க்களத்தில் போர் தர்மங்களுக்கு எதிராக நடந்த பல நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. பொய்யே பேசாத தர்மன் கூட பொய்யாய் ஒலிக்கும் இந்த சொற்றொடரை சொன்னதற்குக் கலி காலம் தொடங்குவதே காரணமாயிற்று.

    எதற்கும் அஞ்சாத குரு துரோணரைத் தான் இறந்து விட்டதாக பொய் சொல்லி கொன்று விட்டனரே இந்தப் பாண்டவர்கள் என்று அவன் நெஞ்சு கொதித்தது. அடி வயிற்றிலிருந்து பொங்கி எழுந்த கோபாவேசத்தில் அவன் ஒரு சபதம் செய்தான். “இல்லாத ஒன்றை பொய்யாகச் சொல்லி என் தந்தையின் மனதைத் துன்பத்திற்குள்ளாக்கிவிட்டு அவரைக் கொன்று சாய்த்து விட்டனர் கோழைகள். போர் தர்மங்களுக்கு மாறாக இடுப்புக்குக் கீழே தொடையில் அடித்து வீழ்த்தி உயிருக்குப் போராடும் நிலையில் என் நண்பனை வைத்துவிட்டனர். நண்பா! துரியோதனா! அஸ்தினாபுரத்தின் அரசே! நான் இப்போது ஒரு சபதம் மேற்கொள்கிறேன். இன்றே, இன்றிரவே அந்த வஞ்சகர்கள் பாண்டவர்கள் அனைவரையும் நான் கொல்வேன். அவர்களது படைவீரர்கள் உட்பட அனைவரும் பிணமாகும் வரை நான் ஓயமாட்டேன். இது சத்தியம்!” என்றான் அசுவத்தாமன்.

    மரணத்தின் பிடியில் மயங்கிக் கிடக்கும் துரியோதனனுக்கு நண்பன் செய்த சபதம் மனதில் சற்று ஆறுதலைக் கொடுத்தது. தான் இறப்பதைவிட தன் எதிரிகள் கொல்லப்படப் போகிறார்கள் என்பதில் அவனுக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி. நண்பன் அசுவத்தாமனைத் தன் அருகில் வரும்படி சைகை செய்தான். அருகில் வந்த நண்பன் மீது நீர் தெளித்து, அவன் தலையில் கைவைத்து “இப்போது முதல் நீயே கவுரவர்கள் படைக்குத் தளபதி, பாண்டவர்களை அழித்து வெற்றியை ஈட்டுவது உன் பொறுப்பு, உனக்கு வெற்றி கிட்டட்டும்” என்றான் துரியன்.

    அந்த விசாலமான போர்க்களத்தில், எங்கும் பிணக்குவியல் விழுந்து கிடக்க, பேயும், பிசாசும் உலவுகின்ற அந்த கோர பூமியில் தனித்து ரத்தம் ஒழுக வீழ்ந்து கிடக்கும் துரியோதனனுக்கு அப்போதும் ஒரு சிறு நப்பாசை. பாண்டவர்களை தன் நண்பன் அசுவத்தாமன் வீழ்த்திவிட மாட்டானா என்று. பாண்டவர்கள் அழித்தது போக மீதம் படை என்று சொல்லிக் கொள்ள போர்க்களத்தில் எவரும் மிச்சம் இருக்கவில்லை. தனியனாய், ஒற்றை ஆளாய், வல்லமையும் நேர்மையும் நீதியும் ஆயுதங்களாகக் கொண்டு போராடும் பாண்டவர்களை எதிர்க்கத் தயாரானான் அசுவத்தாமன்.

    கோழைகள் எப்போதும் மறைந்திருந்தே தாக்குவார்கள். படை இழந்து வஞ்சனையும், பழிவாங்கும் உணர்வும் மட்டும் மேலோங்க காத்திருந்த அசுவத்தாமன் அருகிலுருந்த ஒரு அடவியினுள் புகுந்து மறைந்திருந்தான். அங்கிருந்து பாண்டவர்கள் பாசறை அருகில் இருந்தது. இருள் சூழ்ந்த நேரம். ஆளரவமற்ற சூழ்நிலை. பாண்டவர் முகாம்களில் கூடாரங்களில் பாண்டவர்களும், சேனை வீரர்களும் அயர்ந்த நித்திரையில் ஆழ்ந்திருந்தனர். அப்போது ஓசையின்று கூடாரங்களுக்குள் சென்று அசுவத்தாமன் அங்கு படுத்து உறங்கியவர்கள் அனைவரையும் வெட்டிச் சாய்த்தான்.

    திருடச் சென்றவனிடம் பெரும் செல்வம் சிக்கியதைப் போல பாண்டவ சேனாபதியான திருஷ்டத்யும்னன் சிக்கினான். துருபதன் மகனும், பாஞ்சாலியின் சகோதரனுமான அந்த மாவீரனை சித்திரவைக்குள்ளாக்கித் துன்பம் தந்து கொன்றொழித்தான் அசுவத்தாமன். தன் தந்தை துரோணரைக் கொன்றவனல்லவா இவன்? என்ற ஆத்திரம் அவனுக்கு.

    அடுத்தடுத்த கூடாரங்களில் பாண்டவர்களின் வாரிசுகளாக வந்துப் பிறந்திருந்த உபபாண்டவர்கள் எனும் சிறுவர்களை ஒருவர் விடாமல் வெட்டிக் கொன்றான். இப்படி அடாத செயலைச் செய்து முடித்துவிட்டு அசுவத்தாமனும் அவனுடன் வந்த ஓரிரு வீரர்களும் ரத்தக் கறை படிந்த ஆயுதங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த துரியோதனன் முன்பு வந்து நின்றனர். என்ன ஆயிற்று என்று துரியதன் கண் ஜாடையால் அவனை வினவினான்.

    அசுவத்தாமன் வெற்றிக் களிப்போடு சொல்லலானான். வேறு எங்கோ உறங்கிக் கொண்டிருந்த பாண்டவர்கள் ஐவர், கிருஷ்ணன், சாத்யகி ஆகியோர் நீங்கலாக மற்ற அனைவரையும் உறக்கத்திலேயே வெட்டிக் கொன்றுவிட்டதாகப் பெருமையோடு முழங்கினான். பாண்டவர்களையும், கிருஷ்ணன், சாத்யகி ஆகியோரை ஏன் விட்டு விட்டாய் என்றான் துரியன். அவர்கள் இருக்குமிடம் தெரியாமல் வேறு எங்கோ ஓடிப்போய் தப்பி விட்டனர் என்றான் அசுவத்தாமன்.

    இவற்றையெல்லாம் கேட்ட துரியோதனன் துன்பங்களுக்கிடையிலும் மனதில் மகிழ்ச்சியை எய்தினான். நண்பா! நீ வீராதி வீரனடா! எப்படிப்பட்ட காரியத்தை மிக எளிதாகச் செய்துவிட்டு வந்திருக்கிறாய். உன்னை ஆரத் தழுவி, மனதார பாராட்டிப் பரிசுகளைக் கொடுக்கும் நிலையில் நான் இப்போது இல்லையே என்று தவித்தான் துரியோதனன். என்றாலும் பரம எதிரிகளான பாண்டவர்களுடைய சேனையையும், அவர்களுடைய தளபதியாக இருந்த திருஷ்டத்யும்னனையும் வதம் செய்துவிட்டான் நண்பன் என்கிற மகிழ்ச்சியோடு கண்களை மூடினான், உயிரையும் நீத்தான்.

    பாண்டவர்கள் ரகசியமாக தங்கியிருந்த இடத்துக்கு பாஞ்சால நாட்டு இளவரசனும், பாண்டவர்களின் சேனைத் தலைவனுமான திருஷ்டத்யும்னனும், திரெளபதியின் இளம் புத்திரர்கள் ஐவரும், பாண்டவ சேனா வீரர்கள் அனைவரும் அசுவத்தாமனால் கொலையுண்டனர் எனும் செய்தி வந்து சேர்ந்தது. இந்த சோக நிகழ்வைக் கேட்டு யுதிஷ்டிரன் ஆற்றொணா துயரில் ஆழ்ந்தான். பாண்டவரில் ஏனையோரும் அதிர்ச்சியுற்றனர். உபபாண்டவர்களும் சேனா வீரர்களும் படுகொலையான இடத்துக்கு திரெளபதி அழைத்து வரப்பட்டாள். தன் அன்புப் புதல்வர்கள் கொலையுண்டு மடிந்து கிடப்பதைப் பார்த்து மயங்கி வீழ்ந்தாள் திரெளபதி. உலகில் வேறு யாருக்கும் வந்திராத சோகமயமான நிகழ்ச்சி, தன் உடன்பிறந்த சகோதரனும், வீராதிவீரனுமான திருஷ்டத்யும்னனும், தன்னுடைய ஐந்து புதல்வர்களும் கொல்லப்பட்டனர் எனும் கொடிய செய்தி அவள் செவிகளில் விழுந்ததும் இடிவீழ்ந்தது போல அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

    மயங்கி வீழ்ந்தாள்; பின்னர் எழுந்தாள்; நடந்தது இதுவென உணர்ந்தாள். அதிர்ச்சியும் கோபமுமாக அழுத குரலில் உரக்க ஒரு சபதத்தை ஏற்றாள். “பாவி, அசுவத்தாமன் என் குலம் விளங்க வந்த இளம் பிஞ்சுகளைக் கொன்றுவிட்டான். அவனை பழிதீர்க்க நம்மில் எவருமே இல்லையா? அவனை இன்றே கொன்று வீழ்த்த வேண்டும், இல்லையேல், அவன் நெற்றியில் மிளிரும் மணியைப் பிடுங்கி அவனை உயிர்ப் பிணமாக ஆக்கி, அவமானத்துக்கு உட்படுத்த வேண்டும். இவ்விரண்டில் ஏதேனுமொன்றை செய்து முடிக்கும் வரை பச்சைத் தண்ணீர்கூட அருந்த மாட்டேன்; பட்டினி கிடப்பேன்” என்றாள் திரெளபதி.

    Ashwatthamaஇதனைக் கேட்ட பீமன் அசுவத்தாமனைத் தேடிப்பிடிக்க விரைந்து சென்றான். ஆனால் அந்த மாயாவியை, கொடுமனம் படைத்த கடைமகனைப் பிடிப்பது அத்தனை எளிதன்று என்பதை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவும், அர்ஜுனனும் அறிந்தே இருந்தனர். தன்னை பாண்டவர்கள் சும்மா விடமாட்டார்கள் என்பதை யுணர்ந்திருன்த அசுவத்தாமன் பதுங்கிக் கொள்ள இடம் தேடி ஓடினான். கங்கை நதிக் கரையோரம் இடம் தேடி ஓடியவனுக்குத் தவத்தில் ஆழ்ந்திருந்த வியாசபகவான் தென்பட்டார். அந்த தவயோகியின் பின்னால் ஒளிந்து கொண்டால் தன்னை பாண்டவர்களால் கண்டுபிடிக்க முடியாது என்றுணர்ந்து அங்கே போய் ஒளிந்து கொண்டான்.

    அப்போது ஓடி ஒளிந்த தன்னைத் தேடி பீமன், அர்ஜுனன், கண்ணன் ஆகியோர் வருவதைக் கண்டான்; அச்சத்தில் உறைந்தான். தான் உயிர் பிழைக்க ஒரே வழி தனக்குத் தெரிந்த பிரம்மாஸ்திரத்தை ஏவி இம்மூவரையும் அழிப்பது ஒன்றே என்பதுணர்ந்தான். அருகில் இருந்த ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து அதில் மிகவும் ஆபத்தான பிரம்மாஸ்திரத்தை மந்திரம் சொல்லி ஆவாகனம் செய்து, அதனை பாண்டவர் மீது ஏவிவிட்டான். அவன் ஏவிய அந்த பிரம்மாஸ்திரம், பாண்டவர் வம்சத்தை ஒருவர் விடாமல் நாசம் செய்துவிடும் ஆற்றல் பெற்றது. எவராலும், அல்லது எதனாலும் தடுக்க முடியாத ஆயுதம் அந்த பிரம்மாஸ்திரம்.

    கொடியவன் அசுவத்தாமனின் கேடுகெட்ட எண்ணத்தை ஸ்ரீகிருஷ்ணன் உணர்ந்து கொண்டான். பிரம்மாஸ்திரத்தை எதிர்கொள்ள இன்னுமொரு பிரம்மாஸ்திரத்தை ஏவிவிடுவது ஒன்றே வழி என்று அர்ஜுனனை நோக்கி அவனிடமுள்ள பிரம்மாஸ்திரத்தை எடுத்து அவன் மீது ஏவ கண்ணன் ஆலோசனை சொன்னான். இந்த ஆபத்தான தருணத்தில் நாரத முனிவரும், வியாச பகவானும் அவர்கள் முன் தோன்றி உலகையே அழிக்கும் நாசகாரி ஆயுதங்களான இந்த பிரம்மாஸ்திரப் பிரயோகத்தை நிறுத்திவிடும்படி கேட்டுக் கொண்டனர். உலகைப் பற்றியோ, உயிர்களைப் பற்றியோ எந்தவித அக்கறையுமில்லாமல், சொந்த கோப தாப உணர்வுகளுக்கு அடிமைப்பட்டு உலகை அழிக்கும் பிரம்மாஸ்திரப் பிரயோகத்தை நிறுத்திவிடும்படி அவர்கள் உத்தரவிட்டனர்.

    நியாய தர்மங்களை உணர்ந்த அர்ஜுனன் உடனே தான் ஏவிய பிரம்மாஸ்திரத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டான். ஆனால் அதனை ஏவமட்டுமே தெரிந்த அசுவத்தாமனுக்கு அதைத் திரும்பப் பெறும் வழிமுறைகள் தெரியாத காரணத்தால், தான் ஏவிய அந்த அஸ்திரம் செய்யப்போகும் பேரழிவுகளை எண்ணி அஞ்சினான். பாண்டவர்களின் வாரிசுகள் அனைவரையும் கொன்று, கர்ப்பத்தில் இருந்த சிசுக்களைக் கூட விட்டு வைக்காமல் அழித்த கொடியவன் அசுவத்தாமனின் சூழ்ச்சியை உடைத்து ஸ்ரீகிருஷ்ணன் உத்தரையின் கர்ப்பத்தில் வளர்ந்து வந்த அபிமன்யுவின் மகன் மட்டும் அழியாமல் காப்பாற்றினான்.

    நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த முனிவர்கள் ஒன்றுகூடி அந்த கேடுகெட்ட அசுவத்தாமனை சினந்து கொண்டனர். கிருஷ்ணன் ஆவேசமடைந்து அவன் நெற்றியில் ஒளிர்ந்த அந்த மணியைப் பிடுங்கிக் கொண்டார். அசுவத்தாமனைப் பொறுத்தவரையில் அவன் உயிரை எடுப்பதும், நெற்றி மணியைப் பறிப்பதும் ஒன்றே என்பது தெரியும். வெற்றிக் களிப்பில் செய்யத் தகாத காரியங்களைச் செய்து வெறித் தனமாக நடந்து கொண்டு அசுவத்தாமன் இப்போது வெறுமையடைந்தான். தனித்து நின்றான். பராரியாய் உலகைச் சுற்றிவந்து வருந்தவேண்டிய சூழ்நிலையை அடைந்தான். அப்போது ஸ்ரீகிருஷ்ணர் சினந்து அவனை சபித்தார். துன்பங்களை மட்டுமே கண்டும், கேட்டும், அனுபவித்தும் உலகம் முழுவதும் பேய்போல அலைந்து திரியும் அவலநிலையை அவன் அடையவேண்டுமென்பது அவரது சாபம். ஆம்! இறப்பு என்பது இல்லாமல் உலகைச் சுற்றிக்கொண்டு அழிவையும் துன்பத்தையும் துயரத்தையுமே காணும் கேவலமான வாழ்க்கையை அடைந்தான். பிறரைத் துன்பத்தில் ஆழ்த்தும் படுபாதகங்களைச் செய்து மகிழ்ச்சியடைய நினைக்கும் மாந்தர்க்கெல்லாம் அசுவத்தாமன் வரலாறு ஒரு பாடமாக அமையும் என்பது திண்ணம்.

    Share
  • பாரதியாரின் இறுதிக் காலம்

    தஞ்சை வெ.கோபாலன்.

    Subramanya_Bharathi

    (மகாகவி பாரதியாரின் இளைய மகள் சகுந்தலா “பாரதி — என் தந்தை” எனும் நூலில் தரும் தகவல்களிலிருந்து திரட்டப்பட்டது.)

    பாரதியார் புதுச்சேரியிலிருந்து வெளியேறி கைதாகி கடலூர் சிறையில் சில நாட்கள் இருந்த பிறகு விடுதலையாகித் தன் மனைவியின் ஊரான கடையத்தில் போய் இருந்து வந்த நேரம். அவ்வூர் வாசம் பாரதிக்கு எந்தவிதத்திலும் ஒத்துப் போகவில்லை. அங்கு அவருக்கு இருந்த ஒரே நண்பரான நாராயண பிள்ளை என்பவரோடு அவருக்கு ஒரு மனவருத்தம் ஏற்பட்டுவிட்டது. அதன் பிறகு அந்த ஊரில் இருக்க அவருக்குப் பிடிக்கவில்லை. அப்போது பாரதியாரின் மைத்துனர் அப்பாத்துரை பாரதி இனி சென்னையில் வசிப்பதே நல்லது என்று அவரை சென்னை அனுப்ப வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார்.

    சிறையிலிருந்து விடுதலையாகும்போது இவருக்கு அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஒருக்கால் இவர் கடையத்தைவிட்டு வெளியேறி சென்னைக்குச் செல்வதை அரசு தடுத்தால் என்ன செய்வது? ஆனால் கடையத்தில் இருந்த காலத்தில் இவர் ஊரைவிட்டு வெளியேறி மதுரை, காரைக்குடி, கானாடுகாத்தான் போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று சில நாட்கள் தங்கி வந்திருக்கிறார். அதையெல்லாம் அரசாங்கம் தடைசெய்யவில்லை என்பதால், இப்போது சென்னைக்குச் செல்வதையும் அவர்கள் தடை செய்ய மாட்டார்கள் என்று நினைத்தார்கள். முதல் உலக யுத்தம் முடிந்த பின்னர் புதுச்சேரியில் வந்து தங்கியிருந்த சுதேசிகளையும் வெளியேற அனுமதித்து விட்டார்கள். ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த மகான் அரவிந்தரின் சகோதரரும், வீர சாவர்க்கரும்கூட தீவாந்தர தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டார்கள். இந்தச் சூழ்நிலையில் தானும் சென்னைக்குப் போவதில் எந்தத் தடையும் இருக்காது என்றுணர்ந்து பாரதியாரும் சென்னைக்குப் புறப்பட்டு விட்டார்.

    சென்னை செல்வதற்கு பாரதி புறப்பட்டபோது அவருடன் செல்லம்மாவும் மகள் சகுந்தலாவும் புறப்பட்டார்கள். கையில் பணம் இல்லாததால் ரயிலில் இவர்களுக்கு மூன்றாம் வகுப்புப் பயணத்துக்கான டிக்கெட்டுகள் வாங்கப்பட்டுவிட்டன. ரயில் பெட்டியில் கூட்டம் அதிகமாயிருந்தபடியால் ஒருவரோடொருவர் இடித்து மோதிக்கொண்டு, மரியாதையின்றி வசை பாடிக்கொண்டு வரும் கூட்டத்துக்கிடையில் தான் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்வது பாரதிக்கு அறவே பிடிக்கவில்லை.

    “அடடா! கையில் பணமில்லை என்பதால் உயர்ந்த மெத்தை தைத்த ரயில் பெட்டியில் பயணம் செய்ய முடியவில்லை. சரி! அதற்காக ஆடுமாடுகளைப் போல ஒரே வண்டியில் கூட்டமாக ஏறிக்கொண்டு, நிற்கக்கூட இடமின்றி ஒருவரையொருவர் வசைபாடிக்கொண்டு சண்டையிட வேண்டுமா? அமைதியாக ஒருவருக்கொருவர் இடம்விட்டு விலகியிருந்து, உதவி செய்து பயணம் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அட! புதுத்துணி, பட்டுடைகள் வாங்கத்தான் பணம் இல்லை, இருக்கிற துணியையாவது அழுக்கு இல்லாமல், நாற்றமடிக்காமல் தோய்த்து உடுத்தக் கூடாதா? என்ன இழிவு நிலை நம் பாரத தேசத்துக்கு!” என்று மனம் வருந்திக்கொண்டிருந்தார் பாரதியார். அந்தச் சூழ்நிலை அவருக்குத் தலைவலியை உண்டாக்கிவிட்டது.

    ரயில் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. அப்போது வெயிலும் கொளுத்திக் கொண்டிருந்தது. இவர்கள் பயணம் செய்த ரயில் வண்டி ஒரு நிலையம் தவறாமல் எங்கும் நின்று நின்று சென்றுகொண்டிருந்தது. அலுப்பு தரும் இந்தப் பயணம் சென்னை வரை எப்படி இருக்கும். செல்லம்மாள் மதுரை வந்ததும் விரைவாகச் செல்லும் ரயிலுக்கு மாறிவிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டாள். இவர்கள் ரயில் மதுரை நிலையத்துக்குள் நுழையும் அதே நேரத்தில் சென்னைக்குச் செல்லும் விரைவு ரயில் நிலையத்தைவிட்டுப் புறப்பட்டுவிட்டது. பெட்டி படுக்கைகளுடன் அதைப் பிடிக்க ஓடியும் பிடிக்க முடியாததால் பாரதியார் குடும்பம் மீண்டும் தங்கள் சுமைகளுடன் பழைய வண்டிக்கே வந்து சேர்ந்தது.

    அவசரத்தில் ரயில் பெட்டிக்குள் ஏறும்போது எங்கோ அடிபட்டு செல்லம்மாள் காலிலிருந்து ரத்தம் கசியத் தொடங்கியது. பயணக் களைப்பு, சூழ்நிலையின் வெறுப்பு, இவை பாரதிக்குக் கோபத்தை உண்டாக்கியது. கோபம் வந்து என்ன செய்வது? அல்லது யாரை நோவது? உடன் பயணம் செய்தவர்கள் இவர்கள் படும் துன்பங்களையும், பாரதியாரின் கவுரவமான பேச்சு, உடல் நிலை இவற்றைக் கவனித்து இவர்களுக்கு உட்கார இடம் கொடுத்தனர். இரவும் வந்துவிட்டது. பாரதி சற்று கண் அயர்ந்தார், செல்லம்மா மட்டும் உடைமைகளை கவனித்துக் கொண்டு விழித்துக்கொண்டிருந்தார்.

    அப்போது மதுரையிலிருந்து சென்னை செல்ல ‘மெயின் லைன்’ எனப்படும் தஞ்சாவூர், கும்பகோணம், மாயூரம் வழியாகத்தான் போக வேண்டும். அரியலூர் விருத்தாசலம் வழியான குறுக்குவழி அப்போது போடப்படவில்லை. அவர்கள் ரயில் பயணத்தில் வண்டி தஞ்சாவூருக்கு முன்னதாக ஒரு நிலையத்தில் நின்ற சமயம் அங்கு ஏழெட்டுப் பெண்களும், இரண்டு ஆண்களும் ஏராளமான சாமான்களுடன் பெட்டியில் ஏறினார்கள். அவர்களுள் ஒருவர் ஒரு பெஞ்சில் படுத்திருந்த பாரதியாரிடம் வந்து தன் கைத்தடியால் அவர் காலில் தட்டி “ஏய்! எழுந்திரு; உட்கார இடமில்லை, அதிலே படுக்கை என்ன?” என்று அதட்டினார்.

    பாரதியார் அவரைக் கண்விழித்துப் பார்த்தார். அவர் பேசிய தோரணை, தட்டி எழுப்பிய அலட்சியம், குரலில் இருந்த அதிகாரம் இவை பாரதியாருக்குக் கோபத்தை உண்டாக்கிவிட்டது. அவர் எழுந்து “தூ”வென்று அவர் முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டுத் திரும்பப் படுத்துக் கொண்டுவிட்டார். அந்த மனிதருக்கு அதிர்ச்சி, அதிர்ந்து போய் நின்றுவிட்டார். சிறிது அதிர்ந்து போய் நின்றுவிட்டுக் கூச்சல் போட்டு பெருங்குரலெடுத்துத் திட்டத் தொடங்கிவிட்டார். அவரோடு உடன் வந்த பெண்களும் என்ன பேசுகிறார்கள் என்பதே தெரியாதபடிக்கு ஏதோ பெரும் கலவரம் செய்யத் தொடங்கி விட்டார்கள். இத்தனைக்கும் பாரதியார் எந்த எதிர்ப்புமின்றி அவர் பாட்டுக்குப் படுத்துக் கொண்டிருந்தார். உடன் பயணித்த மற்ற பயணிகளுக்கு இவர் மீது மரியாதையும் அன்பும் ஏற்பட்டிருந்தது. ஆகவே மற்றவர் எவரும் புதிதாக வந்தவர்கள் செய்த அமளியில் பங்கேற்கவில்லை. அந்த நிலையில் அடுத்த ரயில் நிலையம் வந்துவிட்டது. பாரதியாரை அவமதித்த அந்த மனிதன் கீழே இறங்கிப் போய் ஒரு போலீஸ்காரரை அழைத்துக் கொண்டு வந்து பாரதியாரைக் காட்டி அவரைக் கைது செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அப்போது அந்த ரயிலின் ‘கார்டு’ (Guard) அங்கு வந்து சேர்ந்தார். அவர் பாரதியாரைப் பார்த்துவிட்டு அங்கு வந்த போலீஸ்காரரிடம் ஏதோ மெல்லச் சொன்னார், உடனே அவர்கள் அனைவரும் அங்கிருந்து போய்விட்டனர் (அந்த ரயில் அதிகாரி பாரதியாரை அடையாளம் கண்டுகொண்டு, அவர் மிகப் பிரபலமானவர், கவிஞர் அவரைத் தொந்தரவு செய்யாதீர்கள் என்று சொல்லி எல்லோரையும் கலைந்து போகச் சொல்லிவிட்டார்). போலீஸ்காரர் பாரதியாரை அழைத்துக்கொண்டு போய்விடுவார்களோ என்று பயந்து போயிருந்த செல்லம்மாளுக்கும், சகுந்தலாவுக்கும் மனதில் நிம்மதி பிறந்தது. இவர்கள் பயணம் மட்டும் தடைப்படாது இரவு முழுவதும் தொடர்ந்து நடந்தது.

    மறுநாள் விடியற்காலை ரயில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் வந்து நின்றது. அப்போது சென்னை சைதாப் பேட்டையில் ஆசிரியர் பயிற்சியில் இருந்த பாரதியாரின் தம்பி விஸ்வநாத ஐயர் வந்து இவர்களை சைதாப் பேட்டையில் இறங்கும்படியும், தன்னுடன் வந்துவிடும்படியும், வற்புறுத்தினார். தம்பியின் வற்புறுத்தலுக்கிணங்க இவர்கள் எழும்பூர் வரை டிக்கெட் வாங்கியிருந்தும் சைதாப் பேட்டையில் இறங்கிவிட்டனர்.

    சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விஸ்வநாத ஐயர் அப்போது படித்துக் கொண்டிருந்தார். அவருடன் அவரது தாய்மாமனும், அவர் தாயார் வள்ளியம்மாளும் வசித்து வந்தனர். பாரதியாரின் தந்தை சின்னச்சாமி ஐயருக்கு இந்த வள்ளியம்மாள் இளைய மனைவி. தன்னுடைய மூத்தாள் மகன் என்று வித்தியாசம் பார்க்காமல் இந்த வள்ளியம்மாள் பாரதியாரிடமும், அவர் மனைவி செல்லம்மா, மகள் சகுந்தலா ஆகியோரிடம் அன்போடு நடந்து கொண்டார். அந்த வள்ளியம்மாள் வேண்டிக்கொண்டதால் பாரதியார் தான் சமஸ்கிருத மொழியில் எழுதியிருந்த “தேஹிமுதம் தேஹி ஸ்ரீராதே ராதே” எனும் பாடலைப் பாடிக் காண்பித்தார். வள்ளியம்மாளுக்கு அளவற்ற மகிழ்ச்சி.

    இவர்கள் சில நாட்கள் சைதாப் பேட்டையில் தங்கியிருந்தார்கள். அப்போது பாரதியார் “சுதேசமித்திரன்” அலுவலகத்துக்குப் போய் ஆசிரியர் ஏ.ரங்கசாமி ஐயங்காரைச் சந்தித்தார். அவர், “பாரதி! இங்கே எப்போதும் உனக்கு ஒரு வேலை உண்டு. இப்போதே வேண்டுமானாலும் நீ பணிசெய்யத் தொடங்கலாம்” என்று சொல்லிவிட்டார். அங்கே அப்போதே பாரதியார் மீண்டும் “சுதேசமித்திரனில்” உதவி ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார். தொடர்ந்து பாரதி தினந்தோறும் காலையில் சைதாப் பேட்டையில் ரயில் ஏறி ஜார்ஜ் டவுனில் இறங்கி, எர்ரபாலு செட்டித் தெருவில் இருந்த ‘சுதேசமித்திரன்’ காரியாலயம் செல்லத் தொடங்கினார்.

    தினமும் இவ்வளவு தூரம் பயணம் செய்வதைக் குறைத்துக் கொள்வதற்காக டவுனில் தம்பு செட்டித் தெருவில் ஒரு வீட்டின் பகுதியில் மாதம் பதினைந்து ரூபாய் வாடகைக்குக் குடிபோனார். அந்த இடம் மிகச் சிறிய இடம், பாரதிக்குப் பிடிக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் சுரேந்திரநாத் ஆர்யா பாரதியாருக்கு உதவ முன்வந்தார். ஆர்யா முதலில் அதிகம் சிரமங்களைச் சந்தித்து, ஒருவேளை சோற்றுக்குக்கூடக் கையேந்தும் நிலைமையில் உடல்நலம் கெட்டு மருத்துவ மனையில் கிடந்து அவதியுற்றவர். ஒரு டேனிஷ் மிஷன் கிறிஸ்தவ பாதிரியார் அவரை மதமாற்றம் செய்து பாதிரியாராக ஆக்கி, அமெரிக்காவுக்கு அனுப்பி மீண்டும் சென்னை வந்தவர். அமெரிக்காவில் இருந்தபோது ஒரு சுவிஸ் மாதைத் திருமணம் செய்து கொண்டிருந்தார். இவர் மனைவியுடன் சென்னை வேப்பேரியில் ரண்டால்ஸ் சாலையில் ஒரு பங்களாவில் வசித்து வந்தார்.

    ஆர்யாவின் மனைவி பெயர் மார்த்தா. இந்திய பாணியில் உடை அணிவார். மார்த்தாவுக்கு தமிழ் தெரியாது, பாரதியாரின் மனைவி மகள் இவர்களுக்கு அவள் மொழி தெரியாது. இவர்கள் ஜாடைசெய்துதான் பேசிக் கொண்டார்கள். அந்த மார்த்தா இவர்களை மிகவும் அன்போடு கவனித்துக் கொண்டாள். வேறு வீடு கிடைக்கும் வரை வேப்பேரியில் அவர்களுடன் வசிக்க முடிவு செய்தனர் பாரதி குடும்பத்தினர். செல்லம்மாவின் ஆசாரத்துக்கு அந்த இடம் ஒத்துப் போகவில்லை. பிறகு குவளை கிருஷ்ணமாச்சாரியின் முயற்சியால் சென்னை திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவில் ஒரு வீட்டின் முன்பகுதியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அங்குக் குடிபெயர்ந்தார்கள். அந்த வீட்டில் இவர்கள் தவிர மேலும் மூன்று குடும்பங்கள் குடியிருந்தார்கள். இங்கு எல்லாக் குடித்தனக்காரர்களுமே அன்போடும் சண்டை சச்சரவு இல்லாமல் இருந்து வந்த நேரத்தில் தான் பாரதியை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானை தள்ளி சிலகாலம் உடல்நலம் கெட்டு பின்னர் உடல் தேறி வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது வயிற்றுக் கடுப்பு நோய் வந்து அதனால் அவர் அதே திருவல்லிக்கேணி இல்லத்தில் காலமானார். அப்போது அவருக்கு வயது 39. பாரதி அமரரான இடம் இப்போது அவரது நினைவு இல்லமாகத் திகழ்ந்து வருகிறது.

    Share
  • கர்மவீரர் காமராஜ்!

    –தஞ்சை வெ.கோபாலன்.

    பெருந்தலைவர் காமராஜ் பற்றி எத்தனை எழுதினாலும் மனம் முழுத் திருப்தி அடையவில்லை. மேலும் மேலும் அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கவே மனம் விரும்புகிறது. அவரைப் பற்றி நாம் என்ன சொல்கிறோம் என்பதுகூட அத்தனை முக்கியமில்லை. அவருடைய தாய் சிவகாமி அம்மையார் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்ப்போமா? “நான் ஒரு மாணிக்கத்தைப் பெற்றேன், இப்போ உலகத்தில் உள்ள எல்லா மாணிக்கங்களும் என்னைப் பார்க்க வர்றாங்க”. இப்படி அவர் சொன்ன செய்தியை சென்னையிலிருந்து வெளிவரும் வாராந்தரி ராணி எனும் பத்திரிகை வெளியிட்டது.

    இவரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் கூட தமிழ் மக்களுக்குத் தேவையில்லை. கைக்குழந்தை முதல் புலன்கள் அடங்கிய முதுபெருங் கிழவர் வரை இவர் பெருமையை அறிந்தவர்தாம். எனினும் சொல்லவேண்டிய செய்தியைச் சொன்னால்தானே நாம் அவரைப் பற்றி என்ன தெரிந்து வைத்திருக்கிறோம் என்பது தெரியும்.

    இவர் தனக்கென வாழாதவர்; பிறருக்காக மக்களோடு மக்களாய், ஏழைகளின் பிரதிநிதியாய் உயர்ந்த பீடத்தில் இருந்துகொண்டு அரியபல உதவிகளைச் செய்து கொடுத்தவர். தாய் நாட்டில் வறுமையை ஒழித்திட தன்னால் இயன்றதனைத்தையும் செய்துவிடத் துடித்தவர். சொத்து சுகம் எதுவுமின்றி, நேர்மையே முதலாய் வைத்து, சுயநலம் எனும் தீங்கை நீக்கி, துறவிபோல் வாழ்ந்தவர். தாய் தங்கை முதலானவர் இருந்தும், அவர்களோடு வாழ்ந்தால், அவர்களுக்கு ஏதோ உதவியை இவர் செய்துவிட்டார் என்று பிறர் பேச வாய்ப்பின்றி தனித்து வாழ்ந்த பெருந்தகை. எளிமையின் இருப்பிடம். பதவிக்குத் தேவையான பாதுகாப்புக் கருதி காவல்துறை வாகனம் முன்னால் சங்கொலி எழுப்பிக்கொண்டு சென்றதைப் பார்த்து, “இது என்ன செத்த பின்னல்ல சங்கூதுவாங்க, இப்போ எதுக்கு எனக்குச் சங்கு ஊதறீங்க” என்று பாமரத்தனமாய்ச் சொல்லி தனக்கு ஆடம்பரம் தேவையில்லை என்பதைப் புரியவைத்தவர்.

    படித்தவர்களால்தான் அரசியல் நுட்பமும், ஆட்சி முறையில் வல்லமையும் கொண்டு நிர்வாகம் நடத்த முடியுமா என்ன? இவரால் அரசு நிர்வாகத்தை நடத்த முடியுமா என்ற சந்தேக நிழல் சிலர் மனதில் ஊடாடுவதைக் கண்டு, தன்னால் எதுவும் முடியும் என்று துணிந்து நிர்வாகப் பொறுப்பை 1954இல் ஏற்றுக்கொண்டு சிறப்புற செயல்படுத்திக் காட்டிய செயல் வீரர். பொருளாதார அறிவும், பொது அறிவும், சட்டங்கள் மனிதனின் தேவைகளுக்காகத்தானே தவிர, சட்டங்களுக்கு உட்பட்டு மனிதனுடைய தேவைகளை மாற்றிக்கொள்வது பேதைமை என்பதை நிரூபித்துக் காட்டிய மேதை அவர்.

    தான் படிக்கவில்லை, தாய் நாட்டின் அடிமைத் தளையை உடைத்தெறிய வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டோம், இனி சுதந்திரம் பெற்ற தாய்த் திருநாட்டில் கல்வி அறிவு இல்லாத தலைமுறை இருக்கக்கூடாது என்பதில் தனித்த அக்கறை காட்டி இலவசக் கல்வி, மதிய உணவு, அதிக பள்ளிகள் என்று கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்த படிக்காத மேதை அவர். கல்வி கற்க வறுமை ஒரு தடைக்கல்லாக இருக்கக்கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டியவர். அதனால் தான் அவரைக் கர்மவீரர் என்று அடைமொழியிட்டு அழைக்க முடிகிறது.

    ஆண்டுகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பிறந்து கொண்டிருந்தாலும், நூற்றுப்பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த 1903 எனும் ஆண்டுக்கு மட்டும் தனிச் சிறப்பு உண்டு. அந்த ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் நாள்தான் அந்தத் தங்கத் தலைவர் பிறந்தார். பிறந்தவர் அனைவருமே தங்களை அப்படித்தான் அழைத்துக் கொள்வர் என்றாலும், அதற்காகச் சுவரொட்டிகள் அடித்து சுவரைக் கெடுக்காதவர். தன் பிறந்த நாள் என்பதற்காக ஆங்கில பாணியில் ‘கேக்’ வெட்டி தனது மாபெரும் குடும்பத்து உறுப்பினர்களுக்கெல்லாம் ஊட்டி உல்லாசம் அனுபவித்தவர் அல்ல அவர். பிறர் சொல்லித்தான் அவர் பிறந்த நாளை ஒவ்வோராண்டும் அவரே அறிந்து கொண்டார்.

    அவருடைய 16ஆம் அகவை, 1919ஆம் ஆண்டு ஆங்கிலப் பேரரசு ரவுலட் சட்டம் என்பதாக ஒரு அடக்குமுறைச் சட்டத்தை அறிமுகம் செய்து வைத்தது. இதனை எதிர்த்து காந்தியடிகள் போராட முடிவு செய்தபோதே, தமிழகத்துக் கருப்பு காந்தி என அறியப்பட்ட கர்மவீரரும் போராட்டக் களத்தில் குதித்து விட்டார். ஆம்! தனது 16ஆம் வயதில். அதே ஆண்டில் பஞ்சாபில் ஜாலியன்வாலாபாக் என்னுமிடத்தில் ஜெனரல் டயர் என்பான் செய்த படுகொலை மக்கள் உள்ளங்களை எரிமலையாக ஆக்கியது. இவ்விரு போராட்டங்களிலும் முன்னிலை வகித்தவர் பெருந்தலைவர்.

    இவருடைய அரசியல் பிரவேசம் இவரைத் தடம் மாறச் செய்துவிடுமோ என்று அஞ்சி இவரைத் திருவனந்தபுரத்தில் உறவினர் வியாபாரத் தலத்தில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். அக்னியை வெளியே தெரியாமல் காகிதத்தில் ஒளித்து வைத்தால் தெரியாமல் இருக்குமா? புயலைக் கூண்டுக்குள் அடைத்தால் அடைந்து கிடக்குமா? சுதந்திர தேவியின் பரிபூரண கடாட்சம் கிடைத்த பின் நம் தலைவரைக் கட்டித்தான் போட முடியுமா? தமிழக அரசியலில் இந்தியச் சுதந்திரப் போரை நடத்துவதற்காகப் பராசக்தி படைத்த இந்தப் புனிதர் அரசியல் வானில் பிரகாசிக்கத் தொடங்கினார்.

    விடிந்தால் புதுப்புதுப் போராட்டங்கள். ஒவ்வொரு நாளும் போராட்டம். ஆண்டுக்கு ஆண்டு போராட்டம். 1923இல் நாகபுரி நகரில் கொடிப் போராட்டம். நம் இந்தியக் கொடியை ஏந்தி நடமாடக்கூடாது எனும் அநியாயச் சட்டத்தை எதிர்த்துப் போர். கள் குடித்து மதிமயங்கிக் கிடக்கும் ஏழை உழைப்பாளர்களின் வாழ்வை உயர்த்திடக் கள்ளுக்கடை முன்பு மறியல் செய்து போராட்டம். ஜெனரல் நீல் என்பான் சிப்பாய் கலகத்தின் போது இந்தியச் சிப்பாய்களைப் பறவைகளைச் சுடுவது போல சுட்டுக் கொன்ற கொடியவனுக்குச் சென்னை நகரின் மத்தியில் ஒரு சிலை. பொறுக்க முடியுமா இந்த அநியாயத்தை. அந்தச் சிலையை அகற்ற ஒரு போராட்டம். இந்தியர்களுக்கு அள்ளிக் கொடுக்கவென்று அளவெடுக்க வந்த சைமன் கமிஷன் முன்பாக “சைமனே திரும்பிப் போ” என்றொரு போராட்டம். இங்கிலாந்திலிருந்து கொண்டு வந்த உப்பை அதிக விலைக்கு விற்பதற்காக, இந்தியக் கடற்கரையில் எடுக்கப்படும் நாட்டு உப்புக்கும் வரிவிதித்த ஆங்கிலேயர்களின் சதியை முறியடிக்க காந்தியடிகளார் 1930இல் மேற்கொண்ட தண்டி யாத்திரையின் எதிரொலியாகத் தமிழகத்தில் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டம். 1932இல் சட்ட மறுப்புப் போராட்டம். இப்படி வாழ்க்கையே போராட்டக் களமாக மாறிவிட்டதே.

    எல்லோருக்கும் குழந்தைப் பருவம், மாணவப் பருவம், இளமைப் பருவம், நடுவயதில் நிதிதேடி உழைக்கும் பருவம், வயது மூத்ததும் பிறருக்கு வழிகாட்டி அறிவூட்டும் பருவம், எல்லாம் முடிந்தபின் சந்தடியின்றி வம்பு தும்பு இல்லாமல் தானுண்டு தன் வாழ்வுண்டு என்றிருக்கும் வானப்பிரஸ்த ஆசிரமம், தேவைப்பட்டால் துறவு என்று நம் பெரியோர் வகுத்த பாதையில், இளமை தாண்டியதுமே ஊருக்கு உழைத்திடல் யோகம் என்று வாழ்ந்தவர் தலைவர். அதிலும் கடைசி ஆசிரம வாழ்க்கையை மேற்கொண்டவர் இப்புவியில் வேறு யாரேனும் உண்டா? ஐயகோ! இவரைப் பார்த்துத்தான் ஏதோவொரு திரைப்பட நடிகையோடு இணைத்துப் பேசினர், நாக்கில் நரம்பில்லாதோர். தனக்கென பத்து ரூபாய்கூட வைத்துக் கொள்ளாத இவரை, தாய்க்கு நூறு ரூபாய் மட்டுமே அனுப்பி வந்த இவரைப் பார்த்து ஐதராபாத் வங்கியில் கோடி கோடியாய் பணத்தைக் கொட்டி வைத்திருப்பவர் என்று நாக்கூசாமல் சொன்னார்களே, தாங்குமா இந்த நாடு? இரும்பினால் ஆன கோட்டை மீது காற்றில் வரும் குப்பைக் கூளங்கள் மோதுவதைப் போன்ற இந்த வசைகள் என்ன செய்துவிடும்? காலம் பதில் சொல்லி விட்டதே, இவர் உலகம் போற்றும் உத்தமர் என்று, பிறகு யாருடைய சான்றிதழ் வேண்டும் இவரைப் போற்றி வணங்கிட.

    ஆலமரம் போல ஓங்கி வளர்ந்த ஒரு தேசியக் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர். இன்று நேற்று மட்டுமா? இல்லை. 1942 தொடங்கி அவரே ஒப்பற்ற தலைவர். பதவி கேட்டு பரிதவித்தாரா? ஆதரவுக்கு ஆள் தேடிச் சென்றாரா? இல்லையே. குருநாதர் தீரர் சத்தியமூர்த்தி சொன்னார், உன்னையே கட்சித் தலைமைக்கு நிறுத்துவேன், வென்று காட்டுவேன் என்று, அதன்படி அவரல்லவா சாதித்துக் காட்டினார். பதவி ஆசை என்பதில் மனம் ஒட்டாமல், விளாம்பழத்து ஓடு போலத் தனித்து தியாக வாழ்வல்லவா வாழ்ந்து காட்டினார். 1942 ஆகஸ்ட்டில் பம்பாய் காங்கிரஸ் “வெள்ளையனை வெளியேறச்” சொன்னது. தலைவர் தன் பங்கை சாங்கோ பாங்கமாகச் செய்து முடித்துத் தானே வலிய காவல்துறை அதிகாரிகளை அழைத்துக் கைதான செய்தியை என் முதல் கட்டுரையில் கொடுத்து விட்டேன்.

    சில செய்திகளை ஊரறியச் சொல்லக்கூடாது என்பர். ஏன் சொல்லக்கூடாது, அது உண்மை என்றால். தமிழ் நாட்டில் ராஜாஜிக்கும் காமராஜருக்கும் பனிப்போர் இருந்தது என்று காலம் காலமாய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இவ்விருவரின் கருத்து வேற்றுமைகளை இன்றைய எடைக்கல்லைக் கொண்டு அளந்து பார்க்கிறார்கள். இவ்விருவருக்கிடையே இறுகிக்கிடந்த பாசப்பிணைப்பு எத்தகையது என்பதை என் முதல் கட்டுரை சொல்லும். இன்னொன்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதைச் சொன்னவர்கள் தேசிய இயக்கத்துக்கு எதிர் வரிசையில் இருந்தவர்கள். ராஜாஜி பிராமண ஆதரவாளர் என்றும் காமராஜர் பிராமண எதிரி என்றும். இது உண்மைக்கு நேர் மாறான பச்சைப் பொய் என்பதைப் பல நேரங்களில் பலரும் சொல்லி வந்திருக்கின்றனர். ராஜாஜி எந்தக் காலத்திலும் தன்னை ஒரு பிராமணனாகவும், பிராமணர்களுக்கு உதவுபவராகவும் காட்டிக் கொண்டதில்லை. காமராஜர் பிராமண எதிரியாகவும் இருந்ததில்லை. எனினும் ஆதாயம் நாடி இப்படியொரு அபாண்டம் அவர் மீது திணிக்கப்பட்டது. அது உண்மையாயின் அவர் பிராமணரான தீரர் சத்தியமூர்த்தியைத் தன் குருவாக எப்படி ஏற்றுக் கொண்டிருக்க முடியும்? ஆர். வெங்கட்டராமனைத் தன் நம்பிக்கைக்குரிய உதவியாளராக எப்படி வைத்துக் கொண்டிருக்க முடியும்? இன்னும் எண்ணற்ற பல சான்றுகளை அள்ளிக் கொட்ட முடியும், தேவையில்லை, தீ சுடும் என்பதற்கு ஆதாரம் தேவையா என்ன? மற்றவர்களுடைய அரிப்புக்காக அவரை, பச்சைத் தமிழன், கருப்புத் தமிழன், சிவப்புத் தமிழன் என்றெல்லாம் கொண்டாடியிருக்கலாமே தவிர, அவர் எந்தக் காலத்திலும் பச்சையாவோ, கருப்பாகவே, சிவப்பாகவே தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளவில்லை. மாறாக நாடு, மக்கள், நல்வாழ்வு என்றுதான் நாளெல்லாம் சிந்தித்து வந்திருக்கிறார் என்பதை உணர்ந்தாலே போதும், அவரைப் புரிந்து கொண்டதாகும்.

    அவர் சாதனைகளுக்கு முடிவு கிடையாது. எனினும் நிறைவாக ஒன்றைச் சொல்லி முடித்தால்தான் அவரைப் பற்றி சொன்ன மனச் சாந்தி உண்டாகும். அதுதான் “காமராஜ் திட்டம்”. எல்லோரும் சுதந்திர இந்தியாவில் பதவி பதவி என்று அலைந்து கொண்டிருந்த நேரத்தில், அதிலும் காங்கிரஸ் கட்சி நாடு முழுவதற்கும் ஆளும் கட்சியாக இருந்த போழ்து ஆற்றோடு போகிற தண்ணீரை, ஐயா குடி, அம்மா குடி என்று பங்கு போட்டுக்கொண்டு அனுபவித்த காலத்தில் இவர் தன்னிடம் இருந்த பதவியையும் விட்டுவிட்டுக் கட்சிப் பணிக்குப் போகிறேன், மற்றவர்களும் அப்படிப் போகட்டும் என்று சொல்லி பதவி வேட்டைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தார். பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு திகைத்துப் போனார். இப்படியொரு எண்ணம் உருவாகி, அதனை அமல்படுத்தத் தன்னையே முதல் ஆளாகவும் கொண்டு வந்து நிறுத்திய பெருந்தலைவரை நாவாரப் புகழ்ந்தார். விளைவு, தலைவர் உட்பட வெகு சிலரே பதவி விலகினர், ஆண்டாண்டு காலமாக மனித மனத்தில் வேரூன்றிக்கிடக்கும் பதவி மோகம் அத்தனை சீக்கிரம் விட்டு விலகிவிடுமா என்ன? எனினும் காமராஜ் திட்டம் என்பது வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட அரியதொரு தியாகத் திட்டம் என்பதில் ஐயமில்லை.

    முடிவில் இன்னொரு முக்கிய செய்தியையும் சொல்லித்தான் தீரவேண்டும். பள்ளிக்கல்வி அதிகம் இல்லாதவர் பெருந்தலைவர் என்று சொல்வதுண்டு. ஆனால் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு உண்மை என்ன தெரியுமா? தலைவரின் ஆங்கில அறிவு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தக் கூடியது. ஒரேயொரு மாதிரி மட்டும் இங்கு சொல்கிறேன். லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்த போது இலங்கைக்குச் சென்று அவர்களோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டு திரும்பியிருந்தார். சென்னையில் ராஜ்பவனில் நிருபர்கள் அவரைச் சந்தித்துக் கேள்விகள் கேட்டனர். ஒருவர் கேட்டார், “இப்போது நீங்கள் செய்துகொண்டிருக்கிற ஒப்பந்தத்தை தொடர்ந்து பதவிக்கு வரும் ஆட்சியாளர்கள் மதித்து நடப்பார்களா?” என்றார். அப்போது அருகில் இருந்த பெருந்தலைவர் ஆங்கிலத்தில் சொன்னார்:

    “Don’t go and print any such suggestions in the paper. This is an agreement signed by two Democratic Governments. Just as any Democratic Government in India would honour this agreement, the successive Governments in Ceylon will also honour this agreement. That is the principle involved in it.”

    பெருந்தலைவர், ஏழைப்பங்காளன் என்றெல்லாம் அழைக்கப்பட்ட அந்தத் தலைவரைப் பற்றி பத்திரிகையாளர் “சோ” எழுதிய வரிகளைச் சொல்லி இந்தக் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

    “விளம்பரத்தைத் துரத்திக்கொண்டு ஓடும் அரசியல் வாதிகளிடையே, விளம்பரம் தன்னைத் தேடி வந்தபோதும், அதைத் துரத்தி அடிக்கும் அரசியல்வாதியாகக் காமராஜர் வாழ்ந்தார்”.

    வாழ்க பெருந்தலைவர் காமராஜ் புகழ்!

    Share
  • காலத்துக்குக் காலம் உணர்வுகள் மாறுபடுமா?

    தஞ்சை வெ.கோபாலன்

                           11825115_1648443785371404_7891288417354296886_n

    முன்பு சென்னை மாகாணத்தைப் பிரித்துத் தெலுங்கு மொழி பேசுவோர் அதிகமுள்ள பகுதிகளை ஆந்திரப் பிரதேசம் என்று தனி மானிலமாகப் பிரிக்க வேண்டுமெங்கிற கோரிக்கையை வைத்து பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதமிருந்தார். அப்போதைய ஆந்திரத் தலைவர்கள் டி.பிரகாசம், புலுசு சாம்பமூர்த்தி போன்ற பெரியவர்கள் அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வந்ததோடு பொட்டி ஸ்ரீராமுலுவின் உண்ணாவிரதத்துக்குத் தூண்டி அவர் இறப்பதையும் பார்த்திருந்தனர். உடனே தெலுங்கு மக்கள் வசிக்கும் பகுதிகள் தீப்பற்றி எரிந்தன. ஆந்திரம் கேட்டதோடு “மதறாஸ் மனதே” என்கிற கோஷமும் வானைப் பிளந்தது. தமிழகத்திலிருந்து வடக்கே செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. தமிழர்கள் தாக்கப்பட்டனர். விளைவு, ஜவஹர்லால் நேரு மனமிரங்கி தனி ஆந்திரம் அமைக்க ஒப்புக்கொண்டார். இது வரலாறு. ஒரு தனிமனிதனின் உண்ணாவிரதம், அவர் இறப்பு, அதனைத் தொடர்ந்து நடந்த வன்முறை வெறியாட்டங்கள், மத்திய அரசு இறங்கி வந்து கோரிக்கையை அங்கீகரித்தது இவை அனைத்தையும் நம் காலத்தில் பார்த்த நிகழ்ச்சிகள்.

    ஆந்திரம் பிரிந்து போய் தனி மானிலம் ஆன பின்பு மலபார் உள்ளிட்ட பகுதிகளைக் கொண்ட கேரளம் உருவானதும், தமிழ் பேசும் எஞ்சிய சென்னை மாகாண பகுதிகளுக்குத் தமிழ் நாடு என்று பெயரிட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து சங்கரலிங்க நாடார் என்பவர் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். அப்போது பெயர் மாற்றம் நிகழவில்லையாயினும் சி.என்.அண்ணாதுரை முதலமைச்சரான பின்பு தமிழ் நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.

    1937இல் ராஜாஜி சென்னை மாகாண முதலமைச்சரான போது சேலம் ஜில்லா முழுவதும் முழு மது ஒழிப்பு அமுல் படுத்தப்பட்டது. அது வெற்றிகரமாக செயல்பட்டதைத் தொடர்ந்து 1947க்குப் பிறகு சென்னை மாகாணம் முழுவதும் மதுவிலக்கு அமுல் படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டது. 1947 ஆகஸ்ட் 15இல் நடந்த சுதந்திர தின பேரணிகளில் பெரிதும் மக்கள் கவனத்தைக் கவர்ந்த பகுதி, குடி ஒழிந்ததைக் கொண்டாடும் வகையில், சிலர் குடிகாரர்கள் போல் நடந்து கொண்டு, கையில் வடைக்கு பதில் தவக்களையைக் கடிப்பதுபோல் பாவனை செய்து, மனைவியை அடிக்கும் குடிகாரனை உருவக்கப்படுத்தி வேடமிட்டும் வந்தவர்களை மக்கள் பார்த்து மகிழ்ந்து கைதட்டி ஆர்ப்பரித்த காட்சிகளைக் கண்டிருக்கிறேன். மதுவிலக்கு மிகத் திறமையாகக் கையாளப்பட்டுதான் வந்தது. மதுவிலக்குப் போலீஸ் துறை தனித்து இயங்கியது. அது திறமையோடு இயங்கியதையும் பார்த்திருக்கிறேன்.

    திருட்டு குற்றம்தான்; கொலை செய்வதும் குற்றம்தான்; இந்தியன் தண்டனை சட்டம் பல்வேறு செயல்களைக் குற்றம் என்று சொல்கிறது. அப்படி சட்டம் சொன்னாலும், அந்தக் குற்றங்கள் ஆங்காங்கே சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன அல்லவா? அதற்காக குற்றம் நடக்கிறது என்பதற்காகச் சட்டத்தை நீக்கவில்லையே. மதுவிலக்கு அமுலில் இருந்தபோதும், சில இடங்களில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதும், திருட்டுத் தனமாக கள் இறக்கிக் குடிப்பதும் இருந்துகொண்டுதான் இருந்தன. அப்படிப்பட்டோரைப் பிடிக்கக் காவல்துறையும் இருந்தது. குடித்துவிட்டு வருபவன், குடிக்கக் கையில் சாராயம் எடுத்துச் செல்வது, சாராயம் திருட்டுத் தனமாகக் காய்ச்சுவது இவற்றைப் போலீஸ் தடுக்கத்தான் செய்தது. அப்படியும் குற்றங்கள் நடந்து கொண்டு இருந்தது. அதற்காக இந்த சட்டம் வேண்டாம், மக்கள் தாராளமாகக் குடிக்கட்டும், இந்த விற்பனையைத் தனியார் வசம் விட்டுவிட்டால் லாபம் அனைத்தும் தனியாருக்குப் போய்விடும் என்று அரசாங்கமே சாராய வியாபாரம் செய்யத் தனிப் பிரிவு ஏற்படுத்தி, அதன் மூலம் ஏராளமான ‘டாஸ்மாக்’ கடைகளைத் திறந்து, மக்களை, குடிகாரர்களை மட்டுமல்ல, மாணவர்களை, சிறுவர்களை, இளம் பெண்களை, வேலைக்குப் போகும் படித்த பெண்களை, இளைஞர்களை, முதியவர்களை, பொறுப்பற்ற மனிதர்களைக் குடிகாரர்களாக ஆக்கியப் பெருமை யாரைச் சாரும்? எண்ணிப் பார்ப்போம்.

    ராஜாஜி ஒரு நாள் விடியற்காலையில் காரில் புறப்பட்டு எங்கோ செல்கிறார். கடற்கரைசாலைக்குச் சென்று அங்கு நடை பயிற்சி செய்வார் என்று நினைத்தார்கள். ஆனால் அவரோ முக்கியமான நபர் ஒருவரைச் சந்தித்து, அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு, ஐயா! ஒரு தலைமுறை மற்ந்து போயிருக்கிற குடிப்பழக்கத்தை மீண்டும் கடைகளைத் திறந்து மக்களைக் கெடுத்து விடாதீர்கள் என்று கெஞ்சினார் என்கிறார்கள். ஆனால் அவரோ, அவர் சொற்களைக் கேட்காததோடு, அவர் வேறு விஷயமாய்த் தன்னைப் பார்த்தார் என்று விஷயத்தைத் திசைதிருப்பி விட்டுவிட்டார். அன்று பிடித்தது சனியன் தமிழ் நாட்டுக்கு. எங்கும் குடிகாரர்கள், சாலையில் எதிர்ப்படும் பத்துப் பேரில் எட்டு பேர் குடித்துவிட்டு வருகிறவர்கள். கண்கள் சிவந்து, உடை கசங்கி, நிலை தடுமாறி, வாய் குழறி, உடை மட்டும் நாகரிகமாக வரும் எத்தனை பேரை தினமும் பார்க்கிறோம். எத்தனை படிக்காத பெண்மணிகள் குடிகார கணவன் மார்களிடம் அடிபட்டு, உதைபட்டு, தான் சம்பாதிக்கும் காசையும் அவன் குடிப்பதற்காக இழந்துவிட்டு, தான் வேலை செய்யும் வீடுகளில் வந்து புலம்புவதைக் காண முடிகிறது. வெள்ளிக்கிழமை மாலையானால் போதும், குடிகாரக் கடைகளின் வாசலில்தான் எத்தனை விதமான ஆசாமிகள். படித்தவர்கள், காரில் வருபவர்கள், உழைப்பாளிகள், பிறருக்கு வாங்கிக் கொண்டு போக வந்திருக்கும் சிறுவர்கள், தாங்களே குடிப்பதற்காக நிற்கும் பையங்கள், பெண்கள், உழைக்கும் பெண்கள் இப்படி எத்தனை விதம்.

    ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் தினமும் குடித்துவிட்டு கண்களை மூடிய வண்ணம் தன் இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்பும் காட்சியைப் பார்த்து வருகிறேன். அடிக்கடி அவர் யார் மீதாவது வண்டியை மோதிவிட்டு பஞ்சாயத்து பண்ணிக் கொண்டிருப்பதையும் பார்த்து வருந்தியிருக்கிறேன். ஒரு முறை அவர் மூக்குக்கண்ணாடி தூர விழுந்து கிடந்ததை எடுத்து அவரிடம் கொடுத்த போது மூடிய கண்களோடு, என்னைக் கன்னத்தைத் தொட்டு நன்றி சொன்னதையும் மூக்கைப் பொத்திக் கொண்டு ஏற்றுக் கொண்டேன். இதுதான் இன்றைய தமிழ் நாடு.

    இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல, ஜூலை 31 அன்று கன்யாகுமரிக்கு அருகில் டெலிபோன் டவர் ஒன்றின் மீது ஏறி மதுவிலக்கைக் கொண்டு வரச்சொல்லி போராடிய காந்தியவாதி யொருவர் இறந்து போன கொடுமையையும் ஊடகங்கள் இடைவிடாது ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். பொட்டி ஸ்ரீராமுலு இறப்பு நடந்த போது இருந்த எதிர் விளைவுகள் போலவே, சங்கரலிங்க நாடாரின் இறப்புக்கு இருந்த அனுதாபம் போலவே இந்த காந்தியவாதியின் இறப்புக்கு ஏன் ஏற்படவில்லை என்று நெடு நேரம் யோசித்ததில் புரிந்தது, நம்மில் பலர் மதுவிலக்கு வேண்டும் என்பதிலோ, அல்லது இந்தக் கோரிக்கைக்காக ஒரு நபர் தன் உயிரை இழந்தது குறித்தோ சற்றும் கவலைப்படவில்லை என்பது புரிந்தது. சின்ன அண்ணாமலை ஒரு பழமொழி சொல்வார்: “ஏற்கனவே பையனுக்கு தமிழே தள்ளாபுள்ளா, இதிலே ஆங்கிலம் தலைகீழ் பாடமாம்” என்பார். குடிப்பழக்கத்தை ஒழித்திட நம்மவர்கள் உண்மையிலேயே அக்கறை கொண்டிருக்கிறார்களா என்பது தெரியவில்லை. இல்லாவிட்டால் ஒரு காந்தியவாதி மிக உயர்மான டவரில் ஏறி உயிர்விட்ட பின்பும் சற்றும் அயர்ந்து விடாமல் தங்கள் வயிற்றுப்பாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கும் நம்மவர்களைப் பார்த்து வருந்துவதா? துக்கப்படுவதா? போராடத் துடிப்பதா? என்ன செய்வது? அதை முடிவு செய்யவாவது மனம் தெளிவாக இருக்க வேண்டுமல்லவா?

    Share
  • பரிகாரம்

    — தஞ்சை வெ.கோபாலன்.

    அந்த கிராமத்து அக்கிரகாரத்தில் வெளியிடங்களுக்குக் குடிபெயர்ந்தவர்கள் போக மிச்சமுள்ள ஏழெட்டு வீடுகளில் மட்டும் இன்னமும் அங்கு நிலமோ, வேலையோ உள்ளவர்கள் மட்டும் மிச்சமிருந்தார்கள். அதே பழைய, தழைந்த ஓட்டு வீடுகள், முற்றம், தாழ்வாரம், கூடம் பின்புறம் கிணறு என்று பழைய பாணியில் அமைந்த வீடுகள். அதில் ஹெட்மாஸ்டர் வீடு என்றழைக்கப்பட்ட வீட்டில் அந்த காலத்தில் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்த ஒருவரின் வாரிசுகள் இன்னமும் இருந்தனர். அதில் கடைசி தலைமுறையச் சேர்ந்த பெரியவர் ஒருவர் தன் வீட்டு வாசல் திண்ணையில் அமர்ந்திருந்தார்.

    அங்கிருந்த சிலருக்கு அவர் வாயைக் கிளறினால் மிகப் பழைய காலத்தில் அந்த கிராமத்தில் இருந்தவர்கள், அவர்களது கதைகள் இவைகளை அவர் அவிழ்த்து விடுவார், பொழுது போவது தெரியாது. ஆகையால் அவர் ஓய்வாக வாயில் திண்ணையில் அமர்ந்திருக்கும் போது அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் அவரிடம் சென்று அவரோடு திண்ணையில் அமர்ந்துகொண்டு சாவகாசமாகப் பேச்சைத் தொடங்குவார்கள். அவரும் இவர்களது ஆசையைத் தீர்க்கவென்று பழைய நிகழ்ச்சிகளை அசைபோட்டுச் சொல்லிக் கொண்டு வருவார். அவை கற்பனையா, நடந்தவையா என்பதெல்லாம் தெரியாது. ஆனால் அவர் அந்த வரலாறுகளைச் சொல்லும் பாங்கு அத்தனை சுவையாகவும், கண்ணெதிரே நடப்பது போலவும் இருக்கும்.

    அந்த கிராமத்து தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக இருக்கும் ராகவன் என்பார் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அவர் கேட்டார், “என்ன மாமா? ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருக்கீங்க போல இருக்கே. என்ன விஷயம்?” என்றார்.

    அதற்கு அந்தப் பெரியவர், “அதெல்லாம் ஒண்ணுமில்லைடா! நேற்று பம்பாயிலிருந்து என் சொந்தக்காரர் ஒருத்தர் வந்திருந்தார் இல்லையா?” என்று தொடங்கவும்.

    “அப்படியா! தெரியாதே, யார் அவர், உங்களுக்கு என்ன உறவு, என்ன விசேஷமா இங்கே வந்தார்” என்றெல்லாம் கேள்வி எழுப்பினார் ராகவன். கூட உட்கார்ந்திருந்த மேலும் இருவரும் இந்த உரையாடலில் ஆர்வம் கொண்டவர்களாகத் தெரிந்தனர்.

    பெரியவர் சொன்னார், “அவரும் நம்ம ஊரைச் சேர்ந்தவர்தான். மேற்கே பஜனை மடம் இருக்கிறது அல்லவா? அந்த இடமும், அதையொட்டி உள்ள வீடும் இவர்களுடையது. அதை இன்னமும் அவர்கள் யாருக்கும் விற்கவில்லை. அந்த இடம் எப்படி இருக்கு, என்ன செய்யலாம் என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் வந்திருந்தார்” என்றார்.

    “அப்படியா, நீங்க சொல்றதைப் பார்த்தா, இங்கே ரொம்ப வசதியா வாழ்ந்தவங்கன்னு தெரியுது. வீடும், சொந்தமா பஜனை மடமும் கட்டி வச்சிருக்காங்கன்னா நிச்சயமா வசதி படைச்சவங்கதான், சரி, என்ன முடிவு பண்ணினார்?” என்றார் ராகவன்.

    பெரியவர் சொன்னார், “அவருக்கு இருக்கும் சொத்தில் இது ஒண்ணும் கணக்கே இல்லை. அந்த மடத்தையும், அந்த இடிந்து பாழடைந்து கிடக்கும் அவரது பழைய வீட்டையும் இங்கே ஏதாவது நல்ல காரியத்துக்கு தேவைன்னா கொடுத்துவிட தயாரா இருக்கிறார். அவர் ஒண்ணும் சாமானிய மனிதர் இல்லை. அவரோட அப்பா 1930ல ராஜாஜி தலைமையில் திருச்சிலேருந்து வேதாரண்யத்துக்கு பாதயாத்திரையா போய் அங்கே உப்பு எடுத்து சத்தியாக்கிரகம் செய்தாங்க இல்லையா, அதில ஒரு தொண்டரா போயி, புளிய மிளாறுல அடிபட்டு ஜெயிலுக்குப் போனவர், தியாகி. ஒரு சமயம் ராஜாஜிகூட இங்க பக்கத்துல எங்கேயோ கூட்டம்னு வந்தப்போ அவர் வீட்டுக்கு வந்துட்டு போயிருக்கார், அப்படின்னு சொல்லுவாங்க.” என்றார் பெரியவர்.

    “ஓ! அத்தனை பெரியவங்களா, அப்படின்னா, அவங்க குடும்பத்தைப் பற்றியும், அவரைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க, கேட்போம். நம்ம ஊரும் சாதாரண ஊரு இல்லை, தேச சுதந்திரத்துக்காக ஒரு தியாகியை உருவாக்கின ஊருங்கறது பெருமைக்குரிய விஷயம் இல்லையா?” என்றார் ராகவன்.

    “சரி, சொல்றேன், கேளுங்க. நேத்து வந்தவரோடு அப்பா தியாகி குருமூர்த்தின்னு பேரு. அவரை எல்லோரும் ஆச்சா ஆச்சான்னுதான் கூப்பிடுவாங்க. ஆளு, நல்லா வெள்ளை வெளேர்னு வெள்ளைக்காரன் போல இருப்பாரு. அவரைத் தொட்டா அந்த இடம் சிவப்பா போயிடுமாம், அத்தனை கலர். அந்தக் காலத்திலே அவர் கதர்தான் போடுவாராம். அவரைப் பார்க்க அடிக்கடி மாயவரத்திலேர்ந்து நாராயணசாமி நாயுடுங்கற தியாகியும் வருவாரம். இவுங்க இரண்டு பேருமாத்தான் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமா கலந்துகிட்டவங்க.”

    “இந்த ஆச்சாவுக்கு இரண்டு பெண்களும், ஒரு பையனும் இருந்தாங்க. பெண்களைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்து விடணும்னு ஆசைப்பட்டாரு. பையன் மட்டும் மாயவரத்துல படிச்சுட்டு பம்பாய்க்கு வேலைக்குப் போய்விட்டான். அவந்தான் நேத்து இங்கே வந்தது. “

    “இந்த ஆச்சாவோடு பெரிய பொண்ணு வீட்டோட இங்கேயே இருந்தா. அவ வளர்ந்திருந்தாளே தவிர ஒரு குழந்தை மாதிரி, சின்ன குழந்தைகளோடு விளையாடுவா. பின்னால தெருவில இருக்கறவங்களோடு ஆடு மாடு இதையெல்லாம் அக்கறையா கவனிச்சுக்குவாளாம். தெருகோடில ஒரு சாவடியும், அதையொட்டி மஞ்சவாய்க்காலும் ஓடுதில்லையா, அங்கேதான் அவ சின்னச் சின்ன பெண்களைக் கூட்டி வச்சு விளையாடிக் கொண்டிருப்பாளாம்.”

    “அவளுக்கும் வயசாயிடுச்சின்னு, அவர் அவளுக்கு ஒரு மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தார். அப்போது இங்கே பக்கத்துல இருக்கற நாகங்குடி கிராமத்துல ஜில்லா போர்டு பள்ளிக்கூடத்துல வாத்தியாரா ஒரு பையனும், அவன் அம்மாவும் நம்ம ஊருல வந்து குடியேறினாங்க. அந்த பையனும் நல்லவனா இருந்ததால, அவன் அம்மாகிட்ட பேசி மெதுவா பெரிய பொண்ணை அந்தப் பையனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சுட்டார் அவர். வீட்டோட மாப்பிள்ளை என்கிற மாதிரி ஊரோட மாப்பிள்ளை. ஆனா அந்தப் பொண்ணு, மத்த பெண்களைப் போல இல்லாம, சின்னக் குழந்தை போல, குழந்தைகளையெல்லாம் கூட்டி வச்சு, அவங்களுக்கு சாதம் போடறது, மஞ்சவாய்க்காலுக்குக் கூட்டிகிட்டு போயி குளிப்பாட்டி விடறது, அதுல இருக்கற மீன்களுக்கு ஆகாரம் போடறது, இப்படி குழந்தைத் தனமாகவே இருந்தாளாம். அந்த மாப்பிள்ளைப் பையனும் ரொம்ப சாதுவானதால, சின்ன கிராமம்தானே, அவ அப்படித்தான் இருப்பாங்கற நினைப்புல அவளைப் பத்தி அதிகமா கவலைப் படறதில்லை. அவன் அம்மாவுக்கும் மருமகளா இல்லாம வீட்டுல அவ ஒரு குழந்தை மாதிரி இருந்து, சீக்கிரமே இறந்தும் போயிட்டா”

    “அடப் பாவமே! அப்புறம் என்ன ஆச்சு” என்றார் ராகவன் ஆர்வத்துடன்.

    “அந்த வாத்தியார் பையன் முதல்ல ரொம்ப வருத்தப்பட்டான், அவன் அம்மாவும் அவனை வேற கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி வற்புறுத்தியும் அவன் செஞ்சுக்கல. அந்த சமயத்துல இங்கே பக்கத்துல இருக்கே மங்கலஞ்சேரிங்கற ஊர், அந்த ஊரைச் சேர்ந்த மகமது யூசுப் மறைக்காயர் இந்த வாத்தியாருக்கு ரொம்ப சிநேகம். அவர் அடிக்கடி இங்கே வந்து வாத்தியாரோட இருப்பார். வாத்தியாரோட அம்மாவை அவரும் அம்மா, அம்மான்னுதான் கூப்பிடுவார். அதே அன்போடத்தான் பழகிவந்தார்.”

    “அவர் நல்ல செல்வந்தர் குடும்பம். அவர்களுக்கு மலேயாவில் கோலாலம்பூரிலும், இந்தோசைனாவில சைகோனிலும் வியாபாரம் இருந்தது. நம்ம வாத்தியாருக்கு இங்கிலீஷ், ஃப்ரெஞ்சு பாஷை இதோட கைரேகை சாஸ்திரமும் நல்ல தெரியும். அதனால, பெண்டாட்டியை இழந்துட்டு இந்த எலிமெண்டரி ஸ்கூல் வாத்தியார் வேலைல இருக்கறதைவிட, வா எங்க அப்பாவோட வியாபாரத்துல எங்கேயாவது வேலைக்குப் போயிடலாம். நானும் அங்கே வரேன் என்று சொல்லி வாத்தியாரை முதலில் கோலாலம்பூருக்கும், பிறகு அங்கேயிருந்து சைகோனுக்கும் கூட்டிக் கொண்டு போய்விட்டார்.”

    “போன இடத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு. சைகோனில் ஒரு தெருவே இவுங்களுக்குச் சொந்தமா இருந்தது. எல்லா வகை வியாபாரத்திலும் இவுங்க இருந்ததால, நம்ம வாத்தியாரையும் ஒரு இடத்தில இருக்க வச்சுட்டாங்க. அவருக்குத் தனியா தங்க இடம், அவரே சாப்பாடு செஞ்சு சாப்பிடறமாதிரி ஏற்பாடு. இதைத் தவிர ஓய்வு நேரத்துல கைரேகை சாஸ்திரம் பார்க்க அனேகம் பேர் வருவாங்க, அதிலயும் வாத்தியாருக்கு நல்ல வருமானம்”

    “கொஞ்ச நாள்ல, ஊர்ல நிலம், வீடுன்னு வாங்கி போட்டு அம்மாவை அங்கே இருக்க வச்சுட்டு, இவர் மாத்திரம் அங்கே இருந்தாரு. நண்பர் மகமது யூசுபும் அவுங்க அப்பாவும் இவரை அவுங்க வீட்டுப் பிள்ளை மாதிரி கவனிச்சுக் கிட்டாங்க. அப்போல்லாம் வெளிநாட்டுக்குப் போறது ஒண்ணும் கஷ்டம் இல்ல. இங்கேயிருந்து நாகப்பட்டணம் போயிட்டா, கப்பல் டிக்கட் வாங்கி படகுல போயி, கொஞ்சம் எட்டத்துல கடலில் நிற்கிற கப்பல்ல ஏறி, எங்கே போகணுமோ, அங்கே போகலாம். அப்படித்தான் அந்தக் காலத்துல தென்னாப்பிரிக்கா, பிஜித் தீவு, லட்சத் தீவுகள் இப்படி பல ஊர்களுக்கும் நம்ம ஆளுங்க போயிருக்காங்க. இப்போ போல பாஸ்போர்ட், விசா அப்படியெல்லாம் எதுவும் இல்ல இல்லையா?”

    “ஒரு தடவை அந்த வாத்தியார் லீவுல ஊருக்குத் திரும்பி வந்திருந்தார். அப்போ மாயவரத்துல அவரோட சித்தப்பா ஒருத்தர், நல்ல வைதீகர் அவருக்கு சஷ்டியப்த பூர்த்தின்னு இவுங்களை அழைச்சிருந்தார். லீவுல வந்திருந்த வாத்தியாரும் அம்மாவை அழைச்சிகிட்டு மாயவரம் போய் அவுங்க வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்கற சமயம், உள்ளேயிருந்து அந்த வைதீகர் உரத்த குரலில், அங்கேயே நில்லு” என்று குரல் கொடுத்தார்.

    “இது என்ன கொடுமை. விசேஷத்துக்கு அழைச்சுட்டு, வெளில நிக்கச் சொல்றது அவமானமில்லையோ?” என்றார் ராகவன்.

    “ஆமாம் ஆமாம். அவமானம்தான். ஆனா, அவரோ சித்தப்பா, ஆசாரசீலர், போதாதற்கு ஒரு வைதீகர். இவரோ கப்பல் ஏறி வெளிநாடு போயி வந்தவர். அப்படி கப்பல் ஏறி கடலைக் கடந்து போனா, அவுங்க தீண்டத் தகாதவங்க ஆயிடுவாங்க, அவுங்க சாஸ்திரப்படி. அதனால, தீட்டுப் பட்டவரை உள்ளே விட அவர் விரும்பவில்லை. அம்மாவை மட்டும் உள்ளே வரச் சொல்லிவிட்டு, அந்த வைதீகர் வாசலுக்கு வந்து வாத்தியாரிடம், நீ கடல் கடந்து போயிட்டு வந்ததால, தீட்டுப் பட்டுப் போயிட்டே. அதனால, நீ ராமேஸ்வரம் போய், கடல் ஸ்நானம் செஞ்சுட்டு, ராமநாத சுவாமியை தரிசித்துவிட்டு பிரசாதத்தோட இங்கே வா, இன்னிக்கு விசேஷம் முடிஞ்சாலும் இன்னும் பதினைந்து நாளுக்கு தொடர்ந்து ஜபம் எல்லாம் நடக்கும். அது முடியறதுக்குள்ள நீ வந்துடு. போ! இப்பவே கிளம்பி ராம்ஸ்வரம் போய் ஸ்நானம் செஞ்சுட்டு வந்துடுன்னு சொல்லி அனுப்பிட்டார்.”

    “பாவம் வாத்தியார், சரின்னு சொல்லிட்டு நம்ம ஊருக்கே திரும்பி வந்தவர் விஷயத்தை யார்கிட்டயும் சொல்லாம, நேரே மஞ்சவாய்க்காலுக்குப் போய் ஒரு சொம்புல வாய்க்கால் ஜலத்தைப் புடிச்சுட்டு வந்து வீட்ல வச்சுகிட்டார். நாலைந்து நாள் நம்ம ஊர்லேயே இருந்துட்டு வாரக் கடைசில ஒருநாள் காலைல கிளம்பி மாயவரம் போயி, அங்கே ‘லாகடத்துல’ ஒரு கடைல மஞ்சவாய்க்கால்ல புடிச்ச தண்ணி இருக்கற சொம்புக்கு ஈயப் பத்து வச்சு சீல் பண்ணி கையில எடுத்துகிட்டு, நெற்றில விபூதிப் பட்டைப் போட்டுக்கொண்டு சித்தப்பா வீட்டுக்குப் போனார்.”

    “பையன் சமத்தா ராமேஸ்வரம் போய்ட்டு, நெற்றியில் திருநீற்றுப் பட்டை, கையில சீல் வைத்த ராமேஸ்வரம் புனிதநீர் இவற்றோடு வந்ததைப் பார்த்து மகிழ்ந்த வைதீகர் இவருக்கு ராஜ உபசாரம் செய்து விருந்து வைத்து, வாத்தியாரோடு அம்மாவிடம், அவளுடைய மகனுடைய பெருமைகளைச் சொல்லி மகிழ்ந்து போனாராம். இந்த விவரங்களையெலாம் நேற்று வந்த பம்பாய்க்காரர் தன் அக்காள் வீட்டுக்காரர் செய்த வேலையைச் சொல்லிச் சொல்லிச் சிரித்துவிட்டு, அந்தக் காலத்தில் எப்படியெல்லாம் மூட நம்பிக்கையிலே வாழ்ந்திருக்காங்க, இப்போ, உலகம் எப்படிச் சுருங்கிப் போச்சு, தினம் ஆயிரக் கணக்குல வெளிநாடு போறாங்க வறாங்க, அவுங்கள்ளாம் ராமேஸ்வரம் போயா ஸ்நானம் பண்ணி புனிதநீரா கொண்டு வராங்க என்றார்”

    பெரியவர் கதை சொல்லி முடிக்கும் வரை ராகவன் உள்ளிட்ட எல்லோரும் சிரித்துக் கொண்டே கதைகேட்ட சுவாரசியத்தோடு வீடுகளுக்குப் புறப்பட்டனர். பெரியவரும் திண்ணையைக் காலி செய்துகொண்டு அவர் வேலையைப் பார்க்க உள்ளே போய்விட்டார்.

    http://www.bharathipayilagam.blogspot.in/2015/07/blog-post_26.html

    பின் குறிப்பு

    1910ஆம் ஆண்டில் சுதேசமித்திரனில் அதன் நிறுவனர் ஜி.சுப்பிரமணிய ஐயர் “ஆசாரதிருத்த வியாசங்கள்” எனும் தலைப்பில் பல்வேறு பழைய பழக்க வழக்கங்கள் காலத்துக்கேற்ப மாற்றப்பட வேண்டுமென்று கட்டுரைகள் எழுதினார். அவற்றை வரிசைப்படுத்தி நான் என்னுடைய www.bharathipayilagam.blogspot.in வலைப்பூவில் வெளியிட்டுக்கொண்டு வருகிறேன். அதில் இரண்டாவது பகுதியை இத்துடன் தங்கள் பார்வைக்காக இணைத்துள்ளேன். அதில் இந்துக்கள் கடல்கடந்து போனால் சாத்திர விரோதம் என்ற கருத்து இருந்தது என்பதையும், அந்தக் கருத்தைச் சில பண்டிதர்கள் ஆதரித்தார்கள் என்பதையும் இதில் காணலாம். நான் ‘பரிகாரம்’ எனும் தலைப்பில் அனுப்பியுள்ள கதையின் சாரமும் அதுதான் என்பதற்காக, ஜி.சுப்பிரமணிய ஐயரின் கட்டுரையின் தொடுப்பை அளித்திருக்கிறேன் நன்றி.

    தங்களன்புள்ள,
    தஞ்சை வெ.கோபாலன்

    Share
  • “இனி நினைந்திரக்கமாகின்று!”

    — தஞ்சை வெ.கோபாலன்.

    தஞ்சை என்றதும், பசுமையான நெல்வயல்கள், அந்த வயல்களை ஈரமாக்கி விளைச்சலை கொள்ளை கொள்ளையாகத் தரும் காவிரி நதியும்தான் முதலில் நம் எண்ணத்தில் வரும். ஆடியில் காற்றடித்தால், காவிரியில் தண்ணீர் வரும் என்பர் அந்த நாளில். “ஆடியிலே காத்தடிச்சா, ஐப்பசியில் மழை வரும்” என்றொரு பாடலும் உண்டு. ‘அக்கா’ குருவிகளின் ‘அக்கோ’ எனும் சோக ஒலி சோலைகளிலும், தோப்பு, துரவுகளிலும் எதிரொலிக்கும். காவிரி வறண்டு கிடக்கும் காலங்களில் ஆற்றுப் படுகைகளில் தெருக்கூத்து விடிய விடிய நடைபெறும். நிலவொளி இருக்கும் நாட்களில் கிராமங்களில் மின்சாரம் வராத பழைய நாட்களில் (சுதந்திரத்துக்கு முன்பு வரை) ஆற்று மணலில் நெடுநேரம் அமர்ந்து பேசுவர், சிறுவர்கள் ‘சடுகுடு’ (இப்போதைய பெயர் கபடி) ஆடிக் கொண்டிருப்பர்.

    பல கிராமங்களுக்கு சுதந்திரத்துக்குப் பிறகுதான் மின்சாரம் கிடைத்தது. புதிய கம்பங்கள் நட்டு, கம்பி இழுத்து வீடுகளுக்கு மின்சாரம் கொடுத்தபோது அரிக்கன் விளக்கும், சிம்னி விளக்கும் எரிந்த வீடுகளில் மின்சார பல்புகள் வெளிச்சத்தை உமிழும் அதிசயத்தை தங்கள் வீட்டில் மின்சாரம் இல்லாத சிறுவர்கள் வேடிக்கைப் பார்க்க வருவார்கள்.

    உள்ளடங்கிய கிராமங்களில் அஞ்சல் அலுவலகங்கள் இருந்தாலும், அந்த ஊர்களுக்கு வந்து சேரவேண்டிய தபால்களை அருகிலுள்ள பெரிய ஊரிலிருந்து ‘ரன்னர்’ (Runner) எனும் அஞ்சல் ஊழியர், சீல் வைத்த அஞ்சல் பையைத் தோளில் சுமந்து கொண்டு கையில் சலங்கை கட்டிய ஒரு கைத்தடியோடு ஓடிவருவதைப் பார்க்கவே அழகாக இருக்கும். அவர் நடந்து வரக்கூடாது, ஓடிவர வேண்டும், அதனால்தான் அவருக்கு ரன்னர் என்று பெயர். ரன்னர் ஓடிவரும்போது கேட்கும் சலங்கை ஒலியைக் கேட்டதும் எழுந்து அஞ்சல் அலுவலகம் போய் தங்களுக்கு ஏதேனும் கடிதம் இருக்கிறதா என்று பார்ப்பவர்களும் உண்டு. இந்த காட்சிகளை கல்கியின் “அலை ஓசை” நாவலின் முதல் பகுதிகளில் பார்க்கலாம்.

    கிராமங்களில் கிராம தேவதைகளுக்குக் கோடையில் காப்புக் கட்டுதல் நடைபெறும். அப்போதெல்லாம் கிராமக் கோயில்களின் முன்பு தீமிதி, கரகம் போன்றவைகளும், மண்ணெண்ணையில் எரியும் திரிவிளக்கு வெளிச்சத்தில் ஜவ்வு மிட்டாய் வியாபாரமும், பயாஸ்கோப்புப் பெட்டியும் கோலாகலம்தான். ஊரின் மேற்கே ஒரு பெருமாள் கோயில், கிழக்கே ஒரு சிவன் கோயில், வடக்கே ஆற்றங்கரையோரம் ஒரு மாரியம்மன் அல்லது காளியம்மன் அல்லது ஒரு ஐயனார் கோயில் இப்படி எங்கு திரும்பினாலும் ஆலய வழிபாடுகள். தேர் திருவிழா என்றால் அக்கம் பக்கத்து கிராமத்தாரின் படையெடுப்பு. வசதி படைத்தோர் வெயில் நேரத்தில் திருவிழா காண வந்த மக்களுக்கு நீர்மோர், பானகம் விநியோகம் ஒரு பக்கம். அடடா! அந்த நாளைய தஞ்சாவூர் கிராம வாழ்க்கை சொர்க்க வாழ்க்கைதான்.

    பள்ளிக்கூட மாணவர்களுக்கு விடுமுறை நாட்கள் முழுவதுமே கொண்டாட்டம்தான். ஆற்றில் தண்ணீர் இருந்தால் இவர்கள் குதித்து, நீராடும் பாங்கில் ஆறு இரண்டுபடும். கோடையில் ஆற்றில் நீர் இல்லாத காலங்களில் இருக்கவே இருக்கிறது மாரியம்மன் கோயில் குளம், சிவன்கோயில் குளம், பெருமாள் புஷ்கரணி, வயல்வெளிகளுக் கிடையில் உள்ள குட்டைகள் இங்கு எங்கெல்லாம் தண்ணீர் கிடைக்கிறதோ அங்கெல்லாம் கொண்டாட்டம் பரவிவிடும்.

    குருகுலம் இருந்த காலத்தில் நாம் வாழ்ந்திருக்கவில்லை. பள்ளிக்கூடங்கள் தொழிற்கூடங்கள் போல காலையில் தொடங்கி உணவு இடைவேளைக்கு மணியடித்துப் பின் மறுபடி கூடி மாலை நான்கு மணிக்கு அவிழ்த்து விட்டால், பிறகு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒட்டு ஏது உறவு ஏது? அப்போதெல்லாம் ஞாயிற்றுக்கிழமை மற்ற விடுமுறை நாட்கள் என்றால், வீடுகளில் பழைய சோறு அல்லது நீராகாரம் முடித்துவிட்டு தலைமை ஆசிரியர் வீட்டுக்குப் போய் விடும் மாணவர்களைப் பார்க்கலாம். மிகப் பெரிய தோட்டமும், அருகில் அவர் வீடும் சோலை போல காட்சியளிக்கும். வீட்டுத் தோட்டத்தில் காய்கறிகள் பயிரடப்பட்டு காய்களும் காய்த்துக் குலுங்கும். பெரும்பாலும் அப்போதெல்லாம் உள்ளூர்காரர்களே பள்ளிக்கூடங்களில் பணியில் இருந்தார்கள். அவர்கள் வசதி படைத்தவர்களாகவும், தோட்டம் துரவுகளோடு வாழ்ந்து மாணவர்களைப் பயிற்றுவிப்பதில் ஆர்வமுடையவர்களாக இருந்தனர்.

    ஆசிரியரின் மனைவி சொன்ன காய்கறிகளை பதமாகப் பார்த்துப் பறித்து அவருக்குக் கொடுத்துவிட்டு, காய்கறி பாத்திகளுக்குத் தண்ணீர் பாய்ச்சி, களையெடுத்து முடித்ததும் அழைப்பு வரும். அனைவருக்கும் அவர்கள் வீட்டில் காலை எளிய உணவு அல்லது கெட்டித் தயிர் கலந்த பழைய சாதம், காய்ந்த நாரத்தங்காய் ஊறுகாய் ஆகியவைகள் ஏதேனும் அனைவருக்கும் தரப்படும். அவர்கள் வீட்டு மாட்டை அருகிலுள்ள குளத்துக்கு ஓட்டிச் சென்று குளிப்பாட்டி மாட்டையும் கன்றையும் வீட்டுக்கு அழைத்து வந்து, நெற்றியில் மஞ்சள் குங்குமம் பூசி அதற்கு புல்லையும் அள்ளிப்போட்டு அன்போடு உபசரிக்கும் வழக்கமும் இருந்தது.

    பிறகு ஆசிரியர் கணக்கு அல்லது ஆங்கிலம் போதிப்பார். பதினோரு மணிக்கு அனைவரும் வீடு நோக்கி ஓடிவிடுவர். அங்கு குளித்து முடித்து பகல் உணவு உண்டபின், வீட்டினுள் விளையாட்டுகள். மாலையானதும் மீண்டும் தெருவில் விளையாட்டு. இருட்டியதும் அரிக்கன் விளக்கை ஏற்றிவைத்து பாடங்களைப் படிக்க வற்புறுத்துவதால் சிறிது நேரம் படிப்பதாக பாவனை செய்தபின் இரவு உணவை முடித்து நிலவில் விளையாட்டு, இருளாக இருந்தால், யார் வீட்டுத் திண்ணையிலாவது அமர்ந்து அரட்டை, பாட்டு, நடிப்பு இப்படி. அதிலும் பண்டிகை காலங்கள் என்றால் எங்காவது ஒரு வீட்டுத் திண்ணையில் நாடகமோ, பாட்டுக் கச்சேரியோ அரங்கேறிக் கொண்டிருக்கும். “நாம் இருவர்” படத்தில் வரும் பாரதியார் பாடல்கள் பெரும்பாலும் அனைவருக்கும் மனப்பாடம் ஆகியிருக்கும்.

    எல்லா வீடுகளும் இரவு ஒன்பது மணியானால் ஓய்ந்து விடும். அவரவர்கள் சாப்பாடு முடிந்து படுத்து விடுவர். ரேடியோ, டி.வி. போன்ற பொழுதுபோக்குகள் ஏது? பெண்கள் சிலர் வீட்டினுள் சிம்னி விளக்கு வெளிச்சத்தில் தாயம் விளையாடுவது உண்டு. பையன்கள் ஒரு ஜமக்காளம் ஒரு தலையணையை எடுத்து வீட்டுக்கு வெளியே திண்ணையில் போட்டுவிட்டு போய்விடுவார்கள். சில நாட்கள் ஐந்து மைல் தொலைவிலுள்ள பக்கத்து டவுனுக்கு இரண்டாம் காட்சி சினிமா பார்க்கப் போய்விட்டு இரவு மூன்று மணிக்கு வந்து படுப்பார்கள். யார் வீட்டுத் திண்ணையிலும் இவர்கள் படுத்துக் கொள்ளலாம், யாரும் கேள்வி கேட்பாரில்லை.

    ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே’ என்ற திரைப்படப் பாடல் இப்போது நெஞ்சிலே ஓடுகிறது. மேலே சொன்னவை அனைத்தும் வரிக்கு வரி, சொல்லுக்குச் சொல் நடந்தவை, அந்த நாள் இனித்தது. கவலை என்பது என்னவென்று தெரியாத பருவம். இப்போது போல நெருக்கடிக்கு மத்தியில் மூட்டைக்குள் கட்டப்பட்ட தானியம் போல அடைந்து கிடக்கும் வழக்கம் இல்லை. வானத்தில் சிறகு விரித்து முடிந்த மட்டும், மேலே, மேலே பறந்து களித்த நாட்கள்.

    malgudi daysஊர் எல்லையில் பெரிய குளம். அது குளமா ஏரியா? இரண்டுக்கும் இடைப்பட்ட பெரிய நீர்த்தேக்கம். அதன் ஒரு புறம் பெரிய மாந்தோப்பு. கோடை விடுமுறை காலம் பார்த்து அந்த மரங்களில் மாங்காய்கள், அடடா, அதில்தான் எத்தனை வகைகள், ஒட்டு, கிளிமூக்கு, துவர்ப்புக்காய், புளிப்பு, கற்பூராதி இப்படி பலதரப்பட்ட மாங்காய்கள் மரங்களில் கிளை தெரியாது, இலைகள் தெரியாது, மாங்காய்கள் தான் தெரியும். தோட்டத்துக்குக் காவல் உண்டு. காவல்காரன் நுழைவு வாயிலுக்கு அருகில் ஒரு குடிசை போட்டுக்கொண்டு இருப்பான். குளக்கரை பின் பக்கம் இருக்கும், மற்ற மூன்று பக்கங்களிலும் உயர்ந்த முள்வேலி, உள்ளே நுழைய முடியாது. ஊர் சுற்றிவரும் பிள்ளைகளில் பலரும் அரை டிராயர் பேர்வழிகள். சிலர் மட்டும் முழங்காலுக்குக் கீழ் வரை ஒரு வேட்டி. குளத்தின் இந்தக் கரையில் மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும், அதில் ஒரு எருமை மாட்டை ஓட்டிக்கொண்டு போய் குளத்தில் இறக்கி அதன் மீது ஒருவன் ஏறி உட்கார்ந்து விடுவான். வேட்டி கட்டியவனின் வேட்டி உருவப்பட்டு அவனிடம் கொடுக்கப்படும். அவன் குளத்தில் மாட்டின் மீதே போய் தோட்டத்துப் பக்கம் மெதுவாம ஓசையின்றி இறங்கி, கைக்கு எட்டும் உயரத்தில் உள்ள பலவகை மாங்காய்களைப் பறித்து அந்த வேட்டியில் மூட்டை கட்டிக்கொண்டு, திரும்ப வந்து மாட்டின் முதுகில் அந்த சுமையை வைத்துத் தானும் உட்கார்ந்து திரும்புவான். அவன் திரும்பி வரும்வரை ஒரே திகில்தான். காவல்காரனிடம் மாட்டிக்கொண்டால் என்ன செய்வது? நல்ல காலம் மாட்டுவதில்லை. அப்படி காவல்காரன் துரத்தி வந்தாலும் ஓடிவந்து மாட்டின்மீது ஏறிக்கொண்டு எமதர்ம ராஜன் போல இந்தக் கரை வந்துவிடுவான்.

    சில சமயங்களில் அப்படி மாங்காய் திருடிய பையன்களைத் தெரிந்து கொண்டு அவர்கள் வீட்டில் வத்தி வைத்து விடுவார்கள். அப்புறம் அவன் வீட்டில் திமிலோகம் தான். அடிவாங்கி, தோப்புக்கரணம் போட்டு, தோட்ட உரிமையாளர் பட்டாமணியாரிடம் சென்று மன்னிப்பு கேட்டுவிட்டு வந்தால்தான் சோறு கிடைக்கும். அதிலும் ஒரு ‘கிக்’ இருக்கத்தான் செய்தது. சில ஆசிரியர்கள் தங்கள் தோட்டத்தில் கொய்யா, மா மாரம் போன்றவற்றில் ஒட்டு போடுவதைக் கற்றுத் தருவார்கள். ஒரு வகை மாமரக் கிளையை நன்கு சீவி, அதோடு, வேறொரு மரக்கிளையை ஒட்டு சேர்த்து இணைத்து துணியால் கட்டி வைத்து அதில் தினம் தன்ணீர் ஊற்றிவர அது பிடித்துக் கொண்டு வளரும். அதில் காய்க்கும் மாங்காய் ஒட்டு மாங்காய் எனப்படும். அதன் சுவையே சுவைதான்.

    எட்டாம் வகுப்பு வரையில் தான் அந்த ஊரில் படிக்க முடியும். அதற்குத்தான் ஒரேயொரு பள்ளி. ஆங்கிலேயர்களை மகிழ்ச்சியடைய வைக்கவென்றோ என்னவோ, அந்தப் பள்ளிகளுக்கு ஆங்கிலோ வெர்னாகுலர் ஹையர் எலிமெண்டரி பள்ளி என்று பெயர். ஒன்பதாம் வகுப்புக்கு ஐந்தாறு மைலுக்கு அப்பாலுள்ள டவுனுக்குத்தான் போகவேண்டும். அது ஒரு தனி அனுபவம். திடீரென்று ஒரு நாள் தலைமை ஆசிரியர் மாணவர்களையெல்லாம் அழைத்து விளையாட்டு மைதானத்தில் நிறுத்தி, நம்ம நாடு வருகிற ஆகஸ்ட் 15இல் சுதந்திரம் அடையப்போவுது. அதை நாம் நம்ம பள்ளியிலே உத்சாகமாகக் கொண்டாடணும் என்று அறிவித்த காட்சிகள் நினைவுக்கு வருகிறது.

    போதும் இந்தக் கிராம வாழ்க்கை அனுபவத்தை அசைபோட்டுப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்துவிட்டு, டவுனுக்குப் போன அந்த அனுபவத்தை மறந்தே விடலாம். கிராம வாழ்க்கை அன்று சொர்க்கம். இன்று நினைத்தாலும் மனதுக்கு இதமாக இருக்கிறது. புறநானூற்றில் “தொடித்தலை விழுத்தண்டூன்றினார்” எனும் பெயரில் எழுதப்பட்ட ஒரு பாடல் உண்டு. “இனி நினைந்திரக்கமாகின்று….” எனத் தொடங்கும் அந்தப் பாடலில், வயது முதிர்ந்த கிழவர் ஒருவர், உடல் நடுக்கமடைந்து, கண் பார்வை மங்கி, தடியூன்றி நடக்கும் பருவத்தில் தன்னுடைய இளமைக் காலத்து சாகசங்களை நினைத்துப் பார்த்துப் பெருமூச்சுவிடும் பாடல் அது. அதைப் போலத்தான் இப்போதும் “இனி நினைந்திரக்கமாகின்று” என்று பெருமூச்சு விடும் ‘பெரிசுகள்’ என்னைப்போல ஏராளமாக உண்டு.

    படம் உதவி: www.oldindianphotos.in

    Share
  • கர்மவீரர் காமராஜர்

    தஞ்சை வெ.கோபாலன்

    kamarajr13

    ஒவ்வோராண்டும் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் பிறந்த நாளை மறவாமல் இருக்கும்படி, இறைவன் என்னையும் அதே நாள், அதே மாதத்தில் பிறக்க வைத்துவிட்டான். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பலர் இருந்தும், ஒரு தனித்துவம் மிக்கத் தலைவராக மிளிர்ந்தவர் காமராஜர்.

    நான் 1952இல் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலத்திலிருந்து கர்மவீரர் காமராஜரைப் பற்றி தெரிந்து வைத்திருந்தேன். 1952ஆம் ஆண்டு நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சிக்குச் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காமல் போய்விட்டது. அப்போதெல்லாம் காங்கிரசில் ராஜாஜி கோஷ்டியென்றும் காமராஜ் கோஷ்டியென்றும் இரு பிரிவாகச் சொல்வார்கள். ஆனால் வெளிப்பார்வைக்கு அப்படி எதுவும் வெளிவராமல் ஒன்றுபட்ட கட்சியாகத்தான் காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. ஆந்திரப்பிரதேசம், கர்நாடகத்தில் சில பகுதிகள், கேரளத்தின் மலபார் ஆகியவை உள்ளடங்கியதுதான் சென்னை மாகாணம். அப்போது ஆந்திரப் பகுதியிலிருந்து அதிகமான கம்யூனிஸ்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்துக்கு வந்திருந்தார்கள்; காமராஜர் டெல்லி நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

    அப்போது காங்கிரசைவிட எதிர்கட்சியினர் மெஜாரிடி பலம் பெற்றிருந்த காரணத்தால் காங்கிரஸ் அரசு அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. தமிழ்நாடு காங்கிரசில் சிலர், குறிப்பாக சி.சுப்பிரமனியம், பொள்ளாச்சி மகாலிங்கம் போன்றோர் ராஜாஜியை முதலமைச்சராகக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர். முன்பே சொன்னது போல காங்கிரசில் ராஜாஜி கோஷ்டி, காமராஜ் கோஷ்டி என்று இரு பிரிவுகள் இருந்ததால் ராஜாஜி முதல்வராக வருவதை காமராஜ் அவர்கள் விரும்புவாரா என்ற பேச்சும் இருந்தது. அந்த நிலையில் திரு சி.சுப்பிரமணியமும், பொள்ளாச்சி நா.மகாலிங்கமும் பிரதமர் நேருவைச் சந்தித்து இதுகுறித்து அவருடைய கருத்தை அறிய முற்பட்டனர். ராஜாஜி முதல்வராக வருவதற்கு காமராஜரின் கருத்தைக் கேட்டீர்களா என்று நேரு கேட்டார். அவருடைய சம்மதத்துடன் தான் தாங்கள் வந்திருப்பதாகத் தெரிவித்தனர், பிறகு ராஜாஜி சென்னை மாகாண சட்டமன்ற காங்கிரஸ் கூட்டத்தில் முதல்வராக முன்மொழியப்பட்டார். முன்மொழிந்தவர் திரு காமராஜர் அவர்கள். இதுதான் அரசியல் நாகரிகம். இன்றைய அரசியலில் கோஷ்டிகள் குறித்துப் பேசுவோர் இதுபோன்ற தலைவர்களின் கண்ணியத்தை வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும்.

    பெருந்தலைவர் காமராஜர் குறித்து அனைவருமே ஒருமித்த குரலில் சொல்வது அவர் “கல்விக் கண்ணைத் திறந்தவர்” என்பதுதான். அது முழுவதும் சரி; ஆனால் அது மட்டுமே அவர் பெருமைக்குக் காரணமல்ல, பல்வேறு பிற செயல்களும் அவரது தலைமைப் பண்புக்கும், மனிதாபிமானத்துக்கும், உயர்ந்த குணாதிசயங்களுக்கும் காரணமாக இருந்திருக்கின்றன. அவைகளை ஒருசில தலைப்புகளில் அடக்க வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். அவை, அவருடைய ராஜ தந்திரம், சட்டத்தை மதித்தல், எதிர்க்கருத்துடையவர்களாக இருந்தபோதும் மரியாதை அளிக்கும் பண்பாடு, காலத்தைப் பொன்போலக் கருதுதல், முகத்துக்கு நேராக புகழ்ச்சி சொல்வோரை உடனடியாக கண்டித்து உட்காரவைக்கும் குணம், பேச்சில் நாகரிகம், ஜனநாயகப் பண்புகள், இப்படி பல விஷயங்களிலும் அவர் தனது தலைமைப் பண்புக்ளைக் வெளிக் காட்டியிருக்கிறார். அவற்றை, அதே வரிசையில் இந்த கட்டுரையில் காட்டவேண்டுமென்பது எனது அவா!

    1942 ஆகஸ்ட் 8ஆம் தேதி பம்பாயில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு வெளியேறு என ஒரு தீர்மானம் நிறைவேறியது. அடுத்த சில மணிகளில் மகாத்மா உட்பட பலரும் கைது செய்யப்பட்டு எங்கு கொண்டு செல்கிறார்கள் என்பதுக்கூட தெரிவிக்காமல் கொண்டுசென்று சிறையில் அடைத்தனர். பல தலைவர்கள் ஊர் திரும்பும் வழியில் கைது செய்யப்பட்டனர். தீரர் சத்தியமூர்த்தியும் கைதானார். பெருந்தலைவர் காமராஜர் பம்பாயிலிருந்து ரயில் மூலம் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அவர் ரேணிகுண்டா வந்தபோது அவரைக் கைது செய்ய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல் துறையினர் காத்திருக்கின்றனர் எனும் செய்தி கேள்விப்பட்டார். ஆனால் அவர் சிறைப்படுமுன் செய்ய வேண்டிய சில காரியங்கள் இருந்தன; அவைகளை முடித்துவிட்டுக் கைதாகலாம் என்று எண்ணி அவர் சென்னை வரும் வழியில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் இறங்கினார். தலையில் ஒரு முண்டாசு கட்டிக்கொண்டு, தன்னுடைய உடைமைகளை ஒரு மூட்டையாகக் கட்டி தலைமீது வைத்துக் கொண்டு, ஒரு கிராமத்து விவசாயியைப் போல ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தார். வெளியே வந்தவுடன் அவ்வூர் கடைத்தெரு, அங்கு தேவராஜ ஐயங்கார் எனும் தியாகி ஒரு உணவு விடுதி நடத்தி வந்தார். காமராஜ் நேரே அவரிடம் சென்றார். மாறுவேடத்திலிருக்கும் காமராஜை ஐயங்கார் அடையாளம் கண்டு கொண்டார். அங்கிருந்து இருவரும் பஸ் ஏறி ராணிப்பேட்டை சென்றனர். அங்கு தீனபந்து ஆசிரமம் என்று ஒன்றை நடத்தி வந்த கே.ஆர்.கலியாணராம அய்யரைச் சந்தித்துவிட்டு, அவர் வீட்டில் போலீஸ் கண்காணிப்பு இருந்தமையால் அருகில் இருந்த ஒரு காங்கிரஸ்காரரின் தோட்டவீட்டில் இரவு தங்கிவிட்டு, மறுநாள், வேலூர், கடலூர், தஞ்சை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களுக்குச் சென்று காங்கிரஸ் தொண்டர்களைச் சந்தித்து சில நோட்டீஸ்களை விநியோகித்துவிட்டு விருதுநகர் சென்றார். வீடு திரும்பிய காமராஜ் குளித்து உடை மாற்றிக் கொண்டபோது அவ்வூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் காமராஜ் இல்லம் வந்தார். உடனே தலைவர் தன்னை கைது செய்துகொள்ளலாம் என்று அவரிடம் சொல்ல, அவர் சொன்னார், “தாங்கள் வேலூரில் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்து, இங்கிருந்து சில போலீசார் அங்கு சென்றிருக்கிறனர்; அவர்கள் திரும்பி வர ஓரிரு நாட்கள் ஆகலாம், அதுவரை தலைவர் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டபிறகு கைதாகலாம்” என்றார். தலைவர் அதற்கு சம்மதிக்காமல் உடனடியாக காவல் நிலையம் சென்று கைதானார். இதுதான் தலைவருடைய கடமையுணர்வு அவரது நாணயம்.

    காங்கிரசில் ராஜாஜியும் காமராஜரும் இருவேறு கோஷ்டியை வைத்திருந்தனர் என்பர். ஆனால் ஒரு நிகழ்ச்சி இவ்விரு தலைவர்களும் எப்படி நடந்து கொண்டனர் என்பதற்கு எடுத்துக் காட்டாக அமைந்திருக்கிறது. ராஜாஜி பதவி விலகி அப்போது காமராஜ் முதலமைச்சராக ஆனார். ஒரு நாள் திருமலைப் பிள்ளை சாலையில் காமராஜ் இல்லத்தில் மாடியில் தலைவரும் திருப்பூர் வின்செண்ட் என்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தலைவரின் உதவியாளர் ஓடிவந்து ராஜாஜி தலைவர் இல்லத்துக்கு வருவதாக ஒரு செய்தியைச் சொன்னார். உடனே காமராஜ், அடடா! அவர் எதற்காக இத்தனை சிரமப்பட்டுக்கொண்டு இங்கு வரவேண்டும், சொல்லியிருந்தால் நானே அவரைப் பார்க்கப் போயிருப்பேனே என்று சொல்லிவிட்டு அவசரமாக இரண்டிரண்டு படிகளாக மாடிப்படிகளைக் கடந்து கீழே வந்து போர்ட்டிகோவுக்கு வரவும் ராஜாஜியின் கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. அவரை காமராஜ் மிகவும் மரியாதையுடன் அழைத்துச் சென்று, தாங்கள் இத்தனை சிரமப்பட வேண்டுமா, சொல்லியிருந்தால் நான் தங்கள் இல்லம் வந்திருக்க மாட்டேனா என்று சொல்லிக்கொண்டே உள்ளே அழைத்துச் சென்றார். அங்கு அவ்விருவரும் அரை மணி நேரம் தனியாக ஏதோ பேசிவிட்டு ராஜாஜி வீடு திரும்ப வாசலுக்கு வந்தபோது தலைவரும் உடன் வந்து ராஜாஜியைக் காரில் ஏற்றிவிட்டு, கார் புறப்பட்டுப் போகும்வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு திருப்பூர் வின்செண்டிடம் சொன்னார், “பாவம், பெரியவர், மிகவும் தளர்ந்து போய் காணப்படுகிறார்” என்று சொல்லிவிட்டு மெளனமாக அவர் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாராம். இதுதான் அவரது பண்பாடு.

    திருமுருக கிருபானந்த வாரியார் சொல்வார், யானையைக் குழி தோண்டி பிடிக்க வேண்டும், பறவைகளை வலைவிரித்துப் பிடிக்க வேண்டும், மீனைத் தூண்டில் போட்டுப் பிடிக்க வேண்டும், மனிதனை முகஸ்துதி செய்து பிடிக்க வேண்டும் என்பார். அப்படி முகஸ்துதிக்கு மயங்காதார் யார்? ஒரு மேடையில் ஒருவரை வைத்துக் கொண்டே அவரை இந்திரன் சந்திரன், உப்பில்லாமல் ஒரு கலம் கஞ்சி குடிப்பார், வானத்தை வில்லாக வளைப்பார் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் அந்த நபர் உச்சி குளிர்ந்து கேட்டுக் கொண்டிருப்பார் அல்லவா? ஆனால் பெருந்தலைவர் காமராஜர் எப்படிப்பட்டவர், இங்கு ஒரு நிகழ்ச்சி. சென்னை திருவான்மியூரில் மகாத்மா காந்தியடிகள் சிலை திறப்பு விழா. திறந்து வைத்துப் பேசப்போகிறவர் தலைவர் காமராஜ். அப்போது பெரு மழை வரும்போல வானம் இருண்டு கருத்துக் காணப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் வானம் பொத்துக்கொண்டு மழை ஊற்றலாம். அப்போது ஒருவர் மேடையில் பெருந்தலைவரைப் பற்றி வானளாவ புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். பார்த்தார் தலைவர், அவர் சட்டையைப் பின்புறமிருந்து இழுத்து போதும் நிறுத்து, உட்காருன்னேன் என்றார். அவர் உட்காரவில்லை. உடனே தலைவர் எழுந்து அந்த நபரை உட்கார வைத்துவிட்டு தானே மைக்கைப் பிடித்துப் பேசத் தொடங்கினார். அவர் சொன்னார், “என்னைப் பற்றி பேசவா இந்தக் கூட்டம். காந்தியடிகள் சிலை திறக்க இந்த கூட்டம், காந்தியடிகளைப் பற்றி பேசுன்னேன். என்னைப் பற்றி பேசினது போதும், இனி காந்தி பற்றி பேசலாம்” என்று சொல்லி சிலையைத் திறந்து வைத்து காந்தியடிகள் பற்றி பேசினார். அதுதான் பெருந்தன்மை. தற்புகழ்ச்சியை விரும்பாத மேதமை.

    1967 பொதுத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் வீழ்த்தப்பட்டது, தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. அதைவிட பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் விருதுநகர் தொகுதியில் மாணவர் தலைவர் ஒருவரிடம் தோற்றுப் போனார். ஆட்சியை இழந்ததும் தலைவர் எதிர்க்கட்சியினர் ஆளட்டும், அடுத்த ஓராண்டுக்கு அவர்களைப் பற்றி நான் எந்த விமர்சனமும் செய்யப்போவதில்லை. ஓராண்டுக்குப் பிறகு நான் பேசுவேன் என்றார். அப்படி ஒரு ஆண்டு முடிந்த பிறகு அவர் தஞ்சாவூர் திலகர் திடலில்தான் முதன்முதலாகப் பேசினார். அழுத்தம் திருத்தமான பேச்சு, காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகள், அவர்கள் கட்டி வைத்த அணைக்கட்டுகள், மின்சார உற்பத்திக்கு அவர்கள் செய்த பணிகள், நீர்ப்பாசன வசதிகளின் பெருக்கம், தொழிற்சாலைகளின் வளர்ச்சி, விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர்வு போன்றவற்றையெல்லாம் பட்டியலிட்டுவிட்டு நிறைவாகச் சொன்னார். “நானும் கடந்த ஒரு வருஷ காலமாக இவர்கள் ஆட்சியைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இவர்கள் இது வரை என்னதான் செய்தார்கள்? நாம் அணைகளைக் கட்டினோம், மின்சாரம் உற்பத்தி செய்தோம், விவசாயத்துக்கு உதவி செய்தோம், இவர்கள் என்ன செய்தார்கள்? “வந்து கம்பியை நீட்டினார்கள்” என்றார். கூட்டம் ஆர்ப்பரித்து கைதட்டி ஆரவாரம் செய்து ரசித்தது. அவர் சொன்னது, மின்சாரத்தை உற்பத்தி செய்தது நாம், இவர்கள் கம்பி இழுத்து அதனை விநியோகம் செய்தார்கள் என்ற பொருளில். அதை அவர் சொன்ன விதம் அவருடைய ஓராண்டு மெளனத்துக்குப் பின் அவர் எடுத்த விஸ்வரூபத்தைக் காட்டியது.

    நிறைவாக இந்த கட்டுரையாளனுக்கு ஏற்பட்ட ஒரு தனி அனுபவம். தஞ்சையில் நான் பணியாற்றிக் கொண்டிருந்த அலுவலகத்தில் விருதுநகரைச் சேர்ந்த ஐ.எஸ்.ராஜ்குமார் என்பவரின் மகன் ரவிக்குமார் என்பவர் என்னுடன் பணியாற்றி வந்தார். ஒரு நாள் அவர், நான் உட்பட சில நண்பர்களிடம், “அப்பச்சி தஞ்சாவூர் வந்திருக்கிறார். சர்க்யூட் ஹவுசில் தங்கியிருக்கிறார். என் தந்தைக்கு அவர் மிக நெருங்கிய பழக்கமுடையவர். வாருங்கள், உணவு இடைவேளையில் அவரைப் போய் பார்த்துவிட்டு வரலாம்” என்றார். எங்களுக்கும் மகிழ்ச்சி உடனே கிளம்பினோம். தலைவர் தங்கியிருந்த இடம் எங்கள் அலுவலகத்துக்கு மிக அருகில் என்பதால் உணவு இடைவேளையில் அங்கு சென்றோம். வாசலில் சில காங்கிரசார் நின்று பேசிக் கொண்டிருந்தனர். சிலர் உள்ளே போய்க்கொண்டும், சிலர் வெளியே வந்து கொண்டும் இருந்தனர். நாங்கள் ஐந்து பேர் உள்ளே சென்றோம். தூரத்தில் மரத்தடியில் சில போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தனர். எங்களை எவரும் தடுக்கவில்லை. முன் அறையையும், அங்கிருந்த பலரையும் கடந்து தலைவர் உட்கார்ந்திருந்த அறைவாசலுக்குச் சென்றோம். அங்கும் எங்களை யாரும் தடுக்கவில்லை. அங்கு பலரும் நின்றுகொண்டும், உட்கார்ந்து கொண்டும் தலைவருடன் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை விலக்கிக்கொண்டு, இளைஞர்களாகிய நாங்கள் கதர் வேட்டி சட்டைகளுக்கு மத்தியில் பேண்ட் சட்டை அணிந்து கொண்டு போய் நின்றதும் தலைவர் திரும்பிப் பார்த்தார். யாரு? என்றார். நண்பர் ரவிக்குமார் நான் ஐ.எஸ்.ராஜ்குமாரின் மகன் ரவிகுமார், “அப்பச்சி வந்திருக்காங்கன்னு கேள்விப்பட்டு பார்த்துட்டு போகலாம்னு வந்தோம்” என்றார். “அப்படியா, ராஜ்குமார் எப்படி இருக்கார், உடல் நலமாக இருக்காரா” என்று விசாரித்துவிட்டு, சும்மா பார்க்கத்தானே வந்தீங்க, பார்த்துட்டீங்கல்ல, சரி நீங்க போகலாம் என்று முகத்தில் அடித்தது போல சொல்லிவிட்டு, சுற்றி இருந்தவர்களிடம் பேசத் தொடங்கினார். வீண் பேச்சு பேசவோ, தேவையற்ற கூட்டத்தைச் சுற்றிலும் வைத்துக் கொண்டு பந்தா செய்வதையோ தலைவர் விரும்பியதில்லை. காரியம் இருந்தால் பேசு, இல்லையேல் நடையைக் கட்டு என்பது அவரது கொள்கை. அது நமக்குச் சற்று வருத்தமாக இருந்தாலும், என்ன கடமை உணர்வு என்றல்லவோ அவரைப் பாராட்டத் தோன்றுகிறது.

    தலைவரைப் பற்றி எத்தனையோ செய்திகள். அவை ஒவ்வொன்றும் அவருடைய குணாதிசயங்களையும், அவரது பன்முகப் பரிமாணங்களையும் நமக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றன. காலத்தால் அழிக்கமுடியாத அற்புதமான குணங்கள், தலைமைப் பண்புகள், பெருந்தன்மை, இரக்க குணம், மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்கிற ஆற்றமாட்டாத தாகம் இவைகள்தான் மக்கள் தலைவர் காமராஜ்! அவர் புகழ் வாழ்க!

    Share
  • அந்தணன் என பாரதியார் அறிவித்த சான்றோர்

    தஞ்சை வெ.கோபாலன்.

     

    வேதபுரம் என்று மகாகவி பாரதியாரால் அழைக்கப்படும் புதுவையில் வசித்தவர் கனகலிங்கம். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அந்த கனகலிங்கத்தின்பால் பாரதிக்கு மிகுந்த அன்பு உண்டு. பொதுவாகவே அந்தக் காலத்தில் மிகவும் சமூக நிந்தனைக்குட்பட்டிருந்த இந்த வகுப்பினர்பால் பாரதிக்கு மிகுந்த அக்கறை உண்டு. அவர் எழுதுகிறார்:–

    “அவர்களையெல்லாம் ஒன்று திரட்டு. உடனே விபூதி, நாமத்தைப் பூசு. பள்ளிக்கூடம் வைத்துக் கொடு. கிணறு வெட்டிக் கொடு. ஸமத்துவம் கொண்டாடு. நான் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறேன். அவர்களை யெல்லாம் ஒன்று சேர்த்து இந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள். நம்முடைய பலத்தைச் சிதற விடாதேயுங்கள். மடாதிபதிகளே! நாட்டுக்கோட்டை செட்டிமார்களே! இந்த விஷயத்தில் நீங்கள் பணத்தை வாரிச் செலவிடுங்கள். இது நல்ல பயந்தரக்கூடிய கைங்கர்யம் தெய்வத்தின் கருணைக்குப் பாத்திரமான கைங்கரியம்.”

    இந்த கனகலிங்கம் நாகலிங்கம் எனும் வள்ளுவப் பண்டாரத்தைத் தன் கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார். பாரதியார் இந்தக் நாகலிங்கத்தைப் பற்றிச் சொல்லும்போது “எனக்கும் ஒரு வள்ளுவப் பையனுக்கும் சிநேகம். அவனுடைய கோயில் அம்மன் மீது நான் பாட்டுக் கட்டிக் கொடுத்தேன்.* (“தேசமுத்துமாரி” எனும் பாட்டு). அவன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கும் வருவதுண்டு.” இப்படி பாரதியார் எழுதுகிறார்.

    பாரதியாரின் இரண்டாவது பெண் சகுந்தலா “என் தந்தை” எனும் நூலொன்று எழுதியிருக்கிறார். அதில் அவர் எழுதுவ்தாவது: “புதுவையை அடுத்துள்ள உப்பளத்தில் ‘தேசமுத்து மாரியம்மன் கோயில்’ என ஒரு மாரியம்மன் கோயில் உண்டு. அதில் ஒரு வள்ளுவ இளைஞன் பூஜை செய்து வந்தான். ‘அவன் தேவி பூஜை செய்கிறான். பிராமணத் தொழில் நடத்துகிறான்’ என்று என் தந்தை அவனுக்கு வேத முறைப்படி பூணூல் போட்டு வைத்தார். அந்தத் தேச முத்துமாரியம்மன் பேரில் ஒரு பாட்டு எழுதினார்.
    ‘ஒருவன் தன் செய்கையினாலும், தர்மத்தினாலுமே தனது ஜாதிக்கு உரியவனாகிறான், பிறவியினாலல்ல’ என்பதே என் தந்தையாரின் கருத்து. அதை ஞான ரதத்தில் கண்வ ரிஷிகள் உபதேச மூலமாகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.”

    கனகலிங்கம் மகாகவி பாரதியாரை “எனது குருநாதர்” என்று அழைத்து அதே தலைப்பில் ஒரு நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். கனகலிங்கத்துக்குப் பாரதியார் மீது ஏன் அப்படியொரு பற்று, பாசம், பக்தி? அதைச் சற்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாமே!

    கனகலிங்கம் பாரதியார் வீட்டுக்கு அடிக்கடிப் போகும் வழக்கம் உண்டு; அது தவிர கடற்கரை சாலையில் உலாவும் போதும் அவரை அடிக்கடி சந்தித்திருக்கிறார். பாரதியாருடன் எப்படியாவது உரையாட வேண்டும் எனும் அவா அவருக்கு இருந்தது. அவர் விரும்பியபடி பாரதியோடு பழகும் சந்தர்ப்பமும் அமைந்தது. அப்படி அவரோடு பழகப் பழக அவருடைய மனவோட்டங்களும் தன்னுடையதும் ஒத்துப் போவதை கனகலிங்கம் உணரத் தொடங்கினார். அவர் நடந்து கொள்ளும் முறைகளைப் பற்றி கனகலிங்கம் சொல்லும்போது, அவர் தான் எழுதிய புதிய ஆத்திசூடி வாக்கியங்களுக்கேற்ப நடப்பார் என்கிறார். அதாவது;

    ஏறுபோல் நட
    குன்றென நிமிர்ந்து நில்
    கோல் கைக்கொண்டு வாழ்

    இவைகளை அவர் சரியாகவே கடைப்பிடித்தார். சொன்னதைச் செய்யும் செயல் வீரர் பாரதியார் என்கிறார் கனகலிங்கம். அவரிடம் தான் ஏதேனும் உபதேசம் பெற்றுக் கொள்ள விரும்புவதாக கனகலிங்கம் சொன்னபோது பாரதி அவருக்கு பூணூல் போட்டுவைக்க உத்தேசித்திருப்பதாகவும், இப்போது வசதியில்லை என்பதால் பின்பொருமுறை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு, அவருக்கு சந்தியாவந்தனம், காயத்ரி மந்திரம் ஆகியவைகளைச் சொல்லிக் கொடுத்தார். குருநாதர் சொல்லித் தந்தபடி கனகலிங்கமும் தினமும் மும்முறை சந்தியாவந்தனமும், காயத்ரி மந்திர உச்சாடனமும் செய்து வந்தார்.

    பாரதி சொல்லியிருந்தபடி ஒருநாள் கனகலிங்கத்துக்குப் பூணூல் அணிவிக்கும் நாளை முடிவு செய்து ஏற்பாடுகள் நடந்தன. அதிகாலை எழுந்திருந்து நீராடிவிட்டு சுத்தமான உடைகளை அணிந்துகொண்டு தன் வீட்டுக்கு வரச்சொன்னார் கனகலிங்கத்தை. சட்டை போட்டுக் கொள்ள வேண்டாமென்றும் அறிவுறுத்தினார். அவர் சொன்னபடி, சொன்ன நேரத்தில் அவர் சொன்ன கோலத்தில் கனகலிங்கம் பாரதியாரின் வீட்டை அடைகிறார். அங்கே பலரும், குறிப்பாக பாரதியாரின் நண்பர்கள் கூடியிருந்தார்கள். வ.வெ.சு.ஐயர், மண்டையம் சீனிவாசாச்சாரியார், நாகசாமி, குவளை கிருஷ்ணமாச்சாரியார், கோவிந்தராஜுலு நாயுடு ஆகியோர் இருந்தனர். கனகலிங்கம் வந்திருந்த பெரியோர்களை நமஸ்கரிக்க அவர்கள் இவரை வாழ்த்தினர்.

    வ.வெ.சு.ஐயர் “நேரமாகிறது, சீக்கிரம் ஆகட்டும்!” என்று குரல் கொடுக்க பாரதியார் தானும் பிரம்மோபதேசம் செய்விப்பவர் இருக்கவேண்டிய கோலத்தில், நெற்றியில் குங்கும திலகத்தோடு அங்கு வந்து சேர்ந்தார். சுவற்றில் லட்சுமி, சரஸ்வதி, கிருஷ்ணன் ஆகியோர் படங்கள் மாட்டப்பட்டிருந்தன. அந்தப் படங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. படங்களின் அடியில் ஒரு பிச்சுவா கத்தி; அதற்கும் படங்களுக்கும் பாரதி குங்குமப் பொட்டிட்டு வணங்கினார். பின்னர் பராசக்தியைப் பணிந்து போற்றி பாடல்களைப் பாடினார்.

    bharathi screenshotபின்னர், கனகலிங்கத்தை கிழக்கு திசை பார்த்து உட்காரச் சொல்லிவிட்டு அவருக்கு நெற்றியிலும் மார்பிலும் திருநீறு பூசினார். பின்னர் அவரைக் குத்துக்காலிட்டு உட்காரச் சொல்லி கையில் பூணூலைக் கொடுத்து யக்ஜோபவீததாரண மந்திரங்களைச் சொல்லி அவரையும் சொல்லச் செய்தார். பின்னர் கையில் மேலும் கீழுமாய்ப் பிடித்திருந்த பூணூலை முதலில் கழுத்தில் மாலை போல போட்டுக் கொண்டு, பின்னர் வலம் போட்டுக் கொள்ளச் செய்தார். பின்னர் அவர் காதில் காயத்ரி மந்திரத்தை மூன்று முறை உபதேசம் செய்தார்.

    கனகலிங்கம் எழுந்து பாரதியாரின் பாதங்களில் வீழ்ந்து நமஸ்கரித்தார். உடனே பாரதி கம்பீரமான குரலில், “இன்று முதல் நீ பிராமணன்!” என்று உரத்த குரலில் சொன்னார். “இனி யாராவது உன்னிடம் நீ என்ன ஜாதி என்று கேட்டால், நான் பிராமணன் என்று தைரியமாகச் சொல்லு!” என்றும் கட்டளையிட்டார்.

    “அப்படியொருவன் ஆகமுடியுமா என்று யாராவது உன்னிடம் கேட்டால்; எனக்குத் தெரியாது, என் குரு பாரதியிடம் கேளுங்கள்!” என்று பதில் சொல் என்றார். உள்ளூர் காரர்கள் யாராவது இது பற்றித் தன்னிடம் கேட்பார்கள் என்று பாரதி எதிர்பார்த்தார்; ஆனால் என்ன காரணமோ எவரும் கேட்கவில்லை. ஆனால், ஈஸ்வரன் தர்மராஜா வீதியில் வசித்து வந்த மணிலாகொட்டை வியாபாரி ஒருவர் மட்டும் “பாரதி புதுச்சேரியைக் கெடுக்க வந்திருக்கிறான்” என்று தனக்குள் முணுமுணுப்பாகச் சொல்லிக் கொண்டிருந்தாராம்.

    பாரதியார் கனகலிங்கத்துக்கு மட்டுமல்ல, இன்னொருவருக்கும் இதுபோல உபநயனம் செய்து வைத்தார். அவர் நாகலிங்கம் என்பார். இவர் புதுச்சேரி உப்பளம் பகுதியில் இருக்கும் முத்துமாரியம்மன் கோயிலில் பூசாரியாக இருந்தவர். இவர் ஒரு முறை கனகலிங்கத்தை அணுகி, அவரிடம் இவ்வூரில் பாரதியார் யாரோ ஒரு ஹரிஜனப் பையனுக்கு பூணூல் அணிவித்தாராமே, அது பற்றி தெரியுமா? என்று கேட்டார். அந்தச் சிறுவன் தான்தான் என்று கனகலிங்கம் சொன்னார்.

    அதற்கு நாகலிங்கம் தனக்கும் அதுபோல செய்து கொள்ள வேண்டுமென்றும், பாரதியாரிடம் சம்ஸ்கிருதம் கற்றுக் கொண்டு தான் முத்துமாரியம்மனுக்குச் செய்யும் அர்ச்சனை முறையாக செய்ய அது உதவும் என்றும் சொல்லியிருக்கிறார். கனகலிங்கமும் நாகலிங்கத்தை அழைத்துக் கொண்டு போய் பாரதியாரிடம் அறிமுகம் செய்து வைத்து, அவருடைய விருப்பத்தையும் தெரிவித்திருக்கிறார். அந்த சந்தர்ப்பத்தில் பாரதியைப் பார்த்த நாகலிங்கம் இவர் என்ன ஒரு பித்தரைப் போல இருக்கிறாரே என்றதற்கு, கனகலிங்கம், அவர் பித்தரா சித்தரா என்பதை நீயே புரிந்து கொள்வாய் என்றாராம்.

    பாரதியார் நாகலிங்கத்துக்கு வாக்களித்திருந்தபடி ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று மாலை 4 மணிக்கு அவரைத் தன் வீட்டுக்குவரச் சொன்னார். அவர் வந்ததும், அவரைப் பார்த்து “வாரும், வாரும், குருக்களே!” என்று நாகலிங்கம் முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு பூஜைகள் செய்துவருவதைக் குறிக்கும் வகையில் குருக்களே என்று அழைத்தார். பிறகு முறைப்படி நாகலிங்கத்துக்கும் பாரதியார் பூணூல் அணிவித்து, பிரம்மோபதேசம் செய்து வைத்து அனுப்பியிருக்கிறார்.

    இது குறித்து வ.ரா. பாரதியிடம் கேட்டதற்கு, அவன் செய்யும் அந்தணத் தொழிலுக்கு அவன் பூணூல் அணிய வேண்டும் என்று சொன்னார். பாரதியாருக்குப் பூணூல் இல்லை என்பதை மனதில் எண்ணிக் கொண்டு வ.ரா.சிரிக்கவே, அந்தக் கேலிச் சிரிப்பைப் புரிந்து கொண்டு பாரதியார், “என்ன ஓய்! அவன் செய்யும் தொழிலுக்கு பூணூல் தேவை; நானோ ஊரறிந்த பார்ப்பான், எனக்கு எதற்கு?” என்றாராம். இதனை வ.ரா.வே தன்னுடைய நூலில் பதிவு செய்திருக்கிறார்.

    தஞ்சை வெ.கோபாலன்,
    இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம்,
    திருவையாறு பாரதி இயக்கம், திருவையாறு.
    #9486741885

    Share
  • திருவையாறு பஞ்சநதீஸ்வரர் சந்நிதியில் நாட்டிய விழா.

    கோபாலன் வெங்கட்ராமன்

    திருவையாறு பஞ்சநதி க்ஷேத்திரம் எனப் புகழ் பெற்ற ஊர். தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்திலும், அவர்களுக்குப் பிறகு தஞ்சையில் 180 ஆண்டுகள் அரசுபுரிந்த மராத்திய மன்னர்கள் காலத்திலும், இங்கு பல பண்டிதர்களும், இசை, நாட்டியக் கலைஞர்களும் வசித்து வந்திருக்கின்றனர். இவ்வூருக்குப் புகழ் சேர்க்கும் சிலரில் தியாகராஜ சுவாமிகளின் குரு ஷொண்டி வெங்கடரமணையாவும் ஒருவர். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இவ்வூருக்கு விஜயம் செய்த தேவார மூவரில் திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளும், திருநாவுக்கரசு சுவாமிகளும் இவ்வூரின் இயற்கை அழகோடு இங்கு எதிரொலித்த இசையைப் பற்றியும், காந்தாரத்தில் இசையமைத்து காரிகையர் தேம்தாம் என்று நடனமாடிய அழகினையும் வர்ணித்திருக்கின்றனர்.

    அப்படிப்பட்ட புண்ணியத் தலத்தில் கோயில் கொண்டிருக்கும் ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகி ஆலயத்தில் கடந்த 2003இல் சிறு அளவில் தொடங்கப்பட்ட நாட்டியாஞ்சலி வளர்ந்து இவ்வாண்டு அதன் 13ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா மிகச் சிறப்பாக கடந்த பிப்ரவரி 16 முதல் 18 வரை நடந்து முடிந்திருக்கிறது. இந்த நாட்டியாஞ்சலி பெரும்பாலும் பழைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்துக் கோயில்களில்தான் சிறப்பாக நடந்து வருகிறது. இங்குள்ள வழுவூரும், பந்தநல்லூரும், தஞ்சையும் பரதநாட்டியம் செழித்து வளர காரணமாக இருந்திருக்கிறார்கள். தஞ்சை நால்வர்கள் தொடங்கி, ருக்மணி அம்மாள் போன்ற இசை நடனக் கலைஞர்கள் இவற்றுக்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

    திருவையாற்றில் தொடர்ந்து 2003 முதல் நடந்து வரும் நாட்டியாஞ்சலி ஆண்டுக்கு ஆண்டு அதிக அளவில் நாட்டியக் கலைஞர்களை இங்கு வந்து பங்குபெற ஆவலைத் தூண்டியிருக்கிறது. இந்த ஆலயத்திலிருந்துதான் தஞ்சை பெரிய கோயிலுக்கு ராஜராஜசோழன் முதன் முதலாக நாற்பதுக்கும் மேற்பட்ட ஆடல் அரசிகளை மாற்றல் செய்து அவர்களுக்குத் தங்க வீடுகளும் கட்டிக் கொடுத்ததாகக் கல்வெட்டுகள் சான்று பகர்கின்றன.

    அத்தகைய ஆலயத்தில் திருவோலக்க மண்டபத்தில் 1946 வரை ‘சதிர்’ எனும் இறைவனுக்கு ஆடலரசிகள் பரதம் ஆடி வழிபட்ட சான்றுகள் இருக்கின்றன. இப்போதும் அதே மண்டபத்தில் “ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி” நடைபெற்று வருகிறது. இதில் இந்த ஆண்டில் மட்டும் 48 குழுக்கள் கலந்து கொண்டன. இவற்றில் சுமார் 480க்கும் மேற்பட்ட நடனமணிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கெல்லாம் சான்றிதழ்களும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    இவ்வாண்டு கலந்து கொண்டு சில நாட்டியக் குழுக்களைப் பற்றி பார்க்கலாம். வேறு மாநிலங்கலிலிருந்தும் பல குழுக்கள் வந்து கலந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக மும்பையிலிருந்து மும்பை நிருத்ய கலா நிகேதன் எனும் அமைப்பிலிருந்து குரு திருமதி மயூரி காரத் தனது மாணவிகளுடனும், மகாராஷ்டிர மாநிலம் தாணே நகரில் பாரிஜாத் சுந்தரவன பூங்காவிலிருந்து திருமதி லதா ராஜேஷ் என்பவர் தன் மாணவிகளுடனும் மும்பை காட்கோபர் பகுதியிலிருந்து செளந்தர்யா நாட்டிய கலாலயாவிலிருந்து திருமதி பத்மினி ராதாகிருஷ்ணன் தலைமையில் மாணவிகள் வந்து கலந்து கொண்டு சிறப்பித்திருக்கின்றனர்.

    அடுத்து ஆந்திரப் பிரதேசத்தின் ஐதராபாத் நகரத்திலிருந்து பாரம்பரிய மிக்க கலைக் குடும்பத்தின் வாரிசான பரத நாட்டியாலயாவின் குரு திருமதி சித்ரா நாராயண் தலைமையில் அவரது மாணவிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

    கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரத்திலிருந்து அபிக்ஞா கவின்கலை பள்ளியின் திருமதி சுவேதா தலைமையில் அவரது மாணவிகளும், பெங்களூர் கலாக்ஷேத்ரா திருமதி அம்பிலி தேவியின் மாணவியர் பரத நாட்டியமும், டெல்லியில் பிரபல நடன ஆசிரியர் கோவிந்தராஜன் அவர்களின் மாணவியும், பரதக் கலைஞர்களில் சிறந்தவருமான திருமதி உமா B.ரமேஷ் திருஞானசம்பந்த மூர்த்தியின் வரலாற்றை நாட்டிய நாடகமாகவும், வழுவூர் ராமையா பிள்ளையின் கொள்ளுப் பேத்தியும், பிரபல பின்னணி இசைப்பாடகர் மாணிக்க விநாயகத்தின் பேத்தியுமான சீர்காழி பி.வரலட்சுமி என்கிற சிவரஞ்சனியின் நடனமும், திருவண்ணாமலையிலிருந்து கலாரத்னா நாட்டியாலயாவின் கலைச்செல்வி கங்காதரன் மாணவியரும், திண்டுக்கல் நாதலயா நாட்டியப் பள்ளியிலிருந்து திருமதி சுஜாதா ரமேஷ் தலைமையில் அவரது மாணவியரும், சிதம்பரம் தகதிமிதா குழுவினர் குரு அகிலன் தலைமையிலும், காஞ்சிபுரத்திலிருந்து ஸ்ரீ பைரவ விக்யான் நாட்டியாலயாவின் நளினி குழுவினரும், கரூர் எம்.சுகந்தப்பிரியாவின் ஆடவல்லான் நாட்டியக் குழுவினரும் வந்து நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.

    சென்னை மாநகரத்திலிருந்து பெரும்பாலான நடனக் கலைஞர்கள் வந்து கலந்து கொண்டார்கள். அவர்கள் சென்னை பரத நாட்டியாலயாவின் திருமதி லதா ரவியின் குழுவினர், மணலி மோகன அபிநய நாட்டியப் பள்ளி ம.ஹேமலதாவின் மாணவியரும், மாம்பலம் சாய் நிருத்யாலயாவின் ஷோபனா சுரேஷ் மாணவியரும், சென்னை நந்தனம் செல்வி மாதுர்யாவும், செங்கல்பட்டு சரஸ்வதி நாட்டியாலயாவின் சசிகலாவும், மீஞ்சூர் தில்லைக்கூத்தன் நாட்டியப் பள்ளி. சென்னை பிராட்வே தொல்லிசை நாட்டியக் கூடம், சென்னை வேளச்சேரி நூபுர்லயா நாட்டிய அகாதமியின் லலிதா கணபதியின் மாணவியரும், மடிப்பாக்கம் திருமதி மிருணாளினி குழுவினரும், கலாக்ஷேத்ரா மாணவியர் ஸ்வாதி லக்ஷ்மண், அனிதா எட்வர்ட் ஆகியோரும், முகப்பேர் அபிநயவர்ஷினி நாட்டியாலயாவின் இரா.காசிராமனின் மாணவியரும், அரும்பாக்கம் நிருத்ய நிருத்யாலயா மற்றும் கடலூர் அபிநயா நாட்டியாலயாவின் முனைவர் சுமதியின் மாணவியரும் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தினர்.

    கலைகளுக்குப் பெயர் போன கும்பகோணத்திலிருந்து ஸ்ரீமதி நாட்டியாலயாவின் ஸ்ரீதரி, தேவிபிரசாத் சங்கீத வித்யாலயாவின் ஜென்சி லாரன்ஸ் குழுவினரும், சிவசக்தி நடனப் பள்ளியின் கவிதா விஜயகுமார் குழுவினர், அபிநயாஸ் விஜயமாலதி மாணவியரும் சிறப்பாக நடனமாடி சிறப்பித்தார்கள்.

    தஞ்சையிலிருந்து பத்மஸ்ரீ நாட்டியாலயாவின் வடிவுதேவி குழுவினரும், ஸ்ரீசக்தி நாட்டியக் கலாலயம் அருணா சுப்ரமணியம் அவர்களின் மாணவி பி.அபிநயாவும், ஓம் சிவாலயா நடனப் பள்ளியின் பரமேஸ்வரி மாணவியரும், தஞ்சை ஜெயா நாட்டியப் பள்ளியின் ஜெயா குழுவினரும், ஆராதனா நாட்டியக் குழுவின் சு.சுலட்சணா மாணவியரும் பட்டுக்கோட்டை பரத கலார்ப்பணா குழுவின் ரமேஷ் கண்ணன் குழுவினரும் ஆடி விழாவைச் சிறப்பித்தனர்.

    16ஆம் தேதி தொடக்க விழாவுக்கு சிட்டி யூனியன் வங்கித் தலைவர் திரு எஸ்.பாலசுப்ரமணியம் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி விழாவைத் துவங்கி வைத்தார். அப்போது திருவையாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு எம்.ரத்தினவேலு எம்.எல்.ஏ.வும் பேரூராட்சி மன்ற தலைவர் திரு செந்தில்மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இரண்டாம் நாள் நிகழ்ச்சியின் போது தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் திரு கு.பரசுராமன் அவர்கள் கலந்து கொண்டு, திருவையாறு ஆலயத்தின் ராஜகோபுரத்துக்கு ஒளிவிளக்கு அமைத்துக் கொடுப்பதாக அறிவித்து விழாவைச் சிறப்பித்தார்.

    நிறைவு நாளன்று விழாவுக்கு ஒத்துழைப்பு நல்கிய ஆலய நிர்வாகத்தார், விழாவுக்கு நன்கொடை கொடுத்து ஆதரவு தந்த நன்கொடையாளர்கள். தொண்டர்களாக இருந்து சிறப்பாகப் பணிபுரிந்த திருவையாறு அரசர் கல்லூரி சமூகப் பணித்துறை பேரா.மணிக்குமரி மற்றும் அவரது மாணவிகளுக்கும் நன்றி தெரிவித்து விழா நிறைவு பெற்றது.

    Share
  • மனதில் நிறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

    தஞ்சை வெ.கோபாலன்

    எம்.ஜி.ஆர் எனும் இந்த மூன்றெழுத்து மந்திரச்சொல் தமிழ்நாட்டு சினிமா ரசிகர்கள் மனதில் ஒரு எழுச்சியை உண்டாக்கியது. இதன் தாக்கம் பின்னாளில் இவர் அரசியலில் முக்கியத்துவம் பெற்றபோது அந்த எழுச்சி பல மடங்கு பெருகி இவரைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. திரையுலக நாயகன் எனும் முறையிலாகட்டும், அரசியல் தலைவர் என்ற வகையிலாகட்டும் இவரது தோற்றத்தினாலும், பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் சர் வின்ஸ்டன் சர்ச்சில் போல தன் இரு விரலை விரித்து வெற்றிக் குறி காட்டி, புன்னகை மன்னனாய் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்துவிட்டார். திரையில் கதாநாயகனாக வந்து தீனர்களைக் காக்கும் அனாதரட்சகனாக நடித்ததை உண்மை வாழ்க்கையிலும் மக்கள் அவரை அதுபோலவே உணரத் தலைப்பட்டுவிட்டார்கள். திரையில் நல்லவனாக, ஏழைகளுக்கு இரங்கி உதவி புரிபவனாக, பெண்களின் மானம் காக்கும் மாவீரனாக, சகோதர பாசம் நிறைந்தவராக, தந்தை தாய் நலன் பேணும் நல்ல மகனாக இவர் திரையில் தோன்றியவாறே நிஜ வாழ்விலும் இருப்பவர் எனும் எண்ணம் நிரந்தரமாக மக்கள் மனங்களில் தங்கிவிட்டது.

    mgrphotogallery81954 இவர் மலைக்கள்ளன் எனும் திரைப்படத்தில் நடிக்க கோவைக்குச் சென்று நடித்துவிட்டு ரயிலில் சென்னை திரும்புவதற்காக கொச்சின் விரைவு ரயிலில் கோவை ரயில் நிலையத்தில் முதல் வகுப்பில் ஏறி அமர்கிறார். அவருடன் ஸ்ரீராம் எனும் நடிகர், ஜி.வரலட்சுமி எனும் நடிகை ஆகியோரும் இருக்கின்றனர். இவருக்கு அடுத்த பெட்டியில் எர்ணாகுளத்திலிருந்து பயணம் செய்து வந்து கொண்டிருந்த பள்ளி மாணவனாக இருந்த நான் ஜன்னல் புறம் சென்று இவர் முதுகைத் தொட்டு அழைத்து ‘என்ன படத்தில் நடிக்கிறீர்கள்?” என்றேன். இன்றைய நிலைமையாக இருந்தால் என்னை அங்கேயே ஒருவழி செய்திருப்பார்கள். அவர் அமைதியாகத் திரும்பி “மலைக்கள்ளன்” என்றார். நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை எழுதிய அந்த நாவலை நான் படித்திருந்ததால் இன்ன வேஷமா என்று வினவ, அவர் ஆம் என்று தலையாட்டினார். அதற்குள் ஸ்ரீராம் கீழே இறங்கி ஏதோ வாங்க வெளியே வந்தார். அவருடன் ஜி.வரலட்சுமியும் இறங்கினார். ரசிகர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள். நான் எம்.ஜி.ஆர். இருந்த ஜன்னல் அருகிலேயே நின்று பேச்சு கொடுத்தேன். திரும்பிப் பார்த்த அவர் புன்னகை செய்து, போதும் என்பதை அறிவுறுத்தினார். அவர் பார்வையில் கோபமோ, எரிச்சலோ இல்லை என்பது புரிந்தது. அவர் நடிப்பில் எனக்கு அத்தனை ஈடுபாடு இல்லையாயினும், அவருடைய இந்த அன்பான நடவடிக்கை என்னை அவர்பால் ஈர்த்தது. இதுவே முதன் முதல் அவரிடம் என் மரியாதை உருவானது.

    1956ஆம் ஆண்டு. திருச்சியில் தி.மு.க. இரண்டாவது மாநில மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில்தான் தி.மு.க. தேர்தலில் நிற்க வேண்டுமா வேண்டாமா என்று வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அந்த மாநாட்டில் மிகப் பெரிய அறிவுபூர்வமான கருத்தரங்கம்; அதில் தி.மு.க.வின் பெருந்தலைவர்கள் ஒவ்வொரு தலைப்பில் பேசினார்கள். ஈ.வி.கே.சம்பத் திராவிட நாட்டின் வெளியுறவுக் கொள்கை என்று பேசினார். அதைப்போல், திராவிட நாட்டின் பல்வேறு கொள்கைகள் குறித்துப் பலரும் பேசினார்கள். மாநாட்டுப் பந்தல் நிறைந்த கூட்டம். தலைவர்கள் பேச்சுக்கு ஒன்றும் பெருத்த ஆரவாரமோ, வரவேற்போ இருந்ததாக உணரவில்லை. ஒப்புக்கு திராவிடநாடு எனும் கற்பனை நாட்டின் நிறைவேற்ற முடியாத பல கொள்கை அறிவிப்புகள் வந்து கொண்டிருந்ததைத் தவிர அதில் குறிப்பிடும்படி எதுவும் இல்லை. அப்போது எம்.ஜி.ஆர். அந்த பந்தலுள் நுழைந்தார். கொட்டகை நிறைந்த மக்கட்கூட்டம் எழுந்து நின்று உற்சாக கைதட்டலுடனும், ‘விசில்’ ஒலியுடன் வரவேற்பு கொடுத்தது. காலம்சென்ற என்.ஜி.ஓ. சங்கத் தலைவர் சிவ.இளங்கோ மற்றும் அவர் நண்பர்களுடன் மாநாட்டில் உட்கார்ந்திருந்த எனக்கு இது ஒரு புதுமை. பிரபலமான தலைவர்களுக்கு இந்த அளவு வரவேற்பு இல்லாத நிலையில், போயும் போயும் திரைப்பட புகழ் மட்டுமா இவருக்கு இப்படிப்பட்ட வரவேற்பைக் கொடுத்திருக்க முடியும்? இல்லை இதன் பின்னால் ஏதோவொரு கவர்ச்சி, ஏதோவொரு நம்பிக்கை மக்களுக்கு இவர்மீது வந்திருக்க வேண்டும். அது என்ன என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் எனக்கு ஏற்பட்டது.

    சென்னையில் ஒரு குப்பத்துப் பகுதி. இவரது பட ஷூட்டிங் அந்த மீனவர் குப்பத்துக்கு அருகில் நடந்தது. அங்கிருந்த ஏழை எளிய குடிசை வாசிகள் இவர் ஓய்வில் இருக்கும் சமயம் அருகில் சென்று ஏதோ பேச்சுக் கொடுக்க, அவரும் அன்போடு அவர்களுடன் கலந்துரையாடிய காட்சி, இது என்ன இவர் ஒரு வித்தியாசமான மனிதராகத் தென்படுகிறாரே என்று எண்ணத் தோன்றியது.

    ஒரு சமயம் பத்திரிகையொன்றில் இவரது புகைப்படம் வெளியானது. வயது முதிர்ந்த கிழவி, மகா ஏழையாக இருக்க வேண்டும், பொக்கை வாய், இவர் அருகில் சென்று இவர் முகத்தருகே திருஷ்டி கழித்து கைகளைத் தன் முந்தலையில் வைத்து சொடுக்கி திருஷ்டி கழித்தாள். அடுத்த கணம் இவர் தன் ஜிப்பா பைக்குள் கைவிட்டு கையில் வந்த கரன்சி தாள்களை இந்த அம்மையின் கையில் கொடுத்து அவரைத் தழுவிக் கொண்டார். இது நடிப்பா, இந்த மனிதரின் உள்ளார்ந்த அன்பா? பத்திரிகைகளும், இவரைப் பிடிக்காதவர்களும் இதை நடிப்பு என்றனர். பெரும்பாலோர், இதுதான் இந்த மனிதரின் உண்மையான முகம் என்றனர். நான் பின்னதை ஏற்றுக் கொண்டேன்.

    முதலமைச்சராக இருந்த அண்ணாதுரை அவர்கள் அகாலமாக மரணமடைந்துவிட்டார். அடுத்து யார் என்ற கேள்வி எழுந்தது. அண்ணா இருக்கும்போதே நாவலர் நெடுஞ்செழியனை அழைத்து, மாநாட்டுக்கு “தம்பீ வா! தலைமையேற்க வா!” என்று அழைத்த வாசகம் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. ஆகையால் அவர்தான் அடுத்த தலைவர் என்று நாடே எதிர்பார்த்திருந்த நிலையில், தலைமைக்குப் போட்டி எழுந்தது. அப்போது எம்.ஜி.ஆர். விரும்பியவரே தலைவராக முடிந்தது என்றால், இந்த தனி மனிதனுக்கு அந்தக் கட்சியிலும் சரி, மக்கள் மத்தியிலும் சரி ஊடுறுவியிருந்த செல்வாக்கு நாட்டுக்கு நன்கு புரிந்தது.

    ஏதோவொரு சினிமா படப்பிடிப்புக்காக இவர் கோவா கடற்கரையில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் சார்ந்திருந்த கட்சியின் போராட்டமொன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. அப்போது மக்கள் மனங்களில் எழுந்த சந்தேகம், இவர், தான் சார்ந்த நடிப்புத் தொழிலுக்கு முதலுரிமை தருவாரா, அரசியலுக்கா என்று பார்த்துக் கொண்டிருந்தனர். கட்சிக்காரர்கள் கட்சிப்பணிதான் என்பர்; கலா ரசிகர்களோ அவர் சார்ந்த நடிப்புத் தொழில்தான் என்பர். இவர் இரண்டாவது நிலைப்பாட்டை எடுத்தார், அதனால் வீண் கசப்புக்களை எதிர்கொண்டார். ஆனாலும் அவர் தொழில் மீது வைத்திருந்த பற்று கட்சிப் பற்றைக் காட்டிலும் அதிகம் என்பதை வெளிப்படுத்தினார். அந்த வகையில் தன்னுடைய நம்பகத் தன்மையை இவர் மக்களுக்குச் சொல்லாமல் புரியவைத்தார் என்பதே என் எண்ணம்.

    ஆதியில் இவர் ஒரு காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜ் மீது மாறாத மரியாதை வைத்திருந்தார். அந்த வகையில் இவர் கதரே அணியவும் தொடங்கினார். 1953இல் இவரது அரசியல் நிலைப்பாட்டில் ஒரு மாற்றம் வந்தது. காங்கிரசில் ஆர்வம் கொண்டிருந்த இவர் தி.மு.க.வை நாடி வந்தார். அதற்குக் காரணம் சி.என்.அண்ணாதுரை எனும் மாமனிதர்தான். அவரே சொன்னார் எம்.ஜி.ஆரிடம். இவர் முகத்தைக் காட்டினால் போதும் லட்சக் கணக்கில் கட்சிக்கு வாக்குகள் வந்து குவியும் என்று. ஆம்! அதுதான் சரியான கணிப்பு, அதை சிலர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதால் வந்தது கட்சியில் பிணக்கு.

    1967இல் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். கட்சியின் பொருளாளர் ஆனார். 1967இல் சொந்த முறை விரோதம் காரணமாக இவர் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகி உயிர் பிழைத்தார். இவர் கழுத்தில் கட்டோடு படுத்திருக்கும் படம் சுவரொட்டிகளில் கண்டதுமே அவர் சாந்திருந்த கட்சிக்கு வாக்குகள் பேய்மழைபோல கொட்டித் தீர்த்து, அவர்கள் மாபெரும் வெற்றியை ஈட்டினார்கள் என்பது நாடு கண்ட வரலாற்று உண்மை. இப்படித் தனிமனிதனின் துன்பம் ஒரு கட்சியின் ஏற்றத்துக்கு வழிவகுத்தது என்றால் அவர் மக்கள் மனங்களில் எத்தனை ஆழமாகப் பதிந்திருக்கிறார் என்பதுதானே?

    ஒரு முறை தஞ்சையில் காவல்துறையில் விருது பெற்ற அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கும் அணிவகுப்பு மாலை 4 மணிக்கென்று ஏற்பாடாகியிருந்தது. நான் 3 மணி சுமாருக்கு அந்த போலீஸ் திடல் இருக்கும் கலெக்டர் அலுவலக சாலை வழியாக என்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டு வேறோரு சுற்றுப் பாதை வழியாகச் செல்லப் பணிக்கப்பட்டேன். சாலை வெறிச்சோடிக் கிடந்தும் அந்த திசையில் இருந்த என் அலுவலகம் செல்ல முடியாமல் சுற்றி வரும்படி நேர்ந்தது வருத்தமளித்தது. ஆனால் எம்.ஜி.ஆர். ஒரு முறை தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் திறந்த ஜீப்பில் வந்து கொண்டிருந்தார். எங்கள் குடியிருப்புப் பகுதி பாலத்தடியில் நாங்கள் பலர் பேசிக்கொண்டு நின்றிருந்ததைப் பார்த்து, அவர் ஜீப் நின்றது. புன்னகையோடு எங்களைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு வணங்கியதைக் கண்டு எங்களுக்கு திகைப்பு. நட்புரிமையோடு அவர் நடந்து கொண்டது ஒரு அரசியல் வாதிக்கே உரிய சாமர்த்தியமாகக் கூட இருக்கலாம். அதை உண்மை நட்புபோல நடந்துகொண்ட அந்த அருமையான காட்சி எங்கள் மனங்களில் அவர் நீங்கா இடம் பெற்றுவிட்டார்.

    அவர் காலமானார் எனும் செய்தி கேட்டு எங்களுக்கே ஏற்பட்ட சொந்த இழப்பைப் போல உணர்ந்தோம். இதற்கு முன்பு மகாத்மா காந்தி சுடப்பட்ட போதும், ஜவஹர்லால் நேரு காலமானபோதும், பெருந்தலைவர் இறந்து போனார் எனும் செய்தியைக் கேட்டபோதும் ஏற்பட்ட அதே உணர்வு எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து மனிதர் மாண்டார் எனும்போதும் உள்ளத்தை வருத்தியது, துக்கத்தை ஏற்படுத்தியது; அப்போதுதான் தெரிந்தது அவர் எங்கள் மனங்களில் எத்தனை உறுதியாக அமர்ந்திருக்கிறார் என்று. காலங்கள் மாறலாம்; கோலங்கள் மாறலாம், ஆனால் மனங்களில் படிந்த இதுபோன்ற உணர்வுகள் மட்டும் என்றென்றும் மாறாதிருக்கும்.

    முந்தைய காலங்களில் ஒரு தனி மனிதரின் புகழையும், பெருமைகளையும் உலகுக்கு அறிவிக்க அவரது மெய்க்கீர்த்தியை எழுதி கருங்கல்லில் வடித்து வைப்பார்கள். அப்படிப்பட்ட மெய்க்கீர்த்தியாக எம்.ஜி.ஆர். என்ற‌ இந்த தனிமனிதரின் புகழ், பெருமை அனைத்தையும் தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலோர், குறிப்பாக ஏழை, எளியவர்கள், பெண்மணிகள், இளைஞர்கள், குழந்தைகள் ஆகியோர் தத்தமது நெஞ்சங்களில் பதிந்து வைத்திருக்கிறார்கள். அது சென்ற தலைமுறையோடு முடிந்துபோன செய்தியல்ல, இந்த தலைமுறைக்கும் தொடர்ந்து அதே உணர்வை தந்து கொண்டிருக்கிறது என்பதை அவரது பழைய படங்கள் இப்போதும் திரையரங்குகளில் கூட்டம் அலைமோத பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதிலிருந்து தெரியவருகிறது. இது ஏதோ மார்லன் பிராண்டோவையோ, கிளிண்ட் ஈஸ்ட்வுட் நடித்த படங்களையோ பார்க்கும் உணர்வில் அல்ல, எம்.ஜி.ஆர். எனும் நம் காலத்தில் வாழ்ந்த ஒரு மாமனிதனின் புகழுக்கு மரியாதை செய்கிறோம் எனும் உணர்வில்தான் பார்க்கிறார்கள். காலத்தால் அழிக்கமுடியாத இடத்தை அந்த மனிதர் பெற்றிருந்தார் என்பதுதான் முக்காலும் உண்மை.

    Share
  • நாராயண தீர்த்தர் ஆராதனை

    தஞ்சை வெ. கோபாலன்                    

    தஞ்சாவூரை அடுத்த கண்டியூரிலிருந்து கல்லணை செல்லும் பாதையில் அமைந்துள்ள சிற்றூர் திருப்பூந்துருத்தி. இங்கு வரும் பிப்ரவரி 24ஆம் தேதி நாராயண தீர்த்தர் ஆராதனை நடைபெறவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து தினமும் இசை நிகழ்ச்சிகளும், உபன்யாசங்களும், வேத பாராயணங்களும் தொடர்ந்து நடைபெறுகின்றன. விழா 26ஆம் தேதி நிறைவு பெறுகிறது என்று ஸ்ரீநாராயண தீர்த்த ஸ்வாமிகள் ஆராதனை விழா குழுவினர் தெரிவிக்கின்றனர். ஆராதனை நடைபெறும் காலங்களில் குடமுருட்டி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண தீர்த்த ஸ்வாமிகள் சமாதியில் அபிஷேக அலங்கார அர்ச்சனை முதலானவைகள் சிறப்பாக நடைபெறும். யார் இந்த நாராயண தீர்த்தர்?

    ஆந்திர நாட்டில் பிறந்து அங்கு அருந்தவங்கள் புரிந்து ஆயர்குலக் கோமான் ஸ்ரீகண்ண பிரானின் லீலைகளால் கவரப்பட்டு, பக்தி வெள்ளத்தில் திளைத்து அங்கிருந்து புறப்பட்டு தேசாந்தரம் வந்து தமிழ்நாட்டில் வரகூர் எனும் புண்ணிய க்ஷேத்திரத்தில் வந்து தங்கி, அங்கு கோயில் கொண்டுள்ள வெங்கடேச பெருமாளின் அருளால் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி எனும் அற்புதமான இசை வடிவத்தை உருவாக்கித் தந்து, அத்துடன் சாண்டில்ய பக்தி ஸூத்ர வியாக்யானம், ஹரி பக்தி ஸுதார்ணவம், பாரிஜாதபஹரணம் போன்ற பல நூல்களை இயற்றியவர் இவர். நீண்ட நாட்கள் வரகூரில் தங்கிய பிறகு அங்கிருந்து புறப்பட்டு தன்னுடைய வாழ்வின் கடைசி கட்டத்தில் திருப்பூந்துருத்தி தலத்துக்கு வந்து சிலகாலம் வாழ்ந்தபின் அங்கேயே ஜீவசமாதி அடைந்தவர் நாராயண தீர்த்தர்.

    narayana-theerthar-2இவருடைய இயற்பெயர் தள்ளவஜுல கோவிந்த சாஸ்த்ருலு என்பது. 1650ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1745இல் ஜீவசமாதியடைந்தார். ஆந்திர பிரதேசத்தில் குண்டூர் மாவட்டத்தில் மங்களகிரிக்கருகில் பிறந்தவர். இவர் பிறந்த ஆண்டு நிச்சயமாக கணிக்கப்படவில்லை யென்றாலும், தஞ்சை சரஸ்வதி மகால் நூலக பண்டிதர்கள் இவர் பிறந்த வருஷத்தை 1650 என்று கணித்திருக்கிறார்கள். 1745இல் இவர் ஜீவசமாதி அடைந்த போது 95 ஆண்டுகள் வயதாகியிருக்க வேண்டும். மிக இளம் வயதிலேயே இசையை நன்கு பயின்றதோடு, புராணங்களிலும் ஆர்வம் கொண்டு படித்திருக்கிறார். வடமொழி இலக்கியங்களில் தீவிரமாகப் பயிற்ச்சி பெற்று அவற்றில் தேர்ந்து விளங்கினார். இளம் வயதில் இவருக்கு துறவறத்தில் பற்று மிகுந்து தன் வாழ்வை சமயம் சார்ந்த பணிகளுக்கென்று அர்ப்பணித்துக் கொண்டார்.

    இசைக் கலையில் தேர்ந்தவராக மட்டுமல்லாமல் நடனக் கலையிலும் இவர் தேர்ச்சி பெற்றிருந்தார். இவருடைய சங்கீத படைப்புக்களில் 34க்கும் மேற்பட்ட ராகங்களைக் கையாண்டிருக்கிறார். தாள வகைகளிலும் இவர் திரிபுட, ஆதி, ரூபகம், சாபு, ஜம்ப, மத்ய, விளம்ப, ஏக, அட தாளங்களைக் கையாண்டிருக்கிறார். இவருடைய பாடல்கள் பெரும்பாலும் நாட்டியத்தில் பயன்படுத்தி ஆடும் வகையில் இயற்றப்பட்டிருப்பதை உணர முடிகிறது. இவர் இயற்றிய நூல்கள் பதினைந்துக்கும் மேற்பட்டவை. இவைகளில் சில காசி இந்து சர்வகலாசாலையில் கிடைக்கின்றன. பாரிஜாதபஹரணம் எனும் நூல் தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் கிடைக்கிறது.

    ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி என்பது இவருடைய சிறப்பான படைப்பாக விளங்குகிறது. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் லீலைகளை விளக்கும் இந்த நூல் வடமொழியில் இயற்றப் பட்டிருக்கிறது. யமுனை நதிக்கரையில் கோபியர்களுடன் ஓடி விளையாடித் திரிந்த பால கிருஷ்ண லீலைகளை விளக்கும் வகையில் அமைந்த இந்த பாடல்கள் ருக்மணி கல்யாணம் வரையில் சொல்லப்பட்டிருக்கிறது. தரங்கம் எனும் சொல்லுக்கு அலைகள் என்பது பொருள். கடல் அலைகளைப் போல மேலே மேலே வந்து மோதும் இசை தாளக் கட்டில் இவரது தரங்கிணி அமைந்திருப்பதால் இந்தப் பெயர் பெற்றது. மிக எளிமையான அழகான வரிகளைக் கொண்டது இந்த தரங்கிணி. ஜெயதேவரின் அஷ்டபதி இவருக்கு உந்துதலாக இருந்திருக்கலாம்.

    இவர் வாழ்ந்த ஊரைச் சுற்றியுள்ள நடுக்காவேரி, வரகூர், திருப்பூந்துருத்தி ஆகிய இடங்களில் ஆற்றங்கரை தோப்புகளும், துறவுகளும் இவருடைய கவிதா சக்தியை ஊக்குவித்திருக்க வேண்டும். இவர் இப்படி இசையும், இறை பக்தியுமாக இருந்த நிலையில் இவருக்குத் தீராத வயிற்று நோய் வந்து துன்பப்படுத்தியது. தன் நோய் தீர ஏழுமலையான் அருள் நாடி அங்கு செல்ல உடலில் வலிமை தர வேண்டி இறைவனிடம் முறையிடலானார். அப்போது எழுந்த ஒரு தெய்வீக ஒலி இவர் கண்களுக்குத் தென்படும் ஒரு பன்றியைப் பின் தொடர்ந்து, அது எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் செல்லப் பணித்தது. அப்படி அவர் கண்ணில் பட்ட ஒரு பன்றியை இவர் பின் தொடர அது பூபதிராஜபுரம் எனும் ஊரைச் சென்றடைந்தது. அந்த ஊர்தான் இப்போது வரகூர் எனப்படும் தலம். இவரைப் பற்றி அறிந்திருந்த வரகூர் மக்கள் இவர் தங்கள் ஊருக்கு வருவதையறிந்து மகிழ்ச்சியடைந்தனர். இவருடைய வரவுக்குப் பின் அவ்வூர் மக்கள் இவரது வழிகாட்டுதலோடு அங்கு வெங்கடேசப் பெருமானுக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவித்தார். பின்னர் இவர் குடமுருட்டி ஆற்றின் கரையில் தன் வாழ்வைக் கழிக்கத் தொடங்கினார்.

    Share
  • சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்

    தஞ்சை வெ. கோபாலன்

    ராஜாஜி அவர்களுடைய நினைவு தினத்தையொட்டி அவரைப் பற்றிய சுவாரசியமான இரு நிகழ்வுகளை நினைவுகூரலாம் என நினைக்கிறேன். 1930 வேதாரண்யம் சென்று உப்பு அள்ளும் சத்தியாக்கிரகம் செய்வதற்காக நூறு தொண்டர்களுடன் ராஜாஜி திருச்சியிலிருந்து பதினைந்து நாட்கள் நடைப்பயணமாக ஊர் ஊராக நடந்து சென்றார். அப்படி அவர் கும்பகோணம் சென்றபோது அங்கு சத்தியாக்கிரகிகளை கும்பகோணம் நகர் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருக்கருகாவூர் பந்துலு ஐயர் என்பார் வரவேற்று இப்போதைய காந்தி பூங்கா இருக்குமிடத்தில் அப்போதிருந்த திடலில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். கூட்டம் தொடங்குமுன்பாக தொண்டர்கள் உண்டியல் குலுக்கி வசூல் செய்து கொண்டிருந்தனர். அப்போது சுயமரியாதை இயக்கத்தார் சிலர் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தனர். பின்னர் கூட்டம் தொடங்கும் சமயம் கூச்சலிட்டு மண்ணை வாரி இறைத்து இடையூறு செய்து கொண்டிருந்தனர். அவர்கள் விநியோகித்த துண்டுப் பிரசுரத்தில் “ராஜகோபாலாச்சாரியே! உன் பெயரோடு சக்கரவர்த்தி என்று போட்டுக் கொண்டிருக்கிறாயே, நீ எந்த நாட்டுக்கு சக்கரவர்த்தி?” என்று இருந்தது.

    rajajiகூட்டம் தொடங்கும் சமயம் ராஜாஜி மேடையேறிப் பேசத் தொடங்கினார். அப்போது ரகளையில் ஈடுபட்டவர்கள் அதே கேள்வியைக் கேட்டு கூச்சலிட்டனர். அப்போது ராஜாஜி சொன்னார், நான் இப்போது உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லப் போவதில்லை. நான் வேதாரண்யம் சென்று உப்பு சத்தியாக்கிரகம் செய்யச் சென்று கொண்டிருக்கிறேன், ஆகையால் என் கவனம் முழுவதும் அதில்தான் இருக்கும். ஆனால் உங்கள் கேள்விக்குப் வேறொரு நாளில் நான் பதில் சொல்வேன், பதிலாகவோ அல்லது செயலாகவோ அது இருக்கும் என்றார். அப்போது அவர் என்ன சொல்கிறார் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் அவர் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகப் பதவியேற்ற பிறகு முதன் முதலில் சென்னைக்கு வந்தபோது அவர் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாராக வந்திறங்கியபோதுதான் தெரிந்தது அவர் இப்போது இந்தியாவுக்கே சக்கரவர்த்தி என்பது. அதை அன்று ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் புரிந்து கொண்டார்களோ என்னவோ தெரியவில்லை.

    இன்னொரு சம்பவம். 1943இல் சென்னையில் ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆண்டுவிழாவில் திரு வி.க. கலந்து கொள்ள முடியாததால் அவருக்குப் பதிலாக பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தத்தை நிர்வாகி ராமானுஜாச்சாரியார் என்பார் பேச அழைத்திருந்தார். விழாவுக்கு ராஜாஜி தலைவர். டி.எம்.பி.மகாதேவன் ஆங்கிலத்திலும், தெலுங்கில் ஒருவரும், தமிழில் அ.ச.ஞா. அவர்களும் பேசினர். கூட்டம் தொடங்கியதிலிருந்து மேடையில் உட்கார்ந்திருந்த ராஜாஜி அருகில் வீற்றிருந்த அ.ச.ஞானசம்பந்தத்தை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்தார். ஏன் அவர் இப்படிப் பார்க்கிறார் என்பது பேராசிரியருக்குப் புரியவில்லை. அழைப்பிதழில் பேராசிரியரின் முதலெழுத்துக்களாகிய அ.ச. என்று போடாமல் வெறுமனே ஞானசம்பந்தம் ஆஃப் பச்சையப்பாஸ் என்று போடப்பட்டிருந்தது.

    கூட்டம் தொடங்கியது; முதலில் டி.எம்.பி.மகாதேவன் ஆங்கிலத்தில் பேசி முடித்துவிட்டார். அடுத்துப் பேச பேராசிரியரை ராஜாஜி அழைக்க வேண்டும். அப்படி அவர் அழைத்தபோதே ஏதோ வேண்டா வெறுப்பாக, “இப்போ மகாதேவன் பேசி முடிச்சுட்டார், அடுத்து ஞானசம்பந்தமாம், பச்சையப்பாவாம், அவர் இப்போ தமிழில் பேசுவார்” என்று அறிவித்தார். இதைக் கேட்டு பேராசிரியருக்கு வருத்தம் ஏற்பட்டது. எத்தனை பெரிய தலைவர், தன்னை இப்படி இளக்காரமாக அறிவித்து விட்டாரே என்று மனம் வருந்தி நேரடியாக அவையினரை விளித்துப் பேசாமல் பேசத் தொடங்கினார்.

    மேடையில் வைக்கப்பட்டிருந்த ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் படங்களை அவையோருக்குச் சுட்டிக் காண்பித்துவிட்டு அவர் பேசியது: “தயை கூர்ந்து எல்லோரும் இவ்விரு படங்களையும் கூர்ந்து கவனியுங்கள். இதில் தலையில் முண்டாசு கட்டிக்கிட்டு இருக்கிறாரே அவர் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அறிவே வடிவானவர். இதோ இங்கு பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறாரே கூட்டத்தின் தலைவர் அவரைப் போல அறிவில் சிறந்தவர். இதெல்லாம் எங்களுக்குத் தெரியாதா என்கிறீர்களா? அதற்காகத்தான் சொன்னேன், இத்தனை பெரிய அறிவின் வடிவம், அருகில் இருக்கிறதே ஒரு படம் தெய்வீகப் புன்னகையோடு ஒருவர், தற்குறி நம்பர் ஒன், இதை நான் சொல்லவில்லை, சுவாமி விவேகானந்தரே “You are the greatest illiterate in the world” என்று அவரிடமே நேரில் சொன்னார். அவருடைய காலில் போய் விழுந்தார் அறிவாளியான விவேகானந்தர். அதுதான் ஆச்சரியம். இந்த அறிவு எல்லாம் ஒரு பைசாவுக்குக்கூட பயன்படாது. அறிவைவிட உயர்ந்தது உணர்வு. அதைவிட உயர்ந்தது இறையுணர்வு; அதனையும் விட உயர்ந்தது இறையனுபவம். அந்த நிலையை அடைந்துவிட்டவர்கள் திருவடிகளில் அறிவுக் களஞ்சியங்கள் போய் விழுவதில் புதுமையொன்றுமில்லை” இப்படிப் பேசத் தொடங்கினார் அ.ச.ஞா.

    இருபது நிமிஷம் பேசியபின் பேராசிரியர் உட்கார்ந்துவிட்டார். ராஜாஜி இவரிடம் “இன்னும் கொஞ்சம் பேசலாமே!” என்றார். இல்லை எனக்கு இருபது நிமிஷங்கள்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது; அதனால் முடித்துவிட்டேன் என்றார் அ.ச.ஞா. ராஜாஜி சொன்னார், நான் தலைவர் என்கிற முறையில் இன்னொரு இருபது நிமிஷங்கள் தருகிறேன் பேசுங்கள் என்றார்; கூட்டத்தினரும் அதனை ஆமோதித்தனர். அ.ச.ஞா. இன்னொரு இருபது நிமிஷம் பேசும் வரை கூர்ந்து கேட்டார் ராஜாஜி.

    பேசி முடித்து உட்கார்ந்ததும் ராஜாஜி அ.ச.ஞா.விடம் கேட்ட கேள்வி, உங்கள் இனிஷியல் என்ன என்பது. அவர் அப்படி ஏன் கேட்டார் என்பது பேராசிரியருக்குப் புரிந்து விட்டது. உடனே அவர் ராஜாஜியிடம் “ஐயா, என்னுடைய இனிஷியல் T.L. அல்ல அ.ச. என்பதுதான்” என்றார். இவருடைய பேச்சு சாமர்த்தியத்தைப் புரிந்து கொண்ட ராஜாஜி “தஞ்சாவூர் ஜில்லாவோ?” என்றார். “இல்லை ஐயா, அரசங்குடி, திருச்சியை அடுத்த கல்லணைக்கு அருகில் உள்ள ஊர், தந்தையார் சரவண முதலியார்” என்றார் பேராசிரியர். பின்னர் ராஜாஜி பேச எழுந்து விட்டார். பேராசிரியர் பேசிய அதே தலைப்பைத் தொடர்ந்து ராஜாஜியும் விரிவாகப் பேசினார்.

    இது என்ன? ராஜாஜி பேராசிரியரை முறைத்துப் பார்த்ததற்கும், இவ்விருவருக்குமிடையே நடந்த உரையாடலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? சம்பந்தம் இருக்கிறது. ராஜாஜி முதன் மந்திரியாக இருந்த சமயம் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்த T.L.திருஞானசம்பந்தம் என்பார் ஒரு பெரிய மண் சட்டியில் மலத்தைக் கரைத்துக் கொண்டு வந்து ராஜாஜியின் வீட்டு வாசலில் போட்டு உடைத்தார். அந்த மனிதர்தான் இவர் என்று ராஜாஜி அ.ச.ஞானசம்பந்தத்தை நினைத்து விட்டார். அந்த மனிதருக்கு வயது அதிகம் இருக்குமே, இவர் இளைஞராக இருக்கிறாரே என்பதை நினைத்துத்தான் ராஜாஜி முறைத்து முறைத்து இவரைப் பார்த்திருக்கிறார். அவர் மலச் சட்டியைப் போட்டு உடைத்த கோபம் அவர் அறிமுகம் செய்து வைத்ததிலும் தெரிந்தது. இவர் வேறு ஆள் என்பதும், இவர் பேச்சில் இருந்த அழகும் ராஜாஜியைச் சிந்திக்க வைத்தது, போதாதற்கு அ.ச.ஞா. தன்னுடைய இனிஷியல் T.L. இல்லை அ.ச. என்றதும் புரிந்து கொண்டார் ராஜாஜி. இவ்விரு மேதைகளும் அடுத்தவர் அறியாமல் அரியதொரு நாடகத்தையே அங்கு அரங்கேற்றி விட்டனர். இந்த செய்தியை “நான் கண்ட பெரியவர்கள்” எனும் நூலில் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் அவர்களே எழுதியிருக்கிறார்.

    Share
  • அருள்மிகு ஸ்ரீவீரமாசக்தி பத்ரகாளியம்மன் துதி

    பாபநாசம் தாலுகா, அரையபுரம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும்
           அருள்மிகு ஸ்ரீவீரமாசக்தி பத்ரகாளியம்மன் துதி

    ஆக்கம்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர்,
    பாரதி இலக்கியப் பயிலகம், திருவையாறு.

                                        காப்பு
    புன்னைநல்லூர் மாரியம்மா, சமயபுரத் தாயே!

    சென்னையின் வேற்காட்டில் வாழுகின்ற மாரி!
    கன்யாகுமரி வாழ் கன்னித்தாய் குமரி
    பன்னாரி அம்மா, பகவதியம்மன் தாயே,
    ஊர்மக்கள் போற்றுகின்ற உக்ரகாளி அம்மா
    உறையூரை ஆளுகின்ற வெக்காளி அம்மா
    கருவூரில் குடிகொண்ட மாரியம்மா தாயே
    அரையபுரம் வாழ்கின்ற அருள்சக்தி காளி!
    நின்னைச் சரணடைந்த அடியார்கள் எல்லாம்
    பணிந்து நிற்கின்றார், அருள் செய்வாயம்மா!

                                          பாயிரம்
    அண்டமெலாம் படைத்தவளை அன்பருள்ளம் வாழ்பவளை
    எண்ணமெலாம் உணர்ந்தவளை இரங்கியருள் புரிபவளைக்
    கண்ணாரக் கண்டு உளமார வணங்கி மனதாரப் புகழ்ந்து
    தொண்டடிமை செய்து வணங்குவோம் பணிந்து.

                                             நூல்
    நீயே சரணமெனக் கூவி அழைத்திடுவோம்
    தாயே எமக்குறுதி தந்து காத்திடுவாய்
    வாயால் தாய்புகழை அனவரதம் பேசிடுவோம்
    ஓயாமல் உனதருளை அள்ளித் தந்திடுவாய்.          1.

    காளீ! வீரமாசக்தி எங்கள் பத்ரகாளியம்மா
    நாளும் நின்மலர்த்தாள் நாடிப் பணிகின்றோம்
    தாளில் வணங்கி அபயம் வேண்டுகின்றோம் 
    ஒளிகண்டு மலர்கின்ற மலர்போல அருள்புரிவாய்.    2.

    எண்ணுகின்ற காரியங்கள் இனிதே முடித்திடுவாய்
    பண்ணுகின்ற பணிகளிலே வெற்றியைத் தந்திடுவாய்
    துணையாக அம்மையே எப்போதும் இருந்திடுவாய்
    நண்ணுகின்ற செயலனைத்தும் நின்னுடைச் செயலன்றோ? 3.

    எண்ணிலா நன்மைகளைக் கணக்கின்றித் தந்துவிடு
    விண்ணவர் போலநாங்கள் வாழ்ந்திட வரம்தந்து 
    மண்ணிலே ஈடெவரும் இல்லையெனும் நிலையடைந்து
    வண்மையும் வளமையும் வழங்கி அருள்செய்வாய்.   4.

    தானமும் தவமும் கல்வியும் தான்தருவாய்
    வானத்துத் தாரகைபோல் வாழ்க்கையைத் தந்திடுவாய்
    மானத்தொடு வீரமும் மாண்பும் மிகத்தந்து
    ஞானக் குழந்தைகளாய் வாழும்வகை செய்திடுவாய். 5.

    பூதங்கள் ஐந்தும் ஒன்றாய் சேர்ந்ததுபோல்
    போதமாகி நின்றாய், பொறிகளைநீ கடந்தாய்
    தீதனைத்தும் நீக்கி தெய்வஅருள் தருவாய்
    வேதங்கள் உன்னுருவில் என்றும் நிலைத்திருக்கும். 6.

    காலத்தைக் கடந்தவள் நீ, கடிதினில் வந்திடுவாய்
    மாலவனின் தங்கையே எம் மனதினுள் புகுந்திடுவாய்
    எல்லாத் திசைகளிலும் அண்டங்கள் அனைத்தினிலும்
    செல்லும் திக்கனைத்தும் நின்புகழே நிலைத்திருக்கும்.      7.

    நீயே சரணமென நித்தநித்தம் கூவிடுவோம்
    தாயே எங்களுக்கு நெஞ்சினில் உரம் தருவாய்
    ஓயோம் ஒருபொழுதும் நின்புகழைப் பேசாமல்
    பேய்மனம் கொண்டோர்க்கும் நற்கதியைத் தந்திடுவாய்.     8.

    சித்தத்தில் துணிவுகொண்டு சிந்தையில் அன்புகொண்டு
    எத்திசையும் புகழ்மணக்கச் சீர்கொண்டு செல்வம்சேர
    இத்தரையில் வாழ்ந்திருக்கும் இனிதான நாட்களெல்லாம்
    புத்தியில் நினைவைத்துப் புகழோடு வாழ்ந்திருப்போம்.     9.

    மையுற்ற கண்களும் பொன்னணி கலன்களும்
    செய்கின்ற தீமைகளை உலகுக்குக் காட்டி
    பொய்யுறு வாழ்க்கையை அண்டாமல் ஓட்டி
    ஐயுறவின்றியே வாழ்வளிப்பாய் தாயே!               10.

    கோதுடையார் உறவில் மயங்கியே களித்து
    காதலும் இன்பமும் கணந்தோறும் வளர்த்து
    எதுவும் இவ்வுலகில் இயல்பென நினைத்து
    பூதலத்து வாழ்வின் இன்பத்தில் திளைத்து            11.

    இன்பமும் துன்பமும் உணர்விடை வைத்து
    முன்னும் பின்னும் துயர்களைக் கொடுத்து
    துன்பம் நீங்கிட நினதடி பணிந்து
    அன்பில் ஒன்றி நின்னையே சார்ந்தோம்.             12.

    தீது நேரிடினும் அச்சம் எமக்கில்லை
    எதுவும் நடப்பதிங்கு நின்றன் செயலாலன்றோ?
    ஆதரித்து இங்கு அருள்புரிய வேண்டுகின்றோம் 
    போத நல்லருளை எப்போதும் தருவாயே!            13.

    வேத மந்திரங்கள் எண்திசையும் ஒலிக்க
    மாதவன் கண்ணனின் குழலிசையில் மிதக்க
    சாதகப் பறவைகள் விண்ணில் பறக்க
    ஓதுவோம் நின்புகழ் நாவென்றும் இனிக்க.            14.

    காவி அணிந்திட்ட துறவுநிலை வேண்டா
    பாவித்துத் தலைமேல் கற்றை முடிவேண்டா
    ஆவிக்கு உற்றதோர் கருணையொன்றே போதும்
    பாவிகள் எம்மைக் கரையில் சேர்த்திடு.               15.

    தவமென்று பிரிதொரு சாதனையும் வேண்டா
    சிவத்தை மனத்திலேற்றி சிந்தையை நேராக்கி
    தவத்துக்கு அன்னையே நின்னையே துணைகொண்டு
    பவமே துலங்கிடப் பேரருள் தருவாய்.                16.

    சக்தியென்ற நின்பெயரை நித்தநித்தம் ஓதுவதால்
    சக்திதந்து எம்மனத்தில் உறுதிபட நின்றிருப்பாய்
    சக்தியின் சந்நிதியில் மனமுருக வேண்டிநின்றால்
    சக்திநீ பராசக்தி என்றும் துணையிருப்பாய்.           17.

    நலம்புரியும் சக்தீ, அரையபுரம் காளீ
    வலம்வந்தோம் நின்னைச் சரணடைந்தோம் நின்னை
    விலக்கிடுவாய் மக்கள் துன்பங்கள் எல்லாம்
    புலப்படுவாய் கண்ணில் பாமரராம் எமக்கு.           18.

    உயிரோடு உணர்வையும் ஓங்கி வளர்த்திடுவாய்
    பயிர்களை வளர்ப்பதுபோல் பத்ரகாளீ நீயும்
    வயிரம்போல் உடலையும், வண்ணமுறு மனத்தையும்
    பாவித்து நலம்புரிவாய் அன்னையே தினமும்.         19.

    உலகினைக் காத்திட ஆதவனாய்த் திரிவாய்
    மலையிலும் மண்ணிலும் மாரியாய் உதிர்வாய்
    நலங்கள் அனைத்தையும் நல்கிடும் காளீ
    குலத்தொடு மாண்பையும் கொடுத்திடு தாயே.         20.

    அன்புறு சோதியாய் அருள்தரும் காளியாய்
    இன்பமே என்றும் இருந்திடச் செய்வாய்
    பன்பலிநீக்கி பயனுறு செயல்கள் ஊக்கி
    மின்படு சக்தியாய்நீ மாநிலம்தனைக் காப்பாய்.        21.

    நயம்படு செயல்களைச் செய்துனை வணங்கி
    தயங்கிடா மனமும் திடங்கொண்ட பணிவும்
    தயவுடன் நின்னைப் பணிந்தெழும் எம்மை
    வியப்புறு வண்ணம் காத்திடல் நின்கடன்.             22.

    நினைக்கும் பொழுதினில் நின்னுரு தோன்றவும்
    ஊனினை உருக்கிநின் மாமலரடி பணியவும்
    தானெனும் அகந்தையை அகழ்ந்தே எடுக்கவும்
    தேனென ஒழுகும்நின் திருவருள் அருந்துவோம்.           23.

    விட்டில்பூச்சிகள் விளக்கிடை வீழ்தல் போல்
    மட்டில் கேடுகள் விளைக்கும் செயல்களைக்
    கூட்டியெம் வாழ்க்கையைத் துயர் கடலாக்கி
    வாட்டும் நிலைமையை மாற்றிட விழைகிறோம்.           24.

    வல்லவர் வெல்லவும் வண்மைகள் பெருகவும்
    நல்லவராக நாநிலத்து மக்கள் வாழவும்
    வல்லமை மிக்க வீரமாசக்தி பத்ரகாளீ
    நல்லருள் புரிவாய், நலங்களை அருள்வாய்.          25.

                                             நூற்பயன்
    நலம் தருவாள், குணம் தருவாள், நீண்ட வாழ்வருள்வாள்!

    பலம் தருவாள், கல்வியும் செல்வமும் கணக்கின்றித் தான்தருவாள்!
    நல்லோர் துணை தருவாள், கருணை மழை பொழிவாள்!
    வல்லமைமிக்க அரையபுரம் காளி வீரமாசக்தியை வணங்குவோர்க்கே!

    Share