மனதில் நிறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

தஞ்சை வெ.கோபாலன்

எம்.ஜி.ஆர் எனும் இந்த மூன்றெழுத்து மந்திரச்சொல் தமிழ்நாட்டு சினிமா ரசிகர்கள் மனதில் ஒரு எழுச்சியை உண்டாக்கியது. இதன் தாக்கம் பின்னாளில் இவர் அரசியலில் முக்கியத்துவம் பெற்றபோது அந்த எழுச்சி பல மடங்கு பெருகி இவரைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. திரையுலக நாயகன் எனும் முறையிலாகட்டும், அரசியல் தலைவர் என்ற வகையிலாகட்டும் இவரது தோற்றத்தினாலும், பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் சர் வின்ஸ்டன் சர்ச்சில் போல தன் இரு விரலை விரித்து வெற்றிக் குறி காட்டி, புன்னகை மன்னனாய் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்துவிட்டார். திரையில் கதாநாயகனாக வந்து தீனர்களைக் காக்கும் அனாதரட்சகனாக நடித்ததை உண்மை வாழ்க்கையிலும் மக்கள் அவரை அதுபோலவே உணரத் தலைப்பட்டுவிட்டார்கள். திரையில் நல்லவனாக, ஏழைகளுக்கு இரங்கி உதவி புரிபவனாக, பெண்களின் மானம் காக்கும் மாவீரனாக, சகோதர பாசம் நிறைந்தவராக, தந்தை தாய் நலன் பேணும் நல்ல மகனாக இவர் திரையில் தோன்றியவாறே நிஜ வாழ்விலும் இருப்பவர் எனும் எண்ணம் நிரந்தரமாக மக்கள் மனங்களில் தங்கிவிட்டது.

mgrphotogallery81954 இவர் மலைக்கள்ளன் எனும் திரைப்படத்தில் நடிக்க கோவைக்குச் சென்று நடித்துவிட்டு ரயிலில் சென்னை திரும்புவதற்காக கொச்சின் விரைவு ரயிலில் கோவை ரயில் நிலையத்தில் முதல் வகுப்பில் ஏறி அமர்கிறார். அவருடன் ஸ்ரீராம் எனும் நடிகர், ஜி.வரலட்சுமி எனும் நடிகை ஆகியோரும் இருக்கின்றனர். இவருக்கு அடுத்த பெட்டியில் எர்ணாகுளத்திலிருந்து பயணம் செய்து வந்து கொண்டிருந்த பள்ளி மாணவனாக இருந்த நான் ஜன்னல் புறம் சென்று இவர் முதுகைத் தொட்டு அழைத்து ‘என்ன படத்தில் நடிக்கிறீர்கள்?” என்றேன். இன்றைய நிலைமையாக இருந்தால் என்னை அங்கேயே ஒருவழி செய்திருப்பார்கள். அவர் அமைதியாகத் திரும்பி “மலைக்கள்ளன்” என்றார். நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை எழுதிய அந்த நாவலை நான் படித்திருந்ததால் இன்ன வேஷமா என்று வினவ, அவர் ஆம் என்று தலையாட்டினார். அதற்குள் ஸ்ரீராம் கீழே இறங்கி ஏதோ வாங்க வெளியே வந்தார். அவருடன் ஜி.வரலட்சுமியும் இறங்கினார். ரசிகர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள். நான் எம்.ஜி.ஆர். இருந்த ஜன்னல் அருகிலேயே நின்று பேச்சு கொடுத்தேன். திரும்பிப் பார்த்த அவர் புன்னகை செய்து, போதும் என்பதை அறிவுறுத்தினார். அவர் பார்வையில் கோபமோ, எரிச்சலோ இல்லை என்பது புரிந்தது. அவர் நடிப்பில் எனக்கு அத்தனை ஈடுபாடு இல்லையாயினும், அவருடைய இந்த அன்பான நடவடிக்கை என்னை அவர்பால் ஈர்த்தது. இதுவே முதன் முதல் அவரிடம் என் மரியாதை உருவானது.

1956ஆம் ஆண்டு. திருச்சியில் தி.மு.க. இரண்டாவது மாநில மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில்தான் தி.மு.க. தேர்தலில் நிற்க வேண்டுமா வேண்டாமா என்று வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அந்த மாநாட்டில் மிகப் பெரிய அறிவுபூர்வமான கருத்தரங்கம்; அதில் தி.மு.க.வின் பெருந்தலைவர்கள் ஒவ்வொரு தலைப்பில் பேசினார்கள். ஈ.வி.கே.சம்பத் திராவிட நாட்டின் வெளியுறவுக் கொள்கை என்று பேசினார். அதைப்போல், திராவிட நாட்டின் பல்வேறு கொள்கைகள் குறித்துப் பலரும் பேசினார்கள். மாநாட்டுப் பந்தல் நிறைந்த கூட்டம். தலைவர்கள் பேச்சுக்கு ஒன்றும் பெருத்த ஆரவாரமோ, வரவேற்போ இருந்ததாக உணரவில்லை. ஒப்புக்கு திராவிடநாடு எனும் கற்பனை நாட்டின் நிறைவேற்ற முடியாத பல கொள்கை அறிவிப்புகள் வந்து கொண்டிருந்ததைத் தவிர அதில் குறிப்பிடும்படி எதுவும் இல்லை. அப்போது எம்.ஜி.ஆர். அந்த பந்தலுள் நுழைந்தார். கொட்டகை நிறைந்த மக்கட்கூட்டம் எழுந்து நின்று உற்சாக கைதட்டலுடனும், ‘விசில்’ ஒலியுடன் வரவேற்பு கொடுத்தது. காலம்சென்ற என்.ஜி.ஓ. சங்கத் தலைவர் சிவ.இளங்கோ மற்றும் அவர் நண்பர்களுடன் மாநாட்டில் உட்கார்ந்திருந்த எனக்கு இது ஒரு புதுமை. பிரபலமான தலைவர்களுக்கு இந்த அளவு வரவேற்பு இல்லாத நிலையில், போயும் போயும் திரைப்பட புகழ் மட்டுமா இவருக்கு இப்படிப்பட்ட வரவேற்பைக் கொடுத்திருக்க முடியும்? இல்லை இதன் பின்னால் ஏதோவொரு கவர்ச்சி, ஏதோவொரு நம்பிக்கை மக்களுக்கு இவர்மீது வந்திருக்க வேண்டும். அது என்ன என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் எனக்கு ஏற்பட்டது.

சென்னையில் ஒரு குப்பத்துப் பகுதி. இவரது பட ஷூட்டிங் அந்த மீனவர் குப்பத்துக்கு அருகில் நடந்தது. அங்கிருந்த ஏழை எளிய குடிசை வாசிகள் இவர் ஓய்வில் இருக்கும் சமயம் அருகில் சென்று ஏதோ பேச்சுக் கொடுக்க, அவரும் அன்போடு அவர்களுடன் கலந்துரையாடிய காட்சி, இது என்ன இவர் ஒரு வித்தியாசமான மனிதராகத் தென்படுகிறாரே என்று எண்ணத் தோன்றியது.

ஒரு சமயம் பத்திரிகையொன்றில் இவரது புகைப்படம் வெளியானது. வயது முதிர்ந்த கிழவி, மகா ஏழையாக இருக்க வேண்டும், பொக்கை வாய், இவர் அருகில் சென்று இவர் முகத்தருகே திருஷ்டி கழித்து கைகளைத் தன் முந்தலையில் வைத்து சொடுக்கி திருஷ்டி கழித்தாள். அடுத்த கணம் இவர் தன் ஜிப்பா பைக்குள் கைவிட்டு கையில் வந்த கரன்சி தாள்களை இந்த அம்மையின் கையில் கொடுத்து அவரைத் தழுவிக் கொண்டார். இது நடிப்பா, இந்த மனிதரின் உள்ளார்ந்த அன்பா? பத்திரிகைகளும், இவரைப் பிடிக்காதவர்களும் இதை நடிப்பு என்றனர். பெரும்பாலோர், இதுதான் இந்த மனிதரின் உண்மையான முகம் என்றனர். நான் பின்னதை ஏற்றுக் கொண்டேன்.

முதலமைச்சராக இருந்த அண்ணாதுரை அவர்கள் அகாலமாக மரணமடைந்துவிட்டார். அடுத்து யார் என்ற கேள்வி எழுந்தது. அண்ணா இருக்கும்போதே நாவலர் நெடுஞ்செழியனை அழைத்து, மாநாட்டுக்கு “தம்பீ வா! தலைமையேற்க வா!” என்று அழைத்த வாசகம் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. ஆகையால் அவர்தான் அடுத்த தலைவர் என்று நாடே எதிர்பார்த்திருந்த நிலையில், தலைமைக்குப் போட்டி எழுந்தது. அப்போது எம்.ஜி.ஆர். விரும்பியவரே தலைவராக முடிந்தது என்றால், இந்த தனி மனிதனுக்கு அந்தக் கட்சியிலும் சரி, மக்கள் மத்தியிலும் சரி ஊடுறுவியிருந்த செல்வாக்கு நாட்டுக்கு நன்கு புரிந்தது.

ஏதோவொரு சினிமா படப்பிடிப்புக்காக இவர் கோவா கடற்கரையில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் சார்ந்திருந்த கட்சியின் போராட்டமொன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. அப்போது மக்கள் மனங்களில் எழுந்த சந்தேகம், இவர், தான் சார்ந்த நடிப்புத் தொழிலுக்கு முதலுரிமை தருவாரா, அரசியலுக்கா என்று பார்த்துக் கொண்டிருந்தனர். கட்சிக்காரர்கள் கட்சிப்பணிதான் என்பர்; கலா ரசிகர்களோ அவர் சார்ந்த நடிப்புத் தொழில்தான் என்பர். இவர் இரண்டாவது நிலைப்பாட்டை எடுத்தார், அதனால் வீண் கசப்புக்களை எதிர்கொண்டார். ஆனாலும் அவர் தொழில் மீது வைத்திருந்த பற்று கட்சிப் பற்றைக் காட்டிலும் அதிகம் என்பதை வெளிப்படுத்தினார். அந்த வகையில் தன்னுடைய நம்பகத் தன்மையை இவர் மக்களுக்குச் சொல்லாமல் புரியவைத்தார் என்பதே என் எண்ணம்.

ஆதியில் இவர் ஒரு காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜ் மீது மாறாத மரியாதை வைத்திருந்தார். அந்த வகையில் இவர் கதரே அணியவும் தொடங்கினார். 1953இல் இவரது அரசியல் நிலைப்பாட்டில் ஒரு மாற்றம் வந்தது. காங்கிரசில் ஆர்வம் கொண்டிருந்த இவர் தி.மு.க.வை நாடி வந்தார். அதற்குக் காரணம் சி.என்.அண்ணாதுரை எனும் மாமனிதர்தான். அவரே சொன்னார் எம்.ஜி.ஆரிடம். இவர் முகத்தைக் காட்டினால் போதும் லட்சக் கணக்கில் கட்சிக்கு வாக்குகள் வந்து குவியும் என்று. ஆம்! அதுதான் சரியான கணிப்பு, அதை சிலர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதால் வந்தது கட்சியில் பிணக்கு.

1967இல் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். கட்சியின் பொருளாளர் ஆனார். 1967இல் சொந்த முறை விரோதம் காரணமாக இவர் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகி உயிர் பிழைத்தார். இவர் கழுத்தில் கட்டோடு படுத்திருக்கும் படம் சுவரொட்டிகளில் கண்டதுமே அவர் சாந்திருந்த கட்சிக்கு வாக்குகள் பேய்மழைபோல கொட்டித் தீர்த்து, அவர்கள் மாபெரும் வெற்றியை ஈட்டினார்கள் என்பது நாடு கண்ட வரலாற்று உண்மை. இப்படித் தனிமனிதனின் துன்பம் ஒரு கட்சியின் ஏற்றத்துக்கு வழிவகுத்தது என்றால் அவர் மக்கள் மனங்களில் எத்தனை ஆழமாகப் பதிந்திருக்கிறார் என்பதுதானே?

ஒரு முறை தஞ்சையில் காவல்துறையில் விருது பெற்ற அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கும் அணிவகுப்பு மாலை 4 மணிக்கென்று ஏற்பாடாகியிருந்தது. நான் 3 மணி சுமாருக்கு அந்த போலீஸ் திடல் இருக்கும் கலெக்டர் அலுவலக சாலை வழியாக என்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டு வேறோரு சுற்றுப் பாதை வழியாகச் செல்லப் பணிக்கப்பட்டேன். சாலை வெறிச்சோடிக் கிடந்தும் அந்த திசையில் இருந்த என் அலுவலகம் செல்ல முடியாமல் சுற்றி வரும்படி நேர்ந்தது வருத்தமளித்தது. ஆனால் எம்.ஜி.ஆர். ஒரு முறை தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் திறந்த ஜீப்பில் வந்து கொண்டிருந்தார். எங்கள் குடியிருப்புப் பகுதி பாலத்தடியில் நாங்கள் பலர் பேசிக்கொண்டு நின்றிருந்ததைப் பார்த்து, அவர் ஜீப் நின்றது. புன்னகையோடு எங்களைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு வணங்கியதைக் கண்டு எங்களுக்கு திகைப்பு. நட்புரிமையோடு அவர் நடந்து கொண்டது ஒரு அரசியல் வாதிக்கே உரிய சாமர்த்தியமாகக் கூட இருக்கலாம். அதை உண்மை நட்புபோல நடந்துகொண்ட அந்த அருமையான காட்சி எங்கள் மனங்களில் அவர் நீங்கா இடம் பெற்றுவிட்டார்.

அவர் காலமானார் எனும் செய்தி கேட்டு எங்களுக்கே ஏற்பட்ட சொந்த இழப்பைப் போல உணர்ந்தோம். இதற்கு முன்பு மகாத்மா காந்தி சுடப்பட்ட போதும், ஜவஹர்லால் நேரு காலமானபோதும், பெருந்தலைவர் இறந்து போனார் எனும் செய்தியைக் கேட்டபோதும் ஏற்பட்ட அதே உணர்வு எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து மனிதர் மாண்டார் எனும்போதும் உள்ளத்தை வருத்தியது, துக்கத்தை ஏற்படுத்தியது; அப்போதுதான் தெரிந்தது அவர் எங்கள் மனங்களில் எத்தனை உறுதியாக அமர்ந்திருக்கிறார் என்று. காலங்கள் மாறலாம்; கோலங்கள் மாறலாம், ஆனால் மனங்களில் படிந்த இதுபோன்ற உணர்வுகள் மட்டும் என்றென்றும் மாறாதிருக்கும்.

முந்தைய காலங்களில் ஒரு தனி மனிதரின் புகழையும், பெருமைகளையும் உலகுக்கு அறிவிக்க அவரது மெய்க்கீர்த்தியை எழுதி கருங்கல்லில் வடித்து வைப்பார்கள். அப்படிப்பட்ட மெய்க்கீர்த்தியாக எம்.ஜி.ஆர். என்ற‌ இந்த தனிமனிதரின் புகழ், பெருமை அனைத்தையும் தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலோர், குறிப்பாக ஏழை, எளியவர்கள், பெண்மணிகள், இளைஞர்கள், குழந்தைகள் ஆகியோர் தத்தமது நெஞ்சங்களில் பதிந்து வைத்திருக்கிறார்கள். அது சென்ற தலைமுறையோடு முடிந்துபோன செய்தியல்ல, இந்த தலைமுறைக்கும் தொடர்ந்து அதே உணர்வை தந்து கொண்டிருக்கிறது என்பதை அவரது பழைய படங்கள் இப்போதும் திரையரங்குகளில் கூட்டம் அலைமோத பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதிலிருந்து தெரியவருகிறது. இது ஏதோ மார்லன் பிராண்டோவையோ, கிளிண்ட் ஈஸ்ட்வுட் நடித்த படங்களையோ பார்க்கும் உணர்வில் அல்ல, எம்.ஜி.ஆர். எனும் நம் காலத்தில் வாழ்ந்த ஒரு மாமனிதனின் புகழுக்கு மரியாதை செய்கிறோம் எனும் உணர்வில்தான் பார்க்கிறார்கள். காலத்தால் அழிக்கமுடியாத இடத்தை அந்த மனிதர் பெற்றிருந்தார் என்பதுதான் முக்காலும் உண்மை.

2 thoughts on “மனதில் நிறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

 1. ///
  1967இல் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். கட்சியின் பொருளாளர் ஆனார். 1967இல் சொந்த முறை விரோதம் காரணமாக இவர் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகி உயிர் பிழைத்தார். இவர் கழுத்தில் கட்டோடு படுத்திருக்கும் படம் சுவரொட்டிகளில் கண்டதுமே அவர் சாந்திருந்த கட்சிக்கு வாக்குகள் பேய்மழைபோல கொட்டித் தீர்த்து, அவர்கள் மாபெரும் வெற்றியை ஈட்டினார்கள் என்பது நாடு கண்ட வரலாற்று உண்மை. 
  ///

  இந்த கோணம் பரவலாக அறியப்பட்டுள்ளதாக நினைவில்லை தஞ்சாவூர் ஐயா.  இந்தி திணிப்பில், அதனால் ஏற்பட்ட கலவரங்கங்களில்  வெறுப்படைந்த தமிழக மக்கள் தி மு க வை தேர்ந்தெடுத்ததாகப் பேசப்படுவதை அறிவேன்.  

  “”நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகணும் – நாட்டுக்கு படிப்பினை தந்தாகணும்”” என்னும் கொள்கை என்ற மூன்றெழுத்தில் பிடிப்பாக இருந்தது அவரை உயர்த்தியது என்பது என் கருத்து.  தொழிலுக்கு முக்கியத்துவம்/முதலிடம்  கொடுத்து முருகர் வேடத்திலும் நடித்தவர்.  

  நானும் எம். ஜி. ஆரை பள்ளி நாட்களில்தான் பார்த்தேன்.  திருச்சியில் 1977  ஏற்பட்ட வெள்ள சேதத்தை பார்வையிட வந்தவர், எங்கள் வகுப்பையும் பார்வையிட்டார்.  உங்கள் அருமையான கட்டுரை எனக்கும் அவரைப்பற்றிய  மலரும் நினைவுகளைத் தூண்டிவிட்டது. நன்றி ஐயா. 

 2. ஐயா அவர்களின் கட்டுரையில் அவருக்கு எம்.ஜி.ஆரோடு உன்டான சந்திப்பும், சம்பவங்களும் படித்தபோது என்னையும் கொஞ்சம் பின்னே இழுத்து சென்றது.என் தந்தையும் இப்படித்தான் எம்.ஜி.ஆர் பற்றிய பல கதைகள் சொல்வார். அவர் சொல்ல சொல்லகேட்டு வளர்ந்ததால் எம்.ஜி.ஆர் என்பது ஒரு பரிசுத்தமானவர் எனும் இமேஜ் என்னுள் விதைத்துவிட்டது. மிக்க நன்றி ஐயா.

Leave a Reply

Your email address will not be published.