பாரதியாரின் இறுதிக் காலம்

தஞ்சை வெ.கோபாலன்.

Subramanya_Bharathi

(மகாகவி பாரதியாரின் இளைய மகள் சகுந்தலா “பாரதி — என் தந்தை” எனும் நூலில் தரும் தகவல்களிலிருந்து திரட்டப்பட்டது.)

பாரதியார் புதுச்சேரியிலிருந்து வெளியேறி கைதாகி கடலூர் சிறையில் சில நாட்கள் இருந்த பிறகு விடுதலையாகித் தன் மனைவியின் ஊரான கடையத்தில் போய் இருந்து வந்த நேரம். அவ்வூர் வாசம் பாரதிக்கு எந்தவிதத்திலும் ஒத்துப் போகவில்லை. அங்கு அவருக்கு இருந்த ஒரே நண்பரான நாராயண பிள்ளை என்பவரோடு அவருக்கு ஒரு மனவருத்தம் ஏற்பட்டுவிட்டது. அதன் பிறகு அந்த ஊரில் இருக்க அவருக்குப் பிடிக்கவில்லை. அப்போது பாரதியாரின் மைத்துனர் அப்பாத்துரை பாரதி இனி சென்னையில் வசிப்பதே நல்லது என்று அவரை சென்னை அனுப்ப வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார்.

சிறையிலிருந்து விடுதலையாகும்போது இவருக்கு அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. ஒருக்கால் இவர் கடையத்தைவிட்டு வெளியேறி சென்னைக்குச் செல்வதை அரசு தடுத்தால் என்ன செய்வது? ஆனால் கடையத்தில் இருந்த காலத்தில் இவர் ஊரைவிட்டு வெளியேறி மதுரை, காரைக்குடி, கானாடுகாத்தான் போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று சில நாட்கள் தங்கி வந்திருக்கிறார். அதையெல்லாம் அரசாங்கம் தடைசெய்யவில்லை என்பதால், இப்போது சென்னைக்குச் செல்வதையும் அவர்கள் தடை செய்ய மாட்டார்கள் என்று நினைத்தார்கள். முதல் உலக யுத்தம் முடிந்த பின்னர் புதுச்சேரியில் வந்து தங்கியிருந்த சுதேசிகளையும் வெளியேற அனுமதித்து விட்டார்கள். ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த மகான் அரவிந்தரின் சகோதரரும், வீர சாவர்க்கரும்கூட தீவாந்தர தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டார்கள். இந்தச் சூழ்நிலையில் தானும் சென்னைக்குப் போவதில் எந்தத் தடையும் இருக்காது என்றுணர்ந்து பாரதியாரும் சென்னைக்குப் புறப்பட்டு விட்டார்.

சென்னை செல்வதற்கு பாரதி புறப்பட்டபோது அவருடன் செல்லம்மாவும் மகள் சகுந்தலாவும் புறப்பட்டார்கள். கையில் பணம் இல்லாததால் ரயிலில் இவர்களுக்கு மூன்றாம் வகுப்புப் பயணத்துக்கான டிக்கெட்டுகள் வாங்கப்பட்டுவிட்டன. ரயில் பெட்டியில் கூட்டம் அதிகமாயிருந்தபடியால் ஒருவரோடொருவர் இடித்து மோதிக்கொண்டு, மரியாதையின்றி வசை பாடிக்கொண்டு வரும் கூட்டத்துக்கிடையில் தான் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்வது பாரதிக்கு அறவே பிடிக்கவில்லை.

“அடடா! கையில் பணமில்லை என்பதால் உயர்ந்த மெத்தை தைத்த ரயில் பெட்டியில் பயணம் செய்ய முடியவில்லை. சரி! அதற்காக ஆடுமாடுகளைப் போல ஒரே வண்டியில் கூட்டமாக ஏறிக்கொண்டு, நிற்கக்கூட இடமின்றி ஒருவரையொருவர் வசைபாடிக்கொண்டு சண்டையிட வேண்டுமா? அமைதியாக ஒருவருக்கொருவர் இடம்விட்டு விலகியிருந்து, உதவி செய்து பயணம் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அட! புதுத்துணி, பட்டுடைகள் வாங்கத்தான் பணம் இல்லை, இருக்கிற துணியையாவது அழுக்கு இல்லாமல், நாற்றமடிக்காமல் தோய்த்து உடுத்தக் கூடாதா? என்ன இழிவு நிலை நம் பாரத தேசத்துக்கு!” என்று மனம் வருந்திக்கொண்டிருந்தார் பாரதியார். அந்தச் சூழ்நிலை அவருக்குத் தலைவலியை உண்டாக்கிவிட்டது.

ரயில் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. அப்போது வெயிலும் கொளுத்திக் கொண்டிருந்தது. இவர்கள் பயணம் செய்த ரயில் வண்டி ஒரு நிலையம் தவறாமல் எங்கும் நின்று நின்று சென்றுகொண்டிருந்தது. அலுப்பு தரும் இந்தப் பயணம் சென்னை வரை எப்படி இருக்கும். செல்லம்மாள் மதுரை வந்ததும் விரைவாகச் செல்லும் ரயிலுக்கு மாறிவிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டாள். இவர்கள் ரயில் மதுரை நிலையத்துக்குள் நுழையும் அதே நேரத்தில் சென்னைக்குச் செல்லும் விரைவு ரயில் நிலையத்தைவிட்டுப் புறப்பட்டுவிட்டது. பெட்டி படுக்கைகளுடன் அதைப் பிடிக்க ஓடியும் பிடிக்க முடியாததால் பாரதியார் குடும்பம் மீண்டும் தங்கள் சுமைகளுடன் பழைய வண்டிக்கே வந்து சேர்ந்தது.

அவசரத்தில் ரயில் பெட்டிக்குள் ஏறும்போது எங்கோ அடிபட்டு செல்லம்மாள் காலிலிருந்து ரத்தம் கசியத் தொடங்கியது. பயணக் களைப்பு, சூழ்நிலையின் வெறுப்பு, இவை பாரதிக்குக் கோபத்தை உண்டாக்கியது. கோபம் வந்து என்ன செய்வது? அல்லது யாரை நோவது? உடன் பயணம் செய்தவர்கள் இவர்கள் படும் துன்பங்களையும், பாரதியாரின் கவுரவமான பேச்சு, உடல் நிலை இவற்றைக் கவனித்து இவர்களுக்கு உட்கார இடம் கொடுத்தனர். இரவும் வந்துவிட்டது. பாரதி சற்று கண் அயர்ந்தார், செல்லம்மா மட்டும் உடைமைகளை கவனித்துக் கொண்டு விழித்துக்கொண்டிருந்தார்.

அப்போது மதுரையிலிருந்து சென்னை செல்ல ‘மெயின் லைன்’ எனப்படும் தஞ்சாவூர், கும்பகோணம், மாயூரம் வழியாகத்தான் போக வேண்டும். அரியலூர் விருத்தாசலம் வழியான குறுக்குவழி அப்போது போடப்படவில்லை. அவர்கள் ரயில் பயணத்தில் வண்டி தஞ்சாவூருக்கு முன்னதாக ஒரு நிலையத்தில் நின்ற சமயம் அங்கு ஏழெட்டுப் பெண்களும், இரண்டு ஆண்களும் ஏராளமான சாமான்களுடன் பெட்டியில் ஏறினார்கள். அவர்களுள் ஒருவர் ஒரு பெஞ்சில் படுத்திருந்த பாரதியாரிடம் வந்து தன் கைத்தடியால் அவர் காலில் தட்டி “ஏய்! எழுந்திரு; உட்கார இடமில்லை, அதிலே படுக்கை என்ன?” என்று அதட்டினார்.

பாரதியார் அவரைக் கண்விழித்துப் பார்த்தார். அவர் பேசிய தோரணை, தட்டி எழுப்பிய அலட்சியம், குரலில் இருந்த அதிகாரம் இவை பாரதியாருக்குக் கோபத்தை உண்டாக்கிவிட்டது. அவர் எழுந்து “தூ”வென்று அவர் முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டுத் திரும்பப் படுத்துக் கொண்டுவிட்டார். அந்த மனிதருக்கு அதிர்ச்சி, அதிர்ந்து போய் நின்றுவிட்டார். சிறிது அதிர்ந்து போய் நின்றுவிட்டுக் கூச்சல் போட்டு பெருங்குரலெடுத்துத் திட்டத் தொடங்கிவிட்டார். அவரோடு உடன் வந்த பெண்களும் என்ன பேசுகிறார்கள் என்பதே தெரியாதபடிக்கு ஏதோ பெரும் கலவரம் செய்யத் தொடங்கி விட்டார்கள். இத்தனைக்கும் பாரதியார் எந்த எதிர்ப்புமின்றி அவர் பாட்டுக்குப் படுத்துக் கொண்டிருந்தார். உடன் பயணித்த மற்ற பயணிகளுக்கு இவர் மீது மரியாதையும் அன்பும் ஏற்பட்டிருந்தது. ஆகவே மற்றவர் எவரும் புதிதாக வந்தவர்கள் செய்த அமளியில் பங்கேற்கவில்லை. அந்த நிலையில் அடுத்த ரயில் நிலையம் வந்துவிட்டது. பாரதியாரை அவமதித்த அந்த மனிதன் கீழே இறங்கிப் போய் ஒரு போலீஸ்காரரை அழைத்துக் கொண்டு வந்து பாரதியாரைக் காட்டி அவரைக் கைது செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அப்போது அந்த ரயிலின் ‘கார்டு’ (Guard) அங்கு வந்து சேர்ந்தார். அவர் பாரதியாரைப் பார்த்துவிட்டு அங்கு வந்த போலீஸ்காரரிடம் ஏதோ மெல்லச் சொன்னார், உடனே அவர்கள் அனைவரும் அங்கிருந்து போய்விட்டனர் (அந்த ரயில் அதிகாரி பாரதியாரை அடையாளம் கண்டுகொண்டு, அவர் மிகப் பிரபலமானவர், கவிஞர் அவரைத் தொந்தரவு செய்யாதீர்கள் என்று சொல்லி எல்லோரையும் கலைந்து போகச் சொல்லிவிட்டார்). போலீஸ்காரர் பாரதியாரை அழைத்துக்கொண்டு போய்விடுவார்களோ என்று பயந்து போயிருந்த செல்லம்மாளுக்கும், சகுந்தலாவுக்கும் மனதில் நிம்மதி பிறந்தது. இவர்கள் பயணம் மட்டும் தடைப்படாது இரவு முழுவதும் தொடர்ந்து நடந்தது.

மறுநாள் விடியற்காலை ரயில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் வந்து நின்றது. அப்போது சென்னை சைதாப் பேட்டையில் ஆசிரியர் பயிற்சியில் இருந்த பாரதியாரின் தம்பி விஸ்வநாத ஐயர் வந்து இவர்களை சைதாப் பேட்டையில் இறங்கும்படியும், தன்னுடன் வந்துவிடும்படியும், வற்புறுத்தினார். தம்பியின் வற்புறுத்தலுக்கிணங்க இவர்கள் எழும்பூர் வரை டிக்கெட் வாங்கியிருந்தும் சைதாப் பேட்டையில் இறங்கிவிட்டனர்.

சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விஸ்வநாத ஐயர் அப்போது படித்துக் கொண்டிருந்தார். அவருடன் அவரது தாய்மாமனும், அவர் தாயார் வள்ளியம்மாளும் வசித்து வந்தனர். பாரதியாரின் தந்தை சின்னச்சாமி ஐயருக்கு இந்த வள்ளியம்மாள் இளைய மனைவி. தன்னுடைய மூத்தாள் மகன் என்று வித்தியாசம் பார்க்காமல் இந்த வள்ளியம்மாள் பாரதியாரிடமும், அவர் மனைவி செல்லம்மா, மகள் சகுந்தலா ஆகியோரிடம் அன்போடு நடந்து கொண்டார். அந்த வள்ளியம்மாள் வேண்டிக்கொண்டதால் பாரதியார் தான் சமஸ்கிருத மொழியில் எழுதியிருந்த “தேஹிமுதம் தேஹி ஸ்ரீராதே ராதே” எனும் பாடலைப் பாடிக் காண்பித்தார். வள்ளியம்மாளுக்கு அளவற்ற மகிழ்ச்சி.

இவர்கள் சில நாட்கள் சைதாப் பேட்டையில் தங்கியிருந்தார்கள். அப்போது பாரதியார் “சுதேசமித்திரன்” அலுவலகத்துக்குப் போய் ஆசிரியர் ஏ.ரங்கசாமி ஐயங்காரைச் சந்தித்தார். அவர், “பாரதி! இங்கே எப்போதும் உனக்கு ஒரு வேலை உண்டு. இப்போதே வேண்டுமானாலும் நீ பணிசெய்யத் தொடங்கலாம்” என்று சொல்லிவிட்டார். அங்கே அப்போதே பாரதியார் மீண்டும் “சுதேசமித்திரனில்” உதவி ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார். தொடர்ந்து பாரதி தினந்தோறும் காலையில் சைதாப் பேட்டையில் ரயில் ஏறி ஜார்ஜ் டவுனில் இறங்கி, எர்ரபாலு செட்டித் தெருவில் இருந்த ‘சுதேசமித்திரன்’ காரியாலயம் செல்லத் தொடங்கினார்.

தினமும் இவ்வளவு தூரம் பயணம் செய்வதைக் குறைத்துக் கொள்வதற்காக டவுனில் தம்பு செட்டித் தெருவில் ஒரு வீட்டின் பகுதியில் மாதம் பதினைந்து ரூபாய் வாடகைக்குக் குடிபோனார். அந்த இடம் மிகச் சிறிய இடம், பாரதிக்குப் பிடிக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் சுரேந்திரநாத் ஆர்யா பாரதியாருக்கு உதவ முன்வந்தார். ஆர்யா முதலில் அதிகம் சிரமங்களைச் சந்தித்து, ஒருவேளை சோற்றுக்குக்கூடக் கையேந்தும் நிலைமையில் உடல்நலம் கெட்டு மருத்துவ மனையில் கிடந்து அவதியுற்றவர். ஒரு டேனிஷ் மிஷன் கிறிஸ்தவ பாதிரியார் அவரை மதமாற்றம் செய்து பாதிரியாராக ஆக்கி, அமெரிக்காவுக்கு அனுப்பி மீண்டும் சென்னை வந்தவர். அமெரிக்காவில் இருந்தபோது ஒரு சுவிஸ் மாதைத் திருமணம் செய்து கொண்டிருந்தார். இவர் மனைவியுடன் சென்னை வேப்பேரியில் ரண்டால்ஸ் சாலையில் ஒரு பங்களாவில் வசித்து வந்தார்.

ஆர்யாவின் மனைவி பெயர் மார்த்தா. இந்திய பாணியில் உடை அணிவார். மார்த்தாவுக்கு தமிழ் தெரியாது, பாரதியாரின் மனைவி மகள் இவர்களுக்கு அவள் மொழி தெரியாது. இவர்கள் ஜாடைசெய்துதான் பேசிக் கொண்டார்கள். அந்த மார்த்தா இவர்களை மிகவும் அன்போடு கவனித்துக் கொண்டாள். வேறு வீடு கிடைக்கும் வரை வேப்பேரியில் அவர்களுடன் வசிக்க முடிவு செய்தனர் பாரதி குடும்பத்தினர். செல்லம்மாவின் ஆசாரத்துக்கு அந்த இடம் ஒத்துப் போகவில்லை. பிறகு குவளை கிருஷ்ணமாச்சாரியின் முயற்சியால் சென்னை திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவில் ஒரு வீட்டின் முன்பகுதியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அங்குக் குடிபெயர்ந்தார்கள். அந்த வீட்டில் இவர்கள் தவிர மேலும் மூன்று குடும்பங்கள் குடியிருந்தார்கள். இங்கு எல்லாக் குடித்தனக்காரர்களுமே அன்போடும் சண்டை சச்சரவு இல்லாமல் இருந்து வந்த நேரத்தில் தான் பாரதியை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானை தள்ளி சிலகாலம் உடல்நலம் கெட்டு பின்னர் உடல் தேறி வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது வயிற்றுக் கடுப்பு நோய் வந்து அதனால் அவர் அதே திருவல்லிக்கேணி இல்லத்தில் காலமானார். அப்போது அவருக்கு வயது 39. பாரதி அமரரான இடம் இப்போது அவரது நினைவு இல்லமாகத் திகழ்ந்து வருகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பாரதியாரின் இறுதிக் காலம்

  1. நனறி…..மகாகவியின் வாழ்க்கையின் இறுதிக்காலநிலையைப் பகிர்ந்து கொண்டதற்கு.

Leave a Reply

Your email address will not be published.