“இனி நினைந்திரக்கமாகின்று!”

0

— தஞ்சை வெ.கோபாலன்.

தஞ்சை என்றதும், பசுமையான நெல்வயல்கள், அந்த வயல்களை ஈரமாக்கி விளைச்சலை கொள்ளை கொள்ளையாகத் தரும் காவிரி நதியும்தான் முதலில் நம் எண்ணத்தில் வரும். ஆடியில் காற்றடித்தால், காவிரியில் தண்ணீர் வரும் என்பர் அந்த நாளில். “ஆடியிலே காத்தடிச்சா, ஐப்பசியில் மழை வரும்” என்றொரு பாடலும் உண்டு. ‘அக்கா’ குருவிகளின் ‘அக்கோ’ எனும் சோக ஒலி சோலைகளிலும், தோப்பு, துரவுகளிலும் எதிரொலிக்கும். காவிரி வறண்டு கிடக்கும் காலங்களில் ஆற்றுப் படுகைகளில் தெருக்கூத்து விடிய விடிய நடைபெறும். நிலவொளி இருக்கும் நாட்களில் கிராமங்களில் மின்சாரம் வராத பழைய நாட்களில் (சுதந்திரத்துக்கு முன்பு வரை) ஆற்று மணலில் நெடுநேரம் அமர்ந்து பேசுவர், சிறுவர்கள் ‘சடுகுடு’ (இப்போதைய பெயர் கபடி) ஆடிக் கொண்டிருப்பர்.

பல கிராமங்களுக்கு சுதந்திரத்துக்குப் பிறகுதான் மின்சாரம் கிடைத்தது. புதிய கம்பங்கள் நட்டு, கம்பி இழுத்து வீடுகளுக்கு மின்சாரம் கொடுத்தபோது அரிக்கன் விளக்கும், சிம்னி விளக்கும் எரிந்த வீடுகளில் மின்சார பல்புகள் வெளிச்சத்தை உமிழும் அதிசயத்தை தங்கள் வீட்டில் மின்சாரம் இல்லாத சிறுவர்கள் வேடிக்கைப் பார்க்க வருவார்கள்.

உள்ளடங்கிய கிராமங்களில் அஞ்சல் அலுவலகங்கள் இருந்தாலும், அந்த ஊர்களுக்கு வந்து சேரவேண்டிய தபால்களை அருகிலுள்ள பெரிய ஊரிலிருந்து ‘ரன்னர்’ (Runner) எனும் அஞ்சல் ஊழியர், சீல் வைத்த அஞ்சல் பையைத் தோளில் சுமந்து கொண்டு கையில் சலங்கை கட்டிய ஒரு கைத்தடியோடு ஓடிவருவதைப் பார்க்கவே அழகாக இருக்கும். அவர் நடந்து வரக்கூடாது, ஓடிவர வேண்டும், அதனால்தான் அவருக்கு ரன்னர் என்று பெயர். ரன்னர் ஓடிவரும்போது கேட்கும் சலங்கை ஒலியைக் கேட்டதும் எழுந்து அஞ்சல் அலுவலகம் போய் தங்களுக்கு ஏதேனும் கடிதம் இருக்கிறதா என்று பார்ப்பவர்களும் உண்டு. இந்த காட்சிகளை கல்கியின் “அலை ஓசை” நாவலின் முதல் பகுதிகளில் பார்க்கலாம்.

கிராமங்களில் கிராம தேவதைகளுக்குக் கோடையில் காப்புக் கட்டுதல் நடைபெறும். அப்போதெல்லாம் கிராமக் கோயில்களின் முன்பு தீமிதி, கரகம் போன்றவைகளும், மண்ணெண்ணையில் எரியும் திரிவிளக்கு வெளிச்சத்தில் ஜவ்வு மிட்டாய் வியாபாரமும், பயாஸ்கோப்புப் பெட்டியும் கோலாகலம்தான். ஊரின் மேற்கே ஒரு பெருமாள் கோயில், கிழக்கே ஒரு சிவன் கோயில், வடக்கே ஆற்றங்கரையோரம் ஒரு மாரியம்மன் அல்லது காளியம்மன் அல்லது ஒரு ஐயனார் கோயில் இப்படி எங்கு திரும்பினாலும் ஆலய வழிபாடுகள். தேர் திருவிழா என்றால் அக்கம் பக்கத்து கிராமத்தாரின் படையெடுப்பு. வசதி படைத்தோர் வெயில் நேரத்தில் திருவிழா காண வந்த மக்களுக்கு நீர்மோர், பானகம் விநியோகம் ஒரு பக்கம். அடடா! அந்த நாளைய தஞ்சாவூர் கிராம வாழ்க்கை சொர்க்க வாழ்க்கைதான்.

பள்ளிக்கூட மாணவர்களுக்கு விடுமுறை நாட்கள் முழுவதுமே கொண்டாட்டம்தான். ஆற்றில் தண்ணீர் இருந்தால் இவர்கள் குதித்து, நீராடும் பாங்கில் ஆறு இரண்டுபடும். கோடையில் ஆற்றில் நீர் இல்லாத காலங்களில் இருக்கவே இருக்கிறது மாரியம்மன் கோயில் குளம், சிவன்கோயில் குளம், பெருமாள் புஷ்கரணி, வயல்வெளிகளுக் கிடையில் உள்ள குட்டைகள் இங்கு எங்கெல்லாம் தண்ணீர் கிடைக்கிறதோ அங்கெல்லாம் கொண்டாட்டம் பரவிவிடும்.

குருகுலம் இருந்த காலத்தில் நாம் வாழ்ந்திருக்கவில்லை. பள்ளிக்கூடங்கள் தொழிற்கூடங்கள் போல காலையில் தொடங்கி உணவு இடைவேளைக்கு மணியடித்துப் பின் மறுபடி கூடி மாலை நான்கு மணிக்கு அவிழ்த்து விட்டால், பிறகு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒட்டு ஏது உறவு ஏது? அப்போதெல்லாம் ஞாயிற்றுக்கிழமை மற்ற விடுமுறை நாட்கள் என்றால், வீடுகளில் பழைய சோறு அல்லது நீராகாரம் முடித்துவிட்டு தலைமை ஆசிரியர் வீட்டுக்குப் போய் விடும் மாணவர்களைப் பார்க்கலாம். மிகப் பெரிய தோட்டமும், அருகில் அவர் வீடும் சோலை போல காட்சியளிக்கும். வீட்டுத் தோட்டத்தில் காய்கறிகள் பயிரடப்பட்டு காய்களும் காய்த்துக் குலுங்கும். பெரும்பாலும் அப்போதெல்லாம் உள்ளூர்காரர்களே பள்ளிக்கூடங்களில் பணியில் இருந்தார்கள். அவர்கள் வசதி படைத்தவர்களாகவும், தோட்டம் துரவுகளோடு வாழ்ந்து மாணவர்களைப் பயிற்றுவிப்பதில் ஆர்வமுடையவர்களாக இருந்தனர்.

ஆசிரியரின் மனைவி சொன்ன காய்கறிகளை பதமாகப் பார்த்துப் பறித்து அவருக்குக் கொடுத்துவிட்டு, காய்கறி பாத்திகளுக்குத் தண்ணீர் பாய்ச்சி, களையெடுத்து முடித்ததும் அழைப்பு வரும். அனைவருக்கும் அவர்கள் வீட்டில் காலை எளிய உணவு அல்லது கெட்டித் தயிர் கலந்த பழைய சாதம், காய்ந்த நாரத்தங்காய் ஊறுகாய் ஆகியவைகள் ஏதேனும் அனைவருக்கும் தரப்படும். அவர்கள் வீட்டு மாட்டை அருகிலுள்ள குளத்துக்கு ஓட்டிச் சென்று குளிப்பாட்டி மாட்டையும் கன்றையும் வீட்டுக்கு அழைத்து வந்து, நெற்றியில் மஞ்சள் குங்குமம் பூசி அதற்கு புல்லையும் அள்ளிப்போட்டு அன்போடு உபசரிக்கும் வழக்கமும் இருந்தது.

பிறகு ஆசிரியர் கணக்கு அல்லது ஆங்கிலம் போதிப்பார். பதினோரு மணிக்கு அனைவரும் வீடு நோக்கி ஓடிவிடுவர். அங்கு குளித்து முடித்து பகல் உணவு உண்டபின், வீட்டினுள் விளையாட்டுகள். மாலையானதும் மீண்டும் தெருவில் விளையாட்டு. இருட்டியதும் அரிக்கன் விளக்கை ஏற்றிவைத்து பாடங்களைப் படிக்க வற்புறுத்துவதால் சிறிது நேரம் படிப்பதாக பாவனை செய்தபின் இரவு உணவை முடித்து நிலவில் விளையாட்டு, இருளாக இருந்தால், யார் வீட்டுத் திண்ணையிலாவது அமர்ந்து அரட்டை, பாட்டு, நடிப்பு இப்படி. அதிலும் பண்டிகை காலங்கள் என்றால் எங்காவது ஒரு வீட்டுத் திண்ணையில் நாடகமோ, பாட்டுக் கச்சேரியோ அரங்கேறிக் கொண்டிருக்கும். “நாம் இருவர்” படத்தில் வரும் பாரதியார் பாடல்கள் பெரும்பாலும் அனைவருக்கும் மனப்பாடம் ஆகியிருக்கும்.

எல்லா வீடுகளும் இரவு ஒன்பது மணியானால் ஓய்ந்து விடும். அவரவர்கள் சாப்பாடு முடிந்து படுத்து விடுவர். ரேடியோ, டி.வி. போன்ற பொழுதுபோக்குகள் ஏது? பெண்கள் சிலர் வீட்டினுள் சிம்னி விளக்கு வெளிச்சத்தில் தாயம் விளையாடுவது உண்டு. பையன்கள் ஒரு ஜமக்காளம் ஒரு தலையணையை எடுத்து வீட்டுக்கு வெளியே திண்ணையில் போட்டுவிட்டு போய்விடுவார்கள். சில நாட்கள் ஐந்து மைல் தொலைவிலுள்ள பக்கத்து டவுனுக்கு இரண்டாம் காட்சி சினிமா பார்க்கப் போய்விட்டு இரவு மூன்று மணிக்கு வந்து படுப்பார்கள். யார் வீட்டுத் திண்ணையிலும் இவர்கள் படுத்துக் கொள்ளலாம், யாரும் கேள்வி கேட்பாரில்லை.

‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே’ என்ற திரைப்படப் பாடல் இப்போது நெஞ்சிலே ஓடுகிறது. மேலே சொன்னவை அனைத்தும் வரிக்கு வரி, சொல்லுக்குச் சொல் நடந்தவை, அந்த நாள் இனித்தது. கவலை என்பது என்னவென்று தெரியாத பருவம். இப்போது போல நெருக்கடிக்கு மத்தியில் மூட்டைக்குள் கட்டப்பட்ட தானியம் போல அடைந்து கிடக்கும் வழக்கம் இல்லை. வானத்தில் சிறகு விரித்து முடிந்த மட்டும், மேலே, மேலே பறந்து களித்த நாட்கள்.

malgudi daysஊர் எல்லையில் பெரிய குளம். அது குளமா ஏரியா? இரண்டுக்கும் இடைப்பட்ட பெரிய நீர்த்தேக்கம். அதன் ஒரு புறம் பெரிய மாந்தோப்பு. கோடை விடுமுறை காலம் பார்த்து அந்த மரங்களில் மாங்காய்கள், அடடா, அதில்தான் எத்தனை வகைகள், ஒட்டு, கிளிமூக்கு, துவர்ப்புக்காய், புளிப்பு, கற்பூராதி இப்படி பலதரப்பட்ட மாங்காய்கள் மரங்களில் கிளை தெரியாது, இலைகள் தெரியாது, மாங்காய்கள் தான் தெரியும். தோட்டத்துக்குக் காவல் உண்டு. காவல்காரன் நுழைவு வாயிலுக்கு அருகில் ஒரு குடிசை போட்டுக்கொண்டு இருப்பான். குளக்கரை பின் பக்கம் இருக்கும், மற்ற மூன்று பக்கங்களிலும் உயர்ந்த முள்வேலி, உள்ளே நுழைய முடியாது. ஊர் சுற்றிவரும் பிள்ளைகளில் பலரும் அரை டிராயர் பேர்வழிகள். சிலர் மட்டும் முழங்காலுக்குக் கீழ் வரை ஒரு வேட்டி. குளத்தின் இந்தக் கரையில் மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும், அதில் ஒரு எருமை மாட்டை ஓட்டிக்கொண்டு போய் குளத்தில் இறக்கி அதன் மீது ஒருவன் ஏறி உட்கார்ந்து விடுவான். வேட்டி கட்டியவனின் வேட்டி உருவப்பட்டு அவனிடம் கொடுக்கப்படும். அவன் குளத்தில் மாட்டின் மீதே போய் தோட்டத்துப் பக்கம் மெதுவாம ஓசையின்றி இறங்கி, கைக்கு எட்டும் உயரத்தில் உள்ள பலவகை மாங்காய்களைப் பறித்து அந்த வேட்டியில் மூட்டை கட்டிக்கொண்டு, திரும்ப வந்து மாட்டின் முதுகில் அந்த சுமையை வைத்துத் தானும் உட்கார்ந்து திரும்புவான். அவன் திரும்பி வரும்வரை ஒரே திகில்தான். காவல்காரனிடம் மாட்டிக்கொண்டால் என்ன செய்வது? நல்ல காலம் மாட்டுவதில்லை. அப்படி காவல்காரன் துரத்தி வந்தாலும் ஓடிவந்து மாட்டின்மீது ஏறிக்கொண்டு எமதர்ம ராஜன் போல இந்தக் கரை வந்துவிடுவான்.

சில சமயங்களில் அப்படி மாங்காய் திருடிய பையன்களைத் தெரிந்து கொண்டு அவர்கள் வீட்டில் வத்தி வைத்து விடுவார்கள். அப்புறம் அவன் வீட்டில் திமிலோகம் தான். அடிவாங்கி, தோப்புக்கரணம் போட்டு, தோட்ட உரிமையாளர் பட்டாமணியாரிடம் சென்று மன்னிப்பு கேட்டுவிட்டு வந்தால்தான் சோறு கிடைக்கும். அதிலும் ஒரு ‘கிக்’ இருக்கத்தான் செய்தது. சில ஆசிரியர்கள் தங்கள் தோட்டத்தில் கொய்யா, மா மாரம் போன்றவற்றில் ஒட்டு போடுவதைக் கற்றுத் தருவார்கள். ஒரு வகை மாமரக் கிளையை நன்கு சீவி, அதோடு, வேறொரு மரக்கிளையை ஒட்டு சேர்த்து இணைத்து துணியால் கட்டி வைத்து அதில் தினம் தன்ணீர் ஊற்றிவர அது பிடித்துக் கொண்டு வளரும். அதில் காய்க்கும் மாங்காய் ஒட்டு மாங்காய் எனப்படும். அதன் சுவையே சுவைதான்.

எட்டாம் வகுப்பு வரையில் தான் அந்த ஊரில் படிக்க முடியும். அதற்குத்தான் ஒரேயொரு பள்ளி. ஆங்கிலேயர்களை மகிழ்ச்சியடைய வைக்கவென்றோ என்னவோ, அந்தப் பள்ளிகளுக்கு ஆங்கிலோ வெர்னாகுலர் ஹையர் எலிமெண்டரி பள்ளி என்று பெயர். ஒன்பதாம் வகுப்புக்கு ஐந்தாறு மைலுக்கு அப்பாலுள்ள டவுனுக்குத்தான் போகவேண்டும். அது ஒரு தனி அனுபவம். திடீரென்று ஒரு நாள் தலைமை ஆசிரியர் மாணவர்களையெல்லாம் அழைத்து விளையாட்டு மைதானத்தில் நிறுத்தி, நம்ம நாடு வருகிற ஆகஸ்ட் 15இல் சுதந்திரம் அடையப்போவுது. அதை நாம் நம்ம பள்ளியிலே உத்சாகமாகக் கொண்டாடணும் என்று அறிவித்த காட்சிகள் நினைவுக்கு வருகிறது.

போதும் இந்தக் கிராம வாழ்க்கை அனுபவத்தை அசைபோட்டுப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்துவிட்டு, டவுனுக்குப் போன அந்த அனுபவத்தை மறந்தே விடலாம். கிராம வாழ்க்கை அன்று சொர்க்கம். இன்று நினைத்தாலும் மனதுக்கு இதமாக இருக்கிறது. புறநானூற்றில் “தொடித்தலை விழுத்தண்டூன்றினார்” எனும் பெயரில் எழுதப்பட்ட ஒரு பாடல் உண்டு. “இனி நினைந்திரக்கமாகின்று….” எனத் தொடங்கும் அந்தப் பாடலில், வயது முதிர்ந்த கிழவர் ஒருவர், உடல் நடுக்கமடைந்து, கண் பார்வை மங்கி, தடியூன்றி நடக்கும் பருவத்தில் தன்னுடைய இளமைக் காலத்து சாகசங்களை நினைத்துப் பார்த்துப் பெருமூச்சுவிடும் பாடல் அது. அதைப் போலத்தான் இப்போதும் “இனி நினைந்திரக்கமாகின்று” என்று பெருமூச்சு விடும் ‘பெரிசுகள்’ என்னைப்போல ஏராளமாக உண்டு.

படம் உதவி: www.oldindianphotos.in

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.