இலக்கியம்கட்டுரைகள்மறு பகிர்வு

உயிர் பெறுமா நீதியின் குரல்?

உரத்த சிந்தனை

இன்னம்பூரான்

“ மக்கள் தொகுதிக்கும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கும் அன்யோன்யமான தொடர்பு இருக்கவேண்டும்…அவர் தொகுதியின் தேவைகளை நிறைவேற்றவும், மக்களின் அபிலாஷைகளை மதிக்கவும், கருத்துக்களை கேட்டறியவும் பாடுபடவேண்டும். மக்களும் அவருடைய பாவனைகளை தங்கள் பக்கம் திருப்பவும், அவரை தட்டிக்கேட்கவும் முடிய வேண்டும்…”

~ இந்திய அரசியல் சாசன கூட்டுக்குழு அறிக்கை: முதல் பாகம் -1933-34 (இங்கிலாந்து பிரபுக்கள் மன்றமும், மக்கள் சபையும்: பக்கம் 110)

அன்றாட அரசியல் நிகழ்வுகள் மக்கள் மன்றத்தில் அலசப்படும்போது, அவற்றின் பின்னணிகளும், அடித்தளங்களும் மறக்கப்படுவதையும், மறைக்கப்படுவதையும் கண்கூடாகக் காண்கிறோம். தற்காலம், நமது இந்திய நாடாளுமன்றமே சர்ச்சைக்கு உட்பட்டுள்ளது. வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளில் சிலரின் அணுகுமுறைகளும், செயல்பாடுகளும், ஒழுங்கீனங்களும், கவலையை தருகின்றன. மக்களாட்சியின் மேலாண்மை குலைந்து விட்டது என்ற பேச்சு, ஊடகங்களில் மிகவும் அடிபடுகிறது. ஜனநாயகம் தான் சுதந்திர இந்தியாவின் ஆணிவேர் என்பது இந்திய அரசியல் சாசனத்தின் முத்திரை. குந்தகம் விளையாமல் அதை பாதுகாப்பது நம் கடமை. அதை செவ்வனே நிறைவேற்ற, பின்னணிகளையும், அடித்தளங்களையும், தற்காலத்து விவாதங்களிடமிருந்து சற்றே தள்ளி நின்று, பரிசீலிப்பது நலம் பயக்கும்; நடுவு நிலை ஆய்வுகளை முன் கொணரும். ஜனநாயகத்தின் பல பரிமாணங்களை தனித்தும், தொகுத்தும் புரிந்து கொள்வதால், பொது மக்களில் ஒவ்வொருவரும் தனது வாக்கை அளிப்பது முதல், பிரதிநிதி/அரசு நிர்வாகம் ஆகியவற்றை கண்காணிக்கமுடியும். பொது நலம் சார்ந்தக் கருத்துக்களை அமலாக்குவதைத் துரிதப்படுத்த முடியும். அதற்கான வேத பாடம் தான் மேற்கோளில். அந்த கூட்டுக்குழு தன்னுடைய பொறுப்பை முழுமையாக உணர்ந்து, இந்தியாவிலிருந்து சான்றோர்களை வரவழைத்து, அவர்களின் கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டது. அவர்களில் ஒருவர் பாபா சாஹேப் அம்பேத்கார் அவர்கள்.

சாக்கோ தலைமையிலான நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இறுதி அறிக்கையை நிறைவேற்றி, தோழமை கட்சியான தி.மு.க. உள்பட, முக்கிய கட்சிகளிடமிருந்து எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்டுள்ளது. இது புதிது அல்ல. இன்று வரை, இந்தியாவின் பாராளுமன்ற கூட்டுக்குழுக்களின் சாதனைகள் சொல்லிக்கொள்ளும் மாதிரி இல்லை. எல்லாம் இழுபறி தான். முதற்கண்ணாக, நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழுவின் விருத்தாந்தம், இந்த ஸ்பெக்ட்ரம் கூட்டுக்குழுவின் இடம், பொருள், ஏவல் பற்றி அலச உதவும்.

மாநில சட்டசபைகளும், நாடாளும் மன்றமும் பலவிதமான, பளுவான கடமைகளை ஆற்றுவதால், அவை குழுக்கள் மூலமாக இயங்குவது உலகளாவிய நடைமுறை. தணிக்கை அறிக்கைகளை ஆராயும் பொதுக்கணக்குக்குழு, மனுக்களை ஆராயும் குழு, அரசு கம்பெனிகளை ஆராயும் குழு, ஒவ்வொரு துறையையும் கண்காணிக்கும் குழு போன்றவை எப்போதும் நிலுவையில் உள்ளவை. குறிப்பிட்ட நடவடிக்கையை ஆராய, இரு மன்றங்களும் ஒத்துப்போய் அல்லது அவைத்தலைவர்கள் தீர்மானித்து, குழுக்கள் நியமிக்கப்படுவது உண்டு. அவை தான் கூட்டுக்குழுக்கள். நமது அரசியல் சாஸனமோ, நாடாளுமன்ற மரபோ அவற்றை பற்றிய வரையறைகளை விதிக்கவில்லை. அதன் காரணம் நாடாளுமன்றத்தின் ஆளுமையை மதிக்கும் அணுகுமுறை. ஆனால், ஒவ்வொரு கூட்டுக்குழுவும் விட்ட குறை தொட்ட குறையாகவே இயங்கியுள்ளன. இந்திய அரசியல் சாஸனம் 1950ல் அமலுக்கு வந்தது. 37 வருடங்களுக்கு கூட்டுக்குழு அமைக்க வேண்டிய நிர்பந்தம் நமது குடியரசுக்கு ஏற்படவில்லை. தணிக்கை அறிக்கைகளை ஆராயும் பொதுகணக்குக்குழுவின் தலைமை, முக்கிய எதிர்க்கட்சிக்கு என்ற அருமையான மரபு ஆளும் கட்சிக்கு தர்மசங்கடமானது. போஃபோர்ஸ் பீரங்கி விவகாரம் 1987ல் தலையெடுக்க, ஆளும் கட்சி உபத்ரவம் தாங்காமல், ஒரு கூட்டுக்குழுவுக்கு அடி கோலியது. எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்தது. அதன் அறிக்கையை நிராகரித்தது. அடுத்த இரண்டு கூட்டுக்குழுக்களும் (1992, 2001) தாறுமாறான பங்குச்சந்தை வஞ்சகங்களை ஆராய்ந்தன. அவற்றின் அறிக்கைகளின் மேல் சொல்லிக்கொள்ளும் படி நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. குளிர்பானங்களில் கிருமிநாசினிகள் கலந்துள்ளன என்ற குற்றச்சாட்டை விசாரித்த கூட்டுக்குழுவின் அறிக்கை அந்த குற்றச்சாட்டு உண்மை என்றது. அத்துடன் சரி. நோ ஆக்க்ஷன். குளிர்பானங்கள் இன்றும் சக்கை போடு போடுகின்றன. குடிநீர் பிரச்னை தீரவும் இல்லை.

அடுத்த கூட்டுக்குழு ஸ்பெக்ட்ரம் சிக்கலை பற்றி. அது தான் இந்த பாடு படுகிறது. 30 உறுப்பினர்களில் பாதி, அதாவது 15 உறுப்பினர்கள்,குழுத்தலைவர் மீது நம்பிக்கையில்லை என்று லோக்சபை தலைவரிடம் மனு கொடுத்து வரலாறு படைத்தனர். ஆக மொத்தம் கூட்டு இல்லை. எல்லாம் வழ, வழ, கொழ, கொழ தான்! தற்காலம் வருமுன்காப்போன் ஆகிவிட்ட அரசு நிர்வாகம், ஹெலிகாப்டர் ஊழல் பற்றி விசாரிக்க ஒரு கூட்டுக்குழுவுக்கு ஏற்பாடு செய்து விட்டது. மேற்படி நடவடிக்கைகளை சீர் தூக்கிப்பார்த்தால், எதிர்க்கட்சி தலைமையில் இயங்கும் பொதுக்கணக்குக்குழுவின் அறிக்கைகளை நீர்த்துப்போக செய்யத்தான் இந்த கூட்டுக்குழு உபாயம் பயன்படுவதாக, நமது நாடாளுமன்ற வரலாறு கூறுகிறது.

சுருங்கச்சொல்லின், இது வரை இந்திய பாராளுமன்றத்தின் கூட்டுக்குழுக்கள் அவசியமான பின்னணியில் நியமிக்கப்படவில்லை; அவை பிரிதிநித்துவ ஜனநாயகத்துக்கு இணங்க நடவடிக்கைகளை அமைத்துக்கொண்டதாக சொல்வது கடினம். பொதுக்கணக்குக்குழுவின் அறிக்கைகளை நீர்த்துப்போக செய்வது இந்திய அரசியல் சாஸனத்தை அவமதிக்கும் செயல் என்றால்,அது மிகையாகாது.

நன்றி: தினமலர்

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க