ஐ ஏ எஸ் தேர்வு உறுதி: 1
திரு. இன்னம்பூரான் அவர்கள் ஓய்வு பெற்ற அரசு வருவாய்த்துறை அதிகாரி. இவர் ஐ.ஏ.எஸ் சேர விரும்பாமல் சேர்ந்தவராயினும், தம்முடைய 22ஆம் வயதில், முதல் முறையே ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஓய்வு பெற்ற பின் இறுதிச் சுற்றில் ஐ.ஏ.எஸ் மாணவர்களை நேர்காணல் செய்து தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் குழுக்களில் பணியாற்றியுள்ளார். அழகப்பா பல்கலைகழகத்திலும், சென்னை திறந்த வெளி பல்கலைகழகத்திலும் இணை வேந்தர்கள் மூலம் அறிமுகம் செய்துள்ளார். லெக்ஸிஸ்-நெக்ஸிஸ் என்ற உலகப்புகழ் பெற்ற பதிப்பகம் இவரை அணுகி, அவர்கள் இதற்காக எழுதிய உரூ.40 ஆயிரம் பெறுமானமுள்ள நூல்களையும் மனமுவந்து அளித்துள்ளனர். ஐ.ஏ.எஸ். மாணவர்கள் அறிந்து கொள்ளவேண்டிய முக்கியமான தகவல்கள் குறித்த ஒரு கையேடையும் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் திரு இன்னம்பூரான் அவர்களின் இத்தொடர் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமையும் என்று நம்புவோம்.
ஆசிரியர்
ஐ ஏ எஸ் தேர்வு உறுதி: 1
இன்னம்பூரான்
தைப்பொங்கல் தினம் ஒரு நுழைவாயில் என்க. வாழ்வியலின் நுழைவாயிலில் ஆவலுடன் நிற்பவர்கள் பள்ளி இறுதி வகுப்பு மாணவ மாணவிகள். அவரவரது வாழ்க்கை எவ்வாறு அமையும் என்பது ஒரு புதிராக இருக்கும் . அந்தப் பருவத்தில், மனதை ஆட்கொள்வது குழப்பம். பெண் குழந்தைகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா திகைப்பையும், இனம் தெரியாத அச்சத்தையும் தருகிறது. தோளுக்கு மிஞ்சிய தனயன், அரும்பு மீசையை கண்ணாடியில் பார்த்து, பார்த்து வியந்து போகிறான். ஆம். வயதுக்கு வரும்போது இருபாலாருக்கும் கலவரம் மிகுந்து வரும். உடல் வலிமையும் மனப்பாங்கும் புத்துணர்ச்சி பெறுவதால், ஆடல், பாடல், உடற்பயிற்சி, விளையாட்டு ஆகியவை மீது அதீத ஆர்வம் வரலாம். பாலியல் பற்றி கசமுசா தான். புரியாத மர்மாகிய அது சதா சர்வகாலமும் மனதை விட்டு அகலாது. படிப்பு வேம்பாக கசக்கலாம்.
அநேக பெற்றோர்களுக்கு இந்த மென்மையான சூழ்நிலையில், தான் அனுபவித்து வெளியேறிய உணர்வுகளை மறக்காமல், உரிய ஆலோசனையை, திறந்த மனதுடன், வழங்கும் திறன் இருப்பது கூட இல்லை. பொறுமையும் இருப்பதில்லை. ஆடிப்பாடி கறக்கவேண்டிய மாட்டை வசை பாடி, அடித்து, உதைத்துக் கறக்கப் பார்ப்பார்கள். பெரும்பாலும் விளைவு விபரீதமாக அமையும். கட்டாயப்படுத்தி பெண்ணை திருமணம் செய்து கொடுப்பார்கள். அவள் நடத்தும் இல்லறம் பாடாவதியாக அமையக்கூடும். தற்காலம், அசட்டுக்காதல் வயப்பட்டு பெண்கள் ஏமாற்றப்படுவதையும் காண்கிறோம். பையன் ஓடிப்போய் கெட்ட சகவாசம் செய்து கொள்ளலாம். அல்லது வீட்டிலேயே சப்பாணியாக அடைந்து கிடக்கலாம், ஒன்றுக்கும் உருப்படாமல்.
பள்ளிகளில் பலரை கட்டி மேய்க்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு ஒவ்வொருவரின் வளர்ச்சி மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்த முடிவதில்லை. எனக்குத் தெரிந்த சில தலைமை ஆசிரியர்கள் (திருவாளர்கள் குருவில்லா ஜேக்கப், சாரநாதன், கிருஷ்ணமூர்த்தி, பாஃதர் எர்ராட், டி.எஸ்.சர்மா போன்றோர்) உருவாக்கியவர்கள் உலகெங்கும் புகழ் எய்தினர். நான் படித்த கல்லூரியில் ஒரு வகுப்பில் 23 மாணவர்கள். அவர்களில் ஒருவர் தனியார் துறையில் பிரபலமான நிர்வாகி; செல்வந்தர்; எட்டு பேர்கள் அரசு ஐ.ஏ. ஏ. எஸ். வகையறா உயர்பதவி; நான்கு வழக்கறிஞர்கள், ஒரு கல்வி தந்தை. மற்றவர்களும் நல்ல பொறுப்பான உத்யோகம். தற்காலம் கல்வி நிலையங்களை வழி நடத்துபவர்கள் மாணவர்கள் மீது எங்களுக்குக் கிடைத்தமாதிரி அக்கறை எடுத்துக்கொள்வதில்லை என்பது நிதர்சனம். எனவே, மாணவ கண்மணிகளை கவனத்துடன் வழி நடத்த இவர்களுக்கு நேரம் போதாது; அக்கறையில்லை; திறனும் இல்லை. இது பெரும்பாலும் நிலவும் நிலை என்று கூறப்படுகிறது. விலக்குகள் இருக்கலாம். சில மாதங்கள் முன் ஒரு குக்கிராமத்தில் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கடமை ஆற்றியதை கண்டு களித்தேன். அது போதாது.
ஒன்பதாவது வகுப்பு முதல் மாணாக்கர்கள் மீது தனிப்பட்ட கவனத்துடன், அனுபவம் வாய்ந்தவர்கள் நல்லெண்ணத்துடன் பழகி வந்தாலே போதும். அவர்களின் நுழைவாயில் திறன் பன்மடங்கு பெருகும். அவர்கள் தாங்கள் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொண்டாலே போதும். சூட்டிகையான மாணவ மாணவிகள் அனுபவப்பாடங்களை அமல் படுத்தக் கற்றுக்கொள்வார்கள். திருநின்றவூர் என்றொரு வைணவ தலம். தாயாரின் பெயர், ‘என்னைப் பெற்ற அம்மா’. கருணைக்கடல். அவரைப் போன்ற சான்றோர்கள் சிலர் என்னைக் கட்டிக் காப்பாற்றி, காபந்து பண்ணி, வாழ்க்கைப்பாடங்கள் சொல்லிக்கொடுத்து, நற்பண்புகளைக் கூட்டி, தீயவையை விலக்கியதால் தான், என்னால் இந்த கட்டுரை வரைய முடிகிறது. அவர்களில் முக்கியமானவர், மேன்யுவல் தாமஸ் பைக்கடை என்ற கேரளத்து வழக்கறிஞர். பள்ளி மாணவனாக நான் இருந்த போது எங்கிருந்தோ வந்த இந்த ரோமன் கத்தோலிக்கர் எனக்கு வழித்துணையாக அமைந்தார். ஆங்கிலத்தில் அதை mentor என்பார்கள். அவரை ஆலமரமாக பாவித்தால், நான் ஒரு விழுது. இன்றைய ஆலமரமாக துளிர்க்கும் அன்றைய விழுது. இது நிற்க.
வல்லமை ஒரு ஆக்கப்பூர்வமாக பயணிக்கும் மின் இதழ். இலவசமாகக் கிடைக்கிறது. மாணவர்களுக்கு வல்லமை இதழ் பயன் தருவதாக அமையவேண்டும் என்பது என் அவா. அதன் ஒவ்வொரு இதழும் மாணவ மாணவிகளை காந்தம் போல் பற்றி, இழுத்து வந்து, அவர்களின் விழிப்புணர்ச்சியை தட்டி எழுப்பி, அவர்களின் ஆர்வத்தைக் கூட்டி, படிப்படியாக அவர்களின் திறனை மேன்மை படுத்தி, ஐ ஏ எஸ் தேர்வு போன்ற சவால்களை திறம்படக் கையாண்டு, இந்த அரசியல் நிர்வாகத்தில், தகுதியின் அடிப்படையில் இடம் பிடித்து கோலோச்சவேண்டும் என்பது என் அவா. அதன் பொருட்டு வல்லமையின் வாயிலாக நமது மாணவ சமுதாயத்தை, ‘ஐ ஏ எஸ் தேர்வு உறுதி’ என்ற இந்த கட்டுரைத்தொடர் மூலம் வரவேற்கிறேன். படித்து வினா விடைகள் எழுப்பி, கருத்துக்கள் அளித்து, மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரிய பெருமக்களும் கலந்து கொண்டால் தான், இந்த பணி பரிமளிக்கும். அத்தருணம், இந்த தொடர் ஐ ஏ எஸ் தேர்வில் மூன்று படி நிலைகளிலும் பங்கேற்று வெற்றிகாண வேண்டும் என்று விரும்பும் மாணவ மானவிகளுக்கு மட்டும் படைக்கப்பட்டிருக்கிறது, அவர்களுக்கு mentor ஆக தொண்டு செய்வது என் இலக்கு. மாணவ சமுதாயத்துக்கு இந்த செய்தியை சேர்ப்பது வல்லமை இதழின் பணி. ஒரு கட்டத்துக்கு மேல், இதை ஒரு வினா-விடை தொடராக அமைத்து, இதில் பங்கு பெறும் மாணவ மாணவிகளுக்கு எழுத்து மூலமாகவும், விழியம் மூலமாகவும், பள்ளி/கல்லூரி அமர்வுகளில் நேரில் சந்தித்து ‘ஐ ஏ எஸ் தேர்வு உறுதி’ என்பதை விளக்கி, அவர்களை ஈடுபடுத்தி வெற்றி காண வைப்பது தான் இந்த தொடரின் பின்னனி.
இன்றைய பாடங்கள்:
ஒன்பதாவது வகுப்பு படிக்கும் போது, நாட்தோறும் இதற்காக அரை மணி செலவழித்தால் போதும். வெற்றி உறுதி. பின்னர் உழைத்து பலன் பெறலாம்.
பெண்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் நுழைவு கட்டணம் கிடையாது. மற்றவர்களுக்கு சொற்பம்.
கல்லூரி நுழையும் வரை படித்ததே கை கொடுக்கும். அதனால், எதை படிக்க வேண்டாம் என்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும் அதற்கு mentorship உதவும்.
தமிழ் ஒரு பேப்பர். அதை எடுத்துக்கொண்டால், நிறைய மதிப்பெண் வாங்க உதவும். மிகவும் எளிய பாடங்கள்.
அன்றன்று சிறிதளவு ஆங்கிலம் கற்றுக்கொள்வது விவேகம். சுலபமான வழிகள் உளன.
இந்த வழிப்பயணத்தில் பங்கு கொள்ளும் சிலர் ஐ ஏ எஸ் தேர்வு நாடாவிடினும், இது வாழ்வியலுக்கு உதவும்.
இந்த தொடரின் அணுகுமுறை, மற்ற ஐ ஏ எஸ் பள்ளிகள் நடத்துவதிலிருந்து முற்றும் வேறுபட்டது.
ஐ ஏ எஸ் தேர்வில் பங்கு கொள்ள விருப்பம் உள்ளவர்கள் எழுப்பும் வினாக்களுக்கு அடுத்த பதிவில் விடை அளிக்கப்படும்.
கருத்துகள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. இது ஒருவர் mentor ஆக பணி புரிவதால், திசை மாற்றம் வேண்டாம் என்று வேண்டுகோள்.
வல்லமை இதழ் மூலம் நடத்தப்படும் இப்பணி இலவசம்.
-#-
சித்திரத்துக்கு நன்றி:
http://comps.canstockphoto.com/can-stock-photo_csp3914014.jpg