Author: இன்னம்பூரான்

  • கூகிளாண்டவரின் அசரீரி!…

    இன்னம்பூரான்

    கூகிளாண்டவரின் அசரீரி!

    doodle_for_google_India_past_winners

    தேர்தல் வரும்பின்னே ! ஆருடங்கள் வரும் முன்னே!

    கடந்த மூன்று மாதங்களாக ஒரு மக்களாலோசனை நடத்தி, கூகிளாண்டவர் எடுத்துரைப்பதாவது:

    இணைய வாசிகள் இந்திய அரசியலை பற்றி நுட்பங்களும், நாட்டு நடப்பும் அறிய ஆவலாக இருக்கிறார்கள். வரும் தேசீய தேர்தலில், தலைவர்களின் மோதல் மட்டுமில்லை; கட்சிகளின் கோட்பாடுகளும், உகந்த/கூடாநட்புகளும் பற்றியும், ராகுல் காந்தி vs நரேந்திர மோடி என்ற ஜடுகுடு பற்றியும் அறிய விழைகிறார்கள். மேலும், ஆன்லைன் போர்க்களம் அமர்க்களம்; ஆவண யுத்தத்தில் சத்தம் மிகை; தெருக்கோடி சண்டைகள் மண்டையை பிளக்கின்றன.

    2ஜீ மாயாமாலம், நிலக்கரி பதுக்கல், ஆதர்ஷம் இழந்த ஆதர்ஷ் கூத்து ஆகியவை பற்றி கூகிளாண்டவரின் கோயிலிலே உபாசனை. ராகுலரின் மஹாத்மியங்களும், ‘ஆம்’ ஆத்மி ‘இல்லை’ ஆன விவகாரமும் எங்கும் பேச்சு. 1984 & 2002 கலவரங்களும் வரலாற்று நோக்கில் மீள்பார்வையில் உளன.

    முதற்கண்ணாக லஞ்ச லாவண்யமும் லோக்பால் பிரச்னையும் தலைமை வகிக்கின்றன.

    இன்றைய பார்வை லோக்பால் பிரச்னை பற்றியது. சர்வ விசாரணை வல்ல லோக் பால் என்ற சூப்பர் தணிக்கையாளனை கண்டெடுப்பது பற்றி. மஹாராஜ ராஜ ஶ்ரீ அபிஷேக் சிங்வி என்ற காங்கிரஸ் ஒலிபெருக்கி தன் தலையிலேயே அபிஷேகம் செய்து கொண்டு, கண்டெடுப்பு கமிட்டியில் அமர ஃபாலி நாரிமென் என்ற பிரபல வழக்காளரும், மாஜி நீதிபதி கே.டி. தாமஸ் அவர்களும் மறுத்ததால் எமக்கு இக்கட்டு இல்லை என்று சப்பைக்கட்டு கட்டினார். ஃபாலி நாரிமென் என்ற பிரபல வழக்காளரும், மாஜி நீதிபதி கே.டி. தாமஸ் சொன்னதற்கு பதில் இல்லை. (அ-து) கண்டெடுப்பு கமிட்டி சிபாரிக்குமாம். அப்பறம் பிரதமர் தலைமையில், எதிர் கட்சி தலைவர் உட்பட்ட உப்பரிகை கமிட்டி பெரும்பான்மை முடிவு எடுக்குமாம்?

    இந்தியா! நீ எங்கே செல்கிறாய்?

    Image Credit: http://cdn.ndtv.com/tech/images/doodle_for_google_India_past_winners.jpg

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • பூதாதிகாசம் ஓரங்க நாடகம்

    இன்னம்பூரான்

    unnamed

    இடம்: கரும்புலியூர் ஆஸ்தானம்.
    நேரம்: சாயும் காலம்.
    பொருள்: அதுவும் இதுவும்.
    ஏவல்: ஜரிகா புத்ரன் என்ற ….
    பாத்திரங்கள்: பூதாதிகாசத்தனார் (தலை மாந்தர்)
    மாத்ருதீபனார் ( அவருடைய மைத்துனர்)
    ஏழுமலை ( எடுபிடி)
    அபய குசலாம்பிகை ( தலைவி)

    (திரை விலகுகிறது)

    வீட்டு முகப்பு: அபயகுசலாம்பிகை விலாசம். ஹால். சோஃபா இத்யாதி.
    ஏழுமலை தூசி தட்டுகிறான். பூதாதிகாசத்தனார் சுருட்டுப் பிடிக்கிறார். சாம்பல் ரத்னகம்பளத்தில் விழுகிறது. மாத்ருதீபனார் மோட்டுவளையை பார்த்துக்கொண்டபடியே அளவளாவுகிறார். அபய குசலாம்பிகை பாத்திரங்களை உருட்டும் சத்தம் கேட்டு, அதை பத்து மடங்கு அதிகப்படுத்துகிறான், மாடிப்படியிலிருந்து குதித்து ஆரவாரம் செய்து கொண்டு இறங்கின ஜரிகா புத்ரன். பூதாதிகாசத்தனாரின் சுருட்டை பிடுங்கி ஊதுகிறான். புகை மண்டலம். அவன் தான் ரெஸிடெண்ட் குட்டிச்சாத்தான்.

    அ (அபய குசாலாம்பிகை): [தனி மொழி] ‘எங்க அப்பா மஞ்சக்காணியாக கொடுத்த மாளிகை இது. ரத்னகம்பளத்தில் சாம்பல் போடுகிறார். ஒரு பிடி பிடிக்கிறேன் பாரு.’
    [கட கடா என்று பாத்திரம் உருளல். குமுறலோ! கூப்பாடோ ! யான் அறியேன். ]

    அ: (குரல் எழுப்பி.) ஏழுமலை. ஐயாவை ஒரு நிமிடம் உள்ளே வரச்சொல்லு. காப்பித்தண்ணி ஆறிப்போவுது.

    ஏ: அவரு எங்கே வரப்போறாரு. போத்தல் கேட்டாக. மச்சின பிள்ளையும் ஒரு கோப்பை வேணும்னாக.
    ஜரிகா புத்ரன் மெனக்கட்டு வந்து காப்பியை குடித்து விட்டு, எஜமானியம்மாவின் மூக்குக்கண்ணாடியை பிடுங்கிக்கொண்டு ஓடுகிறான். அமைதிக்குரல் கொடுத்து, ஏழுமலை அதை மீட்டு பாகசாலையில் கொடுக்கும் போது ஜரிகா புத்ரன் இருந்த விஸ்கியை குடித்து விடுகிறான்.
    அவனை தவிர, எல்லாரும் எரிச்சலோடு. அவனோ நிச்சலத்தத்துவன். மாத்ருதீபனாரோ சஞ்சலபுத்தி மனிதன். பூதாதிகாசத்தனாரோ ‘லொக்கு’ லொக்கு’ இருமல். காசநோய் உச்சக்கட்டத்தில். அவர் செத்தால் சொத்து நம் கையில் என்கிறான், ‘சூழ்ச்சி’ மாத்ருதீபம். அவனை அடக்கி வைத்திருப்பது, ஏழுமலை. அவன் தான் சீட்டாட அவனுக்கு கந்து வட்டியில் கடன் கொடுப்பவன். ஏகபுத்திரியாக ஏகபோகமாக வளர்ந்த அபய குசாலாம்பிகைக்கு ஏமாற்றம் தான் மிச்சம். குஞ்சு குளவான் இல்லை. சொத்து என்னமோ கரைந்து வருகிறது. அப்பன் வீட்டு சொத்து. ஆயிரம் பொய் சொல்லில்லே அவுக (அதான் பூதாதிகாசத்தனாருடைய அப்பன்காரரு) பொண்ணெடுத்தார். பையனுக்கு வேலை பர்மாவுலே இன்னாரு. அப்றம் தான் தெரிஞ்சது, அவரு பர்மா பஜாரை சொல்றாருன்னு. அதுக்குள்ளே விரைசா தாலிக்கட்டிப்பிட்டானே.
    இனி நாடக மேடை:

    மா (மாத்ருதீபனார்) : மாப்பிள்ளை சார்! இந்த குட்டிச்சாத்தானை கொன்னுப்போடணும். ஏழுமலை! அந்த துப்பாக்கி எடுத்துக்கிட்டு வா.

    ஏ: துப்பாக்கிலெ ரவை இல்லிங்கலே. பரவாயில்லையா? ஜ.பு. அதை எடுத்து குளத்திலெ போட்டுட்டான்.

    பூ (பூதாதிகாசத்தனார்): கொஞ்சம் மெதுவா பேசு மாத்ரு. உங்க அக்கா காதிலெ விளுந்தா ரணகளம் ஆயிடும். ஜ.பு. அவளுக்குத் தத்துப்பிள்ளை மாதிரி. அந்த மலையாளத்து மாந்திரீகனிடம் மந்திரிச்சுல்லெ உங்கப்பன் அவனை துணைக்கு அனுப்பினாரு.

    மா: உங்கப்பன் அது, இதுன்னு பேசினா நான் பல்லை ஒடைப்பேன். உங்கப்பன் யோக்யதை தெரியாதா என்ன? அக்காவோட மஞ்சக்காணி பங்களாவுக்கு போலி பத்திரம் எளுதி வச்சவன் தானே. அந்த கணக்குப்புள்ளே அவரு கிட்டேயும் காசு வாங்கினான். எங்கிட்டேயும் வாங்கில்லெ, சொல்லிப்போட்டான். நாங்க சுதாரிச்சுக்கிணோம். அக்கா! கொஞ்சம் வாயேன்…

    பூ: உனக்கு ஆயிரம் புண்ணியம் மாத்ரு. அவளை கிளப்பாதே. நான் கிளப்புக்குக் கூட்டிக்கிணு போய் உனக்கு தண்ணி ஊத்ரேன்.

    அ: என்ன திட்டம் போட்றீக, மாப்பிளையும், மச்சானும். வக்கத்த புருஷன். கடங்கார தம்பி. எங்க அப்பா மட்டும் இருந்தா, உங்களை கட்டி வச்சு அடிச்சிருப்பார்.

    பூ: (தனி மொழி): இங்க மட்டும் என்ன வாழ்ந்திருச்சாம். ஆட்டிப்படைக்கிறா.

    ஏ: அம்மா! ஐயா வண்டிக்கட்ட சொல்றாரு. எனக்கு கொஞ்சம் காப்பி தண்ணி ஊத்தம்மா. ஓடிட்றேன்.

    அ: ஹாலில் வந்து சத்தம் போடுகிறாள்: ‘என்ன நினச்சுக்கிட்டு வண்டி கட்ட சொன்னீக. நான் கோயிலுக்கு போறதா இல்லை. நேர்ந்து கொண்டிருக்கேனே, சிதற்தேங்காய் உடைக்கிறதா. உங்களுக்கு சுயமா சம்பாதிக்கிற புத்தி வரணும். நம்ம மாத்ருவுக்கு நல்ல பொண்ணா அமையணும் தான் வேண்டுதல். டேய்! ஜரிகா புத்ரா! ஐயாவுக்கு தூபம் போட்றா. கண்ணோல்லியோ.

    பூதாதிகாசத்தனார் தெருவை நோக்கி ஓட்றார். மாத்ரு கொல்லை பக்கம் ஓட்றான். அங்கே தானே அக்காவிடமிருந்து திருடிய சங்கிலியை புதைத்து வைத்து இருக்கிறான். ஜரிகா புத்ரன் தோண்டி எடுத்துட்டா.

    (திரை விழுகிறது)

    டிஸ்கி: இது அன்றாடம் நடப்பது தான். நிகழ்வுகள் கொஞ்சம் கொஞ்சம் மாறலாம்.

    சித்திரத்துக்கு நன்றி: https://d2nh4f9cbhlobh.cloudfront.net/_uploads/galleries/22032/poltergeist-1.jpg

    Share
  • ஸலபஞ்சிகே என்ற மணிமொழி

    இன்னம்பூரான்

    sala
    அன்பே, ஆரமுதே, ஆயிரம் அடைமொழி மணிமொழியே, பிரியமானவளே, காதலியே, தலைவியே, செல்லமே, என் கண்ணின் கருமணியே, ஸலபஞ்சிகே! கழுதே !

    உன் கண்ணசைவில் மதி மயங்கி, கொலுசு ஒலியில் மனதை பறி கொடுத்து, கூந்தலழகில் லயித்துப்போய்,உன் ஒயில் நடையில் மயங்கிப்போய், நாடி வந்தேன் உன்னை. நீ ஓடிப்போனாய். அது வெறும் பாசாங்கு தான், நான் உன்னை துரத்தி வரவேண்டும், வந்துன் அடிப்பொடியாக நின் காலடியில் தவமிருக்கவேண்டும் என்ற ஆசையை நீ குறிப்பால் உணர்த்தினாய் என்று என் அக்காவும், உன் சிநேகிதியும் ஆன சுந்தரி அடித்துச் சொன்னதை, புரிந்துகொள்ளும் வயது அப்போது எனக்கில்லை. நான் துடித் துடித்துப்போனேன். மனம் நொந்தது. உடல் வெந்தது, அர்ஜுனனைப்போல (‘…என் அவயங்கள் சோர்கின்றன. என் வாய் உலர்கிறது. என்னுடம்பு நடுங்குகிறது. மயிர் சிலிர்க்கிறது. … உடம்பில் எரிச்சலுண்டாகிறது. என்னால் நிற்க முடியவில்லை. என் மனம் சுழலுகிறது. -அம்மா! தாயே! பரதேவதையே ! இது மகாகவி பாரதியாரின் மொழியாக்கமாக்கும். ஹுக்கும்!) அவனுக்கு ஒரு விதமான விரக தாபம். எனக்கு உன்னை விழையும் விரகதாபம்.

    உன்னை தேடி குழாயடிக்குப்போனேன். பொண்டுகள் கூடும் இடம் அது தானே. என் வயது அப்படி. அறியாப்பருவம். குழாயடிப்பெண்கள் எல்லாருமே என் கண்ணுக்கு அழகாக இருந்தார்கள். எல்லாரையும் வெறித்துப்பார்த்த சேக்காளி மனோஹரன் உன்னையும் விழுங்குவது போல் பார்த்தான். அது எனக்கு பிடிக்கவில்லை. ஒரு தட்டுத் தட்டினேன். அவன் என்ன சொன்னான் தெரியுமா? ‘உன் கண்ணுக்கு அவளழகு. என் கண்ணுக்கு இவள் அழகு’ என்றான். வனஜா தான் அவனுடைய ஆள். நான் வனஜாவை பாதாதி கேசம் அளவெடுத்தேன் என்று அவன் கோபப்பட்டான். நீயே சொல். எல்லாப்பெண்களும் அழகாக இருப்பதால் தானே, எங்கள் கண்கள் அலை பாய்ந்து, நொந்து போகின்றன. நான் இப்படி எழுதுவது உனக்குப்பிடிக்காது. இந்த பொம்பளை வர்க்கத்துக்கே பொஸெஷன் ஒரு கவசம், கேடயம், கத்தி, கபடா எல்லாம். பிடிச்சுப்போன ஆம்பிளையை கடிச்சக்கணும். கசக்கணும். அந்தடை, இந்தண்டை போக விடக்கூடாது. நமக்குள் அந்தரங்கமாக இருந்த போது, உன் பாதங்களை நீவி விட்டுக்கொண்டிருந்தேன். அப்போது, நீ முனகிக்கொண்டே சொன்னது என்ன தெரியுமா? : ‘ஆம்பளைக்கு பெண்குட்டி கால்கட்டு இல்லை; அவன் தான் இவளுடைய தொண்டரடிப்பொடி ஆழ்வார்!’.

    நான் ஒரு அசடு. எப்போதும் சங்ககாலக்காதலை நுகர்ந்து, நுகர்ந்து, மனஸா, வாசா, அனுபவித்தவன். உனக்கு சங்கத மொழியின் இங்கிதமான அங்கதம் தெரியும். ரகுவம்சத்தில் ஶ்ரீராமனும் சீதையும் ‘தாமங்கம் ஆரோப்ய…’ என்று காளிதாஸன் எழுதிய சிற்றின்ப இலக்கியத்தை நான் அனுபவித்து உரக்கப்படித்த போது என்னை கட்டித்தழுவி என்னனம்மோ செய்தாய். லாகிரி தலைக்கேறி விட்டது. அப்போது செல்லமாக நீ கேட்டாய், ‘இந்த ரஸாபாசம் காளிதாஸன் ஏன் ஸீதாதேவியின் தொடையை ‘ரம்போரு’ (வாழைத்தண்டு) என்று உருவகித்தான் என்று. வாழைத்தண்டு வளைந்து கொடுக்காதே, என்று சொல்லி ‘கல கலவென்று சலங்கொலி போல் சிரித்தாய். இத்தனைக்கும் ‘சுட்றது‘ என்று சொல்லி என் கைக்கு அழுத்தம் கொடுத்தாய். காளிதாஸன் சொன்னது குளிர்ச்சி என்றேன். என் வாயை பொத்தினாய், கைகளிரண்டும் சில்மிஷத்திலிருந்தாலும் ! இத்தனைக்கும் நாம் ஆம்படையான் -பொண்டாட்டி இல்லை என்பதை மறந்தே விட்டோம். அதுவல்லவோ காதல். அளவு கடந்த காதல். வரை மீறிய காதல். பகற்குறியல்லவா. ‘லவ் இன் த ஆஃப்டர்நூன்’ சினிமா பார்த்தோமே, அந்த ஞாபகம் வந்தது. என்னிடம் குறும்பு செய்த நீ, நான் சில்மிஷம் செய்வதாக சொல்லி மோஹன சிரிப்பு ஒன்று உதிர்த்தாய். என்னை கிள்ளி விட்டு, ‘சினிமா பார்க்க விளக்கை அணைக்கிறான் பாருடா. அதை மெச்சிக்கணும்.’ என்றாய். அந்த ‘டா’ மோஹத்திலிருந்து நான் இன்னும் விடுபடவில்லை ! அதை சொல்லத்தான் இந்த கடுதாசி.

    கடுதாசி எழுதினால், ‘நலம். நலம் அறிய அவா’ என்று சம்பிரதாயமாக, அப்பாவுக்கும், அம்மாவுக்கும் எழுதுவேனே தவிர, உனக்கு எழுதுவதில், பொற்றாமரை பீடத்திலிருக்கும் தமிழரசியின் தேமதுர சொற்களை உதிர்ப்பேன். கட்டிப்பிடிக்க அதுவே ஏது. கேளடி கண்மணி! தொல்காப்பியத்தில் காம சூத்ரம். “… ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப்
    பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவர்க்கொருவர், தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார்” . (தொல்.பொருள் அகத்திணையியல் முதல்நூற்பா உரை). அகத்தின் அழகு முகத்திலே என்பேன். முகத்தில் முதலிலே முத்தம், பின்னரே ஒலியும், உணவும் என்க. இது அனுபவத்தின் கூறு. உன் அனுபவத்தைச் சொல்கிறேன். மாட்டிக்கிணையா !

    கடுதாசி நீளும். காதல் கடுதாசி சுற்றி சுற்றி அலையும். இங்கும் அங்கும் போகும். தேர் நிலைக்கு வந்தாலும், மார் லப்டப் தான். அதனால் நான் என்ன எழுதினாலும் நீ படிக்கணும். பிறகு, இருவரும் சேர்ந்து படிப்போம். அதற்கு நீ காமத்துப்பால் பதில் எழுத வேணும். எப்படி என்றா கேட்கிறாய்?

    “வீழும் இருவருக்கு இனிதே வளிஇடை
    போழப் படாஅ முயக்கு”

    திருக்குறள் 88: காமத்துப்பால்

    திருவள்ளுவரின் வாக்கு: காத்துக்கூட புக இடமெல்லாமல் கட்டித்தழுவி சுகிர்ப்பது தான் இருவருக்கும் இன்பம். சரி தான். இலக்கணம் வகுத்தோனும், அறம் வகுத்தோனும் கலவியின்பம் எடுத்தோதினர். நம் காமமிகுந்த காதலுக்கு இதுவே வேதபாடம்.

    இளங்கோவடிகள் மாஜி ராஜகுமாரன். முற்றும் துறந்த சமண முனிவர். சிலப்பதிகாரத்தில் அவருடைய படைப்பாற்றிலில் முங்கி எழுந்து மங்கல வாழ்த்துக்கூறும் ‘…கோதையர் ஏந்துஇள முலையினர்…’ எல்லாரும் அழகு பிம்பங்களே. அதான் குழாயடியில் மருகினேன். மருகி ஜொள்ளு வழிந்தனன். ஆனாலும்,

    ‘… வெண்தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு
    கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழத்
    தாரும் மாலையும் மயங்கிக் கையற்றுத்
    தீராக் காதலின் திருமுகம் நோக்கிக்
    கோவலன் கூறும்ஓர் குறியாக் கட்டுரையை..’

    கேட்டு மகிழ்ந்து அருகே வாடியம்மா, மணிமொழி. நாமும் தாரும் மாலையுமாக மயங்கிக் கையற்று…ம்ம்ம்ம்ம்ம்ம்…..

    கோவலன் காதல் மொழி தான் பேக் க்ரவுண்ட் ம்யூசிக்:

    ‘… மாசறு பொன்னே. வலம்புரி முத்தே.
    காசறு விரையே. கரும்பே. தேனே.
    அரும்பெறல் பாவாய். ஆர்உயிர் மருந்தே
    பெருங்குடி வாணிகன் பெருமட மகளே.
    மலையிடைப் பிறவா மணியே என்கோ?
    அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
    யாழிடைப் பிறவா இசையே என்கோ?
    தாழ்இருங் கூந்தல் தையால் நின்னைஎன்று
    உலவாக் கட்டுரை பலபா ராட்டித்
    தயங்குஇணர்க் கோதை தன்னொடு தருக்கி
    மயங்குஇணர்த் தாரோன் மகிழ்ந்துசெல் வுழிநாள்,
    வாரொலி கூந்தலைப் பேர்இயல் கிழத்தி…’

    சமண முனிவரின் இந்த ‘யாழிடைப் பிறவா இசை’ கேட்டு நாமும் மோனத்தில் ஆழ்வோமாக.

    பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் மஹாகவி பாரதி உண்மையை பதமறிந்து, பதம் பிரித்துச் சொன்னான்.

    பெண்கள்
    திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;
    வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும்-இந்த
    மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;
    வல்லி யிடையினையும் மார்பி ரண்டையும்-துணி
    மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;
    சொல்லித் தெரிவ திலலை,மன்மதக்கலை-முகச்
    சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ?

    புரிஞ்சதா ? பெண்ணே! மானே ! மரகதமே! மணிமொழியே !

    உன்னுடைய

    இன்னம்பூரான்

    22 02 2014

    அடடா! பெண்களை பார்க்கவும் லஜ்ஜைப்படும் நானா இந்த கடுதாசு எழுதினேன் ! ஊஹூம்! கனவில் எழுதின கடிதம். சொப்பனத்தில் கிடைத்த சோபானம்.
    மன்னித்து விடு, மணிமொழி. ஆமாம்! நீ அரு.ராமநாதன் எழுதியதை படித்திருக்கிறாயோ! அப்டின்னா, மன்னிக்க ஒன்றும் இல்லை.

    சித்திரத்துக்கு நன்றி: http://images.metmuseum.org/CRDImages/as/web-large/65_108.jpg

    Share
  • கனம் கோர்ட்டார் அவர்களே ! : 21

    இன்னம்பூரான்
    18 02 2014

    unnamed

    தருமமிகு சென்னைக்கு அருகே உள்ள வைணவ தலமாகிய ஶ்ரீபெரும்புதூர் என்ற ஊருக்கு அருகில் மாஜி இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி சுட்டுக் கொலையுண்டார். அந்தக் கொலையை யாரும் நியாயப்படுத்தாவிடினும், அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்குத்தண்டனை விதிக்கப்பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தண்டனை ஆயுள் தண்டனையாக, இன்று [18 02 2014] உச்சநீதி மன்றத்தால், Transferred Cases (Criminal) no.2 & 3 0f 2012 என்ற தீர்ப்பில் குறைக்கப்பட்டது. இது நான் எதிர்பார்த்தது தான். சொல்லப்போனால், சில நாட்களுக்கு முன் அளிக்கப்பட்ட ‘சத்ருக்ன செளஹான்‘ என்ற வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, இதற்கு பச்சைக் கொடி காட்டியது. ‘அறம் வென்றது’ ,‘நீதி கெலித்தது’, ‘தமிழகம் போற்றும் தீர்வு’ என்றெல்லாம், இதற்கு அரசியல் அரிதாரம் பூசாமல், சட்ட நுட்பங்கள், இந்திய அரசியல் சாஸனத்தின் தீர்க்கதரிசனம் ஆகிய நோக்கில், சற்று முன் பிரசுரமான அந்த தீர்ப்பு [இங்கே] அலசப்படுகிறது.

    முதற்கண்ணாக கொலையுண்டது யார் என்பது ஒரு பொருட்டு அல்ல, தண்டனை அளிக்க. பிச்சைக்காரனுக்கும் பிரதமருக்கும் ஒரே நீதி தான். அடுத்தபடியாக, இந்தியாவில் தூக்குத்தண்டனை சட்டப்படி செல்லும். ஆகவே ஒரு கொலையாளிக்கு அதை அளித்து விட்டு, மற்றவருக்கு அதில் இருந்து விடுதலை அளிப்பது நியாயம் இல்லை. எனினும், மிகவும் அரிதாகவே, பல பின்னணிகளை மனதில் கொண்டு தான் அந்த மீளமுடியாத தண்டனை அளிக்கவேண்டும் என்ற சட்ட மரபு நடைமுறையில் உள்ளது. இந்த பின்னணியில் நோக்கினால், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது உயிர் தப்பியதற்கு காரணம் குற்றத்தின் தீவிரத்தைக் குறைத்து நீதி வழங்கப்பட்டது இல்லை. சட்டமும், நீதி மன்றமும் அவர்களுக்கு மரண தண்டனை தான் விதித்தது. சட்டரீதியான விண்ணப்பங்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன் பின் அவர்களுக்கு ஜனாதிபதியிடம் கருணை மனு செய்ய வழி ஒன்று இருக்கிறது. அப்படி செய்யப்பட்ட மனுக்கள் 11 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுக் கிடந்தன. Justice Delayed is Justice Denied. மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பது வரையப்பட்ட சட்டத்தில் இடம் பெறவில்லை. ஆனால், சட்டப் புத்தகம் என்பது வரையப்பட்ட சட்டம் + அதற்குட்பட்ட ஆணைகள் + நீதி மன்ற தீர்ப்புகளின் அறிவுரைகள். அந்த வகையில் போனால், இந்த முடிவு என்றோ எடுக்கப்பட்டது எனலாம்.

    திரு.ராம்.ஜேத்மலானி என்ற பிரபல வக்கீல் மனுதாரர்களுக்காக தாக்கல் செய்த ஆவணங்களும், வாதமும் இனி நம் சட்ட வரலாற்றில் இடம் பிடிக்கும் என்பதில் ஐயம் இல்லை. மரணதண்டனை விதித்து விட்டு, வருடக்கணக்காக அந்தக் கைதிகளை இற்செறிப்பது வன்முறை, டார்ச்சர் என்பதை குழந்தை கூட புரிந்து கொள்ளும். ஆனால் 11 வருடங்கள் அவற்றை கிடப்பில் போட்டிருந்த ஜனாதிபதிகள் குழந்தைகள் இல்லையே !

    இப்படி அவர்களை தவிக்க விட்ட நிர்வாகத்தின் போக்கு இந்திய அரசியல் சாஸனத்தின் 21வது ஷரத்தை மீறுகின்றது, இந்தியா கையொப்பமிட்ட சர்வதேச நியதிகளை மீறுகின்றது என்ற வாதம், அவருடையது. அந்த வாதம் கெலித்தது.

    எதிர்வாதம் புரிந்த (புரியாமல் புரிந்த !) அரசு வக்கீலின் வாதம் விந்தையானது. கேலிக்குரியது. அது:
    அரசு தரப்பில் (ஜனாதிபதி உள்பட) தாமதம் அதிகம் இல்லை ! அப்படியே வைத்துக்கொண்டாலும் மனுதாரர்கள், ‘சத்ருக்ன செளஹான்‘ என்ற வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு. இங்கு செல்லுபடியாகும் என்று குறிப்பிட்டு சொல்லவில்லை. 11 வருடங்கள் தாமதத்தில், கரீக்டாக முன்பாதி உள்நாட்டு அமைச்சரகத்தில். ஒரு அதிகாரியின் கோப்புப் பையில் இந்த கருணைமனு கும்பகர்ண உறக்கத்தில் கிடந்தது !

    அடுத்த 5 1/2 வருட தாமதத்தை நியாயபடுத்த வழி ஒன்றுமில்லை !

    1974ல் எடிகா அன்னம்மா என்ற வழக்கில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள் ‘ மரண தண்டனை கைதிகள் காத்திருக்கும் வேளையில் நடைபிணம் போல’ என்ற எச்சரிக்கை மேற்படி அதிகாரிகளுக்கும், அரசு தலைமைக்கும், மாஜி ஜனாதிபதிகளுக்கும் தெரியவில்லை போலும் !

    ஈற்றடி 1: இந்த தீர்ப்பு வரவேற்கப்படவேண்டிய மைல்கல் தீர்ப்பு.

    ஈற்றடி 2: உண்மையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது உயிர்களைக் காப்பாற்றியது
    மேற்படி அதிகாரிகளும், அரசு தலைமையும், மாஜி ஜனாதிபதிகளும்.

    ஈற்றடி 3: முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தங்கள் கருணை மனுக்களில் திரும்பத், திரும்ப, அவரவர்கள் நடை பிணமாக வாழ்வதை பரிதாபமாகக் குறிப்பிட்டு உள்ளார்கள். அந்த நிலையிலிருந்து அவர்களை, மனுவை நிராகரித்து, அதன் அடுத்தக் கட்டத்தில், அவர்களை உய்வித்த தற்கால ஜனாதிபதி திரு. பிரணாப் முகர்ஜி அவர்களை பாராட்டத்தான் வேண்டும்.

    ஈற்றடி 4: இனி செக்ஷ்ஷன் 432 & 433A : Criminal Procedure 1973 க்கு உட்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கலாம்.

    சித்திரத்துக்கு நன்றி: http://photos1.blogger.com/blogger/3211/208/1600/john_abraham_bird_free.jpg

    Share
  • கதை கதையாம்! காரணமில்லையாம்! [1]

    இன்னம்பூரான்
    01 01 2014

    download-8

    புத்தாண்டு மலர்களில் கதைகள் பல வரும், கட்டுரைகளும், கவிதைகளும் கட்டியம் கூற. ஓவியங்களும், நிழற்படங்களும் அழகு சேர்க்கும். இவ்வருடமும் இவை வல்லமை இதழிலும், மற்ற இதழ்களிலும் இடம் பெறும் என்பதில் ஐயமில்லை. அவற்றில் எல்லாவற்றிற்கும் ஒரு பின்னணி இருக்கும். கதை அறம் பேசலாம். அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாம். கற்பனையின் விரிவுரையாக அமையலாம். கட்டுரைகள் கட்டி உரைக்க வேண்டும் என்பதெல்லாம் பழங்கதை ஆகி விட்டது. தற்கால கட்டுரைகள் கட்டில் அடங்கா. யாப்பில்லா கவிதைகள் தான் நடனமாடுகின்றன, தற்காலம். பேசும் சித்திரங்களும், பேசாமல் உரைக்கும் நிழற்படங்களும் நல்வரவு தான். புதிய படைப்புகளில் சுவை இருப்பதும் கண்கூடு. இது நிற்க.

    சில கதைகளை மேலோட்டமாக பார்ப்போம். ராமாயணமும், மகாபாரதமும் எத்தனை உபகதைகளை உள்ளடக்கி வைத்துள்ளன? நற்றிணையிலும், கலித்தொகையிலும், சங்கப்பாடல்கள் எல்லாவற்றிலும் ஒவ்வொரு பாடல்களும் கதை சொல்லவில்லையா? சிலப்பதிகாரமும், மணிமேகலையும் அருமையான தொடர்கதைகள் அல்லவா? வாசகர்கள் இனி எழுப்பப்போகும் எதிரொலிகளை நான் அறிவேன். சிறுகதைக்கு வா என்கிறீர்கள். வந்தாப்போச்சு. ஆனால் என் போக்கில் தான் போவேன். பேச்சுரிமையை போல் எழுத்து சுதந்திரம் என்று ஒன்று இருக்கிறதே. யாரும் படித்ததாகத் தெரியவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது சர்வார்த்த சாதகம்: மவுனம்!

    பஞ்சதந்திரம் ஒரு அருமையான கதைத்திரட்டு என்பது மட்டுமல்ல. பட்டுப்போல் மிளிரும் பழமை; நைலான் போன்ற புதுமை. நான் மற்றொரு கட்டுரையில் கூறியபடி இதன் செவி வாய் மரபு தொன்மையானது. புதுமை யாதெனில், கலிஃபோர்னியாவில் இந்த கதைகளை என்னிடம் கேட்க வந்த சிறார்கள் பல நாடுகளிலிருந்து வந்தவர்கள். கதை சொல்லிக்கு நன்றி சொல்கிறேன் பேர்வழி என்று அபாரமாக தினந்தோறும் நடித்துக்காட்டினார்கள். ஒரு நாள் தெனாலிராமனும் வந்தார், தன் குதிரையோடு. கும்மாளம் போட்டார்கள். அலிபாபாவும் நாற்பது திருடர்களும் வந்த போது, அடுத்த வீடு கிடுகிடுத்தது. குழலூதி முதலில் எலிகளை அகற்றிய மாயாவி குழந்தைகளையும் மயக்கிய ஜெர்மானிய கதை சொல்லும் போதே, ஒரு மூன்று வயது சிறுவன் கடுதாசியை சுருட்டிக் குழலூத, ஆசிரியக்குழுவும் நானும் வழி நடந்தோம். இப்படியெல்லாம் இருக்கும் போது கதைக்கு என்ன காரணம் வேண்டுமையா, வாசகரையா? அதனால் தான்: கதை கதையாம்! காரணமில்லையாம்!

    புரிகிறதா? படி தாண்டி எங்கேயோ போய்விட்டேன்! திரும்பி வந்தனனே!

    ஜூலை 21, 2013 அன்று நண்பர்கள் பலர் கூடினோம், சென்னையில். அத்தருணம் பிரபல தமிழ் எழுத்தாளர் கிருஷாங்கினியும், அவரது கணவராகிய பிரபல ஓவியர் அரவக்கோனும் வந்து எம்மைச் சிறப்பித்து ஒரு மூட்டைத்தூக்கி ஆக்கினர். அத்தனைப் புத்தகங்கள் பரிசுகளாக. அவற்றில் ஒன்று: விஷ்ணு சர்மனின் பஞ்சதந்திரம்: தமிழில் அன்னபூர்ணா ஈஸ்வரன் (1958): மறுபதிப்பாளர்: கிருஷாங்கினி. காப்புரிமை கேட்காத நூல். தமிழ் மொழிபெயர்ப்புக்கு பூர்ணபத்திரரின் பிரதியே மூலம். அதற்கு உகந்த காரணங்கள் உண்டு. அது பெரிய கதை.

    ஒரு கதை எடுத்து விட்றேன், இப்போதைக்கு. அது மட்டும் முன்னாலே கிடைத்திருந்தால், கலிஃபோர்னியாவில் கதை சொல்லி வரலாறு படைத்திருக்கலாம், தடபுடலாக. கொடுப்பினை அவ்வளவு தான். என்ன சொல்றேள்? அதையும், அடுத்து வரக்கூடியதெல்லாம், இவற்றை தழுவியும் இருக்கலாம்; தழுவாமல் இருக்கலாம். அல்லது பெரிய எழுத்து விக்ரமாதித்யன் கதையிலிருந்தும் வரலாம். அமெரிக்க பழங்குடிகள் கதைகளாகவும் இருக்கலாம். எங்கெங்கிருந்தோ வரலாம். நானே கதை விடலாம். கில்ஜாய் கோமளா மாமி டேக் ஓவர் பண்ணிக்கலாம்! என்ன சொல்றேள்?

    கதை கதையாம்! காரணமில்லையாம்! [1]
    ஊசித்தட்டான்

    “கதை கதையாம் அது ஒரு காரணமாம். காரணவீட்டில் ஒரு தோரணமாம். தோரணம் கட்டி கல்யாணமாம். கல்யாண வீட்டுக்கு சாப்பிடப்போனானாம். எலைக்கடியிலே பாம்பு இருந்ததாம். அந்த பாம்பை அடிக்க நெனச்சு தடி தேடினானாம். தடி சாக்கடை குத்தியதால சேறு பூசி இருந்ததாம். அந்த சேறை கழுவறதுக்காக தண்ணீர் தேடிப் போனானாம். தண்ணீர் நிறைய மீனாக ஓடியதாம். மீனை பிடிக்கலாம் என்று யோசிச்சு வலையெடுத்தானாம். வலையெல்லாம் கிழிந்து பொத்தலாக இருந்ததாம். பொத்தல் தைக்க ஒரு ஊசி எடுத்தானாம். ஊசி கை நழுவி கீழே விழுந்ததாம். அது உடனே ஒரு ஊசிதட்டாம்பூச்சியாக உருமாறி உருண்டு புரண்டு பறந்தே போய் விட்டதாம். பசி ஜாஸ்தியாகி கல்யாண வீட்டுக்கு வந்தானாம். கல்யாணம் முடிஞ்சு கதவை சாத்திக்கொண்டு எல்லாரும் போய் விட்டார்களாம். அவன் தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்து விட்டானாம். ஒப்பாரி வைத்து அழுதானாம்.”
    பூரணி (2009): செவிவழிக்கதைகள்.சென்னை: சொர்ணவள்ளி பிரசுரம்: பக்கம் 40,41)

    வாசகர்களே!

    நூறாண்டுகள் வாழ்ந்து அண்மையில் விண்ணுலகம் எய்திய பூரணி அவர்களுக்கு இந்தத்தொடர் சமர்ப்பணம். இந்த சமர்ப்பணம், நாகராஜனுக்கும், கிருஷாங்கினிக்கும் பூரண சம்மதம்.

    தொடரும்

    Share
  • நோட்டோலை

    இன்னம்பூரான்

    2

    சாக்கு சாக்கா காசு பணம் டோய்!

    கோக்கு மாக்கா சிக்கன் குருமா டோய்!

    நோக்கும் நேக்கும் நாக்குக் கேட்டாலும் டோய்!

    வாக்குக் கேக்கறான்னு மசியாதே டோய்!

    மகா கனம் பொருந்திய மகாஜனங்களே!

    விடுதலை வாங்கியது நன்நிமித்தமேயாயினும், வாக்களிப்பது ஜனநாயக உரிமையாயினும், குடிசை போட இடம் கேட்டு, அங்கு மனையொன்று அமைத்து, அடுத்த மனையை ‘லபக்கி’ மாடமாளிகை கட்டி, ஊரை வளைத்து கோட்டை கொத்தளம் எழுப்பி, உம்மை நடுத்தெருவில் விட்ட பிரதிநிதிகள் சிலரால் ஜனநாயகத்தின் நாயகம் எண்டேஞ்சர்ட் லிஸ்டில். களிம்போ! கட்டெறும்போ! வந்து குதித்தது நோட்டோலை ( NOTA). 2013 புள்ளி விவரம் கேளும். புள்ளி விவரம் ஒரு புதிய இலக்கிய தரவு! ஆமாம். புள்ளியில் விவரம் கொடுத்து சேதிக்குத் திரை போடலாம். விவரத்தில் புள்ளி போட்டு கதி கலங்க அடிக்கலாம். ஆட்டைத் தூக்கி மாட்டில் போடலாம். மாட்டைத் தூக்கி ஒட்டகத்தில் போடலாம். கயிறை மணலாக பிரிக்கலாம். யான் அந்த மாயாமாலங்கள் செய்ய தகுதியற்றவன். கொஞ்சம் உண்மையை கண்டு நடுங்குவோம்.

    மக்கள் மன்றத்தில், இந்த தேர்தல் கமிஷன் நோட்டோலை வாசிக்கிறது. ஷரத்து 158 படி(Representation of the People Act, 1951)இவை செல்லாத ‘நோ’ வாம்; நோவு தான்! இத்தனைக்கும் காத்த வீர்யனுக்கும், வீராயிக்கும் வாக்களித்தவர்கள் எந்த கவனத்தில் செய்திருக்கலாம் என்பது ஊகம். நோட்டோலை முத்திரை போட்டவர்கள் கவனம் செலுத்தித் தான் ‘ஒண்ணுமே உருப்படாது’ என்று தீவிரமாக சிந்தித்து இயங்கியவர்கள் எனலாம். நடக்கவேண்டியது, வேண்டாதது எல்லாம் நடந்து முடிந்த பின் இவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், டிபாசிட் இழந்தவர்களின் முகத்திரை கிழியலாம்.

    ஒன்று மறக்கலாகாது. ஒரு வாக்குச்சாவடியிலாவது இந்த நோட்டாலை முத்திரையாளர்கள் இல்லாமல் இல்லை. அதாவது, மக்களுக்கு புரிந்து விட்டது, இந்த பாணத்தின் மகிமை. மத்திய பிரதேசத்தில் பான்செமால் தொகுதி பழங்குடிகளுக்கு ஒதுக்கப்பட்டது. அங்கு நோட்டோலை போட்டவர்களின் எண்ணிக்கை தோற்றவர், கெலித்தவருக்குள்ள வித்தியாசத்தை விட அதிகம். அதாவது அவர்களில் பெரும்பாலோர் தோற்றவருக்கு வாக்களித்திருந்தால், அவர் கெலித்திருப்பார்! சர்வ அசக்தி படைத்த வாக்காளர்களே! கவனிக்கவும். இது பழங்குடி தொகுதி. போட்டி இருவர் மட்டும். இருவருக்கும் உள்ளூரில் நல்ல பெயரோ, கெட்ட பெயரோ, இரண்டுமோ இருந்திருக்க வேண்டும். பழங்குடி மக்கள் சக்திக்கு சலாம்! கவார்தா, கைராகர், கல்லாரி, டோங்கர்காவ்ம் தொகுதிகளிலும் இதே கதி. நக்சல் பிரச்னையால் பாதிக்கப்பட்ட பஸ்தார்-சர்குஜா பகுதிகளில் நோட்டோலை அலை, அலையாக: சித்ரகூட்: 10848; தந்தேவாடா-9677, கேஷ்கல்-8381, கொண்டகாவ்ம்-6773.ரஜிம்-5673, பாதால்காவ்ம் 5533. அரசு இதன் பின்னணியை நோக்கினால், பல உண்மைகள் கதவு திறக்கும்.

    வம்சாவளிக்கு ஆதரவு இல்லையோ? சர்ச்சைக்கு அப்பாற்படாத அஜீத் ஜோகியின் மகனுக்கும், மனைவிக்கு நோட்டோலை 7115, 1074. பின் தங்கிய பிராந்தியம் எனப்படும் சட்டீஸ்கரில் தான் நோட்டோலை அதிக. மெத்த படித்த டில்லியில் குறைவு. 460 வாக்காளர்களுக்கு ஷீலா தீக்ஷித் மேலும் நம்பிக்கையில்லை; அர்விந்த் கெஜ்ரிவால் மேலும் நம்பிக்கையில்லை. மத்ய பிரதேஷ் முதல்வர் சிவராஜ் செளஹான் மீது 4112 பேருக்கு நம்பிக்கையில்லை; ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா மீது 3729 பேருக்கு நம்பிக்கையில்லை.

    போறப்போக்கைப் பார்த்தால் நான் தேர்தலுக்கு நின்றால், என் பெயரை NOTA என்று மாற்றிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

    இப்படிக்கு,

    நோட்டா இன்னம்பூரான்

    09 12 2013

    உசாத்துணை:

    இன்றைய ஹிந்து இதழ்.
    இன்னம்பூரான்

    சித்திரத்துக்கு நன்றி: http://2.bp.blogspot.com/-5XCyte3dQZ0/UnNMi2PIEHI/AAAAAAABcvc/p9F9u1CshuY/s1600/2.jpg

    Share
  • தணிக்கைக்குணுக்கு-2

    இன்னம்பூரான்

    kunukku

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். பத்து நாட்களுக்கு முன்னால் 30 10 2013 அன்று தமிழ்நாட்டு சட்டசபையில் சமர்ப்பிவிக்கப் பட்ட ஆடிட் ரிப்போர்ட்டிலிருந்து ஒரு சோறு. அந்த கூத்தைக்கேளுமையா. 1400 ஊழியர்களின் மாதாந்திர சேமிப்பை கஜானாவில் கட்டி விடவேண்டும், அத்துடன் கார்ப்பரேஷன் பங்கையும் கட்டி விடவேண்டும் என்று 2003லேயே வந்த அரசாணையை திரஸ்கரித்தது,திருச்சி கார்ப்பெரேஷன் என்று ஆடிட் குற்றம் சாட்டியது, அந்த ரிப்போர்ட்டில். பத்து வருடமா இதற்கு என்று கேட்டு விடாதீர்கள். அந்த சேமிப்பை விதி மீறி வங்கிகளில் தங்க வைப்பதிலும் மாதக்கணக்காக தாமதம். முனிசிபல் கார்ப்பரேஷன் இதனால் விளைவித்த நஷ்டம் ரூபாய் 33.40 லக்ஷம். இது எந்த தெய்வத்துக்கு ப்ரீதி? என்ன தான் பதில் சொல்றாக என்று பார்த்தால்:

    ஆடிட் கிட்ட சொன்னது: எதிர்பாராத தாமதம் என்ற சால்ஜாப்பு.

    டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம்: ஆடிட்காரன் சொன்னது பழங்கதை; விதிப்படி செய்து விட்டோமே 2013ல். ஞொய்ங்!

    ( 2003லிருந்து தாமதமேனோ? -மவுனம்.)

    சில ஆவணங்கள் கிடைக்கவில்லை. அதான் தாமதம். (என்ன ஆவணமோ? ஆடிட் ரிப்போர்ட்படி அந்த சால்ஜாப்பு சொல்லவே இல்லையே.)

    எனக்கு என்னமோ தோன்றுவது இது தான்: என்னப்பா குப்பற விழுந்துட்டாயே. காயம் பட்டதா?

    ரத்தத்தைத் துடைத்துக்கொண்டு பதில்: விழுந்தேனா? நல்லாருக்கு போ! இது புருடா வித்தை.

    Image Credit: http://2.bp.blogspot.com/-crEqfwq7Tac/TngFR_bxj8I/AAAAAAAAEZE/G3Cm5UjEPHQ/s320/kunukku.JPG

     

    Share
  • தணிக்கைக் குணுக்கு – 1

    இன்னம்பூரான்

    Octroi-Nakaசொன்னால் பொல்லாப்பு. சொல்லாவிட்டால் சால்ஜாப்பு! இந்த ஆடிட்காரன் பண்ற உபத்ரவம் தாங்கலேயே, சுவாமி. வாஸ்தவம் தான். இந்த ஆக்ட்ராய் முனிசிபல் வரி இருக்கே, அது ஒரு பொன் வாத்து. ஆக்ட்ராய் நாக்கா (பிடிக்கிற இடம்) சுத்துப்படைகளுக்கு செம காசு. முனிசிபாலிடிக்கும் கொள்ளை வரும்படி. அதான் இந்த இன்னம்பூரான் 1966ல் உகாய்க்கு மாற்றல் ஆகி வரும்போது சூரத் முனிசிபாலிடி அவனோட பழைய காருக்கு ஆக்ட்ராய் நோட்டீஸ் அனுப்பிச்சு கலங்கடிக்கப்பார்த்தால், அவன் பிளேட்டை திருப்பிப்போட்டு நம்ப்ளை கலங்கடிச்சுட்டான். அதான் சொல்றேனே: சொன்னால் பொல்லாப்பு. சொல்லாவிட்டால் சால்ஜாப்பு! இந்த ஆடிட்காரன் பண்ற உபத்ரவம் தாங்கலேயே, சுவாமி. இது நின்று போக. பழங்கதை.

    இன்றைய ஜூஸ். ஐ மீன் ந்யூஸ். இந்த ஆக்ட்ராய் வாங்கறதெல்லாம் காண்டிராக்ட்லெ விட்றுவோம். கட்சிக்காரன், பிரும்ம சேனை, லோக்கல் பிஸ்தா, அது இதுன்னு கண்ட கழுதையெல்லாம் காண்டிராக்ட் எடுக்கும். நாலு வருஷம் ஆச்சுனா காலாவதி; புனரபி ஜெனனம். ஆனா பாருங்கோ ஒரு மாமாங்கமா 36 காண்டிராக்ட்டை புராணகாலத்து ரேட்டுலெ வச்சுருக்கோம். ஆடிட்காரனுக்கு என்னையா நஷ்டம்? ஒத்துக்கிறோம். ஏழு ஜன்மத்துக்கு – ஐ மீன் -ஏழு வருஷமா ஒரு காண்டிராக்ட் மேலெ கூட கையை போடலை. எங்களுக்கு எத்தனை வேலை இருக்கு? ஆமாம். 407 ஆக்ட்ராய் காண்டிராக்ட் ஏஜண்டுகளுக்கு சட்டப்படி லைசன்சே ரத்து. அவங்க வரி வாங்குவது சட்ட விரோதம்னு சொல்றாய்ங்களே, அந்த வரி நமக்கு வந்து சேரவில்லை. வழியிலேயே கடப்ஸ். கடைத்தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடச்சிட்டாய்ங்கனு சொன்னா, அதையும் ஏத்துக்க மாட்டேங்றான். சரி. போனவருஷம் இதுக்கெல்லாம் ஒரு முடிவு காணணும்னு டைட் பண்ணா, அவங்க கலாட்டா பண்ணியே தப்பிச்சிட்டாய்ங்க அப்டிணு சொன்னாலும் ஏத்துக்க மாட்டேங்க்றான். அரசாங்கமே இந்த பாவப்பட்ட ஆக்ட்ராய் வரியை தூக்கிப்பிட்டு லோக்கல் பாடி வரி (பேர் என்ன வச்சா என்ன. அதே காண்டிராக்ட்காரன் தான் வருவான்.) போடுவாக. பொறுத்து வாரும் என்று சொன்னாலும் இந்த ஆடிட்காரன் காதுலெ போட்டுண்டாதானே. ஆடிட்காரன் கால்லெ ஏன் விழணும்? அதுக்குத்தான் காண்ட்ராக்ட்காரன் இருக்கான்லெ. இது எல்லாம் நடப்பது: மும்பாய் மினிசிபல் கார்ப்பெரேஷன், ஐயா. ரிப்பன் பில்டிங்க் இல்லை.

    உசாத்துணை:

    http://timesofindia.indiatimes.com/city/mumbai/Unlicensed-octroi-agents-collecting-levy-since2006-CAG/articleshow/25346078.cms

     

    சித்திரத்துக்கு நன்றி: http://images.mid-day.com/2013/may/Octroi-Naka.jpg

     

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • உயிர் பெறுமா நீதியின் குரல்?

    உரத்த சிந்தனை

    இன்னம்பூரான்

    “ மக்கள் தொகுதிக்கும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கும் அன்யோன்யமான தொடர்பு இருக்கவேண்டும்…அவர் தொகுதியின் தேவைகளை நிறைவேற்றவும், மக்களின் அபிலாஷைகளை மதிக்கவும், கருத்துக்களை கேட்டறியவும் பாடுபடவேண்டும். மக்களும் அவருடைய பாவனைகளை தங்கள் பக்கம் திருப்பவும், அவரை தட்டிக்கேட்கவும் முடிய வேண்டும்…”

    ~ இந்திய அரசியல் சாசன கூட்டுக்குழு அறிக்கை: முதல் பாகம் -1933-34 (இங்கிலாந்து பிரபுக்கள் மன்றமும், மக்கள் சபையும்: பக்கம் 110)

    அன்றாட அரசியல் நிகழ்வுகள் மக்கள் மன்றத்தில் அலசப்படும்போது, அவற்றின் பின்னணிகளும், அடித்தளங்களும் மறக்கப்படுவதையும், மறைக்கப்படுவதையும் கண்கூடாகக் காண்கிறோம். தற்காலம், நமது இந்திய நாடாளுமன்றமே சர்ச்சைக்கு உட்பட்டுள்ளது. வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளில் சிலரின் அணுகுமுறைகளும், செயல்பாடுகளும், ஒழுங்கீனங்களும், கவலையை தருகின்றன. மக்களாட்சியின் மேலாண்மை குலைந்து விட்டது என்ற பேச்சு, ஊடகங்களில் மிகவும் அடிபடுகிறது. ஜனநாயகம் தான் சுதந்திர இந்தியாவின் ஆணிவேர் என்பது இந்திய அரசியல் சாசனத்தின் முத்திரை. குந்தகம் விளையாமல் அதை பாதுகாப்பது நம் கடமை. அதை செவ்வனே நிறைவேற்ற, பின்னணிகளையும், அடித்தளங்களையும், தற்காலத்து விவாதங்களிடமிருந்து சற்றே தள்ளி நின்று, பரிசீலிப்பது நலம் பயக்கும்; நடுவு நிலை ஆய்வுகளை முன் கொணரும். ஜனநாயகத்தின் பல பரிமாணங்களை தனித்தும், தொகுத்தும் புரிந்து கொள்வதால், பொது மக்களில் ஒவ்வொருவரும் தனது வாக்கை அளிப்பது முதல், பிரதிநிதி/அரசு நிர்வாகம் ஆகியவற்றை கண்காணிக்கமுடியும். பொது நலம் சார்ந்தக் கருத்துக்களை அமலாக்குவதைத் துரிதப்படுத்த முடியும். அதற்கான வேத பாடம் தான் மேற்கோளில். அந்த கூட்டுக்குழு தன்னுடைய பொறுப்பை முழுமையாக உணர்ந்து, இந்தியாவிலிருந்து சான்றோர்களை வரவழைத்து, அவர்களின் கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டது. அவர்களில் ஒருவர் பாபா சாஹேப் அம்பேத்கார் அவர்கள்.

    சாக்கோ தலைமையிலான நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இறுதி அறிக்கையை நிறைவேற்றி, தோழமை கட்சியான தி.மு.க. உள்பட, முக்கிய கட்சிகளிடமிருந்து எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்டுள்ளது. இது புதிது அல்ல. இன்று வரை, இந்தியாவின் பாராளுமன்ற கூட்டுக்குழுக்களின் சாதனைகள் சொல்லிக்கொள்ளும் மாதிரி இல்லை. எல்லாம் இழுபறி தான். முதற்கண்ணாக, நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழுவின் விருத்தாந்தம், இந்த ஸ்பெக்ட்ரம் கூட்டுக்குழுவின் இடம், பொருள், ஏவல் பற்றி அலச உதவும்.

    மாநில சட்டசபைகளும், நாடாளும் மன்றமும் பலவிதமான, பளுவான கடமைகளை ஆற்றுவதால், அவை குழுக்கள் மூலமாக இயங்குவது உலகளாவிய நடைமுறை. தணிக்கை அறிக்கைகளை ஆராயும் பொதுக்கணக்குக்குழு, மனுக்களை ஆராயும் குழு, அரசு கம்பெனிகளை ஆராயும் குழு, ஒவ்வொரு துறையையும் கண்காணிக்கும் குழு போன்றவை எப்போதும் நிலுவையில் உள்ளவை. குறிப்பிட்ட நடவடிக்கையை ஆராய, இரு மன்றங்களும் ஒத்துப்போய் அல்லது அவைத்தலைவர்கள் தீர்மானித்து, குழுக்கள் நியமிக்கப்படுவது உண்டு. அவை தான் கூட்டுக்குழுக்கள். நமது அரசியல் சாஸனமோ, நாடாளுமன்ற மரபோ அவற்றை பற்றிய வரையறைகளை விதிக்கவில்லை. அதன் காரணம் நாடாளுமன்றத்தின் ஆளுமையை மதிக்கும் அணுகுமுறை. ஆனால், ஒவ்வொரு கூட்டுக்குழுவும் விட்ட குறை தொட்ட குறையாகவே இயங்கியுள்ளன. இந்திய அரசியல் சாஸனம் 1950ல் அமலுக்கு வந்தது. 37 வருடங்களுக்கு கூட்டுக்குழு அமைக்க வேண்டிய நிர்பந்தம் நமது குடியரசுக்கு ஏற்படவில்லை. தணிக்கை அறிக்கைகளை ஆராயும் பொதுகணக்குக்குழுவின் தலைமை, முக்கிய எதிர்க்கட்சிக்கு என்ற அருமையான மரபு ஆளும் கட்சிக்கு தர்மசங்கடமானது. போஃபோர்ஸ் பீரங்கி விவகாரம் 1987ல் தலையெடுக்க, ஆளும் கட்சி உபத்ரவம் தாங்காமல், ஒரு கூட்டுக்குழுவுக்கு அடி கோலியது. எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்தது. அதன் அறிக்கையை நிராகரித்தது. அடுத்த இரண்டு கூட்டுக்குழுக்களும் (1992, 2001) தாறுமாறான பங்குச்சந்தை வஞ்சகங்களை ஆராய்ந்தன. அவற்றின் அறிக்கைகளின் மேல் சொல்லிக்கொள்ளும் படி நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. குளிர்பானங்களில் கிருமிநாசினிகள் கலந்துள்ளன என்ற குற்றச்சாட்டை விசாரித்த கூட்டுக்குழுவின் அறிக்கை அந்த குற்றச்சாட்டு உண்மை என்றது. அத்துடன் சரி. நோ ஆக்க்ஷன். குளிர்பானங்கள் இன்றும் சக்கை போடு போடுகின்றன. குடிநீர் பிரச்னை தீரவும் இல்லை.

    அடுத்த கூட்டுக்குழு ஸ்பெக்ட்ரம் சிக்கலை பற்றி. அது தான் இந்த பாடு படுகிறது. 30 உறுப்பினர்களில் பாதி, அதாவது 15 உறுப்பினர்கள்,குழுத்தலைவர் மீது நம்பிக்கையில்லை என்று லோக்சபை தலைவரிடம் மனு கொடுத்து வரலாறு படைத்தனர். ஆக மொத்தம் கூட்டு இல்லை. எல்லாம் வழ, வழ, கொழ, கொழ தான்! தற்காலம் வருமுன்காப்போன் ஆகிவிட்ட அரசு நிர்வாகம், ஹெலிகாப்டர் ஊழல் பற்றி விசாரிக்க ஒரு கூட்டுக்குழுவுக்கு ஏற்பாடு செய்து விட்டது. மேற்படி நடவடிக்கைகளை சீர் தூக்கிப்பார்த்தால், எதிர்க்கட்சி தலைமையில் இயங்கும் பொதுக்கணக்குக்குழுவின் அறிக்கைகளை நீர்த்துப்போக செய்யத்தான் இந்த கூட்டுக்குழு உபாயம் பயன்படுவதாக, நமது நாடாளுமன்ற வரலாறு கூறுகிறது.

    சுருங்கச்சொல்லின், இது வரை இந்திய பாராளுமன்றத்தின் கூட்டுக்குழுக்கள் அவசியமான பின்னணியில் நியமிக்கப்படவில்லை; அவை பிரிதிநித்துவ ஜனநாயகத்துக்கு இணங்க நடவடிக்கைகளை அமைத்துக்கொண்டதாக சொல்வது கடினம். பொதுக்கணக்குக்குழுவின் அறிக்கைகளை நீர்த்துப்போக செய்வது இந்திய அரசியல் சாஸனத்தை அவமதிக்கும் செயல் என்றால்,அது மிகையாகாது.

    நன்றி: தினமலர்

    Share
  • நல்ல மாட்டுக்கு!….

    இன்னம்பூரான்

     

    நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதுமாம், சுரணை வர. அசோகர், அக்பர், கரிகாலன் போன்ற நிர்வாகிகளால் ஆளப்பட்ட ‘காமதேனு’ இந்திய மக்களுக்கு எத்தனை சூடுகள், ஆண்டவா! நமது மந்திரிமார் ஆளாளுக்கு ராசா. வச்சதே சட்டம். கொண்டதே கோலம். சராசரி இந்தியன் வருமான வரியை பைசல் செய்து ஜூலை 31க்குள் கட்டி, ஆவணத்தை பதிவு செய்யவில்லை என்றால், நிதி அமைச்சரகம் பிறாண்டிப்பிடும், பிறாண்டி. ஆனா பாருங்கோ. 1966ல் வருமானவரியை அறவே மறந்து வரலாறு படைத்தவர் பாபு ஜகஜீவன் ராம். லஜ்ஜையை இழப்போம் என்று வலுக்கட்டாயமாக கஜ்ஜை கட்டிக்கொண்டு நியாயத்தையும், தர்மத்தையும் செய்கைகளால் குலைக்கும் தலை மாந்தர்களுக்கு சூடும் இல்லை, சுரணையும் இல்லை என்ற தோற்றம் நம்மை அலக்கழிக்கிறதே.

    சுதந்திர இந்தியாவில் அமைச்சர்களுக்கான நெறி ஒன்று உளது. அதன் படி மத்திய/மாநில அமைச்சர்பிரான்கள் தங்களின் சொத்து சுதந்திரம், சுற்றத்தின் சொத்து சுதந்திரம், வர்த்தக ஈடுபாடுகள் வகையறா பற்றி பிரதமரிடம்/ முதல்வரிடம் வருடாவருடம் ஆகஸ்ட் 31க்கு முன்னால் அறிவிக்க வேண்டும். போதாக்குறைக்கு இவர்களுக்கு ரிமைண்டர் வேறே. இந்த வருடம், உரிய காலத்தில் அலக்ஷ்யமாக அந்த அறிவிப்பை தராத நம்பர் ஒன் ஆசாமிகள்;

    ஜனாப் குலாம் நபி ஆசாத்;

    சட்டம் பேசும் சட்டாம்பிள்ளை கபில் சைபல்;

    நிலக்கரி சர்ச்சையில் சற்றே மாட்டிக்கொண்டிருக்கும் ஶ்ரீபிரகாஷ் ஜைஸ்வால்;

    திரு. பல்லம் ராஜு;

    திரு. ஹரீஷ் ராவத்.

    அலக்ஷ்யமாக அந்த அறிவிப்பை தராத நம்பர் டூ ஆசாமிகள்;

    உலகாளும் ஆசை கொண்டிருந்த திரு.சசி தரூர்.

    ஹோம் இலாக்கா ஆர்.பி.என். சிங்.

    ஆந்திரா மாமி டி.புரந்தேஸ்வரி.

    பிரதீப் ஜைன்.

    அதிர் ரஞ்சன்.

    இன்றைய தேதி வரை அதை சமர்ப்பித்தவர்கள்: ஏ.கே.அண்டனி, ஷரத் பாவர், சுஷீல்குமார் ஷிண்டே,பி.சிதம்பரம், வீரப்ப மொய்லி, மல்லிகார்ஜுன கார்கே, ஆஸ்கர் ஃபெர்ணாண்டெஸ், சால்மன் குர்ஷித்.

    இந்த தொட்டகுறை தொடாதகுறை சமாச்சாரங்கள் மத்திய அரசை சார்ந்தது. மாநில அரசுகளில்  எப்படி நடக்கிறதோ!!! இன்றைய சூடு படி 14 காபினெட் அமைச்சர்கள், 21 உப அமைச்சர்கள் கமுக்கமா இருக்கிறார்கள் போலும். இந்த அழகில் தேர்தல் வரும் சின்னங்கள் தென்படுகின்றன.

     நீங்க என்ன பண்ணுவேள்?

     

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

     

    www.olitamizh.com

    Share
  • பளிஞ்சாடிரடி குடு குடு…

    இன்னம்பூரான்

    windowslivewriter8cae7123c029-14583india-electricity-shortage10என்றோ ஒரு நாள், ஜம்பூத்வீபத்தின் தென் பிராந்தியத்தில் சடுகுடு சாம்ராஜ்யத்தை ‘ராஜ கம்பீர்ய பராக்கிரம வீர தைர்ய மதன காம மஹராஜா’ எனப்படும் மைனர் பையன் கிச்சு கிடுக்கிப்பிடி நிர்வாஹம் செய்து கொண்டிருந்தான். அந்தப்புரத்து அந்தரங்கத்தில் அடாவடி செய்யுமவன், அமைச்சர் அறிவுரையை அறவே அழிப்பதில் குறியாக இருப்பான். கேளிக்கை என்று இறங்கி விட்டால், இஞ்சி தின்றவுடன் தேறல் குடித்த குரங்கு மாதிரி தொம் தொம் என்று குதிப்பான். அவனுடைய துள்ளலோசை உலகெங்கும் எதிரொலிக்கும். எதிராளி போர்க்கொடிதூக்கினால், ஓடி ஒளிவான், அந்த பயந்தாங்கொள்ளி. அவனது நிர்வாகத்திறனின்மை பகிங்கிர ரஹஸ்யம் என்றாலும், அதை பற்றிய விமர்சனம் மட்டுறுத்தல் செய்ய்ப்பட்டிருந்தது. இத்தனைக்கும் மேதாவிலாச ராஜ்யபாரம் வகித்த அவனுடைய அப்பன் நிஜமாகவே ராஜ கம்பீர்ய பராக்கிரம வீர ‘வாகை சூடி’ மஹராஜா தமிழரசர். எதுவும் மிதம் அவருக்கு. ஜனோபகாரம் தான் அவருக்கு இலக்கு. அதனால் தான் தாராளமாகவே ராஜ்ய பரிபாலனம் பற்றிய செய்திகளை, ஆணைகளை, அவற்றின் பின்னணி, பிரதிபலன்களை கோட்டை வாசல் ராஜபேரிகை மூலம் ஒலிக்கவேண்டும்; ஒளிவு, மறைவு கூடாது; தர்பார் ஹாலில் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்றெல்லாம் கட்டளையிட்டிருந்தார். வரலாற்றை போற்றி பணிந்து பின்பற்றும் பாரதவர்ஷத்தில், அதனால் தான் தகவல் அறியும் உரிமை சட்டம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டது என்று மார் தட்டிக்கொள்கிறார்கள், தற்கால சாணக்கியர்கள். கறுப்புப்பணாதிபதிகள், லஞ்ச வாவண்ய பிரபுகள், ஹாய் ஹவாலா ஹைஸ்ட்ரீட் கொள்ளையர், பினாமி சுனாமிகள் ஆகியோரின் பட்டியல் கேட்டாலே, கோபாவேசத்தில் ரோமம் சிலிர்த்து, முகம் சிவந்து, கண் துடிக்க, செவி மடங்க, உதடுகள் ஆட, தகவல் மறுக்கும் Official Secreteers ஆகிவிடுகிறார்கள் மேலாண்மை பிரமுகர்கள்.

    இப்போது அந்த black listல் சேர்ந்து விட்டது தமிழ்நாட்டு மின்சார வாரியம். தமிழரசரை உதறிவிட்டு கிச்சு பரமஹம்சாதிபதியின் சிஷ்யகோடி ஆயினர் தமிழ்நாட்டு மின்சார வாரியம்.

    Point at issue: மின்சாரம் திருடுபவர்களின் பட்டியல். வர வர மாமியார் கழுதை போல் ஆன மாதிரி, வருடாவருடம் மின் திருடுகள் அதிகரித்து வருகின்றன. 2007-8ல் 3746 திருட்டுகள்; 2012-13ல் 8166. ஏப்ரல் 2013: 699. பேஷ். கெடுவுக்குள் மின்கட்டணம் கட்டத்தவறிய மின்வெட்டு பலியாடுகள் ஆகிய சராசரி சிறு நுகர்வோர்களுக்கு கணிசமான கறார் அபராதம். திருடனுக்கு மறைமுக ஆதரவா? அதனால் அந்த அபராதிகளின் பட்டியல் தர மறுக்கிறார்களோ?

    தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஷரத்து (8 f j) என்ற குடையின் கீழ் குளிர் காயும் மின்வாரியம் அந்த பட்டியல் அளிக்க மறுப்பது ஜனநாயக்கு முரண். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஷரத்து (8 f j) பட்டியல்தாரர்களுக்கு அபாயமோ அல்லது விசாரணைக்குத் தடங்கல் ஆக இருந்தால் தான் உகந்த  வழிமுறை. அதன்படி விவரம் அளிக்க மறுப்பது பிணம் தின்னும் சாத்திரம் போல்.உண்மை யாதெனில், பரம்பரை மின் திருடர்கள் அரசியல் கட்சிகள். கோடிக்கணக்கில் கந்து வசூல் செய்து, அலங்கார பந்தல் போடும் அரசியல் கட்சிகள் ஒளி திருட தயங்குவதில்லை. அவர்களை காட்டிக்கொடுக்க அஞ்சுகிறது மின் வாரியம். அப்படியானால், கோடிக்கணக்கான அந்த செலவை ஏற்றுக்கொளவது, வோட்டுப்போடும் மக்கள்.

    மின் வாரியம் மக்களுடன் தம் பிடித்து பளிஞ்சாடிரடி குடு குடு… விளையாடுகிறது, கிச்சுவின் கேளிக்கைப் போல. உருப்பட்டமாதிரி தான்!

    Image Credit: Google

    Share
  • அன்பும் அழகும் ஆராதனையும்

    இன்னம்பூரான்

    Unknownமஹாகவி பாரதியார் புதுவை மாந்தோட்டம் ஒன்றில் அமர்ந்து ‘குயில் பாட்டு’பாடினார். அந்த தோட்டம் மறைந்து விட்டது. குயில் என்னமோ பறந்து விட்டது. பாரதியார் அமரராகி விட்டார். பாடல் தங்கிவிட்டது. மறையாது. நமதுநினைவலைகளும் எங்கெங்கோ சஞ்சாரம் செய்பவை.

    அவை பேசத்தொடங்கி விட்டன.

    அழகிய சோலை. மலர்க்கொடிகள். பூத்துக்குலுங்கும் செடிகள், காயும் கனியுமாக தாவரமயம். அமர்ந்திருந்த கவிஞருக்கு ஆனந்தமாக இருந்தது. ஒட்டுமாங்கனி தொங்கும் கைக்கெட்டிய கிளையில் ஒரு பஞ்சவர்ணக்கிளி வந்து அமர்ந்தது. கொஞ்சம் மெளனம். அது மெல்லிய குரலில் இசை பாடத் தொடங்கியது. அமரிக்கையாக அவர் கேட்டுக்கொண்டிருந்தார். சிறகுகள் அடித்துக்கொண்டன. தன்னழகை பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்த கிளியிடம் பேச்சுக்கொடுக்க ஆசை, கவிஞருக்கு. காத்திருந்தார்.

    ***

    என்ன பார்க்கிறாய்?

    உன் அழகு என்னை கட்டி இழுக்கிறது.

    அதற்குத் தான் என்னை படைத்தார்.

    நான் உன்னை ஆராதிக்கவேண்டும் என்று தான் விரும்பினார், இல்லையா?

    பூஜை சாமக்கிரியைகள் எல்லாம் தயாரா?

    அவள் தன் அழகுக்கு மெருகேற்றிக்கொண்டிருந்தாள்.

    இவருக்கோ லாஹிரி ஏறிக்கொண்டிருந்தது.

    பஞ்சவர்ணம்! உன்னை ஆராதித்து ஒரு கவிதை படைக்கப்போகிறேன்.

    ஓ! அப்படியா! நான் லாவண்யா. என்னழகைப்பார்.

    அவள் ஒய்யாரமாகத் தன் கழுத்தை ஒடித்துக்கொண்டாள்.

    இசை இன்பவெள்ளமாயிற்று.

    சற்றே பறந்து மற்றொரு கிளையில் அமர்ந்தாள்.

    ஊம்! கவிதை எங்கே?

    கவிஞர் கவிதை இயற்றலாம் என்று எதுகை, மோனை தேடும்போது…

    அப்பனே! எனக்கு சந்தேகமாக இருக்கிறது.

    உன் சொல்லணியில் என் இசை தொனிக்குமோ?

    இல்லை, கண்ணே.

    சரி, போகட்டும் என் பஞ்சவர்ணங்கள் அழகை வீசி அடிக்குமே. அது வருமோ?

    எப்படிம்மா அது இயலும்?

    அதெல்லாம் போகட்டும். நான் சிறகடித்து, இறகை விரித்து உயர உயர பறப்பேனே?

    அதுவாவது வருமோ?

    என்னால் முடியாத காரியம், கண்ணே. எந்த கவிஞனும் இவற்றை பற்றி எழுதலாம்.

    சொல்லணியில் அவற்றை தத்ரூபமாக எப்படி புகுத்து அமைக்க இயலும்?

    அப்படியானால் கவிதையில் நான் எப்படி இருக்கமுடியும்?

    கேலியாக சிரிக்கிறாள்.

    இல்லை அழகியே. உன் மேல் எனக்கு எத்தனை அன்பு தெரியுமா?

    என்ன பேச்சு இது?

    சொல்லணிக்கும் அன்புக்கும் என்ன சம்பந்தம்?

    பஞ்சவர்ணம் பறந்தாள், உயர, உயர.

    களைத்துப்போன கவிஞர் கவிதை மறந்தார்; வீடு திரும்பினார்.

    மனைவி கேட்டாள்.

    என்ன செய்தீர்? ஒளியும், களைப்பும் கலந்து உள்ளனவே.

    அன்புடன் அழகை ஆராதித்தேன்.

    எது பறந்தது?

    எது மறைந்தது?

    எது நிறைந்தது?

    தெரியவில்லை.

    ***

    எனக்கு எழுத வராது. ஒரு தாக்கம். ஹரிவம்சராய் ‘பச்சன்’ அவர்கள் எழுதிய 16 வரி கவிதை ஒன்றை படித்ததின் தாக்கம். மையக்கருத்து அவருடையது. தழுவல் என் பொறுப்பு. ஆம். அவர் அமிதா பச்சனின் தந்தை தான். அதற்கும் அவருடைய ‘அன்பு’ என்ற கவிதைக்கும் என்ன சம்பந்தம்?

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • அரசு 12 துரைத்தனம்.

    இன்னம்பூரான்

    Cockroachawardராஜமாதா முப்பெரும்தேவி பொன்னம்மா தேவிஶ்ரீ மதுராபுரியை ஆண்ட ராணிமங்கம்மாவை விட பல திறன்களில் தலை சிறந்து விளங்குபவர். ரோமாபுரி இளவரசி. தாமரை மணாளனை அவரை சங்கத்தமிழ் பண்புக்கு இணங்க காதல் செய்த பின்னரே வரைவு செய்து கொண்டது உலகறிந்த விஷயம். அது அவர்களது உரிமை என்பதில் கடுகளவேணும் ஐயமில்லை. அழகான குழந்தைகள். ஆண் அரசாளும் என்கிறார்கள் சிலர். அவருடைய திருமகனார் இளங்குமரனுக்காக, அரியணை காத்திருக்கிறது. வடிவுக்கரசியான அவருடைய திருமகளோ, குடும்ப விளக்கு. எங்கிருந்தோ வந்த ஆணழகன் இளஞ்சேரலாதனை மணந்து பல வருடங்கள் ஆயின. ‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்றாள், ஒளவை பாட்டி. குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல் ஆகிய திணைகள் (பாலையையும் விட்டு விடவில்லை!) நாடோடி, நாடோடி இளஞ்சேரலாதனை நாடின. மணிமேகலையின் அமுதசுரபி தோற்றது, போங்கள். அலிபாபாவின் மாயவிளக்கு மங்கியதோ என்ற தோற்றம்! காசுகள் கொட்டின; மோஹராக்கள் ‘தக தக’வென்று மின்னின; திரவியம், கனகதாரா தோத்திரம் மொழிந்தவாறு, கூரையை பிய்த்துக்கொண்டு ‘கொட்டோ கொட்டு’ என்று இடைவிடாமல் பொழிந்தது; பொழிகிறது; பொழிந்து கொண்டே இருக்கும். இளஞ்சேரலாதன் அமர்ந்தவிடத்தில் அல்லது தேகாப்பியாசம் செய்யும் இடத்தில் அல்லது இளைப்பாறலும், தேறலும், விருந்தும் அளிக்கும் மன்றங்களில் மகிழ்வின் மணமும், செல்வத்தின் செல்வாக்கும் நிறைகுடங்களாக ததும்பி வழிகின்றன.

    என்றென்றும் ராஜ விசுவாசிகளில் ஒருவராக பரிமளிக்கும் குருக்ஷேத்திரத்தின் குறுநிலமன்னராகிய உலகநாதபெருமான் அவர்களிடம் தெற்கத்திய பத்திரிகை ஒன்று, இளஞ்சேரலாதனுக்கு குருக்ஷேத்திர பிராந்தியம் அள்ளி அள்ளி கொடுத்த நிலபுலனை பற்றியும், ஸ்தாவரசொத்தான பூமியயையே காசு பணமாக ரஸவாதம் செய்யப்பட்ட உத்திகளை பற்றியும், குருக்ஷேத்திர நாட்டின் உயர்/தாழ் ஊழியனனான கண்ணிய கமுக்கனார் தட்டிய முரசொலியின் ‘அபஸ்வர’ எதிரொலியை பற்றியும், ஒரு உரையாடல் நிகழ்த்தினார்கள். அவரோ ஜராசந்தன் போன்ற சண்டைக்கோழி. விடுவாரா? ஒரு உயர்/தாழ் ஊழிய சமூகத்தையே அருகில் வைத்துக்கொண்டு கருத்து முத்துக்கள் பல உதிர்த்தார். அவையாவன:

    தேசத்தின் மாப்பிள்ளை இளஞ்சேரலாதன் ஒரு மைனர் குடியானவர்.
    குருக்ஷேத்திர தர்மம் மைனர் குடியானவர்களுக்கு, அதுவும் செல்வக் களஞ்சியங்களுடன் ‘தகாத’ இனம் சேரும் மைனர் குடியானவர்களுக்கு சலுகைகள் அளிக்கும்.

    ஆகவே மாப்பிள்ளை இளஞ்சேரலாதனுக்கு கொடுத்த சலுகைகள் தர்மத்தின் அடிப்படையே.
    இந்திரனா புகாரித்தான்? இந்திர பதவி உயர்ந்தது தான். ஆனால் இந்திரர்கள் எல்லாம் உயர்ந்தவர்கள் அல்ல. இந்திரனும் காசு பார்த்தான். அநீதி + அநீதி = நீதி! இது அறியாத தென்னாட்டுத் திருமாலே. உம்மை கண்டு பரிதாபம் கொண்டேன்.

    கமுக்கரின் குற்றச்சாட்டுகள் நீர்த்துப்போயின, ஐயா. செல்வக்களஞ்சியம் ஏன் புகாரிக்கவில்லை. அது எனக்கு புரியவில்லையே!!!

    கமுக்கரின் குற்றச்சாட்டுகளை, துரைத்தனத்தாரின் கமிட்டி நிராகரித்து விட்டதே. அதன் ரிப்போர்ட்டை நான் படிக்கவில்லை. அதனால் என்ன கெட்டுப்போச்சு? அது நிராகரித்திருக்கும்.கும்! கும்மோ கும்!!

    அப்படியானால் குமுக்கரை ஏன் அமுக்கவில்லை என்றா கேட்கிறீர்கள்! நான் அவசரப்படுபவன் அல்ல. என்னை போன்ற நடுநிலையாளர் கிடையாதாக்கும். கும்! கும் கும்!!

    மாப்பிள்ளை இளஞ்சேரலாதன் ஒரு பண்பாளர். அவர் ராஜமாதாவின் மாப்பிள்ளை என்பதால் தான், பத்திரிகைகள் அவரை வாட்டுகின்றன. அலக்கழிக்கின்றன. என்னே அக்கிரமம்! மம்! மம்மோ மம்!!

    அசரீரி: “ மெய்யெல்லாம் மெய்யல்ல; பொய்யெல்லாம் பொய்யல்ல; மெய் என்பது பொய்யோ? பொய் என்பது மெய்யோ? பொய்யும் மெய்யும் கலந்துக்கட்டியோ? ஐயோ!”

    “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆகும்’ என்று அரசியல் அறியாமையினால், சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் பிழை இழைத்து விட்டார் போலும். எதற்கும் ஒரு செய்தி. அரசியல் பிழைத்தோர்க்கு ஆரூடம் கை வந்த கலை. ஜோசியம் கை கூடிய கலை. அதனால் தான் இந்த உலகநாதபெருமானின் அற்புத வாசகங்கள் வருமுன்னரே, ராஜமாதாவின் பிரதம விசுவாசியும், திவானும் ஆன மனோவசியனார் அவர்கள், பத்திரிகைகளுக்கு ஒரு அறைகூவல் விடுவித்தார். “பத்திரிகைகள் எதையும் விசாரிக்கட்டும்; ஆனால் தனிமனிதர்களை மீது பழி கூறலாகாது….”. அதாவது தவறு செய்தவன் தனிமனிதனாலும், சிஸ்டம் தவறியது என்பது உகந்த சொல் எனலாமோ? அவரது பொழிவை முழுதுமுச்சூடும் கேட்டோ/படித்தோ வசியமானவர்கள் உலகநாதபெருமானின் கூற்றை அனுபவித்து வரவேற்பார்கள்.

    ‘ஏழை குடியானவர்கள்’ பிழைப்பார்கள். விதர்பா ஏழை குடியானவர்கள் மடிவார்கள். குருக்ஷேத்திரத்தில் நிலபுலன் இழந்த ஏழை குடியானவர்கள் நெற்றியில் பட்டை நாமம் பளபளக்கிறது. மாப்பிள்ளை இளஞ்சேரலாதன் மைனர் குடியானவர் என்றால், ‘அமிதா பச்சன் ஒரு அறிமுக நடிகர்’ என்றார், ஒரு ட்விட்டர். மாப்பிள்ளை இளஞ்சேரலாதன் ஒரு மைனர் குடியானவர் என்றால் முதுகலைஞர் கருணாநிதி அவர்கள் பால் மணம் மாறாத குழவி என்பர் சிலர்.
    வர்ரேன்…

    சித்திரத்துக்கு நன்றி: asifmeeran.blogspot.com

     

    Share
  • கனம் கோர்ட்டார் அவர்களே! – 20

    இன்னம்பூரான்

    page1

    நானோ! ஒரு அப்பாவி!

    மகா கனம் பொருந்திய கோர்ட்டார் சமூகத்தின் முன்னிலையில் நடை பெற்றதாக ஒரு கற்பனை உரையாடலை செவி சாய்த்து கேட்பீர்களாக. இரட்டை ஜீயும், நிலத்தடி எண்ணை வளமும் உங்களது கற்பனையில் மேய்ந்தால், யான் அதற்குப் பொறுப்பல்ல. ‘நானோ! ஒரு அப்பாவி!’ அது கூட இரவல்.

    இனி உரையாடல்.

    சாக்ஷி (சா), கோர்ட்டார் (கோ), அரசு வழக்கறிஞர். (அ.வ.) கோர்ட்டு குமாஸ்தா (கோ.கு.), டவாலி (ட).

    ட: பராக்! பராக்!! பராக்!!! கோர்ட்டார் வருகிறார்! வந்துகொண்டே இருக்கிறார்! டட்! டட்! டட்!

    எல்லாரும் எழுந்து நிற்கிறார்கள். ‘சல சல’ வென்று கோர்ட்டாடை, மடிசாரு மாமியின் பட்டுப்புடவையைப் போல, சர சரக்க, ஐயா வருகிறார்கள்; அமர்கிறார்கள். எல்லாரும் ‘சர் புர்’ அமைதியுடன் (கோர்ட்டு நாற்காலிகள் கலோனிய காலத்தவை; முதுகு வலிக்கும்.) அமர்கிறார்கள். சற்றே மெளனம். கோர்ட்டார் தலையசைக்க, அன்றைய நீதி தேவதை அரூபமாகக் காட்சியளிக்கிறாள்.

    சாவதானமாக, அலம்பல் யாதும் செய்யாமல், குறித்த நேரத்துக்கு முன்பே, ‘கூஜாக்கள்’ உடனில்லாமல், சமத்தாக வந்து கூண்டேறினார், சாக்ஷி பெருமகனார்.

    கோ.கு: உமது பெயர் என்ன?

    சா: ரிஷ்ய சிருங்கர், மாமுனி மைந்தன், மாமுனி (ஜூனியர்) தம்பி.

    கோ.கு: ‘யான் பேசுவது உண்மையே. பேசுவது முற்றிலும் உண்மையே. உள்ளுறையாகக்கூட பொய் பேசமாட்டேன். இது சத்யம். சத்யம். சத்யம் என்று அடித்துக்கூறும். கடவுளைக்கூப்பிடுவீர்களா? அல்லது உம் நாணயத்தை நம்புவீர்களா?. உடனே பதில் சொல்லும். ஹூம்!

    சா: கடவுளே என் சாக்ஷி. (தனிமொழி: அவர் குரலெடுக்கமாட்டார்.)

    (கோ.கு. பகவத் கீதை நூலை சாக்ஷியின் கையில் கொடுத்தார். அவரும் அதை பவ்யமாக வாங்கி, அதன் மேல் ஒரு ஷொட்டு கொடுத்து, நடுநடுங்கும் குரலில் சத்தியப்பிரமாணம் செய்தார்.)

    கோ:உமக்கு அன்னலக்ஷ்மியை தெரியுமா?

    சா: என் பெயரே ரிஷ்ய சிருங்கர், வணக்குத்துக்கு உரிய என் தந்தையோ மாமுனி. மரியாதைக்கு உரிய என் மூத்த உடன்பிறப்போ மாமுனி (ஜூனியர்). எனக்கு பெண்பால் பரிச்சயமில்லை. In fact…

    அ.வ.: கனம் கோர்ட்டார் அவர்களே! சாக்ஷி வினவிய வினாவுக்கு விடை அளித்தால் போதும். அவர் கேட்டக்கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. I object…

    கோ: Objection sustained. உமக்கு அன்னலக்ஷ்மியை தெரியுமா? கேட்ட கேள்விக்கு பதில்.

    ( ஒரு விசிட்டர்: ‘என்ன இது பெர்ரி மேஸன் கதை போல் போகிறது!’ டெல்லா ஸ்ட் ரீட் வருவாளா அல்லது ‘தரகு’ மாமியா?) நல்ல வேளை அவர் முணுமுணுத்ததால் அது யார் காதிலும் விழவில்லை.)

    சா: யான் அன்னலக்ஷ்மியை அறியேன். அறிந்ததுமில்லை, அறியப்போவதுமில்லை.

    கோ: உமக்கு அன்னலக்ஷ்மியை தெரியுமா? கேட்ட கேள்விக்கு பதில்.

    சா: (சுளித்த முகத்துடன்) அறியேன். அறியேன். அறியேன்.

    கோ: உமக்கு எத்தனை தடவை சொல்வது? ஒரு வினா.ஒரு விடை. போதும்.

    சா: என்னுடைய வக்கீல் ஐயா பாரீஸ்டராக்கும். லண்டனில் படித்தவர் அவர் சொன்னபடி கக்குவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டுகிறேன், கனம் கோர்ட்டார் அவர்களே. சத்தியம் ஜெயிக்க வேண்டுமல்லவா, பாரதநாட்டின் இலச்சினையில் கூறிய மாதிரி.

    (அரசு வக்கீல் ஏதோ சொல்ல வாயெடுக்கிறார். சாக்ஷியின் வக்கீல் கோர்ட்டார் பார்க்கும் மாதிரி தன் கைகளை விரித்து, முணுமுணுக்கிறார்.

    கோ: அரசு வக்கீலைப் பார்த்து: Go ahead.

    அ.வ.: சரி. விருந்தாந்தத்தை சொல்லவும்.

    சா: அன்னலக்ஷ்மியை லவலேசமும் அறியேன். ‘நம்பிக்கை -1’ கம்பெனி ‘நம்பிக்கை -2’ கம்பெனியில் அடக்கம். நான் ‘நம்பிக்கை -2‘கம்பெனியின் நிர்வாகப்பொறுப்பேற்காதத் தலைவன். ‘நம்பிக்கை -1’ கம்பெனியின் தலைமைக்குழுவில் இருந்தேன். எப்போது? என்ன? என்பதை மறந்து விட்டேன். வெகுதான்ய ௵ அந்த பதவியில் இருந்தேனா என்று சொல்ல இயலாது.

    (இதெல்லாம் ஆவணங்களிலிருக்கும். அந்த கதையை அவிழ்த்து விட்டால், இந்த கதை எங்கெல்லாம் செல்லுமோ!)

    (அரசு வக்கீல் அவரிடம் ஒரு தஸ்தாவேஜை காண்பித்தார். அன்னலக்ஷ்மி பெயரில் ஒரு வங்கிக்கணக்கைத் துவக்க, சாக்ஷியும், சாக்ஷிணியும் (ஆஹா! அவர் பெண்பால் அறிந்தவர் என்பது தெளிவாயிற்று. அது ஒரு புறமிருக்க…அந்த தஸ்தாவேஜில் சாக்ஷியும், சாக்ஷிணியும் கையொப்பமிட்டு இருந்தனர். அன்னலக்ஷ்மியின் சித்திரம் வேறே பதிவாகி இருந்தது.)

    சா: அவை எங்கள் கையொப்பம் என்று உறுதி செய்கிறேன். எங்கள் இருவரின் வருமான வரி ஆவணங்கள் அங்கு பதிவு ஆகியுள்ளன. ஸத்யமேவ ஜயதே! ஸத்ய ஸத்யமேவ ஜயதே! மேவ ஜயதே!

    (அரசு வக்கீல் அவரிடம் மற்றொரு தஸ்தாவேஜை காண்பித்தார். அன்னலக்ஷ்மி பெயரில் இவரது கம்பேனி ‘அன்னதானம்’ செய்வதை பற்றியது, அது.)

    சா: அது பற்றி யான் ஒன்றும் அறியேன் பராபரமே. (ஒரு கூஜா ஓடி வந்து கொடுத்த திருநீரை அணிந்துகொள்கிறார்.)

    சா: (தென்பு திரும்ப) அந்த தஸ்தாவேஜில் என் பெயரும், சாக்ஷிணியின் பெயரும் இருந்தாலும், அது வங்கியின் தஸ்தாவேஜு. அதை பற்றியும், அதன் பொருளடக்கத்தைப் பற்றியும் யான் லவலேசமும் அறியேன் என்பது கண்கூடு, வெட்ட வெளிச்சம், உள்ளங்கை நெல்லிக்கனி, வெள்ளிடை மலை.

    (கோ: சாக்ஷியின் வக்கீலிடம் ‘உமது கட்சிக்காரர் சொல்லாட்டம் ஆடுகிறார். அதை கட்டுப்படுத்தி வைக்கவும். இது என் ஆணை.)

    (அரசு வக்கீல் சாக்ஷியிடம் அன்னலக்ஷ்மியின் ஊழியர்களான, சித்தார்த், இந்திரன், விஷ்ணு என்ற மூவரின் சித்திரங்களை காண்பித்தார்.)

    சா: ஓ! இவர்களை தெரியுமே. இவர்கள் குழுவினர் ஆச்சே. ஆனால் அவர்களின் பதவி, கையொப்பம் பற்றி யாதும் அறியேன்.

    அ.வ.: கனம் கோர்ட்டார் அவர்களே! சாக்ஷியை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோருகிறேன்

    கோ: Granted.

