சக்தி சக்திதாசன்.

அன்பினியவர்களே !

xx20150120_135655அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களுடன் இணைவதில் பெருமகிழ்வடைகிறேன்.

ஒரு மாத கால இடைவெளியின் பின்னால் இம்மடலை வரைந்து கொண்டிருக்கிறேன். இந்த ஒரு மாத காலமும் என்ன செய்து கொண்டிருந்தேன் ?

ஓடி ஓடி இயந்திரம் போல் இயங்கிக் கொண்டிருக்கும் இந்தப் புலம்பெயர் வாழ்வில் சில நேரங்களில் காட்சி மாற்றம் தேவைப்படுகிறது.

தேவைப்படும் அனைத்தையும் இலகுவாக அதிக சிரமமின்றி (பெரும்பான்மையாக) பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிலையிலிருந்து சற்றே மாறுபட்டு நம்பிக்கையை மூலாதாரமாக வைத்து அன்றைய வாழ்விற்கான தேவைகளின் தேடலில் ஈடுபடுவோரின் மத்தியில் இருக்கும் போதுதான் வாழ்வின் யதார்த்தம் புரிகிறது.

ஏறத்தாழ நான்குவார விடுமுறையில் தமிழின் பிறப்பிடமான தமிழகத்திற்கு எனது வருடாந்தர விஜயத்தை மேற்கொண்டிருந்தேன்.

சென்னைப் புத்தகத் திருவிழா ! அப்பப்பா… இத்தனை பெரிய அலைமோதும் வாசகர் கூட்டத்தைக் கண்டதும்தான் என்னதான் இணையத்தின் தாக்கம் இருந்தாலும் நூல்களை கையில் வைத்துப் படிக்கும் எமது வாசகர்களின் ரசனை குறையவில்லை என்பது புரிந்தது.

தமிழின் தலைநகரமல்லவா ? அங்கே தமிழை ரசித்துப் படிக்கும் உள்ளங்களுக்கு பஞ்சம் இருக்குமா, என்ன ?

x20150120_144342ஜனவரி 18ம் நாள் சென்னைப்புத்தக விழா வெளியீட்டரங்கிலே எனது நூல்களின் பதிப்பு நிறுவனமும் எனது நண்பர்களான ரவி, லேனா தமிழ்வாணன் அவர்களின் நிறுவனமுமான மணிமேகலைப் பிரசுரத்தாரின் வெளியீட்டு விழா.

வழமையாக வருடம் ஒரு நூல் வெளியிடும் எனக்கு இவ்வருடம் சிறிது ஓய்வு. கடந்த ஜூலை மாதம் நடந்தேறிய எனது மகனின் திருமண வைபவத்தின் ஏற்பாடுகளில் மூழ்க வேண்டி இருந்ததால் இவ்வருடம் எனது நூல் தயாராகவில்லை.

இருப்பினும் எனது நண்பர்களின் அன்பு அழைப்பின் பெயரால் நானும் எனது மனைவியும் சிறப்பு விருந்தினராக அவ்விழாவில் கலந்து கொண்டோம்.

பெருந்திரளான வாசகர்கள். அரங்கத்தில் அமர்ந்திருந்த அறிஞர்கள், அவர்களோடு அரங்கத்தில் பெருமையுடன் வீற்றிருந்த 38 நூல்களின் 38 நூலாசிரியர்கள்.

ஆமாம் 38வது புத்தக விழாவில் மணிமேகலைப்பிரசுரம் 38 நூல்களை வெளியிட்டிருந்தது.

விழாத்தலைவராக பிரதம நீதியரசர் திரு. தமிழ்வாணன்; சிறப்பு விருந்தினர்களாக வேலூர் VIT நிறுவனத்தின் அதிபர் ஆ.ப.விஸ்வநாதன், முன்னனி திரை நட்சத்திரம் திருமதி. வடிவுக்கரசி எனப் பலர் மேடையிலே வீற்றிருந்தார்கள்.

நண்பர் திரு ரவி தமிழ்வாணன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நண்பர் திரு லேனா தமிழ்வாணன் அவர்களின் வரவேற்புரையோடு சிறப்பு விருந்தினர்களின் வாழ்த்துரைகளோடு நூலாசிரியர்கள் அனைவரும் கெளரவிக்கப்பட்டார்கள்.

அருமையானதொரு நிகழ்வில் பங்கு பற்றிய அற்புத உணர்வோடு நானும் மனைவியும் வீடு திரும்பினோம்.

அது மட்டுமா ?

xxx20150120_135603நண்பர்கள் காந்தி கண்ணதாசன், எஸ்.வி சேகர், பாண்டியராஜன், ஆன்மீக உணர்வாளர் பி.என்.பரசுராமன் எனப் பலரோடும் அன்பான சம்பாஷணைகள். அவ்வாற்றல் மிகுந்தவர்களின் அனுபவ ஆற்றில் ஒரு சிறிய நீச்சல்.

செட்டிநாடு தந்த இளவல் அருமைக்குமரன், காமெடி கிங், அசத்தல் மன்னன் ஆன்மீகப் பேச்சாளர், நகைச்சுவைப்புயல் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் என்னினிய தம்பி தேவகோட்டை இராமநாதனின் இனிய சந்திப்பு.

அப்பப்பா ! தம்பியின் அன்பை என்ன கூறுவேன் ? காலை 4 மணிக்கு செட்டிநாட்டிலிருந்து புறப்பட்டு மதியம் மூன்று மணிக்கு என்னை அண்ணாநகரில் சந்தித்து விட்டு மீண்டும் மாலை இரயிலில் செட்டிநாட்டுக்குப் புறப்பட்ட என் தம்பியின் அன்பிற்கு ஈடாக எதைக் கொடுத்துவிட முடியும் ?

இத்தகைய அன்பானவர்களின் உறவைக் கொடுத்து எனது உள்ளத்தைச் செழிப்பாக வைத்திருக்கும் அந்த அண்ணாமலையானின் பாதங்களை வணங்குவதே நான் செய்யக்கூடியது.

தமிழகத்தில் நான் காணும் அன்றாட ஆட்டோ சாரதிகள், கார்ச் சாரதிகள் என்பவர்கள் அனைவரிடமிருந்தும் நான் கற்றுக்கொள்பவை ஏராளம்.

நம்பிக்கையின் ஆதாரத்தில் அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஆரம்பம் அலாதியானது. வாழ்க்கையின் மூலத்தின் யதார்த்தம் எமக்குப் புரியும் வகையில் பல நிகழ்வுகளின் பின்னனி எமக்குப் பாடமாக அமைகிறது.

மாடமாளிகைகள் ஒருபுறம், மண்குடிசைகள் மறுபுறம். விலையுயர்ந்த வெளிநாட்டுக் கார்கள் ஒருபுறம், செருப்பு அணிய வழியில்லாத ஏழை மக்கள் மறுபுறம் என சென்னையின் வாழ்க்கை போதிக்கும் பாடங்கள் ஆயிரமாயிரம்.

இந்த அரிய அனுபவச் செழிப்புகள் என் இதயத்தின் அனுபவப் புத்தகத்தில் ஆழமாய்ப் பதிந்திருக்கும்.

என் மனதின் இனிய உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பத்திற்காக என் அன்பான நன்றிகள்.

மீன்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

 

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *