தொன்னூல் விளக்கம் – வெண்பா யாப்பியல் கோட்பாடுகள்
-ம.சிவபாலன்
தொல்காப்பியர் காலம் முதல் தற்காலம் வரையில் இலக்கணக் கோட்பாடுகள் மரபுச்செய்யுள் வழியோ அல்லது உரைநடை வழியோ இவைதாம் இலக்கணங்கள் என்று இலக்கிய மரபை அறிவுறுத்திக் கொண்டே வருகின்றன. தமிழில் தோய்ந்தவர் அதனை முற்றும் அறிந்து இலக்கணம் யாப்பதில் சிக்கல்கள் இருப்பதற்கு வாய்ப்பில்லை எனலாம். அவ்வழியினின்று தமிழ் தாய்மொழியாக அல்லாதோர் தமிழ் மொழியினைக் கற்று அதில் ஐந்திலக்கணம் படைக்கும் திறமையுடையோர் இயற்றிய முதல் நூலான தொன்னூல் விளக்கத்தின் வெண்பா யாப்பியல் கோட்பாடுகள் இக்கட்டுரையின் வழி ஆராயப்படுகிறது.
தொன்னூல் விளக்கம்- நூல் அறிமுகம்
ஐந்திலக்கணம் மரபுவழி இயற்றப்பட்ட நான்காவது இலக்கண நூலாகும். இந்நூல் 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கி.பி 1730இல் எழுதப்பெற்றதாகும்.
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்து அதிகாரங்களில் 370 நூற்பாக்களைக் கொண்டது. 18 இயல்களைக் கொண்டதாகவும் அமைகிறது.
தொன்னூல் விளக்கம்
|
||||
எழுத்ததிகாரம் | சொல்லதிகாரம் | பொருளதிகாரம்
|
யாப்பதிகாரம் | அணியதிகாரம் |
எழுத்தியல்
எழுத்தின் பகுப்பு
எழுத்தின் விகாரம்
|
சொற்பொதுவியல்
பெயர்
வினைச்சொல்லியல் இடைச்சொல்லியல் உரிச்சொல்லியல் |
பதிகம்
காரணம்
பா தொகை துணிவு |
செய்யுளுறுப்பு
செய்யுளியல்
செய்யுள் மரபியல்
|
சொல்லணியியல்
பொருளணியியல்
|
பதிப்பு வரலாறு
- 1838இல் புதுவையில் முதற்பதிப்பு.
- 1864இல் அமிர்தநாதர் நாகையில் பதிப்பித்துள்ளார்.
- 1891இல் ஜி.மென்கன்சி காபின் அய்யர் பதிப்பித்துள்ளார்.
- மேலும் செயிண்ட் ஜோசப் அச்சகத்தின் யாகப் பிள்ளையால் அச்சிடப்பட்டுள்ளது.
- 1978இல் ச.வே.சுப்பிரமணியன் அச்சிட்டு பதிப்பு அடிப்படையாக வெளிவந்துள்ளது.
வீரமாமுனிவர்
1680ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் நாள் இத்தாலி நாட்டு வெனிஸ் மாகாணத்தில் காஸ்திகியோன் என்ற சிற்றூரில் பிறந்தவர். மதப்பணி நோக்கத்திற்காக 1710இல் தமிழகத்திற்க்கு வந்து, பின்னர், தமிழைக் கற்று பல்வேறு இலக்கிய இலக்கண அகராதிகள், மொழிபெயர்ப்பு நூல்கள், மருத்துவ நூல்கள் போன்றவற்றைத் தமிழுக்குத் தந்துள்ளார்.
காலம்
பெரும்பாலும் நாயக்கர்கள் அனைவரும் தெலுங்கு மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். இருப்பினும் “விஜயரங்க சொக்கநாத நாயக்கர் (1706-1732) காலத்தில் தான் வீரமாமுனிவரால் இந்நூல் எழுதப்பட்டுள்ளது”1 என்பதை வரலாற்றாசிரியர் சுவாமிநாதன் குறிப்பிடுகின்றார்.
யாப்பதிகாரம்
நான்காவது அதிகாரமாக அமைந்த இது மூன்று பெரும் பிரிவுகளை உள்ளடக்கியதாகும்.
- செய்யுளுறுப்பு
- செய்யுளியல்
- செய்யுள் மரபியல்
மொத்தம் 100 நூற்பாக்களைக் கொண்டதாகவும், இதில் முந்தைய 50 நூற்பாக்கள் செய்யுளுறுப்பு மற்றும் செய்யுளியல் பற்றியும் ஏனைய நூற்பாக்கள் பாட்டியல் மரபையும் உணர்த்துகின்றன.
செய்யுளுறுப்பு
செய்யுள் என்றால் என்ன? என்ற கேள்விக்குப் பொதுவான நேரடியான விடையை எந்தவித யாப்பு நூலும் கூறவில்லை. ஆயினும் கி.பி.10ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அமுதசாகரம் என்ற நூலே இதனைப் பற்றி விளக்கம் தந்துள்ளது எனலாம்.
“உள்ளப் பரவையின் நூல்வரை நாட்டிஒண் கேள்விதாம்பா
என்னப் படாமல் இயையக் கடையின் இசைபெருக்கும்
வள்ளல் குணநாவல் வானோர்களை வளமைப்படுக்கும்
வெள்ளக் கவிதை அமிழ்தம் எல்லார்க்கும் வெளிப்படுமே” (யாப்பருங்கல விருத்தி நூற்பா மேற்கோள், 95)
எனக் கவிதை என்பதற்கு அமிழ்தம் என்று பொருள்படக் கூறுகின்றார்.
”பல்வகைத் தாதுவின் உயிர்க்கு உடல்போல் பல
சொல்லால் பொருட்கு இடனாக உணர்வினில்
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்” (நன்னூல், நூற்பா, 268)
இதற்கு உரையாசிரியர்கள் “தோல், இரத்தம், இறைச்சி,மேதை, எலும்பு, மச்சை,சு வேதநீர் என்னும் எழுவகைத் தாதுக்களினாலும் உயிர்க்கு இடனாக இயற்றப்பட்ட உடம்பு போல, இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் நால்வகைச் சொற்களால் பொருட்கு இடனாகக் கல்வியறிவில் செய்யுளியற்ற வல்லோர் அலங்காரம் பெற இயற்றுவன செய்யுளாம்”2 என்று குறிப்பிடுகின்றார்.
”சிரைமுதல் யாப்பு உறச்சேர் உயிர்க்கு உடல்போல்
உரைமுதல் யாப்பு உற உணர்பொருட்டு உடலாச்
சிறப்பில் செய்வன செய்யுளாம்” (நூற்பா, 202)
நரம்பின் பிணிப்போடு ஒழுங்குபட நிரைத்து இணைத்திய பல எலும்புகளைப் பின்னித் தசையை நிரப்பிக் குருதியைத் தோய்த்துத் தோலை மூடி மயிர்மேல் பரப்பி அழகுபெற உயிர்க்கு கடனாகச் செய்யப்பட்ட உடலைப்போலப் பலவகை மொழிகள் ஒருப்பட எடுத்து அசை, சீர், அடி, தொடை என்று இவற்றானும் யாப்புறவீக்கி உணர்ந்த பொருட்கு இடனாகப் பல அலங்கார வகையால் சிறப்புறச் செய்யப்படுவன செய்யுள் எனப்படும்”3 எனச் செய்யுளுக்கு யாப்பினைக் கூறும் நூல்களினுள் இரண்டாவதாக விளக்கம் தருவதாக இந்நூல் அமைகின்றது. மேலும் நன்னூல் கூறிய விளக்கத்தினை அடியொற்றியே தொன்னூல் விளக்கமும் செய்யுள் என்பதற்கு விளக்கம் அளிப்பதைக் காணமுடிகிறது.
உறுப்பு வேறுபாடு
தொல்காப்பியம் முதல் இன்றளவும் யாக்கப்பெறும் யாப்பிலக்கண நூல்கள் வரையிலும் செய்யுள் உறுப்பு அளவில் வேறுபாடு கொண்டதாகக் காணப்படுகிறது.
தொல்காப்பியம் 344 எனவும், காக்கைப்பாடினியம் நூற்பாவை வைத்துக்கூறாவிடினும், அதன் உறுப்புக்கள் ஆறு என அறியமுடிகிறது.
இலக்கண விளக்கம்
“எழுத்தசை சீர்தளை அடிதொடை என்ற
மூஇரண்டு உறுப்பும் மேவரச் சிவணிப் 5
என்பதால் ஆறு உறுப்புகள் என்றும், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை எட்டு என்றும் கூறிய முடிவு இந்நூலில்,
“எழுத்தசை சீர்தளை அடிதொடை ஆறும்
வழுத்திய செய்யுள் மருவு உறுப்பு எனவே” (நூற்பா, 203)
என்று செய்யுளுக்கான உறுப்புக்களாக ஆறினையே முன்மொழிகின்றார். மேலும் எழுத்தினைப் பற்றி எழுத்ததிகாரத்துள் விரிவாக கூறியுள்ளபடியால் யாப்பதிகாரத்தில் அதனை விளக்கவில்லை.
அசை
தொல்காப்பியரின் நான்கசைக் கோட்பாட்டினின்று விலகி ஈரசைக் கோட்பாட்டினை வெளிப்படுத்துகின்றது.
“அசையே நேர் நிரையாம் இருவகைய” (நூற்பா, 204)
சீர்
ஈரசைச் சீர் நேர்நேர், நிரைநேர், நிரைநிரை, நேர்நிரை ஆகிய நான்கும் இயற்சீர் எனவும், இதன் பின்னர் முறையே நேரும் நிரையும் வரின் உரிச்சீர் எனவும், அவற்றில் நேர் என முடிந்தவை வெண்சீர் எனவும், நிரை வரின் வஞ்சிச்சீர் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பொதுச்சீர் என்பன நாலசைச்சீர் பதினாறாகும்.
“பொதுச்சீர் வெள்ளையுள் புணரா” (நூற்பா, 206. வரி, 3)
என்பதினால் பொதுச்சீர் வெண்பாவில் வராது என்றும் கூறப்பட்டுள்ளது.
தளை:
தளை ஏழு என்ற பொதுக் கொள்கையிலிருந்து வழுவாமல் இலக்கணம் வகுக்கின்றது.
“தளையாம் சீர் தம்முன் தலைப்படும் சுட்டே
அவை ஏழ் வகைய ஆகும்” (நூற்பா, 207 வரி.1-2)
”வெண்டளை என்பது வெண்சீர் ஒன்றலும்
இயற்சீர் விகற்பமும் என இரு வகைத்தே” (நூற்பா, 208)
இருவகை வெண்டளையை உணர்த்துகின்றார். 1.காய் முன் நேர் 2.மா முன் நிரை ஆகும்.
அடி
பொதுவாக எவ்வுறுப்பையும் விளக்கிவிட்டுப் பின் அதன் வகைகளை விளக்கிச் செல்வது தொன்னூல் விளக்கத்தில் இயல்பு. அதனடிப்படையில்,
“அடி என்ப தளைத்த அம்சீரா நடைஅவை
குறளடி இருசீர் சிந்தடி முச்சீர்
அளவடி நாற்சீர் ஐஞ்சீர் நெடிலடி
கழிநெடிலடி ஐந்தே கடந்த சீர் இவற்றுள்
எண்சீர் மிக்க அடி எனில் சிறப்பு அன்றே (நூற்பா, 211)
தளையால் பிணிக்கப்பட்ட சீரோடு வருவன அடி. குறளடி முதல் கழிநெடிலடி வரை ஐந்து வகைப்படும். ஓரடியின்கண் இரண்டு சீர் முதல் எட்டு சீர்வரை வரலாம். எட்டு மிக்கது சிறப்பினவன்று என்று அடி இலக்கணம் உணர்த்துகின்றார்.
தொடை
“தொடை என்பது ஈரடி தொடுப்பதாம் அவை
அடைமுதல் மோனை அந்தம் இயைபே
இடையே எதுகை எதிர்மொழி முரண் அள
பெடையே அளபாம் என ஐ வகையே” (நூற்பா, 212)
எனத் தொடை பற்றியும் அதன் விகற்பம் பற்றியும் உணர்த்துகின்றார். தொடை ஐந்து வகைப்படும் எனவும், அந்த ஐவகையும் எட்டு வகையாக விகற்பம் பெறும் எனவும் குறிப்பிடுகின்றார். மேலும் அந்தாதி, இரட்டை,செந்தொடை என் மூன்றனையும் சேர்த்து தொடையும் தொடை விகற்பமும் நாற்பத்து மூன்று எனத் தொகையாக தொன்னூல் விளக்கம் உரைக்கின்றது.
வெண்பா
பா நான்கு என்ற கருத்திருக்க இந்நூல் ஐந்து என்று எடுத்துரைக்கிறது.
“வெண்பா அகவல் விரி கலி வஞ்சி
மருட்பா என ஐவகைப்பா அன்றியும்
துறை தாழிசை விருத்தம் தூக்கினம் மூன்றே” (நூற்பா, 219)
என ஐந்து வகைப்பா மற்றும் மூன்று பா இனம் பற்றியும் உணர்த்துகிறது. தூக்கு என்ற சொல் ’பா’ என்று முதன்முதலில் இந்நூலில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வெண்பா – இலக்கணம்
வீரமாமுனிவர் வெண்பாவின் இலக்கணத்தை,
“வெள்ளைக்கு இயற்சீர் வெண்சீர் விரவி
ஏற்கும் அளவடி ஈற்றடி சிந்தடி
ஈற்றுச்சீர் அசைச்சீர் உக்குறள் மிகலுமாம்” (நூற்பா, 220)
என்று கூறுகிறார். வெண்பா, இயற்சீரும் வெண்சீரும் பயின்றும் வரும். ஈற்றடிக்கு முந்தைய அடிகள் நான்கு சீர் கொண்ட அளவடியாகவும், ஈற்றடி சிந்தடியாகவும், ஈற்றடி ஈற்றுச்சீர் அசைச்சீராகவும் வரும். அசைச்சீர் குற்றியலுகரம் மிகுந்தும் வரும்.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக (குறள் 391)
ஓசை
”வெள்ளையுள் பிறதளை விரவா வெண்டளை
ஒன்றாய்ச் செயல் ஓசையாம் அஃதே” (நூற்பா, 221, வரி. 1-2)
வெண்பாவினுள் பிறதளைகள் வராது என்றும், வெண்தளை வருவதால் அஃது செப்பலோசை பெற்றது எனவும் அறிவுறுத்துகின்றார்.
”ஏத்திசை வெண்சீர் இயற்சீர் தூங்கிசை
ஒழுகிசை இரண்டும் உள எனில் ஆகும்” (நூற்பா,221, வரி 3-4)
தூங்கிசை, ஏந்திசை ஆகிய இரண்டும் கலந்து வருவது ஒழுங்கிசைச் செப்பல் ஆகும்.
”எதுவும் சிலகாலம் என்ப தறிந்தேன்
இதுவும் கடக்கும் இழப்பில்லை – எத்துணை
மாற்றம் அடைந்தாலும் மாற்றம் எனும்மொன்றே
மாறிடாத் தன்மையாம் மெய்” (அதி அந்தாதி- அதி மெய்ப்பொருள்)
யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை நூற்கள் செப்பலோசை மூன்றாகப் பிரிகின்ற பொழுது பாடலில் இடம்பெற்றுள்ள எதுகையின் எண்ணிக்கையை வைத்தே ஏந்திசை, தூங்கிசை, ஒழுங்கிசை என்று பொருள் படுத்துவர்.
வெண்பா-வகைகள்
யாப்பெருங்கலம் வெண்பா வகையினை ஐந்து என்றே குறிப்பிடுகிறது. இதனை அமிர்தசாகரர்
“குறள்சிந் தின்னிசை நேரிசை பஃறொடை
என்வைந் தாகும் வெண்பாத் தானே” (யாப்பருங்கலம், நூற்பா, 58)
என்றும், வீரசோழியம் ஐவகையுடன் ஆறாக,
”வேண்டிய ஈறடி யாற்குறள் ஆம்:மிக்க மூவடியால்
தூண்டிய சிந்தியல்:நான்கடி நேரிசை;தொக்கதனின்
நீண்டிய பாதத்துப் பஃறொடையாம்;இதனேரிசையே
நீண்டிசை யாங்கலி;நேரிசை பேதிக்கி லின்னிசையே
(வீர. யாப்பு, நூற்பா,111)
என ஐவகைப் பாக்களுடன் ஆறாவதாக “சவலை” என்ற பாவிகற்ப வகையை இணைத்து ஆறு என்றே குறிப்பிடுகிறது.
”குறள் சிந்து இன்னிசை நேரிசை சவலை
பஃறொடை என வெண்பா ஆறு அவற்றுள்
ஈரடி குறளே இருகுறள் சவலை” (நூற்பா, 222, வரி1-3)
இருகுறள் இணைந்து இடையே தனிச்சொல்லின்றி வருமேயாயின் அது ’சவலை’ எனப்படுகிறது.
பாவினம்
பாவினம் மூன்றனுள் குறள் வெண்பாவின் இனம் வெண்செந்துறை. எச்சீரானும், எத்தளையாயினும், எவ்வடியாயினும் வந்து இரு அடி தம்முள் அளவொத்து வரும் என்று உணர்த்துகின்றார். வெண்துறை, சீர், தளை, அடி, விரவி மூன்றடி முதல் ஏழடி வரைவந்து, ஈற்றடி சிலஅளவு குறைந்து வரும்.
முடிவுகள்
ஏனைய இலக்கண நூல்களில் செய்யுளுக்கான உறுப்புகள் ஆறு, எட்டு, முப்பத்திநான்கு என்ற வேறுபாடு இருப்பினும், தொன்னூல் விளக்கம் ஆறு என்றே கூறுகின்றது. தளை ஏழு என முந்தைய மரபிலக்கணம் மாறாமல் வகுத்துள்ளார். அடி வகையினை ஐந்து எனவும், சீர் நான்கு எனவும் முறைப்படுத்தியுள்ளார். செய்யுள் என்பதற்கான நேரடிப்பொருள் விளக்கமும் இந்நூலின்கண் காணமுடிகிறது. வெண்பாவிற்காக யாப்புக் கோட்பாட்டை வகுக்கின்றபொழுது அதன் ஓசை வகைகள் எவ்வாறு பயின்றுவரும் என்பதினையும் கூறியுள்ளார். வெண்பாவின் வகைகள் தொல்காப்பியத்தினின்று வேறுபட்டு ஐந்து என்ற வீரசோழிய முறையை ஒத்துப்போவதாக அமைகின்றது. தூக்கு என்ற சொல்லினைப் பா என்பதற்குப் பொருளாக பயன்படுத்தியுள்ளதையும் அறிய முடிகிறது.
குறிப்புகள்
- தமிழக வரலாறு (2000 வரை), சுவாமிநாதன் ப.65
- நன்னூல் விருத்தியுரை, நூற்பா-268, உரை.ப.214
- தொன்னூல் விளக்கம் நூற்பா-202, உரை.ப.125
- தொல்காப்பியம், பொருளதிகாரம். செய்யுள்.1
- இலக்கண விளக்கம், பொருளதிகாரம், செய்யுளியல்-1-34
- வீரசோழியம், யாப்பதிகாரம்-நூ-128, ப.175
துணை நின்றவை
- இளம்பூரணர் (உ.ஆ), தொல்காப்பியம், (2011), சாரதா பதிப்பகம், ஜி-4. சாந்தி அடுக்ககம், ராயப்பேட்டை, சென்னை – 600014
- சங்கரநமச்சிவாயப்புலவர், சிவஞான முனிவர் (உ.ஆ), நன்னூல் விருத்தியுரை, (2014), சாரதா பதிப்பகம், ஜி-4. சாந்தி அடுக்ககம், ராயப்பேட்டை, சென்னை – 600014
- சுப்பிரமணியன் ச.வே, தமிழ் இலக்கண நூல்கள், (2009), மெய்யப்பன் பதிப்பகம், 15, புதுத்தெரு, சிதம்பரம் – 608001
- சுப்பிரமணியன் ச.வே, (ப.ஆ), தொன்னூல் விளக்கம், (1978), தமிழ் பதிப்பகம், கஸ்தூரிபாய் நகர், அடையார், சென்னை – 600020
- சுவாமிநாதன். பேராசிரியர், தமிழக வரலாறு (2000 வரை), தீபா பதிப்பகம், 99, வீர வாஞ்சிநாதன் தெரு, பெருங்குடி, சென்னை – 600096
- நெடுஞ்செழியன். தே (ப.ஆ), திருக்குறள், (1985), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
- புத்தமித்திரனார், வீரசோழியம், (2011), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600098
*****
ம.சிவபாலன்
முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
பாரதியார் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் – 641046