கோப்புக்கூட்டல்: இன்றைய கோப்பு: [5]
-இன்னம்பூரான்
ஆங்கிலத்தில் ‘எல்லாவற்றையும் உட்படுத்திய’ என்ற பொருள் கூறும் ecumenical என்ற சொல் உணர்த்தும் இலக்கை, ஒரு பெரிய கோரிக்கையாக முன்வைக்கிறேன். அதன்பொருட்டு, ஒரு கோப்புக்கூட்டல் செய்ய விரும்புகிறேன்.
இன்றைய கோப்பு: [5]
மார்ச் 25, 2017
இந்தியாவில் ஜனநாயக ஆட்சி நடக்கிறது. பொதுமக்களில் பெரும்பாலோர் வாக்காளர்கள். அவர்களின் பொன்னான வாக்கைப் பெற்றோ/கைப்பற்றியோ/அபகரித்தோ/ விலைக்கு வாங்கியோ/மற்றும் பல உத்திகளில் ஒன்றின் மூலமாகவோ அடைந்து, மாநிலச் சட்டசபைகளிலோ அல்லது நாடாளும் மன்றதிலோ மக்களின் பிரதிநிதிகள் சட்டம் இயற்றுகிறார்கள், அரசாளும் அமைச்சரவையை அமைக்கிறார்கள், அரசு இயந்திரத்தை மக்கள் நலத்துக்கோ சுயநலத்துக்கோ பயன்படுத்துகிறார்கள். முதல் தேர்தலில் போட்டியிட்டவர்களில் பெரும்பாலோர் செல்வந்தர்கள் அல்ல. இன்றைய நிலை வேறு. மேற்படி மன்றங்களில் கோடீஸ்வர்கள் கோலோச்சுகிறார்கள். அவர்களுக்கு எக்கச்சக்கமான ஊதியம், சலுகைகள், மான்யங்கள்; மேலும் சமுதாய மேன்மைக்குத் தன்னிச்சையாக உதவ, கோடிக்கணக்கான செல்வத்தின் மேல் உரிமை. அண்மையில் ஒரு எம்.பி. ஒரு விமான நிறுவனத்தின் நிர்வாகியைப் பொதுஇடத்தில் செருப்பால் பலமுறை அடித்து, அவருடைய மூக்குக்கண்ணாடியை உடைத்து, வசைகள் பல பாடி அவமதித்தார். அவர்மீது வழக்கு. விமான நிறுவனங்கள் அவரை ஏற்றுக்கொள்ளாததால், அரசு நடத்தும் ரயிலில் பயணித்தார். அதில் அவருக்கு இடம் கொடுத்தது, வழக்கு நிலுவையில் இருக்கும்போது, நியாயமா? அதுவும் அதுபற்றி மார்தட்டி அகம்பாவத்துடன் பேசும்போது. அவரை நம்பி நட்டாற்றில் இறக்கப்பட்ட வாக்காளர்கள் அவரை உதற முடியுமா? இது ஒருபுறம் இருக்க.
ஒரு நாள் எம்.பி. ஆக இருந்தாலும் ஆயுள் முழுதும் ஓய்வூதியம் உண்டு என்ற தோற்றம் நிலவுகிறது. உச்ச நீதிமன்றம் இந்த ஆனானப்பட்ட எம்.பி.கள் பெறும் சலுகைகள்தான் என்ன என்று ஒரு பொதுவழக்கை விசாரிக்கும்போது, மத்திய அரசை/தேர்தல் அதிகாரமையத்தை வினவ முயன்றவுடன், எல்லாக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.மகாஜனங்கள் சினம் மிகுந்து சண்டைக்கோழி மாதிரி சிலிர்த்துக்கொண்டனர். ஜெயராம் ரமேஷ் காங்கிரஸார். அவர் ஒரு உச்சமன்ற நீதிபதி 80% எம்.பி. கள் கோடீஸ்வரர்கள் என்று சொன்னதுக்கு ஆக்ஷேபிக்கிறார். சினம் மிகுந்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ‘பார்லிமெண்ட் அங்கத்தினர்களின் ஊதியம், படிகள், சலுகைகள் வகையறா பற்றி விவாதிக்க, முடிவுஎடுக்க பார்லிமெண்ட் மட்டும்தான் அதிகாரம் வகிக்கும் என்கிறார். அதாவது, ‘வாக்காளர்களின் பிரதிநிதிகள் தங்கள் சலுகைகளைத் தாங்களேதான் நிர்ணயிக்க உரிமை உண்டு. மற்றவர் வந்து புகல இங்கு என்ன நீதி’ என்கிறார். பேஷ்!
ஒரு சின்னக் கணக்கு. அது பூரணமானது இல்லை என்றாலும், விஷயத்தை பிட்டுப் பிட்டு வைக்கிறது.17 கட்சிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில் கோடீஸ்வர தி.மு.க. இல்லை. அந்தஸ்து விஷயம் பின்னர் நோக்கலாம். நாடாளுமன்றத்தில் 2009இல் 521 எம்.பி.களின் செல்வநிலை: 58% கோடீஸ்வரர்கள். 2014இல் 542 எம்.பி.களின் செல்வநிலை: 82% கோடீஸ்வரர்கள்.
பிஜேபி:
2009: 110 எம்.பி.களின் செல்வநிலை: 50% கோடீஸ்வரர்கள். 2014இல் 251 எம்.பி.களில் 84% கோடீஸ்வரர்கள்.
காங்கிரஸ் 2009இல் 199 எம்.பி.களின் செல்வநிலை: 71% கோடீஸ்வரர்கள். 2014இல் 44 எம்.பி.களில் 80% கோடீஸ்வரர்கள்
ஏடிஎம்கே 9 எம்.பி.களின் செல்வநிலை: 56% கோடீஸ்வரர்கள். 2014இல் 37 எம்.பி.களில் 78% கோடீஸ்வரர்கள்.
தி.முக. மாஜி எம்.பிகள் ஒரு கூட்டணி வைத்தால் கோடீஸ்வரர் கும்பலாக இருக்கும் என்பவர்களும் உண்டு.
அரசியல் சாஸனப்படி நாடாளும் மன்றம் ஒரு செல்வந்தர்கள் நிலையமாக அமைந்தாலும், அவர்களை மேம்படுத்திய பாமரமக்களுக்கு வாய்ஸ் கிடையாதா?
என்னத்தைச் சொல்ல? அந்த நீதிபதியையும், இந்தக் கட்டுரையாளரையும் பார்லிமெண்டார் வாட்டி எடுக்கலாம். அந்த கெய்க்வாட் அதற்கு ஆதரவு தெரிவிப்பார். அவர் தான் செருப்படி மக்கள் பிரதிநிதி மன்னர்பிரான்.
எனக்கு ஓர் ஐயம் எழுகிறது. இங்கிலாந்து அரசியல் சாஸனப்படி மஹாராணி தான் சகல மேலாண்மை; நடைமுறையில் இல்லை என்பது வேறு விஷயம். ஸர் ஹென்ரி போல்லக் என்ற அரசியல் ஆய்வாளரின் பொன் வாக்கு:
“மேலாண்மை ( Sovereign) எல்லா நீலக்கண் கொண்ட சிசுக்களை கொல்லவேண்டும் என்று ஆணையிட்டால், அதற்கு அப்பீல் இல்லை. ஆனால், அவர் அரியணையிலிருந்து இறங்கவேண்டும்.’
இந்தப் பொன்வாக்கு இங்கு செல்லுபடிஆகுமா?
-#-
சித்திரத்துக்கு நன்றி: