பரிகாரம்
— தஞ்சை வெ.கோபாலன்.
அந்த கிராமத்து அக்கிரகாரத்தில் வெளியிடங்களுக்குக் குடிபெயர்ந்தவர்கள் போக மிச்சமுள்ள ஏழெட்டு வீடுகளில் மட்டும் இன்னமும் அங்கு நிலமோ, வேலையோ உள்ளவர்கள் மட்டும் மிச்சமிருந்தார்கள். அதே பழைய, தழைந்த ஓட்டு வீடுகள், முற்றம், தாழ்வாரம், கூடம் பின்புறம் கிணறு என்று பழைய பாணியில் அமைந்த வீடுகள். அதில் ஹெட்மாஸ்டர் வீடு என்றழைக்கப்பட்ட வீட்டில் அந்த காலத்தில் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்த ஒருவரின் வாரிசுகள் இன்னமும் இருந்தனர். அதில் கடைசி தலைமுறையச் சேர்ந்த பெரியவர் ஒருவர் தன் வீட்டு வாசல் திண்ணையில் அமர்ந்திருந்தார்.
அங்கிருந்த சிலருக்கு அவர் வாயைக் கிளறினால் மிகப் பழைய காலத்தில் அந்த கிராமத்தில் இருந்தவர்கள், அவர்களது கதைகள் இவைகளை அவர் அவிழ்த்து விடுவார், பொழுது போவது தெரியாது. ஆகையால் அவர் ஓய்வாக வாயில் திண்ணையில் அமர்ந்திருக்கும் போது அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் அவரிடம் சென்று அவரோடு திண்ணையில் அமர்ந்துகொண்டு சாவகாசமாகப் பேச்சைத் தொடங்குவார்கள். அவரும் இவர்களது ஆசையைத் தீர்க்கவென்று பழைய நிகழ்ச்சிகளை அசைபோட்டுச் சொல்லிக் கொண்டு வருவார். அவை கற்பனையா, நடந்தவையா என்பதெல்லாம் தெரியாது. ஆனால் அவர் அந்த வரலாறுகளைச் சொல்லும் பாங்கு அத்தனை சுவையாகவும், கண்ணெதிரே நடப்பது போலவும் இருக்கும்.
அந்த கிராமத்து தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக இருக்கும் ராகவன் என்பார் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அவர் கேட்டார், “என்ன மாமா? ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருக்கீங்க போல இருக்கே. என்ன விஷயம்?” என்றார்.
அதற்கு அந்தப் பெரியவர், “அதெல்லாம் ஒண்ணுமில்லைடா! நேற்று பம்பாயிலிருந்து என் சொந்தக்காரர் ஒருத்தர் வந்திருந்தார் இல்லையா?” என்று தொடங்கவும்.
“அப்படியா! தெரியாதே, யார் அவர், உங்களுக்கு என்ன உறவு, என்ன விசேஷமா இங்கே வந்தார்” என்றெல்லாம் கேள்வி எழுப்பினார் ராகவன். கூட உட்கார்ந்திருந்த மேலும் இருவரும் இந்த உரையாடலில் ஆர்வம் கொண்டவர்களாகத் தெரிந்தனர்.
பெரியவர் சொன்னார், “அவரும் நம்ம ஊரைச் சேர்ந்தவர்தான். மேற்கே பஜனை மடம் இருக்கிறது அல்லவா? அந்த இடமும், அதையொட்டி உள்ள வீடும் இவர்களுடையது. அதை இன்னமும் அவர்கள் யாருக்கும் விற்கவில்லை. அந்த இடம் எப்படி இருக்கு, என்ன செய்யலாம் என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் வந்திருந்தார்” என்றார்.
“அப்படியா, நீங்க சொல்றதைப் பார்த்தா, இங்கே ரொம்ப வசதியா வாழ்ந்தவங்கன்னு தெரியுது. வீடும், சொந்தமா பஜனை மடமும் கட்டி வச்சிருக்காங்கன்னா நிச்சயமா வசதி படைச்சவங்கதான், சரி, என்ன முடிவு பண்ணினார்?” என்றார் ராகவன்.
பெரியவர் சொன்னார், “அவருக்கு இருக்கும் சொத்தில் இது ஒண்ணும் கணக்கே இல்லை. அந்த மடத்தையும், அந்த இடிந்து பாழடைந்து கிடக்கும் அவரது பழைய வீட்டையும் இங்கே ஏதாவது நல்ல காரியத்துக்கு தேவைன்னா கொடுத்துவிட தயாரா இருக்கிறார். அவர் ஒண்ணும் சாமானிய மனிதர் இல்லை. அவரோட அப்பா 1930ல ராஜாஜி தலைமையில் திருச்சிலேருந்து வேதாரண்யத்துக்கு பாதயாத்திரையா போய் அங்கே உப்பு எடுத்து சத்தியாக்கிரகம் செய்தாங்க இல்லையா, அதில ஒரு தொண்டரா போயி, புளிய மிளாறுல அடிபட்டு ஜெயிலுக்குப் போனவர், தியாகி. ஒரு சமயம் ராஜாஜிகூட இங்க பக்கத்துல எங்கேயோ கூட்டம்னு வந்தப்போ அவர் வீட்டுக்கு வந்துட்டு போயிருக்கார், அப்படின்னு சொல்லுவாங்க.” என்றார் பெரியவர்.
“ஓ! அத்தனை பெரியவங்களா, அப்படின்னா, அவங்க குடும்பத்தைப் பற்றியும், அவரைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க, கேட்போம். நம்ம ஊரும் சாதாரண ஊரு இல்லை, தேச சுதந்திரத்துக்காக ஒரு தியாகியை உருவாக்கின ஊருங்கறது பெருமைக்குரிய விஷயம் இல்லையா?” என்றார் ராகவன்.
“சரி, சொல்றேன், கேளுங்க. நேத்து வந்தவரோடு அப்பா தியாகி குருமூர்த்தின்னு பேரு. அவரை எல்லோரும் ஆச்சா ஆச்சான்னுதான் கூப்பிடுவாங்க. ஆளு, நல்லா வெள்ளை வெளேர்னு வெள்ளைக்காரன் போல இருப்பாரு. அவரைத் தொட்டா அந்த இடம் சிவப்பா போயிடுமாம், அத்தனை கலர். அந்தக் காலத்திலே அவர் கதர்தான் போடுவாராம். அவரைப் பார்க்க அடிக்கடி மாயவரத்திலேர்ந்து நாராயணசாமி நாயுடுங்கற தியாகியும் வருவாரம். இவுங்க இரண்டு பேருமாத்தான் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமா கலந்துகிட்டவங்க.”
“இந்த ஆச்சாவுக்கு இரண்டு பெண்களும், ஒரு பையனும் இருந்தாங்க. பெண்களைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்து விடணும்னு ஆசைப்பட்டாரு. பையன் மட்டும் மாயவரத்துல படிச்சுட்டு பம்பாய்க்கு வேலைக்குப் போய்விட்டான். அவந்தான் நேத்து இங்கே வந்தது. “
“இந்த ஆச்சாவோடு பெரிய பொண்ணு வீட்டோட இங்கேயே இருந்தா. அவ வளர்ந்திருந்தாளே தவிர ஒரு குழந்தை மாதிரி, சின்ன குழந்தைகளோடு விளையாடுவா. பின்னால தெருவில இருக்கறவங்களோடு ஆடு மாடு இதையெல்லாம் அக்கறையா கவனிச்சுக்குவாளாம். தெருகோடில ஒரு சாவடியும், அதையொட்டி மஞ்சவாய்க்காலும் ஓடுதில்லையா, அங்கேதான் அவ சின்னச் சின்ன பெண்களைக் கூட்டி வச்சு விளையாடிக் கொண்டிருப்பாளாம்.”
“அவளுக்கும் வயசாயிடுச்சின்னு, அவர் அவளுக்கு ஒரு மாப்பிள்ளை தேடிக்கொண்டிருந்தார். அப்போது இங்கே பக்கத்துல இருக்கற நாகங்குடி கிராமத்துல ஜில்லா போர்டு பள்ளிக்கூடத்துல வாத்தியாரா ஒரு பையனும், அவன் அம்மாவும் நம்ம ஊருல வந்து குடியேறினாங்க. அந்த பையனும் நல்லவனா இருந்ததால, அவன் அம்மாகிட்ட பேசி மெதுவா பெரிய பொண்ணை அந்தப் பையனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சுட்டார் அவர். வீட்டோட மாப்பிள்ளை என்கிற மாதிரி ஊரோட மாப்பிள்ளை. ஆனா அந்தப் பொண்ணு, மத்த பெண்களைப் போல இல்லாம, சின்னக் குழந்தை போல, குழந்தைகளையெல்லாம் கூட்டி வச்சு, அவங்களுக்கு சாதம் போடறது, மஞ்சவாய்க்காலுக்குக் கூட்டிகிட்டு போயி குளிப்பாட்டி விடறது, அதுல இருக்கற மீன்களுக்கு ஆகாரம் போடறது, இப்படி குழந்தைத் தனமாகவே இருந்தாளாம். அந்த மாப்பிள்ளைப் பையனும் ரொம்ப சாதுவானதால, சின்ன கிராமம்தானே, அவ அப்படித்தான் இருப்பாங்கற நினைப்புல அவளைப் பத்தி அதிகமா கவலைப் படறதில்லை. அவன் அம்மாவுக்கும் மருமகளா இல்லாம வீட்டுல அவ ஒரு குழந்தை மாதிரி இருந்து, சீக்கிரமே இறந்தும் போயிட்டா”
“அடப் பாவமே! அப்புறம் என்ன ஆச்சு” என்றார் ராகவன் ஆர்வத்துடன்.
“அந்த வாத்தியார் பையன் முதல்ல ரொம்ப வருத்தப்பட்டான், அவன் அம்மாவும் அவனை வேற கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி வற்புறுத்தியும் அவன் செஞ்சுக்கல. அந்த சமயத்துல இங்கே பக்கத்துல இருக்கே மங்கலஞ்சேரிங்கற ஊர், அந்த ஊரைச் சேர்ந்த மகமது யூசுப் மறைக்காயர் இந்த வாத்தியாருக்கு ரொம்ப சிநேகம். அவர் அடிக்கடி இங்கே வந்து வாத்தியாரோட இருப்பார். வாத்தியாரோட அம்மாவை அவரும் அம்மா, அம்மான்னுதான் கூப்பிடுவார். அதே அன்போடத்தான் பழகிவந்தார்.”
“அவர் நல்ல செல்வந்தர் குடும்பம். அவர்களுக்கு மலேயாவில் கோலாலம்பூரிலும், இந்தோசைனாவில சைகோனிலும் வியாபாரம் இருந்தது. நம்ம வாத்தியாருக்கு இங்கிலீஷ், ஃப்ரெஞ்சு பாஷை இதோட கைரேகை சாஸ்திரமும் நல்ல தெரியும். அதனால, பெண்டாட்டியை இழந்துட்டு இந்த எலிமெண்டரி ஸ்கூல் வாத்தியார் வேலைல இருக்கறதைவிட, வா எங்க அப்பாவோட வியாபாரத்துல எங்கேயாவது வேலைக்குப் போயிடலாம். நானும் அங்கே வரேன் என்று சொல்லி வாத்தியாரை முதலில் கோலாலம்பூருக்கும், பிறகு அங்கேயிருந்து சைகோனுக்கும் கூட்டிக் கொண்டு போய்விட்டார்.”
“போன இடத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு. சைகோனில் ஒரு தெருவே இவுங்களுக்குச் சொந்தமா இருந்தது. எல்லா வகை வியாபாரத்திலும் இவுங்க இருந்ததால, நம்ம வாத்தியாரையும் ஒரு இடத்தில இருக்க வச்சுட்டாங்க. அவருக்குத் தனியா தங்க இடம், அவரே சாப்பாடு செஞ்சு சாப்பிடறமாதிரி ஏற்பாடு. இதைத் தவிர ஓய்வு நேரத்துல கைரேகை சாஸ்திரம் பார்க்க அனேகம் பேர் வருவாங்க, அதிலயும் வாத்தியாருக்கு நல்ல வருமானம்”
“கொஞ்ச நாள்ல, ஊர்ல நிலம், வீடுன்னு வாங்கி போட்டு அம்மாவை அங்கே இருக்க வச்சுட்டு, இவர் மாத்திரம் அங்கே இருந்தாரு. நண்பர் மகமது யூசுபும் அவுங்க அப்பாவும் இவரை அவுங்க வீட்டுப் பிள்ளை மாதிரி கவனிச்சுக் கிட்டாங்க. அப்போல்லாம் வெளிநாட்டுக்குப் போறது ஒண்ணும் கஷ்டம் இல்ல. இங்கேயிருந்து நாகப்பட்டணம் போயிட்டா, கப்பல் டிக்கட் வாங்கி படகுல போயி, கொஞ்சம் எட்டத்துல கடலில் நிற்கிற கப்பல்ல ஏறி, எங்கே போகணுமோ, அங்கே போகலாம். அப்படித்தான் அந்தக் காலத்துல தென்னாப்பிரிக்கா, பிஜித் தீவு, லட்சத் தீவுகள் இப்படி பல ஊர்களுக்கும் நம்ம ஆளுங்க போயிருக்காங்க. இப்போ போல பாஸ்போர்ட், விசா அப்படியெல்லாம் எதுவும் இல்ல இல்லையா?”
“ஒரு தடவை அந்த வாத்தியார் லீவுல ஊருக்குத் திரும்பி வந்திருந்தார். அப்போ மாயவரத்துல அவரோட சித்தப்பா ஒருத்தர், நல்ல வைதீகர் அவருக்கு சஷ்டியப்த பூர்த்தின்னு இவுங்களை அழைச்சிருந்தார். லீவுல வந்திருந்த வாத்தியாரும் அம்மாவை அழைச்சிகிட்டு மாயவரம் போய் அவுங்க வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்கற சமயம், உள்ளேயிருந்து அந்த வைதீகர் உரத்த குரலில், அங்கேயே நில்லு” என்று குரல் கொடுத்தார்.
“இது என்ன கொடுமை. விசேஷத்துக்கு அழைச்சுட்டு, வெளில நிக்கச் சொல்றது அவமானமில்லையோ?” என்றார் ராகவன்.
“ஆமாம் ஆமாம். அவமானம்தான். ஆனா, அவரோ சித்தப்பா, ஆசாரசீலர், போதாதற்கு ஒரு வைதீகர். இவரோ கப்பல் ஏறி வெளிநாடு போயி வந்தவர். அப்படி கப்பல் ஏறி கடலைக் கடந்து போனா, அவுங்க தீண்டத் தகாதவங்க ஆயிடுவாங்க, அவுங்க சாஸ்திரப்படி. அதனால, தீட்டுப் பட்டவரை உள்ளே விட அவர் விரும்பவில்லை. அம்மாவை மட்டும் உள்ளே வரச் சொல்லிவிட்டு, அந்த வைதீகர் வாசலுக்கு வந்து வாத்தியாரிடம், நீ கடல் கடந்து போயிட்டு வந்ததால, தீட்டுப் பட்டுப் போயிட்டே. அதனால, நீ ராமேஸ்வரம் போய், கடல் ஸ்நானம் செஞ்சுட்டு, ராமநாத சுவாமியை தரிசித்துவிட்டு பிரசாதத்தோட இங்கே வா, இன்னிக்கு விசேஷம் முடிஞ்சாலும் இன்னும் பதினைந்து நாளுக்கு தொடர்ந்து ஜபம் எல்லாம் நடக்கும். அது முடியறதுக்குள்ள நீ வந்துடு. போ! இப்பவே கிளம்பி ராம்ஸ்வரம் போய் ஸ்நானம் செஞ்சுட்டு வந்துடுன்னு சொல்லி அனுப்பிட்டார்.”
“பாவம் வாத்தியார், சரின்னு சொல்லிட்டு நம்ம ஊருக்கே திரும்பி வந்தவர் விஷயத்தை யார்கிட்டயும் சொல்லாம, நேரே மஞ்சவாய்க்காலுக்குப் போய் ஒரு சொம்புல வாய்க்கால் ஜலத்தைப் புடிச்சுட்டு வந்து வீட்ல வச்சுகிட்டார். நாலைந்து நாள் நம்ம ஊர்லேயே இருந்துட்டு வாரக் கடைசில ஒருநாள் காலைல கிளம்பி மாயவரம் போயி, அங்கே ‘லாகடத்துல’ ஒரு கடைல மஞ்சவாய்க்கால்ல புடிச்ச தண்ணி இருக்கற சொம்புக்கு ஈயப் பத்து வச்சு சீல் பண்ணி கையில எடுத்துகிட்டு, நெற்றில விபூதிப் பட்டைப் போட்டுக்கொண்டு சித்தப்பா வீட்டுக்குப் போனார்.”
“பையன் சமத்தா ராமேஸ்வரம் போய்ட்டு, நெற்றியில் திருநீற்றுப் பட்டை, கையில சீல் வைத்த ராமேஸ்வரம் புனிதநீர் இவற்றோடு வந்ததைப் பார்த்து மகிழ்ந்த வைதீகர் இவருக்கு ராஜ உபசாரம் செய்து விருந்து வைத்து, வாத்தியாரோடு அம்மாவிடம், அவளுடைய மகனுடைய பெருமைகளைச் சொல்லி மகிழ்ந்து போனாராம். இந்த விவரங்களையெலாம் நேற்று வந்த பம்பாய்க்காரர் தன் அக்காள் வீட்டுக்காரர் செய்த வேலையைச் சொல்லிச் சொல்லிச் சிரித்துவிட்டு, அந்தக் காலத்தில் எப்படியெல்லாம் மூட நம்பிக்கையிலே வாழ்ந்திருக்காங்க, இப்போ, உலகம் எப்படிச் சுருங்கிப் போச்சு, தினம் ஆயிரக் கணக்குல வெளிநாடு போறாங்க வறாங்க, அவுங்கள்ளாம் ராமேஸ்வரம் போயா ஸ்நானம் பண்ணி புனிதநீரா கொண்டு வராங்க என்றார்”
பெரியவர் கதை சொல்லி முடிக்கும் வரை ராகவன் உள்ளிட்ட எல்லோரும் சிரித்துக் கொண்டே கதைகேட்ட சுவாரசியத்தோடு வீடுகளுக்குப் புறப்பட்டனர். பெரியவரும் திண்ணையைக் காலி செய்துகொண்டு அவர் வேலையைப் பார்க்க உள்ளே போய்விட்டார்.
http://www.bharathipayilagam.blogspot.in/2015/07/blog-post_26.html
பின் குறிப்பு
1910ஆம் ஆண்டில் சுதேசமித்திரனில் அதன் நிறுவனர் ஜி.சுப்பிரமணிய ஐயர் “ஆசாரதிருத்த வியாசங்கள்” எனும் தலைப்பில் பல்வேறு பழைய பழக்க வழக்கங்கள் காலத்துக்கேற்ப மாற்றப்பட வேண்டுமென்று கட்டுரைகள் எழுதினார். அவற்றை வரிசைப்படுத்தி நான் என்னுடைய www.bharathipayilagam.blogspot.in வலைப்பூவில் வெளியிட்டுக்கொண்டு வருகிறேன். அதில் இரண்டாவது பகுதியை இத்துடன் தங்கள் பார்வைக்காக இணைத்துள்ளேன். அதில் இந்துக்கள் கடல்கடந்து போனால் சாத்திர விரோதம் என்ற கருத்து இருந்தது என்பதையும், அந்தக் கருத்தைச் சில பண்டிதர்கள் ஆதரித்தார்கள் என்பதையும் இதில் காணலாம். நான் ‘பரிகாரம்’ எனும் தலைப்பில் அனுப்பியுள்ள கதையின் சாரமும் அதுதான் என்பதற்காக, ஜி.சுப்பிரமணிய ஐயரின் கட்டுரையின் தொடுப்பை அளித்திருக்கிறேன் நன்றி.
தங்களன்புள்ள,
தஞ்சை வெ.கோபாலன்