குறளின் கதிர்களாய்…(161)
செண்பக ஜெகதீசன்
செய்தக்க வல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.
–திருக்குறள் –466(தெரிந்து செயல்வகை)
புதுக் கவிதையில்…
நாடு நலம்பெற மன்னன்,
செய்யக்கூடாதவற்றைச்
செய்தால் கெடுவான்..
நல்லாட்சிக்குச்
செய்யவேண்டியதைச்
செய்யாமல் விட்டாலும்
கேடுதான் வரும்…!
குறும்பாவில்…
செய்யக்கூடாதவற்றை மன்னன் செய்தாலும்,
செய்யவேண்டியதைச் செய்யாமல் விட்டாலும்
கேடுதான் வரும் அரசினுக்கே…!
மரபுக் கவிதையில்…
செய்யும் செயல்வகை தெரிந்தேதான்
செயல்பட வேண்டும் மன்னவனும்,
செய்யக் கூடா செயல்களையே
செய்தால் கெடுவான் அன்னவனே,
செய்ய வேண்டிய செயல்களையும்
செய்யா தவனே விட்டுவிட்டால்,
உய்யும் வகைதான் ஏதுமில்லை
உறுதியாய் வந்திடும் கேடுதானே…!
லிமரைக்கூ..
செய்யக் கூடாததைச் செய்யாதே,
செய்தாலும், செய்யவேண்டியதை விட்டாலும்
சேர்ந்திடும் கேடுதான் பொய்யாதே…!
கிராமிய பாணியில்…
தெரிஞ்சிக்கோ தெரிஞ்சிக்கோ
செய்யவேண்டியதத் தெரிஞ்சிக்கோ,
செய்யுமுன்னே தெரிஞ்சிக்கோ
தெரிஞ்சபடி நடந்துக்கோ..
செய்யக்கூடாததச் செஞ்சாலே
செய்யிறவனுக்குக் கேடுதான்,
ராசாவோடச்
சேந்தே அழியும் நாடுதான்..
அதுபோல
செய்யவேண்டியதச் செய்யாமவுட்டாலும்
சேந்துவருமே கேடுதான்..
அதால,
தெரிஞ்சிக்கோ தெரிஞ்சிக்கோ
செய்யவேண்டியதத் தெரிஞ்சிக்கோ,
செய்யுமுன்னே தெரிஞ்சிக்கோ
தெரிஞ்சபடி நடந்துக்கோ…!