படக்கவிதைப் போட்டி 22-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
இந்த வாரப் போட்டிக்கான படத்தைத் தந்திருக்கும் திரு. ரவிச்சந்திரனுக்கும், அதனைப் போட்டிக்குத் தேர்வுசெய்திருக்கும் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் நன்றிகள் உரித்தாகுக.
தந்தையின் அணைப்பில் மகிழ்ந்திருக்கும் இந்த இனிய மழலையின் கூர்த்த பார்வை நம் உள்ளத்தை ஈர்க்கிறது. மழலையின் தீண்டலுக்கும், அது வாய்திறந்து உதிர்க்கும் அமுதச் சொற்களுக்கும் இவ்வியனுலகில் ஈடேது?
அதனாலன்றோ வான்புகழ் வள்ளுவரும்,
”மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு” என்று வாயூறிப் பேசுகின்றார்.
பாண்டியன் அறிவுடைநம்பி எனும் மன்னனும், ”எத்துணைச் செல்வம் படைத்த செல்வராயினும் குறுகுறுவென நடந்து, உணவைத் தன் சிறுகைகளால் அளைந்து உடல்முழுவதும் பூசிக்கொள்ளும் மழலைச் செல்வம் இல்லா வாழ்க்கை வீணே!” என்று கூறியிருப்பதைப் புறநானூறு நமக்கு அறியத்தருகின்றது.
படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறு கை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம் வாழும்நாளே.
இனி, இவ்வாரப்போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளை வாசித்தும் இரசித்தும் மகிழ்வோம்!
’கோடிப்பணமிருந்தாலும் ஓடி விளையாடும் சேயில்லா வீடு பாலையே’ என்பதைத் தன் கவிதையில் அழுத்தமாய்ப் பதிவு செய்திருக்கின்றார் திரு. சி. ஜெயபாரதன்.
தேன் இனிக்குமா
பால் சுவைக்குமா
சேய் இல்லாத இல்லத்திலே ?
யாழிசை கேட்குமா
புல்லாங் குழலிசை தொனிக்குமா
தவழும் சிசு
இல்லாத வீட்டிலே ?
கோடிப் பணம் இருந்தாலும்
ஓடி விளையாடும்
சேயின்றேல்
வீடு பாலையாய்ப் போகும்மா !
பிறவிப் பயனே
பிறந்த பிள்ளை ஒன்று
தொட்டிலில் அழுவ தம்மா !
***
தன் மழலையின் மனத்தில் ஒளிந்திருக்கும் சுற்றுச்சூழல்சார் கேள்விகளை ஊகித்தறிந்து விடை பகரும் தந்தையைத் தன் கவிதையில் காட்சிப்படுத்தியிருக்கிறார் திரு. இளவல் ஹரிஹரன்.
கண்களில் விரியும் பெருவியப்பைக்
கைவிரல் ஒன்றே காட்டிவிடும்
மண்தல மீதிற் தான்பிறந்த
மாபெரும் பிறப்பின் பொருளுணர
தன்மனம் எண்ணும் தனித்துவமாய்
தாங்கிடும் தந்தை தோளினிலே
கொண்டிடும் கேள்விக் கென்னபதில்?
குழந்தைக்கு இங்கே யாதுரைப்பேன்!
[…]
வருந்தலை முறைக்கு என்னசெய்தோம்
வளந்தரும் பூமியைக் கொடுத்தோமா…..
மானிடம் வளர்க்கப் பேசிடுவோம்
மரங்களை வளர்க்க முயன்றோமா….
பேரிடர் தீர்க்கப் புறப்படுவோம்
பெரும்சூழல் காக்க முயன்றோமா…
[…]
சிந்தனை செய்வீர் விடைகாண்பீர்
சிசுவாய் கேள்வி சிலகேட்டேன்
தந்தையர் பூமிஎனும்வண்ணம்
தாங்குக புவியைப் பேணிடுக…
***
தாயாயிருந்து (மறுபிறவியில்) சேயாகிப்போனவளின் மனவோட்டங்களை அழகிய கவிதையாய் வடித்துத் தந்திருக்கின்றார் திருமிகு. ஜெயஸ்ரீ ஷங்கர்.
யோசனையா இருக்கு டாடி
ஒரே யோசனையா இருக்கு டாடி ..!
இந்த ஊரும் மாறிப் போச்சு
மக்கள் பேச்சும் மாறிப் போச்சு ..!
[…]
உலகம் ரொம்பவும் மாறிபோச்சே
உசந்ததெல்லாம் போயே போச்சா?
உன்னைச் சுமந்த வயிறு தான்
உன்னையே சுற்றிய மனமும் தான்
ஆத்ம சுழற்சி விளையாட்டில்
உனக்கே மகளென மீண்டவள் ..!
[…]
காலன் போடும் கணக்கையும் அந்தக்
காலம் போடும் கணக்கையும்
பொய்யாக்கி ஏமாற்றி மாறாமல்
அன்பு மட்டும் வாழுதே..
***
”சிப்பியெனக் குவிந்திருக்கும் சிறுவாயிலிருந்து உதிரும் வார்த்தை முத்துக்களைக் கோத்துக் கவிதையாக்கக் காத்திருக்கும் தந்தை இவரோ?” என வினா எழுப்புகின்றார் திருமிகு. தமிழ்முகில்.
கள்ளமறியா கிள்ளை உந்தன்
வெள்ளந்தி முகம் தனில்
தொக்கி நிற்கும் தேடல்
எதை எதிர் பார்க்கிறதோ ?
[…]
ஆச்சர்யமும் ஆர்வமும்
விரிந்திருக்கும் விழிகளில்
விரவிக் கிடக்க – வார்த்தை
உதிர்க்க உதடு துடிக்கிறதோ ?
சிப்பியென உதடுகள் விரிந்து
உதிர்க்கவிருக்கும் முத்து வார்த்தைகளை
சரமென தொடுத்து கவிதை மாலையாக்கிட
ஆவலுடன் காத்திருக்கிறாரா அன்பு தந்தை ?
***
அன்புத் தெய்வமாய்த் திகழும் தன் தந்தையின் நற்பெயரைக் காப்பேன்! என்று சூளுரைக்கும் மழலையைக் காண்கிறோம் திரு. செண்பக ஜெகதீசனின் கவிதையில்.
அப்பா அப்பா கேளப்பா
அன்பு தெய்வம் நீயப்பா,
தப்பாய்ச் சொன்னால் நீசிரிப்பாய்
தண்டனை ஏதும் தரமாட்டாய்,
எப்போ அம்மா வந்திடுவாள்
என்ன வெல்லாம் தந்திடுவாள்,
எப்பவும் எனக்குநீ வழிகாட்டி
என்றும் காப்பேன் உன்பெயரே…!
***
’பொன்னும் பொருளும் ஈடாகாக் கன்னலமுது இப்பெண்குழந்தை’ என்கிறார் திரு. மெய்யன் நடராஜ். உண்மைதானே?
பொன்னைக் கொடுத்தும் பொருளைக் கொடுத்தும்நீ
உன்னதமாய்க் கண்ணைக் கொடுத்தாலும் -புன்னகைக்கும்
இன்னமுதப் பெண்குழந்தை ஈரவிழி சிந்துகின்ற
கன்னலுக்கு ஈடில்லைக் காண்.
***
’பூவொன்று புவிவந்ததோ, நிலவொன்று நிலம் வந்ததோ’ என்றெல்லாம் தன் மகளை வியக்கும் தந்தை, அவள் சாதனைப் பெண்ணாகவும் வாழ்ந்திருக்க வேண்டும் என்று விரும்புவதைத் தன் ’பா’வின் பொருளாக்கியிருக்கிறார் திரு. கொ.வை. அரங்கநாதன்.
பூவொன்று பொன்னேந்தி
பூமியில் வந்தது போல்
பா ஒன்று தமிழேந்தி
பாவாடை அணிந்தது போல்
நிலவொன்று மலர் சூடி
நிலத்தில் வந்தது போல்
நீ வந்தாய் என்மகளாய்
நெஞ்சத்து ஒளிவிளக்காய்
நாளைய உலகில்
நீ நடக்கின்றப் பாதை
அறிவியல் என்றால்
கலாமின் பேத்தியாய்
சாவ்லாவின் சகோதரியாய்
விண்ணிலே தடம் பதித்து
மண்ணை நீ காக்க வேண்டும்
ஆன்மீகமே உன் வழியென்றால்
காரைக்கால் அம்மையாரும்
கன்னித் தமிழ் ஆண்டாளும்
உன் கண்களாய் மாற வேண்டும்…
***
’குழந்தையின் பற்களில் தெறிக்கும் சொற்களில் கனிமொழி பிறந்திடுமே’ என்று பூரிக்கின்றார் திருமிகு. கார்த்திகா.
…உன் விழித் திறந்த கணமதில்
இமைக்குள் பொத்திய ஈரம்
கனக்காது என்றும்
முளை விடும்
பற்களில் இருந்து
தெறிக்கும் சொற்களில்
கனி மொழி பிறக்குமே
உன் சிரிப்பினில்
பூக்கள் பிறந்திடும்
குறுங் கவிதைகள் பாடிடும்
[…]
என் நெஞ்சின் கதகதப்பில்
உன்னை அள்ளியணைத்து
மீண்டுமோர் கருவறை செய்வேனடி!!
***
’எண்ணம் சிறப்பாய் இருந்திடில் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்!’ என நயம்படக் குழந்தைக்கு உரைக்கின்ற தந்தையைக் காண்கிறோம் திருமிகு. புனிதா கணேசனின் படைப்பில்.
…வாழும் வழிகள் சொல்லி வைத்து
நாளும் உன்னை வளர்த்திடுவேன்
தோளில் சுமந்தே தினந்தோறும் –உன்
ஆளும் திறமை வளர்த்திடுவேன்
கண்ணின் மணியே கவலை விடு
எண்ணம் சிறப்பாய்க் கொண்டு விடு
வண்ணம் போன்ற வாழ்விதனில்
மண்ணில் நன்றே வாழ்ந்து விடு
ஆயிரம் கனவுகள் உனக்காக
உயிராம் உந்தன் உயர்வுக்கு
நேயமாய் நான் கொண்டேன் – என்
சாயலாய் வந்தவளே! ஆருயிரே
அழுகை விட்டுச் சிரித்து விடு !!
***
தங்கள் எண்ணங்களையெல்லாம் குழந்தையின் கிள்ளை மொழிகளாயும், தந்தையின் அன்புநிறை அறிவுரைகளாயும் வழங்கியிருக்கின்றனர் கவிஞர் பெருமக்கள். பாராட்டுக்கள் அனைவருக்கும்!
இனி, இவ்வாரச் சிறப்புக் கவிஞரைத் தேடிக் கண்டடைவோம்!
குழந்தையின் நெருக்கமும் தொடுகையும் சாதாரணத் தந்தையையும் கவிஞனாய் மாற்றக் கூடிய வல்லமை வாய்ந்தது. குழந்தையின் சிரிப்பில் இறைவனையும், அதன் குதலை மொழியில் குயிலின் குரலையும் காண்பார் தந்தை; அதன் மெய்தீண்டலோ அவரை ஏழாவது சொர்க்கத்திலே கொண்டுசேர்க்கும். அப்பப்பா! வார்த்தைக்குள் அடங்காத மழலை இன்பத்தைத் தன் கவிதைக்குள் சிறைப்படுத்த முயன்றிருக்கும் கவிதை ஒன்றைக் கண்டேன்.
அந்தக் கவிதை…
இவள் மழைக்குள்
எனக்கான
குடையை ஒருபோதும்
நான் விரிப்பதில்லை…
இவள் புன்னைகைக்கும்
பொழுதெல்லாம்
புகைப்படம் சுமக்கும் காலத்தின்
இதழில் பால் வாசம்…
இவள் கைகள் விரிக்கும்
அளவுக்குத்தான் வானம்
என்பதில் நான் பறவை
ஆகிறேன்…
மார்பில் ஊரும் தென்றலின்
சாயலில் தெவிட்டாத
வண்ணம் சுமக்கும்
இவள் சிணுங்கல்….
உச்சி முத்தம் பேசும்
நினைவில்
குயில் தேசம் இவள் மடியில்…
சட்டையில்லாத சூட்டுக்குள்
சக்கர பாதம்
இவள் நினைவு…
சர்க்கரை கசக்கும்
என்பதே இவள்
விரல் தொடா இனிப்பின் புனைவு…
ஒரே நேரத்தில் அப்பாவின்
மனதில் அம்மாவையும்
சேர்க்கும் சேயின் தழுவலில்
மீண்டும் நான் குழந்தை ஆகிறேன்…
சேயின் தழுவலில் தாயாவதோடு சேயாகவும் மாறிப்போகும் விந்தையான தந்தையை நம் கண்முன் நிறுத்தியிருக்கும் திரு. கவிஜியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வு செய்திருக்கிறேன்.
***
குழந்தையின் மனவுணர்வுகளை அக்குழந்தையே பேசுகின்ற வகையில் எழிலாய்க் காட்டுகின்றது மற்றொரு கவிதை. தந்தையின் ’தாடி’யால் தான் சந்திக்கும் கேலி தொடங்கித் தன் சோன்பப்டி ஆசைவரை அக்குழந்தை கூறிச்செல்லும் விதம் இரசிக்கும்படி இருக்கின்றது.
அந்தக் கவிதை இதோ!
சோன்பப்டி கருப்பு தாடி அப்பா
சோம்பி என்னை தூக்கலை!
மழலை சோக கீதம் வாசிச்சு
ஜோரா காருல ஏறி
நானும் வல்லமைக்கு வந்தேனே!
டோநட் பன் கேட்டா
பாட்டி சுட்ட சீனி வடை
சீக்கிரமா கிடைக்குது!
[…]
தாடி வச்ச அப்பாகூட
ஓடி விளையாட முடியலை!
முள்ளுதாடியோட பிள்ளையின்னு
சில்ரன் டீசிங் நடக்குது!
எனக்கிருக்கும் பிரச்னையெல்லாம்
யாருக்கிங்கே புரியுது!
சோன்பப்டி விலைகூட
எக்குதப்பா இருக்குன்னு
ஏங்கி நானும் நிக்கையிலே
அப்பா தாடி எனக்கு வந்து
குடுமி வச்ச புலவராக
பிள்ளைத்தமிழ் பாடினால்
சோன்பப்டி பரிசில்
எந்த ராஜா தருவாரு?…
இக்கவிதையைப் படைத்திருக்கும் திருமிகு. லட்சுமியைப் பாராட்டுக்குரியவராய்த் தேர்ந்தெடுக்கிறேன்.
போட்டியில் பங்கேற்ற அனைத்துக் கவிஞர்கட்கும் என் உளமார்ந்த நன்றியும் பாராட்டும்!
சிறப்பான தேர்வு. வெற்றி பெற்றோர்க்கு வாழ்த்துகள்.
இளவல் ஹரிஹரன்
சிறந்த கவிஞருக்கும் பாராட்டு பெறும் கவிதாயினிக்கும் வாழ்த்துகள்