தஞ்சை வெ. கோபாலன்.

மகாபாரத யுத்தம் முடிவுறும் சமயம். யுத்த களத்தில் துரியோதனன் பீமனால் அடித்துத் துவம்சம் செய்யப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த நேரம். அணுஅணுவாக அவன் உயிர் பிரிந்து கொண்டிருந்தது. தான் வாழ்ந்த கோலாகலத்தை மனத்தில் எண்ணி அசைபோடலாயினான். வாழ்நாள் முழுவதும் கேட்பார் எவருமின்றி தான்தோன்றியாகத் திரிந்து மனத்தில் நினைத்ததைப் பேசி, விரும்பியதைச் செய்து, நல்லது எது, தீயது எது என்பதைப் புரிந்து கொள்ள மனமின்றி ஆணவத்தின் அடிச்சுவட்டில் நடந்து வந்த பாதையைச் சற்றுத் திரும்பிப் பார்க்கலானான். தட்டிக் கேட்க வேண்டிய தந்தை, சக்கரவர்த்தி, அனைவருக்கும் பொதுவானவன், நீதியை நிலைநாட்ட வேண்டியன் என்கிற கடமையுணர்வுகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டுத் தன் புத்திர பாசத்தால் மகன் சொற்படி ஆடியதன் விளைவாக கொடியவனானவன் துரியோதனன். ஆகவே மகன் செய்த கொடுமைகளுக்கெல்லாம் முழுமுதற் காரணம் கடமை தவறிய சக்கரவர்த்தி திருதராஷ்டிரனே.

வாழ்ந்த காலம் முழுவதும் எதிர்ப்பட்ட அனைவரும் அவனுக்கு அடங்கி, வாய்பொத்தி ஏவியதைச் செய்து இவனை மமதையின் உச்சத்தில் உயர்த்திவிட்டனர். ராஜாதி ராஜர்களும் வீராதி வீரர்களும் அவனுடைய ஏவலுக்குக் கைகட்டிக் காத்திருந்தனர். திரும்பிய பக்கமெல்லாம் ஏவலாளர்கள் அவன் கண்ஜாடைக்குக் காத்திருந்து பணிவிடைகளைப் புரிந்து வந்தனர். அப்படி அவன் வாழ்ந்த வாழ்க்கை எங்கே? இன்று குருதியும் ரணமுமாக சாவை எதிர்நோக்கி மண்தரையில் வீழ்ந்து கிடக்கும் கோலம்தான் என்ன?

தூங்கிக் கண் விழித்துப் பார்த்ததும் கோப்பையில் சோமபானமும் சுறாபானமும் கையில் கொண்டு அழகு மங்கையர் அவனை உபசரித்த நாட்கள்தான் எங்கே? அவனது கால்கள் தரையில் பட்டால் புண்ணாகுமே என்று அவனைப் பட்டு பீதாம்பரங்கள் கொண்டு அலங்கரித்து கால் தரையில் படாவண்ணம் பல்லக்கில் சுமந்த ஏவலர்கள் எங்கே? தனது ஆணவத்துக்கும், அகம்பாவத்துக்கும் எதிரானவர்கள் என்று சந்தேகித்த அனைவருமே, குறிப்பாக பாண்டவர்கள் அழிந்து போகவேண்டுமென்று எண்ணி துரோகச் செயல்கள் என்னவெல்லாம் முடியுமோ அவற்றையெல்லாம் செய்துவந்த அவன் மனம், இப்போது தன்னுடைய நிலைமையை எண்ணி பேதலித்தது. தாயாதியர்களை முறை தவறி கொல்ல எண்ணியவனின் உடல் இன்று மரணத்தின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. உடலின் வேதனை பெரிதா, பட்ட துன்பங்கள் பெரிதா என்று சொல்லவொண்ணா பரிதாப நிலைமை அவனுக்கு.

மரண தேவனின் அரவணைப்பை எந்த நொடியிலும் வரலாம் என்ற எதிர்பார்ப்பில் துடித்துக் கொண்டிருந்த வேதனை நிறைந்த அவன் கண்கள் முன்பாக மூவர் வந்து நின்றனர். அவர்கள் குரு துரோணரின் புத்திரன் அசுவத்தாமன், குரு கிருபாச்சாரியார், துரியோதனனின் படையைச் சேர்ந்த வீரன் கிருதவர்மன் ஆகியோர். போர்க்களத்தில் பீமனின் கதையால் அடித்துத் தொடை எலும்புகள் நொறுங்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான் இளவரசன் துரியோதனன் என்ற செய்திகேட்டு ஓடோடி வந்திருந்தனர் அம்மூவரும், போர்க்களத்தின் வெவ்வேறு மூலைகளிலிருந்து. பாராளும் வேந்தன் இன்று பராரியாய், ஆதரவற்றவனாய், குருதிப் புனலில் நீந்திக் கொண்டு அனாதையாய்க் கிடக்கும் கோரக் காட்சியைப் பார்த்தனர்.

நண்பன் அசுவத்தாமனைக் கண்டதும் துரியோதனன் சுயபச்சாதாபத்தோடு பேசினான். விதி சதிசெய்து தனக்கு இப்படிப்பட்ட நிலைமையை உருவாக்கிவிட்டதாக வருந்தினான். அப்பொதும் அவன் செய்த பாவங்கள், துரோகங்கள், ஈடு இரக்கமற்ற கொடுஞ்செயல்கள் அவனை பழிவாங்கிவிட்டதாக அவன் எண்ணவில்லை. இரக்கமற்ற அரக்க குணம் படைத்த எவருமே தாங்கள் தவறு செய்ததன் தண்டனை இது என்று எண்ணுவது கிடையாது. பிறர் தங்களுக்கு தீங்கிழைத்து விட்டார்கள் என்ற மூடத்தனமான எண்ணங்கள்தான் எப்போதும் அவர்கள் மனதில் இருக்கும்.

நண்பன் கிடந்த கோலம், அவன் படுகின்ற அவஸ்தை இவற்றையெல்லாம் பார்த்ததும் அசுவத்தாமனுக்கு கோபாவேசம் மூண்டது. எரிமலையென பொங்கி எழுந்தான். நண்பனின் நிலைமையை விட தன் தந்தையைப் பொய் சொல்லி ஏமாற்றி கொன்றுவிட்டதால் அவன் உள்ளமும் உடலும் துடித்தன. ஆம்! ‘அஸ்வத்தாம ஹத: குஞ்சரக:” என்று அஸ்வத்தாமன் என்கிற குதிரை இறந்தது என்று கண்ணபிரான் சொல்லச் சொன்னபடி, ‘குஞ்சர:’ எனும் சொல்லை மெல்ல காதில் விழாதபடி சொன்னதும் துரோணர் தன் மகன் தான் கொல்லப்பட்டான் என்று எண்ணி, ஆயுதங்களைக் கீழே போட்டார், அப்போது அம்பு எய்தி கொல்லப்பட்டார். போர்க்களத்தில் போர் தர்மங்களுக்கு எதிராக நடந்த பல நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. பொய்யே பேசாத தர்மன் கூட பொய்யாய் ஒலிக்கும் இந்த சொற்றொடரை சொன்னதற்குக் கலி காலம் தொடங்குவதே காரணமாயிற்று.

எதற்கும் அஞ்சாத குரு துரோணரைத் தான் இறந்து விட்டதாக பொய் சொல்லி கொன்று விட்டனரே இந்தப் பாண்டவர்கள் என்று அவன் நெஞ்சு கொதித்தது. அடி வயிற்றிலிருந்து பொங்கி எழுந்த கோபாவேசத்தில் அவன் ஒரு சபதம் செய்தான். “இல்லாத ஒன்றை பொய்யாகச் சொல்லி என் தந்தையின் மனதைத் துன்பத்திற்குள்ளாக்கிவிட்டு அவரைக் கொன்று சாய்த்து விட்டனர் கோழைகள். போர் தர்மங்களுக்கு மாறாக இடுப்புக்குக் கீழே தொடையில் அடித்து வீழ்த்தி உயிருக்குப் போராடும் நிலையில் என் நண்பனை வைத்துவிட்டனர். நண்பா! துரியோதனா! அஸ்தினாபுரத்தின் அரசே! நான் இப்போது ஒரு சபதம் மேற்கொள்கிறேன். இன்றே, இன்றிரவே அந்த வஞ்சகர்கள் பாண்டவர்கள் அனைவரையும் நான் கொல்வேன். அவர்களது படைவீரர்கள் உட்பட அனைவரும் பிணமாகும் வரை நான் ஓயமாட்டேன். இது சத்தியம்!” என்றான் அசுவத்தாமன்.

மரணத்தின் பிடியில் மயங்கிக் கிடக்கும் துரியோதனனுக்கு நண்பன் செய்த சபதம் மனதில் சற்று ஆறுதலைக் கொடுத்தது. தான் இறப்பதைவிட தன் எதிரிகள் கொல்லப்படப் போகிறார்கள் என்பதில் அவனுக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி. நண்பன் அசுவத்தாமனைத் தன் அருகில் வரும்படி சைகை செய்தான். அருகில் வந்த நண்பன் மீது நீர் தெளித்து, அவன் தலையில் கைவைத்து “இப்போது முதல் நீயே கவுரவர்கள் படைக்குத் தளபதி, பாண்டவர்களை அழித்து வெற்றியை ஈட்டுவது உன் பொறுப்பு, உனக்கு வெற்றி கிட்டட்டும்” என்றான் துரியன்.

அந்த விசாலமான போர்க்களத்தில், எங்கும் பிணக்குவியல் விழுந்து கிடக்க, பேயும், பிசாசும் உலவுகின்ற அந்த கோர பூமியில் தனித்து ரத்தம் ஒழுக வீழ்ந்து கிடக்கும் துரியோதனனுக்கு அப்போதும் ஒரு சிறு நப்பாசை. பாண்டவர்களை தன் நண்பன் அசுவத்தாமன் வீழ்த்திவிட மாட்டானா என்று. பாண்டவர்கள் அழித்தது போக மீதம் படை என்று சொல்லிக் கொள்ள போர்க்களத்தில் எவரும் மிச்சம் இருக்கவில்லை. தனியனாய், ஒற்றை ஆளாய், வல்லமையும் நேர்மையும் நீதியும் ஆயுதங்களாகக் கொண்டு போராடும் பாண்டவர்களை எதிர்க்கத் தயாரானான் அசுவத்தாமன்.

கோழைகள் எப்போதும் மறைந்திருந்தே தாக்குவார்கள். படை இழந்து வஞ்சனையும், பழிவாங்கும் உணர்வும் மட்டும் மேலோங்க காத்திருந்த அசுவத்தாமன் அருகிலுருந்த ஒரு அடவியினுள் புகுந்து மறைந்திருந்தான். அங்கிருந்து பாண்டவர்கள் பாசறை அருகில் இருந்தது. இருள் சூழ்ந்த நேரம். ஆளரவமற்ற சூழ்நிலை. பாண்டவர் முகாம்களில் கூடாரங்களில் பாண்டவர்களும், சேனை வீரர்களும் அயர்ந்த நித்திரையில் ஆழ்ந்திருந்தனர். அப்போது ஓசையின்று கூடாரங்களுக்குள் சென்று அசுவத்தாமன் அங்கு படுத்து உறங்கியவர்கள் அனைவரையும் வெட்டிச் சாய்த்தான்.

திருடச் சென்றவனிடம் பெரும் செல்வம் சிக்கியதைப் போல பாண்டவ சேனாபதியான திருஷ்டத்யும்னன் சிக்கினான். துருபதன் மகனும், பாஞ்சாலியின் சகோதரனுமான அந்த மாவீரனை சித்திரவைக்குள்ளாக்கித் துன்பம் தந்து கொன்றொழித்தான் அசுவத்தாமன். தன் தந்தை துரோணரைக் கொன்றவனல்லவா இவன்? என்ற ஆத்திரம் அவனுக்கு.

அடுத்தடுத்த கூடாரங்களில் பாண்டவர்களின் வாரிசுகளாக வந்துப் பிறந்திருந்த உபபாண்டவர்கள் எனும் சிறுவர்களை ஒருவர் விடாமல் வெட்டிக் கொன்றான். இப்படி அடாத செயலைச் செய்து முடித்துவிட்டு அசுவத்தாமனும் அவனுடன் வந்த ஓரிரு வீரர்களும் ரத்தக் கறை படிந்த ஆயுதங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த துரியோதனன் முன்பு வந்து நின்றனர். என்ன ஆயிற்று என்று துரியதன் கண் ஜாடையால் அவனை வினவினான்.

அசுவத்தாமன் வெற்றிக் களிப்போடு சொல்லலானான். வேறு எங்கோ உறங்கிக் கொண்டிருந்த பாண்டவர்கள் ஐவர், கிருஷ்ணன், சாத்யகி ஆகியோர் நீங்கலாக மற்ற அனைவரையும் உறக்கத்திலேயே வெட்டிக் கொன்றுவிட்டதாகப் பெருமையோடு முழங்கினான். பாண்டவர்களையும், கிருஷ்ணன், சாத்யகி ஆகியோரை ஏன் விட்டு விட்டாய் என்றான் துரியன். அவர்கள் இருக்குமிடம் தெரியாமல் வேறு எங்கோ ஓடிப்போய் தப்பி விட்டனர் என்றான் அசுவத்தாமன்.

இவற்றையெல்லாம் கேட்ட துரியோதனன் துன்பங்களுக்கிடையிலும் மனதில் மகிழ்ச்சியை எய்தினான். நண்பா! நீ வீராதி வீரனடா! எப்படிப்பட்ட காரியத்தை மிக எளிதாகச் செய்துவிட்டு வந்திருக்கிறாய். உன்னை ஆரத் தழுவி, மனதார பாராட்டிப் பரிசுகளைக் கொடுக்கும் நிலையில் நான் இப்போது இல்லையே என்று தவித்தான் துரியோதனன். என்றாலும் பரம எதிரிகளான பாண்டவர்களுடைய சேனையையும், அவர்களுடைய தளபதியாக இருந்த திருஷ்டத்யும்னனையும் வதம் செய்துவிட்டான் நண்பன் என்கிற மகிழ்ச்சியோடு கண்களை மூடினான், உயிரையும் நீத்தான்.

பாண்டவர்கள் ரகசியமாக தங்கியிருந்த இடத்துக்கு பாஞ்சால நாட்டு இளவரசனும், பாண்டவர்களின் சேனைத் தலைவனுமான திருஷ்டத்யும்னனும், திரெளபதியின் இளம் புத்திரர்கள் ஐவரும், பாண்டவ சேனா வீரர்கள் அனைவரும் அசுவத்தாமனால் கொலையுண்டனர் எனும் செய்தி வந்து சேர்ந்தது. இந்த சோக நிகழ்வைக் கேட்டு யுதிஷ்டிரன் ஆற்றொணா துயரில் ஆழ்ந்தான். பாண்டவரில் ஏனையோரும் அதிர்ச்சியுற்றனர். உபபாண்டவர்களும் சேனா வீரர்களும் படுகொலையான இடத்துக்கு திரெளபதி அழைத்து வரப்பட்டாள். தன் அன்புப் புதல்வர்கள் கொலையுண்டு மடிந்து கிடப்பதைப் பார்த்து மயங்கி வீழ்ந்தாள் திரெளபதி. உலகில் வேறு யாருக்கும் வந்திராத சோகமயமான நிகழ்ச்சி, தன் உடன்பிறந்த சகோதரனும், வீராதிவீரனுமான திருஷ்டத்யும்னனும், தன்னுடைய ஐந்து புதல்வர்களும் கொல்லப்பட்டனர் எனும் கொடிய செய்தி அவள் செவிகளில் விழுந்ததும் இடிவீழ்ந்தது போல அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

மயங்கி வீழ்ந்தாள்; பின்னர் எழுந்தாள்; நடந்தது இதுவென உணர்ந்தாள். அதிர்ச்சியும் கோபமுமாக அழுத குரலில் உரக்க ஒரு சபதத்தை ஏற்றாள். “பாவி, அசுவத்தாமன் என் குலம் விளங்க வந்த இளம் பிஞ்சுகளைக் கொன்றுவிட்டான். அவனை பழிதீர்க்க நம்மில் எவருமே இல்லையா? அவனை இன்றே கொன்று வீழ்த்த வேண்டும், இல்லையேல், அவன் நெற்றியில் மிளிரும் மணியைப் பிடுங்கி அவனை உயிர்ப் பிணமாக ஆக்கி, அவமானத்துக்கு உட்படுத்த வேண்டும். இவ்விரண்டில் ஏதேனுமொன்றை செய்து முடிக்கும் வரை பச்சைத் தண்ணீர்கூட அருந்த மாட்டேன்; பட்டினி கிடப்பேன்” என்றாள் திரெளபதி.

Ashwatthamaஇதனைக் கேட்ட பீமன் அசுவத்தாமனைத் தேடிப்பிடிக்க விரைந்து சென்றான். ஆனால் அந்த மாயாவியை, கொடுமனம் படைத்த கடைமகனைப் பிடிப்பது அத்தனை எளிதன்று என்பதை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவும், அர்ஜுனனும் அறிந்தே இருந்தனர். தன்னை பாண்டவர்கள் சும்மா விடமாட்டார்கள் என்பதை யுணர்ந்திருன்த அசுவத்தாமன் பதுங்கிக் கொள்ள இடம் தேடி ஓடினான். கங்கை நதிக் கரையோரம் இடம் தேடி ஓடியவனுக்குத் தவத்தில் ஆழ்ந்திருந்த வியாசபகவான் தென்பட்டார். அந்த தவயோகியின் பின்னால் ஒளிந்து கொண்டால் தன்னை பாண்டவர்களால் கண்டுபிடிக்க முடியாது என்றுணர்ந்து அங்கே போய் ஒளிந்து கொண்டான்.

அப்போது ஓடி ஒளிந்த தன்னைத் தேடி பீமன், அர்ஜுனன், கண்ணன் ஆகியோர் வருவதைக் கண்டான்; அச்சத்தில் உறைந்தான். தான் உயிர் பிழைக்க ஒரே வழி தனக்குத் தெரிந்த பிரம்மாஸ்திரத்தை ஏவி இம்மூவரையும் அழிப்பது ஒன்றே என்பதுணர்ந்தான். அருகில் இருந்த ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து அதில் மிகவும் ஆபத்தான பிரம்மாஸ்திரத்தை மந்திரம் சொல்லி ஆவாகனம் செய்து, அதனை பாண்டவர் மீது ஏவிவிட்டான். அவன் ஏவிய அந்த பிரம்மாஸ்திரம், பாண்டவர் வம்சத்தை ஒருவர் விடாமல் நாசம் செய்துவிடும் ஆற்றல் பெற்றது. எவராலும், அல்லது எதனாலும் தடுக்க முடியாத ஆயுதம் அந்த பிரம்மாஸ்திரம்.

கொடியவன் அசுவத்தாமனின் கேடுகெட்ட எண்ணத்தை ஸ்ரீகிருஷ்ணன் உணர்ந்து கொண்டான். பிரம்மாஸ்திரத்தை எதிர்கொள்ள இன்னுமொரு பிரம்மாஸ்திரத்தை ஏவிவிடுவது ஒன்றே வழி என்று அர்ஜுனனை நோக்கி அவனிடமுள்ள பிரம்மாஸ்திரத்தை எடுத்து அவன் மீது ஏவ கண்ணன் ஆலோசனை சொன்னான். இந்த ஆபத்தான தருணத்தில் நாரத முனிவரும், வியாச பகவானும் அவர்கள் முன் தோன்றி உலகையே அழிக்கும் நாசகாரி ஆயுதங்களான இந்த பிரம்மாஸ்திரப் பிரயோகத்தை நிறுத்திவிடும்படி கேட்டுக் கொண்டனர். உலகைப் பற்றியோ, உயிர்களைப் பற்றியோ எந்தவித அக்கறையுமில்லாமல், சொந்த கோப தாப உணர்வுகளுக்கு அடிமைப்பட்டு உலகை அழிக்கும் பிரம்மாஸ்திரப் பிரயோகத்தை நிறுத்திவிடும்படி அவர்கள் உத்தரவிட்டனர்.

நியாய தர்மங்களை உணர்ந்த அர்ஜுனன் உடனே தான் ஏவிய பிரம்மாஸ்திரத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டான். ஆனால் அதனை ஏவமட்டுமே தெரிந்த அசுவத்தாமனுக்கு அதைத் திரும்பப் பெறும் வழிமுறைகள் தெரியாத காரணத்தால், தான் ஏவிய அந்த அஸ்திரம் செய்யப்போகும் பேரழிவுகளை எண்ணி அஞ்சினான். பாண்டவர்களின் வாரிசுகள் அனைவரையும் கொன்று, கர்ப்பத்தில் இருந்த சிசுக்களைக் கூட விட்டு வைக்காமல் அழித்த கொடியவன் அசுவத்தாமனின் சூழ்ச்சியை உடைத்து ஸ்ரீகிருஷ்ணன் உத்தரையின் கர்ப்பத்தில் வளர்ந்து வந்த அபிமன்யுவின் மகன் மட்டும் அழியாமல் காப்பாற்றினான்.

நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த முனிவர்கள் ஒன்றுகூடி அந்த கேடுகெட்ட அசுவத்தாமனை சினந்து கொண்டனர். கிருஷ்ணன் ஆவேசமடைந்து அவன் நெற்றியில் ஒளிர்ந்த அந்த மணியைப் பிடுங்கிக் கொண்டார். அசுவத்தாமனைப் பொறுத்தவரையில் அவன் உயிரை எடுப்பதும், நெற்றி மணியைப் பறிப்பதும் ஒன்றே என்பது தெரியும். வெற்றிக் களிப்பில் செய்யத் தகாத காரியங்களைச் செய்து வெறித் தனமாக நடந்து கொண்டு அசுவத்தாமன் இப்போது வெறுமையடைந்தான். தனித்து நின்றான். பராரியாய் உலகைச் சுற்றிவந்து வருந்தவேண்டிய சூழ்நிலையை அடைந்தான். அப்போது ஸ்ரீகிருஷ்ணர் சினந்து அவனை சபித்தார். துன்பங்களை மட்டுமே கண்டும், கேட்டும், அனுபவித்தும் உலகம் முழுவதும் பேய்போல அலைந்து திரியும் அவலநிலையை அவன் அடையவேண்டுமென்பது அவரது சாபம். ஆம்! இறப்பு என்பது இல்லாமல் உலகைச் சுற்றிக்கொண்டு அழிவையும் துன்பத்தையும் துயரத்தையுமே காணும் கேவலமான வாழ்க்கையை அடைந்தான். பிறரைத் துன்பத்தில் ஆழ்த்தும் படுபாதகங்களைச் செய்து மகிழ்ச்சியடைய நினைக்கும் மாந்தர்க்கெல்லாம் அசுவத்தாமன் வரலாறு ஒரு பாடமாக அமையும் என்பது திண்ணம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *