எப்போதும் நினைவை ஆட்கொள்பவரின் நினைவலைகள்…….

எஸ் வி வேணுகோபாலன்

bharathiyar

தமிழர் வாழ்க்கையில் திருவள்ளுவரும், மகாகவி பாரதியும் இளமைக்காலம் தொட்டுக் கூடவே வருகின்றனர். இயற்கையின் காட்சியானாலும், ஆட்சியாளர்மீது கோபம் என்றாலும் பாரதி உடனிருக்கிறார் எப்போதும். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஒவ்வொரு பொருள் கிடைக்கச் செய்பவை சிறந்த இலக்கிய வாசிப்பை வழங்குகின்றன. கம்யூனிஸ்ட் அறிக்கை ஓர் இலக்கிய பிரதி என்று சொல்லப்படுவது இங்கே நினைவுக்கு வருகிறது. குயில் பாட்டையும், பாஞ்சாலி சபதத்தையும் அதனால் தான் ஒவ்வொரு ரசிகரும் ஒவ்வொரு முறையில் கொண்டாடி வாசித்துக் கொண்டிருப்பது.

சென்னை புறநகர் ரயில் பயணத்தின்போது ஏதேனும் பொருள்களை விற்றுக் கொண்டுவரும் சுவாரசியமான சிலரைப் பார்க்கலாம். வரைபடங்களை விற்பவர் ஒருவர், அதுபற்றி விவரிப்பதே வித்தியாசமாக இருக்கும். தேசத்தின் ஆறுகள் எத்தனை, என்னென்ன இயற்கை வளம், மாநிலத் தலைநகரங்கள் பெயர் எல்லாம் தரப்பட்டிருக்கிறது என்று ஒவ்வொன்றாக சுவையாக சொல்லிக் கொண்டே செல்பவர், கொஞ்சம் நிறுத்தி, நான் இந்திய வரைபடத்தைத் தான் விற்கிறேன், தப்பில்லை, நாட்டைத் தான் விற்கக் கூடாது என்பார். அவரது விற்பனைக்கான கவன ஈர்ப்பு அது. ஆனால் உண்மையில் எத்தனை முக்கியமான கவன ஈர்ப்பு!

சம கால நடப்புகள்தானே நமது அன்றாடப் பேச்சில் சாதாரணமாக பிரதிபலிக்கிறது ! நாடாளுமன்றக் கூட்டுத் தொடர் நீட்சி இல்லை என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசியதை நாளேட்டில் வாசிக்கும் அன்பர் ஒருவர், நல்ல வேளை நாடு தப்பியது என்று மனத்திற்குள் சொல்லிக் கொள்கிறார். அடுத்த நிமிடம், அய்யோ, பாவிகள் அவசர சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வார்களே என்று முணுமுணுக்கிறார். இப்போதைக்குத் தலை தப்பி இருந்தாலும் நிலப் பறிப்பு விஷயத்தில் இன்னும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டி இருக்கிறதே. மகாகவியின் பாஞ்சாலி சபதம் நம் நெஞ்சில் சுழலத் தொடங்குகிறது.

கடந்த சில பத்தாண்டுகளில் நாட்டில் அதிகம் சுதேசி சுதேசி என்று பேசியவர்கள்தான் இப்போது ஆட்சியில் அமர்ந்தபடி எல்லாவற்றையும் விற்றுக் கொண்டிருப்பவர்கள். நடிப்பு சுதேசிகள் என்ற சொற்களை மகாகவி அப்போதே வைத்துப் புனைந்திருக்கிறார். அற்ப பிரச்சனைகளுக்காக பிரிந்து கிடப்பவர்களை எண்ணித் தான் நெஞ்சு பொறுக்குதில்லையே என்று வெடித்தார் அவர். பயமெனும் பேய்தனை அடிக்கவும், பொய்மைப் பாம்பைப் பிளந்து உயிரைக் குடிக்கவும் அறிவுறுத்திய அவரது குரல் இன்றும் எவ்வளவு தேவைப்படுகிறது! இங்கே திரும்பினாலும், அங்கே பார்த்தாலும் எங்காவது வாசிக்கப்பட்டோ, ரசிக்கப்பட்டோ, மேற்கோள் காட்டப்பட்டோ கலந்திருக்கின்றன அவரது கவிதைகள்.

நமது பண்பாட்டு வெளியைப்போல் புண்பட்டுக் கிடக்கும் இடம் வேறு ஒன்று உண்டா தெரியவில்லை. காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுதும் விளையாட்டு என்று யாரை வழக்கப்படுத்துவது இப்போது? படிப்பு என்பது பாடச் சுமை என்று பொருள்படும் காலத்தில் வாழ்கிறோம் நாம். குழந்தைகளைக் கொட்டடியில் அடைப்பதும் ஒன்றுதான், வெளிச்சமோ, காற்றோ புக முடியாத வகுப்பறைகளில் சிறைப்படுத்துவதும் ஒன்றுதான். வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ, வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ என்றார் அவர். தமிழ் மண்ணில் தாய்மொழியில் பேசினால் அபராதம் விதிக்கும் பள்ளியில் படிக்கின்றனர் நமது குழந்தைகள். இன்புறும் வேளையில் மட்டுமல்ல, எதிர்கொள்ளும் மோசமான நடப்புகளின் போதும் அவர் பாடல்களில்தான் நாம் முட்டிக் கொள்கிறோம்.

அறிவியல், வரலாறு, கதைகள், கவிதை தொகுதிகள் என்று விரிந்திருக்கும் புத்தகக் கடையில் தற்செயலாக பத்து நிமிடங்கள் நின்று கவனித்தால் ராசி பலன் புத்தகங்களே சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. சோதிடம் தனை இகழ் என்றார் மகாகவி. பொருளாதார ஏற்றத் தாழ்வு, நிச்சயமற்ற எதிர்காலம்…. பந்தயக் குதிரைகளாக வெறியூட்டப்பட்ட வாழ்க்கைக் களத்தில் மூட நம்பிக்கைகளும், ஜாதக பலன்களுமே புகலிடமாகின்றன. நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்கள் எல்லாம் சொப்பனம் தானோ, பல தோற்ற மயக்கங்களோ என்று பாடிய பாரதி, அந்தக் கவிதைக்கான முன்னுரையில் இவ்வுலகம் மாயை என்று சொல்வோரைப் பகடி செய்கிறார். நடுத்தர, உயர் நடுத்தர மக்கள் தேடித் தேடிக் கும்பிட்டுக் கொண்டிருக்கும் நமது நவீன சாமியார்களோ மாயை என்று சொல்லிக் கொண்டே சொகுசான ‘கார்பொரேட்’ குடில்களில் அமர்ந்து அருள் புரிந்து கொண்டிருக்கின்றனர்.

பிள்ளைகள் பெற்றதப் பூனை, அவை பேருக்கொரு நிறமாகும் என்று ஒரு வெள்ளை நிறப் பூனையை வருணித்த மகாகவி, எந்த நிறம் இருந்தாலும் அவை யாவும் ஒரே தரம் அன்றோ, இதில் ஏற்றம் என்ன தாழ்வு என்ன என்றும் கேட்டார். சாதியின் பெயரால் இன்றும் இரத்த வெள்ளத்தில் மனிதம் மூழ்கடிக்கப்படுகிறது. ஆதிக்க உணர்வும், ஒடுக்குமுறையும் மரபணுவிற்குள் ஊன்றப்பட்டிருக்கிறது. கீழ்சாதிப் பயலைப் பற்றி பாடத்தில் என்னத்துக்குப் படிக்க என்று பாட புத்தகங்களில் இருந்து வரலாறு கிழித்தெடுத்துக் கொளுத்தப் படுகிறது.

பாலின சமத்துவம், அரசியல் சமூக பண்பாட்டுப் பள்ளியில் தேர்வுக்குக் கேள்விகள் வராது என்று ஒதுக்கப்பட்ட பாடம். சுவாரசியம் அற்ற விவாதப் பொருள். நிறைவேற்ற வேண்டாத தீர்மானம். நடைமுறைப் படுத்த வற்புறுத்தல் அற்ற விதிமுறை. கவிழ்த்து வைக்கப் பட்டிருக்கும் உணவுத் தட்டு. எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை, ஆனால் இணையில்லை என்று மகாகவியின் கவிதை எப்போதோ உரு மாற்றி வாசிக்கப்படுகிறது.

ஆனால், சோர்வுக் கஞ்சி காய்ச்சும் கலயம் அல்ல மகாகவியின் கவிதை அடுப்பு. அது வெம்மையைத் தணித்து உற்சாகத் தெம்பூட்டும் ஆடி மாதக் கூழ் வார்க்கும் அமுத சுரபி! போராட்டக் கனலை ஊதி எழுப்பும் குழல். நம்பிக்கை நாற்றுக்கு வார்க்கும் நீர். அதன் வாசிப்பு அனுபவம், மாற்றங்களுக்கான தேடலுக்கு வாசல் வரை வந்து வழியனுப்பும் ஒரு தாயின் பரவச வழியனுப்புதல்.

இந்த நினைவு நாளில் மட்டுமல்ல, எப்போதும் நினைவில் இருப்பவை பாரதி குறித்த சிந்தனை அலைகள்.

&&&&&&&&&&&&&&&

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.