தஞ்சை வெ. கோபாலன்

ராஜாஜி அவர்களுடைய நினைவு தினத்தையொட்டி அவரைப் பற்றிய சுவாரசியமான இரு நிகழ்வுகளை நினைவுகூரலாம் என நினைக்கிறேன். 1930 வேதாரண்யம் சென்று உப்பு அள்ளும் சத்தியாக்கிரகம் செய்வதற்காக நூறு தொண்டர்களுடன் ராஜாஜி திருச்சியிலிருந்து பதினைந்து நாட்கள் நடைப்பயணமாக ஊர் ஊராக நடந்து சென்றார். அப்படி அவர் கும்பகோணம் சென்றபோது அங்கு சத்தியாக்கிரகிகளை கும்பகோணம் நகர் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருக்கருகாவூர் பந்துலு ஐயர் என்பார் வரவேற்று இப்போதைய காந்தி பூங்கா இருக்குமிடத்தில் அப்போதிருந்த திடலில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். கூட்டம் தொடங்குமுன்பாக தொண்டர்கள் உண்டியல் குலுக்கி வசூல் செய்து கொண்டிருந்தனர். அப்போது சுயமரியாதை இயக்கத்தார் சிலர் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தனர். பின்னர் கூட்டம் தொடங்கும் சமயம் கூச்சலிட்டு மண்ணை வாரி இறைத்து இடையூறு செய்து கொண்டிருந்தனர். அவர்கள் விநியோகித்த துண்டுப் பிரசுரத்தில் “ராஜகோபாலாச்சாரியே! உன் பெயரோடு சக்கரவர்த்தி என்று போட்டுக் கொண்டிருக்கிறாயே, நீ எந்த நாட்டுக்கு சக்கரவர்த்தி?” என்று இருந்தது.

rajajiகூட்டம் தொடங்கும் சமயம் ராஜாஜி மேடையேறிப் பேசத் தொடங்கினார். அப்போது ரகளையில் ஈடுபட்டவர்கள் அதே கேள்வியைக் கேட்டு கூச்சலிட்டனர். அப்போது ராஜாஜி சொன்னார், நான் இப்போது உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லப் போவதில்லை. நான் வேதாரண்யம் சென்று உப்பு சத்தியாக்கிரகம் செய்யச் சென்று கொண்டிருக்கிறேன், ஆகையால் என் கவனம் முழுவதும் அதில்தான் இருக்கும். ஆனால் உங்கள் கேள்விக்குப் வேறொரு நாளில் நான் பதில் சொல்வேன், பதிலாகவோ அல்லது செயலாகவோ அது இருக்கும் என்றார். அப்போது அவர் என்ன சொல்கிறார் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் அவர் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகப் பதவியேற்ற பிறகு முதன் முதலில் சென்னைக்கு வந்தபோது அவர் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாராக வந்திறங்கியபோதுதான் தெரிந்தது அவர் இப்போது இந்தியாவுக்கே சக்கரவர்த்தி என்பது. அதை அன்று ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் புரிந்து கொண்டார்களோ என்னவோ தெரியவில்லை.

இன்னொரு சம்பவம். 1943இல் சென்னையில் ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆண்டுவிழாவில் திரு வி.க. கலந்து கொள்ள முடியாததால் அவருக்குப் பதிலாக பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தத்தை நிர்வாகி ராமானுஜாச்சாரியார் என்பார் பேச அழைத்திருந்தார். விழாவுக்கு ராஜாஜி தலைவர். டி.எம்.பி.மகாதேவன் ஆங்கிலத்திலும், தெலுங்கில் ஒருவரும், தமிழில் அ.ச.ஞா. அவர்களும் பேசினர். கூட்டம் தொடங்கியதிலிருந்து மேடையில் உட்கார்ந்திருந்த ராஜாஜி அருகில் வீற்றிருந்த அ.ச.ஞானசம்பந்தத்தை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்தார். ஏன் அவர் இப்படிப் பார்க்கிறார் என்பது பேராசிரியருக்குப் புரியவில்லை. அழைப்பிதழில் பேராசிரியரின் முதலெழுத்துக்களாகிய அ.ச. என்று போடாமல் வெறுமனே ஞானசம்பந்தம் ஆஃப் பச்சையப்பாஸ் என்று போடப்பட்டிருந்தது.

கூட்டம் தொடங்கியது; முதலில் டி.எம்.பி.மகாதேவன் ஆங்கிலத்தில் பேசி முடித்துவிட்டார். அடுத்துப் பேச பேராசிரியரை ராஜாஜி அழைக்க வேண்டும். அப்படி அவர் அழைத்தபோதே ஏதோ வேண்டா வெறுப்பாக, “இப்போ மகாதேவன் பேசி முடிச்சுட்டார், அடுத்து ஞானசம்பந்தமாம், பச்சையப்பாவாம், அவர் இப்போ தமிழில் பேசுவார்” என்று அறிவித்தார். இதைக் கேட்டு பேராசிரியருக்கு வருத்தம் ஏற்பட்டது. எத்தனை பெரிய தலைவர், தன்னை இப்படி இளக்காரமாக அறிவித்து விட்டாரே என்று மனம் வருந்தி நேரடியாக அவையினரை விளித்துப் பேசாமல் பேசத் தொடங்கினார்.

