-இன்னம்பூரான்
18 09 2016

innamburan

சமுதாயத்தையே பல நூற்றாண்டுகளாகப் பாமரனைப் பற்றிய மறதி நோய் பரவலாக ஆட்கொண்டிருப்பதைக் கண்டு வருந்தினோம். பகிர்வார்கள் தென்படாததால், நேற்றைய பாமரனின் கீர்த்தியைப் பாடாவிடின், இன்றே அவரை மறந்துவிடுவார்கள் என்பது திண்ணம். அதனால்தான் அவசரம், பொறுமையின்மை. சமுதாய அக்கறையின்மையைப் பொறுத்தார் பூமி ஆளலாம்; தரிசு பூமியை. ஆனால், அவர்களால் தரணி ஆள முடியாது.

உங்களுக்கு மாரியப்பனை தெரியுமோ? தெரிந்திருக்காது. தற்பொழுது பாழடைந்த மண்டபத்தின் தூண்கூட, ‘அவன் இங்கு தான் இளைப்பாறினான்; ஒரு கல்வெட்டு பதிக்க, ஒரு கோடி ரூபாய் கொடுங்கள்.‘என்று அறை கூவும். நம்ம நோபெல் பரிசு வெங்கட்ராமனுக்குக் கூட (தற்காலம் அவர் தான் உலகப்புகழ் இங்கிலாந்து ராயல் சொஸைடி தலைவர்)  இப்படித்தான் ஆச்சு. அவன் சூடிகையான பையன். படிக்காமலே மார்க் வாங்குவான். அவனுக்கு நாலு வகுப்பிலும் நான்தான் வாத்தி. அன்றே நோஸ்ட்ரடமாஸ் மாதிரி, இவன் நோபெல் பரிசு வாங்குவான் என்று என் பெண்டாட்டியிடம் சொன்னேன். நீங்கள் எப்டி அப்டி சொன்னேள் என்று மூக்கிலே விரலை வைக்கிறாள் என்றெல்லாம் ‘புரட்டுக்கதை’ கட்டிய பேராசிரியர்கள் பலர். வெங்கட், பாவம், நான் அந்த ஊர்ப்பக்கமெல்லாம் தலை என்ன? உள்ளங்கால் கூட வைக்கவில்லை என்று அங்கலாய்த்துக்கொண்டார். அவர் தருமமிகு சென்னயின் ம்யூஸிக் சபாவுக்கு அநாமதேயமாக க்யூவில் நின்றதை கண்ட ஹிந்து ரவி அவரை முன்வரிசைக்கு அழைத்து வருவதற்குள் அவருடைய தாத்தாவின் ‘பால்ய சினேகிதர்கள்’ ‘பிலுபிலு’ என்று மொய்த்து விட்டார்களாம். அந்த மாதிரிதான் மாரியப்பன் கதையும்னேன்.

ஆம். மாற்றுத் திறனாளியான மாரியப்பன் ரியோ ஒலிம்பிக்ஸ் பந்தயத்தில் T 42 High Jump at Paralympics உயரக் குதிக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று, அழியாப் புகழும், கோடிக்கணக்கான ரூபாய் பரிசுகளும் பெற்ற பெரியவடுகம்பட்டி பாமர இளைஞர். வயது 21.  அவர் வாகை சூடியதைப் போற்றும்போது கவனிக்க வேண்டிய விஷயம், அவருக்கு சான்ஸே இல்லை என்பதுதான். வாழ்நாள் முழுதும் எதிர்நீச்சல் தான். அவன் பள்ளிப்படிப்பின் போதே, தாங்கமுடியாத கடன்சுமை, சகோதரியின் திருமணம் பொருட்டு. தந்தை தங்கவேலு, இவர் மழலையாக இருக்கும்போதே, விலகி, கண் காணாத இடத்துக்குப் போய்விட்டார். இப்போது வந்து நிற்கிறார். நற்றாய் சரோஜா செங்கல் சூளையில் கடுமையாக உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றினார். சகோதரி சுதாவோ ஒரு தியாகி. தன் படிப்பை நிறுத்தி விட்டுத் தன் உடன்பிறப்புகளைக் கவனித்துக்கொண்டார். ஐந்து வயதில், ஒரு பஸ் ஏறிய விபத்தில் இவருக்கு காலில் நல்ல அடி. நிரந்தர ஊனம். 15 வருடம் கழிந்த பின்னும், அந்த வழக்கு ‘ஜிவ்’வுன்னு இழுத்துக்கொண்டே போகிறதாம்! எனினும் எல்லா விளையாட்டுக்களிலும் பங்கு எடுத்து வந்தார். ஆனால், சகபாடிகளின் கொடுமை தாங்காமல் தனித்துச் சிறப்புத்தரக்கூடிய ஹை ஜம்ப் மட்டுமே நாடி,அதைப்பயின்றார். அந்தத் திருப்புமுனைக்கு வித்திட்டது அவர் ஏழாம் வகுப்பு படிக்கும்போது உடல்நல ஆசிரியர் எஸ்.ராஜேந்திரன். பல இன்னல்களைக் கடந்து, ஏற்கனவே லண்டன் பாரா ஒலிம்பிக்ஸ் 2012இல் பங்கேற்கத் தேர்ந்தெடுத்த பின்னர், நிதி நெருக்கடியால், இவருக்கு லண்டன் போக முடியவில்லை. அடுத்த வருடம் போக ஆர்வத்துடன் இருக்கிறார். தமிழ்நாட்டு முதல்வர் ரூபாய் இரண்டு கோடியும், மத்திய விளையாட்டு அமைச்சரகம் ரூபாய் 75 லக்ஷமும் இவருக்குப் பரிசாக கொடுத்தனர். கார்களும், மோட்டார் சைகிள்களும், துட்டும், ஓடி வந்த வண்ணம்.

நம்ம மாரியப்பன் தன்னடக்கத்துடன், ஏமாற்றுவித்தைக்காரர்கள் கையில் சிக்காமல், நிறைவு வாழ்க்கை வாழ்ந்து, பல வெற்றிகள் அடைந்து நம் நாட்டுக்குப் பெருமை சேர்ப்பாராக.

-#-

சித்திரத்துக்கு நன்றி:

http://ichef.bbci.co.uk/news/ws/660/amz/worldservice/live/assets/images/2016/09/10/160910014033_rio_paralympics_mariyappan_thangavelu__624x415_afp.jpg

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *