Author: இன்னம்பூரான்

  • நாளொரு பக்கம்: 2: 2017

    -இன்னம்பூரான்

    innam

     

    மார்ச் 27, 2017

    பிரசுரம்:

    History is a novel whose author is the people. – Alfred de Vigny, poet, playwright, and novelist (27 Mar 1797-1863)

    கவிஞர் Alfred de Vigny அவர்களின் 220வது ஜன்மதினம் இன்று. அவரை முன்வைத்து எழுத நேர்ந்திருப்பதை கண்டு மகிழ்கிறேன்.

    ராஜாராணி கதைகளில் கைசரக்கு அதிகம் இருக்கும்; ஏனெனில் புகழ்ச்சி, தற்புகழ்ச்சி, முகஸ்துதி, மர்மங்கள் ஒளிந்து விளையாடுவது எல்லாம் சிம்மாசனத்தில் படிக்கட்டில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் பதுமைகள். வரலாற்றின் பக்கங்களை முன்னும் பின்னுமாக பலமுறைப் புரட்டினாலும், பாமரகீர்த்தி காணக்கிடைப்பதில்லை. சரித்திரத்தில் வளைய வரும் மாந்தர்களில், விவசாயி, சக்கிலியன், தீவட்டிதூக்கி, தேசாந்திரி, தச்சன், கொல்லன், கடைக்காரன், தொழிலாளி போன்றோர் இருந்ததில்லை என்று தோற்றம். அப்படியிருந்தால், சக்கரவர்த்தித் திருமகன்கள் யாரை ஆண்டனராம்? சிலருக்குத் தவறு கண்டுபிடிக்காவிட்டால் உறக்கம் வராது. ஏன், சங்கத்தமிழில் இரவலர்களும், புரவலர்களும் வருகிறார்களே என்பார்கள். ஆடிப்பாடி மெய்கீர்த்தி இசைத்து ஆனையும், தேரும் ஆக, ரத்னமாலையும், முத்தங்கியும் பரிசிலாகப் பெறும் இசைவாணர்கள் மட்டும் தரணி வாழும் மாந்தர்கள் அல்ல. அதனால் தான், நாம் எல்லாரும் தற்காலத்து பாமரகீர்த்திகளை இயற்ற வேண்டும்.  மூன்று உதாரணங்கள் தருகிறேன்.

    மு.ராகவ ஐயங்கார் என்ற தமிழ் அறிஞர் தமிழாய்வு என்ற துறைக்கு வித்திட்டவர். அவர் வாழ்ந்த காலம் (1878-1960) அண்மையில்தான். அவருடைய தமிழ்த்தொண்டு வியக்கும் அளவு பெரிது. தற்காலம் இணைய தளம் மூலம் அத்தகைய சான்றோர்களின் கீர்த்தி பற்றி ஓரளவாவது அறிந்து கொள்ள முடியும் என்றாலும், ஷேக்ஸ்பியரை கரதலை பாடம் செய்தவர்களில், இவரை அறிந்து கொண்டவர் சொற்பம். இருவரையும் அறியாதவர்கள், பலர்.

    நடிகர் ரஜனிகாந்தையும், நடிகர் ஜோதிகாவையும் பற்றி யாவும் அறிந்த பலருக்கு சத்யஜித் ராய், பிருத்விராஜ் கபூர் யார் என்று தெரியாது. உங்களுக்கு தெரியுமானால், நல்லது. உங்களை உயர்திரு பாமரர் என்பேன்.

    மகவுகளின் படிப்புதான் முக்கியம் என்று ‘தியாகபூமி’ பெற்றோர்களை நான் அறிவேன். அவர்களின் பாமரகீர்த்தி மற்றவர்களுக்கு படிப்பினை அல்லவோ?

    சித்திரத்துக்கு நன்றி:

    https://images-na.ssl-images-amazon.com/images/I/51isHcvWscL._SX321_BO1,204,203,200_.jpg

    Share
  • நாளொரு பக்கம்: 1: 2017

    இன்னம்பூரான்
    மார்ச் 26, 2017

    உலகநாதர் இயற்றிய நான்மணிக்கடிகை

    ai

    ஓதாம லொருநாளும் இருக்க *வேண்டாம்
    ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
    மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்
    வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
    போகாத இடந்தனிலே போக வேண்டாம்
    போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
    வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
    மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே [1]

    அன்றாடம் படித்து வருவது நலம் பயக்கும்.

    ‘ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்’ என்று உதட்டளவில் நாட்தோறும் ஓதும் பலர், இதன் மூலம் உலகநாதர் இயற்றிய நான்மணிக்கடிகையிலிருந்து என்று அறிந்து இருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை.

    பொல்லாங்கு என்ற சொல் தீய சொற்கலை விட கொடியவை. தவிர்ப்பது நலம். அன்னையை மறக்கவே கூடாது. நமது வாழ்வின் ஆதார ஸ்ருதி அவளல்லவோ! துஷ்டனை கண்டால் தூரவிலகு என்கிறார், உலகநாதர். அது எளிதல்ல. ஆனாலும் அறிவுரை அபாரமானது தான். செல்லத்தகாத இடங்களுக்கு போகாதே என்கிறார். செல்லத்தகாத இடங்கள் இல்லை என்பது என்று எனகு தோன்றுகிறது. விலைமாதுகள் வசிக்கும் இடங்கள், குஷ்டரோகி வசிக்கம் இடங்கள் கூட செல்லத்தகாதவை என்பார்கள். ஆனல், அவர்களுக்கு உதவ அங்கு போகத்தானே வேண்டும். கவனித்து செயல்படு என்பது உலகநாதரின் அறிவுரை. ‘புறம்’ பேசுவதை பரவலாகக் காண்கிறோம். ஒருவரைக் கண்டபோது புகழ்ந்து பேசிக் காணாத விடத்தில் இகழ்ந்து பேசுதல் கூடாது. வாழ்நெறியின் அருமையான அறிவுரைகளை தெளிவாக உரைத்த நூலாசிரியர் வள்ளி மணாளனை துதித்து, தன் நான்மணிக்கடிகையை துவக்குகிறார். யாவரும் புரிந்துகொள்ளக்கூடிய பளிங்குநீர் தமிழ்.
    -#-

    சித்திரத்துக்கு நன்றி:

    https://s-media-cache-ak0.pinimg.com/564x/ca/4b/2e/ca4b2eead8e75ff61b532a999ea73667.jpg

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • கோப்புக்கூட்டல்: இன்றைய கோப்பு: [5]

    -இன்னம்பூரான்

    ஆங்கிலத்தில் ‘எல்லாவற்றையும் உட்படுத்திய’ என்ற பொருள் கூறும் ecumenical என்ற சொல் உணர்த்தும் இலக்கை, ஒரு பெரிய கோரிக்கையாக முன்வைக்கிறேன். அதன்பொருட்டு, ஒரு கோப்புக்கூட்டல் செய்ய விரும்புகிறேன்.

    innam

     

    இன்றைய கோப்பு: [5]
    மார்ச் 25, 2017

    இந்தியாவில் ஜனநாயக ஆட்சி நடக்கிறது. பொதுமக்களில் பெரும்பாலோர் வாக்காளர்கள். அவர்களின் பொன்னான வாக்கைப் பெற்றோ/கைப்பற்றியோ/அபகரித்தோ/ விலைக்கு வாங்கியோ/மற்றும் பல உத்திகளில் ஒன்றின் மூலமாகவோ அடைந்து, மாநிலச் சட்டசபைகளிலோ அல்லது நாடாளும் மன்றதிலோ மக்களின் பிரதிநிதிகள் சட்டம் இயற்றுகிறார்கள், அரசாளும் அமைச்சரவையை அமைக்கிறார்கள், அரசு இயந்திரத்தை மக்கள் நலத்துக்கோ சுயநலத்துக்கோ பயன்படுத்துகிறார்கள். முதல் தேர்தலில் போட்டியிட்டவர்களில் பெரும்பாலோர் செல்வந்தர்கள் அல்ல. இன்றைய நிலை வேறு. மேற்படி மன்றங்களில் கோடீஸ்வர்கள் கோலோச்சுகிறார்கள். அவர்களுக்கு எக்கச்சக்கமான ஊதியம், சலுகைகள், மான்யங்கள்; மேலும் சமுதாய மேன்மைக்குத் தன்னிச்சையாக உதவ, கோடிக்கணக்கான செல்வத்தின் மேல் உரிமை. அண்மையில் ஒரு எம்.பி. ஒரு விமான நிறுவனத்தின் நிர்வாகியைப் பொதுஇடத்தில் செருப்பால் பலமுறை அடித்து, அவருடைய மூக்குக்கண்ணாடியை உடைத்து, வசைகள் பல பாடி அவமதித்தார். அவர்மீது வழக்கு. விமான நிறுவனங்கள் அவரை ஏற்றுக்கொள்ளாததால், அரசு நடத்தும் ரயிலில் பயணித்தார். அதில் அவருக்கு இடம் கொடுத்தது, வழக்கு நிலுவையில் இருக்கும்போது, நியாயமா? அதுவும் அதுபற்றி மார்தட்டி அகம்பாவத்துடன் பேசும்போது. அவரை நம்பி நட்டாற்றில் இறக்கப்பட்ட வாக்காளர்கள் அவரை உதற முடியுமா? இது ஒருபுறம் இருக்க.

    ஒரு நாள் எம்.பி. ஆக இருந்தாலும் ஆயுள் முழுதும் ஓய்வூதியம் உண்டு என்ற தோற்றம் நிலவுகிறது. உச்ச நீதிமன்றம் இந்த ஆனானப்பட்ட எம்.பி.கள் பெறும் சலுகைகள்தான் என்ன என்று ஒரு பொதுவழக்கை விசாரிக்கும்போது, மத்திய அரசை/தேர்தல் அதிகாரமையத்தை வினவ முயன்றவுடன், எல்லாக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.மகாஜனங்கள் சினம் மிகுந்து சண்டைக்கோழி மாதிரி சிலிர்த்துக்கொண்டனர். ஜெயராம் ரமேஷ் காங்கிரஸார். அவர் ஒரு உச்சமன்ற நீதிபதி 80% எம்.பி. கள் கோடீஸ்வரர்கள் என்று சொன்னதுக்கு ஆக்ஷேபிக்கிறார். சினம் மிகுந்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ‘பார்லிமெண்ட் அங்கத்தினர்களின் ஊதியம், படிகள், சலுகைகள் வகையறா பற்றி விவாதிக்க, முடிவுஎடுக்க பார்லிமெண்ட் மட்டும்தான் அதிகாரம் வகிக்கும் என்கிறார். அதாவது, ‘வாக்காளர்களின் பிரதிநிதிகள் தங்கள் சலுகைகளைத் தாங்களேதான் நிர்ணயிக்க உரிமை உண்டு. மற்றவர் வந்து புகல இங்கு என்ன நீதி’ என்கிறார். பேஷ்!

    ஒரு சின்னக் கணக்கு. அது பூரணமானது இல்லை என்றாலும், விஷயத்தை பிட்டுப் பிட்டு வைக்கிறது.17 கட்சிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில் கோடீஸ்வர தி.மு.க. இல்லை. அந்தஸ்து விஷயம் பின்னர் நோக்கலாம். நாடாளுமன்றத்தில்  2009இல் 521 எம்.பி.களின் செல்வநிலை: 58% கோடீஸ்வரர்கள். 2014இல் 542 எம்.பி.களின் செல்வநிலை: 82% கோடீஸ்வரர்கள்.

    பிஜேபி:

    2009: 110 எம்.பி.களின் செல்வநிலை: 50% கோடீஸ்வரர்கள். 2014இல் 251 எம்.பி.களில் 84% கோடீஸ்வரர்கள்.

    காங்கிரஸ் 2009இல் 199 எம்.பி.களின் செல்வநிலை: 71% கோடீஸ்வரர்கள். 2014இல் 44 எம்.பி.களில் 80% கோடீஸ்வரர்கள்

    ஏடிஎம்கே 9 எம்.பி.களின் செல்வநிலை: 56% கோடீஸ்வரர்கள். 2014இல் 37 எம்.பி.களில் 78% கோடீஸ்வரர்கள்.

    தி.முக. மாஜி எம்.பிகள் ஒரு கூட்டணி வைத்தால் கோடீஸ்வரர் கும்பலாக இருக்கும் என்பவர்களும் உண்டு.

    அரசியல் சாஸனப்படி நாடாளும் மன்றம் ஒரு செல்வந்தர்கள் நிலையமாக அமைந்தாலும், அவர்களை மேம்படுத்திய பாமரமக்களுக்கு வாய்ஸ் கிடையாதா?

    என்னத்தைச் சொல்ல? அந்த நீதிபதியையும், இந்தக் கட்டுரையாளரையும் பார்லிமெண்டார் வாட்டி எடுக்கலாம். அந்த கெய்க்வாட் அதற்கு ஆதரவு தெரிவிப்பார். அவர் தான் செருப்படி மக்கள் பிரதிநிதி மன்னர்பிரான்.

    எனக்கு ஓர் ஐயம் எழுகிறது. இங்கிலாந்து அரசியல் சாஸனப்படி மஹாராணி தான் சகல மேலாண்மை; நடைமுறையில் இல்லை என்பது வேறு விஷயம். ஸர் ஹென்ரி போல்லக் என்ற அரசியல் ஆய்வாளரின் பொன் வாக்கு:

    “மேலாண்மை ( Sovereign) எல்லா நீலக்கண் கொண்ட சிசுக்களை கொல்லவேண்டும் என்று ஆணையிட்டால், அதற்கு அப்பீல் இல்லை. ஆனால், அவர் அரியணையிலிருந்து இறங்கவேண்டும்.’

    இந்தப் பொன்வாக்கு இங்கு செல்லுபடிஆகுமா?

    -#-

    சித்திரத்துக்கு நன்றி:

    https://img.clipartfest.com/337e687de3a0fa4294d85e864d70b202_sovereignty20clipart-popular-sovereignty-clipart_450-335.jpeg

     

     

     

    Share
  • படவாகினி

    -இன்னம்பூரான்
    15 03 2017

     

    padavakini

    உங்களுக்கு ‘சிவமயம்’ வில்வநாதக் குருக்களை தெரிந்திருக்க நியாயமில்லை. அந்தக் காலத்தில், துக்ளக்கின் ‘எங்கே பிராமணன்?’ என்ற சர்ச்சைக்குரிய நூல் வெளியாகி விடவில்லை என்றாலும், குருக்கள் மாமாவை பார்த்தால் போதும்; எல்லாம் விளங்கிவிடும். பஞ்சகச்சம் பரமானந்தம் என்று, பட்டை வீபூதியை பரம ஒளஷதமாக அணிந்து, தங்கப்பூண் போட்ட ருத்ராக்ஷமாலை மார்பில் துலங்க, திண்ணையில் உட்கார்ந்து விட்டாரென்றால், ஊர் முழுதும் ‘டுங்க்ருங்சரணே’ பீதி பரவும். அவரோ சுகஜீவி.

