அந்தணன் என பாரதியார் அறிவித்த சான்றோர்

தஞ்சை வெ.கோபாலன்.

 

வேதபுரம் என்று மகாகவி பாரதியாரால் அழைக்கப்படும் புதுவையில் வசித்தவர் கனகலிங்கம். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அந்த கனகலிங்கத்தின்பால் பாரதிக்கு மிகுந்த அன்பு உண்டு. பொதுவாகவே அந்தக் காலத்தில் மிகவும் சமூக நிந்தனைக்குட்பட்டிருந்த இந்த வகுப்பினர்பால் பாரதிக்கு மிகுந்த அக்கறை உண்டு. அவர் எழுதுகிறார்:–

“அவர்களையெல்லாம் ஒன்று திரட்டு. உடனே விபூதி, நாமத்தைப் பூசு. பள்ளிக்கூடம் வைத்துக் கொடு. கிணறு வெட்டிக் கொடு. ஸமத்துவம் கொண்டாடு. நான் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறேன். அவர்களை யெல்லாம் ஒன்று சேர்த்து இந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள். நம்முடைய பலத்தைச் சிதற விடாதேயுங்கள். மடாதிபதிகளே! நாட்டுக்கோட்டை செட்டிமார்களே! இந்த விஷயத்தில் நீங்கள் பணத்தை வாரிச் செலவிடுங்கள். இது நல்ல பயந்தரக்கூடிய கைங்கர்யம் தெய்வத்தின் கருணைக்குப் பாத்திரமான கைங்கரியம்.”

இந்த கனகலிங்கம் நாகலிங்கம் எனும் வள்ளுவப் பண்டாரத்தைத் தன் கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார். பாரதியார் இந்தக் நாகலிங்கத்தைப் பற்றிச் சொல்லும்போது “எனக்கும் ஒரு வள்ளுவப் பையனுக்கும் சிநேகம். அவனுடைய கோயில் அம்மன் மீது நான் பாட்டுக் கட்டிக் கொடுத்தேன்.* (“தேசமுத்துமாரி” எனும் பாட்டு). அவன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கும் வருவதுண்டு.” இப்படி பாரதியார் எழுதுகிறார்.

பாரதியாரின் இரண்டாவது பெண் சகுந்தலா “என் தந்தை” எனும் நூலொன்று எழுதியிருக்கிறார். அதில் அவர் எழுதுவ்தாவது: “புதுவையை அடுத்துள்ள உப்பளத்தில் ‘தேசமுத்து மாரியம்மன் கோயில்’ என ஒரு மாரியம்மன் கோயில் உண்டு. அதில் ஒரு வள்ளுவ இளைஞன் பூஜை செய்து வந்தான். ‘அவன் தேவி பூஜை செய்கிறான். பிராமணத் தொழில் நடத்துகிறான்’ என்று என் தந்தை அவனுக்கு வேத முறைப்படி பூணூல் போட்டு வைத்தார். அந்தத் தேச முத்துமாரியம்மன் பேரில் ஒரு பாட்டு எழுதினார்.
‘ஒருவன் தன் செய்கையினாலும், தர்மத்தினாலுமே தனது ஜாதிக்கு உரியவனாகிறான், பிறவியினாலல்ல’ என்பதே என் தந்தையாரின் கருத்து. அதை ஞான ரதத்தில் கண்வ ரிஷிகள் உபதேச மூலமாகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.”

கனகலிங்கம் மகாகவி பாரதியாரை “எனது குருநாதர்” என்று அழைத்து அதே தலைப்பில் ஒரு நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். கனகலிங்கத்துக்குப் பாரதியார் மீது ஏன் அப்படியொரு பற்று, பாசம், பக்தி? அதைச் சற்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாமே!

கனகலிங்கம் பாரதியார் வீட்டுக்கு அடிக்கடிப் போகும் வழக்கம் உண்டு; அது தவிர கடற்கரை சாலையில் உலாவும் போதும் அவரை அடிக்கடி சந்தித்திருக்கிறார். பாரதியாருடன் எப்படியாவது உரையாட வேண்டும் எனும் அவா அவருக்கு இருந்தது. அவர் விரும்பியபடி பாரதியோடு பழகும் சந்தர்ப்பமும் அமைந்தது. அப்படி அவரோடு பழகப் பழக அவருடைய மனவோட்டங்களும் தன்னுடையதும் ஒத்துப் போவதை கனகலிங்கம் உணரத் தொடங்கினார். அவர் நடந்து கொள்ளும் முறைகளைப் பற்றி கனகலிங்கம் சொல்லும்போது, அவர் தான் எழுதிய புதிய ஆத்திசூடி வாக்கியங்களுக்கேற்ப நடப்பார் என்கிறார். அதாவது;

ஏறுபோல் நட
குன்றென நிமிர்ந்து நில்
கோல் கைக்கொண்டு வாழ்

இவைகளை அவர் சரியாகவே கடைப்பிடித்தார். சொன்னதைச் செய்யும் செயல் வீரர் பாரதியார் என்கிறார் கனகலிங்கம். அவரிடம் தான் ஏதேனும் உபதேசம் பெற்றுக் கொள்ள விரும்புவதாக கனகலிங்கம் சொன்னபோது பாரதி அவருக்கு பூணூல் போட்டுவைக்க உத்தேசித்திருப்பதாகவும், இப்போது வசதியில்லை என்பதால் பின்பொருமுறை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு, அவருக்கு சந்தியாவந்தனம், காயத்ரி மந்திரம் ஆகியவைகளைச் சொல்லிக் கொடுத்தார். குருநாதர் சொல்லித் தந்தபடி கனகலிங்கமும் தினமும் மும்முறை சந்தியாவந்தனமும், காயத்ரி மந்திர உச்சாடனமும் செய்து வந்தார்.

பாரதி சொல்லியிருந்தபடி ஒருநாள் கனகலிங்கத்துக்குப் பூணூல் அணிவிக்கும் நாளை முடிவு செய்து ஏற்பாடுகள் நடந்தன. அதிகாலை எழுந்திருந்து நீராடிவிட்டு சுத்தமான உடைகளை அணிந்துகொண்டு தன் வீட்டுக்கு வரச்சொன்னார் கனகலிங்கத்தை. சட்டை போட்டுக் கொள்ள வேண்டாமென்றும் அறிவுறுத்தினார். அவர் சொன்னபடி, சொன்ன நேரத்தில் அவர் சொன்ன கோலத்தில் கனகலிங்கம் பாரதியாரின் வீட்டை அடைகிறார். அங்கே பலரும், குறிப்பாக பாரதியாரின் நண்பர்கள் கூடியிருந்தார்கள். வ.வெ.சு.ஐயர், மண்டையம் சீனிவாசாச்சாரியார், நாகசாமி, குவளை கிருஷ்ணமாச்சாரியார், கோவிந்தராஜுலு நாயுடு ஆகியோர் இருந்தனர். கனகலிங்கம் வந்திருந்த பெரியோர்களை நமஸ்கரிக்க அவர்கள் இவரை வாழ்த்தினர்.

வ.வெ.சு.ஐயர் “நேரமாகிறது, சீக்கிரம் ஆகட்டும்!” என்று குரல் கொடுக்க பாரதியார் தானும் பிரம்மோபதேசம் செய்விப்பவர் இருக்கவேண்டிய கோலத்தில், நெற்றியில் குங்கும திலகத்தோடு அங்கு வந்து சேர்ந்தார். சுவற்றில் லட்சுமி, சரஸ்வதி, கிருஷ்ணன் ஆகியோர் படங்கள் மாட்டப்பட்டிருந்தன. அந்தப் படங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. படங்களின் அடியில் ஒரு பிச்சுவா கத்தி; அதற்கும் படங்களுக்கும் பாரதி குங்குமப் பொட்டிட்டு வணங்கினார். பின்னர் பராசக்தியைப் பணிந்து போற்றி பாடல்களைப் பாடினார்.

bharathi screenshotபின்னர், கனகலிங்கத்தை கிழக்கு திசை பார்த்து உட்காரச் சொல்லிவிட்டு அவருக்கு நெற்றியிலும் மார்பிலும் திருநீறு பூசினார். பின்னர் அவரைக் குத்துக்காலிட்டு உட்காரச் சொல்லி கையில் பூணூலைக் கொடுத்து யக்ஜோபவீததாரண மந்திரங்களைச் சொல்லி அவரையும் சொல்லச் செய்தார். பின்னர் கையில் மேலும் கீழுமாய்ப் பிடித்திருந்த பூணூலை முதலில் கழுத்தில் மாலை போல போட்டுக் கொண்டு, பின்னர் வலம் போட்டுக் கொள்ளச் செய்தார். பின்னர் அவர் காதில் காயத்ரி மந்திரத்தை மூன்று முறை உபதேசம் செய்தார்.

கனகலிங்கம் எழுந்து பாரதியாரின் பாதங்களில் வீழ்ந்து நமஸ்கரித்தார். உடனே பாரதி கம்பீரமான குரலில், “இன்று முதல் நீ பிராமணன்!” என்று உரத்த குரலில் சொன்னார். “இனி யாராவது உன்னிடம் நீ என்ன ஜாதி என்று கேட்டால், நான் பிராமணன் என்று தைரியமாகச் சொல்லு!” என்றும் கட்டளையிட்டார்.

“அப்படியொருவன் ஆகமுடியுமா என்று யாராவது உன்னிடம் கேட்டால்; எனக்குத் தெரியாது, என் குரு பாரதியிடம் கேளுங்கள்!” என்று பதில் சொல் என்றார். உள்ளூர் காரர்கள் யாராவது இது பற்றித் தன்னிடம் கேட்பார்கள் என்று பாரதி எதிர்பார்த்தார்; ஆனால் என்ன காரணமோ எவரும் கேட்கவில்லை. ஆனால், ஈஸ்வரன் தர்மராஜா வீதியில் வசித்து வந்த மணிலாகொட்டை வியாபாரி ஒருவர் மட்டும் “பாரதி புதுச்சேரியைக் கெடுக்க வந்திருக்கிறான்” என்று தனக்குள் முணுமுணுப்பாகச் சொல்லிக் கொண்டிருந்தாராம்.

பாரதியார் கனகலிங்கத்துக்கு மட்டுமல்ல, இன்னொருவருக்கும் இதுபோல உபநயனம் செய்து வைத்தார். அவர் நாகலிங்கம் என்பார். இவர் புதுச்சேரி உப்பளம் பகுதியில் இருக்கும் முத்துமாரியம்மன் கோயிலில் பூசாரியாக இருந்தவர். இவர் ஒரு முறை கனகலிங்கத்தை அணுகி, அவரிடம் இவ்வூரில் பாரதியார் யாரோ ஒரு ஹரிஜனப் பையனுக்கு பூணூல் அணிவித்தாராமே, அது பற்றி தெரியுமா? என்று கேட்டார். அந்தச் சிறுவன் தான்தான் என்று கனகலிங்கம் சொன்னார்.

அதற்கு நாகலிங்கம் தனக்கும் அதுபோல செய்து கொள்ள வேண்டுமென்றும், பாரதியாரிடம் சம்ஸ்கிருதம் கற்றுக் கொண்டு தான் முத்துமாரியம்மனுக்குச் செய்யும் அர்ச்சனை முறையாக செய்ய அது உதவும் என்றும் சொல்லியிருக்கிறார். கனகலிங்கமும் நாகலிங்கத்தை அழைத்துக் கொண்டு போய் பாரதியாரிடம் அறிமுகம் செய்து வைத்து, அவருடைய விருப்பத்தையும் தெரிவித்திருக்கிறார். அந்த சந்தர்ப்பத்தில் பாரதியைப் பார்த்த நாகலிங்கம் இவர் என்ன ஒரு பித்தரைப் போல இருக்கிறாரே என்றதற்கு, கனகலிங்கம், அவர் பித்தரா சித்தரா என்பதை நீயே புரிந்து கொள்வாய் என்றாராம்.

பாரதியார் நாகலிங்கத்துக்கு வாக்களித்திருந்தபடி ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று மாலை 4 மணிக்கு அவரைத் தன் வீட்டுக்குவரச் சொன்னார். அவர் வந்ததும், அவரைப் பார்த்து “வாரும், வாரும், குருக்களே!” என்று நாகலிங்கம் முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு பூஜைகள் செய்துவருவதைக் குறிக்கும் வகையில் குருக்களே என்று அழைத்தார். பிறகு முறைப்படி நாகலிங்கத்துக்கும் பாரதியார் பூணூல் அணிவித்து, பிரம்மோபதேசம் செய்து வைத்து அனுப்பியிருக்கிறார்.

இது குறித்து வ.ரா. பாரதியிடம் கேட்டதற்கு, அவன் செய்யும் அந்தணத் தொழிலுக்கு அவன் பூணூல் அணிய வேண்டும் என்று சொன்னார். பாரதியாருக்குப் பூணூல் இல்லை என்பதை மனதில் எண்ணிக் கொண்டு வ.ரா.சிரிக்கவே, அந்தக் கேலிச் சிரிப்பைப் புரிந்து கொண்டு பாரதியார், “என்ன ஓய்! அவன் செய்யும் தொழிலுக்கு பூணூல் தேவை; நானோ ஊரறிந்த பார்ப்பான், எனக்கு எதற்கு?” என்றாராம். இதனை வ.ரா.வே தன்னுடைய நூலில் பதிவு செய்திருக்கிறார்.

தஞ்சை வெ.கோபாலன்,
இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம்,
திருவையாறு பாரதி இயக்கம், திருவையாறு.
#9486741885

2 thoughts on “அந்தணன் என பாரதியார் அறிவித்த சான்றோர்

  1. சமத்துவத்திற்கு வழி, மேலிருப்பவரை– அப்படி நினைப்பவரைக் கீழிறக்குவது அல்ல, கீழிருப்பவரை — அப்படி நினைப்பவரை மேலேற்றுவது —  அப்படி நினைக்கும்படி செய்வதே என்றுணர்ந்த மகாகவி பாரதி செய்த செயலைப்பற்றி நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

    பலரும் அதை எண்ணிப் பார்த்துச் செயல்படல் வேண்டும்.

  2. ஐயா, நாகலிங்கம் அவர்கள் படம் கிடைக்குமா? கனகலிங்கம் படம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.