மேடையில் வைக்கப்பட்டிருந்த ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் படங்களை அவையோருக்குச் சுட்டிக் காண்பித்துவிட்டு அவர் பேசியது: “தயை கூர்ந்து எல்லோரும் இவ்விரு படங்களையும் கூர்ந்து கவனியுங்கள். இதில் தலையில் முண்டாசு கட்டிக்கிட்டு இருக்கிறாரே அவர் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அறிவே வடிவானவர். இதோ இங்கு பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறாரே கூட்டத்தின் தலைவர் அவரைப் போல அறிவில் சிறந்தவர். இதெல்லாம் எங்களுக்குத் தெரியாதா என்கிறீர்களா? அதற்காகத்தான் சொன்னேன், இத்தனை பெரிய அறிவின் வடிவம், அருகில் இருக்கிறதே ஒரு படம் தெய்வீகப் புன்னகையோடு ஒருவர், தற்குறி நம்பர் ஒன், இதை நான் சொல்லவில்லை, சுவாமி விவேகானந்தரே “You are the greatest illiterate in the world” என்று அவரிடமே நேரில் சொன்னார். அவருடைய காலில் போய் விழுந்தார் அறிவாளியான விவேகானந்தர். அதுதான் ஆச்சரியம். இந்த அறிவு எல்லாம் ஒரு பைசாவுக்குக்கூட பயன்படாது. அறிவைவிட உயர்ந்தது உணர்வு. அதைவிட உயர்ந்தது இறையுணர்வு; அதனையும் விட உயர்ந்தது இறையனுபவம். அந்த நிலையை அடைந்துவிட்டவர்கள் திருவடிகளில் அறிவுக் களஞ்சியங்கள் போய் விழுவதில் புதுமையொன்றுமில்லை” இப்படிப் பேசத் தொடங்கினார் அ.ச.ஞா.

இருபது நிமிஷம் பேசியபின் பேராசிரியர் உட்கார்ந்துவிட்டார். ராஜாஜி இவரிடம் “இன்னும் கொஞ்சம் பேசலாமே!” என்றார். இல்லை எனக்கு இருபது நிமிஷங்கள்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது; அதனால் முடித்துவிட்டேன் என்றார் அ.ச.ஞா. ராஜாஜி சொன்னார், நான் தலைவர் என்கிற முறையில் இன்னொரு இருபது நிமிஷங்கள் தருகிறேன் பேசுங்கள் என்றார்; கூட்டத்தினரும் அதனை ஆமோதித்தனர். அ.ச.ஞா. இன்னொரு இருபது நிமிஷம் பேசும் வரை கூர்ந்து கேட்டார் ராஜாஜி.

பேசி முடித்து உட்கார்ந்ததும் ராஜாஜி அ.ச.ஞா.விடம் கேட்ட கேள்வி, உங்கள் இனிஷியல் என்ன என்பது. அவர் அப்படி ஏன் கேட்டார் என்பது பேராசிரியருக்குப் புரிந்து விட்டது. உடனே அவர் ராஜாஜியிடம் “ஐயா, என்னுடைய இனிஷியல் T.L. அல்ல அ.ச. என்பதுதான்” என்றார். இவருடைய பேச்சு சாமர்த்தியத்தைப் புரிந்து கொண்ட ராஜாஜி “தஞ்சாவூர் ஜில்லாவோ?” என்றார். “இல்லை ஐயா, அரசங்குடி, திருச்சியை அடுத்த கல்லணைக்கு அருகில் உள்ள ஊர், தந்தையார் சரவண முதலியார்” என்றார் பேராசிரியர். பின்னர் ராஜாஜி பேச எழுந்து விட்டார். பேராசிரியர் பேசிய அதே தலைப்பைத் தொடர்ந்து ராஜாஜியும் விரிவாகப் பேசினார்.

இது என்ன? ராஜாஜி பேராசிரியரை முறைத்துப் பார்த்ததற்கும், இவ்விருவருக்குமிடையே நடந்த உரையாடலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? சம்பந்தம் இருக்கிறது. ராஜாஜி முதன் மந்திரியாக இருந்த சமயம் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்த T.L.திருஞானசம்பந்தம் என்பார் ஒரு பெரிய மண் சட்டியில் மலத்தைக் கரைத்துக் கொண்டு வந்து ராஜாஜியின் வீட்டு வாசலில் போட்டு உடைத்தார். அந்த மனிதர்தான் இவர் என்று ராஜாஜி அ.ச.ஞானசம்பந்தத்தை நினைத்து விட்டார். அந்த மனிதருக்கு வயது அதிகம் இருக்குமே, இவர் இளைஞராக இருக்கிறாரே என்பதை நினைத்துத்தான் ராஜாஜி முறைத்து முறைத்து இவரைப் பார்த்திருக்கிறார். அவர் மலச் சட்டியைப் போட்டு உடைத்த கோபம் அவர் அறிமுகம் செய்து வைத்ததிலும் தெரிந்தது. இவர் வேறு ஆள் என்பதும், இவர் பேச்சில் இருந்த அழகும் ராஜாஜியைச் சிந்திக்க வைத்தது, போதாதற்கு அ.ச.ஞா. தன்னுடைய இனிஷியல் T.L. இல்லை அ.ச. என்றதும் புரிந்து கொண்டார் ராஜாஜி. இவ்விரு மேதைகளும் அடுத்தவர் அறியாமல் அரியதொரு நாடகத்தையே அங்கு அரங்கேற்றி விட்டனர். இந்த செய்தியை “நான் கண்ட பெரியவர்கள்” எனும் நூலில் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் அவர்களே எழுதியிருக்கிறார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *