சு.ரவி

 

AKILANDESWARI FINISHED 2

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

வணக்கம், வழியநலம்

 

இம்மாதம்  ஐந்தாம் தேதிமுதல் நவராத்திரி தொடங்குகிறது.

நாள்களும் கோள்களும் நலமருள வேண்டும்

அம்பாள் நவ வெண்பாவும், அன்னை அகிலாண்டேஸ்வரி எண்ணெய் வண்ண ஓவியமும் இணைப்பில்

பார்க்க, படிக்க, ரசிக்க…

 

அம்பாள் நவவெண்பா

 

இரவி,மதி, செவ்வாய், புதன், வெள்ளி, மந்தன்,

சுரகுருவும், சுற்றும் நிழலுருவாம்-அரவினிரு

கூறும்   நலம்சேர்க்கத்   தேவியவள்  மீதுநயம்

ஊறும்   கவிதை   உரை.

 

குவலயம்    யாவும்  குளிர்விழி     யாலே

சிவலயம்  ஆக்கிச் சிலிர்ப்பாள் – அவளருளால்

சுற்றிவரும் கோள்கள்  சுகமளிக்கும்; பாதமலர்

பற்றிவிடு   பாரமிலை   பார்!

 

கோள்களொரு  நாலைந்தும்  கோடி நலமருளத்

தாள்கள்  பணிந்தேன்  தயாபரீ!-  நாளுமென்

நாவீணை   மீட்டிக் கவிதை  இசைபொழிவாய்

தேவீ,  பரதேவ  தே!

 

ஞானப்பால்  உண்டசிசு  பாடும்  பதிகத்தால்

வானத்துக் கோள்கள்  வணங்கினவே! -நானுமுன்

பிள்ளையடீ,  பிச்சி!  பிறகெனக்குக் கோளகளினால்

இல்லையடீ  அச்சம்  இனி!

 

மேருவா   சம்செய்யும்  மின்னற் கொடியாளைப்

பேரவா கொண்டு  கவிபாடக் – காருவா

வெள்ளுவா ஆகும்  விரிவானின்  கோள்களெலாம்

உள்ளுவார்க் கென்றும் உறவு!

 

பெம்மானைப் பாடியவள்  பேரண்டக் கோளையெலாம்

அம்மானை  ஆடி  அகமகிழ்வாள் – அம்மானை

எண்ணும் அடியாரை  நட்பாய்   நவகோளும்

நண்ணும், புரியும்  நலம்.

 

கவிதா   மயமாய்க்   கனலும்  மலரை

பவதா  ரிணியைப்  பணிவாய் – நவகோளும்

ராசியே  தானாலும்  ராஜயோ  க்ம்கூட்டி

ஆசி   அருளும்   அறி!

 

நீள்வட்டப்  பாதை  நியதியொடு  சுற்றிவரும்

கோளெட்டும்,   ஒன்றும்   நலமருளத் – தாள்தொட்டேன்

தர்க்காதி  சாத்திரங்கள்   தேடி  அறியவொணா

துர்க்கா  பரமேஸ் வரீ!

 

மேடமுதல்  மீனம்  இடையிட்ட பன்னிரண்டு

வீடுலவும்   கோள்கள்  நலமருளும் -காடுலவும்

காபாலி  மீதடங்காக்  காதலுறும்  கற்பகக்

பாபாதம்  நீபணிந்தக்  கால்.

 

வெற்றி  கொடுப்பாள்   வினைதீர்ப்பாள், கோளகளுமைச்

சுற்றிவரச்  செய்வாள்  சுகமளிப்பாள்-  நெற்றித்

திலகம்  இறைக்கும் திருவொளியால்  இந்த

உலகம்  புரக்கும்  உமை.

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அம்பாள் நவ வெண்பா!…

  1. தமிழும் பக்தியும் இரண்டறக் கலந்த வெண்பா மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *