கிரேசி மோகன்

——————————————–
வனமென்ற நங்கை வசந்தனுடன் சேர்ந்த
கணத்தில் பலாசக் கிளையில் -மினுமினுத்த
கூன்பிறை மொட்டுக்கள் கீறும் நகமாக
காண்பது காளிதாசன் கண்….(152)

மஞ்சாடி பூக்களவள் செஞ்சாந்து, சுற்றிவரும்
அஞ்சாத வண்டுகள் ஆங்கேபொட்(டு) -அஞ்சனம்
மாந்தளிர் வாயதரம் மேவிய செந்நிறத்தால்
காய்ந்த மதுஸ்ரீ கதிர்….(153)

பருவருது கண்டு முரளமர பூக்கள்
விரவுமது கண்ணிலே வீழ்ந்தும்-திரளும்
இலையுதிர் காற்றுக் கெதிராக ஓடும்
கலைமான்கள் கொள்ளும் களிப்பு….(154)

தீந்தமிழ்க்(கு) ஈடாக ஆண்குயில் கூவுதல்
மாந்தளிர் உண்டதால் மட்டுமன்று -தான்திமிர்
பூரிப்பும் கர்வமும் பெற்றவளை மாற்றிட
கோரிக்கை காமன் குரல்….(155)

குளிர்பனி சென்றதால் கிம்புருடப் பெண்கள்
தளிரிதழ் தூயவெண் தேகம் -ஒளிர
நுதற்பொட்டில் கன்னக் கதுப்பு வரியில்
வெதுவெதுப்பாய் வெய்யிலின் வேர்வு….(156)

அகால வசந்தத்தால் அவ்வனம் உற்ற
தகாத வனப்பால் திகைத்து -எகாலமும்
உண்மையில் வாழ்வோர் உறுதி குலைந்திடும்
தன்மையை மாற்றத் தவிப்பு….(157)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.