தஞ்சை வெ.கோபாலன்

காலை ஐந்து மணி; தூக்கம் கலைகிற நேரம். தலைமாட்டில் என்னுடைய மொபைல் போனை அலாரம் வைத்துவிட்டுத்தான் படுப்பேன். அது இன்னும் சில நிமிடங்களில் ஒலிக்கத் தொடங்கும். அப்போது அலார ஒலிக்கு பதில் மொபைல் போன் ஒலித்தது. என்ன இந்த நேரத்தில் எனக்கு தொலைபேசி அழைப்பு வருவது கிடையாதே. யாராக இருக்கும் என்று எடுத்துப் பார்த்தேன். அறிமுகமான எண்ணும் அல்ல, பெயரும் இல்லை, வெறும் எண்கள் மட்டுமே.

எடுத்துப் பேசினேன். எதிர் முனையிலிருந்து சென்னையில் வசிக்கும் என் உறவினர் ஒருவர் பேசினார். அன்றிரவு அவருடைய தாயார் காலமாகிவிட்டதாகவும், என்னை உடனே புறப்பட்டு வந்து சேரும்படியும், அன்று மாலையே காரியங்கள் செய்துவிட வேண்டுமென்று அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் இருப்போர் சொல்வதாகவும் அவசரமாக செய்தி சொன்னார்.

சாதரணமாக நான் போய் கலந்து கொள்ள வேண்டிய அளவுக்கு உறவு இல்லாவிட்டாலும், பழக்கத்தில் அவர் எனக்கு நெருங்கிய உறவைக் காட்டிலும் முக்கியமானவர் என்பதால் உடனே படுக்கையிலிருந்து எழுந்தேன். நான் தனி மனிதனாக வசித்து வந்தமையால் என் வீட்டில் யாரிடமும் சொல்ல வேண்டியது இல்லை. ஆகையால் எழுந்து காலை வேலைகளையெல்லாம் முடித்துக் கொண்டு, ஏதாவது கிடைக்கும் பேருந்தைப் பிடித்து சென்னை போய்விடலாம் என்று புறப்பட்டேன்.

காலை ஏழரை மணிக்கு ஒரு அரசு விரைவுப் பேருந்து புறப்பட தயாராக இருந்தது. பேருந்து நிலையத்திலிருந்த தேநீர் நிலையத்தில் ஒரு டீயை வாங்கிக் குடித்துவிட்டு வண்டியேறிவிட்டேன். கூட்டமேயில்லை, என்னையும் சேர்த்து ஏழெட்டு பேர் மட்டுமே வண்டியில் இருந்தனர். பயணச் சீட்டை வாங்கிக் கொண்டு, கையில் கொண்டு வந்திருந்த தினசரியைப் புரட்டிப் படிக்கத் தொடங்கினேன்.

பேருந்து புறப்பட்டு விரைந்து கும்பகோணத்தை அடைந்து, அங்கு சில மணித்துளிகள் நின்றுவிட்டு மீண்டும் புறப்பட்டு விட்டது. மதியம் இரண்டு மணிக்கெல்லாம் சென்னைக்குப் போய்ச்சேர்ந்து விடலாம், எப்படியும் மாலை நான்கு மணி அளவில்தான் உடலை எடுப்பார்கள் என்று நினைத்து, செய்தி சொன்னவருக்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவரும் நான்கு மணிக்கு இங்கு இருப்பது நலம் என்றார். என் பயணம் தொடர்ந்தது.

மதியம் இரண்டு மணிக்கு பேருந்து தாம்பரத்தில் நின்றது. அங்கு இறங்கி அங்கிருந்து வேறு நகரப் பேருந்தைப் பிடித்து நான் போகவேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்தபோது கிட்டத்தட்ட மணி மூன்றை நெருங்கிவிட்டது. நேரே உறவினர் வசித்த பலமாடி குடியிருப்புப் பகுதிக்குள் சென்றேன். நம் ஊர் வழக்கப்படி அக்கம்பக்கத்து குடியிருப்புகளிலிருந்து பலரும் வந்து அங்கு கூடியிருப்பார்கள் என்று நினைத்திருந்த எனக்கு பெருத்த ஏமாற்றம்.

குடியிருப்பின் வாசலில் கருப்பு நிறத்தில் ஒரு அமரர் ஊர்தி என்று எழுதப்பட்ட வண்டி நின்று கொண்டிருந்தது. அருகே உடலை எடுத்து உள்ளே வைக்கவென்று இருவர் காக்கி சீருடை அணிந்தவர்கள் நின்றிருந்தனர். அந்த வண்டியின் டிரைவர் வண்டியினுள் உட்கார்ந்தபடி புகை பிடித்துக் கொண்டிருந்தார்.

உறவினரின் இல்லம் முதல் மாடியில் மாடிப்படியேறுமிடத்துக்கு எதிரிலேயே இருந்தது. வாயில் கதவு திறந்திருந்தது. வாசலில் ஒருவரையும் காணோம். உள்ளே நுழைந்தேன். அது இரண்டு அறைகள் கொண்ட வீடு. முதலில் நுழைந்ததும் ஒரு சிறிய ஹால். அங்குதான் இறந்தவரின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. அருகில் உறவினருடைய மனைவியும், அவர் மகளும், வேறு இரு பெண்களும் மட்டும் இருந்தனர். என்னைக் கண்டவுடன் அவர்கள் சற்று பெருத்த குரலெடுத்து அழ ஆரம்பித்தனர்.

நான் உறவினரிடம் சென்று வேறு யார் வந்திருக்கிறார்கள், யார் வரவேண்டும், என்ன ஏற்பாடுகள் நடந்திருக்கின்றன என்பதையெல்லாம் விசாரித்தேன். அவர் என்னை வாசல் புறமாக அழைத்துச் சென்று மெல்லிய குரலில் வேறு யாரும் வருவதற்கில்லை. நாம் இருவர் மட்டும் தான். உள்ளே இருக்கும் பெண்கள் வீட்டில் இருப்பார்கள். சடங்குகள் செய்ய வாத்தியார் வருவார் அவ்வளவுதான் என்றார்.

எனக்கு எங்கள் ஊர் நினைவு வந்தது. அது பெரிய நகரமும் அல்ல, மிகச் சிறிய கிராமமும் அல்ல. நடுத்தரமான அந்த சிறிய நகரத்தில் எல்லா வசதிகளும் இருந்தன. ஒரு வீட்டில் இதுபோன்ற இறப்பு ஏதேனும் நடந்து விட்டதென்றால், அக்கம் பக்கத்தார் அனேகமாக எல்லா வீட்டிலிருந்தும் வந்து விடுவார்கள். அவர்களில் சிலர் வந்து துக்கம் விசாரித்துவிட்டு உடனடியாகப் போய் விடுவார்கள். நெருங்கிய மக்களாக இருந்தால் வீட்டுப் பெண்களுடன் அண்டை அயலார் வீட்டுப் பெண்களும் உட்கார்ந்து விடுவார்கள்.

தெரு மனிதர்கள் அனேகமாக எல்லோருமே வந்து விசாரித்தாலும், சிலர் மட்டும் உடனே கிளம்பி விடுவார்கள். பழகியவர்கள் அங்கேயே தங்கி உடலை எடுத்துப் போய் எரிக்கும் வரை உடன் இருப்பார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து விடுவார்கள். சம்பந்தப்பட்ட நபருக்கு இந்தத் தொல்லை ஒன்றும் இருக்காது. அவ்வப்போது பொருட்கள் வாங்க பணத்தை மட்டும் யாரிடமாவது கொடுத்து வைத்து விடுவார்கள். அவர் எல்லா செலவுகளையும் பார்த்துக் கொள்வார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்துவிட்டு பட்டணத்து வாழ்க்கையில் இறப்பு கூட அநாதையைப் போல அமைந்து விட்டதை எண்ணி மனம் வருந்தினேன்.

“நீ ஒன்றும் கவலைப் படாதே, உன் கூட இருந்து காரியங்களை நான் கவனித்துக் கொள்கிறேன். நீ ஈமச் சடங்குக்கான காரியங்களை மட்டும் கவனி. மற்ற அனைத்தையும் நான் கவனிக்கிறேன் என்று சொன்னதும் அவருக்கு பெருத்த நிம்மதி.

வாத்தியார் வந்து சேர்ந்தார். வாசற்படிக்கருகில் லேண்டிங் என்று சொல்லப்படும் பகுதியில் அமர்ந்து ஒரு வராட்டியில் அக்னியை கொண்டு வரச் செய்து தீ மூட்டினார். அப்போது மாடியிலிருந்து இருவர் வந்து, “இதெல்லாம் இங்கே செய்யக் கூடாது. மற்ற வீட்டுக் காரர்கள் மாடியிலிருந்து இறங்கி வருகின்ற இடம். அவரவர்கள் ஆபீஸ் முடிந்து வருகிற நேரம். பிள்ளைகள் பள்ளிக்கூடம் விட்டு வந்து விடுவார்கள், விளையாட வெளியே போகவுமாக இருப்பார்கள். இந்தக் காரியங்களையெல்லாம் உங்கள் வீட்டின் உட்பகுதியிலேயே வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்கள். சாஸ்திரி பதில் சொல்லும் முன்பாக அவர்களே அங்கிருந்த சாமான்களை எடுத்து உள்ளே வீசிவிடுவார்களோ என்று பயப்படும்படி அவர்கள் நடவடிக்கைகள் இருந்தன.

“என்னய்யா, உலகத்துல நடக்கக்கூடாத காரியம் நடக்குது. இறந்தவங்க உடல் உள்ளே கிடக்கு. இந்த காரியங்களையெல்லாம் வீட்டு வாயிற்படிக்கு வெளியே வைத்துதான் செய்வது வழக்கம். வெளியே போறவங்க இதை பார்த்துக் கொண்டு போறதால அவங்களுக்கு என்ன சிரமம், வழியை மறிக்காம காரியம் நடந்தா உங்களை எந்த விதத்தில் பாதிக்கிறது?” என்றேன் நான்.

“அதெல்லாம் நடக்காதுய்யா! நீங்க யாரு? இந்த குடியிருப்பு வாசிகளுடைய சங்கத்துத் தலைவன் நான், இவர் செக்ரட்டரி. எல்லா வீட்டுக் காரங்களுடைய செளகரியங்களைப் பார்த்துதான் நாங்க சொல்றோம். புதுசா வந்து நீங்க இங்கே நியாயம் பேச முடியாது” என்றார் தலைவர்.

உறவினரோ என்னை பரிதாபமாகப் பார்த்து, “வேண்டாம்பா, விடு, அவங்களோட எதுக்கு வீண் வம்பு. நான் இங்கே குடிவந்து கொஞ்ச நாட்கள்தான் ஆயிற்று, அதனால் என்னால் அவர்களுடன் இந்த நிலைமையில் வாதாடிக் கொண்டிருக்க முடியாது. நாம் நம்ம காரியங்களை உள்ளேயே வைத்துக் கொள்ளலாம்” என்று சொல்லியபடி உள்ளே போய்விட்டார். வாத்தியாரும் நானும் அவர் பின்னால் உள்ளே சென்றோம். பின்னர் அவசர அவசரமாக காரியங்கள் நடந்தேறின. வழக்கமாக மூங்கில் வெட்டிக் கொண்டு வந்து பச்சை மட்டை முடைந்து கட்டி அதில்தான் உடலை வைத்து எடுத்துச் செல்வார்கள்.

ஆனால் இங்கே உடலை சுமந்து செல்ல ஒரு அமரர் ஊர்தி வந்து நின்று கொண்டிருக்கிறது. மூங்கில், பச்சை மட்டை, கயிறு இவைகள் இல்லை. மண் சட்டிகள் மட்டும் இரண்டு வாத்தியார் கொண்டு வந்து உள்ளே வைத்து அக்னி மூட்டி தயார் செய்திருந்தார். வாகனத்துடன் சீருடை அணிந்து வந்திருந்த இருவர் மட்டும் ஒரு ஸ்ட்ரெச்சரைத் தூக்கிக் கொண்டு உள்ளே வந்து உடலை எடுத்து அதில் வைத்துக் கொண்டு விறுவிறுவென்று போய் வாகனத்தில் ஏற்றி கதவை மூடிவிட்டனர்.

பின்னால் தீச்சட்டியை ஏந்திக் கொண்டு வந்த உறவினரும் நானும் அதே வாகனத்தில் ஏறிக் கொண்டோம். வாத்தியார் மட்டும் நீங்கள் வந்து சேருங்கள், அதற்குள் நான் போய் மயானத்தில் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை செய்து வைக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.

பெண்கள் வாசல் வரை வந்து விழுந்து அழுது பிணத்தை வழி அனுப்புவார்கள் என்று எதிர்பார்த்தேன், அதெல்லாம் ஒன்றும் நடைபெறவில்லை. வாகனம் புறப்பட்டு விட்டது. அந்த குடியிருப்பு வாசல் அங்கு எதுவுமே நடைபெறாதது போல அமைதியாக இருந்தது. அன்றைய தினம் எல்லா காரியங்களும் முடிந்த பிறகு மற்ற நாட்கள் நடக்க வேண்டியதை கவனித்து செய்துவிடு, நான் ஊருக்குப் போகிறேன் என்று கிளம்பி வந்து விட்டேன்.

இதெல்லாம் நடந்து ஒரு மாதம் ஆகியிருக்கும். தொலைக் காட்சிகளில் சென்னையில் பெருமழை, வெள்ளம் பல இடங்கள் நீரில் மூழ்கின என்றெல்லாம் செய்திகளைச் சொல்லிக் கொண்டும், நேரடிக் காட்சிகளைக் காட்டிக் கொண்டுமிருந்தார்கள். இவைகளையெல்லாம் பார்த்து என் உறவினர் கதி என்ன ஆயிற்றோ என்ற கவலை வந்து அவருக்கு போன் செய்தேன். சில முறை செய்தும் தொடர்பு கிடைக்காமல், கடைசியில் அவர் குரல் மறு முனையில் கேட்டது.

“அங்கு மழை, வெள்ளம் என்கிறார்களே, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? ஒன்றும் உங்களுக்கு பாதிப்பு இல்லையே?” என்று கேட்டேன்.

அவர், “அதையேன் கேட்கிறாய். இங்கு அடையாற்று வெள்ளம் வீட்டினுள் புகுந்து முதல் தளம் முழுவதும் நீரினுள் மூழ்கிப் போய்விட்டது. நாங்கள் எல்லாம் மேலே மொட்டை மாடியில்தான் இருக்கிறோம். சோறு, தண்ணி எதுவும் கிடைக்கவில்லை, உயிர் பிழைத்தால் போதுமென்கிற நிலைமை” என்றார்.

“உங்களை மீட்க யாரும் வரவில்லையா?” என்றேன்.

“இது வரை யாரும் வரவில்லை, எப்படி வெளியேறப் போகிறோம் என்பதும் தெரியவில்லை ஒரே குழப்பமாக இருக்கிறது” என்றார்.

உங்கள் குடியிருப்பின் தலைவர், செயலாளர் ஆகியோர் இருப்பார்களே, உங்கள் பாதுகாப்புக்காக அவர்கள் எதுவும் செய்யவில்லையா?” என்றேன்.

“அவர்கள் எல்லாம் அடையாறு ஆற்றில் வெள்ளம் என்றதுமே தங்கள் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு இந்த இடத்தை விட்டு எங்கோ போய்விட்டார்கள். அவர்களுக்குத் தெரியுமாம், வெள்ளம் வந்தால் இந்தப் பகுதி தண்ணீருக்குள் மூழ்கிவிடுமென்று. அதனால் அவர்கள் ஓடியே போய்விட்டார்கள். இங்கு என்னைப் போல சமீபத்தில் குடி வந்தவர்கள் மட்டும் தான் விஷயம் தெரியாமல் மாட்டிக் கொண்டிருக்கிறோம்” என்றார் அவர்.

‘திருவையாறு பாரதி இயக்கத்தாரும்’, ‘சொர்க்கபூமி தஞ்சாவூர்’ என்ற அமைப்பு சார்பிலும் இங்கிருந்து நிவாரணப் பொருட்களை எடுத்துக் கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலிருந்து சென்னைக்கு லாரிகள் போகின்றன, அதில் தொண்டர்களாக நாங்கள் போகிறோம், நீங்களும் வருகிறீர்களா என்று பாரதி இயக்க நண்பர் ராஜராஜன் எனக்கு போன் செய்தார். எங்கே எங்கே என்று காத்துக் கொண்டிருந்த நான் அவர்களுடன் சேர்ந்து சென்னைக்கு வெள்ள நிவாரணப் பணிக்காகப் புறப்ப்ட்டு விட்டேன்.

எங்கள் லாரியை சைதாபேட்டை அரசு அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்த அதிகாரிகள் எங்களுக்கு நாங்கள் நிவாரணப் பணியாற்ற வேண்டிய பகுதிகளைக் குறிப்பிட்டு அங்கு போகச் சொல்லி, கூடவே ஒரு அதிகாரியையும் அனுப்பி வைத்தார்கள். இறைவன் திருவுள்ளமோ என்னவோ, நாங்கள் பணியாற்ற வேண்டிய பகுதியில்தான் நான் முன்பு என் நண்பரின் தாய் காலமானபோது போன அதே பகுதிக்குப் போய்ச்சேர்ந்தேன். எங்கள் லாரி நண்பர் குடியிருந்த அடுக்கு மாடி குடியிருப்பு வாசலில் நின்றதும், அங்கு வாழ்ந்த மக்கள் எல்லாம் அடித்துப் பிடித்துக் கொண்டு வந்து நிவாரணங்களைப் பெற வந்து சேர்ந்தனர்.

அந்தக் கூட்டத்தில் என் நண்பரும், அவர் மனைவியும்கூட தூரத்தில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவரும் என்னைப் அதிசயமாகப் பார்த்துச் சிரித்தார். கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு வந்து அங்கு இருக்கும் மொத்த குடியிருப்புகள், அதில் வசிக்கும் மொத்த பேர்களுடைய எண்ணிக்கை இவற்றையெல்லாம் அந்த தலைவரும், செயலாளரும் அடுக்கிக் கொண்டிருந்தனர். அனைவரையும் வரிசையில் நிற்கச் சொல்லி வற்புறுத்தினோம். அதற்குள் அந்தப் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த உள்ளூர் இளைஞர்கள் எங்கள் உதவிக்கு வந்து சேர்ந்தனர்.

அவர்கள் உதவியோடு நிவாரணப் பொருட்கள் அடங்கிய பெட்டி, பாய், ஜமக்காளம், போர்வை, உணவுப் பொருட்கள், குடி தண்ணீர் பாட்டில் அனைத்தையும் ஒவ்வொருவருக்குமாகக் கொடுத்துக் கொண்டிருந்தோம். என் நண்பர் பொருட்களைப் பெற்றுக் கொள்ள நெருங்கியபோது, அவர் சொன்னார், “மற்றவர்களுக்கு உதவி செய்வதை பெரும் பாவமாகக் கருதியவர்கள் முதலில் வந்து வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள் அல்லவா? இனி எவருடைய வருத்தமும் இல்லாமல் என்னைப் போன்றவர்கள் கிடைத்ததை வாங்கிக் கொள்கிறோம்” என்று நாங்கள் கொடுத்த பொருட்களை கண்களில் நீர் வழிய வாங்கிக் கொண்டார் .

அப்போது நான் நண்பரிடம் சொன்னேன், “எல்லாம் நல்லபடியாக நடக்கும் வரை நான் பெரியவன், இவன் தாழ்ந்தவன், நான் நிரந்தரமானவன், இவன் இப்போது வந்தவன் என்றெல்லாம் ஏற்றத் தாழ்வு பார்த்தவர்களை யெல்லாம் இன்றைக்கு இறைவன், அனைவரும் அவர் சந்நிதியில் ஒன்றுதான் என்று நிரூபித்து விட்டான். சுற்றிலும் இருப்பவர்கள் மனங்கள் அழுக்குப் படிந்திருந்தாலும், நாம் நல்ல உள்ளத்தோடு இறைபணி யாற்றுவோம். நம்பியவர் கெடுவதில்லை. மனிதம் போற்றப்பட வேண்டியது” என்றேன்.

தஞ்சை வெ.கோபாலன்,

இயக்குனர்,

பாரதி இலக்கியப் பயிலகம்,

தஞ்சாவூர் 613007)

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “மனிதம்

  1. இன்று  இந்த சமூகத்தில் தலைமைப் பண்பு இல்லாத அரைவேக்காடுகள் தான் தலைவர் செயலாளர் என்று எங்கும் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். 

    காலக் கொடுமை இது போன்ற ஒரு நிகழ்வு அங்கே இருக்கும் அடுக்கு மாடிக் குடி இருப்பில் நடந்துக் கொண்டிருக்கிறது! 

    அங்கே குடி இருப்பவர்கள் வந்து கலந்துக் கொள்ளா விட்டால் கூட அவரவர் வழக்கப் படி கூட சடங்கு சம்பிரதாயங்களைக் கூட செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று கூறும் அளவிற்கு அங்கே மனித உருவத்தில் வேறு சில ஜன்மங்கள் உயிர் வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றன.

    பெருநகரங்களில், அடுக்கு மாடி குடி இருப்புகளில் உள்ள மனிதர்களின் செயல்களில் மனிதநேயம் சாகடிக்கப் பட்டு ஆனால் அதை நாகரிகம் (பிரைவெசி) என்று அநாகரிகம் அரங்கேறுவதை படம் பிடித்துக் காட்டுகிறது இந்த நிகழ்வு!

    அளவுக்கு மீறிய இந்த மனிதநேய மறுதலிப்பை சகித்துக் கொள்ள முடியாமல் தான் இறைவனும் இப்படியொரு பேரிடரைத் தந்து இருப்பானோ?   என்றும்  எண்ணத் தோன்றுகிறது.

    நகரம் ஒரு நரகம் என்றார்கள் அது அங்குள்ள சுகாதார கேடின் பொருட்டு கூறப் பட்டது, ஆனால் இன்றைய நிலையில் அதையும் தாண்டி நெஞ்சில் ஈரமில்லா மாக்கள் நடமாடும் கொடூர நரகமாக இருக்கிறது என்பதை அந்த நிகழ்வு காண்பிக்கிறது.

    எவன் செத்தால் நமக்கென்ன என்று அவனவன் வேலையைப் பார்த்துக் கொண்டு ஈரமில்லாமல் இருந்தமையால் 

    பெரும் ஈரத்தை பெருக்கி வெள்ளத்தால் அவர்களுக்கு பாடம் கற்பித்து இருக்கிறான் இறைவன். 

    ஒற்றுமை என்பது என்ன?, மற்றவரின் தயவு உதவி என்பது எத்தகைய முக்கியமானது? வாழ்க்கையில் அதை நாம் கொடுத்தான் பெறவும் வேண்டும் என்பதை உணர்த்தி இருக்கிறான் அவர்கள் உணர்ந்து இருந்தால் நன்று.

    நமக்கென வந்தது என்ற உணர்வு பெரும்பாலும் பொருளாதார ரீதியில் மிடில், அப்பர் மிடில், ஹை கிளாசில் பரவிக் கிடக்கும் கொடும் வியாதியாகத் தெரிகிறது.

