படக்கவிதைப் போட்டி 104-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
இவ்வாரப்போட்டிக்கு வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தெரிவு செய்திருக்கும் இந்தப் படம் திருமிகு. காயத்ரி எடுத்தது. இவ்விருவருக்கும் என் நன்றி!
தணல்போலத் தகிக்கும் மணலிலே துணிக்குடையின் அடியிலே சாய்ந்திருக்கும் இந்த மனிதரைக் காண்கையில், மாடமாளிகையில் நெஞ்சினிக்கும் பஞ்சணையில் துயிலும் பேறு எல்லார்க்கும் வாய்ப்பதில்லை; வெட்டவெளியில் பாயுமின்றிப் படுத்துறங்கும் பேர்களுக்கும் பாரினிலே பஞ்சமில்லை எனும் உண்மை உறைக்கிறது; நெஞ்சம் வேதனையில் உறைகிறது!
இந்தப்படம், நம் கவிஞர்களின் நெஞ்சில் எண்ணற்ற எண்ண அலைகளைத் தோற்றுவித்திருக்கும் என்றே எண்ணுகிறேன். அவ் அலைகளில் நாமும் நீந்தி வருவோம்! கவிச்சுவை மாந்திவருவோம்!
***
”சிந்தையில் நிறைவிருந்தால் பஞ்சணை தேவையில்லை; மண்தரையும் மனங்கவரும் மஞ்சமே” என்று எளிமையின் இனிமை பேசியிருக்கிறார் திரு. பிரசாத் வேணுகோபால்.
நிம்மதி
உள்ளநிறை இல்லாமல் இல்லையில்லை என்றெண்ணப்
பஞ்சணையில் சாய்ந்தாலும் தூக்கமது வாராது
உள்ளதுவே போதுமென்ற எண்ணமது கொண்டுவிட்டால்
மண்தரையும் நல்மஞ்சம் ஆம்.
***
கொடத்த அணைச்சுகிட்டுக் கூடாரம் போட்டுக்கிட்டுப் படுத்துக்கிடக்கும் தம்பியிடம், அவருடைய இந்த நிலைக்குக் காரணமென்ன என்று கனிவோடு விசாரிக்கிறார் திரு. கருணானந்தராஜா.
- கொடத்த அணைச்சுக்கிட்டு கூடாரம் போட்டூக்கிட்டு
படுத்தூக் கெடக்கிறியே தம்பி நீ
பரதேசி ஆனாயோ வெம்பி! - பாலவனத்தினிலே பரதேசியானவனே
வேல கெடைக்கலையோ தம்பி – இந்த
வெயிலும் சுடுகலையோ தம்பி - கூடுகட்டித் தூக்காணாங் குருவியெல்லாம் வாழுகையில்
கேடுகெட்டுப் போனாயே தம்பி இங்க
கெடந்து வதங்குறியே தம்பி - பாடு… பட்டுப்பிட்டு பழஞ்சோத்தைக் கொட்டிப்பிட்டு
வாடிப் போய்த் தூங்கிறியோ தம்பி – உன்
வரலாறு தோணலையே தம்பி! - ஆத்துக்காரி கட்டித்தந்த சோத்த முழுங்கிப்பிட்டு
வேர்த்துக்கொட்டத் தூங்கிறியோ தம்பி – நீ
வேலையத் தொடங்கலையோ தம்பி! - கொடத்துல தண்ணி மொண்டு கொண்டுவந்து வச்சிப்பிட்டு
படங்கு கட்டித் தூங்கிறியோ! தம்பி – எதிர்
பார்க்குதுன்ன ஒங்குடும்பம் நம்பி - குப்பையில கண்டெடுத்த கொடம், வாளி, போத்தல்களை
எப்ப நீ விற்கப் போறே தம்பி – கொஞ்சம்
எணச் சாய இருக்கிறியோ! தம்பி. - எணச்சாய இருப்பதற்கு ஏழைக்கு நேரமில்ல
பணங்காசு வேணுமுன்னாத் தம்பி – உன்
படங்கச் சுருட்டிக்கோடா எம்பி - சேர்த்ததெல்லாம் சீக்கிரமா, சில்லறைக்கு வித்தூப்பிட்டு,
ஆத்துக்குப் போயிருடா தம்பி – நீ
அங்க போயி தூங்கிக்கலாம் தம்பி - தன்னான தானே நன்னே தானான தானே நன்னா
தன்னானத் தானே தன்னே தானே நன்னானே – தன்னே
தானானத் தானேதன்னே தன்னாந் தன்னானே!
***
”செல்வந்தன் யார்? கோடிப்பணம் இருந்தும் போதாதென்று மேன்மேலும் தேடுபவனா? இல்லை! இருக்கும் பொருளில் நிறைவுகண்டு வருத்தமின்றி வாழும் ஏழையே உண்மைச் செல்வந்தன்!” என்று செல்வத்துக்குச் சிறந்ததோர் விளக்கம் தருகிறார் திரு. செண்பக ஜெகதீசன். ”செல்வம் என்பது சிந்தையின் நிறைவே” என்றுதான் குமரகுருபரரும் கூறியிருக்கின்றார்.
செல்வந்தன்…
இருப்பதை வைத்து நிறைவுறாமல்
இன்னும் வேண்டும் எனுமவாவில்
அருகி லுள்ளதை நுகராதே
அல்ல லுறுவோர் செல்வரல்லர்,
இருக்கும் பொருளே போதுமென்ற
இதய நிறைவுடன் உண்டுறங்கும்
வருத்தம் மறந்த ஏழையேதான்
வாழும் உண்மை செல்வந்தனே…!
***
”இறைவன் தந்த அருட்கொடையாம் உறக்கத்தை, உலகியல் தேவைகளைத் தேடித்தேடித் தொலைத்துவிட்டான் மனிதன். ஆகவே நிம்மதியாய்த் தூங்கும் உனைக்கண்டால் என்னுள் எழுகிறதே ஏக்கம்!” என்று துணிக்குடைக்கீழ் தூங்கும் மனிதனைக் கண்டு ஏங்கிப் பாடுகிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.
தூக்கம், ஆண்டவன் தந்த அருட் கொடை தோழா!
துக்கம் மறந்த நிலை, தூக்கம் என் தோழா!
பாலுக்கு அழுது தூக்கத்தை தொலைத்தது
சில காலம்!
படித்துப் படித்து தூக்கத்தை தொலைத்தது
சில காலம்!
வேலை தேடி தூக்கத்தை தொலைத்தது
சில காலம்!
பருவ வயதில் துணையைத் தேடி
தூக்கத்தைத் தொலைத்தது சில காலம்
குடும்பச் சுமையில் தூக்கத்தை தொலைத்தது
சில காலம்!
பணத்தைத் தேடி தூக்கத்தை தொலைத்தது
சில காலம்!
தொலைத்த தூக்கத்தை தேடிப்
பிடித்தாயோ என் தோழா!
அன்னை வயிற்றில் தூங்கிய தூக்கம்!
இன்று வரையில் மறந்த தூக்கம்!
உன்னைப் பார்த்ததும் வந்தது ஏக்கம்!
***
”என் அழிபசி போக்கியெனை ஆதரிக்க ஆருமில்லை என்றாலும் துணிக்குடையின் கொடையாலே நானயர்ந்து தூங்குகின்றேன்” என்று உறங்கும் மனிதரிவர் தன்னிலையைச் சொல்வதாய்க் கவி வடித்திருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி. பசிப்பிணி போக்கும் மருத்துவர்களுக்குப் பாரில் எப்போதும் பஞ்சமே…என்ன செய்வது?
சிந்தனை உறக்கம்!
இறைந்துண்டு வாழும் வாழ்க்கையானாலும்..
இறவாப் பசியென்பதனைவர்க்கும் இயற்கைதானே..!
சதைரத்தம் எலும்புடன் உடலென்றாலங்கே
பசிமயக்கம் உறக்கமென்பதும் உடன்பிறப்பன்றோ?..
உறக்கத்துக்கு உரிமைக்குரல் தேவையில்லை..
ஊணுறக்க மில்லையேல் உயிர்களுமில்லையப்பா..!
மாலைச் சூரியனின் கருணையினால்..
மணற் படுக்கையிலென் கவலைமறந்துவிட..
வெட்டாந்தரை இடம்தான் நானுறங்கும்
கட்டாந்தரை..நீர்வற்றிருகிய நிலமேயென்சொர்க்கம்!
துணிக்குடையின் கொடையால் தந்நிழல்தர..
துயிலெழ மனமில்லா மதிமயக்கம்தனில்..
உறவொன்றுமில்லையடா உறக்கம்தான் சொந்தமடா
ஊர்திரிந்துஉடல் களைத்துறங்கிக் கிடக்கிறேன்..!
அவனியில் படுமின்னலிலே யானும்..
அகதியாகி அயர்ந்துறங்கிக் கிடக்கின்றேன்..!
வண்டினம்வாழ பண்புடை மலர்போல..இங்கு
வறியவர்க்குதவும் குணமுடை யோரில்லையப்பா,,!
ஈகைமிகு தென்றலும் மேகமுடன்சேர்ந்ததால்..
இதமாகவென் பசியும் அடங்கிப்போனதே..!
இல்லாதவனைக் கண்டுகொளா தேசத்தின்..
இனம்காணா நினைவலையில் உறங்குகிறேன்..!
பசியுறக்கம் நிரந்தர வரமேயானாலும்..
பாரிலில்லை ஆருக்கும்பசிபோக்கும் மனப்போக்கு..!
பாவம்வயிறு செய்த தவறுதானென்ன..
தினம்வறுமை தானெனை வாட்டிடுதே..!
வயிற்றுக்குச் சோறிட வேண்டும்..
இங்கும் வாழும் மனிதர்க்கெல்லாம்…என
மஹாகவியின் கவிப்பசியறிந் தாங்கே..
மகத்தான சிந்தனைக்கே அடிபணியவேண்டுமப்பா..!
மண்குடிசை வாழ்வு நிலையென்றால்..
மண்ணிலென் வறுமைதீரும் நாளெப்போது?..
உறக்கத்தினாலென்னுடல் மண்ணைத் தொட்டாலும்..
விழித்தெழும்போதென் சிந்தனைகள் விண்ணைத்தொடுமப்பா..!
இல்லையெனும் சொல்லேயிலாமல் இருந்திருந்தால்..
இயல்புவாழ்க்கை யாவர்க்கும் எளிதாகுமப்பா..
நிறைவுடனே நானிலத்தில்நாம் வாழநித்தம்..
இறைவனிட மதையேமண்டியிட்டு வேண்டிடுவோம்..!
***
”என்னைத் தாங்கிவளர்த்த தாயெனும் தெய்வத்தின் அருமைஅறியாது துரத்தினேன் அன்று. நாதியற்று நடுத்தெருவில் நிற்கின்றேன் இன்று! நீங்களேனும் உங்கள் தாயைப் பேணுங்கள் நன்கு!” என்று தன் அனுபவங்களை வேதனையோடு விளம்பும் மனிதரைக் காண்கிறோம் திருமிகு. சத்தியப்ரியா சூரியநாராயணனின் கவிதையில்.
தவறவிட்ட தங்கம்
கண்மூடி நானிருப்பது நல்ல கனவினிலல்லவே.
கண்ணுக்குத் தெரியும் கானல் காட்சியன்றி நீருமல்லவே..
“யாசித்தாலும் நிம்மதியான வாழ்க்கை! ”
யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன்
யானும் வாழ்ந்தேன் அவ்வித வாழ்வை
யாரும் மறுப்பதற்கல்லவே..
உழைத்து நிதமும் உணவளிக்காவிடினும்
உண்மையான பாசம் பொழிந்தாள்
உண்டி உறையுௗ் எதுவுமின்றியும்
உன்னத வாழ்வளித்தது அவௗல்லவே..
அறியவில்லை அவள் பாசம் அன்று
அதிகாரம் கொண்டேன் ஆண்மகனென்று
அதட்டி அவளை விரட்டினாலும்
அௗவில்லா மதிப்பளித்தாலல்லவே..
கடற்கரை மணலில் காண்கிறேன் பலரைக்
கண்டதுமெனை விலகியே செல்கின்றனர்
கடவுளே..! நாய்க்களிக்கும் உணவு கூட
நான் புசிக்கத் தருவதில்லை!
கண்னென எனைக்காத்தவௗ் விட்டுச்சென்றதுமே..
ஊதாரியாய்த் திரிந்தாலும் எனக்கு
ஊட்டி விட்டு மகிழ்ந்தாளே
ஊரில் ஒருவர் கூட மதிப்பதில்லை
உலகத்தை விட்டு அவௗ் சென்றதுமே..
உதறிவிட்டேன் ஐயகோ
உயிர்கொடுத்த அவளை
‘தொலைந்து போ நீ’ என விரட்டித்
தொலைத்து விட்டேன் என் தங்கத்தை.
காரணமில்லாமல் காதலிப்பவௗ் பெற்றெடுத்தவௗ் மட்டுமே
காலம் சென்ற பின்னரே உணர்கிறேன் என்றுமே
மனிதனாய் மதிக்க கூட நாதியில்லை
மண்ணை விட்டு மங்கையவள் பிரிந்ததுமே..
பிரிந்தது உனதுயிர் – தாயே இங்கு
பிணமானது நீ பெற்ற உயிர்
பிரிவில் தான் உணர்கிறேன்
பித்துப்பிடித்து நான் செய்த தவறுகளையே..
“ஆண்டாண்டு காலம் அழுது புலம்பினார் மாண்டார் திரும்புவதில்லை”
ஆண்டாண்டு காலம் நான் இனி வாழ்ந்தாலும்
ஆதரவளிக்க எவருமில்லை..
தவறவிட்ட தங்கத்தை எண்ணி ஏங்குகிறேன்
தக்க வைத்துக் கொள்ளுங்கள் நீங்களாவது
தங்கள் கையிலிருக்கும் தங்கத்தை
தாயெனும் தெய்வத்தை..!
***
”அந்தோ! தேசமில்லை அவர்கள் வசிக்க; நேசமில்லை அவர்கள் சுகிக்க” என்று கதியற்று அகதியாய் அலையும் மனிதரின் அவதியை உணர்வுபூர்வமாய்த் தன் கவிதையில் பொதிந்து தந்திருக்கின்றார் திருமிகு. மா. பத்ம பிரியா.
துரத்தப்பட்ட உறவு
தேசமில்லை
உன் தேசமில்லை
ஓயாத ஓலம்….
அவர்களுக்கோ
நேசமில்லை
நெஞ்சில் நேசமில்லை
மீளாத சோகம்…
அகதி எனும் கேலியாய்
தூற்றும் தூவேசக் குரல்
காற்றில் தெறிக்க
தொலை தூர பயணத்தில்
மண்ணில் விதைக்கப்பட்டவர்கள் ஏராளம்
பாலியல் அத்துமீறல்கள் தாராளம்
ஆண் என்றால் கணநேரம் துயிலலாம் தெருவோரம்
பெண்ணென்றால் என் செய்ய?
மணல்மேடுகள் சவக்குழிகளாக
உறவுகளும் உடைமைகளும் சிதறவிட்டு
அகதியாய் அலையவிடும்
பாவிகளே
என்று தீரும்
எங்கள் சுதந்திர தாகம்.
***
படத்தின் வழியே வாழ்க்கைப் பாடத்தினைப் போதித்திருக்கிறார்கள் நம் கவிஞர்கள். கருத்துச் செறிவுமிக்க அவர்களின் கவிதைகளுக்கு என் நன்றியும் பாராட்டும்!
இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக நான் தேர்வுசெய்திருக்கும் கவிதை இனி!
என் குடியிருப்பு
கடற்கரையே என் குடியிருப்பு!
கஞ்சி ஊத்த எனக்கு,
காவல் காக்க எனக்கு
கடற்தாயே துணையிருப்பு!
காத்தாடி வேணாம்,
கதவும் தேவை யில்லை!
வாடகை தர வேணாம்!
வரி கட்ட வேணாம்!
போன சுனாமியிலே
பொண்டாட்டி
போய் விட்டாள்!
படகும் போச்சு!
அடுத்தடுத்த அலை அடிப்பில்
குடிசையும் போச்சு!
பிடிச்ச மீனெல்லாம் போச்சு!
காசும் போச்சு!
கட்டிய வேட்டியும் போச்சு!
கரையிலே கிடந்த
போர்வையே கூரை யாச்சு!
கோரமாய்த் தாக்கிய
சுனாமி அழிவைக்
காண வந்த
முதல் அமைச்சர்
குடிசை கட்டித் தருவதாய்
உறுதி கூறினார்!
இனிதாய்ப் பேசினார்!
குடிசை கட்ட வந்த போது
நிலம் விற்க மறுத்து விட்டார்
நிலச் சொந்தக் காரர்!
இந்தக் குடியிருப்பில்
இனிப் பயமில்லை எனக்கு!
சுனாமி அடித்தாலும்
புயல் அடித்தாலும்
புதுசாய்க் கட்ட
ஓலைப் பாய் கிடைக்காதா?
ஒடிந்த கம்பு ஒன்று
மிதக்காதா?
கடற்கரையிலே வாழ்ந்து
கடலிலே புதையும்
ஜடங்களுக்கு
இறுதிச்
சடங்கும் இல்லை!
இரங்குவாரும்
இல்லை!
கடற்கரையே என் குடியிருப்பு; கடலன்னையே என் துணையிருப்பு; வானமே என் மேற்கூரை; பூமியே என் பஞ்சணை! என எதை இழந்தாலும் நம்பிக்கை இழக்காது வறுமையிலும் செம்மையாய் வாழும் மனிதனைக் காணமுடிகின்றது இக்கவிதையில்.
”எதைக்கொண்டு வந்தோம் நாம் இழக்க?” எனும் விட்டேற்றியான மனப்பாங்கோடு, துள்ளிவரும் கடலோரம் பள்ளிகொண்டிருக்கும் இந்த மனிதரைப் போல் கவலையின்றி வாழும் கலையை அனைவரும் கற்றுவிட்டால் வாழ்வில் துன்பமில்லை; ஒரு துயரமில்லை!
ஏழையின் எதிர்பார்ப்பில்லா மனநிலையை எளிமையாய் எடுத்தியம்பியிருக்கும் திரு. சி. ஜெயபாரதன் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகின்றார். அவருக்கு என் பாராட்டுக்கள்!
தனது சொல்வாக்கால் சிறந்த கவிஞராகத் தேர்வு செய்யப்பட்ட திரு சி. ஜெயபாரதனுக்கு வாழ்த்துகள்.
2004 தென்னிந்திய சுனாமிப் பேரலைகளின் எதிர்பாராத அடிப்பில் எல்லாம் இழந்த தமிழ் மீனவர் பட்ட மெய்யான துயர்களைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டது இக்கவிதை.
என் கவிதையைச் சிறந்ததாகத் தேர்ந்தெடுத்த திருமிகு மேகலா இராமமூர்த்திக்கு எனது நன்றி.
சி. ஜெயபாரதன்.
பாராட்டுகள் தெரிவித்த நண்பர் திரு. சித்திரனுக்கு என் நன்றி.
சி. ஜெயபாரதன்