கிரேசி மொழிகள்திருமால் திருப்புகழ்

கபாலீஸ்வரர் கோயில் உற்சவம்….

“மயிலை கபாலி-கற்பகாம்பாள் கோயில் உற்சவம்’’….ஏப்ரல் 2 கொடியேற்றம்….!

06-1407304787-karpagambalshiva

“பிட்டுக்கு மண்சுமந்தாய் ,பங்களித்து பெண்சுமந்தாய்
ஜிட்டுக்குள் கங்கை ஜலம்சுமந்தாய் -பிட்ஷைக்கு
ஓடும் சுமந்தாய் ,உனையறியா நானய்யப்
பாடைச் சுமக்கின்றேன் பார்”….

அறுபத்து மூவர்….’’வேண்டுதல் வெண்பா’’….!
————————————————————————————–

‘’ஆசு கவியாகி ,ஆலயம் ஆலயமாய்,
ஈசன், இறைவியை பூசித்து -ஓசை
நயத்துடன் பண்களைப் பாட அருள்வீர்
வியத்தகு ஒன்பத்தேழ் வர்’’….

இரவு ஜாமத்தில் வெள்விடையேறி கபாலீஸ்வரர் வலம் வருகிறார்….
“வெள்ளை விடையேறி வாமத்தில் கற்பக
வல்லி மயிலாட நள்ளிரவில் -வள்ளல்
கபாலியைக் காணக்கண் கோடிகள் வேண்டும்
உபாயம் (பாபநாச) சிவனார் உரைப்பு”….

 

ரிஷப வாகன அம்பாளை வேண்டி….
———————————————
“புள்ளி மயிலாக புன்னை வனநாதர்
பள்ளியறை வாழ்பரம பத்தினியே -வெள்ளி
விடையேறும் ஈசர் இடபாக ஈஷி
மடையோன்என் நாவில் மலர்”….

 

பிக்ஷாடனர் கோலம்….
——————————
“மெய்யடி யார்கள் மிகுந்த மயிலையில்
ஐயம் எடுப்பதேன் அய்யனே -ஐயம்
விடுத்து கரத்தில் எடுத்திடு மாலை
இடத்து உமைதோள் இட”….

“மாடேந்த வந்தாய் மகிழ்ந்தோம் வரவேற்று
ஓடேந்து கோலம் உனக்கெதற்கு -தோடேந்தும்
பாகத்தாள், அன்னமா பூர்ணி, அருஞ்சுவை
பாகத்தாள் வாய்த்துமேன் பாடு”….

“ஓங்கி உலகளந்து உத்தமர் மூன்றுவரம்
வாங்கிய பிச்சை வடிவையும் -தாங்கிய
கப்பரை யோடரன் கோலத்தைக் கண்டதும்
ஒப்பறிந்தேன் மாலீசன் ஒன்று”….

“அட்சதை போடயிங்(கு) ஆயிரம் பேரிருக்க
பிட்ஷை எடுப்பதேன் பித்தரே -சச்சைய் !(விளிச்சொல்)
இரந்தது போதும் இறைகபா லீஸா
மறந்தனையோ நாளை மணம்”….

மாப்பிள்ளை அழைப்பு…
“எந்தையும் தாயும் இணைந்து குலாவிட,
முந்தைய ஆண்டுபோல் ,மாங்கல்யம் -தந்துனாவை
மீண்டும் மயிலைவாழ் மக்கள் நடத்திட
வேண்டுகிறோம் மாப்பிள்ளை வாள்”….
திருமயிலை திருக்கல்யாண அழைப்பிதழ்….
——————————————————
“செல்வன் கபாலியை செல்வியுமை கற்பகம்
கல்யாணம் செய்தவன் கைத்தலம்-செல்லும்
தினம்நாளை சேர்வீர் திருமயிலாப் பூர்க்கு
இனம்ஜாதி இல்லை இதற்கு”….

“கைத்தலம் பற்றி கபாலியும் கற்பகமும்
நெய்த்தலம் சுற்றி நடந்தனர் -மெய்த்தவ
வேதியர் ,மாலயன் ,வானோர் குழுமிட
ஆதியின் பாதி அளிப்பு”….

“அன்னைக்கும் தந்தைக்கும் ,அர்த்தமதன் சொல்லுக்கும்
புன்னைக்கும் பூங்கொடி பெண்ணுக்கும் -இன்னைக்கு
கையோடு கைகோர்க்கும் கல்யாண உற்ச்சவம்
மொய்யெழுதும் நேரமிது மெய்க்கு”….

“குங்குமமும் வெண்ணீறும் கூடிக் கலந்தின்று
சங்கமம் ஆகுது சன்னிதியில் -தங்களை
வாயாரக் கேட்கிறேன் வந்திதைக் காணவினை
நோயாறிப் போகும் நொடித்து”….

“பங்குனி உத்திரத்தில் சங்க ரனுமையாள்
பங்குநீ என்றுதன் பாகத்தை -மங்களமாய்
தந்த மணநாளாம் இன்று மயிலையில்
வந்து வடுக்களை வாழ்த்து”….

 

பலன்….
————–
“கைத்தலம் பற்றிய கற்பகத்தின் காதலால்
மெய்தலப் பாதி மகிழ்ந்தளித்த -வைத்திய
பாகனின் பாதம் பணிய சனிபகவான்
நோகான்நம் பாகம் நளன்”….கிரேசி மோகன்….!

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க