    பத்தமடை, சேர்மாதேவி, வீரவநல்லூர் மாதிரியான போன்ற தலங்களில், ஆலயங்கள், வழிபாடுகள், குருக்கள் வாழ்நெறி ஆகியவை நிறைந்திருக்கும். வானமாமலை, ஶ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி ஆகிய வைணவத் தலங்களுக்கு சென்றால், மாட்டு வண்டிக்காரன் கூட நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடிக்கொண்டே வண்டி ஓட்டுவான். மாடும் தலையாட்டிக்கொண்டே செல்லும். தார்க்கோல் போடவேண்டிய அவசியமில்லை. அருகே உள்ள நாசரேத் என்ற ஊரில் ஏசு கிருஸ்து பிரார்த்தனையும், ஆங்காங்கே அமைந்துள்ள மசூதிகளின் அதிகாலை உரத்த குரல் அரபித் தொழுகையும் தடைபடாது. 1647இல் கட்டப்பட்ட பொட்டல் புதூர் தர்காவில் இந்துக்களின் சாயலை ஒத்த வழிபாடு. கந்தூரி திருவிழாவில் எல்லா மதத்தினரும் கலந்து கொள்வார்கள். இனபேதம், மதபேதம், பேதபேதம் எல்லாம் உண்டு; ஆனால், இல்லை. அப்படி ஒருவிதமான இணக்கமான வாழ்க்கைப்படகு. தற்காலம்போல் வெறித்தனம் கிடையாது. நாத்திகம் பேசிக்கொண்டே நேர்த்திக்கடன் செய்வது கிடையாது. வரட்டு சம்பிரதாயம் கிடையாது. எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போகிறேன். இது என்ன திருநெல்வேலி ஜில்லா சொக்கிப்பீடியாவா என்ன? இது நிற்க.

    குருக்களோட அப்பாவோட கீர்த்திதான் வம்சத்துக்கே கவசமாக இருந்தது. சிவாசாரியார் ‘மங்களம் மாமா’ ( அவர் ரொம்பப் பெரியவர்; பெயர் தெரியாது.) அற்புதமா, மனப்பூர்வமாக அர்ச்சனை செய்வார். சாயரக்ஷை அவருடைய பிரவசனத்துக்கு, வண்டிக்கட்டிண்டு கல்லிடைக்குறிச்சி பெரிய பண்ணை வருவார். ஆனால், ஏகபுத்திரன் ஆன ‘வில்லுவை’ சம்ரக்ஷணை செய்ய அவருக்கு நேரம் இல்லை. ஆகவே ‘வில்லு’ எனப்படும் வில்வநாதக் குருக்கள் ஒரு நிரக்ஷரகுக்ஷி. ஆனால் அதிகம் படித்த மேதாவி என்று மிதப்பு காலாகாலத்தில் கல்யாணம் பண்ணி வைங்கோ என்று ஊருக்கு உபதேசி வைத்தியோட அட்வைஸ். சங்கீத மேளகர்த்தா ஸ்ரீ சேர்மாதேவி சுப்ரமண்ய சாஸ்திரிகள் வம்சத்தில் வந்த குந்தளாம்பிகை தான் ‘வில்லுக்கு’ வந்து வாய்த்தாள். வாய்த்துடுக்கு.  மாமி போனபிறகு தனித்து விடப்பட்ட முதியவர் மங்களம் மாமாவை உதாசீனம் பண்ணி, அவரை ‘உண்டு இல்லை’ என்று செய்துவிட்டாள். அவரும், ஏற்கனவே சாந்தஸ்வரூபி, விட்டேற்றியாக, கோவிலே கதி என்று இருந்துவிட்டார்.

    சுகஜீவி ‘வில்லும்’ ‘பளார்! பளார்’ குந்தளாவும் நடத்திய இல்லறத்தில் புழு, பூச்சி ஒன்றும் வரவில்லையே என்று இருவரும் அங்கலாய்த்தாலும், காலாகாலத்தில் நான்கு பிள்ளைகள் பிறந்தன. காலம் நிற்கிறதா என்ன? வயதாக ஆக, ‘வில்லுக்கு’ பிடிவாதம் ஏறியது. குந்தளாம்பிகையின் கொம்மாளம் எல்லை மீறிப்போயிற்று. வேலை வெட்டி இல்லாமல் இருந்த ‘ஜபர்தஸ்து’ மணிக்கு (தலைமகன்) அத்தை பெண் மீனாக்ஷியை கல்யாணம் செய்து வைத்தது, ‘வில்லுக்கு’ அவ்வளவாக சம்மதம் இல்லை. ஆனால் குடும்பநிலை அப்படி. இரண்டு பக்கமும் நல்ல பணம். அது பிரியக்கூடாது என்பது குந்தளாவின் அரசியல் சாஸனம். ஆச்சுப்போச்சு கல்யாணம் என்றாலும் பத்து வருஷம் ஆனபிறகும் குஞ்சும் கிடையாது; குளுவானும் கிடையாது; ஹோப்பும் கிடையாது. பழி வாங்கிறதற்கு அகப்பட்டுக்கொண்டாள், இரண்டாவது மாட்டுப்பெண், சுந்தரி. நல்ல இடம். இரண்டாவது பிள்ளை மாதவன் தான் வீட்டுக்குத் தூண். நல்ல உத்யோகம். கைநிறைய சம்பளம். கொடுக்கிற மனசு.

    சுந்தரியும் நல்ல குடும்பத்திலிருந்து வந்தவள்தான். அப்பா சுந்தரராமன், வீரவநல்லூரில் நல்ல பெயர் வாங்கின கவர்ன்மெண்ட் டாக்டர். ஆந்திராவுக்கு மாற்றி விடவே, வேலையை உதறிவிட்டு, அங்கேயே ப்ராக்டீஸ். செல்வாக்கு. பங்கமில்லா வருமானம். ஏழைபங்காளன் என்பதால் சொத்து. சொதந்திரம் என்று சொல்லிக்கொள்ளும்படியாக இல்லாவிட்டாலும், சீரான வாழ்க்கை. பெரிய பையன் சங்கரன் ஒரு மாதிரி. கண்ட இடங்களில் பணத்தைக்கட்டி, படிச்சேன் என்று பேர் பண்ணி ஐஏஎஸ் எழுதினான். இண்டெர்வ்யூவில் பிச்சுண்டுடுத்து. அவாள்ளாம் இனம் காண்றதிலெ கெட்டி. இவனுடைய கோழைத்தனத்தைக் கண்டு கொண்டார்கள். பாசாகவில்லை. நாடு தப்பியது. எல்லார் மீதும் இவனுக்கு கோபம். நாள்தோறும் அப்பாவோட சண்டை. பணம் கறப்பான். பொறுப்பு நில். இதையெல்லாம் பார்த்த அடுத்தவன் ஆம்படையாளைக் கூட்டிக்கொண்டு அயல்தேசம் போய்விட்டான். நூல் அறுந்தது.

    இந்தக் கூட்டுக்குடும்பத்து சிலந்தி வலையில் சிக்கிக்கொண்டது, மாதவனும் சுந்தரியும்தான். இத்தனைக்கும் வரதக்ஷிணை பேரம் நடத்திய குந்தளாவுக்கு, தன் ஒரே பெண் சுந்தரியின் நலன் கருதி, டாக்டர் சுந்தரராமன் வளைந்து கொடுத்தார். வில் மோட்டுவளையை பார்த்துக்கொண்டிருந்தபோது, குந்தளா கையில் பத்தாயிரம் ரூபாய் சொளையா அழுத்தினார். ஐந்து கிலோ வெள்ளி, வைரத்தோடு, கணிசமா ஆறு பவுனுக்கு ஆபரணங்கள், காஸ்ட்லி பட்டுப்புடவைகள் இத்யாதி. தடபுடலா கல்யாணம். ஆனால், சுந்தரி வீட்டுக்குச் சேர்த்தி இல்லை. எல்லாரிடம், கூசாமல், இவளுடைய அப்பா ஒன்றுமே தரவில்லை என்று அங்கலாய்ப்பாள், குந்தளா.

    குடித்தனம் எல்லாம் தடித்தனம்தான். வந்த சீர் எது என்ன என்று மாதவனுக்கே தெரியாதபடி, எல்லா நகையும் பூட்டி வைத்துக்கொண்டு, சுந்தரியை மஞ்சக்கயிறுடன் தான் வளைய விட்டாள். அந்தக் காலத்து வீடா? புருஷன் பொண்டாட்டி பேசிக்கொள்ளக்கூட வாய்ப்பு கிடையாது. பணங்காய்ச்சி மரம் மாதவன் செலவில்தான் குடித்தனம், சின்னவர்கள் படிப்பு எல்லாம். முறைப்பொண்ணை கல்யாணம் செய்துகொண்ட மணிக்கு நோ வாரிசு, கொடுக்க ஒன்றும் இல்லை என்றாலும். படிப்பும் இல்லை; வேலையும் இல்லை. அவனொரு விருதா.

    ஒருநாள் சுந்தரிக்கு கொஞ்சம் பூசினமாதிரி இருந்தது. கழுகுக்கண்ணா! குந்தளா தொளைத்து எடுத்து விட்டாள். அழுதுகொண்டே, சுந்தரி தன் அபிலாஷையைச் சொன்னாள். தொலைந்தது. பெரிய மாட்டுப்பெண் இப்படி இருக்கும்போது, உனக்கு இது ஒரு கேடா என்றாள். சிலபேருடைய சாபம் பலிக்கும். கலியுகம் அல்லவா? கருச்சிதைவு ஆகிவிட்டது. குந்தளா பாயசம் வச்சு சாப்பிட்டாளாம். என்னை வந்து யார் கேட்டார்கள்? கேட்டால், சொல்லியிருப்பேன், “ குந்தளா மாமி. நீங்க தாடகை அவதாரமோ, சூர்ப்பனகை அவதாரமோ, பூதகி அவதாரமோ! யார் கண்டா? பெரிய மாட்டுப்பெண்ணுக்கு பதினாறு பிறந்தபின், அடுத்தவனுக்குக் கல்யாணம் செய்திருக்கலாமே? உங்கள் அழிச்சாட்டியம் இந்த  அருள்மிகு வில்வநாதேஸ்வரனுக்கே பொறுக்காது.’ என்று.

    கதை நீண்டுண்டு போறது. மறுபக்கமும் சொல்லவேண்டும். பிறந்த வீட்டில் சுந்தரிக்குச் சலுகை குறைந்துவருகிறது. எல்லா பணம் உனக்குத்தான் செலவாச்சு என்று சங்கரன் அவளை உதறி விட்டுட்டான். ‘வில்’லுக்கு டயாபிடீஸ். எல்லாச் செலவும் மாதவன் தலையில். ஏதோ நல்ல காலம். மாதவனும், சுந்தரியும் உயிருக்கு உயிராக ஒருவரை ஒருவர் நேசித்தார்கள். ஆனாலும், மாதவனுக்கு டெஸ்ட் செய்துகொள்ள இஷ்டமில்லை. அம்மாக்காரி விவாகரத்துவரை கொண்டு போய்விடுவாள். வில் தலையாட்டும் என்ற பயம். எனக்கு அது சரியாகப் படவில்லை. என்னை மாதவன் ஆலோசனை கேட்கவில்லையே. திடீரென்று ஒருநாள் போய்விட்டார். இப்போது சுந்தரிக்குத் துணை பெருமாள்தான். ஏதோ புத்திசாலித்தனமோ கொஞ்சம் வைத்து விட்டு போய்விட்டார், மஹானுபாவன். அதை பிடுங்க ஆயிரம் பேர். எல்லாம் சொந்தக்காரர்கள் தான்.

    நேற்று சுந்தரி என்னிடம் கேட்டாள். எச்சக்கையால் காக்காய் ஓட்டாதே. உள்ளதை காபந்து செய்துகொள். என்றேன்.

    என்னமோ போங்கோ சார்! கூட்டுக்குடும்பத்தில் உழைத்து சம்பாதிக்கிற பையன் உழவு மாடு. அவனுடைய பார்யாள் கறவை மாடு. அவாளோட இளமை காணாமல் போனது. அவர்களுக்கு வயது காலத்திலே, நிர்க்கதி. என்ன வேண்டிக்கிடக்கு, இந்த கூட்டுக்குடும்பம், நல்ல பையனை கூட்டுகிற விளக்குமாறாக வைத்துக்கொண்டு!

    எனக்குத் தெரியும், ‘படவாகினி’ என்றால் என்ன என்று கேட்பீர்கள். அது ஒரு வட்டார மொழி. பொருள்: குந்தளா குணாதிசயமுள்ள பெண்மணிகள்.

    #####

    சித்திரத்துக்கு நன்றி:
    http://brivbridis.lv/wp-content/uploads/2014/12/k12.jpg

     

     

     

    Share
  • இசையும், நடனமும், கருத்தரங்கமும்

    இன்னம்பூரான்
    12 02 2017

    உய்ய வந்தவர் செழுந் தமிழ்ப் பதிகம் அங்கு இசையுடன் உரை செய்தார்.
    – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 179.4

    ai

    இன்று வைகறையில், எழுந்தவுடன் நரிமுகத்தில் விழித்தேன் போல. தருமமிகு சென்னையின் இன்றையபோக்கு பற்றி சொல்லும்படியாக ஒன்றும் இல்லையென்றாலும், அசாத்திய துணிவுடன் பயணித்து, பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. வீணையின் ரீங்காரமும், ஒத்த மத்தள சொல்லுக்கட்டு போன்ற ஆற்றல் மிகுந்த வாசிப்பும் அவைக்கு அலங்காரமாக அமைய, நடனம் அதற்கு மெருகேற்ற, ‘காலந்தோறும் தமிழ்!’ என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் இனிதே நடையேறியது. ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம், மலேசியா,ஈகரைத் தமிழ்க் களஞ்சியம், மலேசியா,ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி , சென்னை,ஆதிரா பதிப்பகம், சென்னை நான்கு அமைப்புகளும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடந்த விதத்தை பற்றி முதலில். அரங்கம், அருமையானது. மேடையில், நீதியரசர் தலைமையில் அமர்ந்திருந்த சான்றோர்கள் நல்லதொரு காட்சி. அதற்கு இணைந்தவாறே, மேடைக்கு முன்புறம், சற்றே தாழ்ந்த படியில் வரிசையாக ஒரு புஷ்ப அணி. கணக்குப்போட்ட மாதிரி, கால அளவை மதித்து உரையாடிய தமிழர் அணி. பானுமதி எனப்படும் ஆதீரா என்ற அதிகாரியினி தான் ஓடி ஆடிக்கொண்டிருந்தார். அவர் என் கட்டுரையை படித்து விட்டார் போல! அதே கருத்து. மலேசியா போல அரசு தமிழ் கருத்தரங்கம் நடத்தாததால், நாம் தான் முனைய வேண்டும் என்றார். ‘அதே! அதே! சபாபதே’ என்று மனனம் செய்து கொண்டு, தலைமை தாங்கிய நீதியரசர் எஸ்.மோஹன் அவர்கள் திருக்குறளை முன்வைத்து ஒரு கருத்துக்களஞ்சியமே வழங்கினார். தினமலர் ஆசிரியர் முனைவர் ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நாணய ஆய்வு ஒன்றை அருளினார். எல்லாம் செல்லாக்காசு தான்! விலை மதிப்பற்ற தமிழ் வரலாற்றை பேசாமடந்தையாக முன் வைக்கும் நாணயங்கள். யாரும் கோபித்துக்கொள்ள வேண்டாம். மலேசிய துணையமைச்சர் தத்தோ எம்.சரவணன் அவர்களை மலேசியா சென்று சந்தித்து, பாடம் படிக்கப்போகிறேன். என்ன பாடம்? தமிழ் உச்சரிப்பு என்ற கவின்கலை. மொழி நயமும், குரல் வளமும், குறையிலா உரை ஒலியும், சொல்லும், பொருளும், கருத்துமாக இணைந்து வந்தன.

    இந்த நிகழ்வு ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ என்ற ரகம். முனைவர் கோ.பெரியண்ணன் முதல் திரு.எ.கலி வரதன் வரை ஏழு புலவர்கள் அடங்கிய குழு ஒன்று ‘காலந்தோறும் தமிழ்’ என்ற இந்த ஆய்வுக்கோவையை ( கை வலி: அத்தனை தடிமன்: 180 கட்டுரைகள். ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது, இதன் 1022 பக்கங்கள் திக்கெட்டும் செல்லும். என் குட்டுரை ( ஒரு மோதிரக்குட்டு வைக்கும் கட்டுரை: 25வது).

    அரங்கம் இருந்த இடம்: ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரி, பள்ளிக்கரணை, சென்னை. இத்தனை பரிசுத்தமான கல்லூரியை நான் இந்தியாவில் கண்டதில்லை. மாணவர்களின் நன்னடத்தை வெளிப்படையாக தெரிந்தது. கல்லூரித்தலைவர் முனைவர். எஸ். ராமநாதன் அவர்களின் பெருந்தன்மை கண்கூடு. அவர் எங்களுக்கு அவர்கள் கல்லூரி ஹோட்டல் துறை மாணவர்கள் தயாரித்து பரிமாறிய இரு சுவை விருந்து அளித்தார். பிரமாதம். அந்த இரு சுவை இனிப்பு. இனிய விருந்தாகியதால், மற்ற சுவைகள் என் நாவை அடையவில்லை. ஆகவே, இனிப்பு + இனிப்பு. மற்ற சான்றோர்களை பற்றி எழுதாதது கை வலியால்! பொறுத்தாள்க. மாலை அமர்வில் கவிஞர். வைரமுத்து வந்திருக்கிறார். விருந்து லாகிரியில், நான் துயில் கொண்டேன்.
    நன்றி, வணக்கம்.

    இன்னம்பூரான்

    மேற்கோளுக்கு நன்றி: இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்கு.

    பின்குறிப்பு:

    கைப்பையும் கரமழகு.

    இன்னம்பூரான்
    வல்லமை – மின்னிதழ்.

    காலந்தோறும் தமிழ்!
    11 12 2016
    ஞானத்தமிழ் என்ற சொல் ஒன்று உண்டு. அமுதம் என்றும் ஒரு சொல் உண்டு. ‘… திருந்துமொழிப் புலவ ரருந்தமி ழாய்ந்த சங்கமென்னுனும்துங்கமலி கடலுள் அரிதி னெழுந்த பரிபாட் டமுதம்.’ என்ற சிறப்புப் பாயிரமாயினும், ‘அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக, இன்புருகு சிந்தையிடுதிரியா- நன்புருகி ஞானச்சுடர் விளக்கேற்றினேன் நாரணற்குஞானத்தமிழ் புரிந்த நான்’ என்று பூதத்தாழ்வார், அன்பையும், ஆர்வத்தையும், இன்பத்தையும், சிந்தையையும் கலந்து இறைப்பற்று ஞானமுதமாக, நெக்குருகி பாடியது ஆயினும், ‘தமிழ்கூறு நல்லுலகத்து…’
    என்று தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரம் பாராட்டியது ஆயினும், ‘தண்தமிழ் வினைஞர் தம்மொடு கூடிக்கொண்டுஇனிது இயற்றிய கண்கவர் செய்வினை..’ என சீத்தலைச்சாத்தனார் மணிமேகலையில் சீராட்டியது ஆயினும், ‘தண் தமிழ் யாழினும் இனிய சொல் கிளியே! என்று கம்பர் மெய்மறந்து கனிவுடன் அழைத்ததாயினும்,

    ‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத்தொழுது படித்தடடி பாப்பா’ என்று மகாகவி பாரதியார் மழலை அமுதமூட்டியது ஆயினும், ‘தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் – இன்பத்தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன்!’ என்று தமிழமுதத்தை பாவேந்தர் புகழ்ந்ததாயினும், ‘தமிழன் என்றொரு இனம் உண்டு! தனியே அவர்க்கொரு குணம் உண்டு!’ என்று இனமும் குணமும் கண்டு நாமக்கல் கவிஞர் கவி இசைத்தது ஆயினும், அவற்றுடன்,

    மலேசியாவின் ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றமும், ஈகரைத் தமிழ்க் களஞ்சியமும், ‘அனைத்தும் ஒன்றே’ ஶ்ரீ நாராயண குருவின் பிரதம சீடராகிய மகாகவி குமரன் ஆசான் அவர்கள் நினைவை போற்றும் தமிழகக் கலை அறிவியல் கல்லூரியும், எம்மை இங்கு பிடித்திழுத்து வந்த ஆதிரா பதிப்பகமும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் நற்பயனாகவும் சரி,

    காலந்தோறும் தமிழ் செழித்து ஓங்கவேண்டும்; பட்டி, தொட்டி, பளிங்கு மாளிகை, கூட கோபுரம் தோறும், இறவா வரமாகத் திகழவேண்டும் என்று தமிழ்த்தாயிடம் வேண்டிக்கொண்டு, அதன் பொருட்டு, வரலாற்றின் அடிப்படையில் சில கசப்பான உண்மைகளை முன்னிறுத்தி, வருங்காலந்தோறும் தமிழ்மணம் தரணி முழுதும் வீசுவதற்கான ஆயத்தங்கள் செய்வோமாக.

    இந்தியா விடுதலை பெற்றபின், அரசும், சமுதாயமும், கல்வித்துறையும் தமிழுக்கு செய்த பணிகள் சொற்பம். உதட்டளவில் உதிர்த்த வாய்பேச்சு வீரதீரங்கள் வியர்த்தமாயின. ‘நல்லதோர் வீணையாகவும், மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமல செல்வியாகவும், அன்னை பராசக்தியாகவும் அவதரித்த உத்தமி தமிழன்னை ‘திக்கற்ற பார்வதியாக’ வாடுகிறாள் என்பது தான் வரலாற்று உண்மை.

    நமது கிராமங்களில், நிறைகுடங்களாகவும், கலங்கரை விளக்குகளாகவும், பண்டைத்தமிழின் திறவுகோல்களாவும் பணி புரிந்த தமிழறிஞர்கள் திண்ணைப்பள்ளிக்கூடங்களில் இலவசமாக எடுத்த பாடங்கள் எங்கே? சுப்ரதீபக்கவிராயர் வீரமாமுனிவருக்கு பாடம் எடுத்த விதம் அதே. தமிழ்த்தாத்தா, மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் கற்றுக்கொண்டவிதம், அதே. தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் தன் தந்தையிடம் படித்த விதம் அதே. அத்தகைய நன்முத்து வாசிப்புகள் ஏன் காணாமல் போயின?

    கலோனிய அரசு தமிழுக்கு அளித்த பெருமிதம், விடுதலை அடைந்தபின் நமக்கு கிட்டவில்லை. 18ம் நூற்றாண்டில் துரைத்தனத்தாரால் உயர்நிலை பள்ளிகளில் படிக்க அமைத்த தமிழ் பாடபுத்தகம் ஒன்றுடன் தற்கால பட்டப்படிப்பு அட்டவணையை ஒப்பிட்டால், வெட்கி தலை குனிவோம். கலோனிய ஆட்சிமொழி சோற்றுக்கு ஒரு சோறு பதம், ஐ.சி.எஸ் பாடபுத்தகத்திலிருந்து:

    1864 வருடம் ஜனவரி மீ 8 உ.”
    ‘மதிராஸ் ஜில்லா ஆக்டடிங்க் கலைக்டரவர்களாகிய ஜார்ஜி பான்புரி துரையவர்கள் சமூகததுக்கு,திருவள்ளூர் தாலூகா தாசீல்தார் நஜமுத்தீன் சாயபு எழுதிக்கொண்ட அர்ஜி.

    விடுதலை பெற்று பத்து வருடங்களுக்கு பிறகு தான் ஆட்சி மொழி சட்டம்! தொடக்க விழாவுக்கு மேலும் பத்து வருடம்! 1969 வருட ஆணை 2011 வரை கிடப்பில். 25 வருடங்கள் கழித்து, 1971ல் தனி அலுவலகம். மேலும், 25 வருடங்கள் கழித்து 1996ல் தனி அமைச்சகம்.

    மைல்கல்களாக நட்டவை, கூப்பிடும்தூரத்து கூழாங்கல்களாக வலுவிழந்த வரலாற்றை புரிந்து கொண்டால் தான், பாசம் அவசரமாக பரவசமான உரு எடுக்கும்.

    1956: டிசம்பர் 27: ‘தமிழ் ஆட்சி மொழி’ மசோதா. (த.நா.சட்டம்‍ 39/1956) காமராசர் ஆட்சி. முன்மொழிந்த நிதி மந்திரி சி.சுப்ரமணியம்

    இந்த நன்னாளைத் ‘தமிழன்னை அரியாசனம் அமரும் திருவிழா’வாகக் கருதும்படி கேட்டுக்கொண்டார்.

    1966: ஆட்சி மொழி தமிழ் என்பதைச் செயற்படுத்தும் வகையில் ஆட்சி மொழிக்குழுவின் தொடக்க விழா!

    1967: தி.முக. பதவியேற்பு:‘சென்னை மாநிலம்’ என்பதை அறிஞர் அண்ணா ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றம் செய்தார்.

    1969:ஸெப்டம்பர் 27: அரசின் ஒரு துறையிலிருந்து பிற துறைகளுக்கு எழுதப்படும் கடிதங்கள் தமிழில் எழுதப்படவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.

    1969: நவம்பர் 13:சென்னை உயர்நீதிமன்றத்திற்குச் சார்நிலையில் அமைந்திருக்கின்ற அனைத்து நீதி மன்றங்களிலும், தீர்ப்பாயங்களிலும்,நீதிமன்ற சாட்சியங்களை 14.01.1970 முதல் தமிழில் பதிவு செய்து கொள்ளலாம் என ஆணையிடப்பட்டது.

    1971: மே 28: அரசு நிருவாகம் முழுவதிலும் தமிழ்மொழி பயன்படுத்தப்படுவதை விரைவுபடுத்தும் நோக்குடன் தமிழ் வளர்ச்சி இயக்கம் எனத் தனி ஒரு அலுவலகம் உருவாக்கப்பட்டது.

    1971:டிசம்பர் 2: அரசுச் செயலகத் துறைகளுக்கு எழுதப்படும் கடிதங்கள் தமிழில் எழுதப்படவேண்டும் என்று ஆணை வெளியிடப்பட்டது.

    1996: மே 13: அனைத்து நிலையிலும் படிப்படியாகத் தமிழை ஆட்சிமொழியாக உயர்த்திடும் முயற்சியின் உயர்நிலைப்பணியாக தமிழ் ஆட்சிமொழித்துறை தனி அமைச்சக‌மாக உருவாக்கப்பட்டது

    2010: தமிழ்நாட்டு அரசின் இணையதளங்களில் பெரும்பாலும் ஆங்கிலப்பக்கங்கள்;தமிழ் பக்கங்கள் சரிவர இல்லை. சான்றாக, கிராமங்களின் எல்லை வகையறா ஆங்கிலத்தில் மட்டும்.

    2010: மே 8: இந்த மாதம் 31-ந்தேதிக்குள் தமிழில் எழுதவேண்டும் என்று கெடு…தமிழில் எழுதப்படாத பெயர் பலகை அகற்றப்படும் என்ற வீராப்பு.

    2010:சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக தமிழை சேர்ப்பதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டது..என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.

    2011: “ஆட்சி மொழி” என்றால் அரசாணைகள் மொழி.1947 ஆகஸ்ட் 15 வரை ஆங்கிலேயர்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் ஆட்சி புரிந்தனர்.1966 லியே குஜராத்தி அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாக வேரூன்றிவிட்டது.. அங்கு தமிழ்நாட்டை சார்ந்த மேலதிகாரிகள் குஜராத்தியில் உரையாடினர். இப்பொழுதும் கூட பல அரசு ஆவணங்கள் தமிழ் நாட்டில் ஆங்கிலத்தில் தான் கிடைக்கின்றன.

    2017: காலந்தோறும் தமிழ் மின்னொளி வீச, ஆசான் நினைவு கலை அறிவியல் கல்லூரியில் நடக்கும் இந்த நிகழ்வு அச்சாரமாக இருக்கட்டும் என்ற அவா;

    2056: டிசம்பர் 27: ‘தமிழ் ஆட்சி மொழி’ மசோதா(த.நா.சட்டம்‍ 39/1956) நிறைவேறிய தினத்தின் நூற்றாண்டு விழா நடந்தால்..’ என்று ஒரு பகடி கற்பனை: கடுஞ்சொற்களை மட்டுறுத்தியதால் எனக்கு மன அழுத்தம்.

    அந்த விழாவில் ஏகோபித்தத் தீர்மானங்கள்:

    ஓரம் கிராமத்தில் குடிகொண்டிருக்கும் தமிழன்னை சிலைக்கு வைரமூக்குத்தி;
    அடுத்த நூற்றாண்டு விழாவுக்கு ஒரு அமைச்சரகம்;
    தழிழில் எழுதுவதற்கும், பேசுவதற்கும் தடையேதுமில்லை என்றதோர் அன்புக்கட்டளை;
    ஐ.நா.வில் தமிழில் தான் பேசுவோம் என்ற வீராப்பு.

    ஐயன்மீர்! அன்பு சகோதரிகளே! மாணவ மாணிக்கங்களே! இந்த பகடி கற்பனை உங்களை உசுப்பி எழுப்புவதற்கே. இன்று முதல் நாம் யாவரும் நாட்தோறும் இடை விடாமல் தமிழ் பாடங்கள் எடுப்போம்; தமிழ் பாடங்கள் கற்போம். அதுவே தமிழன்னையின் வேண்டுகோள் என்க.

    -#-

    சித்திரத்துக்கு நன்றி:

    https://lh6.googleusercontent.com/proxy/NEOLFhSAtxrIzW8ts3p2YS7jE7q0FCsZhPnRS5K6gNo4ACtQ9fH-8qFQHMrUSLkgMRVFVb9dhBRW3AJWz2T5H5K4grC8bNsndCgcez_cW5tW3xYxeVWA49T9DSnb1L9kDNQ=w5000-h5000

    உசாத்துணை:
    Guide to Records, Coimbatore District, pg.139
    Salem District Gazetteer – Richards, Volume – 1 Page.93
    http://www.arignaranna.info/kalanj_mozhi.html
    Madras Legislative Debates, ‘The Madras Official Language Bill| Dated: 28.12.1956, Pages: 393 to 422)
    http://muvalar.blogspot.com/2010/07/blog-post.html
    http://muvalar.blogspot.com/2010/07/2.html#more
    http://www.natpu.in/?p=2404
    http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=31793

    Share
  • தமிழர்களின் தலையெழுத்தை நிர்ணயிப்பது யார்? – மறுமொழி

    இன்னம்பூரான்
    10 02 2017

    five_elements2 (1)

    வல்லமை இதழாசிரியரின், ‘தமிழர்களின் தலையெழுத்தை நிர்ணயிப்பது யார்? என்ற கட்டுரை சிந்தனையை தூண்டுவது மட்டுமல்லாமல், கடந்த கால நினைவுகளை அசை போட செய்கிறது. நிகழ்காலத்தைக் கண்டு கலங்க வைக்கிறது. வருங்காலத்து பற்றிய கவலைகளை அதிகரிக்க வைக்கிறது. ஒரு வரி பதில் எளிது. தமிழர்களின் தலையெழுத்தை நிர்ணயிப்பது தமிழர்கள் மட்டுமே என்று முரசு கொட்டலாம்; அல்லது பிலாக்கணம் பாடலாம். முதற்கண்ணாக, பவள சங்கரி,

    ’எந்த அரசியல் கட்சியையும் சாராத என் போன்று பொது மக்கள் பலருக்கும் ஒரு கட்சித் தலைவராக ஜெயலலிதா மீது பல வகையான கருத்து வேறுபாடுகளும், வருத்தங்களும் இருந்தாலும், ஒரு நாட்டின் முதலமைச்சருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் சாமான்ய மக்களின் நிலை குறித்த அச்சம் ஏற்படுவதில் ஆச்சரியமென்ன?’

    என்று எழுப்பும் வினாவை பற்றி சற்றே விலாவாரியாக அலசுவோம். ‘கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள்? என்று வரும் திங்களுக்குள் தெரியபடுத்தவேண்டும் என்று உயர் நீதி மன்றம் இப்போது (காலை 11 மணி: 10 2 2017) கேட்பதே சாமான்ய மக்களின் அச்சத்தை பிரதிபலிக்கிறது. நேற்று என் தொலைக்காட்சி இயந்திரம் பழுது பட்டு இருந்ததால், நிம்மதியாக இருந்தேன். பின்னர் பல அவலக்காட்சிகளை கண்டு மனம் வெதும்பினேன். நான் கட்சி சாராதவன் மட்டுமல்ல; பிரகாசம் காரு முதல் ஜெயலலிதா வரை நடந்த அரசியல் காட்சிகளை நேரில் கண்டவன். 1969ம் வருடம் வீழ்த்தப்பட்ட தமிழனின் நற்பண்பு இன்றும் மிதிபட்டுத்தான் கிடக்கிறது. மூலகாரணம், தமிழனின் தரம் குறைந்தது தான். தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக் கொள்கிறான்.

    “.. மக்களின் மன நிலை எப்படியிருக்கும் என்று சம்பந்தப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அவரவர் தாங்கள் பிழைக்கும் வழியை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறார்களே!…”

    சட்டை போடாத சா.கணேசன் என்ற தேசபக்தன் ஒருவர் இருந்தார். ‘பணம் கொடுத்து வாக்கு வாங்கும் பணநெறியை இந்தியா கண்டதன்று’ என்ற அந்த சான்றோனின் வாக்கு பொய்த்து விட்டதே! இரண்டு திராவிடகட்சிகளும் செல்லாத நோட்டும் செல்லும் நோட்டுமாக அள்ளிக்கொடுப்பதை ஏற்கும், ‘திரு அமங்கலம் புகழ்’ தமிழன் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த சட்ட மன்ற உறுப்பினர் மக்களின் மனநிலையை பற்றி ஏன் கவலைப்படவேண்டும்? அவரவர் பிழைக்கும் வழியை இலக்காக வைத்துத்தானே மக்கள் மீது முதலீடு நடந்தது. எனவே, இதழாசிரியரின் புகார் தள்ளுபடி செய்யப்படுகிறது!

    ‘இந்த நாடு எப்படி விளங்கும்? ‘

    மெத்த கடினம். ஜனம் நாயக பொறுப்பை தாமதமானால் கூட, கல்லும், முள்ளும் ஆன பாதையில் நடந்து, லஞ்சம் வாங்காமல் நிறைவேற்ற முயன்றால் கூட போதும். வெற்றி நமதே.

    மனித உரிமை கமிஷன் என்று ஒன்று இருக்கிறதே? அதுகூட விலைபோய் விட்டதோ என்று அஞ்சும் அளவிற்கு அமைதியாக இருக்கிறதே!

    மனித உரிமை கமிஷன் தலையிட வாய்ப்பில்லை. அது விலை போனதாக தோற்றமில்லை.

    ‘பிச்சைக்காரர்கள் போல துச்சமாக எண்ணி நம்மைக் கூறு போடத் துடிக்கும் இந்த அரசியல் வியாதிகளின் சுயரூபங்களை புரிந்து கொள்ளவேண்டிய கடைசி வாய்ப்பு. இதிலும் ஏமாந்து போனால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது.’

    இதழாசிரியரின் இந்த கருத்தை பிட் நோட்டீஸ் அடித்து, பட்டி,தொட்டி எங்கும் பரப்பவேண்டும். ஃப்ளெக்ஸ் பதாகைகள் கூட வைக்கலாம். தலைப்பு: ஏமாறதே! ஏமாறாதே!

    ‘இன்று நாட்டின் நிலை என்ன என்று எந்த அரசியல் தலைவர்களும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.’

    கிட்டத்தட்ட அறுபது வருடங்களாக, இந்த அவல நிலை, தமிழ்நாட்டில்.

    அவரவர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள போராடுவதே முக்கியப்பணியாக கொண்டிருக்கிறார்கள்.

    ஆம். அவர்கள் நிழல் யுத்த மன்னர்கள்.

    விவசாயிகளின் தற்கொலைகள் கூட இன்று சாதாரண செய்தியாகிவிட்டது.

    இங்கு ஒரு ஐயம் எழுகிறது. இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அலங்கோலத்தை பொதிகையில் காண்பித்தார்கள். அது வேளாண்மை பிராந்தியம்; கிராமீயம். ஆனால் ஜல்லிக்கட்டு வரவு செலவு லக்ஷக்கணக்கில். எங்கிருந்து அந்த பணம் வந்தது? விவசாயம் நன்கு நடைபெற்றால், தரகு ஒழிந்தால், விவசாயிகள் செல்வந்தர் ஆகலாம். அப்படியா, ஜல்லிக்கட்டார் திரவியம் சேகரித்தனர்? அப்படியானால், விவசாயிகள் ( ப.சிதம்பரம் போன்ற காஃபி எஸ்டேட்டார்) வருமான வரி கட்டலாமே!

    இந்த ஏறு தழுவதல் மற்ற ஜாபிதாவுக்கு சால்ஜாப்பு. வாடிவாசலில் மிரட்டப்படும் காளைகள் பீதியில் ஓடி வர, இளந்தாரி ‘வீரர்கள்’ கும்பலாகப் பாய்ந்து அவற்றை துன்புறுத்துகின்றனர். இது சங்க கால பண்பாடு என்றால், அக நானூற்று பகற்குறியும், சங்க கால பண்பாடு தான். நம் வீராதி வீர, சூராதி சூர, தீராதி தீரர்கள் ஒரு வெம்புலியுடன் சண்டைப்போட்டு, ஒரு பெண்புலியை சம்பாதிக்கட்டுமே.

    பக்கத்து ஊரான பள்ளிபாளையத்தில் தண்ணீர் குழாய்கள் சரியாக கவனிக்கப்படாமல் தெருவில் கீழே போய்க்கொண்டிருக்கிறது. இதை நான் நேற்று நேரில் கண்ட நிலவரம். நாட்டின் நிர்வாகம் இந்த இலட்சணத்தில் இருந்தால் மக்களின் எதிர்காலம் என்னவாகப் போகிறது?

    இது மக்களின் உதாசீனம் கலந்த நிர்வாக அலட்சியம். We need Citizen-Auditors. Can be done with professional expertise.

    இதையெல்லாம் பற்றி எந்த கவலையும் இல்லாமல் சசிகலா அம்மையார் முதலமைச்சர் ஆகவேண்டும் என்று பேராசை கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

    கேள்வி சசிகலாவுடனேயோ, பன்னீர்செல்வத்துடனோ, இந்த இழை நிற்கவில்லை. சிண்டு, கூடு விட்டு கூடு பாயும் நிலை. பின்ணணி வினா: அரசு மேலாண்மையை நிர்ணயிக்கும் தகுதியுடனா, மக்களின் பிரிதிநிதிகள் இருக்கிறார்கள்? அவர்கள் தன்னிச்சையாக இயங்குகிறார்களா? மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கிறார்களா? என்பதே. இன்றைய தமிழ்நாட்டு அரசியலின் தன்மை வெட்கத்தால் தலை குனிய வைக்கிறது. தற்காலம், அது தொங்கலில் இருப்பதாலும், அசாதாரணமான தாமதத்திற்கு பின், சசிகலா சம்பந்தப்பட்ட வழக்கை உச்ச நீத் மன்றம் எடுத்துக்கொள்ளப்போவதாக சுட்டியதாலும், மவுனம் காக்கவேண்டியிருக்கிறது. எந்த கட்சி பதவியிலிருந்தாலும் வன்முறைக்கு பஞ்சமில்லை என்பதும் உண்மை.

    ஒரு இறுதி வரி: தமிழா! உன் விதி உன் கையில் மட்டும் தான் இருக்கிறது.
    -#-
    சித்திரத்துக்கு நன்றி:
    http://2.bp.blogspot.com/_vFh7ZzWickw/SeLi1gU7fSI/AAAAAAAAANk/OAmRnHuE8R0/s400/five_elements2+(1).jpg

    Share
  • இதுவும் காதல் தானோ!

    இன்னம்பூரான்
    28 06 2014/07 02 2017

    innam

    வனமாலி மஹாபாத்ரா பூரி ஜகந்நாத் கோயில் பண்டா (பூசாரி) ஒருவரின் மூத்தமகன். படிப்பெல்லாம் சொற்பம் தான். கோயில் மணி அடிக்க படிப்பு எதற்கு என்று அவருடைய தந்தை ஜகந்நாத் பண்டா, வனமாலியின் படிப்பை எட்டாங்கிளாசுடன் நிறுத்தி விட்டார். அது வரை விட்டுப்பிடித்ததே பெரிது. ஆனால், அவர் இவனை படிக்கவே விடமாட்டார். அதிகாலையில் தொடங்கும் பகவத் கைங்கர்யம் நடு நிசி வரை நீடிக்கும், பகவத் கைங்கர்யம் ‘கல கல’ என்று கனகதாரை பொழியும் என்பதால். எல்லா கோயில்களிலும் நாம் சம்பிரதாயமான பூஜை புனஸ்காரம் காண்கிறோம். சாமரம் வீசுவதிலிருந்து சடாரி சாதிக்கும் வரை, அபிஷேகம் செய்வதிலிருந்து ஆராதனை செய்யும் வரை, எல்லாமே சாஸ்திரோக்தமாக. இம்மி பிசகக்கூடாது. பிசகினால், பக்தியை மறந்த ஆயிரம் பிராமணோத்தமர்கள் ‘பிலு பிலு’ வென்று சண்டைக்கு வருவார்கள். பகவானை திரஸ்கரித்து கோயிலிலிருந்து வெளி நடப்பு செய்வார்கள். பரங்கி துரைத்தனத்தாருக்கு அநாமதேய புகார் மனு அனுப்புவார்கள். சார்! இது பழங்கதை. நூறாண்டுகள் ஆகப்போகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதான் பரங்கி துரைத்தனத்தார். இத்தனைக்கும், அவன் மிலேச்சன்; கிருஸ்துவன்; குடிகாரன்.

    திருப்பதி ‘மிராசு’ போல இங்கும் உரிமை பாராட்டும் பண்டா பிரமுகர்கள் உண்டு. பல ஆண்டுகளாக, பக்தகோடிகளின் அனுக்ரஹத்தால், இவர்களின் ஆதிக்கம் கொடி கட்டி பறக்கிறது. மயிலிறகு வைக்காமலே இவர்களது வங்கி சேமிப்பு புத்தகம் குட்டி போடுகிறது. அபரிமிதமான பொன்மாரி பெய்வதால், இவர்களது லேவாதேவி வியாபாரம் கந்து வட்டி அசுரகுட்டிகளை ஈன்றெடுக்கிறது. பகவான் ஜெகந்நாத் இந்த ஈனச்செயல்களை கண்டிக்கிறான். அவனை யார் கேட்டது? விவாஹ சுபமுஹூர்த்தில், அந்த பிள்ளையாண்டான் பெண்ணுக்கு மாங்கல்ய தாரணம் செய்யும்போது கெட்டி மேளம் கொட்டச்சொல்வதே, அமங்கல சொற்கள் காதில் விழாக்கூடது என்பதற்கு. இங்கே பகவானின் சொற்களை கேட்கக்கூடாது என்று தான் பயங்கர ஒலி தரும் கண்டாமணிகளை அடிக்கிறார்கள் போலும்!

    இந்த சம்பிரதாயமான பூஜை புனஸ்காரம்,சாஸ்திரோக்தம் மட்டும் தான் பூரி ஜகந்நாத் கோயிலில் என்று தப்புக்கணக்கு போடாதீர்கள். சொல்லப்போனால், அந்த பிராந்தியத்துக்கே எஜமானன் ஜகன்னாதர் தான். எல்லார் வீட்டிலும் தவழும் குழந்தையும் அவரே. ஊழியம் நிமித்தமாக, நான் பூரி செல்ல நேரிடும் என்றாலும், அதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு ஜகன்னாதன் தரிசனத்துக்கு செல்வது உண்டு. இரவு கொடுக்கும் மஹா பிரசாதம் ஒரு படி சாதம். அங்கு விளையும் நெல்லை போரடிக்க யானை வேண்டும். அத்தனை அபரிமிதமான விளைச்சல் பூமி. அந்த பிரசாதத்தை இரண்டு நாள் சாப்பிடலாம். ஊரே சில நாட்கள் பொலிவு இழந்து கிடக்கும். கேட்டால், வருத்தத்துடன் அவனுக்கு ஜலதோஷம் என்பார்கள். காலையில் பல் தேய்த்து விட்டு, முகம் அலம்பின பின் கஷாயம் கொடுப்பார்கள். குழந்தை ஜகன்னாதன் குடிப்பதாக பாவனை செய்வதால், பண்டா மனது வைத்தால், நமக்கு அருமருந்து பிரசாதமாகவும் கிடைக்கும். கறாராக தக்ஷிணையும் வாங்கி விடுவான். கோயிலுக்கு எதிரே மிகவும் அகலமான கிராண்ட் ரோடு. திருவிழா அன்று லக்ஷோபலக்ஷம் மக்கள் வடம் பிடிக்க, அண்ணன் பலபத்ரன், ஜகன்னாதன், தங்கை சுபத்ரா மூவருக்கும் தனித்தனி தேர். சாலையின் அடுத்த முனையில் இருக்கும் அத்தை வீட்டுக்கு போகும் காட்சி அபாரமாக இருக்கும். கண்டாமணி சத்தம் வானை பிளக்கும். பூரி மாஜி மகராஜா தங்க விளக்குமாறால், தேரின் தளத்தை சுத்தம் செய்த பின், கலெக்டர், மந்திரிமார், முதல்வர் எல்லாரும் கும்பிட்ட பின். ஆடி , அசைந்து, அந்த மூன்று தேர்களும் செல்வது கண்கொள்ளா காட்சி. அத்தை வீட்டில் கொம்மாளம் அடிக்கப் போராங்களாம்!
    தொடரப்போவது: நான் பகவானை தரிசிக்க போன படலம்.

    சித்திரத்துக்கு நன்றி:
    http://suriyantv.com/wp-content/uploads/2012/06/1-1024×788.gif

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • ஐ ஏ எஸ் தேர்வு உறுதி: 1

    திரு. இன்னம்பூரான் அவர்கள் ஓய்வு பெற்ற அரசு வருவாய்த்துறை அதிகாரி. இவர் ஐ.ஏ.எஸ் சேர விரும்பாமல் சேர்ந்தவராயினும், தம்முடைய 22ஆம் வயதில், முதல் முறையே ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஓய்வு பெற்ற பின் இறுதிச் சுற்றில் ஐ.ஏ.எஸ் மாணவர்களை நேர்காணல் செய்து தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் குழுக்களில் பணியாற்றியுள்ளார். அழகப்பா பல்கலைகழகத்திலும், சென்னை திறந்த வெளி பல்கலைகழகத்திலும் இணை வேந்தர்கள் மூலம் அறிமுகம் செய்துள்ளார். லெக்ஸிஸ்-நெக்ஸிஸ் என்ற உலகப்புகழ் பெற்ற பதிப்பகம் இவரை அணுகி, அவர்கள் இதற்காக எழுதிய உரூ.40 ஆயிரம் பெறுமானமுள்ள நூல்களையும் மனமுவந்து அளித்துள்ளனர். ஐ.ஏ.எஸ். மாணவர்கள் அறிந்து கொள்ளவேண்டிய முக்கியமான தகவல்கள் குறித்த ஒரு கையேடையும் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் திரு இன்னம்பூரான் அவர்களின் இத்தொடர் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமையும் என்று நம்புவோம்.

    ஆசிரியர்

    ஐ ஏ எஸ் தேர்வு உறுதி: 1

    இன்னம்பூரான்

    ai

    தைப்பொங்கல் தினம் ஒரு நுழைவாயில் என்க. வாழ்வியலின் நுழைவாயிலில் ஆவலுடன் நிற்பவர்கள் பள்ளி இறுதி வகுப்பு மாணவ மாணவிகள். அவரவரது வாழ்க்கை எவ்வாறு அமையும் என்பது ஒரு புதிராக இருக்கும் . அந்தப் பருவத்தில், மனதை ஆட்கொள்வது குழப்பம். பெண் குழந்தைகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா திகைப்பையும், இனம் தெரியாத அச்சத்தையும் தருகிறது. தோளுக்கு மிஞ்சிய தனயன், அரும்பு மீசையை கண்ணாடியில் பார்த்து, பார்த்து வியந்து போகிறான். ஆம். வயதுக்கு வரும்போது இருபாலாருக்கும் கலவரம் மிகுந்து வரும். உடல் வலிமையும் மனப்பாங்கும் புத்துணர்ச்சி பெறுவதால், ஆடல், பாடல், உடற்பயிற்சி, விளையாட்டு ஆகியவை மீது அதீத ஆர்வம் வரலாம். பாலியல் பற்றி கசமுசா தான். புரியாத மர்மாகிய அது சதா சர்வகாலமும் மனதை விட்டு அகலாது. படிப்பு வேம்பாக கசக்கலாம்.

    அநேக பெற்றோர்களுக்கு இந்த மென்மையான சூழ்நிலையில், தான் அனுபவித்து வெளியேறிய உணர்வுகளை மறக்காமல், உரிய ஆலோசனையை, திறந்த மனதுடன், வழங்கும் திறன் இருப்பது கூட இல்லை. பொறுமையும் இருப்பதில்லை. ஆடிப்பாடி கறக்கவேண்டிய மாட்டை வசை பாடி, அடித்து, உதைத்துக் கறக்கப் பார்ப்பார்கள். பெரும்பாலும் விளைவு விபரீதமாக அமையும். கட்டாயப்படுத்தி பெண்ணை திருமணம் செய்து கொடுப்பார்கள். அவள் நடத்தும் இல்லறம் பாடாவதியாக அமையக்கூடும். தற்காலம், அசட்டுக்காதல் வயப்பட்டு பெண்கள் ஏமாற்றப்படுவதையும் காண்கிறோம். பையன் ஓடிப்போய் கெட்ட சகவாசம் செய்து கொள்ளலாம். அல்லது வீட்டிலேயே சப்பாணியாக அடைந்து கிடக்கலாம், ஒன்றுக்கும் உருப்படாமல்.

    பள்ளிகளில் பலரை கட்டி மேய்க்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு ஒவ்வொருவரின் வளர்ச்சி மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்த முடிவதில்லை. எனக்குத் தெரிந்த சில தலைமை ஆசிரியர்கள் (திருவாளர்கள் குருவில்லா ஜேக்கப், சாரநாதன், கிருஷ்ணமூர்த்தி, பாஃதர் எர்ராட், டி.எஸ்.சர்மா போன்றோர்) உருவாக்கியவர்கள் உலகெங்கும் புகழ் எய்தினர். நான் படித்த கல்லூரியில் ஒரு வகுப்பில் 23 மாணவர்கள். அவர்களில் ஒருவர் தனியார் துறையில் பிரபலமான நிர்வாகி; செல்வந்தர்; எட்டு பேர்கள் அரசு ஐ.ஏ. ஏ. எஸ். வகையறா உயர்பதவி; நான்கு வழக்கறிஞர்கள், ஒரு கல்வி தந்தை. மற்றவர்களும் நல்ல பொறுப்பான உத்யோகம். தற்காலம் கல்வி நிலையங்களை வழி நடத்துபவர்கள் மாணவர்கள் மீது எங்களுக்குக் கிடைத்தமாதிரி அக்கறை எடுத்துக்கொள்வதில்லை என்பது நிதர்சனம். எனவே, மாணவ கண்மணிகளை கவனத்துடன் வழி நடத்த இவர்களுக்கு நேரம் போதாது; அக்கறையில்லை; திறனும் இல்லை. இது பெரும்பாலும் நிலவும் நிலை என்று கூறப்படுகிறது. விலக்குகள் இருக்கலாம். சில மாதங்கள் முன் ஒரு குக்கிராமத்தில் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கடமை ஆற்றியதை கண்டு களித்தேன். அது போதாது.

    ஒன்பதாவது வகுப்பு முதல் மாணாக்கர்கள் மீது தனிப்பட்ட கவனத்துடன், அனுபவம் வாய்ந்தவர்கள் நல்லெண்ணத்துடன் பழகி வந்தாலே போதும். அவர்களின் நுழைவாயில் திறன் பன்மடங்கு பெருகும். அவர்கள் தாங்கள் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டாலே போதும். சூட்டிகையான மாணவ மாணவிகள் அனுபவப்பாடங்களை அமல் படுத்தக் கற்றுக்கொள்வார்கள். திருநின்றவூர் என்றொரு வைணவ தலம். தாயாரின் பெயர், ‘என்னைப் பெற்ற அம்மா’. கருணைக்கடல். அவரைப் போன்ற சான்றோர்கள் சிலர் என்னைக் கட்டிக் காப்பாற்றி, காபந்து பண்ணி, வாழ்க்கைப்பாடங்கள் சொல்லிக்கொடுத்து, நற்பண்புகளைக் கூட்டி, தீயவையை விலக்கியதால் தான், என்னால் இந்த கட்டுரை வரைய முடிகிறது. அவர்களில் முக்கியமானவர், மேன்யுவல் தாமஸ் பைக்கடை என்ற கேரளத்து வழக்கறிஞர். பள்ளி மாணவனாக நான் இருந்த போது எங்கிருந்தோ வந்த இந்த ரோமன் கத்தோலிக்கர் எனக்கு வழித்துணையாக அமைந்தார். ஆங்கிலத்தில் அதை mentor என்பார்கள். அவரை ஆலமரமாக பாவித்தால், நான் ஒரு விழுது. இன்றைய ஆலமரமாக துளிர்க்கும் அன்றைய விழுது. இது நிற்க.

    வல்லமை ஒரு ஆக்கப்பூர்வமாக பயணிக்கும் மின் இதழ். இலவசமாகக் கிடைக்கிறது. மாணவர்களுக்கு வல்லமை இதழ் பயன் தருவதாக அமையவேண்டும் என்பது என் அவா. அதன் ஒவ்வொரு இதழும் மாணவ மாணவிகளை காந்தம் போல் பற்றி, இழுத்து வந்து, அவர்களின் விழிப்புணர்ச்சியை தட்டி எழுப்பி, அவர்களின் ஆர்வத்தைக் கூட்டி, படிப்படியாக அவர்களின் திறனை மேன்மை படுத்தி, ஐ ஏ எஸ் தேர்வு போன்ற சவால்களை திறம்படக் கையாண்டு, இந்த அரசியல் நிர்வாகத்தில், தகுதியின் அடிப்படையில் இடம் பிடித்து கோலோச்சவேண்டும் என்பது என் அவா. அதன் பொருட்டு வல்லமையின் வாயிலாக நமது மாணவ சமுதாயத்தை, ‘ஐ ஏ எஸ் தேர்வு உறுதி’ என்ற இந்த கட்டுரைத்தொடர் மூலம் வரவேற்கிறேன். படித்து வினா விடைகள் எழுப்பி, கருத்துக்கள் அளித்து, மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரிய பெருமக்களும் கலந்து கொண்டால் தான், இந்த பணி பரிமளிக்கும். அத்தருணம், இந்த தொடர் ஐ ஏ எஸ் தேர்வில் மூன்று படி நிலைகளிலும் பங்கேற்று வெற்றிகாண வேண்டும் என்று விரும்பும் மாணவ மானவிகளுக்கு மட்டும் படைக்கப்பட்டிருக்கிறது, அவர்களுக்கு mentor ஆக தொண்டு செய்வது என் இலக்கு. மாணவ சமுதாயத்துக்கு இந்த செய்தியை சேர்ப்பது வல்லமை இதழின் பணி. ஒரு கட்டத்துக்கு மேல், இதை ஒரு வினா-விடை தொடராக அமைத்து, இதில் பங்கு பெறும் மாணவ மாணவிகளுக்கு எழுத்து மூலமாகவும், விழியம் மூலமாகவும், பள்ளி/கல்லூரி அமர்வுகளில் நேரில் சந்தித்து ‘ஐ ஏ எஸ் தேர்வு உறுதி’ என்பதை விளக்கி, அவர்களை ஈடுபடுத்தி வெற்றி காண வைப்பது தான் இந்த தொடரின் பின்னனி.

