-இன்னம்பூரான்
15 03 2017

 

padavakini

உங்களுக்கு ‘சிவமயம்’ வில்வநாதக் குருக்களை தெரிந்திருக்க நியாயமில்லை. அந்தக் காலத்தில், துக்ளக்கின் ‘எங்கே பிராமணன்?’ என்ற சர்ச்சைக்குரிய நூல் வெளியாகி விடவில்லை என்றாலும், குருக்கள் மாமாவை பார்த்தால் போதும்; எல்லாம் விளங்கிவிடும். பஞ்சகச்சம் பரமானந்தம் என்று, பட்டை வீபூதியை பரம ஒளஷதமாக அணிந்து, தங்கப்பூண் போட்ட ருத்ராக்ஷமாலை மார்பில் துலங்க, திண்ணையில் உட்கார்ந்து விட்டாரென்றால், ஊர் முழுதும் ‘டுங்க்ருங்சரணே’ பீதி பரவும். அவரோ சுகஜீவி.

பத்தமடை, சேர்மாதேவி, வீரவநல்லூர் மாதிரியான போன்ற தலங்களில், ஆலயங்கள், வழிபாடுகள், குருக்கள் வாழ்நெறி ஆகியவை நிறைந்திருக்கும். வானமாமலை, ஶ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி ஆகிய வைணவத் தலங்களுக்கு சென்றால், மாட்டு வண்டிக்காரன் கூட நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடிக்கொண்டே வண்டி ஓட்டுவான். மாடும் தலையாட்டிக்கொண்டே செல்லும். தார்க்கோல் போடவேண்டிய அவசியமில்லை. அருகே உள்ள நாசரேத் என்ற ஊரில் ஏசு கிருஸ்து பிரார்த்தனையும், ஆங்காங்கே அமைந்துள்ள மசூதிகளின் அதிகாலை உரத்த குரல் அரபித் தொழுகையும் தடைபடாது. 1647இல் கட்டப்பட்ட பொட்டல் புதூர் தர்காவில் இந்துக்களின் சாயலை ஒத்த வழிபாடு. கந்தூரி திருவிழாவில் எல்லா மதத்தினரும் கலந்து கொள்வார்கள். இனபேதம், மதபேதம், பேதபேதம் எல்லாம் உண்டு; ஆனால், இல்லை. அப்படி ஒருவிதமான இணக்கமான வாழ்க்கைப்படகு. தற்காலம்போல் வெறித்தனம் கிடையாது. நாத்திகம் பேசிக்கொண்டே நேர்த்திக்கடன் செய்வது கிடையாது. வரட்டு சம்பிரதாயம் கிடையாது. எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போகிறேன். இது என்ன திருநெல்வேலி ஜில்லா சொக்கிப்பீடியாவா என்ன? இது நிற்க.

குருக்களோட அப்பாவோட கீர்த்திதான் வம்சத்துக்கே கவசமாக இருந்தது. சிவாசாரியார் ‘மங்களம் மாமா’ ( அவர் ரொம்பப் பெரியவர்; பெயர் தெரியாது.) அற்புதமா, மனப்பூர்வமாக அர்ச்சனை செய்வார். சாயரக்ஷை அவருடைய பிரவசனத்துக்கு, வண்டிக்கட்டிண்டு கல்லிடைக்குறிச்சி பெரிய பண்ணை வருவார். ஆனால், ஏகபுத்திரன் ஆன ‘வில்லுவை’ சம்ரக்ஷணை செய்ய அவருக்கு நேரம் இல்லை. ஆகவே ‘வில்லு’ எனப்படும் வில்வநாதக் குருக்கள் ஒரு நிரக்ஷரகுக்ஷி. ஆனால் அதிகம் படித்த மேதாவி என்று மிதப்பு காலாகாலத்தில் கல்யாணம் பண்ணி வைங்கோ என்று ஊருக்கு உபதேசி வைத்தியோட அட்வைஸ். சங்கீத மேளகர்த்தா ஸ்ரீ சேர்மாதேவி சுப்ரமண்ய சாஸ்திரிகள் வம்சத்தில் வந்த குந்தளாம்பிகை தான் ‘வில்லுக்கு’ வந்து வாய்த்தாள். வாய்த்துடுக்கு.  மாமி போனபிறகு தனித்து விடப்பட்ட முதியவர் மங்களம் மாமாவை உதாசீனம் பண்ணி, அவரை ‘உண்டு இல்லை’ என்று செய்துவிட்டாள். அவரும், ஏற்கனவே சாந்தஸ்வரூபி, விட்டேற்றியாக, கோவிலே கதி என்று இருந்துவிட்டார்.

சுகஜீவி ‘வில்லும்’ ‘பளார்! பளார்’ குந்தளாவும் நடத்திய இல்லறத்தில் புழு, பூச்சி ஒன்றும் வரவில்லையே என்று இருவரும் அங்கலாய்த்தாலும், காலாகாலத்தில் நான்கு பிள்ளைகள் பிறந்தன. காலம் நிற்கிறதா என்ன? வயதாக ஆக, ‘வில்லுக்கு’ பிடிவாதம் ஏறியது. குந்தளாம்பிகையின் கொம்மாளம் எல்லை மீறிப்போயிற்று. வேலை வெட்டி இல்லாமல் இருந்த ‘ஜபர்தஸ்து’ மணிக்கு (தலைமகன்) அத்தை பெண் மீனாக்ஷியை கல்யாணம் செய்து வைத்தது, ‘வில்லுக்கு’ அவ்வளவாக சம்மதம் இல்லை. ஆனால் குடும்பநிலை அப்படி. இரண்டு பக்கமும் நல்ல பணம். அது பிரியக்கூடாது என்பது குந்தளாவின் அரசியல் சாஸனம். ஆச்சுப்போச்சு கல்யாணம் என்றாலும் பத்து வருஷம் ஆனபிறகும் குஞ்சும் கிடையாது; குளுவானும் கிடையாது; ஹோப்பும் கிடையாது. பழி வாங்கிறதற்கு அகப்பட்டுக்கொண்டாள், இரண்டாவது மாட்டுப்பெண், சுந்தரி. நல்ல இடம். இரண்டாவது பிள்ளை மாதவன் தான் வீட்டுக்குத் தூண். நல்ல உத்யோகம். கைநிறைய சம்பளம். கொடுக்கிற மனசு.

சுந்தரியும் நல்ல குடும்பத்திலிருந்து வந்தவள்தான். அப்பா சுந்தரராமன், வீரவநல்லூரில் நல்ல பெயர் வாங்கின கவர்ன்மெண்ட் டாக்டர். ஆந்திராவுக்கு மாற்றி விடவே, வேலையை உதறிவிட்டு, அங்கேயே ப்ராக்டீஸ். செல்வாக்கு. பங்கமில்லா வருமானம். ஏழைபங்காளன் என்பதால் சொத்து. சொதந்திரம் என்று சொல்லிக்கொள்ளும்படியாக இல்லாவிட்டாலும், சீரான வாழ்க்கை. பெரிய பையன் சங்கரன் ஒரு மாதிரி. கண்ட இடங்களில் பணத்தைக்கட்டி, படிச்சேன் என்று பேர் பண்ணி ஐஏஎஸ் எழுதினான். இண்டெர்வ்யூவில் பிச்சுண்டுடுத்து. அவாள்ளாம் இனம் காண்றதிலெ கெட்டி. இவனுடைய கோழைத்தனத்தைக் கண்டு கொண்டார்கள். பாசாகவில்லை. நாடு தப்பியது. எல்லார் மீதும் இவனுக்கு கோபம். நாள்தோறும் அப்பாவோட சண்டை. பணம் கறப்பான். பொறுப்பு நில். இதையெல்லாம் பார்த்த அடுத்தவன் ஆம்படையாளைக் கூட்டிக்கொண்டு அயல்தேசம் போய்விட்டான். நூல் அறுந்தது.

இந்தக் கூட்டுக்குடும்பத்து சிலந்தி வலையில் சிக்கிக்கொண்டது, மாதவனும் சுந்தரியும்தான். இத்தனைக்கும் வரதக்ஷிணை பேரம் நடத்திய குந்தளாவுக்கு, தன் ஒரே பெண் சுந்தரியின் நலன் கருதி, டாக்டர் சுந்தரராமன் வளைந்து கொடுத்தார். வில் மோட்டுவளையை பார்த்துக்கொண்டிருந்தபோது, குந்தளா கையில் பத்தாயிரம் ரூபாய் சொளையா அழுத்தினார். ஐந்து கிலோ வெள்ளி, வைரத்தோடு, கணிசமா ஆறு பவுனுக்கு ஆபரணங்கள், காஸ்ட்லி பட்டுப்புடவைகள் இத்யாதி. தடபுடலா கல்யாணம். ஆனால், சுந்தரி வீட்டுக்குச் சேர்த்தி இல்லை. எல்லாரிடம், கூசாமல், இவளுடைய அப்பா ஒன்றுமே தரவில்லை என்று அங்கலாய்ப்பாள், குந்தளா.

குடித்தனம் எல்லாம் தடித்தனம்தான். வந்த சீர் எது என்ன என்று மாதவனுக்கே தெரியாதபடி, எல்லா நகையும் பூட்டி வைத்துக்கொண்டு, சுந்தரியை மஞ்சக்கயிறுடன் தான் வளைய விட்டாள். அந்தக் காலத்து வீடா? புருஷன் பொண்டாட்டி பேசிக்கொள்ளக்கூட வாய்ப்பு கிடையாது. பணங்காய்ச்சி மரம் மாதவன் செலவில்தான் குடித்தனம், சின்னவர்கள் படிப்பு எல்லாம். முறைப்பொண்ணை கல்யாணம் செய்துகொண்ட மணிக்கு நோ வாரிசு, கொடுக்க ஒன்றும் இல்லை என்றாலும். படிப்பும் இல்லை; வேலையும் இல்லை. அவனொரு விருதா.

ஒருநாள் சுந்தரிக்கு கொஞ்சம் பூசினமாதிரி இருந்தது. கழுகுக்கண்ணா! குந்தளா தொளைத்து எடுத்து விட்டாள். அழுதுகொண்டே, சுந்தரி தன் அபிலாஷையைச் சொன்னாள். தொலைந்தது. பெரிய மாட்டுப்பெண் இப்படி இருக்கும்போது, உனக்கு இது ஒரு கேடா என்றாள். சிலபேருடைய சாபம் பலிக்கும். கலியுகம் அல்லவா? கருச்சிதைவு ஆகிவிட்டது. குந்தளா பாயசம் வச்சு சாப்பிட்டாளாம். என்னை வந்து யார் கேட்டார்கள்? கேட்டால், சொல்லியிருப்பேன், “ குந்தளா மாமி. நீங்க தாடகை அவதாரமோ, சூர்ப்பனகை அவதாரமோ, பூதகி அவதாரமோ! யார் கண்டா? பெரிய மாட்டுப்பெண்ணுக்கு பதினாறு பிறந்தபின், அடுத்தவனுக்குக் கல்யாணம் செய்திருக்கலாமே? உங்கள் அழிச்சாட்டியம் இந்த  அருள்மிகு வில்வநாதேஸ்வரனுக்கே பொறுக்காது.’ என்று.

கதை நீண்டுண்டு போறது. மறுபக்கமும் சொல்லவேண்டும். பிறந்த வீட்டில் சுந்தரிக்குச் சலுகை குறைந்துவருகிறது. எல்லா பணம் உனக்குத்தான் செலவாச்சு என்று சங்கரன் அவளை உதறி விட்டுட்டான். ‘வில்’லுக்கு டயாபிடீஸ். எல்லாச் செலவும் மாதவன் தலையில். ஏதோ நல்ல காலம். மாதவனும், சுந்தரியும் உயிருக்கு உயிராக ஒருவரை ஒருவர் நேசித்தார்கள். ஆனாலும், மாதவனுக்கு டெஸ்ட் செய்துகொள்ள இஷ்டமில்லை. அம்மாக்காரி விவாகரத்துவரை கொண்டு போய்விடுவாள். வில் தலையாட்டும் என்ற பயம். எனக்கு அது சரியாகப் படவில்லை. என்னை மாதவன் ஆலோசனை கேட்கவில்லையே. திடீரென்று ஒருநாள் போய்விட்டார். இப்போது சுந்தரிக்குத் துணை பெருமாள்தான். ஏதோ புத்திசாலித்தனமோ கொஞ்சம் வைத்து விட்டு போய்விட்டார், மஹானுபாவன். அதை பிடுங்க ஆயிரம் பேர். எல்லாம் சொந்தக்காரர்கள் தான்.

நேற்று சுந்தரி என்னிடம் கேட்டாள். எச்சக்கையால் காக்காய் ஓட்டாதே. உள்ளதை காபந்து செய்துகொள். என்றேன்.

என்னமோ போங்கோ சார்! கூட்டுக்குடும்பத்தில் உழைத்து சம்பாதிக்கிற பையன் உழவு மாடு. அவனுடைய பார்யாள் கறவை மாடு. அவாளோட இளமை காணாமல் போனது. அவர்களுக்கு வயது காலத்திலே, நிர்க்கதி. என்ன வேண்டிக்கிடக்கு, இந்த கூட்டுக்குடும்பம், நல்ல பையனை கூட்டுகிற விளக்குமாறாக வைத்துக்கொண்டு!

எனக்குத் தெரியும், ‘படவாகினி’ என்றால் என்ன என்று கேட்பீர்கள். அது ஒரு வட்டார மொழி. பொருள்: குந்தளா குணாதிசயமுள்ள பெண்மணிகள்.

#####

சித்திரத்துக்கு நன்றி:
http://brivbridis.lv/wp-content/uploads/2014/12/k12.jpg

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.