தணிக்கையும் நிர்வாகமும் – 2
-இன்னம்பூரான்
செப்டம்பர் 6, 2016

சிறுதுளி பெருவெள்ளம். சில்லறையை நடுத்தெருவில் இறைக்காமல் இருந்தால் தான் நாட்டின் செல்வக்களஞ்சியத்தை பாதுகாக்கமுடியும். தணிக்கைத்துறைக்கு இதையெல்லாம் கண்காணிக்கும் பணியை அரசியல் சாஸனம் அளித்திருந்தாலும், குறுக்குச்சால் ஓட்டித் தணிக்கையென்ற கண்கொத்திப் பாம்பிடமிருந்து ஒதுங்கி, ஓரத்தில் ஆட்டம் போடத்தான் ஆயுள் காப்பீட்டு கழகம், இந்தத் தளையிலிருந்து அக்காலத்து நிதியமைச்சர் திரு. சீ.டி. தேஷ்முக் அவர்களால் விடுவிக்கப்பட்டது. இந்தியாவின் ஆடிட்டெர் ஜெனெரலுக்குப் பாராளுமன்றத்தில் பேச உரிமை உண்டு. அதைப் பயன்படுத்தி அக்காலத்து ஆடிட்டர் ஜெனெரல் திரு. ஏ.கே.சந்தா அவர்கள், அந்த உரிமையைப் பயன்படுத்தி, இந்தத் தளை அவிழ்க்கும் சதியை எதிர்த்தார். ஆனால், அரசியல் அவரது பேச்சை மதிக்கவில்லை; பலன்: முந்தரா ஊழல். நிதி அமைச்சரே ராஜிநாமா செய்ய நேர்ந்தது.
வங்கிகளைத் தேசியமயம் ஆக்கியபோது, அதே நிலைப்பாடு நிலவியது. வங்கிகளைத் தணிக்கை செய்யும் திறன் வேறு. நாங்களே பார்த்துக்கொள்கிறோம் என்று அவர்கள் கூப்பாடு போட, அதற்கு ரிசர்வ் வங்கித் தாளம் போட, அதுவும் நிதியமைச்சரகத்துக்குச் சாதகமாக போக, இன்று தலைதூக்கி நிற்பது மல்லையா ஊழல். வாராக்கடன்களுக்கு உறைவிடம் தேசியவங்கிகள் என்பது உறுதியாச்சு.
இது வரை, கடந்த ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசு, இந்த வாராக்கடன் தேசியவங்கிகளுக்கு வள்ளலாக இயங்கி, கொடுத்த வரிப்பணம் 85,000 கோடி. கடையிலிருக்கும் தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு அல்ல, ஆழ்கிணற்றில் ‘தொப்’ என்று போட்டார்களாம். அதற்கு கேள்வி முறையில்லையாம்!
மேலும் 70,000 கோடி கொடை அளிக்கப்போகிறார்கள். அரசே ஆடிட்டர் ஜெனெரல் இதையெல்லாம் தணிக்கை செய்யவேண்டும் என்று உதட்டளவிலாவது சொல்கிறார்கள். அவரும் அதற்கான திட்டங்களை வகுத்து வருகிறார். 2017ஆம் வருடம் இந்த ஆடிட் ரிப்போர்ட் வரக்கூடும். சில வயிறுகள், இப்போதே கலங்குகின்றன.
-#-
படித்தது: Business Line: September 4, 2016.
***
சித்திரத்துக்கு நன்றி:
https://stevejbicknell.files.wordpress.com/2013/10/fotolia_49497806_xs-worried-man.jpg?w=474