    இவர் யார்? இங்கு குடி இருப்பவரா? இவர் வந்து இங்கு என்ன நியாயம் பேசுவதற்கு? என்று ஏக வசனம் பேசியவர்கள் தாம் ஒரு இக்கட்டான நிலையிலே இருக்கும் போது அந்த மூன்றாம் நபரே வந்து உதவும் படி இறைவன் செய்து விட்டான் என்று என்னும் அளவிற்கு அவருக்கு புத்தி இருந்ததோ இல்லையோ.. தெரியவில்லை. ஆனால் ஒன்று உறுதி.

    அன்று சங்கடப் பட்ட தங்களின் நண்பருக்கும், தங்களுக்கும் இந்த நிகழ்வு ஒன்றை உணர்த்தி இருக்கும்.

    மனிதம் செத்து விட்ட இடத்தில் 
    இறைவன் அதை எப்படி விதைக்கிறான் என்று!.

  2. தாங்கள் எழுதிய உண்மை நிகழ்வை வாசித்தேன்..

    வலதும், இடதும், முன்பும் பின்புமாக பரந்த வீடுகளைக் கொண்ட கிராம, நடுத்தர நகர மக்களின் பண்பில் இருந்து மாறுபட்டு….

    ஒருவர் தலை மீது ஒருவராக அமர்ந்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் நிலைமையில் அங்கே மனிதநேயம் என்றால் என்ன என்று கேட்க்கும் அளவிற்கு வாழும் மக்கள்…

    சுயநலப் புழுக்களாய் உண்பதும் உறங்குவதுமாக வாழும் மாக்களாக இருப்பார்கள் போலும்….. அது வாழ்க்கையின் அடிப்படை அறிவை கற்காது பணத்தை மாத்திரமே குறிக்கோளாய் கொண்டு அதைத் தேடி கொண்டிருக்கும் மனித எந்திரங்களின் இயல்பு வாழ்க்கை போலும்..

    இன்று  இந்த சமூகத்தில் தலைமைப் பண்பு இல்லாத அரைவேக்காடுகள் தான் தலைவர் செயலாளர் என்று எங்கும் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். 

    காலக் கொடுமை இது போன்ற ஒரு நிகழ்வு அங்கே இருக்கும் அடுக்கு மாடிக் குடி இருப்பில் நடந்துக் கொண்டிருக்கிறது! 

    அங்கே குடி இருப்பவர்கள் வந்து கலந்துக் கொள்ளா விட்டால் கூட அவரவர் வழக்கப் படி கூட சடங்கு சம்பிரதாயங்களைக் கூட செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று கூறும் அளவிற்கு அங்கே மனித உருவத்தில் வேறு சில ஜன்மங்கள் உயிர் வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றன.

    பெருநகரங்களில், அடுக்கு மாடி குடி இருப்புகளில் உள்ள மனிதர்களின் செயல்களில் மனிதநேயம் சாகடிக்கப் பட்டு ஆனால் அதை நாகரிகம் (பிரைவெசி) என்று அநாகரிகம் அரங்கேறுவதை படம் பிடித்துக் காட்டுகிறது இந்த நிகழ்வு!

    அளவுக்கு மீறிய இந்த மனிதநேய மறுதலிப்பை சகித்துக் கொள்ள முடியாமல் தான் இறைவனும் இப்படியொரு பேரிடரைத் தந்து இருப்பானோ?   என்றும்  எண்ணத் தோன்றுகிறது.

    நகரம் ஒரு நரகம் என்றார்கள் அது அங்குள்ள சுகாதார கேடின் பொருட்டு கூறப் பட்டது, ஆனால் இன்றைய நிலையில் அதையும் தாண்டி நெஞ்சில் ஈரமில்லா மாக்கள் நடமாடும் கொடூர நரகமாக இருக்கிறது என்பதை அந்த நிகழ்வு காண்பிக்கிறது.

    எவன் செத்தால் நமக்கென்ன என்று அவனவன் வேலையைப் பார்த்துக் கொண்டு ஈரமில்லாமல் இருந்தமையால் 

    பெரும் ஈரத்தை பெருக்கி வெள்ளத்தால் அவர்களுக்கு பாடம் கற்பித்து இருக்கிறான் இறைவன். 

    ஒற்றுமை என்பது என்ன?, மற்றவரின் தயவு உதவி என்பது எத்தகைய முக்கியமானது? வாழ்க்கையில் அதை நாம் கொடுத்தான் பெறவும் வேண்டும் என்பதை உணர்த்தி இருக்கிறான் அவர்கள் உணர்ந்து இருந்தால் நன்று.

    நமக்கென வந்தது என்ற உணர்வு பெரும்பாலும் பொருளாதார ரீதியில் மிடில், அப்பர் மிடில், ஹை கிளாசில் பரவிக் கிடக்கும் கொடும் வியாதியாகத் தெரிகிறது.

    இவர் யார்? இங்கு குடி இருப்பவரா? இவர் வந்து இங்கு என்ன நியாயம் பேசுவதற்கு? என்று ஏக வசனம் பேசியவர்கள் தாம் ஒரு இக்கட்டான நிலையிலே இருக்கும் போது அந்த மூன்றாம் நபரே வந்து உதவும் படி இறைவன் செய்து விட்டான் என்று என்னும் அளவிற்கு அவருக்கு புத்தி இருந்ததோ இல்லையோ.. தெரியவில்லை. ஆனால் ஒன்று உறுதி.

    அன்று சங்கடப் பட்ட தங்களின் நண்பருக்கும், தங்களுக்கும் இந்த நிகழ்வு ஒன்றை உணர்த்தி இருக்கும்.

    மனிதம் செத்து விட்ட இடத்தில் 
    இறைவன் அதை எப்படி விதைக்கிறான் என்று!.

    ஆனால், இங்கு (சிங்கப்பூரில்) முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரம் என்றால் கூட இந்த அளவிற்கு அது போன்ற ஒரு கொடுமைகளைப் பார்க்க முடியாது… 

    மனித நேயப் பண்பு ஒவ்வொரு தனி மனிதனின் அடிப்படை அறிவைச் சார்ந்தது…. அது ஒட்டு மொத்த மக்களையும் பாதிக்கிறது என்றால் அதனின் மூலம் என்னவென்று நோக்கினால்.. தாய் மொழிக் கல்வியையும், புராண இதிகாசம் அறிவையும், நீதி நூல்களின் அறிவையும் புறந்தள்ளிய பள்ளிப் பாடத் திட்டமும் ஒருக் காரணம் எனலாம்.

    பணமே குறிக்கோள் என்று பாடம் சொல்லி வளர்த்த பெற்றோரையும் கூட பேண மனமில்லாமல் போன சமூகத்தை உருவாக்கியப் பெற்றோர்கள் ஆற அமர்ந்து ஏனிந்த அவலம் என்ன ஆயிற்று நமது பிள்ளைகளுக்கு என்று உணர ஞானம் பெற முதியோர் இல்லம் மாத்திரமே போதி மரங்களை வளர்த்து வைத்து இருக்கின்றன!!! 

  3. நண்பர் திரு.வெ.கோபாலனின் மனம் நொந்தப் பதிவையும், திரு.ஆலாஸ்யத்தின் பின்னூட்டத்தையும், அதே காலகட்டத்தில் பதிவாகிய என் அனுபவத்தையும், சிந்தனையையும் ஒருசேர படித்தால், மனிதனின் வலிமை, பலஹீனம், நேயம், காயம், திறன், அறிவீனம் எல்லாம் தென்படுகின்றன. அதற்கு நகரவாழ்வை மட்டுமேயோ அல்லது கிராமீய மணத்தை மட்டும் மனதில் கொள்ளலாகாது என்பது என் கருத்து. பாராட்ட வேண்டிய தாய்மொழிக் கல்வி, சநாதன algorithm, அறநூல்கள் வேண்டியது தான். ஆனால், அவை இங்கு நலம் புரியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *