Advertisements
Featuredஇலக்கியம்கட்டுரைகள்

காலத்துக்குக் காலம் உணர்வுகள் மாறுபடுமா?

தஞ்சை வெ.கோபாலன்

                       11825115_1648443785371404_7891288417354296886_n

முன்பு சென்னை மாகாணத்தைப் பிரித்துத் தெலுங்கு மொழி பேசுவோர் அதிகமுள்ள பகுதிகளை ஆந்திரப் பிரதேசம் என்று தனி மானிலமாகப் பிரிக்க வேண்டுமெங்கிற கோரிக்கையை வைத்து பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதமிருந்தார். அப்போதைய ஆந்திரத் தலைவர்கள் டி.பிரகாசம், புலுசு சாம்பமூர்த்தி போன்ற பெரியவர்கள் அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வந்ததோடு பொட்டி ஸ்ரீராமுலுவின் உண்ணாவிரதத்துக்குத் தூண்டி அவர் இறப்பதையும் பார்த்திருந்தனர். உடனே தெலுங்கு மக்கள் வசிக்கும் பகுதிகள் தீப்பற்றி எரிந்தன. ஆந்திரம் கேட்டதோடு “மதறாஸ் மனதே” என்கிற கோஷமும் வானைப் பிளந்தது. தமிழகத்திலிருந்து வடக்கே செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. தமிழர்கள் தாக்கப்பட்டனர். விளைவு, ஜவஹர்லால் நேரு மனமிரங்கி தனி ஆந்திரம் அமைக்க ஒப்புக்கொண்டார். இது வரலாறு. ஒரு தனிமனிதனின் உண்ணாவிரதம், அவர் இறப்பு, அதனைத் தொடர்ந்து நடந்த வன்முறை வெறியாட்டங்கள், மத்திய அரசு இறங்கி வந்து கோரிக்கையை அங்கீகரித்தது இவை அனைத்தையும் நம் காலத்தில் பார்த்த நிகழ்ச்சிகள்.

ஆந்திரம் பிரிந்து போய் தனி மானிலம் ஆன பின்பு மலபார் உள்ளிட்ட பகுதிகளைக் கொண்ட கேரளம் உருவானதும், தமிழ் பேசும் எஞ்சிய சென்னை மாகாண பகுதிகளுக்குத் தமிழ் நாடு என்று பெயரிட வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து சங்கரலிங்க நாடார் என்பவர் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். அப்போது பெயர் மாற்றம் நிகழவில்லையாயினும் சி.என்.அண்ணாதுரை முதலமைச்சரான பின்பு தமிழ் நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.

1937இல் ராஜாஜி சென்னை மாகாண முதலமைச்சரான போது சேலம் ஜில்லா முழுவதும் முழு மது ஒழிப்பு அமுல் படுத்தப்பட்டது. அது வெற்றிகரமாக செயல்பட்டதைத் தொடர்ந்து 1947க்குப் பிறகு சென்னை மாகாணம் முழுவதும் மதுவிலக்கு அமுல் படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டது. 1947 ஆகஸ்ட் 15இல் நடந்த சுதந்திர தின பேரணிகளில் பெரிதும் மக்கள் கவனத்தைக் கவர்ந்த பகுதி, குடி ஒழிந்ததைக் கொண்டாடும் வகையில், சிலர் குடிகாரர்கள் போல் நடந்து கொண்டு, கையில் வடைக்கு பதில் தவக்களையைக் கடிப்பதுபோல் பாவனை செய்து, மனைவியை அடிக்கும் குடிகாரனை உருவக்கப்படுத்தி வேடமிட்டும் வந்தவர்களை மக்கள் பார்த்து மகிழ்ந்து கைதட்டி ஆர்ப்பரித்த காட்சிகளைக் கண்டிருக்கிறேன். மதுவிலக்கு மிகத் திறமையாகக் கையாளப்பட்டுதான் வந்தது. மதுவிலக்குப் போலீஸ் துறை தனித்து இயங்கியது. அது திறமையோடு இயங்கியதையும் பார்த்திருக்கிறேன்.