    இன்றைய பாடங்கள்:

    ஒன்பதாவது வகுப்பு படிக்கும் போது, நாட்தோறும் இதற்காக அரை மணி செலவழித்தால் போதும். வெற்றி உறுதி. பின்னர் உழைத்து பலன் பெறலாம்.
    பெண்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் நுழைவு கட்டணம் கிடையாது. மற்றவர்களுக்கு சொற்பம்.
    கல்லூரி நுழையும் வரை படித்ததே கை கொடுக்கும். அதனால், எதை படிக்க வேண்டாம் என்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும் அதற்கு mentorship உதவும்.
    தமிழ் ஒரு பேப்பர். அதை எடுத்துக்கொண்டால், நிறைய மதிப்பெண் வாங்க உதவும். மிகவும் எளிய பாடங்கள்.
    அன்றன்று சிறிதளவு ஆங்கிலம் கற்றுக்கொள்வது விவேகம். சுலபமான வழிகள் உளன.
    இந்த வழிப்பயணத்தில் பங்கு கொள்ளும் சிலர் ஐ ஏ எஸ் தேர்வு நாடாவிடினும், இது வாழ்வியலுக்கு உதவும்.
    இந்த தொடரின் அணுகுமுறை, மற்ற ஐ ஏ எஸ் பள்ளிகள் நடத்துவதிலிருந்து முற்றும் வேறுபட்டது.
    ஐ ஏ எஸ் தேர்வில் பங்கு கொள்ள விருப்பம் உள்ளவர்கள் எழுப்பும் வினாக்களுக்கு அடுத்த பதிவில் விடை அளிக்கப்படும்.
    கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. இது ஒருவர் mentor ஆக பணி புரிவதால், திசை மாற்றம் வேண்டாம் என்று வேண்டுகோள்.
    வல்லமை இதழ் மூலம் நடத்தப்படும் இப்பணி இலவசம்.
    -#-

    சித்திரத்துக்கு நன்றி:
    http://comps.canstockphoto.com/can-stock-photo_csp3914014.jpg

    Share
  • புதுமை பேசிய பழமை பெண்ணியம்

    இன்னம்பூரான்
    ஜனவரி 3, 2017

    பெண்ணியம் பல வருணங்களில் பேசப்படுவதையும், உதட்டளவில் பெண்பாலாரும், ஆண்வர்க்கமும் உணர்ச்சி பொங்க பேசி விட்டு, பெண்களை துச்சமாக வீட்டில் நடத்துவதையும், ‘அடிமைப்பெண்’ அணுகுமுறையை தாய்க்குலமே தாங்குவதையும், பல வருடங்கள் கண்டு களைத்துப்போன எனக்கு இன்று உலகம் போற்றும் கூகிள் புதிமை பேசிய பழமை பெண்ணிய தொண்டர் ஆகிய திருமதி சாவித்ரி பூலே அவர்களின் 186வது ஜன்மதினத்தை கொண்டாடியது என்னை இளப்பாற்றியது.

    Google Marks Savitribai Phule’s 186th Birth Anniversary With Beautiful Doodle.

    அன்றொரு நாள் மஹாத்மா பூலே ஆதர்ச தம்பதியைப் போற்றி நான் வரைந்த கட்டுரையும், ஆங்கிலத்தில் ‘இன்றைய இந்தியா’ இதழ் படைத்த கட்டுரையும் இணைப்பதன் மூலம், பெண்ணியம் போற்றத்தக்க விதத்தில் செழிக்கட்டும் என வாழ்த்துகிறேன்.

    அன்றொரு நாள்: நவம்பர் 28
    ‘சூத்திரன்’

    “ அன்னியரிடமிருந்து பெறும் விடுதலையை விட சமுதாய முன்னேற்றம் அளிக்கக்கூடிய ஜனநாயகம் தான் முக்கியமானது என்று போதித்தவரும், மேல்மட்டத்தின் அடிமைகளாக தாம் உழல்வதை அடிமட்டத்து ஹிந்துக்களுக்கு உணர்த்தியவருமான புத்துணர்ச்சி சூத்திரன் தான் ஜோதிராவ் பூலே.’’
    ~பாபா சாஹேப் அம்பேத்கர்.

    நவம்பர் 28, 1890 அன்று அமரரான பாமரர் ஜோதிராவ் பூலே மே 11, 1888 அன்று ‘மஹாத்மா’ என்று பொதுமக்களால் போற்றப்பட்டவர். மஹாத்மா காந்தி பிற்கால மஹாத்மா. அருமை நண்பர்களே! குறித்துக்கொள்ளுங்கள். மஹாராஷ்டிரத்தில் சமுதாய சீர்திருத்தம் பதின்னெட்டாம் நூற்றாண்டிலேயே தலையெடுத்தது என்றாலும், பெண்ணியம் போற்றப்பட்டது என்றாலும், பல நூற்றாண்டுகளாக ஊறிப்போயிருந்த சாதிக்கொடுமைகளை எதிர்த்து போராடிய கறிகாய் கடைக்காரன் வீட்டுப்பையன் ஜோதிராவ் தான் கண்ணில் படுவார்; பிறந்த தினம் ஏப்ரல் 11, 1827. கொடுத்து வைத்த மஹானுபாவன். அவருக்கு 13 வயதில் வாய்த்த இல்லத்தரசி சாவித்திரி பாய் எல்லா விதத்திலும் இந்த புரட்சிக்காரனுக்கு ஈடு கொடுத்தார். இருவரும் திவ்ய தம்பதி. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். தாமதமாக ஏழு வயதில் தொடங்கி 20 வயது வரை, முண்டியடித்துக்கொண்டு, ஒரு இஸ்லாமிய ஆசிரியரும் ஒரு கிருத்துவ அண்டை வீட்டுக்காரரும் அளித்த ஊக்கத்தால், கற்ற கல்வி, இவரை தாமஸ் பெய்ன் அவர்களின் ‘மனித உரிமை’ என்ற இறவா வரம் பெற்ற ( ஆங்காங்கே அவ்வப்பொழுது தடை செய்யப்பட்டதால், வாசகர்கள் கூடினர்.) நூலிடம் அடைக்கலம் நாட தூண்டியது, 20 வயதில். இவருடன் கூட்டு சேர்ந்தவர்கள்: சதாசிவ பல்லல் கோவாந்தே,மோரோ விட்டல் வல்வேகர்& சகாராம் யஷ்வந்த் பரஞ்சிபே. மூவரும் பக்கா பார்ப்பனர்கள். நால்வரின் நட்பும், கூட்டு சமூகப்பணியும் ஆயுசு பர்யந்தம் தொடர்ந்தது. சொல்ல நினைத்ததை சொல்லி விடுகிறேன். 1. 20 வயதில் என் மனதையும் ஆக்ரமித்துக்கொண்டவர் தாமஸ் பெய்ன். ஆறு வருடங்கள் முன்னால், அவரால் உலகம் அடைந்த பயனை பற்றி நான் எழுதிய கட்டுரையை தேடினேன். கிடைக்கவில்லை. 2. எந்ததொரு காலகட்டத்திலும், பிராமணர்களில் சிலர் முற்போக்காக இன அபேதவாதிகளாக இயங்கியதை வரலாறு பதிவு செய்து இருக்கிறது ~ராஜாஜி.
    அடுத்த வருடமே (1848), சூத்திரர்களின், அதி சூத்திரர்களின் பெண் குழந்தைகளுக்கு பள்ளி அமைத்தார். முதல் மாணவி, மனைவி. அதற்கு அடுத்த வருடமே, இருவரும் ஜாயிண்ட்-சந்நியாசம் எடுத்துக்கொண்டதாகச் சொல்லலாம். பஞ்சமர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதா? என்று கடும் எதிர்ப்பு. கல்வீச்சு. மேல்மட்டத்தின் தாக்குதல் தாங்க முடியாத தந்தை இவர்களை வீட்டை விட்டு போகசொல்கிறார். நல்லதா போச்சு. இங்கு ஒரு நுட்பம் காணவேண்டும், ஐயா. ‘பூலே’ ஒரு காரணப்பெயர். மஹாராஷ்ட்டிராவில் பேஷ்வா (பிராமணர்கள்) அதிகாரம் கொடிகட்டி பறந்தது. அந்த ராஜகுடும்பத்துக்கு பூக்கார வம்சம், பரம்பரை, பரம்பரையாக , இவரது. ‘பூலே’ என்றால் பூக்காரன். பூ வேண்டும். ஆனால் பூக்காரன் தள்ளுபடி! எப்படி? அடுக்குமா?

    ஆரம்ப கல்வியின் பயனை நன்கு அறிந்த பூலே அவர்கள், அடிமட்டத்தின் வறுமை, தற்காப்பு இழந்த நிலை, மேல்மட்டத்தின் ஆளுமையில் அடங்கி கிடந்த நிலை எல்லாவற்றிற்கும் காரணம், அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதால் என்று உறுதி பட கூறி, இடை விடாத உழைப்பினால், பள்ளிகள் பல நிறுவினார். இதற்கெல்லாம் உற்றதுணை, பிராமண தோழர்கள்.

    இவருடைய புரட்சி அன்றாட நடவடிக்கையில் பிரதிபலித்தது. தன் வீட்டில் பஞ்சமர்களுக்கு ஸ்னான கட்டம். சம பதி போஜனத்திற்கு வருக என்ற இவருடைய அறிவிப்பை அச்சிலேற்ற அச்சப்பட்டன, இதழ்கள். பிற்காலம் அழுத்ததுடன் தீண்டாமை பிரச்சாரம் செய்தவர்களில் பேச்சில், இவருடைய தீவிரம் காண இயலாது. சாத்தூர் பச்சை மிளகாய்.

    உசிலம்பட்டி பெண் சிசு காப்பாளர்களே! செவி சாய்க்கவும். இவரது காலத்தில், கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு முன்னால், பிராமணர் வீடுகளில் விதவைகள் மறுமணம் தடை. குழந்தை விவாகம் தடபுடல். இளம் விதவைகள் கரு தரிப்பது உண்டு. சிசுஹத்தியும் தெருவில் விடுவதும் உண்டு. மண்ணாங்கட்டி சமூகம் கண்களை இறுக்க மூடிக்கொள்ளும். கரு தரித்த விதவைகளுக்கு புகலிடம் கொடுத்து, அவ்வாறு 1873ல் பிறந்த குழந்தை ஒன்றை தத்து எடுத்துக்கொண்ட மஹானை ஏன் ‘மஹாத்மா’ என்று விளிக்கக்கூடாது? அதே வருடம், இவரது தலைமையில் ‘சத்ய ஶோதக் சமாஜ் ( வாய்மை நாடுவோர் சங்கம்) நிறுவப்பட்டது. முதல் சபதம்: ‘சமத்துவம் போற்றுவோம். யாவரும் தெய்வத்தின் மக்கள்’. அடுத்த படியாக, பிரிட்டீஷ் அரசாங்கத்துக்கு விசுவாசம்.

    வேதங்கள் பெரிதல்ல; சிலை வழிபாடு வேண்டாம்; நான்கு வர்ணங்கள் வேண்டாம். இன பாகுபாட்டை ஒழி; ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானமே;சமய வெறியும், ஆவேச தேசாபிமானமும் நன்மை தரா. இப்படியெல்லாம் தீவிர ‘திராவிட?’ போதனை செய்த பூலே அவர்கள் 1876ல் துரைத்தனத்தாரால், பூனே முனிசிபாலிடி கெளன்சிலராக நியமிக்கபட்டார். 1877ல் பஞ்சம் வந்த போது ஏழை பாழைகள், குழந்தைகளை கூட புறக்கணிக்க நேர்ந்தது. அந்த சிறார்களுக்கு அநாதை ஆசிரமம் அமைத்தார், மஹாத்மா.

    பிரம்மோ சமாஜம், பிரார்த்தனா சமாஜம், சர்வஜனிக் சபை, இந்தியன் நேஷனல் காங்கிரஸ் ஆகியவையும் இவரிடம் வாங்கிக்கட்டிக்கொண்டன. மக்கள் தொண்டு உதட்டளவில் என்று குப்பை கொட்டிய இந்த சபைகள், பிராமண ஆதிக்கத்தில் சிக்கியவை என்றார். நல்ல வேளை. இந்த தி/அ.தி./ம./ப~ க. திராவிட கட்சிகள் சாதி என்னும் சகதியில் உருண்டு, பிரண்டு வருவதை பார்க்காமல் கண்ணை மூடியது, மஹாத்மா பூலே அவர்களின் கொடுப்பினை. வெள்ளைக்காரனையும் அவர் விடவில்லை. அரசு போஷாக்கில் இருந்த அந்தக்காலத்து டாஸ்மாக் கடைகளை எதிர்த்தார். ராஜாங்கமானாலும், வீண் செலவு செய்யக்கூடாது என்றார். ஒரு சமயம் விக்டோரியா ராணியின் சார்பில் வந்திருந்த கன்னாட் பிரபுவை வரவேற்க, அணிகலம் பூண்ட படோடாபிகள் சூழ்ந்திருந்த மீட்டிங்கில், ‘இவர்கள் இந்தியாவின் பிரதிநிதிகள் அல்ல. கிராமத்துக்கு வந்து பாருங்கள் என்று அறை கூவல் விட்டு, அவையோரை அசத்தினார். பிற்காலம் இன்னொரு மஹாத்மா இந்த மாதிரி வாரணாசியில் செய்த கதை தெரியுமோ?

    சொல்ல நிறைய இருக்கிறது. நேரம் தான் இல்லை. கெடு நெருங்கி விட்டது. இவரது பிராமண துவேஷத்தை அலட்சியம் செய்யலாகாது, அதில் கசப்பான உண்மைகள் இருப்பதால். பரிகாரமாக, ஒரு கேள்வி கேட்கிறேன். உங்களுக்கு ஜி.சுப்ரமண்ய ஐயர் பற்றி தெரியுமோ? ஹிந்து பத்திரிகை அவரை தாக்கிய கதை தெரியுமோ?

    இன்னம்பூரான்
    28 11 2011

    http://4.bp.blogspot.com/_2BiG4q7GCqk/TQJy_30IXCI/AAAAAAAAB0E/A_uD921Mh_U/s1600/Mahatma+Pule+Stamp.jpg
    pastedGraphic.pdfpastedGraphic_1.pdf
    http://1.bp.blogspot.com/-SMHjTQ2qZf8/TrzrorilsFI/AAAAAAAAADU/ZoVQhfTYihY/s1600/phule.jpg
    உசாத்துணை:
    http://www.mahatmaphule.com/index.html

    Share
  • இன்னம்பூரான் பக்கம் 5: 30

    கனம் கோர்ட்டார் அவர்களே!   – 30

    அவிழும் முடிச்சு

    இன்னம்பூரான்
    18 11 2016

     

    innam

    நீதிதேவதை இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கும்போது சென்னை உச்சநீதிமன்றத்தின் கிளை மதுரையில் ஜூலை 24, 2005 அன்று துவக்கப்பட்டது. அந்த விழாவுக்குத் தலைமை வகித்த சென்னை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆற்றிய உரையில், ஒரு தென்றல் வீசியது என்கிறார், ஒரு பிரபல மூத்த வழக்கறிஞர். அவருடைய மைந்தன் உச்சநீதி மன்றத்தில் நீதிபதி என்றால்,பார்த்துக்கொள்ளுங்கள், பெரியவரின் பெருமையை.

    தென்றல்: மக்களின் மேலாண்மைதான் குடியரசின் இலக்கணம். நீதிபதிகள், பிரதிநிதிகள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் எல்லாருமே மக்களின் ஊழியர்கள்; அதற்கு அவர்கள் பெருமிதம் கொள்ளவேண்டும். அத்துடன் நிற்காமல் வீசிய தென்றல், அந்த ஆளுமை படைத்த மக்கள் ஊழியர்கள்மீது, அவர்களின் பணியின் குறைவுகளின்மீது குற்றம் காணலாம். நமது அதிகாரமே மக்களின் நம்பிக்கையின்மீது தான் செழிக்கிறது; அவதூறு வழக்குத் தொடரும் சக்தியின்மீது அல்ல.

    பேச்சுரிமையும், கருத்துரிமையும் நமது அரசியல் சாஸனம் அளித்த வரன்கள். அதற்கு விலக்காக அமையும் இந்த கோர்ட்டாரின் அவதூறு சட்டம் ஏற்புடையது அல்ல. ஒரு ஜட்ஜ் லஞ்சம் வாங்கி விட்டாரென்று கற்பனை செய்து கொள்வோம். அந்த உண்மையை எடுத்துரைப்பது அவதூறு என்று கோர்ட்டார் அந்த உண்மை விளம்பியைத் தண்டிப்பது அபத்தம் இல்லையோ! மேலும் ஒரு அபத்தம். நமது அரசியல் சாஸனத்தின் ஷரத்து 124 (4) நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை செய்த ஜட்ஜை நீக்க வழிசெய்கிறது. அதைச் செயல்படுத்த விரும்புபவர் முதலில் அதே ஜட்ஜால் ஜெயிலுக்கு அனுப்பப்படலாம்! இந்த அபத்தத்தைத் தவிர்க்க வழி இல்லையா? உளது. நீதித்துறையே இந்தக் குறையை நீக்கவேண்டும். அவர்கள் சுணங்கினால், வேறு வழியின்றி நாடாளுமன்றமே அதை நீக்கவேண்டும். அவையில் ஊசி விழும் சத்தம்கூட கேட்காத மெளனம். எத்தனை முகங்கள் இறுகியவையோ? சொன்னால் பொல்லாப்பு. பத்துவருடம் கழிந்த நிலையிலும் நான் மாட்டிக்கொள்ளலாம். ஜெயிலுக்குப் போற வயதா? திகார்லெ பிஸ்கெட் ராஜன் பிள்ளையை சாவடிக்கல்லை?

    [Pillai’s widow, Nina Pillai, alleged that a conspiracy was behind the death of her husband in the jail. She urged the court to direct a CBI probe on the conspiracy angle as she feared foul play in the death of her husband. The Chief Metropolitan Magistrate (CMM) had ordered a CBI inquiry based on the petition.[9] The medical officer who conducted the autopsy, deposed before the CMM, and said that Pillai had died of asphyxia caused by blocking of blood in the respiratory system.The Justice Leila Seth Commission under Leila Seth was constituted to enquire into the conspiracy angle of his custodial death, but did not find any conclusive evidence. The Commission had issued advertisements in the newspapers seeking public help in the matter. Nina Pillai said she would provide evidence about the conspiracy angle, but later she refused to name the conspirator. The Commission concluded that ‘ways and means must be found to ensure that competent doctors were posted in the jail’. The Commission also suggested that the UN standard minimum rules be followed, and a prisoner should be allowed to be treated by his own doctor. Following the submission of its report, there were systemic changes at the Tihar jail, with a 24-hour attendance by doctors. There were 75 doctors on call compared to the previous 16, and initial medical check up was made imperative~ Wikipaedia] எனினும்?!

    அந்தப் பிரபல வழக்கறிஞர், ‘என்னுடைய 55 வருட சட்டம் சார்ந்த துறையில் பெற்ற அனுபவத்தில், இம்மாதிரி ஒரு நீதிபதியே தன் மனத்துள் புகுந்தாரய்ந்து பொருத்தமான வழிமுறையை முன்னுரைப்பதை முதலில் காண்கிறேன் என்று புளகாங்கிதம் கொள்கிறார்.

    அந்தத் தலைமை நீதிபதி திரு. மார்க்கண்டேய கட்ஜு அவர்கள்.

    அந்தப் பிரபல வழக்கறிஞர்: ஃபாலி. எஸ்.நாரிமன் அவர்கள்.

    காலத்தின் கோலமடா! இன்று இந்தியாவின் உச்சமன்றத்தில் ஒரு தாவா.

    கோர்ட்டாரை அவமதித்தாகக் குற்றம் சுட்டப்பட்டவர்: அந்த மாஜி தலைமை நீதிபதி திரு. மார்க்கண்டேய கட்ஜு அவர்கள்.

    அவருக்காக வாதாடப்போகும் வழக்கறிஞர்:அந்த பிரபல வழக்கறிஞர்: ஃபாலி.எஸ்.நாரிமன்.

    [தொடரும்]

    *****

    சித்திரத்துக்கு நன்றி:

    http://ai-i1.infcdn.net/icons_siandroid/png/200/8466/8466765.png

     

     

    Share
  • இன்னம்பூரான் பக்கம் 5: 29: கனம் கோர்ட்டார் அவர்களே! 29:1

    இழுபறிவைத்தியம்

    இன்னம்பூரான்
    14 11 2016

     

    innamburan

    கலோனிய அரசு கெடுபிடிகள் பல காட்டினாலும், திலகரின், காந்திஜியின், பாரதியாரின் எழுத்துரிமையையும், பேச்சுரிமையையும் முச்சூடும் பறிக்கவில்லை. தடா போட்டுப் பார்த்ததுடன் சரி. காந்திஜியுடன் வைஸ்ராய் இர்வின் பிரபு பேச்சு வார்த்தை நடத்தினார். நீதித்துறை தன் பெருமையைக் காத்துக்கொள்வதில் கவனம் செலுத்தும் என்பார்கள். ஆனால், மதராஸ் ஹைகோர்ட்டில் ஒரு ஜட்ஜை வழக்கறிஞர் ஒருவர் நாய் என்று பொருள்பட நகைத்தார்.  சிரித்துக்கொண்டு விட்டு விட்டார்கள். ஏனெனில், அது பூடகமான நகைச்சுவையாக இருந்தது. சினம்பொங்க, ஒரு ஜட்ஜ் ‘நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்று தெரியுமா?’ என்று வினவ, பழம் தின்னிக் கொட்டை போட்ட வக்கீல் ஐயா, ‘ஆஹா! தெரியுமே! ஒரு ஒல்லிப்பிச்சான் [puisne] ஜட்ஜிடம் பேசுகிறேன்.’ என்றார். எல்லாரும் கமுக்கமாகச் சிரித்துக்கொண்டார்கள்,  ஜட்ஜ் உள்பட.

    அத்தகைய அலாதி உறவு எல்லாம், சுதந்திர இந்தியாவில் பறிபோகத் தொடங்கின, கொஞ்சம், கொஞ்சமாக.

    எனக்கு ஒரு கெட்ட வழக்கம். இங்கிலாந்தில் படித்து வந்த காலகட்டத்தில் உயர் நீதிமன்ற (ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்) தீர்ப்புகளைத் தினம்தோறும் படிப்பேன். கறாரில் மையக்கரு நகைச்சுவையிலும், அலட்டிக்கொண்ட தீர்ப்பில் தர்மமும் இருக்கும். எல்லாம் பாடமே. இந்திய அரசியல் சாஸனத்தில் நீதித்துறைக்கு மவுசு அதிகம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்பீல் என்ற சட்ட நடவடிக்கை இருப்பதே, நீதிபதிகள் தெய்வாம்சம் கொண்டவர்கள் அல்ல, ஒருவர் அளித்த தீர்ப்பை மேலா ரத்து செய்யலாம் என்பதால், தீர்ப்புகளை விமர்சனத்துக்கு உட்பட்டவை என்பதை குறிக்கிறது. அதே விமர்சனத்தை மக்களில் ஒருவர் செய்வது வரவேற்கபடுவதில்லை. அப்படிச் செய்தாலும், கவனமாக நீதிபதியைக் கொஞ்சம் வெளிப்படையாக விமர்சித்தால் கோர்ட்டை அவமதித்தாக எடுத்துக்கொண்டு, ஆறு மாதம் ஜெயிலில் போடலாம்.

    அந்த நிலைப்பாட்டுக்கு அஸ்திவாரமே சற்றே தடுமாற்றம்தான். வில்மாட், வில்மாட் என்று ஒரு ஜட்ஜ் 1765இல் ‘கோர்ட்டை அவமதிப்பது குற்றமே’ என்று ஒரு நிருபர் மேல் எழுந்த வழக்கில் ஒரு தீர்ப்பில் எழுதி இருந்தாலும்,  டெக்னில் காரணங்களால். அது குறைப்பிரசவம் ஆனது; வில்மாட்டின் மைந்தர் காலம் சென்ற தந்தையின் படைப்புகளைப் பதிவு செய்தபோது, சட்டத்தை அணுகாத அந்தக் கருத்து ஒரு மரபு ஆகிவிட்டது. அப்புறம் என்ன? நீதி அரசர்கள், நீதி மன்னர்களானார்கள், சில இடங்களில் நீதி தேவர்களும் ஆனார்கள் – இந்தியாவில். இங்கிலாந்தில் மரபைப் பதிவுசெய்து விட்டு, காமன் சென்ஸ் படி நடந்து கொண்டார்கள். பொதுவாகச் சொன்னால், அங்கே நீதிபதிகள் அமரிக்கையாக இருந்தார்கள்.

    மேல்நாட்டு ஊடகங்கள் எந்த உத்தமபுத்திரனையும் உச்சாணிக்கிளையில் அமர்த்தி மெய்கீர்த்தி பாடமாட்டார்கள். தடாலடியை எல்லாம் இறக்கி வைத்து வேப்பிலை அடிப்பார்கள். பல வருடங்களுக்கு முன்னால் [1985?] நீதிபதிகளின் தலைமை போன்ற டெம்பிள்டன் பிரபு, பிரபல வழக்கறிஞர்களும், நீதிபதிகளின்புடை சூழ, இந்தியா வந்திருந்தார். அப்போது, ‘ ஊடகங்களின் எழுத்துரிமை ‘கனம் கோர்ட்டாரை அவமதித்தால்..!?.’ என்ற பட்டிமன்றம் நடந்தது. அப்போது அவர் 1987இல் உலகெங்கும் பேசப்பட்ட ஸ்பைகேட்சர் புத்தகம் பற்றிய தீர்ப்பில், அந்நூலின் ஆசிரியர் பீட்டர் ரைட் வாக்கு மீறி அரசு ஒற்றர்களின் ரகசியங்களை (ஒரளவு லீக் ஆனவைதான்) பிரசுரம் செய்யக்கூடாது என்று தானும், இரு சக ஜட்ஜ்கள் மெஜாரிட்டி தீர்ப்புக் கொடுத்ததை ஊடகங்கள் பரிகசித்தன. மூவரின் படங்களை தலைகீழாக மாட்டி, ‘மூன்று முட்டாள்கள்’ என்ற தலைப்பை டைலி டெலிக்ராஃப் பிரசுரம் செய்தது. ஐயா அவர்கள் உடனே நடவடிக்கை எடுத்தார். என்ன? அதைத் தன் வரவேற்பு அறையில் அலங்காரமாக மாட்டிவிட்டு, தினம் அதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டார்.

    [தொடரும்]

    ***

    http://kids.nationalgeographic.com/content/dam/kids/photos/articles/Other%20Explore%20Photos/R-Z/Wacky%20Weekend/Upside-Down%20Animals/ww-upside-down-animals-possums-tile.jpg

     

     

    Share
  • பாமரகீர்த்தி [3] இன்னம்பூரான் பக்கம் [8]

    -இன்னம்பூரான்
    18 09 2016

    innamburan

    சமுதாயத்தையே பல நூற்றாண்டுகளாகப் பாமரனைப் பற்றிய மறதி நோய் பரவலாக ஆட்கொண்டிருப்பதைக் கண்டு வருந்தினோம். பகிர்வார்கள் தென்படாததால், நேற்றைய பாமரனின் கீர்த்தியைப் பாடாவிடின், இன்றே அவரை மறந்துவிடுவார்கள் என்பது திண்ணம். அதனால்தான் அவசரம், பொறுமையின்மை. சமுதாய அக்கறையின்மையைப் பொறுத்தார் பூமி ஆளலாம்; தரிசு பூமியை. ஆனால், அவர்களால் தரணி ஆள முடியாது.

    உங்களுக்கு மாரியப்பனை தெரியுமோ? தெரிந்திருக்காது. தற்பொழுது பாழடைந்த மண்டபத்தின் தூண்கூட, ‘அவன் இங்கு தான் இளைப்பாறினான்; ஒரு கல்வெட்டு பதிக்க, ஒரு கோடி ரூபாய் கொடுங்கள்.‘என்று அறை கூவும். நம்ம நோபெல் பரிசு வெங்கட்ராமனுக்குக் கூட (தற்காலம் அவர் தான் உலகப்புகழ் இங்கிலாந்து ராயல் சொஸைடி தலைவர்)  இப்படித்தான் ஆச்சு. அவன் சூடிகையான பையன். படிக்காமலே மார்க் வாங்குவான். அவனுக்கு நாலு வகுப்பிலும் நான்தான் வாத்தி. அன்றே நோஸ்ட்ரடமாஸ் மாதிரி, இவன் நோபெல் பரிசு வாங்குவான் என்று என் பெண்டாட்டியிடம் சொன்னேன். நீங்கள் எப்டி அப்டி சொன்னேள் என்று மூக்கிலே விரலை வைக்கிறாள் என்றெல்லாம் ‘புரட்டுக்கதை’ கட்டிய பேராசிரியர்கள் பலர். வெங்கட், பாவம், நான் அந்த ஊர்ப்பக்கமெல்லாம் தலை என்ன? உள்ளங்கால் கூட வைக்கவில்லை என்று அங்கலாய்த்துக்கொண்டார். அவர் தருமமிகு சென்னயின் ம்யூஸிக் சபாவுக்கு அநாமதேயமாக க்யூவில் நின்றதை கண்ட ஹிந்து ரவி அவரை முன்வரிசைக்கு அழைத்து வருவதற்குள் அவருடைய தாத்தாவின் ‘பால்ய சினேகிதர்கள்’ ‘பிலுபிலு’ என்று மொய்த்து விட்டார்களாம். அந்த மாதிரிதான் மாரியப்பன் கதையும்னேன்.

