Featuredஇலக்கியம்கட்டுரைகள்

அன்பும் அழகும் ஆராதனையும்

இன்னம்பூரான்

Unknownமஹாகவி பாரதியார் புதுவை மாந்தோட்டம் ஒன்றில் அமர்ந்து ‘குயில் பாட்டு’பாடினார். அந்த தோட்டம் மறைந்து விட்டது. குயில் என்னமோ பறந்து விட்டது. பாரதியார் அமரராகி விட்டார். பாடல் தங்கிவிட்டது. மறையாது. நமதுநினைவலைகளும் எங்கெங்கோ சஞ்சாரம் செய்பவை.

அவை பேசத்தொடங்கி விட்டன.

அழகிய சோலை. மலர்க்கொடிகள். பூத்துக்குலுங்கும் செடிகள், காயும் கனியுமாக தாவரமயம். அமர்ந்திருந்த கவிஞருக்கு ஆனந்தமாக இருந்தது. ஒட்டுமாங்கனி தொங்கும் கைக்கெட்டிய கிளையில் ஒரு பஞ்சவர்ணக்கிளி வந்து அமர்ந்தது. கொஞ்சம் மெளனம். அது மெல்லிய குரலில் இசை பாடத் தொடங்கியது. அமரிக்கையாக அவர் கேட்டுக்கொண்டிருந்தார். சிறகுகள் அடித்துக்கொண்டன. தன்னழகை பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்த கிளியிடம் பேச்சுக்கொடுக்க ஆசை, கவிஞருக்கு. காத்திருந்தார்.

***

என்ன பார்க்கிறாய்?

உன் அழகு என்னை கட்டி இழுக்கிறது.

அதற்குத் தான் என்னை படைத்தார்.

நான் உன்னை ஆராதிக்கவேண்டும் என்று தான் விரும்பினார், இல்லையா?

பூஜை சாமக்கிரியைகள் எல்லாம் தயாரா?

அவள் தன் அழகுக்கு மெருகேற்றிக்கொண்டிருந்தாள்.

இவருக்கோ லாஹிரி ஏறிக்கொண்டிருந்தது.

பஞ்சவர்ணம்! உன்னை ஆராதித்து ஒரு கவிதை படைக்கப்போகிறேன்.

ஓ! அப்படியா! நான் லாவண்யா. என்னழகைப்பார்.

அவள் ஒய்யாரமாகத் தன் கழுத்தை ஒடித்துக்கொண்டாள்.

இசை இன்பவெள்ளமாயிற்று.

சற்றே பறந்து மற்றொரு கிளையில் அமர்ந்தாள்.

ஊம்! கவிதை எங்கே?

கவிஞர் கவிதை இயற்றலாம் என்று எதுகை, மோனை தேடும்போது…

அப்பனே! எனக்கு சந்தேகமாக இருக்கிறது.

உன் சொல்லணியில் என் இசை தொனிக்குமோ?

இல்லை, கண்ணே.

சரி, போகட்டும் என் பஞ்சவர்ணங்கள் அழகை வீசி அடிக்குமே. அது வருமோ?

எப்படிம்மா அது இயலும்?

அதெல்லாம் போகட்டும். நான் சிறகடித்து, இறகை விரித்து உயர உயர பறப்பேனே?

அதுவாவது வருமோ?

என்னால் முடியாத காரியம், கண்ணே. எந்த கவிஞனும் இவற்றை பற்றி எழுதலாம்.

சொல்லணியில் அவற்றை தத்ரூபமாக எப்படி புகுத்து அமைக்க இயலும்?

அப்படியானால் கவிதையில் நான் எப்படி இருக்கமுடியும்?

கேலியாக சிரிக்கிறாள்.

இல்லை அழகியே. உன் மேல் எனக்கு எத்தனை அன்பு தெரியுமா?

என்ன பேச்சு இது?

சொல்லணிக்கும் அன்புக்கும் என்ன சம்பந்தம்?

பஞ்சவர்ணம் பறந்தாள், உயர, உயர.

களைத்துப்போன கவிஞர் கவிதை மறந்தார்; வீடு திரும்பினார்.

மனைவி கேட்டாள்.

என்ன செய்தீர்? ஒளியும், களைப்பும் கலந்து உள்ளனவே.

அன்புடன் அழகை ஆராதித்தேன்.

எது பறந்தது?

எது மறைந்தது?

எது நிறைந்தது?

தெரியவில்லை.

***

எனக்கு எழுத வராது. ஒரு தாக்கம். ஹரிவம்சராய் ‘பச்சன்’ அவர்கள் எழுதிய 16 வரி கவிதை ஒன்றை படித்ததின் தாக்கம். மையக்கருத்து அவருடையது. தழுவல் என் பொறுப்பு. ஆம். அவர் அமிதா பச்சனின் தந்தை தான். அதற்கும் அவருடைய ‘அன்பு’ என்ற கவிதைக்கும் என்ன சம்பந்தம்?

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

  1. Avatar

    புதுவையில் மகாகவி குயில் பாட்டைப் பாடிய மாந்தோப்பு சில வருஷங்களுக்கு முன்பு அழிக்கப்பட்டு அங்கு ஒரு குடியிருப்பைக் கட்டத் தொடங்கினார்கள். அப்போது பாரதி அன்பர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. இலக்கிய வாதிகளின் எதிர்ப்பெல்லாம் நிலத்தைக் காசாக்கும் ரியல் எஸ்டேட் காரர்களிடம் செல்லுபடியாகுமா என்ன? நீங்கள் சொல்லியபடி மாந்தோப்பு அழிந்து விட்டது; குடியிருப்புகள் எழுந்துவிட்டன. பாரதி மக்கள் மனதில் குடியேறிவிட்டான்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க