    குறுக்கு விசாரணையின் போது, தான் வேவுத்துறை அதிபதியிடம், இவ்வழக்கு சம்பந்தமாக போனதை ஒப்புக்கொண்ட சாக்ஷி, தான் எழுத்தில் கொடுத்து மாட்டிக்கொள்ளவில்லை என்று கம்பீரமாக பதிலினார். கோர்ட்டார் கேட்ட வினாவுக்கு பதில் அளிக்கும்போது தனக்கு அச்சுறுத்தல், இற்செறிப்பு ஒன்றும் வரவில்லை என்று திண்ணமாகக் கூறினார். பொய் சொன்னால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அறிவேன் என்று அடித்துக்கூறினார்.

    (இதெல்லாம் ஆவணங்களிலிருக்கும். அந்த கதையை அவிழ்த்து விட்டால், இந்த கதை எங்கெல்லாம் செல்லுமோ!)

    மறுபடியும் குறுக்கு விசாரணை:

    சா: அன்னலக்ஷ்மியை எங்களுடன் உறவாட யாம் அழைக்கவில்லை. அவளது வானள்ளும் சாகசங்களை பற்றி கொஞ்சம் கூட எனக்குத் தெரியாது. அவளுக்கு ‘நம்பிக்கை -1’ கம்பெனி எக்கச்சக்கமாகக் கொடுத்த பொன் மோஹராக்கள் பற்றி எனக்கு எப்படித்தெரியும்?நீங்களே சொல்லுங்கள். நானோ! ஒரு அப்பாவி!

    அன்றைய கோர்ட்டுக் கலைந்தது.

    மறுநாள் சாக்ஷிணியும் கிருகலக்ஷ்மி என்ற பீடத்திலமர்ந்து, கம்பெனிகளுக்கு தான் கம்பெனி கொடுக்கவில்லை என்ற தோரணையில் விடையளித்தார். (கம்பெனி ஆவணங்கள் சொலவு வேறானால் என்பது வேறு ஒரு கேள்வியோ என்ற ஐயம்.

    ஹூம்!

     

    சித்திரத்துக்கு நன்றி
    மெட்ராஸ் (சென்னை) ஹை கோர்ட்+வ.உ.சி.+வாலேஸ்வரன்
    POSTED ON 5:39 PM BY SANKARA RAMASAMY WITH NO COMMENTS

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • கனம் கோர்ட்டார் அவர்களே! – 19

    இன்னம்பூரான்

    auto-stik1மக்கள் நலத்தை நீண்டகாலமாக அசட்டை செய்வது போதாது என்று உச்சநீதி மன்றத்தின் ஆணைகளையே துச்சமாக மதித்து, சாக்குப்போக்குச்சொல்லி, சால்ஜாப்பு ராச்சியம் நடத்திய தமிழக அரசுக்கு, கொதித்தெழுந்த உச்சநீதி மன்றத்திலிருந்து ஒரு ‘சுளீர்’ அடி ஒன்று இன்று. சுரணையுடன், உரிய நடவடிக்கைகளை எடுத்து சீரிய ஆணைகளை அரசு பிறப்பிக்குமா என்ற ஐயம் நம்மை ஆட்டிப்படைத்தால், அது வியப்புக்குரியது அல்ல. ஏனெனில், எந்தக்கட்சி அரசாண்டாலும், ஏழை, எளியவர்கள் பிள்ளையார் கோயிலாண்டிகள் தான். ஊருக்கு இளைத்தவர்கள். தீண்டாமைச்சுவர்களும், இரட்டை டம்ளர் அவலமும், கந்து வட்டி கந்தரகோளமும், கல்வி தந்தைகளின் அசுரகதி திரவியம் தேடுதலும், சுண்ணாம்பு காளவாய் கொத்தடிமைகளும், சிறார்களை வறுத்தெடுத்து முறுக்கு சுடுவதும், தோட்டி மலம் சுமக்கும் அபாண்டமும் சட்டமீறல்களே. அவை சமுதாயத்தின் சுமுகத்தைக் குலைப்பதை பொது சமுதாயம் கண்டு கொள்வது இல்லை; அரசு கண்டும் காணாதது போல் பாசாங்கு செய்கிறது. கடமை தவறுகிறது.

    சரி. விஷயத்துக்கு வருவோம். தருமமிகு சென்னை மாநகரத்தில் நடுத்தர மக்கள் ஆட்டோரிக்க்ஷா சவாரி செய்ய அஞ்சுகிறார்கள்; ஆனால், தவிர்க்கமுடியவில்லையே.

    “பள்ளிக்கு செல்ல ரொம்பி வழியும் ஆட்டோரிக்க்ஷா!

    கொள்ளைப்பணம் கேட்டாலும் கொடுத்தாகவேண்டும்.”

    “ரயிலை பிடிக்கணுமா, செல்லக்கண்ணு.

    மயிலிறகு இறக்கி வை, செல்லக்கண்ணு.”

    அவசரமா ஆஸ்பத்திரி போகணுமா, ராசா?

    பரவசமா காசு கேட்பான், ஆட்டோ சங்கரு.”

    பாட்டு என்ன வேண்டிக்கிடக்கு? பாட்டு! இது ஷோக்கு சமாச்சாரம் இல்லை, சுவாமி. பூஜை வேளையிலே கரடி புகுந்தமாதிரி தமாசு என்ன வேண்டிக்கிடக்கு? பாயிண்டுக்கு வருவோம். எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து, இந்த ஆட்டோரிக்க்ஷா அனாச்சாரம் சென்னை வாழ் மக்களை எரி தணலில் வீழ்ந்த புழுவைப்போல துடிக்க வைத்துள்ளது. ‘ஆட்டோரிக்க்ஷா’ என்ற பேச்சு எழுந்தவுடனேயே மன உளைச்சல், ரத்த அழுத்தம், அபரிமித கவலை, அவமானம், அனாவசிய வாக்குவாதம், விட்டால் போதும் என்ற மனோபாவம் பெரும்பான்மையான மக்களைப் பாடாய் படுத்துகிறது என்பதும், அவரவர்கள், தவிர்க்க முடியாத கட்டாயங்களால், ஆட்டோரிக்க்ஷா ஓட்டுனரின் பேராசைக்கு உட்பட்டு நடப்பதும், ஆட்டோரிக்க்ஷா அட்டூழியம் தமிழகம் முழுதும் ஆக்கிரமித்து விட்டது என்பதும், ஊரறிந்த உண்மை.

    பழங்கதை பேசினால், ஆளுக்கொரு சரடு அவிழ்த்து விடுவார்கள், அதிகார மையங்கள். இந்த விவகாரத்தில், முதல் அதிகாரமையம்: ஆட்டோரிக்க்ஷா சொந்தக்காரர்கள். அவர்களில் பெரும்பாலோர் லேவாதேவிக்காரர்கள். பசை இருப்பதால், நிதி நிறுவனங்களும், வங்கிகளும் அவர்கள் பக்கம். காவல்துறை அதிகாரிகளும் பெருமளவில், பினாமியாக, ஆட்டோரிக்க்ஷா சொந்தக்காரர்கள் என்ற தகவல், பல வருடங்களாக, யாதொரு மறுப்பும் இல்லாமல், உலா வருகிறது. இது முதல் அதிகார மையத்தை விட வலிமை வாய்ந்தது. பயிரை மேயும் வேலிக்கு ஆதிக்கம் அதிகம். ஆட்டோரிக்க்ஷா ஓட்டுனர்கள், மனித இனத்தைச் சார்ந்தவர்கள் என்றாலும், ஒரு சிலரை தவிர, பெரும்பாலோர் ஈவு இரக்கமற்றவர்கள்; மனசாட்சியை தொலைத்தவர்கள். காசு பறிப்பவர்கள்.

    இந்த சூழ்நிலையில், கனம் கோர்ட்டாரிடம் அரசு இடக்கு செய்யும் டைம்-லைனை பாருங்கள்.

    டைம்-லைன்:

    டிசம்பர் 3, 2012:

    விண்ணப்பதாரர் எஸ்.வி.க்ருஷ்ணமூர்த்தி அவர்களின் மனுவை பரிசீலித்த உச்சநீதி மன்றம், இரண்டு வாரங்களுக்குள் ஆட்டோரிக்க்ஷாவுக்கான கட்டணங்களை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்று ஆணையிட்டது. வழக்கை ஜனவரி 28, 2013 அன்று விசாரிக்கப்போவதாக உத்தரவிட்டது.

    ஜனவரி 28, 2013:

    தமிழக அரசு வக்கீல் திரு. குரு கிருஷ்ணகுமார் நான்கு வாரங்களுக்கு வாய்தா கேட்டார். அது அளிக்கப்பட்டது.

    மார்ச் 4, 2013

    ‘மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி’ என்று செம்பை பாடியது போல, விண்ணப்பதாரரின் கோரிக்கைகளை அரசு ஆராய்கிறது எனக்கூறி, திரு. குரு கிருஷ்ணகுமார், மறுபடியும் எட்டு வாரங்களுக்கு வாய்தா கேட்டார். அதுவும் பொறுமையுடன் அளிக்கப்பட்டது.

    மே 6, 2013.

    திரு. குரு கிருஷ்ணகுமார் மறுபடியும் வாய்தா கேட்டார்! விண்ணப்பதாரர் ஆக்ஷேபித்த போதிலும், பொறுமையையே பூஷணமாகக்கொண்ட கனம் கோர்ட்டார் மனமுவந்து கேட்டபடி இரண்டு மாத வாய்தா அளித்தனர். இனி தாமதிக்காமல் கட்டணங்களை அரசு நிர்ணயித்து ஆக வேண்டும் என்ற வற்புறுத்தல், அந்த வாய்தாவின் உள்ளுறை. ஜூலை 22க்குள் அவ்வாறு செய்யப்படும் என்ற வாக்குறுதி அரசியல் தரப்பில் அளிக்கப்பட்டது.

    26 07 2013

    அரசு வக்கீல் திரு.எல்.என்.ராவ் அவர்கள், பல முனைகளில் இது விஷயமாக முன்னேற்றம் இருந்தாலும்,மேலும் அவகாசம் வேண்டும் என்று சொல்லி, மறுபடியும் வாய்தா விண்ணப்பம்!

    பொறுமையிழந்த கனம் கோர்ட்டார் ( நீதிபதிகள் ஆர்.எம்.லோடா அவர்களும், இப்ராஹீம் கலிஃபுல்லா அவர்களும்) வாய்தா கொடுத்தாலும், அரசை கண்டித்தனர். ரூபாய் 10,000/- அபராதம் விதித்தனர். அதை விண்ணப்பதாரருக்கு கொடுக்கவேண்டும் என்று ஆணையிட்டனர். ஆதியோடந்தமாக, இந்த வாய்தா அவலத்தை விவரித்த பின்னர், இறுதியாக நான்கு வார வாய்தா கொடுத்துள்ளனர். இத்தகைய அபராதம், வற்புறுத்தல் எல்லாம் அரசுக்கு ஒரு தலை குனிவு தான்.

    இந்த அழகில், மற்ற இடங்களைப் பற்றி, சற்றே கவனிப்போம்.

    ஹிந்து இதழ் ஆங்கில பதிப்பில் (ஜூலை 28, 2013) திரு. ஜே. வெங்கடேசன் குறிப்பிட்டது:

    புது டில்லி: முதல் கட்டணம் ரூ.25 /- + ரூ.8 /- கி.மீட்டருக்கு;

    மும்பாய்: முதல் கட்டணம் ரூ.15 /- + ரூ.9.87/- கி.மீட்டருக்கு;

    பெங்களூரு: முதல் கட்டணம் ரூ.20 /- + ரூ.11 /- கி.மீட்டருக்கு;

    ஹைதராபாத்: முதல் கட்டணம் ரூ.16 /- + ரூ.9/- கி.மீட்டருக்கு.

    முதல் கட்டணத்தொலைவில் சற்று வித்தியாசங்கள் இருந்தாலும், இரவு நேரத்தில் 25% அதிகப்படி கட்டணம் என்றாலும், மேற்படி நகரங்களில் இருப்பதை விட சென்னையில் பலமடங்கு அதிகம்; அடாவடி. கேள்வி முறை இல்லை.

    கொசுறு: இந்த 2ஜி விவகாரத்தில் ஜாயிண்ட் பார்லிமெண்டரி கமிட்டியின் தலைவர் திரு.பி.சி.சாக்கோ அவர்கள் ஆடிட்டர் ஜெனெரல் வரம்பு மீறி அரசின் கொள்கைகளை விமரிசித்தார் என்று கண்டனம் தெரிவித்து இருக்கிறார். ஒருவன் நாள்தோறும் பீடி பிடித்ததால் அவனை நுரையீரல் புற்று நோய் பீடித்தது. டாக்டர் அது பற்றி எழுதியதை ஆக்ஷேபித்து அவரின் நண்பர், ‘டாக்டர் புற்று நோயை பற்றி மட்டும் சொல்லவேண்டும். பீடி பிடித்தது பற்றி பேசுவது, கொள்கை விமரிசனம் என்று கண்டித்தாராம். அது நினைவுக்கு வந்தது.

    இன்னம்பூரான்

    28 07 2013

    Share