சத்தியமணி

kalam

கலமென்று விரைந்தாய்

கலாமென்று உரைத்தாய்
காலமென்று கரைந்தாய்
காலார துயின்றாய்

இருக்கின்ற போதுன்னை
எத்தனை பேர் அறிந்தார்
இல்லாதபோதுன்னை
எத்தனை பேர் சுமந்தார்

வழித் துணையாய் நிழலாக‌
எத்தனை பேர் தொடர்ந்தார்
தன்வழியில் எத்தனையோ
தட‌மாற்றி மறைந்தார்

புகைப்படம் உடன் எடுத்தோர்
முகப்பதிவில் பகிர்ந்தார்
புரியாமல் உடல் எடுத்தார் (அவர் என)
புரிந்து நீ நகைத்தாய்

மதமென்றும் இனமென்றும்
உறவுரைத்து அணைத்தார்
மதியாலே அவரெண்ணம்
அறிந்துநீ அணைந்தாய்

அடுத்துவரும் தலைமுறையும்
ஆற்றல்பெற அலைந்தாய்
அணுயுகமும் (ஏவு) கணைமுகமும்
அவதியுற பிரிந்தாய்

திசைகாட்டி உரையாற்றி
முயற்சிபல புரிந்தாய்
அசையாத பாரதத்தை
முன்னேற்ற முனைந்தாய்

பள்ளியின் வாசல்களை
பாதங்களில் அடைந்தாய்
பல்வேறு அறிவுரையால்
ஆற்றல்மழை பொழிந்தாய்

 

அரசியலில் கலக்காமல்
அமுதமெனத் திகழ்ந்தாய்
அலைகேசம் குலுங்கலுடன்
அன்புகவி பகிர்ந்தாய்

தீராதப் பிரிவுதுயர்
தனைகொடுத்து பிரிந்தாய்
திருந்தாத பாரதத்தில்
இருந்து உயிர் துரந்தாய்

வரலாறு வற்றாது
உனைக் காட்டி வாழ்ந்தால்
வரமுண்டு வளமுண்டு
உனைப் போல வாழ்ந்தால்

கலாம் உனக்கு சலாம்

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “கலாம் உனக்கு சலாம்

  1. கலாமிக்கு தாங்கள் அணிவித்த புகழஞ்சலி மிகவும் அருமை .

  2. கவிதைப் படித்த / பார்த்த சாரதிக்கு நன்றி வாழிய கலாம்

  3. மறைந்த முன்னாள் ஜனாதிபதி . விஞ்ஞானி அப்துல்கலாம் எல்லாருடைய இதயங்களிலும் என்றென்றும் இருப்பார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *