க. பாலசுப்பிரமணியன்

சுய அடையாளங்களின் வல்லமைகள்

education-1
எப்படி ஒரு மனிதனின் உடல் அமைப்புக்கள் அவனுக்கு ஒரு உடல் பரிமாணத்தையும், உடல் அழகு மற்றும் திறன் என்ற வார்த்தைகளுக்கு ஒரு பொருளையும் கொடுக்கின்றனவோ, அதே போல் சுய அடையாளம் என்பது ஒரு மனிதனின் சிந்தனைக்கும், எண்ணங்களுக்கும், செயல்முறைகளுக்கும், வாழ்க்கைப் பாதைக்கும் ஒரு பொருளைக் கொடுக்கின்றது. ஆகவே, இளம் பருவத்திலிருந்தே கற்றலின் மூலமாகவும் அதைச் சார்ந்த பல இணைச் செயல்கள் மூலமாகவும் சுய அடையாளத்திற்கு ஒரு ஆரோக்கியமான பரிமாணத்தையும் பொருளையும் கொடுத்தல் மிக்க அவசியம். சிதைக்கப்பட்ட, கூறுபோடப்பட்ட அடையாளங்கள் ஒரு தனி மனிதனின் முழு வாழ்க்கையை பாதிப்பது மட்டுமின்றி சமூகத் தளங்களில் விபரீதமான சிந்தனைகளையும் செயல்களையும் உருவாக்க காரணமாக இருக்கின்றன. குற்றச் செயல்களில் ஈடுபடுதல், வன்முறைப் போக்குகளைக் கடைப்பிடித்தல், மற்றவர்களுடைய நலனைக் கண்டு அதைக் கெடுத்தல், வீணான வாக்குவாதங்களில் ஈடுபட்டு தன்மானப் பிரச்சனைகளை உருவாக்குதல் போன்ற பல நிகழ்வுகளுக்கு இந்த சிதைக்கப்பட்ட அல்லது கூறுபடப்பட்ட சுய அடையாளங்களே காரணமாக அமைகின்றன.

“அவையத்து முந்தியிருப்பச் செயல்” என்று வள்ளுவம் கூறுவது மிக முக்கியமான மனநலம் பாராட்டத் தேவையான கருத்து. பெற்றோர்களும், பெற்றோர்களுக்கு இணையாக குழந்தைகளின் வளர்ப்பில் பங்கு பெரும் ஆசிரியர்களும் ஒவ்வொரு குழந்தையையும், மாணவனையும் “அவையத்து முந்தியிருக்க” உதவ வேண்டும். பொதுவாக “இது உன்னால் முடியாது”, “இது உனக்கு வராது” என்ற கருத்துக்களை முற்றிலும் நீக்கி :”உன்னால் முடியும் தம்பி ” என்ற நம்பிக்கை வித்தை வேரூன்ற உதவ வேண்டும். இந்த நம்பிக்கை தான் சுய-அடையாளங்களை வளர்ப்பதற்கான ஒரு வித்து. தன்னம்பிக்கை உள்ள குழந்தைகள் தங்கள் அடையாளங்களைத் தாங்களே தேடுவது மட்டுமின்றி அதற்க்கான மானசீக உருவகங்களைத் தயார் செய்யத் தயங்குவதில்லை. இந்த உருவகங்களே கனவுகளாக மாறி, உள்ளுணர்வுகளை உந்தி, முதல் அடியை எடுத்துவைக்க உதவுகின்றன.

பிற்காலத்தில் பல திறன்களைத் தங்களிடம் தேக்கி வைத்துக்கொண்டு, இவைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று அறியாத பல பேருக்கு இந்த சுய அடையாளங்களின் வளர்ச்சியில் பல தேக்கங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. நல்ல ஆரோக்கியமான சுய அடையாளங்களை வளர்த்துக்கொண்டவர்கள் பல துறைகளிலும் “தொழில்-முனைவோர்”களாகவும் தொழில் முன்னோடிகளாகவும் வளர்ச்சியுற்றுள்ளனர்.

பள்ளிகளில் இந்த சுய-அடையாளங்களை வளர்ப்பதற்கு புத்தகங்களோ வகுப்பறைகளோ போதுமானவை அல்ல. கல்விசார் பாடத்திட்டங்களைத் தவிர, இணை மற்றும் கூடுதல் கல்விசார் முறைகள் இந்த அடையாளங்களை வளர்ப்பதற்கு பெரிதும் உதவுகின்றன. பேச்சுத்திறன்கள், ஆளுமை, தலைமை, மேலாண்மை, கூட்டுறவு சமூக விழிப்புணர்வு, முயற்சி, தோல்வி கண்டு துவளாமை,பணிவு, முடிவெடுத்தல் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான செயல்களில் தங்களுடைய சுய-அடையாளங்களின் முத்திரைகளை பதிப்பதற்கு இணை மற்றும் கூடுதல் கல்விசார் முறைகள் மிகவும் அவசியமானவை. ஆகவேதான் பள்ளிகளில் சிறு வகுப்புகள் முதற்கொண்டே பாடங்களுடன் இந்தத் திட்டங்களுக்குத் தேவையான நேரமும் முக்கியத்துவமும் கொடுக்கப்படுகின்றன. ஆனால், தற்காலத்தில் குழந்தைப் பருவம் முதலே வருங்கால வாழ்க்கைத் தொழிலுக்குத் தேவையான படிப்பை மட்டும் கொடுப்பதில் பெற்றோர்களும் பள்ளிகளும் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர் என்பது ஒரு வேதனையான நிலை. இது மாறவேண்டும்.

சுய-அடையாளங்கள் தன்னம்பிக்கையை வளர்ப்பது மட்டுமின்றி முயற்சிக்கும் தேடலுக்கும், படைப்பாற்றலுக்கும் தேவையான சக்தியைக் கொடுக்கின்றன. அதே நேரத்தில் இந்த அடையாளங்களின் வளர்ச்சி முறைப்படுத்தப்பட வேண்டும். இது நிலைகளுக்கு அப்பாற்பட்ட அதீத நம்பிக்கைகளை உருவாக்கக் கூடாது. அதீதமான நம்பிக்கைகள் உருவாகும்பொழுது கற்றலிலும் மற்ற செயல்களிலும் தடுமாற்றங்க நிலைத்தவறுதலும் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆகவே பள்ளிகளிலும் வீடுகளிலும் குழந்தை வளர்ச்சியில் கவனம் வைத்து தன்னம்பிக்கையை வளர்க்கும் பொழுது அதை முறைப்படுத்தலும் தேவையாகின்றது.

பொதுவாக பள்ளிகளிலும் வீடுகளிலும் கற்றலிலும் செயல்களிலும் குழந்தைகள் தவறுகள் செய்யும் பொழுது அதை சுட்டிக்காட்டுதல் ஒரு வழக்கமான செயல். ஆனால் அந்தத் தவறு ஏன் ஏற்பட்டது அதற்கான காரணங்கள் என்ன என்ற அலசலை விட்டுவிட்டு அதை அந்த குழந்தையின் அல்லது மாணவனின் தனிப்பட்ட தவறாக முன்னிறுத்தி குறை கூறும்பொழுது அது அவர்களின் சுய அடையாளத்தை பாதிக்கின்றது. “தோல்விகளின் காரணங்களை ஆராய்தல்” ஒரு பாரபட்சமில்லாத குறிக்கோள் வாய்ந்த செயலாக இருக்க வேண்டும். குறைகூறப்படும் சூழ்நிலைகளில் மாட்டும் வளர்கின்ற குழந்தைகள் நாளடைவில் அடையாளங்கள் சிதறுபட்டு தாழ்வுமனப்பான்மையுடன் சமூகத்தில் நடமாடுகின்றனர். அதே செயல் பாரபட்சமில்லா சூழ்நிலைகளில் செய்யப்பட்டால் அது அடையாளத்தின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் நல்ல அடிப்படையாக அமைகின்றது.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.