நிர்மலா ராகவன்

காதலாவது, கத்தரிக்காயாவது!

%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-1-2-1

தந்தையை இழந்திருந்த கமலியின் தாய் `அன்பு’ என்பதையே அறியாது, யார் வீட்டிலோ வளர்ந்திருந்தாள். அவள் வளர்ந்த விதத்திலேயே மகளையும் வளர்த்தாள். நான்கு மாதக் குழந்தையையே அடித்து நொறுக்குவாள்.

பள்ளிக்கூடத்துக்குச் சென்று வந்தாலும், பத்து வயதில்கூட கமலிக்கு எழுதப் படிக்க வரவில்லை. யார் எது பேசினாலும், முதுகில் அடி வைத்தால்தான் அவளுக்குப் புரியும் என்ற நிலை வந்தவுடன்தான் விழித்துக்கொண்டார் அவளுடைய தந்தை. விடுமுறை நாட்களில் எங்கள் வீட்டில் கொண்டு விட்டுவிட்டுப் போய்விடுவார். தன் பொருளாதார முன்னேற்றத்தையே பெரிதாக நினைத்துக் கொண்டிருந்தவருக்கு குழந்தைகள் எப்படி வளர்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்தத் தோன்றவில்லை.

நான் சாதாரணமாகப் பேசினாலே நடுங்கினாள் அச்சிறுமி. சற்றே பெரியவளாக இருந்த என் மகள் பொறுப்பில் அவளை விட்டுவிட்டு தான் ஒதுங்கிக்கொண்டேன். மணிக்கணக்காக ஒரே இடத்தில் உட்கார்ந்து சமையலுக்கு உதவியாக இருப்பாளா, ஒரு சிறு பெண்! (நாங்களெல்லாம் அந்த வயதில் எப்படியெல்லாம் தப்பித்து ஓடப்பார்த்தோம்!) அவளைப் பார்த்துப் பரிதாபப்படத்தான் முடிந்தது என்னால்.

அந்தக் கமலி காதல் கல்யாணம் புரிந்துகொண்டாள் — பதினெட்டு வயதிலேயே. உயரமாக, மூக்கும் முழியுமாக, சிவந்த நிறம் கொண்டவள் அவள். காதலனுடன் அதிகம் பழகியதில்லை. ஆனால், தாயின் சுடுசொற்களும், அடியும் மட்டுமே சிறுவயதிலிருந்து அறிந்திருந்தவளுக்கு இளைஞன் ஒருவன் தன்னை விரும்புகிறான் என்பதே பேரின்பத்திற்கு ஆளாக்கியது.

கமலியின் தந்தை அந்தஸ்தில் அவனைவிட சற்று உயர்ந்தவர். `என் குழந்தைகளுக்கு எல்லாவிதத்திலும் சுதந்திரம் கொடுத்திருக்கிறேன்!’ என்று பெருமைப்பட்டுக் கொண்டவருக்கு, மகள் தானே ஒரு துணையைத் தேடிக்கொண்டதில் நிம்மதிதான்.
`இவளை மணந்தால், என் நிலையும் உயர்ந்துவிடும்!’ என்று திட்டம் போட்டிருந்தான் தினகரன். அது நடக்கவில்லை. மகளையே கவனிக்காதவர் மருமகனையா முன்னுக்குக் கொண்டுவரப்போகிறார்!

`ஏமாந்து விட்டோமே!’ என்ற வன்முறையில் இறங்கினான்.

`ஏனோ என்னைப் பார்த்தால், எல்லாருக்கும் அடிக்கத்தான் தோன்றுகிறது!’ என்று வாய்திறவாமல் எல்லா அடி, உதையையும் பொறுத்துப்போனாள் கமலி.

இரண்டு குழந்தைகளைப் பெற்றபின், அதற்கு மேலும் பொறுக்க முடியாது, அப்பாவை நாடிப்போனாள் கமலி. அவர் அதிர்ந்தார். `விவாகரத்து!’ என்றார். கமலி ஒப்பவில்லை. திரும்பவும் அம்மாவிடம் வந்து இடிபட வேண்டுமா!

மனைவியை வதைக்கும் பொதுவான கணவர்களைப்போல், தினகரன் அவளைத் தேடி வந்தான். தன் தவற்றுக்கு வருந்தி அழுதான். மனமிளகி, அவனுடன் திரும்பப் போனாள் கமலி.

அவனுடைய மனமாற்றமும், அன்பும் சொற்ப தினங்களே நீடித்தன. மீண்டும் அடிதான் — இம்முறை சற்று மோசமாகவே. `என்னைவிட்டுப் போகும் அளவுக்கு உனக்குத் துணிச்சலா?’ என்று கத்தினான். சில தினங்கள் பொறுத்துப் பார்த்துவிட்டு, மீண்டும் தாய் வீட்டுக்குப் போனாள் கமலி.

அம்முறை என்னிடம் அவளை அழைத்து வந்தார் அவளுடைய தந்தை.

“Can’t you live without a man? (உன்னால ஒரு ஆண் துணை இல்லாம வாழ முடியாது?)” என்று அவளைக் கேட்டேன், எரிச்சலுடன். அவளுடைய குழந்தைகளும் உணர்வுபூர்வமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பதையும் பார்த்திருந்தேன்.

“முடியும்?” என்றாள், சவால் விடுவதுபோல். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே கணவனை நாடிப்போனாள். தந்தையோ இடிந்துபோனார்.

சராசரி ஐந்து முறை இம்மாதிரி நடக்கும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். திடீரென கிடைக்கும் சுதந்திரமான வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்று பெண்களுக்கு உண்டாகும் கலக்கமே காரணம். உடலிச்சையை எப்படி சமாளிப்பது என்ற குழப்பமும் ஒரு மனைவி தன்னை வதைக்கும் கணவனுடன் சேர்ந்து வாழ்ந்து, அனுதினமும் செத்துப் பிழைக்க காரணமாக அமைகிறது. (பல காலம் பொறுத்திருந்து விவாகரத்து பெற்ற ஒரு பெண்மணி என்னைத் தேடிப்பிடித்து அழைத்துத் தெரிவித்தது).

ஒருவாறாக, விவாகரத்துக்குச் சம்மதித்தாள் கமலி. `அவன் குழந்தைகள் எனக்கு வேண்டாம்!’ என்றுவிட்டாள்.

இப்போது, தனியாக ஓரிடத்தில் தங்கிக்கொண்டு, வாடகைக்கார் ஓட்டும் தொழில் செய்கிறாள். ஒருவழியாகக் கிடைத்த சுதந்திரத்தை அனுபவிக்கிறாள். அவள்கீழ் சில ஆண்கள் வேலை செய்கிறார்கள். பேச்சுத்திறனில் கெட்டிக்காரியாகிவிட்டாள். `காதலாவது, கத்தரிக்காயாவது! அதெல்லாம் சினிமாவுக்குத்தான் சரிப்படும்!’ என்ற மனப்போக்கு ஏற்பட்டுவிட்டது.

உண்மைதான். தன்னைவிட உயர்ந்த நிலையில் இருக்கிற ஒரு பெண்ணை `காதல்’ என்ற பெயரில் மயக்கி மணந்துகொண்டு, அதன்பிறகு இருவரும் ஒருவரையொருவர் வெறுக்கும் நிலைக்குப் போய்விட்டால், அது எப்படி காதலாகும்?

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *