ஆன்மீகமும் நானும் (22)
சிரத்தையும் சிரார்த்தமும்
ஒருவர் இறந்த பின் அவரது பிள்ளைகள் இறந்தவர்களுக் கென வருடா வருடம் சிரார்த்தம் செய்கின்றனர் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைந்து சிரார்த்தம் செய்வோரின் குடும்பத்தினை வாழ்த்திடல் வேண்டும் என்பதற்காக. செய்யும் விதம் மதத்திற்கு மதம் வேறு பட்டாலும் செய்வதின் நோக்கம் ஒன்றுதான்.
இது தேவையற்ற ஒன்று என்பது என் சொந்தக் கருத்து.
சிலர் சொல்வார்கள் உங்கள் பெற்றோர்களை நினைவில் இருத்திக் கொள்ள ஒரு வழி இது என்று. வருடத்தில் ஒரு நாள்தான் அவர்களை நினைவுக்குக்குக் கொண்டு வரவேண்டும் என்றால் அந்த ஒரு நாள் தான் எதற்கு? தன்னைப் பெற்று, பாசத்தினைப் பொழிந்து, வியர்வையும் ரத்தமும் சிந்தி உழைத்து உங்களை ஆளாக்கியவர்களை என்றுமே அல்லவா மறக்காது நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்?
சிலர் சொல்வார்கள் ஒருவர் இறந்த பின் அவருக்குச் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யா விட்டால் அவரது ஆத்மா சாந்தி அடையாது. அது உங்களை சபித்து விடும் என்று. வாழ்ந்த நாட்களில் பெற்றோரை மதிக்காது நடந்து கொண்டவர்கள் கூட இந்த பயத்தினால் வருடா வருடம் சிரார்த்தம் செய்வதுண்டு. எந்த ஒரு தாயும் தந்தையும் தன் குழந்தைகள் கஷ்டப் பட வேண்டும் என சபிக்க மாட்டர்கள், குழந்தைகள் அவர்கள் கண்களில் கண்ணீர் வருமாறு நடந்து கொண்டிருந்தாலும் கூட.
ஒருவர் அவர் தாய் தந்தைக்கு உயிரோடு இருக்கும் போது அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தந்தால் மட்டும் போதாது. அவர்களைத் தங்களுடனேயே வாழ வைத்துக் கொண்டு, என்றுமே அவர்கள் சந்தோஷமாக வாழ வழி செய்ய வேண்டும்.
கடைசியாக நான் இதுவரை எழுதி வந்ததின் சாராம்சம்
1. இறைவனைக் காண / அவரிடம் உங்கள் முறையீடுகளை வைக்க இடைத் தரகர்கள் உதவி தேவை இல்லை.
2. எங்கும் நிறை இறவைன் உங்களுள்ளும் இருக்கிறான்.
3. வேத, சாஸ்திர, புராண, இதிகாசங்களைப் படிப்பதில் ஒரு தவறும் இல்லை. ஆனால் படித்தவற்றுள் உள்ள நல்ல விஷயங்களை உங்கள் வாழ்வில் முடிந்த வரை கடை பிடியுங்கள்.
4. எல்லா உயிர்களிடத்தும் அன்புடன் பழகுங்கள்.
5. உங்களால் ஆன உதவிகளைப் பிறருக்குச் செய்யுங்கள்.
6. உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி பொங்கட்டும்!
(முற்றும்)
நடராஜன் கல்பட்டு