    ஆம். மாற்றுத் திறனாளியான மாரியப்பன் ரியோ ஒலிம்பிக்ஸ் பந்தயத்தில் T 42 High Jump at Paralympics உயரக் குதிக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று, அழியாப் புகழும், கோடிக்கணக்கான ரூபாய் பரிசுகளும் பெற்ற பெரியவடுகம்பட்டி பாமர இளைஞர். வயது 21.  அவர் வாகை சூடியதைப் போற்றும்போது கவனிக்க வேண்டிய விஷயம், அவருக்கு சான்ஸே இல்லை என்பதுதான். வாழ்நாள் முழுதும் எதிர்நீச்சல் தான். அவன் பள்ளிப்படிப்பின் போதே, தாங்கமுடியாத கடன்சுமை, சகோதரியின் திருமணம் பொருட்டு. தந்தை தங்கவேலு, இவர் மழலையாக இருக்கும்போதே, விலகி, கண் காணாத இடத்துக்குப் போய்விட்டார். இப்போது வந்து நிற்கிறார். நற்றாய் சரோஜா செங்கல் சூளையில் கடுமையாக உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றினார். சகோதரி சுதாவோ ஒரு தியாகி. தன் படிப்பை நிறுத்தி விட்டுத் தன் உடன்பிறப்புகளைக் கவனித்துக்கொண்டார். ஐந்து வயதில், ஒரு பஸ் ஏறிய விபத்தில் இவருக்கு காலில் நல்ல அடி. நிரந்தர ஊனம். 15 வருடம் கழிந்த பின்னும், அந்த வழக்கு ‘ஜிவ்’வுன்னு இழுத்துக்கொண்டே போகிறதாம்! எனினும் எல்லா விளையாட்டுக்களிலும் பங்கு எடுத்து வந்தார். ஆனால், சகபாடிகளின் கொடுமை தாங்காமல் தனித்துச் சிறப்புத்தரக்கூடிய ஹை ஜம்ப் மட்டுமே நாடி,அதைப்பயின்றார். அந்தத் திருப்புமுனைக்கு வித்திட்டது அவர் ஏழாம் வகுப்பு படிக்கும்போது உடல்நல ஆசிரியர் எஸ்.ராஜேந்திரன். பல இன்னல்களைக் கடந்து, ஏற்கனவே லண்டன் பாரா ஒலிம்பிக்ஸ் 2012இல் பங்கேற்கத் தேர்ந்தெடுத்த பின்னர், நிதி நெருக்கடியால், இவருக்கு லண்டன் போக முடியவில்லை. அடுத்த வருடம் போக ஆர்வத்துடன் இருக்கிறார். தமிழ்நாட்டு முதல்வர் ரூபாய் இரண்டு கோடியும், மத்திய விளையாட்டு அமைச்சரகம் ரூபாய் 75 லக்ஷமும் இவருக்குப் பரிசாக கொடுத்தனர். கார்களும், மோட்டார் சைகிள்களும், துட்டும், ஓடி வந்த வண்ணம்.

    நம்ம மாரியப்பன் தன்னடக்கத்துடன், ஏமாற்றுவித்தைக்காரர்கள் கையில் சிக்காமல், நிறைவு வாழ்க்கை வாழ்ந்து, பல வெற்றிகள் அடைந்து நம் நாட்டுக்குப் பெருமை சேர்ப்பாராக.

    -#-

    சித்திரத்துக்கு நன்றி:

    http://ichef.bbci.co.uk/news/ws/660/amz/worldservice/live/assets/images/2016/09/10/160910014033_rio_paralympics_mariyappan_thangavelu__624x415_afp.jpg

     

     

     

    Share
  • சுகவனம் – 6

    -இன்னம்பூரான்
    செப்டம்பர் 9, 2016

     

    innamburan

    நாளை வெளிவரும் லான்ஸெட் என்ற உலகபுகழ் வாய்ந்த மருத்துவ இதழ் ஒரு மாபெரும் சாதனையை வெளிக்கொணரும். அதுவும் ஒரு நாட்டின் சுகாதார அமைச்சரும், உலக சுகாதார மையத்தின் பிராந்திய தலைவரும் கலந்தாலோசித்து எழுதியதை நாம் யாவரும் படித்து, இயங்கி, நமது சுகவனத்தை போற்ற வேண்டும்.

    ஶ்ரீலங்காவின் சாதனை: மலேரியாவை ஒழித்ததும், அதற்கான நற்சான்றை நான்கு நாட்களுக்கு முன்பு WHO விடமிருந்து பெற்றுக்கொண்டதும். உள்நாட்டு போர் நடந்து கொண்டிருந்த போதே, இந்த ஆய்வும், செயலும் நடந்து வந்தன. அந்த நாட்டின் மக்களில் பெரும்பாலோர் கீழ் நடுத்தர வகையினர். 80%  கிராமங்களில் வாழ்பவர்கள். கொசுவின் சிரஞ்சீவி வாழ்க்கைக்கு வேறு ஒன்றும் வேண்டாம். அத்தனை சொகுசு கொசுவுக்கு அங்கே! கலோனிய ஆட்சியில் மலேரியாவால் மாண்டோர், லக்ஷக்கணக்கில். 1934-35 காலகட்டத்தில் மலேரியா எங்கெங்கும் தீ போல் பரவி, ஜனத்தொகையில் 1.5% மக்களை விழுங்கியது.

    அந்த நாடு 1945ல் டி.டி.டி தெளிப்பதை மும்முரமாக கையாண்டு பலன் கண்டாலும், அந்த முறையின் விளைவுகளை கண்டு நிறுத்தியவுடன், நாட்டில் மலேரியா தாக்கம் 17 பேர் மட்டுமே என்று 1963ல் சாதனை படைத்திருந்தாலும், கொசு புத்துயிர் பெற்றது; மலேரியா 1967-69 காலகட்டத்தில் 15 லக்ஷம் பேர் மலேரியாவினால் தாக்கப்பட்டனர்.

    1980க்கு பிறகு பத்து வருடங்களில் ஶ்ரீலங்கா கொசுவை பபமுனைகளில் தாக்கி ஒழிக்க முற்பட்டனர் – நீர்நிலைகளிலும், ஈரப்பதமுள்ள விளைநிலங்களிலும் கொசுவை அழிப்பது, அபாயம் நிறைந்த பகுதிகளில் மட்டும் மருந்து தெளிப்பது, டி.டி.டி.யை தவிர்த்த பூச்சிக்கொல்லிகள், சிசுவதம், கொசுவலை, பரந்த இடைவிடாத ஆழ்ந்த மேற்பார்வை, வகையறா.

    கொசு என்றால் சும்மாவா? இதுவெல்லாம் போதவில்லை. 1980, 1980, 1987 களில் ஆறு லக்ஷம் கேசுகள். 264,349 1999ல். உடனடி மருத்துவம், சாவுகளை குறைத்தது. இந்த நூற்றாண்டு தொடக்கத்தில்  அங்கு ஒரு திருப்புமுனை அமைந்தது எனலாம். ஒரே வருடத்தில் 68% குறைந்தது, மலேரியா. 2008ம் வருடம் உள்நாட்டு மலேரியா தலையெடுக்கவில்லை.

    இந்தியாவின் உள்குத்து வீரர்களே! மறக்காதீர்கள். ஶ்ரீலங்கை அரசுக்கு, மலேரியாவின் தாக்கம் அறிந்த விடுதலை புலிகள், இந்த மலேரியா ஒழிப்புப்போரில் ஒத்துழைத்தார்கள். நம் புத்தியும் அவ்வழி செல்ல வேண்டும். நம் நாட்டில் கொசு தர்பார் தடபுடல் என்பதால்.

    -#-

    விடுதலை புலிகளின் ஒத்துழைப்பு பற்றி:

    Abeyasinghe, RR, Galappaththy, GN, Smith Gueye, C, Kahn, JG, and Feachem, RG. Malaria control and elimination in Sri Lanka: documenting progress and success factors in a conflict setting. PLoS One. 2012; 7: e43162

    உதவி :DOI: http://dx.doi.org/10.1016/S0140-6736(16)31572-0

    சித்திரத்துக்கு நன்றி:

    https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c0/Ronald_Ross_18_Cavendish_Square_blue_plaque.jpg/220px-Ronald_Ross_18_Cavendish_Square_blue_plaque.jpg

    ***

    இன்னம்பூரான்
    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

     

     

    Share
  • தணிக்கையும் நிர்வாகமும் – 2

    -இன்னம்பூரான்
    செப்டம்பர் 6, 2016

     

    funny young man with computer
    funny young man with computer

    சிறுதுளி பெருவெள்ளம். சில்லறையை நடுத்தெருவில் இறைக்காமல் இருந்தால் தான் நாட்டின் செல்வக்களஞ்சியத்தை பாதுகாக்கமுடியும். தணிக்கைத்துறைக்கு இதையெல்லாம் கண்காணிக்கும் பணியை அரசியல் சாஸனம் அளித்திருந்தாலும், குறுக்குச்சால் ஓட்டித் தணிக்கையென்ற கண்கொத்திப் பாம்பிடமிருந்து ஒதுங்கி, ஓரத்தில் ஆட்டம் போடத்தான் ஆயுள் காப்பீட்டு கழகம், இந்தத் தளையிலிருந்து அக்காலத்து நிதியமைச்சர் திரு. சீ.டி. தேஷ்முக் அவர்களால் விடுவிக்கப்பட்டது. இந்தியாவின் ஆடிட்டெர் ஜெனெரலுக்குப் பாராளுமன்றத்தில் பேச உரிமை உண்டு. அதைப் பயன்படுத்தி அக்காலத்து ஆடிட்டர் ஜெனெரல் திரு. ஏ.கே.சந்தா அவர்கள், அந்த உரிமையைப் பயன்படுத்தி, இந்தத் தளை அவிழ்க்கும் சதியை எதிர்த்தார். ஆனால், அரசியல் அவரது பேச்சை மதிக்கவில்லை; பலன்: முந்தரா ஊழல். நிதி அமைச்சரே ராஜிநாமா செய்ய நேர்ந்தது.

    வங்கிகளைத் தேசியமயம் ஆக்கியபோது, அதே நிலைப்பாடு நிலவியது. வங்கிகளைத் தணிக்கை செய்யும் திறன் வேறு. நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்று அவர்கள் கூப்பாடு போட, அதற்கு ரிசர்வ் வங்கித் தாளம் போட, அதுவும் நிதியமைச்சரகத்துக்குச் சாதகமாக போக, இன்று தலைதூக்கி நிற்பது மல்லையா ஊழல். வாராக்கடன்களுக்கு உறைவிடம் தேசியவங்கிகள் என்பது உறுதியாச்சு.

    இது வரை, கடந்த ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசு, இந்த வாராக்கடன் தேசியவங்கிகளுக்கு வள்ளலாக இயங்கி, கொடுத்த வரிப்பணம் 85,000 கோடி. கடையிலிருக்கும் தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு அல்ல, ஆழ்கிணற்றில் ‘தொப்’ என்று போட்டார்களாம். அதற்கு கேள்வி முறையில்லையாம்!

    மேலும்  70,000 கோடி கொடை அளிக்கப்போகிறார்கள். அரசே ஆடிட்டர்  ஜெனெரல் இதையெல்லாம் தணிக்கை செய்யவேண்டும் என்று உதட்டளவிலாவது சொல்கிறார்கள். அவரும் அதற்கான திட்டங்களை வகுத்து வருகிறார். 2017ஆம் வருடம் இந்த ஆடிட் ரிப்போர்ட் வரக்கூடும். சில வயிறுகள், இப்போதே கலங்குகின்றன.

    -#-

    படித்தது: Business Line: September 4, 2016.

    ***

    சித்திரத்துக்கு நன்றி:
    https://stevejbicknell.files.wordpress.com/2013/10/fotolia_49497806_xs-worried-man.jpg?w=474

     

     

    Share
  • தணிக்கையும் நிர்வாகமும் – 1

    -இன்னம்பூரான்
    செப்டம்பர் 3, 2016

     

    innamburan

     

    இது இன்றைய செய்தி.

    அம்மா காண்டீன் என்ற மலிவு விலைச் சாப்பாட்டுக்கடை தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். நேற்று, தமிழ்நாட்டுச் சட்டசபையில், நமது அரசியல் சாஸனத்தில் விதித்தபடித் தாக்கல் செய்யப்பட்ட தணிக்கை அறிக்கையில், நிர்வாகக் கோளாறுகளால் 3.69 கோடி ரூபாய்கள் நஷ்டம் என்று குறிப்பிடப்பட்டது. அதற்கு அரசு அளித்த  விளக்கமும், அதில் அடக்கம்.

    ‘உகந்த நேரத்தில் சேவை, உத்தமமான அணுகுமுறை, சிக்கனம்’ ஆகியவற்றை இந்த திட்டம் கடைப்பிடிக்காததை ஆவணங்களுடன் நிரூபித்துச் சுட்டிக்காட்டிய அந்த அறிக்கை, சென்னை மாநகராட்சிதான் வாங்கிய சப்பாத்தி மிஷின்களின் தரக்குறைவைத் தனது டெக்னிகல் கமிட்டி ஆய்வுசெய்து அறிந்து கொண்டபின்னும், ஒப்பந்தக்காரருக்குக் கொடுத்த ரூ1.33 கோடியை இழந்துவிட்டதையும், மே 2015இல் கொடுத்த நோட்டீஸுக்குப் பின், யாதொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றது. சில இடங்களில் மலிவு விலையில், சுத்தமான உணவும் கொடுக்கப்படுவதை எடுத்துரைத்த அந்த அறிக்கை, சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி மாநகராட்சிகளும், ஒன்பது முனிசிபாலிட்டிகளும் தக்கதொரு ஆய்வு செய்யாமல் அம்மா காண்டீன்கள் திறந்த வகையில் ஏற்பட்ட நஷ்டங்களைப் பட்டியலிட்டது. கோதுமை மாவு டி.யூ.சி.எஸ் மூலம் வாங்கியதில் அதிகச் செலவு ரூபாய். 30.85 லக்ஷம் என்றும், மற்றவகையில் அதிகச் செலவு ரூபாய் 2.78 கோடி என்பதையும் சுட்டியுள்ளது.

    ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்பதைத் தவிர, முனிசிபாலிட்டிகளும், மாநகராட்சிகளும் பற்றாக்குறையை ஈடு செய்யத் தவித்தன.

    அந்த அறிக்கையில் இவை சமூக நலப்பணி; வணிகம் அல்ல என்ற அரசின் பதில் அடக்கம். ஆனால், ஆடிட் ரிப்போர்ட்டில் அந்தக் கேள்வி எழவில்லை. அநாவசியச் செலவும், பற்றாக்குறையும்தான் அதில் சுட்டிக்காட்டப்பட்டது.

    உதவி:

    TIMES OF INDIA
    Mismanagement of Amma canteens cost Tamil Nadu Rs. 5.69 crore: CAG
    TNN | Sep 3, 2016, 02.16 AM IS

    ***

    சித்திரத்துக்கு நன்றி:
    http://www.thehindubusinessline.com/multimedia/dynamic/01193/CAG_-_LOGO_jpg_1193235e.jpg

    ******
     

    Share