திருட்டு குற்றம்தான்; கொலை செய்வதும் குற்றம்தான்; இந்தியன் தண்டனை சட்டம் பல்வேறு செயல்களைக் குற்றம் என்று சொல்கிறது. அப்படி சட்டம் சொன்னாலும், அந்தக் குற்றங்கள் ஆங்காங்கே சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன அல்லவா? அதற்காக குற்றம் நடக்கிறது என்பதற்காகச் சட்டத்தை நீக்கவில்லையே. மதுவிலக்கு அமுலில் இருந்தபோதும், சில இடங்களில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதும், திருட்டுத் தனமாக கள் இறக்கிக் குடிப்பதும் இருந்துகொண்டுதான் இருந்தன. அப்படிப்பட்டோரைப் பிடிக்கக் காவல்துறையும் இருந்தது. குடித்துவிட்டு வருபவன், குடிக்கக் கையில் சாராயம் எடுத்துச் செல்வது, சாராயம் திருட்டுத் தனமாகக் காய்ச்சுவது இவற்றைப் போலீஸ் தடுக்கத்தான் செய்தது. அப்படியும் குற்றங்கள் நடந்து கொண்டு இருந்தது. அதற்காக இந்த சட்டம் வேண்டாம், மக்கள் தாராளமாகக் குடிக்கட்டும், இந்த விற்பனையைத் தனியார் வசம் விட்டுவிட்டால் லாபம் அனைத்தும் தனியாருக்குப் போய்விடும் என்று அரசாங்கமே சாராய வியாபாரம் செய்யத் தனிப் பிரிவு ஏற்படுத்தி, அதன் மூலம் ஏராளமான ‘டாஸ்மாக்’ கடைகளைத் திறந்து, மக்களை, குடிகாரர்களை மட்டுமல்ல, மாணவர்களை, சிறுவர்களை, இளம் பெண்களை, வேலைக்குப் போகும் படித்த பெண்களை, இளைஞர்களை, முதியவர்களை, பொறுப்பற்ற மனிதர்களைக் குடிகாரர்களாக ஆக்கியப் பெருமை யாரைச் சாரும்? எண்ணிப் பார்ப்போம்.

ராஜாஜி ஒரு நாள் விடியற்காலையில் காரில் புறப்பட்டு எங்கோ செல்கிறார். கடற்கரைசாலைக்குச் சென்று அங்கு நடை பயிற்சி செய்வார் என்று நினைத்தார்கள். ஆனால் அவரோ முக்கியமான நபர் ஒருவரைச் சந்தித்து, அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு, ஐயா! ஒரு தலைமுறை மற்ந்து போயிருக்கிற குடிப்பழக்கத்தை மீண்டும் கடைகளைத் திறந்து மக்களைக் கெடுத்து விடாதீர்கள் என்று கெஞ்சினார் என்கிறார்கள். ஆனால் அவரோ, அவர் சொற்களைக் கேட்காததோடு, அவர் வேறு விஷயமாய்த் தன்னைப் பார்த்தார் என்று விஷயத்தைத் திசைதிருப்பி விட்டுவிட்டார். அன்று பிடித்தது சனியன் தமிழ் நாட்டுக்கு. எங்கும் குடிகாரர்கள், சாலையில் எதிர்ப்படும் பத்துப் பேரில் எட்டு பேர் குடித்துவிட்டு வருகிறவர்கள். கண்கள் சிவந்து, உடை கசங்கி, நிலை தடுமாறி, வாய் குழறி, உடை மட்டும் நாகரிகமாக வரும் எத்தனை பேரை தினமும் பார்க்கிறோம். எத்தனை படிக்காத பெண்மணிகள் குடிகார கணவன் மார்களிடம் அடிபட்டு, உதைபட்டு, தான் சம்பாதிக்கும் காசையும் அவன் குடிப்பதற்காக இழந்துவிட்டு, தான் வேலை செய்யும் வீடுகளில் வந்து புலம்புவதைக் காண முடிகிறது. வெள்ளிக்கிழமை மாலையானால் போதும், குடிகாரக் கடைகளின் வாசலில்தான் எத்தனை விதமான ஆசாமிகள். படித்தவர்கள், காரில் வருபவர்கள், உழைப்பாளிகள், பிறருக்கு வாங்கிக் கொண்டு போக வந்திருக்கும் சிறுவர்கள், தாங்களே குடிப்பதற்காக நிற்கும் பையங்கள், பெண்கள், உழைக்கும் பெண்கள் இப்படி எத்தனை விதம்.

ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் தினமும் குடித்துவிட்டு கண்களை மூடிய வண்ணம் தன் இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்பும் காட்சியைப் பார்த்து வருகிறேன். அடிக்கடி அவர் யார் மீதாவது வண்டியை மோதிவிட்டு பஞ்சாயத்து பண்ணிக் கொண்டிருப்பதையும் பார்த்து வருந்தியிருக்கிறேன். ஒரு முறை அவர் மூக்குக்கண்ணாடி தூர விழுந்து கிடந்ததை எடுத்து அவரிடம் கொடுத்த போது மூடிய கண்களோடு, என்னைக் கன்னத்தைத் தொட்டு நன்றி சொன்னதையும் மூக்கைப் பொத்திக் கொண்டு ஏற்றுக் கொண்டேன். இதுதான் இன்றைய தமிழ் நாடு.

இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல, ஜூலை 31 அன்று கன்யாகுமரிக்கு அருகில் டெலிபோன் டவர் ஒன்றின் மீது ஏறி மதுவிலக்கைக் கொண்டு வரச்சொல்லி போராடிய காந்தியவாதி யொருவர் இறந்து போன கொடுமையையும் ஊடகங்கள் இடைவிடாது ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். பொட்டி ஸ்ரீராமுலு இறப்பு நடந்த போது இருந்த எதிர் விளைவுகள் போலவே, சங்கரலிங்க நாடாரின் இறப்புக்கு இருந்த அனுதாபம் போலவே இந்த காந்தியவாதியின் இறப்புக்கு ஏன் ஏற்படவில்லை என்று நெடு நேரம் யோசித்ததில் புரிந்தது, நம்மில் பலர் மதுவிலக்கு வேண்டும் என்பதிலோ, அல்லது இந்தக் கோரிக்கைக்காக ஒரு நபர் தன் உயிரை இழந்தது குறித்தோ சற்றும் கவலைப்படவில்லை என்பது புரிந்தது. சின்ன அண்ணாமலை ஒரு பழமொழி சொல்வார்: “ஏற்கனவே பையனுக்கு தமிழே தள்ளாபுள்ளா, இதிலே ஆங்கிலம் தலைகீழ் பாடமாம்” என்பார். குடிப்பழக்கத்தை ஒழித்திட நம்மவர்கள் உண்மையிலேயே அக்கறை கொண்டிருக்கிறார்களா என்பது தெரியவில்லை. இல்லாவிட்டால் ஒரு காந்தியவாதி மிக உயர்மான டவரில் ஏறி உயிர்விட்ட பின்பும் சற்றும் அயர்ந்து விடாமல் தங்கள் வயிற்றுப்பாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கும் நம்மவர்களைப் பார்த்து வருந்துவதா? துக்கப்படுவதா? போராடத் துடிப்பதா? என்ன செய்வது? அதை முடிவு செய்யவாவது மனம் தெளிவாக இருக்க வேண்டுமல்லவா?

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comments (3)

 1. Avatar

  Sindhika vaikum katturai

 2. Avatar

  தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்பதெல்லாம் இப்போது  ஏதாவது விழாக்களிலும்,பள்ளி ஆண்டுவிழாக்களில் பேச்சுப்போட்டி தலைப்புகளிலோ,டான்ஸாகவோதான் பார்க்க முடியும்.மனிதர்களை மாற்றியது எது?யார்?
  (காலத்திற்குத் தகுந்தாற்போல மாறத் தயாராகிவிட்டார்கள்).மக்கள்மீது தவறு கிடையாது.இவர் இப்படி செ்ய்தால் இவருக்குப் பின்னால் எந்தக் கட்சி இருக்குமோ! அதனால் இவருக்கும்,இவரது குடும்பத்திற்கும் என்ன இலாபமோ! என நினைக்கத் தோன்றும் உலகமாகி விட்டது.இந்தியா என்றில்லை.உலக நாடுகளே அப்படித்தான் உள்ளது.தன் பெண்டு-பாடல் எல்லாம் யாருக்கும் நினைவில் இல்லை.இதில் குறிப்பிட்டுள்ள சாதித் தொல்லைகள் வேறு ஒரு காரணம்.இந்த சாதி என்றால் இந்த கட்சி,இந்தத் தொலைக்காட்சி என்று முத்திரை குத்தப்பட்டுவிட்டது.உலக நாட்டில் உள்ளவர்கள் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் உள்ள நல்ல பழக்கங்களை எடுத்து வாழ்ந்து வருகிறார்கள்.நம் நாட்டில் உள்ளவர்களோ அங்கிருக்கும்  பொருந்தாத பண்பாட்டிற்கு அடிமையாகி வருகிறார்கள்.இதனால் வந்த விளைவுதான் இது.மாற்றம் வந்தால் நல்லது.மாற்றம்தர யார் மனதை மாற்ற இயலும்?நல்லோரெல்லாம் மண்ணுக்குள்ளே!ஒன்றுப்ட்டால் உண்டு வாழ்வே எனத் திரும்ப இன்னொரு பாரதியை தமிழ்நாடு பெற்றுள்ளதா எனத் தெரியவில்லை.(மதுவிலக்கு கேட்பது சரி!அதற்கு ஈடாக வருமானம் வர வழி என்ன?யோசிப்பார்களா மக்கள்! மக்களால் உருவானதுதான் அரசு.கருவூலப் பனிக்கட்டிமக்களுக்காகச் செலவிடும்போது எப்படி பலர் கை மாறி மிகவும் சிறிதாகி விடுகிறது?
  அரசில் குறை காணும்போது கூறப்படும் கருத்துகள் ஏற்புடையாயின் நடைமுறைப்படுத்தலாம் அல்லவா?கை சுத்தமாக இருக்கவேண்டும்.இப்போதெல்லாம் இணையத்தில் வசதி எல்லாம்கூட வந்துவிட்டது.அதற்காக ஊர்வலம்,போராட்டம் தேவையா?அந்தக்காலத்தில் தேவை.இப்போது காவல்ர்களுக்கு இவர்களைப் பார்க்கவே நேரம் என்றால் நாட்டை எப்படிக் காப்பது?நாட்டின் பாதுகாப்புதானே அதிமுக்கியம்.) தமிழில் ஒரு பழமொழி உண்டு.உண்ட சோற்றுக்கு ஊறுகாய் தேடுவது போல என்று.நடந்து முடிந்ததைப் பேசிக் கொண்டிருப்பது மடமை.நடக்க இருப்பதை எப்படி எடுத்துச் செல்வதுதான் அறிவுடைமை.

 3. Avatar

  காலம் மாறுகிறது; காலத்துக்கேற்ப எண்ணங்களும் மாறுகிறது. இஃதெல்லாம் நாம் அறிந்த உண்மைதான். ஆனால் நம் கண்முன் நடக்கும் அநீதிகளைக் கண்டும் காணாமல், எங்கேயோ எண்ணெய் மழை பெய்கிறது என்று அலட்சியமாய் இருக்கும் போக்குதான் கவலையளிக்கிறது. தேவையற்ற பிரச்சனைகளுக்காகத் தெருவில் வந்து போராடுகின்ற நம்மவர்கள், அவசியத் தேவைகளுக்காகவும், மக்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கவும் வெளியில் வரத் தயங்கும் போக்கு கண்டனத்துக்குரியது. சுயநலத் தீவில் சுகமாக வாழ நினைப்போருக்கு சமூக சிந்தனை வளரவேண்டும், அநீதிகளை எதிர்க்கும் உள்ளத் துணிவு வேண்டும், பிறர் துயரைத் தம் துயர்போல் கருதும் நமது பாரம்பரிய போக்கு காக்கப்பட வேண்டுமென்பதே என் கட்டுரையின் நோக்கம். 

Comment here